Logo

நிலவைப் பார்க்கிறபோது...

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6415
Nilavai Paarkira Podhu

நிலவைப் பார்க்கிறபோது... இது ஒரு பேய்க் கதை. ஆமாம்... பேய்க் கதை என்றால் என்ன? நான் இதைப்பற்றி விவரித்துக் கூற விரும்பவில்லை. உங்கள் எல்லோருக்கும் அனேகமாக நன்றாகத் தெரியும். மனித வாழ்க்கை வரலாற்றில்... ஏன்? சரித்திரம் ஆரம்பமான காலத்திலிருந்தே பேய்க் கதைகளும், பேய்களும்... நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? இங்கே ஒரு கேள்வி எழுகிறது: பேய் என்றால் என்ன?

பேய் என்ற ஒன்று இருக்கிறது... இல்லாவிட்டால்... இல்லை...

இன்னும் ஒரு கேள்வியும் இருக்கிறது: பேய்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?... இந்தக் கேள்வி கேட்கப்படும்பொழுது நான் பதிலே கூறாமல் வெறுமனே மவுனமாக அமர்ந்துவிடுகிறேன். ஒரு  முடிவுக்குமே வரமுடியாத சில அனுபவங்கள் எனக்கு இருக்கின்றன. மனித நடமாட்டமே இல்லாத வனாந்தரப் பகுதிகளில்...மலைமுகடுகளில்... குகைகளில்...சுடுகாடுகளில்... அழிந்துபோன நகரத்தின் மீதி இருக்கும் பகுதிளில்... ஆட்கள் வசிக்காத வீடுகளில்...கடற்கரையில்... நிலவு காய்ந்து கொண்டிருக்கும் தனிமையான சாலையில்...

நான் இப்போது சொல்லப்போவது கடற்கரையில் நடந்த ஒரு சம்பவத்தை. நான் பலமுறை மண்டையைப்போட்டுக் குழப்பிக் கொண்டு பார்க்கிறேன். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை என்பதே உண்மை. தெளிவாக விளக்க முடியாத ஒரு சம்பவம் அது. ஒரு வேளை இந்த சம்பவம் என்னுடைய கற்பனையாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால் இது சத்தியமாக நடந்த ஒரு நிகழ்ச்சி என்று நான் தீர்க்கமான குரலில் கூறுகிறேன். ஆனால், இது கற்பனையாக இருக்கக்கூடாதா என்று நான் நினைக்கிறேன் என்பதென்னவோ உண்மை. நிலவை நான் வானத்தில் பார்க்கிறபோது...எனக்கு அந்தச் சம்பவம் ஞாபகத்தில் வந்துவிடுகிறது.

அப்போது நான் துடிப்பான இளைஞனாக இருந்தேன். ஒரு தீவிரவாதக் கும்பலின் தலைவனாக நான் அந்தக் காலகட்டத்தில் இருந்தேன். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், அஃப்ஸாடுல்லாகான், சந்திரசேகர் ஆஸாத் - இப்படிப்பட்ட தீவிரவாத இயக்கம் அது. கட்டாரி, ரிவால்வர், வெடிகுண்டுகள், இரத்தம் சிந்துதல், அடிமை இந்தியாவை விடுதலை அடைய வைக்கும் போராட்டம் - இதுதான் அந்த இயக்கம். அதில் கிட்டத்தட்ட முன்னூறு பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். நகரத்தில் இருக்கும் பெரிய ரவுடிகள் சிலரும் அதில் இருந்தனர். ரிக்ஷாவண்டி ஓட்டுபவர்கள், ஹோட்டலில் வேலை செய்பவர்கள், சமையல்காரர்கள் - இவர்களும் அந்த இயக்கத்தில் இருந்தார்கள்.

