Logo

வெற்று முரசு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6317
vettrumurasu

மெல்யான் ஒரு கூலித் தொழிலாளி. அவன் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தான். ஒருநாள் ஒரு மைதானம் வழியே அவன் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் ஒரு தவளை குதித்துப் போய்க் கொண்டிருந்தது. அதன் மீது தன் கால் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. அப்போது திடீரென்று அவனுக்குப் பின்னாலிருந்து அவனை யாரோ அழைத்தார்கள்.

எமெல்யான் சுற்றிலும் பார்த்தான். ஒரு அழகான இளம் பெண் அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்: "நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல, எமெல்யான்?"

‘நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும், பெண்ணே?- அவன் சொன்னான்: ‘நான் போட்டிருக்க ஆடைகளைத் தவிர, என்கிட்ட எதுவும் இல்ல. என்னை யாரு கணவனா ஏத்துக்குவாங்க?’

'என்னை மனைவியா ஏத்துக்குறியா?'- அவள் கேட்டாள்.

எமெல்யானுக்கு அந்த இளம்பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. 'உன்னைக் கல்யாணம் பண்ண வாய்ப்பு கிடைச்சா நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்'- அவன் சொன்னான்: 'ஆனா நாம எப்படி, எங்கே வாழ்றது?'

'அதைப் பற்றி என்ன கவலை?'- அந்த இளம்பெண் சொன்னாள்: 'கஷ்டப்பட்டு நல்லா வேலை செய்யணும். ஆனா, ரொம்பவும் குறைவான நேரமே தூங்கணும். அப்படி இருந்தா உணவு, உடை எதுக்குமே பிரச்னை இருக்காது.'

'அப்படின்னா நாம கல்யாணம் பண்ணிக்குவோம்'- எமெல்யான் சொன்னான்: 'நாம எங்கே போகலாம்ன்ற?'

'நாம நகரத்துக்குப் போவோம்.'

எமெல்யானும் அந்த இளம்பெண்ணும் நகரத்திற்குச் சென்றார்கள். அவனை அவள் நகரத்தின் எல்லையில் இருந்த ஒரு சிறிய குடிசைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் நகர்வலம் வந்த மன்னன் எமெல்யானின் குடிசையைத் தாண்டி வந்தான். அப்போது எமெல்யானின் மனைவி மன்னனைப் பார்ப்பதற்காக வெளியே வந்தாள். மன்னன் அவளைப் பார்த்து, ஆச்சரியத்தின் உச்சிகே போய்விட்டான்.

'இந்த அளவுக்கு அழகு இவளுக்கு எப்படி வந்துச்சு?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்ட மன்னன் தான் வந்த ஊர்தியை நிறுத்திவிட்டு, எமெல்யாவின் மனைவியை அழைத்து கேட்டான்: 'நீ யார்?'

'விவசாயி எமெல்யானின் மனைவி'- அவள் சொன்னாள்.

'இந்த அளவுக்கு அழகு படைத்த பெண்ணான நீ ஏன் ஒரு சாதாரண விவசாயியை திருமணம் செஞ்சே?'- மன்னன் சொன்னான்: 'நீ ஒரு அரசியா இருக்க வேண்டியவ...'

'உங்களோட நல்ல வார்த்தைகளுக்கு நன்றி'- அவள் சொன்னாள். 'ஆனா, ஒரு விவசாயியோட மனைவியா இருக்குறதே எனக்குப் போதும்!

மன்னன் அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் ஊர்தியைச் செலுத்தினான். அவன் தன் அரண்மனைக்குத் திரும்பி வந்தான். அதற்குப் பிறகும் எமெல்யானின் மனைவியை அவனால் மறக்க முடியவில்லை. இரவு முழுவதும் அவன் சிறிது கூட தூங்கவில்லை. அவளைத் தனக்கு சொந்தமாக்குவது எப்படி என்பதைப் பற்றியே இரவு முழுவதும் சிந்தித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு சிந்தித்தும் அவனால் ஒரு தெளிவான முடிவுக்கே வர முடியவில்லை. அதனால் அவன் தன் பணியாட்களை அழைத்து தனக்கு ஒரு வழி கண்டு பிடித்து கூறும்படி சொன்னான்.

மன்னனின் பணியாட்கள் சொன்னார்கள்: 'எமெல்யானை அரண்மனைக்கு வேலைக்கு வரச் சொல்லுங்க. நாங்க அவனுக்கு ரொம்பவும் கடுமையா இருக்குற மாதிரி வேலைகளைத் தர்றோம். அந்த வேலைகளைச் செய்ய முடியாமல் அவன் செத்துப் போயிடுவான். அதுக்குப் பிறகு அவன் மனைவி விதவை ஆயிடுவா. நீங்க அவளை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

மன்னன் அவர்கள் சொன்ன அறிவுரையின்படி நடந்தான். எமெல்யான் அரண்மனைக்கு வந்து உடனே வேலை செய்ய வேண்டும் என்றும், அவன் தன் மனைவியுடன் அரண்மனையில் தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்றும் மன்னன் கட்டளை பிறப்பித்தான்.

தூதுவர்கள் எமெல்யானைத் தேடி வந்து மன்னன் அனுப்பியிருந்த தகவலைக் கொடுத்தார்கள். எமெல்யானின் மனைவி சொன்னாள்: 'போ எமெல்யான். பகல் முழுவதும் அங்கே வேலை செஞ்சிட்டு, இரவு நேரத்துல வீட்டுக்கு வந்திடு!'

