Logo

என் உம்மா

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6945
en umma

நான் 24 மணி நேரமும் இந்த வீட்டில்தான் இருக்கிறேன். சில நேரங்களில் மருந்து வாங்குவதற்காக கோழிக்கோட்டிற்குச் செல்வேன். ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழித்து திரும்பி வருவேன். மாதத்தில் ஒரு நாள் திருச்சூருக்குச் செல்வேன். அங்கு போவது சாகித்ய அகாடெமி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் சாகித்ய அகாடெமியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். ஒரு இரவு திருச்சூரில் தங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருவேன். என்னைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரவில்லையென்றால் மாலையில் வெளியே கிளம்புவேன்.

வெளியே செல்வது என்னுடைய நண்பர் டாக்டர் சரத்சந்திரனிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வாங்குவதற்காக. நான் தினந்தோறும் மாத்ரு பூமி, மலையாள மனோரமா, ஜனயுகம், கேரள கௌமுதி, சந்திரிகா ஆகிய பத்திரிகைகளைப் படிப்பதுண்டு. கேரள கௌமுதியும் ஜனயுகமும் சந்திரிகாவும் தபாலிலேயே எனக்கு வந்து விடுகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளிநாட்டு செய்திகள் அதிகமாக இருக்கும். அந்தப் பத்திரிகையை நான் சாப்பிட்டு முடித்து படுக்கையில் படுத்தவாறு படிப்பேன். சாப்பாடு என்று சொன்னால் இரவில் பெரும்பாலும் நான் சாப்பிடுவதில்லை. கஞ்சிதான் குடிப்பேன். காய்ந்த மிளகாயும் அப்பளமும் கஞ்சியுடன் எப்போதும் இருக்கும்.

நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வாங்கிக் கொண்டு அடுத்த அறையில் இருக்கும் பள்ளிக்கூட ஆசிரியர்களைத் தேடிச் செல்வேன். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சீட்டு விளையாடுவோம். எனக்கு வரும் தந்திகளும் கடிதங்களும் என் வீட்டிற்குத்தான் எப்போதும் வரும். தபால்காரன் ஒவ்வொரு நாளும் இரண்டு முறைகள் என் வீட்டிற்கு வருவான். தந்தியும் கடிதங்களும் வரும்போது நான் வீட்டில் இல்லாவிட்டால் என்னுடைய மனைவி ஃபாபி பஷீர் கையெழுத்துப் போட்டு வாங்குவாள். எனக்கு மத்திய சாகித்ய அகாடெமியின் ஃபெல்லோஷிப் கிடைத்தவுடன் என் உம்மா இறந்து விட்டாள். உம்மா என்றால் என்னை கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் சுமந்து பெற்று தாய்ப்பால் தந்து வளர்த்த என் தாயைச் சொல்கிறேன். தாயிடமும் தந்தையிடமும் எனக்கு அன்பு அதிகம். இப்போதும் உம்மாவையும் வாப்பாவையும் நான் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கிறேன். என்னை ஒரு எழுத்தாளனாக ஆக்கியது என்னுடைய தந்தையும் தாயும்தான். நான் அவர்கள் இருவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். பொதுவாகவே கல்வி விஷயங்களில் முஸ்லீம் சமுதாயம் விருப்பம் காட்டாமல் இருந்த காலத்தில் என்னுடைய வாப்பாவும் உம்மாவும் என்னை மலையாள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்திலும்தான். அரபு மொழியிலும் எனக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்து தந்தார்கள். படிக்கும் காலத்தில் இரவு நேரங்களில் இந்தி படிப்பதற்காக என்னை அனுப்பி வைத்தார்கள். நான் என்னுடைய தாய், தந்தையைப் பற்றியும் சகோதரி, சகோதரர்களைப் பற்றியும் நிறையவே எழுதியிருக்கிறேன்.

நான் ஒரு எழுத்தாளனாக ஆனபோது பெரும்பாலான நாட்கள் வசித்தது எர்ணாகுளத்திலும் திருச்சூரிலும் சென்னையிலும்தான்.

