Logo

பூனை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5006
poonai

ன்னல்களும் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை வர்ண சுவர்களைக் கொண்ட ஒரு அறைக்குள் ஒரு பெண்ணும், ஆணும் உட்கார்ந்திருந்தார்கள். பெண் ஸோஃபாவில் உட்கார்ந்து, பூனையைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஆண் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். மேஜை மேல் இருந்த ஒரு கண்ணாடி கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆணின் முகத்தில் பயங்கர களைப்பு தெரிந்தது. பெண் தன் கால்கள் இரண்டையும் இலேசாக விரித்தவாறு அமர்ந்திருக்க, அங்கு விழுந்த குழியில் பூனை அமைதியாக உட்கார்ந்திருந்தது.

பூனையின் உடலை அந்தப் பெண்ணின் வெள்ளை விரல்கள் வருடிக் கொண்டிருக்க, உணர்ச்சிவசப்பட்ட பூனையின் வால் இலேசாக விரைத்துக் கொண்டிருந்தது. பெண் கால்களை ஆட்டினாள். இளங்காற்றில் பனங்குலை போல சிவப்பு வண்ண புடவைக்கு அடியில் அவள் குலுங்கினாள். வெப்பத்தைத தாங்க முடியாதது காரணமாக இருக்கலாம்.... அந்த ஆணின் முகத்தில் வியர்வை முத்து முத்தாக அரும்பிவிட்டிருந்தது.

திடீரென்று வீசிய காற்றில் சாய்த்து வைத்திருந்த கதவு திறந்தது. அடுத்த நிமிடம் - உஷ்ணம் உள்ளே நுழைந்தது. வெளியே காய்ந்தது போய்க் காணப்பட்ட புற்களுக்கு மேலே சூரியன் ஜொலித்துக் கொண்டிருந்தான். வெண்மை மணலில் உஷ்ணத்தின் ஆக்கரமிப்பு தெரிந்தது.

“என்ன வெப்பம்!” - பெண் சொன்னாள். அந்த ஆண் எழுந்து போய் வாசல் கதவை அடைத்துவிட்டு, திரும்பவும் வந்து உட்கார்ந்தான்.

“டிக்கீ, கண்ணு....!” பெண் அழைத்தாள்: “டிக்கி உறங்கிருச்சு...” - அவள் சொன்னாள். “நீ உறங்கிட்டியா?” - பூனைக்கு முத்தம் கொடுத்தாள். அந்த ஆண் சாய்வு நாற்காலியில்  அமர்ந்தவாறு பெண்ணையும், பூனையையும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

“அந்த மாத இதழை இங்கே எடுங்க” - பெண் சொன்னாள்: “என்னால எழுந்திருக்க முடியாது. டிக்கி உறங்குது...”

அந்த ஆண் எழுந்து போய் மாத இதழை எடுத்து அவளிடம் தந்தான். மேஜைக்கருகில் தொங்கிக்கிடந்த புடவையில் அவளின் மணம். “ராத்திரி நேரத்துல என்ன குளிர்!” பெண் சொன்னாள். அந்த ஆள் பெண்ணின் கட்டிலையே பார்ததவாறு உட்கார்ந்திருந்தான். பெண் மாத இதழின் பக்கங்களைப் புரட்டினாள். “இதுல ஒண்ணுமே இல்ல...” - அவள் சொன்னாள். அந்த ஆள் புடவையின் மணத்தை மனதில் நுகர்ந்து கொண்டிருந்தான். பெண் பூனைக்கு மீண்டும் முத்தம் தந்தாள். பூனை தூக்கம் கலைந்து எழுந்தது. இரண்டு மஞ்சள் கண்கள் அந்த ஆளையே வெறித்துப் பார்த்தன. அந்த ஆள் என்ன பண்ணுவதென்று தெரியாமல் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். பெண் ஸோஃபாவை விட்டு எழுந்து நின்றாள். பூனையை மெல்ல ஸோஃபாவில் படுக்க வைத்தாள். நடந்து அலமாரியைத் திறந்து ஒரு கைலேஸை வெளியே எடுத்தாள்.

திரும்பி வந்தபோது அவளின் இடை மேஜையில் இடித்தது. அடுத்த நிமிடம் - கண்ணாடி கூஜா தரையில் விழுந்து உடைந்து சிதறியது. தரையில் விரித்திருந்த சிவப்பு வர்ண விரிப்பில் தண்ணீர் ஓடியது கறுப்பாகத் தெரிந்தது. அவள் கூஜாவின் கழுத்துப் பகுதியை காலால் மேஜைக்கு அடியில் தள்ளிவிட்டு, மீண்டும் பூனையைக் கையில் எடுத்தாள்.