அவள் சொன்னபடி எமெல்யான் வேலை செய்வதற்காக அரண்மனைக்குப் புறப்பட்டான். அவன் அரண்மனைக்குள் நுழைய முற்பட்டபோது அங்கிருந்த மன்னனின் சேவகன் அவனைப் பார்த்துக் கேட்டான்: 'என்ன நீ மட்டும் தனியா வர்ற! உன் மனைவி எங்கே?'

'நான் ஏன் அவளை இழுத்திட்டு வரணும்?'- எமெல்யான் சொன்னான். 'இருக்குறதுக்கு அவளுக்கு வீடு இருக்கு!’

மன்னனின் அரண்மனையில் அவர்கள் எமெல்யானுக்கு இரண்டு மடங்கு வேலைகளைக் கொடுத்தார்கள். அந்த வேலைகளை முடிக்க முடியும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அவன் வேலையை ஆரம்பித்தான். ஆனால், மாலை நேரம் வந்தபோது அவன் எல்லா வேலைகளையும் ஒழுங்காக செய்து முடித்திருந்தான். அவ்வளவுதான்- அவனுக்கு மறுநாள் நான்கு மடங்கு வேலைகளைத் தருவது என்று அங்கிருப்பவர்கள் தீர்மானித்தார்கள்.

எமெல்யான் தன் வீட்டிற்குத் திரும்பினான். வீட்டில் எல்லா விஷயங்களும் முறையாக செய்யப்பட்டு, வீடு படு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. அடுப்பு எரிக்கப்பட்டு, அவனுக்கு இரவு சாப்பாடு தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. அவனுடைய மனைவி மேஜைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு எதையோ பின்னியவாறு அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் வந்ததும் அவனை அன்புடன் அவள் வரவேற்றாள். உணவைப் பறிமாறினாள். பருகுவதற்கு தந்தாள். பிறகு அவனுடைய வேலையைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தாள்.

'அதை ஏன் கேக்குற! எனக்கு கடுமையான வேலைகளைத் தந்து ஒரு வழி பண்ணிட்டாங்க. என்னோட சக்திக்கு மேல இருந்தது அவங்க தந்த வேலை. வேலையைக் கொடுத்தே என்னைச் சாகடிக்கலாம்னு அவங்க நினைக்கிறாங்கன்னு என் மனசுல படுது.'

'வேலையைப் பற்றி கவலையே படாதே'- அவள் சொன்னாள்: 'வேலை செய்யிறப்போ முன்னாடியோ பின்னாடியோ பார்க்கவே வேண்டாம். எவ்வளவு வேலையை நாம செஞ்சு முடிச்சிருக்கோம்னோ இன்னும் எவ்வளவு வேலை செய்ய வேண்டியதிருக்கோன்னோ பார்க்கவே வேண்டாம். எப்பவும் செய்யிற வேலையில மட்டுமே கவனம் இருக்கணும். எல்லாம் சரியாகும்!'

எமெல்யான் படுத்து உறங்கினான். மறுநாள் காலையில் அவன் மீண்டும் வேலை செய்வதற்காகக் கிளம்பினான். சுற்றிலும் எதையும் பார்க்காமல் வேலை செய்வதில் மட்டுமே கவனமாக இருந்தான். ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும் மாலை நேரம் வரும்போது அவன் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருந்தான். பொழுது இருட்டுவதற்கு முன்பே தன் வீட்டிற்கு அவன் வந்து விட்டான்.


மீண்டும் மீண்டும் அவர்கள் எமெல்யானின் வேலையை அதிகமாக்கினார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் மாலை நேரத்திற்குள் எவ்வளவு கடுமையான வேலைகளைக் கொடுத்தாலும், அவன் அதை முழுமையாக முடித்து விட்டு இரவு வருவதற்குள் தன் வீட்டிற்குத் திரும்பி விடுவான். ஒரு வாரம் ஓடி முடிந்தது. கடுமையான வேலைகளைக் கொடுத்து எமெல்யானைத் துன்புறுத்தி அழித்து விடலாம் என்று கணக்குப் போட்டிருந்த மன்னனின் பணியாட்களின் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. அதனால் திறமை தேவைப்படுகிற வேலையாக அவனுக்குக் கொடுக்க அவர்கள் தீர்மானித்தார்கள். தச்சு வேலை, பூச்சு வேலை, கூரை வேய்தல்- இப்படி எந்த வேலையைக் கொடுத்தாலும், எமெல்யான் உரிய நேரத்திற்குள் அந்த வேலையைச் செய்து முடித்து விடுவான். இரவில் வீட்டிலிருக்கும் தன் மனைவியைத் தேடி போய் விடுவான். இப்படியே இரண்டாவது வாரமும் ஓடி முடிந்தது.

மன்னன் தன் பணியாட்களை அழைத்து சொன்னான்: 'ஒண்ணுமே செய்யாம இருக்குறதுக்கா நான் உங்களுக்கு சோறு போட்டு வளர்க்கிறேன்! ரெண்டு வாரங்கள் ஓடி முடிஞ்சிடுச்சு. நீங்க எதையும் உருப்படியா செய்ததா தெரியல. எமெல்யானுக்குக் கடுமையான வேலைகளைத் தந்து, அவனைக் களைப்படைய வைக்கணும்னு நீங்க முயற்சிக்கிறீங்க. ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அவன் சந்தோஷத்தோட பாட்டுப் பாடிக்கிட்டு வீட்டுக்குப் போறதை நான் ஜன்னல் வழியா பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னை முட்டாளாக்கப் பார்க்குறீங்களா?'