நான் தலையோலப் பறம்பிலிருக்கும் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுத் திரும்பும்போது என் உம்மா படிவரை வந்து அங்கு நின்றிருப்பாள். பிறகு என்னைப் பார்த்து கவலையுடன் கூறுவாள்: ‘மகனே, எங்களை மறந்துவிடாதேடா’. வாப்பா என்னுடன் வந்து இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நான் மிகவும் சிரமத்தில் இருந்தேன். இருந்தாலும் வாப்பாவிற்கு சாப்பாடு, தேநீர், வெற்றிலை, பாக்கு இந்த விஷயங்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு என்பதே இல்லாமல் நான் பார்த்துக் கொண்டேன். எங்கள் இருவருக்குமிடையே மன ரீதியான உறவு இருக்கவே செய்தது. சிறு குழந்தையாக இருந்தபோது நான் தொந்தரவுகள் தரக்கூடிய ஒருவனாக இருந்தேன். யாரையும் ஒழுங்காக நான் தூங்க விடுவதில்லை. வாப்பா என்னைத் தன் தோள் மீது போட்டுக் கொண்டு ஒன்றிரண்டு மணி நேரங்கள் நள்ளிரவு தாண்டியிருக்கும் வேளையில் வீட்டில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருப்பார். சாப்பாடு, தூக்கம் எல்லாமே வாப்பாவுடன்தான். நான் வாப்பாவின் முகத்தை என்னுடைய நாக்கால் நக்குவேன். இந்த விஷயங்களெல்லாம் உம்மா என்னிடம் சொன்னதுதான். இப்போது என் மகன் அனீஸ் பஷீருக்கு இரண்டரை வயது நடக்கிறது. அவனும் பல தொந்தரவுகள் தரக்கூடியவனாகத்தான் இருக்கிறான். நான் இரவு நேரங்களில் அவனைத் தோள்மீது போட்டுக் கொண்டு நடக்கிறேன். சாப்பாடும் படுக்கையும் அவனுக்கு எப்போதும் என்னுடன்தான். மலம் கழித்தால் நான்தான் கழுவ வேண்டும். என்னை கடிப்பான், உதைப்பான். என் முகத்தை நாக்கால் நக்குவான். அவன் என் வாப்பாவையும் உம்மாவையும் பார்த்ததில்லை.

வாப்பா மரணமடையும்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது நான் திருச்சூரில் இருந்தேன். அது ஒரு மாலை நேரம். சங்ஙம்புழ, முண்டசேரி, நான் - நாங்கள் மூவரும் வடக்கு நாத கோவிலின் மேற்குப் பகுதியிலிருந்த ஒரு ஆலமரத்திற்குக் கீழே அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நான்தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லிக் கொண்டிருப்பதற்கு இடையில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கண்களை அகல விரித்துக் கொண்டு நான் மவுனமாக இருந்தேன். ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட சங்ஙம்புழ பதறிப்போய் என்னைப் பார்த்து கேட்டார்:

‘என்ன ஆச்சுடா? என்ன ஆச்சு?’

என்னால் எதுவும் பேச முடியவில்லை. மூச்சு அடைத்துக் கொண்டு வருவதைப் போல் இருந்தது. இதய ஓட்டம் நின்று விட்டதைப் போல் இருந்தது. சிறிது நேரம் கழித்துத்தான் நான் சாதாரண நிலைக்கே திரும்பினேன். மூச்சு இப்போது சீராக வந்தது. இதயம் இயங்க ஆரம்பித்தது. நான் சொன்னேன்: ‘ஏதோ எனக்கு முடியல...’

மறுநாள் என் வாப்பா இறுதி மூச்சை விட்ட செய்தி எனக்கு வந்தது. வாப்பா மரணமடைந்து கொண்டிருந்த நேரத்தில்தான் எனக்கு முடியாமற் போயிருக்கிறது.