எங்களுக்கென்று நெருப்பு கக்கும் செய்திகளை வெளியிடும் ஒரு பத்திரிகையும் இருந்தது. நான்தான் அந்தப் பத்திரிகையின் அதிபர். இன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கும் பெரிய எழுத்தாளர்கள் பலர் அன்று அந்தப் பத்திரிகைக்குக் கட்டுரைகள் அனுப்பி வைத்து உதவி இருக்கிறார்கள். நான்தான் சொன்னேனே - அது ஒரு நெருப்புப்பொறி பறக்கும் பத்திரிகை என்று. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் சூடான கட்டுரைகள் அதில் ஏராளமாக வரும். மொத்தம் நாங்கள் அச்சடிப்பதே  ஆயிரம் பிரதிகள்தான். ஆனால், அலுவலக ஃபைலில் வைப்பதற்குக் கூட ஒரு பிரதி மீதி இருக்காது. அதற்காக ஏற்கனவே யாராவது காசு கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கும் பத்திரிகையைக் கேட்டு வாங்கிக்கொண்டு வருவார்கள்.

ஒரு தீவிரவாத இயக்கம் சம்பந்தப்பட்ட பத்திரிகை அது என்று யாருக்கும் தெரியாது. அந்தத் தீவிரவாத இயக்கம் பல காரியங்களை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறது என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். போலீஸீம், சி.ஐ.டி.யும் அந்தத் தீவிரவாத இயக்கத்தைப் பற்றி எல்லா இடங்களிலும் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தீவிரவாத இயக்கத்திற்கு திட்டம் போட்டுச் செயல்படும் பெரிய காரியங்களோ, மிகப் பெரிய இலட்சியங்களோ கிடையாது. அது ஒரு ரகசியமாகச் செயல்படும் இயக்கம். விஷயம் அவ்வளவே. அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அதற்குக் கிடையாது... ஏற்கனவே ஒரு அரசியல் கட்சி இருந்தது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள். இதை அவர்கள் சொல்லி நாங்கள் செய்யவில்லை. எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இதை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். எங்களை இப்படியொரு காரியத்தில் இறங்கச் செய்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? அரசாங்கத்தின் பயங்கரமான கொலை நடவடிக்கைகளும், போலீஸின் ஈவு இரக்கம் இல்லாத - காட்டு மிராண்டித்தனமான செயல்களும்தான். அரசியல் காரியங்களுக்காகப் போராடுபவர்களை அவர்கள் அடித்து உதைப்பதோடு நிற்பதில்லை. பற்களை  உடைப்பது, கை - கால்களை அடித்து நொறுக்குவது, கண்களைக் குருடாக்குவது, அரசியல் போராளிகளின் தாய், மனைவி ஆகியோரை மானபங்கம் செய்வது... இப்படிப் பல காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட கொடுமையான செயல்களைச் செய்து கொண்டிருந்த போலீஸ்காரர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பட்டியல் எங்களிடம் தயாராக இருந்தது. நாங்கள்... இந்த முன்னூறு பேர் நினைத்தால் எது வேண்டுமானாலும் அவர்களைப் பண்ண முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த விதத்தில் அவர்களுக்கு அதை புரிய வைக்க முடியுமோ, அந்த வகையில் புரியவைத்தோம்.

கடைசியில்... நான் சொல்ல வந்தது அது ஒன்றுமல்ல. இந்த முன்னூறு பேர்களில் முக்கியமான ஒன்பது பேர் இருந்தோம். அதில் ஒருவன் நான் சொன்ன அரசியல் கட்சியில் ஏற்கனவே சேர்ந்திருந்தான். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை... அந்த அரசியல் கட்சித் தலைவரும் அவனும் ஒன்று சேர்ந்து... எங்களைப் போலீஸில் காட்டிக்கொடுத்து விட்டார்கள். எங்களின் பத்திரிகை அவர்கள் கையில் சிக்கியது. எங்களைப் போலீஸ் கைது செய்தது. எங்களை நாடு கடத்திவிடத் தீர்மானித்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வழக்கு பெரிதாக எங்கள்மேல் போட முடியவில்லை. அரசாங்கமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் - கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மிகப் பெரிய பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்ததே . அது போகட்டும். எங்களைப்  பற்றி போலீஸீக்குத் துப்பு கொடுத்த அந்த ஆள் இன்று ஒரு அமைச்சர். அவன் பெயர்...!