பணியாட்கள் மன்னனிடம் தங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். 'நாங்க கடுமையான வேலைகளைத் தந்து அவனை ஒரு வழி பண்ணணும்னு நினைச்சோம்'- அவர்கள் சொன்னார்கள்: 'ஆனா, அவனுக்கு எதுவுமே கஷ்டமா இல்ல. அவன் எந்த வேலையைக் கொடுத்தாலும் துடைப்பத்தால தூசியைத் துடைக்கிற மாதிரி சர்வ சாதாரணமா எதையும் செஞ்சிட்டுப் போயிடுறான். அவனை எங்களால சோர்வடையச் செய்யவே முடியல. அதனால திறமை தேவைப்படுகிற வேலைகளா பார்த்து நாங்க அவனுக்குத் தந்தோம். அந்த வேலைகளைச் செய்யிறதுக்கான திறமையும், புத்திசாலித்தனமும் அவனுக்கு இருக்குன்னு நாங்க நினைக்கல. ஆனா, அந்த வேலைகளையும் அவன் நல்லாவே செய்தான். எந்த வேலையைக் கொடுத்தாலும், அவன் அதை முழுமையா செய்து முடிக்கிறான்றது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை அவன் எப்படிச் செய்து முடிக்கிறான்றதுதான் எங்களுக்கு ஆச்சரியமான ஒரு விஷயமா இருக்கு. அவனோ அவன் மனைவியோ தங்களுக்கு உதவக் கூடிய அந்த மறைபொருளை கட்டாயம் தெரிஞ்சு வச்சிருக்கணும். அவனோட செயல்களைப் பார்த்து நாங்களே ஒரு மாதிரி ஆயிட்டோம். எந்த வகையில பார்த்தாலும் செய்யவே முடியாத வேலையா பார்த்து நாங்க அவனுக்கு தர தீர்மானிச்சிருக்கோம். ஒரே நாள்ல ஒரு தேவாலயத்தைக் கட்டி முடிக்கணும்னு அவன்கிட்ட சொல்லப் போறோம். அரண்மனைக்கு முன்னாடி ஒரே நாள்ல ஒரு தேவாலயத்தை கட்டி முடிக்கணும்னு ஆள் அனுப்பி விட்டு எமெல்யானை வரவழைச்சு, அவனுக்குக் கட்டளை போடுங்க. அப்படி அவனால ஒரு தேவாலயத்தை ஒரே நாள்ல கட்ட முடியாமப் போனா, சொன்ன வார்த்தையைச் செய்யலைன்ற குற்றத்தைச் சுமத்தி அவனோட தலையை வெட்டிடுங்க!'

மன்னன் எமெல்யானை வரும்படி சொல்லி ஆள் அனுப்பினான். எமெல்யான் வந்தான். 'நான் சொல்லப்போற கட்டளையைக் கேள்'- அவன் சொன்னான்: 'என் அரண்மனைக்கு முன்னாடி இருக்குற சதுக்கத்துல நீ ஒரு புது தேவாலயத்தைக் கட்டணும். நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த தேவாலயம் தயாராகணும். இந்தக் கட்டளையை ஒழுங்கா செய்து முடிச்சா, உனக்கு நான் பரிசு தருவேன். அப்படிச் செய்து முடிக்கலைன்னா, உன் தலையை நான் வெட்டிவிடும்படி ஆணை பிறப்பிப்பேன்!'

எமெல்யான் மன்னன் போட்ட கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். 'என் முடிவு நெருங்கிடுச்சு'- அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். மனைவியிடம் வந்து அவன் சொன்னான்: 'என் அருமை மனைவியே, தயாராகு. நாம உடனே இங்கிருந்து கிளம்பியாகணும், இல்லாட்டி எந்தத் தப்பும் செய்யாமலே என்னை நான் இழக்க வேண்டியது வரும்.'

'எதனால இப்படி பயப்படுற?'- அவள் கேட்டாள்: 'நாம ஏன் இங்கேயிருந்து ஓடணும்?'

'நான் எப்படி பயப்படாம இருக்க முடியும்? நாளைக்கு ஒரே நாள்ல ஒரு தேவாலயத்தை நான் கட்டித் தரணும்னு மன்னர் கட்டளை போட்டிருக்காரு. நான் அதைக் கட்டலைன்னா, என் தலையை தனியா துண்டிச்சு அவர் எடுத்துடுவாரு. ஒரே ஒரு விஷயம்தான் இப்போ செய்ய முடியும். நேரம் இன்னும் இருக்கு- நாம இங்கேயிருந்து ஓடிடுவோம்!

ஆனால், அவனுடைய மனைவி அவன் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை. 'மன்னன்கிட்ட நிறைய வீரர்கள் இருக்காங்க'- அவள் சொன்னாள்: 'நாம எங்கே இருந்தாலும் அவங்க நம்மைப் பிடிச்சிடுவாங்க. அவர்கிட்ட இருந்து நாம தப்ப முடியாது. அதைவிட உடம்புல பலம் இருக்குற வரைக்கும் அவருக்குக் கீழ்ப்படிஞ்சு நடக்குறதுதான் நல்லது!