சாதாரணமாக நான் வீட்டிற்குப் போனாலே, அது ஒரு பெரிய கொண்டாட்டம் மாதிரி இருக்கும். நான் வரப்போகிறேன் என்பது தெரிந்து விட்டால் உம்மாவின் மேற்பார்வையில் வீடும் வராந்தாக்களும் முற்றமும் வெற்றிடமும் நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருக்கும். என் சகோதரிகளான பாத்தும்மாவும் ஆனும்மாவும் தான் சுத்தம் செய்வார்கள். ஆனும்மா, பாத்தும்மா இருவரின் கணவன்மார்களான சுலைமானும் கொச்சுண்ணியும் பலவகைப்பட்ட பழங்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள். படித்த என்னுடைய எல்லோருக்கும் இளைய சகோதரன் அபுபக்கர் என் அபு அருமையான மீனை வாங்கி சமையல் செய்து வைத்திருப்பான். மற்ற விஷயங்களையெல்லாம் எனக்கு அடுத்த இளைய சகோதரன் அப்துல்காதர் சரிப்படுத்தி வைத்திருப்பான். நடுவில் உள்ள சகோதரனான முஹம்மது ஹனீஃபா சட்டை போடாமல் கிழிந்த துணியை உடலில் அணிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் மேற்பார்வை பார்ப்பான்.


ஹனீஃபா இப்படி ஏழை வேஷம் போடுவது நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான். அவன் ஒரு தையல்காரன். மற்ற இரண்டு பேர்களும் வியாபாரம் செய்பவர்கள். ஹனீஃபா ஏழை என்பதுதான் உம்மாவின் எண்ணம்.

நான் வீட்டிற்குச் செல்லும்போது, என்னிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கட்டாயம் இருக்கும். தம்பிமார்கள், தங்கைமார்கள், அவர்களின் கணவன்மார்கள், தம்பிகளின் மனைவிமார்கள், அத்தை, உம்மாவின் தங்கை, மற்ற ஜாதிகளைச் சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் (அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் எல்லோரிடமும் நான் பால் குடித்திருக்கிறேன் என்பது வரலாறு), பிறகு உம்மா - எல்லோருக்கும் நான் பணம் தருவேன். நான் திரும்பிப் புறப்படும்போது என் கையில் ரூபாய் இருந்தால் பெரிய விஷயம். நான் இந்த விஷயங்களையெல்லாம் ‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற கதையில் கூறியிருக்கிறேன். அதைக் கதை என்று சொல்வதற்கில்லை. நூறு சதகிவித உண்மை அது. ஒருநாள் தன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி உம்மா அழுததாக பாத்தும்மா என்னிடம் சொன்னாள். என் தம்பி அப்துல் காதரிடம் என் உம்மா ஒரு ரூபாய் கேட்டால், அவன் ஐந்து பைசா தருவான். என் உம்மாவிற்கு எந்த விஷயத்திற்கும் பணத்திற்கான தேவையே இல்லை. உணவு உடை இரண்டையும் அப்துல்காதரும் அபுவும் பார்த்துக் கொள்வார்கள். வெற்றிலை பாக்கு செலவை முஹம்மது ஹனீஃபா ஏற்றுக் கொள்வான். ஹனீஃபாவின் விஷயத்தில் உம்மாவிற்கு தனிப்பட்ட அக்கறையுண்டு. என் கையிலிருந்து பணம் வாங்கி அவள் ஹனீஃபாவிடம் கொடுப்பாள். ஒருமுறை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக உம்மா என்னிடம் இருபத்தைந்து ரூபாய் கேட்டாள். நான் இருபத்தைந்து ரூபாயைத் தந்தேன். அது கிடைத்தவுடன், உம்மாவிற்கு என்னவோ போலாகி விட்டது. அவள் அழுதுகொண்டே பாத்தும்மாவிடம் சொன்னாள்:

‘அவன்கிட்ட இருபத்தஞ்சு ரூபா கேட்டவுடனே, அவன் இருபத்தஞ்சு ரூபாயைத் தந்துட்டான். என் மகளே, அவன் கிட்ட நூறு ரூபாய் கேட்கணும்னு எனக்கு தோணாமப் போச்சே!’

என் கையில் எது இருந்தாலும், உடனே அது உம்மாவிற்கு வேண்டும். ஒரு சிறிய க்ராமஃபோனும் கொஞ்சம் இசைத் தட்டுகளும் என்னிடம் இருந்தன. அவள் அதை அழுது வாங்கி அப்துல் காதரிடம் கொடுத்தாள்.

