Logo

குமாரன் நாயரின் மரணம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6126
Kumaaran Naayarin Maranam

குமாரன் நாயரின் மரணத்தைப் பற்றி பலரும் பேசுவதை நான் கேட்டேன். தேநீர்க் கடைக்காரன் குஞ்ஞாமன் அதை ஒரு கொலை என்றான். வாசுக்குறுப்பின் கருத்தும் அதுதான். ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் அவர் கொலை செய்யப்பட்டு இறந்ததாகவே சொன்னார்கள்.

"நக்சலைட்டுகள்தான் அவனைக் கொலை செய்தது!"- வாசுக்குறுப்பு தன்னுடைய கண்களை சூரியனுக்கு நேராக அகல விரித்து வைத்துக் கொண்டு சொன்னார்.

"நக்சலைட்டுகள் நிச்சயமா கொலையைச் செய்யல. பேய்தான் அடிச்சிருக்கணும்!"- சிலம்பு விளையாட்டுக்காரனான கண்ணன் சொன்னான்.

"குமாரன் நாயர் இறந்தது சுடுகாட்டில். அதுவும் மாலை நேரத்தில். அப்படியென்றால் ஏதாவது ஒரு பேயிடம் அவர் சிக்கி விட்டிருக்க வேண்டும்."

குமாரன் நாயரின் அகால மரணத்தைப் பற்றி இப்படிப் பலரும் பலவிதத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். நானும் அதைப்பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். நான் சொல்கிறேன்:

"குமாரன் நாயரைக் கொன்னது நக்சலைட்டுகள் அல்ல. பேய்களுமல்ல..."

"பிறகு யாரு?"

அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் கேட்டார்கள். அவர்களின் முகத்தில் ஆச்சரியம் நிழலாடியது.

"குமாரன் நாயரைக் கொலை செய்தது யாருன்னு எனக்குத் தெரியும். எனக்கு மட்டும்..."

அவர்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். நான் மீண்டும் சொன்னேன்: "எனக்கு மட்டும்..." சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டிருக்கிறது. வயலட் நிற கண்களால் என்னை நேராகப் பார்த்தவாறு வாசுக்குறுப்பு கேட்டார்:

"உனக்கு எப்படித் தெரியும்?"

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை.

"பொய்..."- குஞ்ஞாமன் சொன்னான்: "உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.."

குஞ்ஞாமன் என்னைப் பார்த்து கேலி செய்தான். கால்களை மடக்கி வைத்து அமர்ந்திருந்த கண்ணன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். பாதி திறந்த வாயுடன் அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ பார்த்தியா?”

வாசுக்குறுப்பு தன் குரலை ஒருநிலைப்படுத்திக் கேட்டார். அவர் தன் குரலை வேண்டுமென்றே மாற்றிக் கொண்டது தெரிந்தது. அவருக்கு எப்படியாவது அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ரகசியமும் இல்லாத ஒரு மனிதன் நான். என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். பொதுவாக எதையும் மறைத்து வைக்க நான் விரும்புவதேயில்லை. அதனால் குமாரன் நாயரின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்ததை நான் கூறுகிறேன். தேநீர்க் கடைக்காரன் குஞ்ஞாமனும், வாசுக்குறுப்பும், சிலம்பு விளையாட்டுக்காரன் கண்ணனும் நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஐந்தாம் கேட்டில் இருக்கும் போலீஸ்காரர்களும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது பணம் கடன் வாங்காதவர்கள் இருக்கிறார்களா? பெரிய பணக்காரர்கள்கூட சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். கடந்த இருபது வருட கடின உழைப்பின் விளைவாக இருபதாயிரம் ரூபாய் நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன். அந்தத் தொகையை வங்கிகளில் வைப்பு நிதியாகவும், சேமிப்புப் பணமாகவும் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். என்னுடைய காலத்திற்குப் பிறகு என்னுடைய மனைவி தங்கமணி, என்னுடைய பிள்ளைகள் வத்சன், சினேக பிரபா, அணிலன், புஷ்பன் ஆகியோருக்காக அதை நான் சேர்த்து வைத்திருக்கிறேன்.