'செய்யச் சொல்ற வேலை என்னோட பலத்தை விட பெருசா இருக்குறப்போ, நான் எப்படி அவர் சொல்றபடி நடக்க முடியும்?'

'நல்ல மனிதனே, மனம் தளரக் கூடாது. இப்போ இரவு உணவைச் சாப்பிட்டு முடிச்சு நீ போய் படு. காலையில் சீக்கிரம் எழுந்திரு. எல்லாம் சரியா நடக்கும்.'

அவள் கூறியபடி எமெல்யான் படுத்து தூங்கினான். மறுநாள் அதிகாலையில் அவனுடைய மனைவி அவனை எழுப்பினாள். 'சீக்கிரம் புறப்படு...' - அவள் சொன்னாள்: 'தேவாலயத்தைச் சீக்கிரம் கட்டி முடிக்கணும். இதோ ஆணி, சுத்தியல் எல்லாம் இருக்கு. ஒரு நாள்ல சாதாரணமாக இதை செய்து முடிக்க முடியும்!

எமெல்யான் நகரத்திற்குள் நுழைந்து அரண்மனைக்கு முன்னாலிருந்த சதுக்கத்தை அடைந்தான். அங்கு முற்றிலும் முடிவடையாத நிலையில் ஏற்கெனவே ஒரு பெரிய தேவாலயம் இருந்தது. எது தேவையோ, அதை மட்டும் எமெல்யான் உட்கார்ந்து செய்தான். மாலை வரும்போது முழுமையாக தேவாலயம் உருவாக்கி முடிக்கப்பட்டிருந்தது.

மன்னன் படுக்கையை விட்டு எழுந்து அரண்மனைக்குள்ளிருந்து பார்க்கும்போது, வெளியே தேவாலயம் கம்பீரமாக நின்றிருந்தது. எமெல்யான் இங்குமங்குமாய் ஏதோ சில ஆணிகளை அடித்துக் கொண்டிருந்தான். தேவாலயம் அங்கு நின்றிருப்பதை, சொல்லப் போனால்- மன்னன் விரும்பவேயில்லை. எமெல்யானுக்குத் தண்டனை தந்துவிட்டு, அவனுடைய மனைவியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற தன்னுடைய ஆசை நிறைவேறாமற் போனது குறித்து அவன் மிகவும் வருத்தமடைந்தான். அவன் மீண்டும் தன்னுடைய பணியாட்களை அழைத்தான். 'எமெல்யான் இந்த வேலையையும் ஒழுங்கா செய்து முடிச்சிட்டான்'- மன்னன் சொன்னான்: 'அவனைச் சாகடிக்கலாம்ன்ற விஷயம் இதுலயும் நிறைவேறாமப் போச்சு. இதுவும் அவனுக்குக் கஷ்டமில்லாத ஒரு வேலையா ஆகிப் போனதுதான் ஆச்சரியமான விஷயம்.


இதைவிட புத்திசாலித்தனமான ஏதாவதொரு திட்டத்தைத் தீட்டுங்க. இல்லாட்டி அவன் தலையை மட்டுமில்ல. உங்க எல்லாருடைய தலைகளையும் நான் வெட்டிடுவேன்.'

அவ்வளவுதான்- மன்னனின் பணியாட்கள் வேறொரு புதிய திட்டத்தைச் சிந்தித்து அறிவித்தார்கள். அதன்படி எமெல்யான் மன்னனின் அரண்மனையைச் சுற்றி ஓடுகிற மாதிரி ஆறு ஒன்றை உருவாக்க வேண்டுமென்றும், அந்த ஆற்றில் கப்பல்கள் பயணம் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் சொன்னார்கள். மன்னன் எமெல்யானை அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பினான். அவன் வந்தவுடன் மன்னன் அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்தான்.

'ஒரே இரவுல உன்னால ஒரு தேவாலயத்தைக் கட்ட முடியும்னா, இதையும் உன்னால செய்ய முடியும். நாளைக்கே எல்லாம் முடிஞ்சாகணும். இல்லாட்டி நான் உன் தலையைத் தனியா துண்டிச்சு எடுத்திடுவேன்...'

எமெல்யான் முன்பு இருந்ததை விட மிகுந்த கவலைக்குள்ளானான். அவன் மனக் கவலையுடன் தன் மனைவியைத் தேடி வந்தான்.

'ஏன் இந்த அளவுக்கு கவலையா இருக்குற'- அவனுடைய மனைவி கேட்டாள்: 'மன்னர் இப்போ புதுசா ஏதாவது வேலை சொல்லியிருக்கிறாரா என்ன?'

எமெல்யான் நடந்த விஷயத்தை அவளிடம் சொன்னான். பிறகு அவன் தொடர்ந்து கூறினான்: 'நாம இங்கேயிருந்து ஓடிர்றதுதான் சரி.'

அதற்கு அவனுடைய மனைவி சொன்னாள்: 'மன்னரோட ஆளுங்கக்கிட்ட இருந்து நாம தப்பவே முடியாது. நாம எங்கே போனாலும், அவங்க நம்மைப் பிடிச்சிடுவாங்க. அதனால மன்னரோட கட்டளைக்குக் கீழ்ப்படியிறதைத் தவிர வேற வழியே இல்ல...'

