
மிக மிகத் தாழ்ந்த நிலையில் வாழ்க்கையை ஆரம்பித்து, இளமைக்காலத்தின் தொடக்கத்தில் தெருத் தெருவாகக் கஷ்டப்பட்டு அலைந்து, சிறிது நாட்களில் பட்டாளக்காரனாகச் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, கடைசியில் ஒரு நாட்டையே ஆளக்கூடிய மனிதராகவும், எல்லோரின் நன்மதிப்பையும் பெற்றவராகவும், உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்குப் பெரிய மனிதராகவும் ஆன அந்த மகான் மரணமடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் முகத்தில் நிழலாடிய ஒருவித விரக்தி உணர்வையும், வெறுப்புத் தன்மையையும் பற்றிக் கேள்வி கேட்டதற்கு அவர் இப்படிச் சொன்னார்:
"வாழ்க்கையோட இறுதிக் கட்டத்துல இப்போ நான் இருக்கேன். என்னோட வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையாகவே அது இருந்துச்சு. எல்லாமே நான் நினைச்சபடி நடந்துச்சு. வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன்னு என்னால சொல்ல முடியும். என்றாலும், நான் கடந்து வந்த என்னோட வாழ்க்கைப்பாதையில் எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவத்தை - அந்தச் சம்பவம் நடந்த நிமிடத்தை என்னால் இந்த இறுதி நிமிடத்திலும் மறக்கவே முடியாது. என்னோட ஆத்மாவை இப்போதும் அந்தச் சம்பவம் வாட்டி எடுத்துக்கிட்டுதான் இருக்கு!
நிறைவேறாத விருப்பத்தை இனி யாராலும் நிறைவேற்றித் தர முடியுமா என்ன?
இதுவரை என்னோட வாழ்க்கை வரலாற்றை எத்தனையோ பேர் எழுதி இருக்காங்க. அது எல்லோராலும் 'ஓஹோ'ன்னு பாராட்டவும் பட்டிருக்கு. அந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் ஒன்றில் கூட நான் இப்போ சொல்ற சம்பவம் இடம்பெறவே இல்லை.
அந்தப் புத்தங்களை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான் ஒரு பெரிய பாக்யசாலின்னுதான் நினைப்பாங்க.
நான் ஒரு சாதாரண மனிதனாகத்தான் இருந்தேன். தெருத்தெருவா அலைஞ்சு பிச்சை எடுத்தேன் - அன்றாட வாழ்க்கையை ஓட்டுறதுக்காக. என்னோட வாலிபப்பருவத்தில் ஒரு அழகான இளம் பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு பேரழகி. என் உயிரைவிட அவளைப் பெரிதாக நினைத்து காதலிச்சேன்.
அன்றைக்கு எனக்கு வீடோ குடும்பமோ எதுவும் கிடையாது. இந்த அகன்ற பிரபஞ்சத்தில் நான் மட்டும் தனியா இருந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லாம, படுக்குறதுக்கு இடம் இல்லாம தெருவுல அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் நல்ல வெயில். மதிய நேரம். நடந்து நடந்து களைத்துப் போன நான் என்னோட காதலியின் வீட்டைத் தேடிப் போனேன். அவள் ஆசையா, அன்பா பேசுறதைக் கேட்குறதுக்காக அல்ல. கொஞ்சம் தண்ணி குடிச்சு தொண்டையை நனைக்கலாமேன்னு. ஆனா, அவள் இரக்கமே இல்லாம சொன்னாள் :
"இது ஒரு அகதி மடமில்ல, நினைச்சவங்க எல்லாம் இங்க வர்றதுக்கு!"
நான் சொன்னேன்:
"எனக்கு ஒரே தாகமா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் ஆச்சுன்னா, நானே மயங்கி விழுந்திடுவேன். கொஞ்சம் தண்ணி வேணும்!"
ஆனால், அவள் எனக்கு நீர் தரவில்லை. என்னை உடனே இடத்தைக் காலி பண்ணச் சொன்னாள்.
"டேய்... தேவையில்லாமல் தொந்தரவு பண்ணாதே. செத்துப்போய்த் தொலைய வேண்டியதுதானே!"
அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை என்றாலும், அவளால் அதை மறக்க முடிந்தது.
காலப்போக்கின் சுழற்சியில் பணமும், புகழும் என்னைத் தேடி வர.. எதுவுமே என்னிடம் இல்லாமல் இல்லை என்கிற அளவிற்கு செல்வச் செழிப்பில் நான் மிதக்க... இதயம் முழுக்க காதல் எண்ணங்களுடன் என்னைத் தேடி வர்றா அவள்.
ஒரு பாத்திரம் குளிர்ந்த நீர் என்ன - எதை வேணும்னாலும் எனக்குத் தர அவள் தயாரா இருந்தா. இந்த நாட்டுலயே பெரிய பணக்காரியா - கடைசி வரை திருப்தியா வாழ்ந்து செத்தாள்.
ஒண்ணு சொல்றேன் - நான் அவளை மனப்பூர்வமா காதலிச்சு அவளை என்னோட இதய தேவதையா வழிபட்டுக்கிட்டு இருந்த அந்த நிமிடத்துல அவளோட கையால எனக்கு ஒரு பாத்திரம் தண்ணி தாகம் தீர்க்கத் தந்தளா?"
அவர் அந்தச் சம்பவத்தைச் சொன்னதும், யாராலும் அதற்குப் பரிகாரம் சொல்ல முடியவில்லை. பரிகாரம் காண முடியுமா? பெரிய மனக்குறையுடன் - விரக்தி மேலோங்க அந்த மகான் இந்த உலகத்தை விட்டுப் போனார்.
இந்தச் சம்ப்வத்தை என்னிடம் அவர் சொன்னவுடன் - "இதை இப்போ நீங்க நினைச்சுப் பார்க்கிறதுக்கு காரணம்?" என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னது இதுதான்:
"ஓ... ஒண்ணுமில்ல. சும்மா ஒரு ஞாபகம். அவ்வளவுதான்..."