இருபதாயிரம் ரூபாய் நான் சேர்த்து வைத்திருந்தாலும், கடந்த திங்கட்கிழமை அவசரமாக எனக்கு ஒரு நூறு ரூபாய் தேவைப்பட்டது. காசோலை எழுதி சாத்துக் குட்டியை வங்கிக்கு அனுப்பினேன். அவன் பணத்துடன் திரும்பி வருவதற்காக நான் காத்திருந்தேன்.

"பணம் கிடைக்கல. வங்கி பூட்டியிருக்கு..."

சாத்துக்குட்டி திரும்பி வந்தான். அப்போதுதான் வங்கிக்கு அன்று விடுமுறை நாள் என்பதையே நான் நினைத்துப் பார்த்தேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வேறு.

சாத்துக்குட்டி இன்னும் மாற்றப்படாமல் இருக்கும் செக்கைத் திருப்பித் தந்தான். அவன் போனபிறகு நூறு ரூபாயைப் பற்றி நினைத்தவாறு நான் வாசலில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தேன். தங்கமணி எனக்கருகில் வந்து நின்றதை நான் கவனிக்கவில்லை.

"என்ன அவ்வளவு பெரிய சிந்தனை?"

அவள் குனிந்து, கறுப்புக் கரை போட்ட புடவையை அணிந்து, நெற்றியில், கறுப்பு வண்ண சாந்துப்பொட்டு வைத்துக் கொண்டு எனக்கு அருகில் நின்றிருக்கிறாள். பார்த்தால் அவள் நான்கு பிள்ளைகளைப் பெற்றவள் என்று யாருமே சொல்லமாட்டார்கள். வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் என் மனதில் வேறு ஏதாவது எண்ணம் தோன்றியிருக்கும். அந்த நிமிடத்தில் என் மனதில் நூறு ரூபாயைத் தவிர வேறு சிந்தனையே உண்டாகவில்லை.

"கொஞ்சம் பணம் வேணும். அதற்கு என்ன செய்வது?"

அவள் என் முகத்தையே ஆச்சரியமாகப் பார்த்தாள். எதற்கு இப்போது பணம்? எவ்வளவு பணம் வேண்டும்? இந்தக் கேள்விகள் அவளுடைய அந்தப் பார்வையில் அடங்கியிருந்தன.

"ஒரு நூறு ரூபா வேணும்."

"இதென்ன பெரிய பிரச்சினையா?"- அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்: "அந்த அளவிற்கு கேவலமாகப் போய் விட்டோமா நாம்!"

"நாளைக்குக் காலையில வேணும். வங்கிக்கு இன்னைக்கும் நாளைக்கும் விடுமுறை ஆச்சே?"

"அப்படி என்ன அவசரத் தேவை?"

"சொல்ல மறந்துட்டேன். அலுவலகத்துல ராஜசேகரனோட பெண்டாட்டி பிரசவம் ஆயிருக்கா. சிஸேரியன் நடந்து டெலிவரி. அந்த ஆள் கையில ஒரு பைசா கூட இல்லை... இதுக்கு முன்னாடி ராஜசேகரன் என்கிட்ட பணம் கடன் கேட்டதே இல்ல. வேற வழயில்லைன்னு நினைக்கிறேன். இல்லாட்டி என்கிட்ட கடன் கேட்கமாட்டாருன்னு எனக்கு நல்லா தெரியும். காலையில அலுவலகத்துக்கு வர்றப்போ கட்டாயம் பணம் கொண்டு வந்து தர்றேன்னு அந்த ஆளுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இப்போ இல்லைன்னு சொன்னா அந்த ஆளு என்னைப் பற்றி என்ன நினைப்பாரு? அந்த ஆளு ஒரு பக்கம் இருக்கட்டும்... யாரா இருந்தாலும் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க? இருபது வருடங்கள் வேலை பார்த்து ஒரு மனிதன் கையில ஒரு நூறு ரூபாய் இல்லைன்னு சொன்னா... சரி... அது இருக்கட்டும். உன் கையில பணம் ஏதாவது இருக்கா தங்கமணி?"

