Logo

விபச்சாரம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 9100
Vipachchaaram

ன்றும் காலையில் குடித்த கஞ்சியுடன் மாலை நேரம் வரும் வரை ஆண்டி தோளில் ஒரு கோடரியை வைத்துக் கொண்டு பல இடங்களிலும் அலைந்தான். யாருக்குமே ஒரு விறகு வெட்டும் மனிதன் தேவையாக இல்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அவன் போய் நின்று 'மரம் வெட்டணுமா? விறகு உடைக்கணுமா?' என்று கேட்டபோது, அவனுக்குக் கிடைத்த ஒரே பதில் 'வேண்டாம்... போ' என்பதுதான்.

மாலை நேரம் வந்ததும் பெரிதாக மழை வர ஆரம்பித்தது. ஆண்டி பாதையோரத்தில் இருந்த ஒரு வீட்டு வாசலில் போய் மழைக்கு ஒதுங்கினான். தன் தொப்பிக்குள் தான் வைத்திருந்த பாக்கையும், கொஞ்சம் புகையிலையையும் எடுத்து அவன் வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தான். வெளியே மழை பெய்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவாறு என்னவோ சிந்தனையுடன் அவன் அங்கிருந்த திண்ணையில் குத்த வைத்து உட்கார்ந்தான்.

அவன் கையில் தீப்பந்தம் வாங்குவதற்குக் கூட ஒரு சல்லிக்காசு கிடையாது. ஒரு ஆழாக்கு அரிசியாவது கொண்டு போகவில்லையென்றால் வீட்டில் பட்டினிதான் என்பது அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயமே. அவனின் ஒன்றரை வயது குழந்தைக்கு, அவன் வீட்டை விட்டுக் கிளம்பியபோது, காய்ச்சல் நெருப்பென தகித்துக் கொண்டிருந்தது. அதற்கு ஜீரகம் வாங்கிக் கொடுக்கக் கூட அவன் கையில் காசு இல்லை என்பதே உண்மை.

அரிசி வாங்குவதற்கு வழி எதுவும் தெரியாமல் மனம் முழுக்க கவலையைத் தாங்கிக் கொண்டு எழுந்து மீண்டும் அவன் நடக்க ஆரம்பித்தான். அவனுடைய வீட்டிற்குப் போக வேண்டுமென்றால் இருள் ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஒற்றையடிப் பாதையைக் கடந்துதான் போக வேண்டும். அந்த கும்மிருட்டில், எப்படியோ தட்டுத் தடுமாறி அவன் தன்னுடைய வீட்டுப் படியில் கால் வைத்தான்.

உள்ளே யாரோ பேசும் குரல் அவன் காதில் விழுந்தது.

திண்ணைப் பகுதியில் விளக்கோ, வெளிச்சமோ எதுவும் இல்லை. அவன் மெதுவாக திண்ணையை ஒட்டி பதுங்கியவாறு சென்று உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தான். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது.

"அய்யோ... நீங்க சீக்கிரம் இங்கேயிருந்து போயிருங்க. குழந்தையோட... தகப்பன் வர்ற நேரமாயிடுச்சு..."

"போடி... ஆண்டி வர்றான்னா அவன் கையில தீப்பந்தம் இருக்கும். நான் இன்னொரு தடவை..."

"அப்படின்னா நான் போறேன். உனக்கு ஏதாவது தேவைப்பட்டா, ஆள் யாரையாவது என்கிட்ட அனுப்பி வை. சரியா?"

"எனக்கு ஒண்ணும் வேண்டாம். நீங்க இந்த இடத்தை விட்டுப் போனா போதும்..."

"ஓ... இப்போ நீ என்னைப் போங்க போங்கன்னு விரட்டுறே. உன்னோட கொஞ்சலையும் குழையலையும் பார்த்துட்டுத்தான்டி நான்  இங்கேயே வந்தேன்!"

தொடர்ந்து முத்தம் கொடுக்கும் சத்தம். "ஏய் விடுங்க... விடுங்கன்னா... குழந்தை அழுவுது".