‘அவன் நிறைய பொறுப்புகள் உள்ளவனாக்கும்! உன்னை மாதிரி அவன் தனிக்கட்டை இல்ல. அவன்தான் வீட்டைப் பார்த்துக்குறான்...’

‘அப்படின்னா ஏழையா இருக்குற ஹனீஃபாவுக்கு அதை கொடுக்கலாமே!’

‘அப்துல்காதர்தான் அதை உன்கிட்ட இருந்து வாங்கி தரச் சொன்னான்!’

‘அப்படியா?’

என்னிடமிருந்து இரண்டு ஜிப்பாக்களையும், இரண்டு இரட்டைக் கரை வேஷ்டிகளையும் உம்மா வாங்கி ஹனீஃபாவிடம் கொடுத்தாள். அப்துல்காதர் க்ராமஃபோனை ஒரு பெரிய பெட்டியில் இணைந்து அரிஜன மக்களின்  திருமணத்திற்கு வாடகைக்கு கொடுப்பான். அவனிடம் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் கூட இருந்தன.

அப்போது அப்துல்காதருக்கும் ஹனீஃபாவிற்கும் மனைவிகள் இருந்தார்கள். நிறைய குழந்தைகளும் இருந்தன. எதுவுமே இல்லாத நான் பெரிய பணக்காரனாக இருந்தேன். பணத்தை வாரி வாரி இறைத்து செலவழித்தேன். அழுதும் என்னிடமிருந்து பிடுங்கியும் திருடியும் அவர்கள் அதை அடைந்தார்கள்.

நான் திருமணம் செய்து தலையோலப்பறம்பில் அழகான ஒரு வீட்டைக் கட்டி ஃபாபி பஷீருடனும் மகள் ஷாஹினா பஷீருடனும் குடித்தனும் ஆரம்பித்தபோது, உம்மாவை என்னுடன் இருக்க வைத்தேன். புதிய புடவைகள், நிஸ்காரத்திற்கான புடவை - பிறகு பாய்கள், தலையணைகள் ஆகியவற்றை உம்மாவிடம் கொடுத்தேன். போர்த்திக் கொள்வதற்கு அப்போது கிட்டத்தட்ட எழுபத்தைந்து ரூபாய் விலை வரக்கூடிய ஒரு காஷ்மீர் சால்வையும் வாங்கித் தந்தேன். நான் சொன்னேன்:

‘நீங்க குளிச்சு, சாப்பிட்டு, தண்ணி குடிச்சு, நிஸ்கரிச்சு இங்கேயே இருங்க!’

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு பார்த்தால் உம்மாவிடம் காஷ்மீர் சால்வையைக் காணவில்லை.

‘சால்வை எங்கே போச்சு? அதை நீங்க என்ன பண்ணினீங்க? சொல்லுங்க தாயே!’

தாய் சொன்னாள்:

‘நான் அதை அவனுக்குக் கொடுத்துட்டேன்.’

‘எவனுக்கு?’

‘ஹனீஃபாவுக்கு. அவன் குளிர்ல நடுங்கிக்கிட்டு படுத்திருக்கான்ல!

நான் ஹனீஃபாவிற்கும் அப்துல் காதருக்கும் அபுவிற்கும் கொச்சுண்ணிக்கும் சுலைமானுக்கும் ஒவ்வொரு போர்வைகள் கொடுத்திருக்கிறேன்.

நான் சொன்னேன்:

‘தாயே! ஹனீஃபா சரியான திருடன். அவன் தன்னை ஒரு ஏழைன்னு காட்டிக்கிறான். அவனுக்கு நான் போர்வை தந்ததை நீங்க மறந்துட்டீங்களா?’

தாய் சொன்னாள்:

‘அவனோட பெண்டாட்டி அய்ஸோம்மா குளிர்ல படுத்து நடுங்குறாளே!’

அப்படியா? நான் என்னுடைய போர்வையை உடனடியாக உம்மாவிடம் கொடுத்து விட்டேன்.