நான் சொல்ல வந்தது இதுவல்ல. கைது செய்யப்படுவதற்கும், வழக்குப் பதிவு செய்வதற்கும் முன்பு தீவிரவாத இயக்கத்தின் செயல்கள் படுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான்தான் சொன்னேனே - ஏராளமான மாணவர்களும் இதில் பங்கு பெற்றிருந்தார்கள் என்று. அவர்களில் நான்கு பேர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். அவர்கள் - சொல்லப்போனால் ஒழுங்காகப் படிப்பதே இல்லை. தேர்வு நெருங்கிவிட்டது. நிச்சயம் அதில் தோற்றுப் போவோம் என்பது அவர்களுக்குத் தெரியும். (நான் கூறும் இந்த நான்கு பேரில் ஒருவர் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.


அவர் சில போலீஸ்காரர்களுடன் வந்து என்னுடைய வீட்டைச் சோதனை செய்ததோடு நிற்காமல், என்னுடைய தாய், தந்தை, சகோதரி, சகோதரர்கள் - எல்லோரையும் மிரட்டி கஷ்டப்படுத்தவும் செய்திருக்கிறார். என் வலது கையை அடித்து ஒடித்து விடுவதாக மிரட்டிவிட்டுப் போனதும் இதே இன்ஸ்பெக்டர்தான்.) நான் சொன்னேனே – அவர்களுக்குத் தேர்வில் தோற்று விடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. அவர்கள் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருந்தவர் ஒரு பாதிரியார். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பாதிரியாரின் மேஜைக்குள்ளோ அல்லது அலமாரியிலோதான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அந்த மாணவர்கள் வந்தார்கள். சமையல்காரனின் துணையுடன் அவர்கள் அலமாரிக்கும் மேஜைக்கும் கள்ளச்சாவி தயாரித்தார்கள். இரவில் அந்தப் பாதிரியார் சாப்பிடும் நேரத்தில் அவர்கள் அவரின் அறைக்குள் நுழைந்தார்கள். மேஜையையும் அலமாரியையும் திறந்தார்கள். கேள்வித்தாள்களை மட்டுமல்ல - இன்னொன்றையும் அவர்கள் பார்த்தார்கள். ஒரு பெரிய கண்ணாடிப் பை நிறைய ரூபாய் நோட்டுகள்! ஒரு ஆறாயிரம் ரூபாய் இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள். மாணவர்கள் கட்டிய ஃபீஸாக அது இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் சம்பளப் பணமாகவும் இருக்கலாம்.

அவர்கள் கேள்வித்தாள்களில் இருந்து தலா ஒரு பிரதி எடுத்தார்கள். பணத்தை எடுக்கவும் அவர்கள் தீர்மானித்தார்கள். இருந்தாலும், எங்களிடம் இதுபற்றி எதுவும் அவர்கள் கேட்கவில்லை. பண விஷயத்தை மட்டும் எங்களிடம் கேட்ட பிறகு எடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் கடைசியில் வந்தார்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது இரவு ஒன்பது மணி. இது முடிந்ததும் நேராக எங்களிடம் வந்தார்கள். இந்த விஷயம் குறித்து ஒன்பது பேர்களின் கருத்தையும் தெரிந்தாக வேண்டும். என்னுடைய சொந்தக் கருத்து, அந்தப் பணத்தை இவர்கள் எடுக்கக்கூடாது என்பதுதான். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்குத் தேவை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை எடுக்க வேண்டும் என்று கூறும் தைரியம் எனக்கு இல்லை. நான் இந்த விஷயத்திற்கு எதிரானவன் என்பதைத் தெளிவாகக் கூறவும் செய்தேன். அரசியல் தொண்டர்களை ஆட்டிப்படைத்த போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டரையோ - என்ன செய்தாலும் அதற்கு எதிராக நிச்சயம் நான் ஒன்றும் கூறமாட்டேன். ஆனால், இந்த ஆறாயிரம் ரூபாய் விஷயத்தை எடுத்துக்கொண்டால், இது ஒரு வகையில் கொள்ளையடிப்பது என்ற இனத்தில் வருகிறதே ! சரி... அது போகட்டும். பத்திரிகை மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வரவே செய்கிறது. இயக்கத்திற்குத் தேவையான அவசிய செலவுக்குத் தாராளமாக அந்தப் பணம் போதும். பிறகு எதற்கு அந்த ஆறாயிரம் ரூபாய்?