அடுத்த நிமிடம் ஒரு தகர விளக்கு எரிந்தது. அதன் வெளிச்சத்தில் சுகுமாரன் வக்கீலையும், தன்னுடைய மனைவி அம்முவையும் தெளிவாக ஆண்டியால் பார்க்க முடிந்தது.

நடந்த சம்பவத்தைப் பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த அவன் இடி தலையில் விழுந்ததைப் போல செயலற்று நின்று விட்டான். அவனால் அதை நம்பவே முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் அவன் சுற்றிலும் மூடியிருந்த இருட்டையே வெறித்து நோக்கினான்.

சுகுமாரன் வக்கீல் ஒரு பெரிய பணக்காரனும், பிரபலமான ஒரு குடும்பத்தையும் சேர்ந்தவன். ஆண்டி தற்போது வசித்துக் கொண்டிருக்கும் இடமும், வீடும் அந்த வக்கீலுக்குச் சொந்தமானதுதான். அது மட்டுமல்ல, வீட்டு வாடகை என்ற முறையிலும், கடன் வாங்கியிருந்த வகையிலும் ஆண்டி வக்கீலுக்கு ஐம்பது ரூபாய் தர வேண்டியதிருக்கிறது. இது தவிர, இருபத்தைந்து ரூபாய்க்கு அவன் எழுதிக் கொடுத்த ஒரு ப்ரோ நோட்டும் வக்கீலின் கையில் இருக்கிறது. அதனால் வக்கீலிடம் மோதினால் உண்டாகக் கூடிய விளைவு என்னவென்பதை அவன் நன்கு அறிந்தே இருந்தான்.

ஆனால், வக்கீல் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இருப்பான் என்பதை அவன் சிறிதுகூட நினைத்துப் பார்த்ததில்லை.

வக்கீல் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்த்த ஆண்டி மெதுவாக நடந்து சென்று வீட்டின் கிழக்குப் பக்கத்தில் போய் மறைந்து நின்றான்.

கையில் இருந்த டார்ச் விளக்கை எரிய விட்டவாறு வக்கீல் படியிறங்கிப் போனான். ஆண்டி சுவரைப் பிடித்தவாறு அந்த இருட்டிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தான்.

அரை மணி நேரம் சென்றதும் அவன் திண்ணைக்கு அருகில் சென்று வழக்கம் போல "அடியே கதவைத்திற" என்று அழைத்தான்.

அம்மு கதவைத் திறந்தாள். தகர விளக்குடன் வெளியே வந்தாள்.  ஆண்டியை மேலிருந்து கீழ் வரை உற்றுப் பார்த்த அவள் கேட்டாள் :

"எதுவும் கொண்டு வரலியா?"

முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் ஆண்டி சொன்னான் : "எதுவும் கிடைக்கல..."

"இங்கே நானும் சமையல் எதுவும் பண்ணல. குழுந்தை காய்ச்சல் வந்து சுய நினைவு இல்லாம படுத்துக் கிடக்கு..."

"நான் என்ன செய்றது? எனக்கு ஒரு பைசாகூட கிடைக்கல..."

இரண்டு பேரும் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தார்கள். பிறகு அம்மு வீட்டிற்குள் சென்றாள். சிறிது நேரம் கழித்து அவள் வாசலுக்கு மீண்டும் வந்தாள். ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை ஆண்டியிடம் காட்டியவாறு சொன்னாள் : "இதைக் கொண்டு போயி கொஞ்சம் அரிசியும் காய்கறியும் மருந்தும் வாங்கிட்டு வாங்க!"

ஆண்டியின் முக பாவம் இலேசாக மாறியது. அவன் அந்த வெள்ளி நாணயத்தையே சிறிது நேரம் உற்று நோக்கினான். பிறகு அம்முவின் முகத்தை வெறித்துப் பார்த்தவாறு அவன் கேட்டான் : "இந்தக் காசு உனக்கு எங்கேயிருந்து கிடைச்சது?"