"என் கையில பதினஞ்சு ரூபா இருக்குது. தரட்டுமா?"

பணத்தைப் பல மடங்கு பெரிதாக்கக்கூடிய ஒரு வித்தை இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வித்தை மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால்...

நான் மீண்டும் தீவிர சிந்தனையில் மூழ்கினேன். தங்கமணியும் நூறு ரூபாயைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் சொன்னாள்:

"உங்களோட மாஸ்டர்கிட்ட கேட்டா என்ன?"

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை.

"கேட்டா நிச்சயம் தருவார்."

"அது எனக்குத் தெரியாதா தங்கமணி? ஆனா, அவர்கிட்ட யாரு கேட்கிறது?"


பூனைக்கு யார் மணி கட்டுவது? மாஸ்டரிடம் எப்படிப் பணம் கேட்பது? அவர் ஒரு மரியாதைக்குரிய மனிதர். நான் மூன்று வருடங்கள் நான்கு மாதங்களாக இந்த வீட்டில் வசிக்கிறேன். தினந்தோறும் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறோம். பார்க்கும்போது தலையை ஆட்டி அவர் மரியாதை காட்டுவார். அதற்கு மேல் எங்களுக்கிடையே எந்தப் பழக்கமுமில்லை.

என் இயற்கையான குணமே இப்படித்தான். மற்றவர்களிடம் நெருங்கிப் பழகுவதற்கு உண்மையாகவே நான் மிகவும் பயப்படுவேன். அறிமுகமானவர்களைப் பார்க்கும்போது நான் வேண்டுமென்றே விலகிச் செல்வேன். இவ்வளவு பெரிய நகரத்தில் எனக்கு நண்பர்கள் இல்லாமற்போனதற்கான காரணம் இதுதான்.

மனைவியையும் குழந்தைகளையும் விட்டால் மனம் திறந்து எந்த விஷயத்தைப் பற்றியாவது பேசுவதற்கு எனக்கென்று யாருமே இல்லை. தேநீர் கடைக்காரன் குஞ்ஞாமனும், வாசுக்குறுப்பும், சிலம்பாட்டக்காரன் கண்ணனும் என்னுடைய நண்பர்கள் அல்ல. அவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்.

"எதுக்கும் குமாரன் நாயர் கிட்ட கேட்டுப்பார்க்கலாமே?"

தங்கமணி இந்த விஷயத்திற்கு ஒரு பரிகாரம் சொன்னாள். என்ன இருந்தாலும், அவள் அறிவாளி ஆயிற்றே!

கடைசியில் நான் குமாரன் நாயரைப் போய் பார்ப்பது என்ற முடிவிற்கு வந்தேன்.

இந்த ஊரில் குமாரன் நாயரிடம கடன் வாங்காத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? பணக்காரர்கள் ஆயிரம், பத்தாயிரம் என்று அந்த மனிதரிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்கள் நூறும், இருநூறும் வாங்குகிறார்கள். எல்லாருக்கும் அதே வட்டி விகிதம் தான். வட்டியை முன்கூட்டியே கழித்துக் கொண்டுதான் அவர் பணத்தையே தருவார்.

சொன்ன நாளன்று பணத்தைத் திருப்பித்தரவேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் வட்டியைக் கட்ட வேண்டும். இந்த விஷயத்தில் குமாரன் நாயர் மிகவும் கறாரான மனிதர்.

வாங்கிய பணத்தையும் வட்டியையும் ஒழுங்காகக் கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்த அஸ்ஸு மாப்பிள்ளையை குமாரன் நாயர் தன் காலில் விழ வைத்த கதை ஊரில் உள்ள எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். மிரட்டியோ, அடித்து உதைத்தோ பணத்தை வசூலிப்பார். அந்த வழிகள் சாத்தியமில்லாமல் போகும் பட்சம், அவர் வேறு வழிகளை கையாளப் பார்ப்பார்.