ரிவால்வர்கள் வாங்க...கத்திகள் வாங்க...வெடிகுண்டுகள் தயாரிக்க...

ஏற்கெனவே எங்களிடம் இரண்டு ரிவால்வர்கள் இருந்தன. சில கத்திகளும் இருக்கவே செய்தன. இவையே அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் நல்லதுதான். என்ன இருந்தாலும் இது ஒரு பெரிய விஷயமாயிற்றே! ஒன்பது பேரும் ஒன்றாக அமர்ந்து இது பற்றிப் பேசி ஒரு தெளிவான முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். இரவு ஒரு மணிக்கு எங்களின் கூட்டம் நடைபெற்றது. தனிமையான கடற்புறத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.

நான் ஒரு பழைய சைக்கிளில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். பொதுச் சாலையைவிட்டு, மணல் ரோட்டின் வழியாக ஒரு ஃபர்லாங் தூரம் செல்ல வேண்டும். அங்கே பெரிய பாறைகள் நிறைய இருக்கும். அலைகள் கடலில் வந்து மோதும் ஓசையைத் தவிர வேறு எந்த சத்தத்தையும் அங்கு கேட்க முடியாது. முழு நிலவு என்று சொன்னால் உண்மையிலேயே முழு நிலவு அதுதான்.

நாங்கள் ஒன்பது பேரும், மாணவர்கள் நான்கு பேரும் - மொத்தம் பதின்மூன்று பேரும் அந்த ஆறாயிரம் ரூபாயை எடுக்கும் விஷயத்தைப் பற்றிப் பேசினோம். காரசாரமான விவாதம் நடைபெற்றது. வாய் வாக்குகள் முற்றின. அந்த இடமே சிறிது நேரத்தில் ஒரு போராட்டக் களமாக மாறியது. அப்போது எங்களைப் பற்றித் துப்பு தந்து காட்டிக்கொடுத்த இன்றைய அமைச்சர் சொன்னார்:

"நீங்க ஒரு பயந்தாங்கொள்ளி மிஸ்டர். ஒரு பெரிய பிரச்சினை நம்ம முன்னாடி வந்து நிக்கிறப்போ, நீங்க பயந்தாங்கொள்ளியா மாறிடுறீங்க..." - என்னைப் பார்த்து அவர் சொன்ன வார்த்தைகள் இவை.

நான் சொன்னேன்: "இந்த ஆறாயிரம் ரூபாயைத் திருடக்கூடாது. அதைத் திருடுற அளவுக்கு அப்படி என்ன தேவைன்றது என்னோட வாதம். இதைத்தான் நீங்க பயந்தாங்கொள்ளித்தனம்னு சொல்லுறீங்க. அப்படியே இருக்கட்டும். நம்மிடம் நிறைய குண்டுகளும், கத்திகளும் இருப்பது நல்லதுதான். ஆனால், நாம் யாரைக் கொல்லப்போகிறோம்? அரசாங்கத்தோட சண்டை போட்டு அதிகாரத்தைப் பிடிக்கிறது நம்மளோட இலட்சியம் இல்ல... இப்போ இருக்குற அரசியல் கட்சிக்கு நாம் ஒருவிதத்துல உதவி செய்றோம்ன்றதுதான் உண்மை. போலீஸ் அவர்களை ரொம்பவும் துன்பப்படுத்துது. அவர்களுக்குக் கஷ்டம் தந்தால், போலீஸ்காரர்களுக்குக் கஷ்டம் கொடுக்க ஆள் இருக்காங்கன்றதை போலீஸ்காரங்க புரிஞ்சுக்கணும். இதுதானே நம்மோட குறிக்கோள்!"

விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் அந்த கொள்ளையடிக்கும் விஷயத்திற்கு எதிராகத்தான் பேசினார்கள். அதற்குப் பிறகு கூட்டம் தமாஷூம், சிரிப்பும் உள்ளதாக மாறியது. இரண்டு மணிக்கு எல்லோரும் தனித்தனியே பிரிந்தனர். சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டதால், நான் அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. தனியாக இருப்பது என்பது எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்த விஷயம். அதனால் நான் அங்கேயே இருந்தேன்.