நான்கைந்து நாட்கள் கழிந்த பிறகு பாய்களுடன் தலையணைகளையம் போர்வையையும் புடவைகளையும் சேர்த்து வைத்து கட்டிய உம்மா என்னைப் பார்த்து சொன்னாள்:

‘டேய், நான் இங்கே இருந்தா பைத்தியம்தான் பிடிக்கும். நான் வீட்டுக்குப் போறேன்.’

விஷயம் என்னவென்றால் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு குடம் தண்ணீரைத் தூக்கிக் கொண்டு இரண்டு குழந்தைகளை இரண்டு பக்க இடுப்புகளிலும் வைத்துக் கொண்டு அவள் நான்கு வீடுகளிலும் வேலை செய்ய வேண்டும். மகள்களைத் திட்ட வேண்டும். மகன்களின் மனைவிமார்களைத் திட்ட வேண்டும். இந்த தேவைகளுக்காகத்தான் அவள் போகிறாள்.

அதுவும் சரிதான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து நானும் மனைவியும் மகளும் உம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது அவள் ஒரு கிழிந்து போன பழம்பாயில் படுத்திருந்தாள். அவள் அணிந்திருந்தது நான் வாங்கித் தந்த புடவையல்ல. நான் கேட்டேன்:

‘தாயே, அந்தப் புடவையை எங்கே?’

நான் என் பொண்ணுகளுக்குக் கொடுத்துட்டேன். நீ என்ன செய்யப் போற?’

‘போர்வையை யாருக்குக் கொடுத்தீங்க? ஹனீஃபாவுக்கா?’

‘போர்வையை பாத்தும்மாவுக்குக் கொடுத்துட்டேன். பாய்ல ஒண்ணை ஹனீஃபா எடுத்துட்டுப் போயிட்டான். இன்னொண்ணை சுலைமானுக்குக் கொடுத்துட்டேன்.’

‘துணிகள், ஆடைகள், பாத்திரங்கள்...?’

‘மனசுல இருக்குறவங்களுக்கு கொடுத்தேன். டேய், நீ கல்யாணம் ஆகுற வரை என் பாலைக் குடிச்சு வளர்ந்தவன்...’

‘பச்சைப் பொய்!’

‘நீ பன்னிரண்டு வயது வரை ஒவ்வொருத்தரையும் தள்ளி விட்டுட்டு என்கிட்ட பால் குடிச்சவன். ராத்திரி நேரத்துல திருட்டுத்தனமா வந்து பால் குடிப்பே...’

‘தாயே, வெட்கப்படுற விஷயத்தைச் சொல்லாதீங்க. என் பொண்டாட்டி காதுல விழுந்திடப் போகுது...’

‘உன் பொண்டாட்டிகிட்ட இதையெல்லாம் எப்பவோ நான் சொல்லிட்டேன். இனிமேலும் சொல்லுவேன்.’

‘எதுவும் சொல்லாம இருக்குறதுக்கு ஒவ்வொரு மாசமும் உங்களுக்கு நான் என்ன தரணும்?’

‘நீ என்ன தருவே?’

‘ஒண்ணும் தரமாட்டேன். நீங்க சொல்லுங்க! நான் உங்களைப் பற்றி இனிமேலும் எழுதுவேன்!’

‘நீ எழுதியதை பாத்தும்மா வாசிக்க, நான் கேட்டிருக்கேன். டேய், நீ எனக்கு ஒரு ரூபா தா.’


நான் ஒரு ரூபாயைக் கொடுத்தேன். அதை அவள் என் மகளின் பிஞ்சு கைகளில் கொடுத்தாள்.

நான் சொன்னேன்:

‘பார்த்தீங்களா? நீங்க என்கிட்ட நூறு ரூபா கேட்டிருக்கலாமே! என் மகளுக்கு அந்த நூறு ரூபாயும் கிடைச்சிருக்குமே!’

‘நீங்க சொல்றது உண்மைதான்’ - என் மனைவி மகளின் கையிலிருந்த ஒரு ரூபாயை வாங்கியவாறு சொன்னாள்: ‘எனக்கு நூறு ரூபா கிடைச்சிருக்கும். அதை வச்சு நான் ஒரு புடவை வாங்கியிருப்பேன்.’