'நான் எப்படி அதைச் செய்ய முடியும்?'- கவலையுடன் முணுமுணுத்தான் எமெல்யான்.

'முடியும், நல்ல மனிதனே!'- அவள் சொன்னாள்: 'தேவையில்லாம மனம் தளரக் கூடாது. இப்போ இரவு உணவைச் சாப்பிட்டுட்டு படுக்கப் போ. காலையில சீக்கிரம் எழுந்திடு. எல்லா விஷயங்களும் நல்லபடியா நடக்கும்...'

மனைவி சொன்னபடி எமெல்யான் படுத்துத் தூங்கினான். அதிகாலையில் அவனுடைய மனைவி அவனை எழுப்பினாள்: 'போ...'- அவள் சொன்னாள்: 'அரண்மனையில எல்லாம் தயாரா இருக்கு. அரண்மனைக்கு முன்னாடி ஒரே ஒரு மண் மேடு மட்டும் இருக்கும். அதை ஒரு கரண்டியை எடுத்து சரி பண்ணி விட்டா போதும்.'

மன்னன் படுக்கையை விட்டு எழுந்தபோது இதற்கு முன்பு அங்கு இருந்திராத ஒரு ஆறு இருப்பதைப் பார்த்தான். கப்பல்கள் மேலும் கீழுமாக போய்க் கொண்டிருந்தன. எமெல்யான் ஒரு கரண்டியால் அங்கிருந்த மண் மேட்டைச் சமன் செய்து கொண்டிருந்தான். மன்னனுக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. ஆறோ, கப்பல்களோ அங்கு இருந்ததற்காக அவன் மனதில் சந்தோஷப்படவில்லை. எமெல்யானைத் தண்டிக்க முடியவில்லையே என்பதற்காக அவன் மிகவும் கவலைப்பட்டான். 'உலகத்துல எந்த விஷயமும்...'- மன்னன் நினைத்தான்: 'அவன் செய்ய முடியாததா இல்ல. இப்போ என்ன செய்யிறது? அடுத்த நிமிடம் அவன் தன் பணியாட்களை அழைத்து அவர்களுடைய அறிவுரையை மீண்டும் கேட்டான்.

'வேறு ஏதாவது யோசனை பண்ணுங்க...'- மன்னன் சொன்னான்: 'எமெல்யான் இந்தத் தடவை தப்பவே கூடாது. நாம எதைத் திட்டம் போட்டாலும், அவன் அதை முழுமையா முடிச்சிடுறான். நான் அவன்கிட்ட இருந்த அவனோட மனைவியைப் பறிக்கவே முடியல...'

மன்னனின் பணியாட்கள் தீவிர சிந்தனையில் மூழ்கினார்கள். கடைசியில் அவர்கள் மனதில் ஒரு திட்டம் உதித்தது. அவர்கள் அரசனிடம் வந்து சொன்னார்கள்: 'எமெல்யானை வரச் சொல்லி ஆள் அனுப்புங்க. வந்தவுடன் அவன்கிட்ட 'அங்கே போ... எங்கேன்னு சொல்ல மாட்டேன்... வர்றப்போ அதை எடுத்துட்டு வா... எதைன்னு சொல்ல மாட்டேன்'னு சொல்லுங்க. இந்தத் தடவை அவன் உங்கக்கிட்ட இருந்து தப்பவே முடியாது. அவன் எங்கே போனாலும், சரியான இடத்துக்குப் போகலைன்னு நீங்க சொல்லிடுங்க. பிறகென்ன? அவன் தலையை வெட்டி எடுத்துட்டு, அவன் மனைவிகூட நீங்க வாழ வேண்டியதுதானே!'

அதைக் கேட்க மன்னனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'நீங்க இப்போ சொன்னது சரியான யோசனை' என்றான் அவன். தொடர்ந்து அவன் ஆட்களை அனுப்பிவிட்டு எமெல்யானை அழைத்து வரச் செய்தான். வந்து நின்ற எமெல்யானிடம் அவன் சொன்னான்: 'போ... எங்கேன்னு நான் சொல்ல மாட்டேன். வர்றப்போ அதைக் கொண்டு வா. எதைன்னு நான் சொல்ல மாட்டேன். நீ அதைக் கொண்டு வரலைன்னா, நான் உன் தலையை வெட்டுறதைத் தவிர வேற வழியில்லை...'

எமெல்யான் தன் மனைவியிடம் திரும்பி வந்தான். அவளிடம் மன்னன் கூறியதைச் சொன்னான். அவனுடைய மனைவி தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தாள்.

'விஷயம் அப்படிப் போகுதா?'- அவள் சொன்னாள்: 'உன்னை எப்படி பிடிக்குறதுன்னு அரசனுக்கு அவர்கள் சொல்லித் தந்திருக்காங்க. நாம இப்போ ரொம்பவும் புத்திசாலித்தனமா நடக்கணும்.' அவள் அமர்ந்து, தீவிர சிந்தனையில் மூழ்கி கடைசியில் தன் கணவனைப் பார்த்து சொன்னாள்: 'நீ ரொம்ப தூரம் பயணம் செய்து அந்த விவசாயம் செய்யிற பாட்டியைப் போய் பார்க்கணும். அவங்களோட உதவியை நீ கேட்கணும். அவங்க ஏதாவது உனக்கு உதவினாங்கன்னா, அதோட நீ நேரா அரண்மனைக்குப் போகணும். நான் அங்கே இருப்பேன். அவங்கக்கிட்ட இருந்து இந்த முறை என்னால நம்ப முடியாது. அவங்க பலவந்தப்படுத்தி என்னை எப்படியும் கொண்டு போயிருவாங்க. ஆனா, நீண்ட நாட்கள் என்னை அவங்க வச்சிருக்க முடியாது. பாட்டி என்ன சொல்றாங்களோ, அதன்படி நடந்தா என்னை மிகவும் சீக்கிரத்திலேயே நீ காப்பாத்திடலாம்.'