எனக்கு முன்னால் எல்லையற்று விரிந்து கிடக்கும் கடல். எனக்குப் பின்னால் இருக்கும் நகரத்தையே, சொல்லப்போனால் நான் மறந்துவிட்டேன். நிலவொளிக்கென்றே இருக்கிற... அதை என்ன சொல்வது? ஒரு வகையான அழகும்... ஒரு பயங்கரத்தன்மையும்... இவை இரண்டும் சேர்ந்து உண்டாக்கும் ஒரு புது அனுபவமும்... நான் அதில் முழுமையாக மூழ்கிப்போய் கடலையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். கடல் அலைகள்... ஒன்றன்பின் ஒன்றாக... பயங்கர இரைச்சலுடன் கரையை வந்து மோதிக் கொண்டிருந்தன. இரைச்சல், முழக்கம், பதறல் - எல்லாமே கலந்த சத்தங்கள்! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் ஒரு விஷயம் இது. உயிர்கள் வருகின்றன... போகின்றன... ஆனால், இந்தக் கடலின் ஆரவாரமும், அலைகளும் மட்டும் எந்தக் காலத்திலும் நிலைபெற்று அப்படியே நின்றுகொண்டிருக்கும். இதற்கு மட்டும் என்றும் ஒரு முடிவே இல்லை...


இதற்கு முன்பு இப்படிப்பட்ட சிந்தனைகள் மனதில் உண்டாகி இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. தீவிரவாத இயக்கத்தைப் பற்றியும், அதன் செயல்கள் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குத் திடீரென்று தோன்றியது - என் உடலில் யாரோ நீரைத் தெளிக்கிறார்கள் என்று! என்ன? உடலில் தண்ணீர் விழுந்தது என்று கூற முடியாது - யாரோ தெளித்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் அது யாராக இருக்கும் என்று பார்த்தேன். முழு நிர்வாணத்துடன் - அழகே வடிவமான ஒரு வெள்ளை வெள்ளேர் என்ற இளம் பெண்! எனக்கு முன்னால் அவள் கடலில் குளித்துக் கொண்டிருந்தாள்!

நேரம் இரவு மூன்று மணி என்பதையோ, தனிமையாக இருக்கும், அமைதியில் மூழ்கிக் கிடக்கும் கடற்கரை என்பதையோ நான் ஞாபகத்திலேயே எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு பெண் கடலில் குளித்திக் கொண்டிருக்கிறாள்! அதுதான் இப்போது என் மனதில் இருக்கும் ஒரே விஷயம். ஆனால் அதே நேரத்தில் எனக்குக் கோபம் கலந்த ஒருவித அச்சம் தோன்றியது. நாங்கள் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களையும் இவள் கேட்டிருப்பாளோ? - உண்மையாக சொல்லப்போனால், நான் வியர்த்துப் போய்விட்டேன். அவள் காதில் விழும்படி நான் சொன்னேன்:

"வெட்கம்னு ஒண்ணு கிடையாதா? குறைந்தபட்சம் - ஒரு பெண்ணுக்கு, இதற்கு முன்பு பழக்கமே இல்லாத ஒரு ஆண் கரையில உட்கார்ந்திருக்கான். அவனுக்கு முன்னாடி இப்படிப் பிறந்த மேனியோட குளிக்கிறதுன்றது...என்ன இருந்தாலும் நீ ஒரு பெண் ஆயிற்றே! இதே காரியத்தை ஒரு ஆண் செய்திருந்தா நடந்திருக்கிற விஷயமே வேற! உலகத்தையே இங்கே கொண்டு வந்து ஒரு வழி பண்ணி இருப்பீங்க...கெட்டவன் - அயோக்கியன் - பண்பாடு இல்லாதவன் அது இதுன்னு வாய்க்கு வந்தபடி பேசி ஒரு ரகளையே பண்ணியிருப்பீங்க... என்ன இருந்தாலும் நீங்க பெண்ணாச்சே! இந்த உலகத்துல நீங்க