உம்மா எப்போதாவது நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவாள். அவளுக்கு தேவையில்லாத ஒன்றுகூட இந்த உலகத்திலேயே இல்லை. என் கையில் மிகவும் விலை உயர்ந்த ஒரு பார்க்கர் பேனா இருந்தது.

‘அந்தப் பேனாவை எனக்கு தாயேன்டா!’

‘உங்களுக்கு எதுக்கு பேனா? உங்களுக்கு எழுதவே தெரியாதே!’

‘அதுக்காக நான் ஆசைப்படக் கூடாதாடா?’

நான் பேனாவைக் கொடுத்தேன். அவள் அதைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள்:

‘இதை விற்றால் என்ன கிடைக்கும்டா?’

அப்துல் காதரிடம் அதை விற்பது அவளின் திட்டம்!

நான் ஐந்து ரூபாய் ரொக்கம் தந்து பேனாவைத் திரும்ப வாங்கினேன். என்னிடம் ஒரு ரேடியோகிராம் இருந்தது. அப்போது அதன் விலை கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் வரும். ஒரு நாள் உம்மா சொன்னாள்:

‘டேய், அந்த பெட்டிப்பாட்டை எனக்கு தர்றியா?’

‘ரேடியோக்ராமையா?’

‘ஆமா!’

‘உங்களுக்கு எதுக்கு அது?’

‘எனக்கு வேணும்டா’.

நான் சொன்னேன்:

‘தாயே, உங்க கழுத்தைப் பிடிச்சு நான் நெரிக்கப் போறேன்.’

தாய் சொன்னாள்:

‘தவம் கிடந்து ஆசைப்பட்டு பிறந்தவன் நீ. உனக்கு நிறம் பத்தாதுன்னு பால்ல பொன்னையும் வசம்பையும் சேர்த்து அரைச்சு நான் உனக்கு தந்திருக்கேன்!'

'இதையெல்லாம் நான் கதைகள்ல எழுதியிருக்கேன். புதுசா ஏதாவது சொல்லுங்க!'

அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

சுதந்திரப் போராட்டம் நடக்கும்பொழுது நான் வீட்டை விட்டு கோழிக்கோட்டிற்கு ஓடி வந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். சிறைவாசம் இருந்தேன். சிறையில் விடுதலையாகி கண்ணூரிலிருந்து புகை வண்டியில் எர்ணாகுளத்தை அடைந்தேன். அங்கிருந்து படகில் வைக்கத்திற்குச் சென்றேன். அப்போது இரவு ஒரு மணி இருக்கும். அங்கிருந்து ஐந்து மைல் தூரம் இருட்டில் நடந்து தலையோலப்பறம்பில் பாலாம்கடவுக்கு அருகில் இருக்கும் வீட்டிற்குச் சென்றேன். வாப்பாவை அழைப்பதற்கு வெட்கமாக இருந்தது. 'உம்மா?' என்று அழைத்தேன். அவள் விளக்கைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு வந்தாள்.

'நீ ஏதாவது சாப்பிட்டியாடா மகனே?' என்று கேட்டவாறு கிண்டியும் தண்ணீரும் கொண்டு வந்தாள் உம்மா. பிறகு சோறும் குழம்பும் வந்தன. நான் கேட்டேன்:

'நான் இன்னைக்கு வருவேன்னு உம்மா, உங்களுக்கு எப்படி தெரியும்?'

உம்மா சொன்னாள்:

'நான் ஒவ்வொரு நாளும் சோறும் குழம்பும் வச்சு உனக்காக காத்திருப்பேன்!'

நான் சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும், நான் இல்லாமலிருந்த ஒவ்வொரு நாளும் அவள் சோறும் குழம்பும் ஆக்கி எனக்காக காத்திருந்திருக்கிறாள்.

நான் பத்து ரூபாய் கொடுத்து ரேடியோக்ராம் சமாச்சாரத்தை முடித்து வைத்தேன். கிடைக்கும் பணத்தை அவள் சில்லரை மாற்றி பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பத்து பைசா வீதம் கொடுப்பாள். மீதியிருக்கும் தொகை ஹனீஃபாவிற்கு போய்ச் சேரும்.