அவனுடைய மனைவி அவன் புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்தாள். அவள் அவனிடம் ஒரு கைக்குட்டையையும் நூற்கண்டையும் தந்தாள். 'இவற்றை பாட்டிக்கிட்ட கொடு'- அவள் சொன்னாள்: 'இந்த அடையாளங்களை வச்சு நீதான் என் கணவன்றதை அவங்க புரிஞ்சிக்குவாங்க.' அவன் போகவேண்டிய பாதை எது என்பதை அவளே காட்டினாள்.

எமெல்யான் புறப்பட்டான். அவன் நகரத்தைத் தாண்டி வேறொரு இடத்திற்கு வந்தான். அங்கு சில சிப்பாய்கள் எதையோ தோண்டிக் கொண்டிருந்தார்கள். எமெல்யான் அங்கு நின்று அவர்களையே பார்த்தான். தோண்டிக் கொண்டிருந்த சிப்பாய்கள் களைத்துப் போய் ஓய்வெடுப்பதற்காக உட்கார்ந்தார்கள். எமெல்யான் அவர்களிடம் போய் கேட்டான். 'சகோதரர்களே, எங்கேன்னு சொல்ல முடியாத இடத்துக்கு எப்படி போறது? எதுன்னு தெரியாத பொருளை எப்படி வாங்குறது?'

சிப்பாய்கள் தங்களுக்குள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டார்கள். 'யார் உன்னை இங்கே அனுப்பி வச்சது?'- அவர்கள் கேட்டார்கள்.

‘மன்னன்...’ – அவன் சொன்னான்.


சிப்பாய்கள் அவனிடம் சொன்னார்கள்: 'சிப்பாய்களா ஆன நாள்ல இருந்து நாங்க எங்கேன்னு தெரியாம போய்க்கிட்டு இருக்கோம். எதுன்னு தெரியாததைத் தேடிக்கிட்டு இருக்கோம். ஆனா, இதுவரை நாங்க அதைக் கண்டுபிடிக்கல. அதுனால உனக்கு நாங்க உதவ முடியாது!

எமெல்யான் சிப்பாய்களுடன் சிறிதுநேரம் உட்கார்ந்து விட்டு புறப்பட்டான். அவன் நீண்ட தூரம் நடந்து, கடைசியில் ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டில் ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசை முன்னால் மிகவும் வயதான ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். அவள்தான் சிப்பாய்களின் தாய் என்பதை அவன் புரிந்து கொண்டான். அந்தக் கிழவி எதையோ பின்னியவாறு, அழுது கொண்டிருந்தாள். பின்னும்போது, அவள் ஈரமாக்குவதற்காக தன் விரல்களை வாயில் வைக்கவில்லை. மாறாக, விரல்களை தன் கண்ணில் வைத்து கண்ணீரால் நனைய வைத்தாள். எமெல்யானைப் பார்த்ததும் அவள் அழுதவாறு 'நீ எதுக்காக இங்கே வந்திருக்கே?' என்று கேட்டாள். எமெல்யான் தன் கையிலிருந்த நூற்கண்டை அவளிடம் கொடுத்து அதை தன் மனைவி கொடுத்தனுப்பியதாகச் சொன்னாள்.

அந்த வயதான கிழவி அழுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தாள். எமெல்யான் தன்னுடைய முழு வாழ்க்கைக் கதையையும் சொன்னான். அந்த கிராமத்து இளம் பெண்ணை தான் திருமணம் செய்தது, நகரத்தில் இருவரும் போய் வாழ்க்கை நடத்தியது. தான் வேலை செய்தது, அரண்மனையில் தான் செய்த காரியங்கள், தான் தேவாலயத்தைக் கட்டியது, ஆறு உண்டாக்கியது, அதில் கப்பல்களை ஓட விட்டது. அதற்குப் பிறகு தன்னை அரசன் எங்கு என்று கூறாத இடத்திற்குப் போகச் சொன்னது, தன்னை எது என்று சொல்லாமலே ஒரு பொருளை கொண்டு வரச் சொன்னது- இப்படி எல்லா விஷயங்களையும் அவன் அந்தப் பாட்டியிடம் கூறினான்.

பாட்டி கடைசிவரை அவன் சொன்னதைக் கேட்டு, அழுவதை நிறுத்தினாள். அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்: 'அதற்கான நேரம் வந்திடுச்சு' பிறகு அவனைப் பார்த்து சொன்னாள்: 'சரி... மகனே, உட்காரு, நான் உனக்கு சாப்பிடுறதுக்கு ஏதாவது தர்றேன்.'