வச்சதுதான் சட்டம்!" - இதை சொல்லிய நான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தேன். என் முகத்தை அவள் ஏறிட்டே பார்க்கவில்லை. நான் கூறியதற்கு அவள் பதில் வார்த்தையாகக் கூட எதுவும் கூறவில்லை. அவள் பக்கம் நான் திரும்பி அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என்மேல் அவள் தண்ணீரைத் தெளித்துவிட்டிருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாங்கள் எல்லோரும் அமர்ந்து பேசிய அனைத்து விஷயங்களையும் அவள் காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும். இதை நினைத்தபோது அவள் மீது எனக்குக் கோபம்தான் வந்தது.

நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சிறிது தூரம் சென்று, அங்கு போய் நின்றேன். நல்ல காற்று வீசிக்கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு தீப்பெட்டியை எடுத்து உரசி சிகரெட் பற்ற வைத்தேன். அவளிடமிருந்து ஒரு விஷயம் எனக்கு உடனடியாகத் தெரிந்தாக வேண்டும். நாங்கள் பேசிய விஷயங்ளை அவள் கேட்டாளா? இது எனக்குத் தெரிய வேண்டும். அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சந்தடி சாக்கில் இந்த விஷயத்தை நாம் அவள் வாயிலிருந்தே தெரிந்து கொள்ளவேண்டும். சரி... அவள் எப்போது குளிக்க வந்திருப்பாள்? அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி எங்கே வைத்திருப்பாள்? நள்ளிரவைத் தாண்டிய இந்த நேரத்தில் தனியாக ஒரு பெண் வந்து குளிப்பதற்கான காரணம்? இந்தக் கேள்விகளுக்கு எனக்கு என்ன பதிலும் தோன்றவில்லை. நான்தான் சொன்னேனே - எனக்கு ஒருவிதத்தில் கோபம் வருகிறது என்று. எங்களின் ரகசியப் பேச்சு அனைத்தையும் அவள் தெரிந்துகொண்டுவிட்டாள். எல்லாவற்றையும் அங்கே இருந்து கேட்டதோடு நிற்காமல் என்மீது தண்ணீரை வேறு அள்ளித் தெளித்திருக்கிறாள்!

அவளுடன் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? நான் நினைத்தேன் - அவளே என்னிடம் ஏதாவது பேசட்டுமே! இப்படி நான் எண்ணிக் கொண்டிருந்தபோது, எனக்கு நேராக அவள் நீரைத் தெளித்தவாறு ஓடி வந்து கொண்டிருக்கிறாள். என்னை மிதித்துவிட்டு எங்கே அவள் ஓடுவாளோ என்று கூட நான் நினைத்தேன். விளைவு - வேகமாக எழுந்து நின்றேன். அவள் என் முன் வேகமாக வந்து நின்றாள். இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு அவள் நின்றிருந்தாள். அவளின் தலைமுடியில் இருந்தும், உடலில் இருந்தும் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவளின் இரண்டு முலைகளும் 'கும்' மென்று எழுந்து நின்றன.

என் மனதில் அப்போதும் கோபம் குறையவில்லை. எழுந்தவுடன் அவளிடம் கேட்டேன்:

"என்னடி, உனக்கு கண்ணே தெரியலியா? ஒரு மனிதன் இங்கே நிக்கிறது உன் கண்ணுலயே படலியா? நான் யார்னு நீ நினைச்சுக்கிட்டு இருக்கே?"

அவள் பதில் எதுவும் கூறாமல் என்னையே உற்றுப் பார்த்தாள்.

நான் கேட்டேன்:

"என்னடி முறைச்சுப் பாக்குறே! உன்னோட ஆடைகள் எங்கே? சொல்லுடி..."

அவள் பதில் பேசவில்லை:

நான் கேட்டேன்:

"உன் வாயில நாக்கு இல்லியா என்ன?"

அப்போதும் அவள் என்னையே பார்த்தாள்.