அஸ்ஸு மாப்பிள்ளையைத் தன் காலில் விழ வைக்க அவர் குட்டிச்சாத்தானை பயன்படுத்தினார். மாப்பிள்ளை கிணற்றில் நீர் இறைக்கும் போது வாளியில் மலம், சாதம் வைக்கும்போது பாத்திரத்தில் மலம், சோறு சாப்பிடலாம் என்று உட்காரும் போது தட்டில் மலம்... கடைசியில் அஸ்ஸு மாப்பிள்ளை ஓடிச் சென்று குமாரன் நாயரின் கால்களில் விழுந்தார். பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தார்.

இந்தச் சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு நானும் தங்கமணியும் இந்த ஊருக்கு வருவதற்கு முன்பு நடைபெற்ற ஒன்று.

"குமாரன் நாயர்கிட்ட பணம் கடன் கேட்கத் தயக்கமா இருக்கா என்ன?"

தங்கமணி என்னைக் குற்றம் சுமத்துவது மாதிரி கேட்டாள். உண்மையில் பார்க்கப்போனால், இந்த விஷயத்தில் என்னிடம் தயக்கம் எதுவும் இல்லை. அவர் பணம் கடன் கொடுக்கக்கூடிய ஆள்தான். பக்கத்து வீட்டிலிருக்கும் மாஸ்டரிடம் கேட்பதைப் போன்ற ஒரு விஷயமல்ல இது. தவிர, நான் கேட்கப் போவது வெறும் நூறு ரூபாய்தானே! நாளை மறுநாளே வட்டியுடன் நான் அதைத் திருப்பித்தரவும் போகிறேன்.

சட்டையை எடுப்பதற்காக வீட்டிற்குப் போகலாம் என்று பார்க்கும் போது தோளில் மண் வெட்டியுடன் வந்து கொண்டிருந்த கேளப்பனைப் பார்த்தேன். மண்வெட்டியின் கீழ்ப்பகுதியில் புதிதாகப் பட்டிருந்த மண் தெரிந்தது.

"யாரு இறந்தது கேளப்பா?"

"நாடோடி மாதவன்..."- கேளப்பன் சொன்னான்.

வேறு ஏதோ ஒரு ஊரிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவன்தான் மாதவன். அதனால்தான் அவனுக்கு 'நாடோடி' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது. சொந்தம், பந்தம் என்று அவனுக்கு யாரும் இல்லை. கடைவீதியில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் ஒரு பழைய கடையைச் சேர்ந்த கட்டிடத்தில்தான் அவன் எப்போதும் இருப்பான். மூட்டைகள் தூக்கியும்- கூலி வேலைகள் செய்தும் அவன் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"அவனோட உடம்புக்கு என்ன கேளப்பா?"

"கொஞ்ச நாட்களாகவே அவன் படுத்த படுக்கையாகவே கிடந்தான். விசாரிச்சதுல புற்று நோய் இருக்கிறதா மற்றவங்க சொன்னாங்க..."

கறுத்து, மெலிந்து போய் நரைத்த சிறு ரோமங்கள் ஆங்காங்கே காணப்படும் மாதவனின் முகம் என் மனதில் அப்போது தோன்றியது.

"நான் போகட்டுமா?"

கேளப்பன் மண்வெட்டியைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். மண்வெட்டியின் கீழ்ப்பகுதியில் ஒட்டியிருந்த மண்ணிலிருந்து சிறிது பெயர்ந்து கீழே விழுந்தது.

யாராவது இறந்தால் சுடு காட்டில் குழிவெட்டும் வேலையைச் செய்யக்கூடியவன் இந்த கேளப்பன்.

நான் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டேன்.