எமெல்யான் சாப்பிட்டான். பிறகு அந்தப் பாட்டி அவனிடம் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாள்: 'இங்கே... - அவள் சொன்னாள்: 'உருண்டையா நூல் இருக்கு. இதை உனக்கு முன்னாடி உருட்டிக்கிட்டே அதைப் பின்பற்றி நீ போ. கடலுக்கு அருகில் போறது வரை நீ போய்க்கிட்டே இருக்கணும். அங்கு போய் சேர்ந்தவுடனே, ஒரு பெரிய நகரம் இருப்பதை நீ பார்ப்ப. நகரத்துக்குள்ளே நுழைஞ்சு ஒருநாள் இரவு தங்கிட்டுப் போறதா எல்லையில இருக்குற வீட்டுல போய் சொல்லு. நீ எதைத் தேடுறியோ, அங்கே அது இருக்கும்.

'அதைப் பார்த்தவுடனே, அதுதான் நான் தேடிக்கிட்டு இருக்குறதுன்றது எனக்கு எப்படி தெரியும் பாட்டி?'- அவன் கேட்டான்.

'பெற்ற தாய் தந்தையை விட மனிதர்கள் மிகவும் மரியாதை செலுத்தக் கூடியது என்ன இருக்கோ, அதுதான் அந்தப் பொருள். அதை எடுத்து அரசன்கிட்ட கொண்டு போ. அதைப் பார்த்தவுடனே அரசன் தான் கேட்ட பொருள் அது இல்லைன்னு, சொல்லுவான். அப்படின்னா அதை உடைச்சு எறிஞ்சிடுவோம்னு நீ சொல்லு. சொன்னதோடு நிற்காம நீ அதை அடிச்சுக்கிட்டே ஆற்றுக்குப் பக்கத்துல கொண்டு போகணும். அங்கே போயி அதை துண்டு துண்டா உடைச்சு, நீருக்குள்ளே எறியணும். அப்போ உன் மனைவி உனக்குக் கிடைப்பா. என் கண்ணீரும் அப்போ முழுசா நின்னுடும்!- கிழவி சொன்னாள்.

எமெல்யான் கிழவியிடம் விடை பெற்றுக் கொண்டு பந்தை தனக்கு முன்னால் உருட்டிக் கொண்டே சென்றான். அது உருண்டு உருண்டு கடைசியில் ஒரு கடலுக்கு அருகில் வந்தது. கடலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நகரம் இருந்தது. நகரத்தின் எல்லையில் ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு எமெல்யான் ஒருநாள் மட்டும் தான் தங்கிச் செல்ல அனுமதிக்க முடியுமா என்று கெஞ்சிக் கேட்டான். அவனுக்கு அனுமதி தரப்பட்டது. அவன் அங்கு படுத்து உறங்கினான். மறுநாள் காலையில் அவன் படுக்கையை விட்டு எழுந்தபோது ஒரு வயதான மனிதர் தன் மகனை எழுப்பி அடுப்பு எரிப்பதற்கு விறகு கொண்டு வரும்படி சொன்னார். தந்தை சொன்னதை மகன் கேட்கவில்லை. 'இப்போ என்ன அவசரம்?'- மகன் சொன்னான்: 'இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கு...' அப்போது பையனின் தாய் சொன்ன வார்த்தைகள் எமெல்யானின் காதுகளில் விழுந்தன. 'போ, மகனே... உன் அப்பா உடம்பு வலிக்குதுன்னு படுத்திருக்கார். நீ அவரைப் போகச் சொல்றியா? இப்பவே நீ போனாத்தான் சரியா இருக்கும்.’

ஆனால், அவர்களுடைய மகன் என்னவோ முணுமுணுத்தானே தவிர, எழாமல் மீண்டும் தூக்கத்திலேயே அவன் ஆழ்ந்துவிட்டான். அவன் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, தெருவில் ஏதோ அதிரும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான்- குதித்து எழுந்த பையன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு வேகமாக தெருவை நோக்கி ஓடினான். எமெல்யானும் வேகமாக எழுந்து பெற்ற தாய், தந்தையைக் கூட மதிக்காத ஒருவன் அவர்களை விட ஏதோ ஒன்றுக்கு கீழ்ப்படிகிறான் என்றால் அது என்ன என்பதைப் பார்ப்பதற்காக அவனுக்குப் பின்னால் தெருவை நோக்கி ஓடினான். தெருவில் ஒரு மனிதன் வயிற்றோடு சேர்த்து கட்டிய ஒரு பொருளை குச்சியால் ஓங்கி ஓங்கி அடித்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தான். அதன் சத்தம்தான் இடி முழக்கம் போல அப்படி கேட்டது. அந்த ஒலிக்குத்தான் அந்த மகன் அப்படி கீழ்ப்படிந்து நடந்திருந்தான். எமெல்யான் அந்தக் காட்சியைப் பார்த்தான். அந்த ஒலி உண்டாக்கிய பொருள் வட்ட வடிவத்தில் ஒரு சிறு தொட்டியைப் போல இருந்தது. அதன் இரு பக்கங்களிலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருந்தது. அவன் அந்தக் கருவியின் பெயர் என்ன என்று கேட்டான்.

அதற்கு பதில் வந்தது: 'முரசு...'

'அது காலியாவா இருக்கு?'

'ஆமா... காலியாத்தான் இருக்கு.'