நான் சொன்னேன்:

“நீ அப்படியே என்னை உற்றுப் பார்க்குறதுனால நான் பயந்து போயிடுவேன்னு நினைச்சிடாதே. மிதிக்கிற மிதியில உன்னோட உடம்புல இருக்கிற எலும்புகள் ஒவ்வொண்ணும் துண்டு துண்டா நொறுங்கிப்போயிடும். ஒழுங்கா இந்த இடத்தைவிட்டுப் போயிடு. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..."

உரத்த குரலில் நான் இதைச் சொன்னேன். அவள் என் சைக்கிளைத் தாண்டி நடந்தாள். எனக்கு மிகச் சமீபத்தில் வந்தபோது விரித்து விடப்பட்டிருந்த தன் கூந்தல் வழியாக என்னை அவள் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, தன் போக்கில் அவள் நடந்தாள்.

நான் அவளைப் பார்த்தேன்.

அவளைக் காணோம்!

அவ்வளவுதான் -

என் உடல் நடுங்கிவிட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இது? அவள் எங்கே போனாள்? எதுபற்றியும் கவலைப்படாமல் இருந்தது கடல். வானத்தில் நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. அமைதியான மணல் பரப்பு. அவள் எங்கே போனாள்? கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட ஏதாவது பெண்ணின்... இதை நினைத்ததுதான் தாமதம், என் மனதில் பயத்தின் நிழல் தோன்ற ஆரம்பித்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்க நினைத்தேன். அப்போது ஒரு வினோதமான விஷயம் -

சைக்கிள் நகர மறுத்தது!

அவ்வளவுதான் -

நான் அதிர்ச்சியடைந்து போனேன். என் உடல் முழுக்க வியர்வையில் குளித்தது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் அங்கேயே நின்றேன். எல்லா விஷயங்களும் எனக்குப் புரிந்துவிட்டன என்பது மாதிரி காட்டிக்கொண்டு நான் சொன்னேன்:


"விஷயம் இதுதானா? நீ வெற்றி பெறுகிறாயா இல்லாட்டி நான் பெறுகிறேனான்னு பார்த்துடுவோம். என்ன சரியா?"

நான் சைக்கிளை உயரத் தூக்கினேன். தோளில் அதை வைத்துக் கொண்டு வேகமாக நடந்தேன். எனக்குப் பின்னால் கடலின் இரைச்சல் சத்தத்துடன், இன்னொரு சத்தமும் சேர்ந்து ஒலிக்கக் கேட்டேன். அது - சுமார் இருபது பெண்கள் ஒன்று கூடிக் குலவையிடும் சத்தம். தொடர்ந்து என்மீது மண் வந்து விழுந்தது.

நான் திரும்பியே பார்க்கவில்லை. காற்றும், மண்ணும், கடலின் இரைச்சல் சத்தமும், அந்தக் குலவை ஒலிகளும்... நான் நடந்துகொண்டே இருந்தேன். ஷூவுக்குள் மண் நுழைந்து விரல்களின் மேல்தோல் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது. நான் நடந்துகொண்டே இருந்தேன். இப்படியே பல மணி நேரங்கள் என் நடை தொடர்ந்தது. மின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த தனிமையான சாலையை நான் அடைந்தேன். அங்கே போய் பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

"இதன் அர்த்தம் என்ன?" - எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். எனக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. சிறிது நேரம் கழித்து, நான் சைக்கிளில் ஏறிப் படு வேகமாக அதை செலுத்தினேன். வீட்டை அடைந்ததும், அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி, நீரில் மூழ்க வைத்துவிட்டு நான் ஆசை தீரக் குளித்தேன். தோய்த்து வைத்துப்பட்டிருந்த வேறு ஆடைகளை அணிந்தேன். அப்போதும் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான் - இதன் அர்த்தம் என்ன?

காலம் கடந்தோடியது. நாடு விடுதலை பெற்றது. எவ்வளவோ மாற்றங்கள் இங்கு வந்தன. கடலுக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அங்கு இருந்த கறுத்த பாறைகளுக்கும் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. எப்போதாவது அந்த சம்பவத்தை நான் நினைத்துப் பார்ப்பேன். பெரும்பாலும் - நிலவைப் பார்க்கிறபோது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.