குமாரன் நாயரின் வீட்டை நெருங்கியபோது என்னுடைய கால்கள் ஏனோ தயங்கின. வாழ்க்கையில் இன்றுவரை யாரிடமும் ஒருபைசா கூட நான் கடன் வாங்கியதில்லை. இப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது- இந்த வயதில்...

அடுத்த நிமிடம் பிரசவ வார்டில் தளர்ந்து படுத்திருக்கும் ராஜசேகரன் மனைவியின் உருவம் என் மனதில் தோன்றியது. அவ்வளவு தான்- என் கால்கள் தானாகவே முன்னோக்கி நடக்க ஆரம்பித்தன.

ப்ளாக் அலுவலகத்தின் இடது பக்கத்திலிருக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்தால் குமாரன் நாயரின் வீட்டை அடையலாம். லட்சாதிபதிக்குக்கூட பணம் கடனாகத் தருகின்ற ஆளாக இருந்தாலும், அவரின் வீட்டைப் பார்க்கும்போது அப்படித் தோன்றாது. நடுத்தர வருமானத்தைக் கொண்ட ஒருவரின் வீட்டைப் போல அது இருக்கும். தொழுவத்தைத் தவிர மற்ற பகுதிகள் முழுவதும் ஓலையால் வேயப்பட்டிருந்தது. தொழுவத்திலிருந்த மாடுகளுக்கு மேலே மாலைநேர வெயில் விழுந்து கொண்டிருந்தது.

நான் அந்த வீட்டில் கால் வைத்தபோது குமாரன் நாயர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். இரண்டு நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருந்தால் நான் அந்த மனிதரைப் பார்த்திருக்க முடியாது. சரியான நேரத்திற்கு அங்கு சென்றது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

எனினும் நான் வந்ததைப் பார்க்காதது மாதிரி குமாரன் நாயர் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்று விட்டேன். பணம் வட்டிக்குத் தருபவர்கள் பொதுவாகவே முரடர்களாக இருப்பார்கள் என்ற உண்மையை நான் எண்ணிப் பார்த்தேன். அவர்கள் மனிதத் தன்மையை முழுமையாக இழந்தவர்கள். எதைச் செய்யவும் அஞ்சாதவர்கள்- கொலை செய்வதற்குக்கூட...

"சார், கொஞ்சம் நில்லுங்க..."


குமாரன் நாயர் என்னுடைய முகத்தை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, பின்னர் நான் சொன்னது அவருடைய காதில் விழாதது மாதிரி அவர் ஒற்றையடிப் பாதையில் இறங்கினார். பணம் கடனாகக் கேட்க வந்த இன்னொரு தலைவலி பிடித்த மனிதன் என்று என்னைப் பற்றி அவர் நினைத்திருக்கலாம்.

உள் மனதின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம். நான் வேகமாக அந்த மனிதருக்குப் பின்னால் ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன். குமாரன் நாயர் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவன் என்னைவிட வயதான மனிதர். இருப்பினும் என்னைவிட கம்பீரமும் சுறுசுறுப்பும் அவரிடமிருந்தது. நான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அவர் ப்ளாக் அலுவலகத்திற்கு முன்னால் போய் விட்டிருந்தார்.

அவரின் இந்த அவமதிப்பான செயலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுவரை வேறு எந்த மனிதனும் என்னிடம் இந்த அளவிற்கு நடந்ததில்லை. அப்படி இருக்கும்போது ஒரு பணவியாபாரி.... நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். கட்டுப்படுத்தவில்லையென்றால் அதனால் உண்டாகும் பாதிப்பு எனக்குத்தான். ராஜசேகரன் மனைவியின் வெளிறிப் போன பரிதாபமான முகம் மனதில் தோன்றியது.