அதைக் கேட்டு எமெல்யான் ஆச்சரியமடைந்தான். அவன் அதைத் தன்னிடம் தரும்படி கேட்டான். அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் எமெல்யான் அதைக் கேட்பதை நிறுத்திவிட்டு, முரசு அடித்துக் கொண்டிருந்த ஆளை பின்பற்றினான். முழு நாளும் அவன் அந்த மனிதனைப் பின்தொடர்ந்து நடந்தான். கடைசியில் ஒரு இடத்தில் முரசு அடிக்கும் ஆள் படுத்துத் தூங்க, அந்த முரசை எடுத்துக் கொண்டு எமெல்யான் ஓடினான்.


அவன் ஓடினான்... ஓடினான்... ஓடிக் கொண்டே இருந்தான். கடைசியில் தன்னுடைய சொந்த ஊரை அவன் அடைந்தான். அவன் தன் மனைவியைத் தேடி வீட்டிற்குச் சென்றான். அப்போது அவனுடைய மனைவி வீட்டில் இல்லை. அவன் கிளம்பிய மறுநாள் அரசன் அவளை வீட்டிலிருந்து கொண்டு போய்விட்டான். அதனால் எமெல்யான் அரண்மனைக்குச் சென்று மன்னனுக்கு செய்தி சொல்லி அனுப்பினான். 'அவன் எங்கு என்று தெரியாத ஊருக்குப் போய்விட்டு திரும்பி வந்திருக்கிறான். எது என்று தெரியாத பொருளைக் கொண்டு வந்திருக்கிறான்'- இதுதான் அவன் சொல்லிவிட்ட செய்தி.

அவர்கள் மன்னனிடம் போய் செய்தியைக் கூறினார்கள். மறுநாள் அவனை வரும்படி சொல்லி மன்னன் பதிலுக்கு செய்தி கூறி அனுப்பினான்.

அதற்கு எமெல்யான் சொன்னான்: 'அரசரிடம் சொல்லுங்க- இன்னைக்கு நான் இங்கேதான் இருக்கப் போறேன்றதை. அவர் என்ன வேணும்னு விரும்பினாரோ, அதைக் கொண்டு வந்திருக்கேன். அவரை இங்கே வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க. இல்லாட்டி நான் அவரைப் பார்க்க உள்ளே வந்திடுவேன்.'

அவ்வளவுதான்- அடுத்த சில நிமிடங்களில் அரசன் அங்கு வந்தான். வந்தவுடன் அவன் 'இவ்வளவு நாட்களும் எங்கே போயிருந்தே?' என்று கேட்டான்.

எமெல்யான் சொன்னான்.

'அது நான் நினைத்த இடம் இல்ல...'- அரசன் சொன்னான். 'சரி... நீ என்ன கொண்டு வந்தே?'

எமெல்யான் முரசைச் சுட்டிக் காட்டினான். மன்னன் அதைப் பார்க்கவேயில்லை.

'நான் நினைத்தது இது இல்ல...'

'நீங்க நினைச்சது இது இல்லைன்னா, இதை உடைச்சு எறிய வேண்டியதுதான். சாத்தானுக்கு வேணும்னா இதை எடுத்துக்கட்டும்'- எமெல்யான் சொன்னான்.

எமெல்யான் அரண்மனையை விட்டு கிளம்பினான். போகும்போது முரசை தன் மீது தொங்கவிட்டு, அடித்துக் கொண்டே சென்றான். அவன் முரசை அடிக்க அடிக்க, அரசனின் ராணுவ வீரர்கள் வெளியே எமெல்யானைப் பின்பற்றி நடக்க ஓடி வந்தார்கள். அவர்கள் அவனைப் பார்த்து 'சல்யூட்' அடித்தார்கள். அவனுடைய கட்டளைகளுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

அரசன் ஜன்னல் வழியாக அந்தக் காட்சியைப் பார்த்து ராணுவ வீரர்கள் எமெல்யானைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது என்று உரத்த குரலில் கத்தினான். மன்னன் சொன்னதை அவர்கள் காதிலேயே வாங்காமல், எமெல்யானைப் பின்பற்றி நடந்தார்கள்.

அதைப் பார்த்த அரசன் எமெல்யானின் மனைவியை அவனிடமே திருப்பி அனுப்ப தான் தயாராக இருப்பதாகவும், பதிலுக்கு முரசை எமெல்யான் தன்னிடம் தரவேண்டுமென்றும் செய்தி சொல்லி அனுப்பினான்.

'அது முடியாது...' - எமெல்யான் சொன்னான்: 'இதைச் சுக்கு நூறா உடைக்கச் சொல்லி எனக்குக் கட்டளை போடப்பட்டிருக்கு. நான் இதை உடைச்சு ஆத்துல போடப் போறேன்.'

சொன்னதோடு நிற்காமல் எமெல்யான் ஆற்றை நோக்கி முரசுடன் நடக்க, ராணுவ வீரர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள். ஆற்றின் கரையை அவன் அடைந்ததும், எமெல்யான் முரசை உடைத்து நொறுக்கி ஓடிக் கொண்டிருந்த நீரில் அதை விட்டான். அங்கிருந்த ராணுவ வீரர்கள் அடுத்த நிமிடம் அங்கிருந்து ஓடினார்கள்.

எமெல்யான் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். அதற்குப் பிறகு அவனுக்குத் தொல்லைகள் தருவதை மன்னன் நிறுத்திக் கொண்டான். எமெல்யானும், அவனுடைய மனைவியும் அதற்குப் பிறகு நிரந்தர மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.