அவள் சிறிது நேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக நின்றிருந்தாள். பிறகு சொன்னாள். "நான் கல்யாணி அம்மாக்கிட்ட வாரச் சீட்டு ஒண்ணு போட்டிருந்தேன். முதல் சீட்டே எனக்குத்தான்."

"கல்யாணி அம்மா உனக்கு எப்போ பணம் தந்தாங்க?"

"இன்னைக்குக் காலையில..."

ஆண்டியின் முகம் கோபத்தால் சிவந்தது.

"என்னடி சொல்ற? இன்னைக்குக் காலையிலயா? பொய் சொல்றியா? கல்யாணி அம்மா நேற்றைக்கு சாயங்காலம் திரூருக்குப் போனதை நான் பார்க்கலேன்னு  நினைச்சியா? உன் திருட்டுத்தனம் எனக்குத் தெரியாதுன்னு நினைப்பா? இந்தக் காசு உனக்கு அந்த வக்கீல் தந்ததுதானே? கொஞ்ச நேரம் நீயும் வக்கீலும் சேர்ந்து இந்த அறைக்குள்ளே..."


அம்முவின் முகம் சுண்ணாம்பு போன சுவரைப் போல் ஆனது. அவள் கீழே விழப் போனதும் அவளின் இடுப்புப் பகுதியில் ஆண்டி ஒரு அடி கொடுத்ததும் ஒரே நேரத்தில் நடந்தது.

அவள் படியின் மேல் போய் விழுந்தாள். கையில் கிடைத்த ஒரு விறகுக் கட்டையால் ஆண்டி அவளை மேலும் அடித்தான். அவள் வலி தாங்க முடியாமல் கத்தினாள் : "அய்யோ... என்னை அடிக்காதீங்க. நான் உண்மையைச் சொல்லிடுறேன். எனக்குப் பணம் தந்தது அந்த வக்கீல்தான்!"

ஆண்டி உரத்த குரலில் கத்தினான் : "ஏன்டி நீ வக்கீலை வீட்டுக்குள்ளே விட்டே? அவன் கிட்ட இருந்து ஏன் நீ காசு வாங்கணும்?"

"காய்ச்சல் வந்து படுத்துக் கிடக்குற குழந்தைக்குக் கொஞ்சம் அரிசி வாங்கி கஞ்சி வச்சி கொடுக்க. அய்யோ... அதற்காகத்தான் மத்தியானம் நிலத்தைப் பார்க்க வந்த வக்கீல்கிட்ட நான் எட்டணா கேட்டேன்..."

"பிறகு?"

"வக்கீல் ரெண்டு ரூபாய் தந்தாரு. சாயங்காலம் வரட்டுமான்னு கேட்டாரு. நான் ஒண்ணும் பேசல."

"ஒண்ணும் பேசல. ஒண்ணுமே பேசல. இல்லையாடி...?"

கோபத்தை அடக்க முடியாமல் ஆண்டி அம்முவை மீண்டும் மீண்டும் அடித்தான்.  அவள் வேதனை தாங்க முடியாமல் கத்தினாள்.

அவள் ஒரு மூலையில் விழுந்து கிடக்க, விறகுக் கட்டையைத் தூரத்தில் எறிந்த ஆண்டி படியிறங்கி வெளியேறினான்.

வக்கீல் மீது கொண்ட வெறுப்பைத் தீர்ப்பதற்காக அவனின் மனைவியிடம் நடந்த சம்பவம் முழுவதையும் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவன் வக்கீலின் வீடான 'வனஜா விலாச'த்தைத் தேடிப் போனான்.

'வனஜா விலாசம்' மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய மாளிகை. ஆண்டி நேராக சமையலறையைத் தேடிப் போனான். சமையல்காரன் கோவிந்தன் நாயரைப் பார்த்து, அவன் மூலம் வக்கீலின் மனைவி மீனாட்சிக் குட்டியம்மாவிடம் விஷயத்தைச் சொல்லலாம் என்று அவன் திட்டம் போட்டிருந்தான். ஆனால், சமையலறை பூட்டப்பட்டிருந்தது. கோவிந்தன் நாயரை அங்கு எங்கேயும் காணோம்.