அந்த ஆள் புடவைக்கு அடியில் தெரிந்த அவளின் உடல் அழகைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.

அவள் சொன்னாள்: “டிக்கி பயந்திருக்கும்... அதுக்கு சூடுன்னா பிடிக்கவே பிடிக்காது. டிக்கி... டார்லிங்... என் கண்ணு... பயந்துட்டியா? சூடு அதிகமா இருக்கா? பாவம். டிக்கி...” - அவள் அதற்கு முத்தம் கொடுத்தாள். தன் மூக்கை அதன் மூக்கு மேல் வைத்து உரசினாள். “சூடா இருக்கா? டேய் பயலே... சூடு அதிகமாடா? அதிகமாடா? அதிகமாடா? அதிகமாடா?” - அவள் அதற்கு மறுபடியும் மறுபடியும் முத்தம் தந்தாள். அவள் ஸோஃபாவில் வந்து உட்கார்ந்தாள். பிறகு... பூனையை மடியில் படுக்க வைத்தாள். கைலேஸால் அதைப் போர்த்தினாள்.

அந்த ஆள் ஒரு கற்சிலையைப்போல மூடிய கண்களுடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். அவனின் கைகள் நாற்காலியின் கைகளை இறுகப் பற்றியிருந்தன.

“சாயங்காலம் பட்டணத்துக்குப்போகணும்” - பெண் சொன்னாள். ஒரு கையால் பூனையை அவள் தடவினாள். அவளின் இன்னொரு கை மாத இதழைப் புரட்டிக்கொண்டிருந்தது.

அந்த ஆளின் முகத்தில் வியர்வை அரும்பியிருந்தது.

பெண் கைலேஸைச் சரியாக இழுத்துவிட்டு பூனையைப் போர்த்தியிருந்ததைச் சரி செய்தாள். அவள் சொன்னாள் : “டிக்கிக்கு சூடே வேண்டாம். சூடு இருந்தால்....” - அவள் அதைக் குனிந்து முத்தமிட்டாள். அந்த ஆள் சாய்வு நாற்காலியில் பிணத்தைப்போல கண்களை மூடி சாய்ந்திருந்தான். குலுங்கிக் குலுங்கி அழ வேண்டும்போல் அவனுக்கு இருந்தது. அந்த ஆள் எழுந்தான். வாசல் கதவைத் திறந்து வராந்தாவில் இறங்கி, மீண்டும் கதவை அடைத்தான். பிறகு... வராந்தாவில் கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். சுற்றிலும் வெப்பத்தின் ஆக்கிரமிப்பு. அந்த வெப்பம் அவனைப் பாடாய்ப் படுத்தியது. அந்த ஆள் அங்கேயே வியர்வை வழிந்த முகத்துடன் சாய்ந்து, கண்களை மூடினான். அறைக்குள் பூனை தூங்கியது. பெண் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறு, வெண்மையான மேற்சுவரைப் பார்த்தவாறு, கால்களை மடக்கி படுத்திருந்தாள்.

வெயில் குறைந்தபோது, அந்த ஆளுக்கு தூக்கமும் கலைந்தது. பெண் அறைக்குள் இருந்து வெளியே வந்தாள். அவளின் கையில் பூனை இருந்தது. பெண் சொன்னாள் : “வெப்பம் குறைஞ்சிடுச்சு. ராத்திரியில குளிர் வர ஆரம்பிச்சிடும்.” அவள் அந்த ஆளிடம் சொன்னாள் : “வெயில் அடங்கிடுச்சு. நான் கொஞ்சம் முற்றத்தில் நடந்துட்டு வர்றேன்.” அவள் பூனைக்கு முத்தம் தந்தாள். பிறகு சொன்னாள்: “டிக்கியைக் கொஞ்சம் பிடிங்க...”

பூனையை அந்த ஆளின் மடியில் வைத்துவிட்டு, அவள் வெளியே இறங்கினாள்.

அந்த ஆள் மெழுகுச் சிலையைப்போல உட்கார்ந்திருந்தான்.

திடீரென்று என்னவோ புலம்பியவாறு அந்த ஆள் வேகமாக எழுந்தான். என்ன நினைத்தானோ.... பூனையை ஒரு கையால் வேகமாக முற்றத்தை நோக்கி வீசி எறிந்தான். அது பூச்செடிகளுக்கு அடியில் இருந்த கற்கள் மேல் பட்டு தலைகீழாக விழுந்து அசையாமல் கிடந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.