Logo

மோசமான மாமா

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 13683
mosamana-mama

குழந்தை பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதரை ‘மோசமான மாமா’ என்று கூறியது, தாயை ஆச்சரியப்பட வைத்தது.

காவி வர்ணத்தைக் கொண்ட துணியையோ, வேட்டியையோ அணியாமல் அந்த நடுத்தர வயதைக் கொண்ட மனிதரைப் பார்த்ததே இல்லை.

மிகவும் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, சிவன் கோவிலில் அர்ச்சனை செய்வதற்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யையும், மலர்களையும் எடுத்துக் கொண்டு அவர் விந்தி விந்தி தெருவில் நடந்து செல்வது, சூரியன் உதயமாவதற்கு முன்பே நடந்து கொண்டிருந்ததால், அவரை அதிகமாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆலயத்திலிருந்து திரும்பி வந்தால், அந்த கணமே மொட்டை மாடிக்குச் சென்று காகங்களுக்கு சாதத்தை எறிவதும், உரத்த குரலில் ‘நமச்சிவாய’ என்று உச்சரிப்பதும் அவருடைய வழக்கமான செயல்களாக இருந்தன. பக்தி உணர்வு அவருடைய முகத்தை கிட்டத்தட்ட கனமாக ஆக்கி விட்டிருந்தது. அவலட்சணமான ஒரு முகமூடியை அவர் அணிந்திருக்கிறார் என்பதைப் போன்ற ஒரு எண்ணம், அவரைப் பார்ப்பவர்களிடம் உண்டானதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. புதிதாக அந்த பக்கத்து வீட்டில் வசிப்பதற்காக வந்த குழந்தையும், தாய், தந்தையும் அவரை ஒரு நல்ல பக்கத்து வீட்டுக்காரர் என்றே நினைத்தார்கள். குழந்தைக்கு பலகாரங்கள், தேங்காய், முந்திரி என்று அவ்வப்போது பரிசாக தரும் மாமா... குழந்தை பிடிவாதம் பிடித்துக் கொண்டு அவருடைய வீட்டிற்கு பல நேரங்களில் ஓடுவதுண்டு.

‘மாமா பேப்பர் வாசிக்கட்டும்... நீ மாமாவைத் தொந்தரவு செய்யக் கூடாது’- குழந்தையின் அன்னை பதைபதைப்புடன் கூறினாள்.

‘என்ன தொந்தரவு?’- அவர் கேட்டார். தொடர்ந்து அவர் சொன்னார் : ‘குழந்தையைப் பார்ப்பது என்பது எனக்கு சந்தோஷமான விஷயம்.’

குழந்தையை தன்னுடைய மடியில் உட்கார வைத்துக் கொண்டு கதைகள் கூறுவதிலும், அவளுக்கு கடவுளின் நாமங்களைக் கற்றுத் தருவதிலும் அவர் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். குழந்தையோ? தனக்கு யாராவது பரிசாகத் தந்த பிஸ்கட்டுகளையும் மிட்டாயையும் மாமாவுடன்  பங்கு போட்டும், சிரித்தும், அவரை கட்டிப் பிடித்துக் கொண்டும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பாள்.

ஒரு நடுப்பகல் நேரத்தில் அன்னை உறங்கிக் கொண்டிருந்தபோது, குழந்தை மெதுவாக கதவைத் திறந்து மாமாவின் வீட்டிற்கு ஓடினாள். தொடர்ந்து அவள் அழுது கொண்டும், அலங்கோலமாகவும் திரும்பி வந்தபோது, தாய் பதைபதைப்பு அடைந்து விட்டாள்.

‘மாமா மோசம்...’- அவள் கூறினாள். அவள் அழுது கொண்டிருந்தாள். ‘வலிக்கிறது’ என்று சுட்டிக் காட்டிய பகுதி சிவந்து போயும், வீங்கியும் காணப்பட்டது. குழந்தையின் தந்தை அந்தக் கணத்திலேயே பக்கத்து வீட்டு மனிதரை அடித்து கொல்லப் போவதாகக் கூறி வாசலுக்குச் சென்றார். அன்னைதான் அந்த கடுமையான செயலைத் தடுத்தாள்.

மோசமான மாமா ஆலயத்தைச் சுற்றி வந்தார். காகங்களுக்கு சாதம் பரிமாறினார். தினமும் நெற்றியில் திருநீர் பூசினார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.