நானும் வேகமாக சாலையில் கால் வைத்தேன். வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு பலம் பொருந்திய கைகளை வீசிக் கொண்டு குமாரன் நாயர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என்னவோ முணுமுணுத்தார். பற்களைக் கடித்தார். அவர் எங்கு போகிறார்? என்ன செய்யப் போகிறார்? என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

சில அடிகள் இடைவெளி விட்டு நான் அவரைப் பின் தொடர்ந்தேன். இப்போது என் மனதில் ராஜசேகரனுக்குத் தருவதாகச் சொன்ன பணம் மட்டும் வலம் வரவில்லை. அதோடு சேர்ந்து குமாரன் நாயர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வமும் என்னை அறியாமல் என்னிடம் ஏற்பட்டிருந்தது. என் கால்களுக்குப் புதிதாகத் தெம்பு வந்ததைப் போல இருந்தது. ஒரே பாய்ச்சலில் நான் அந்த ஆளை நெருங்கிவிட்டேன்.

பொது சாலை வழியாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்களைப் போல நாங்கள் வேகமாக நடந்தோம்.

திடீரென்று குமாரன் நாயர் இடது பக்கமிருந்த மற்றொரு ஒற்றையடிப் பாதையில் திரும்பினார். அதே வேகத்தில் நானும் நடந்தேன். அவரின் மூச்சுவிடும் சத்தம் கூட எனக்குத் தெளிவாகக் கேட்டது. அவரின் பின் கழுத்துப் பகுதி வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தது.

சில நிமிடங்கள் கடந்தபிறகு சுடுகாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் அவர் நடந்து போவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் நினைத்தது தவறவில்லை. நாங்கள் நடந்து சென்ற ஒற்றையடிப்பாதை வளர்ந்து நின்றிருக்கும் மாமரங்களுக்கு மத்தியில் முடிவடைந்தது.

குமாரன் நாயர் சுடுகாட்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து நானும்...

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. எரிந்து முடிந்த ஒரு சிதையின் சிவப்பு நிறம் மாமரங்களுக்கிடையில் தெரிந்தது. புது மண்ணின் வாசனை இன்னும் போகாமலிருக்கும். நாடோடி மாதவனின் பிணம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் உயரமாக இருந்த மண் கூம்பாரத்தை நான் பார்த்தேன். அதைச் சுற்றிலும் இன்னும மறைந்து விட்டிராத கால் அடையாளங்கள் தெரிந்தன.

குமாரன் நாயர் மாதவனின் பிணம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் போய் நின்றார். அவர் மேலும் கீழுமாக நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். நெற்றியும் கழுத்தும் வியர்வையால் நனைந்திருந்தன. அவர் என்னவோ சொல்வதும் கைகளைக் கசக்குவதுமாக இருந்தார். அவர் பற்களைக் கடிப்பதை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

"என் பணத்தைத் தந்துட்டு நீ செத்துப் போயிருக்கலாம்ல, நாயே!"

குமாரன் நாயர் உரத்த குரலில் கத்தினார்: "மொத்தம் முந்நூறு ரூபாய் எனக்கு நீ தரணும். மேலுலகத்துல உனக்குச் சரியான கதி கிடைக்காதுடா..."

அவர் மாதவனின் மார்பில் காரித்துப்பினார். அப்படியும் திருப்தி வராமல் அவர் தன்னுடைய வேஷ்டியின் முன் பகுதியைத் தூக்கினார். புதுமண்ணில் ஒருவித ஓசையுடன் மஞ்சள் நிற நீர் ஓடியது.

என் உடம்பு மேலிருந்து கீழ்வரை நடுங்க ஆரம்பித்தது. கண்களும் காதுகளும் அடைத்துக் கொண்டது போல் இருந்தது. கையில் கிடைத்தது முனை கூர்மையாக இருந்த ஒரு கருங்கல்தான். கல்லுடன் முன்னோக்கி நான் பாய்ந்தது மட்டும்தான் என் ஞாபகத்தில் இருக்கிறது.

மீண்டும் நினைவு வந்தபோது புதுமண்ணில் தன்னுடைய சிறுநீர் மீதும் குருதி மீதும் கவிழ்ந்து விழுந்து கிடந்த குமாரன் நாயரை நான் பார்த்தேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.