உம்மாவிற்கு வெற்றிலை பாக்கு போடுவதென்றால் மிகவும் குஷி. ஹனீஃபா அவளுக்கு யாழ்ப்பாணம் புகையிலை வாங்கித் தருவான். இந்த ரகசியம் எனக்கு தெரிந்த பிறகு அரை ராத்தல் யாழ்ப்பாணம் புகையிலை வீதம் நான் வாங்கிக் கொடுப்பேன். அவள் கேட்பாள்:

'வெறும் புகையிலை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?'

நான் சொன்னேன்:

'எனக்குத் தெரியும்!'

உம்மா சொன்னாள்:

'நீ உம்மாவையும் வாப்பாவையும் மறந்துடாதே. நான் இறக்குறப்போ நீ 'அல்க்கா அஃப் ' பத்து வாங்கி என் பேரை எழுதி தலையோலப்பறம்பு பள்ளி வாசல்ல கொடுக்கணும்!'

(உம்மா மரணமடைந்தவுடன் 'அல்க்கா அஃப் பதினைந்து பிரதிகள் கெ.கெ.முஹம்மது அப்துல் கரீம் மூலமாக குண்டோட்டியிலிருந்து வாங்கி உம்மாவின் பெயரை எழுதி தலையோலப் பறம்பு பள்ளி வாசலில் அதைக் கொண்டு போய் நான் கொடுத்தேன்).

பள்ளிவாசலில் தொழுவதற்காக போவோருக்காக கொடுக்கப்பட்டவை அவை. அதனால் உம்மாவிற்கு புண்ணியம் கிடைக்கும். எனக்கு உடல் நலமில்லாமல் இருந்தபோதுதான், உம்மா மரணத்தைத் தழுவினாள். ஷாஹினா பஷீர் ஃபெலலோஷிப்பையும் உம்மாவின் மரணத்தையும் இணைத்து 'உம்மும்மா' என்று கதையைப் போல 'சந்திரிகா' வார இதழில் எழுதினாள். மரியாதைக்குரிய சி.எச்.முஹம்மது கோயா கல்வி அமைச்சராக இருந்த போது என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது மகளிடம் அதைக் கேட்டு வாங்கிக் கொண்டு போய் 'சந்திரிகா'வில் அது பிரசுரமாகும்படி செய்தார். உம்மாவின் மரணச் செய்தி எங்களுக்கு காலையில்தான் தெரிய வந்தது. அப்போது நான் நல்ல உறக்கத்தில் இருந்தேன். பொதுவாக நான் இரவில் மூன்று மணிக்கு உறங்குவேன். பகல் பத்து மணிக்கு எழுந்திருப்பேன். அதற்கு முன்பு என்னை எழுப்ப மாட்டார்கள். மிகவும் முக்கியமான காரியமாக இருந்தால் மட்டுமே எழுப்புவார்கள். காலை ஒன்பது மணிக்கு தந்தி வந்திருக்கிறது. ஃபாபி பஷீர் கையெழுத்துப் போட்டு தேநீருடன் வந்து என்னை எழுப்பினாள். நான் தேநீர் குடித்து விட்டு ஒரு சிகரெட்டைக் கொளுத்தி இழுத்தேன். என்னவோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என்பது போல் எனக்கு தோன்றியது. மனைவி சொன்னாள்:

'உம்மா!'

மகள் சொன்னாள்:

'உம்மும்மா!'

அதைக் கேட்டவுடன் உம்மா மரணமடைந்து விட்டாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். தந்தியைப் படித்தேன். எதுவுமே பேசாமல் அமைதியாக படுக்கையிலேயே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். பிறகு கடவுளை மனதில் நினைத்துக் கொண்டே சொன்னேன்:

'பிரபஞ்சங்களைப் படைத்தவரே! என் உம்மாவின் ஆத்மாவிற்கு சாந்தியை அளியுங்கள். என் வாப்பாவின் ஆத்மாவிற்கும்'

மங்களம்.

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.