வக்கீல் அங்கு வந்து சேர்ந்ததற்கான அடையாளமே கொஞ்சம் கூட இல்லை.

வீட்டின் கிழக்குப் பக்கம் வழியே அவன் தெற்குப் பக்கம் நோக்கி நடந்தான். இரண்டாவது அறையில் யாரோ பேசும் குரல் அவனுக்கு கேட்டது.

அடைக்கப்பட்டிருந்த ஜன்னலின் இடைவெளி வழியாக அவன் உள்ளே பார்த்தான்.

உள்ளே ஒரு மேஜை விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அழகான ஒரு வெல்வெட் மெத்தை மேல் முக்கால் நிர்வாண கோலத்தில் மீனாட்சிக் குட்டியம்மா படுத்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கோவிந்தன் நாயர் உட்கார்ந்திருந்தான்.

காம உணர்வு ததும்பும் ஒரு புன்சிரிப்புடன் கோவிந்தன் நாயரின் கன்னத்தைக் கிள்ளிய மீனாட்சிக்குட்டியம்மா சொன்னாள் :

"கோவிந்தா, முதலாளி மாசச் சம்பளத்தைக் குறைக்கப் போறதா சொன்னதை வச்சு நீ போயிட வேண்டாம். உனக்கு என்ன வேணும்? சில்க் சட்டை வேணுமா? வேஷ்டி வேணுமா? சினிமா பாக்குறதுக்கும் வேற ஏதாவது செலவுக்கும் பணம் வேணுமா? எல்லாத்துக்கும் நான் தர்றேன். பிறகு ஏன் நீ ஊருக்குப் போகணும்?"

அவள் அவனை வெறி மேலோங்க கட்டிப் பிடித்தாள். விளக்கை அணைத்தாள்... அதற்குப் பிறகு நடந்தது எதையும் ஆண்டியால் பார்க்க முடியவில்லை.

ஆண்டி திரும்பவும் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான். பலவிதப்பட்ட சிந்தனைகளும், சந்தேகங்களும் அவனின் மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன.

தன்னுடைய மனைவி விபச்சாரியாக மாறியதற்குக் காரணம் பட்டினியை நீக்க என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால், எத்தனை முறை திரும்பத் திரும்ப சிந்தித்துப் பார்த்தாலும் இந்த முப்பத்தைந்து வயது பெண்ணான மீனாட்சிக் குட்டியம்மா பதினெட்டு வயது பையனுடன் விபச்சாரம் செய்ததற்கான காரணம் என்ன என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

கடைசியில் ஆண்டி ஒரு முடிவுக்கு வந்தான் : "பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனும், படித்தவனும், பணக்காரனுமான வக்கீலோட பொண்டாட்டியை விட என் அம்மு எவ்வளவோ நல்லவ!"

ஆண்டி வீட்டை அடைந்தபோது அம்மு சுய உணர்வே இல்லாமல் அதே இடத்தில் படுத்துக் கிடந்தாள்.

அவன் அந்தத் தகர விளக்கை எடுத்து அறை முழுக்கத் தேடினான். அந்த ஒரு ரூபாய் நாணயம் ஒரு மூலையில் எறியப்பட்டுக் கிடந்தது. அதைக் கையில் எடுத்த அவன் தன் மனைவியை அழைத்தான் : "அடியே அம்மு... எந்திரிச்சு அந்தப் பாத்திரத்தையும் பாட்டிலையும் எடு. ஒரு பந்தத்தைப் பத்தவை. நான் வேகமாப் போயி அரிசியும் சாமான்களும் வாங்கிட்டு வந்திர்றேன்."

அம்முவிற்கு ஒரு புத்துயிர் வந்தது போல் இருந்தது. அவள் தட்டித் தடுமாறி எழுந்து அவனிடம் பாத்திரத்தையும், பாட்டிலையும் எடுத்துத் தந்தாள். வேகமாக ஒரு பந்தத்தைத் தயார் பண்ணி தன் கணவனை கடைக்கு அனுப்பினாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.