Logo

பிறகும் ஒரு மாலை நேரம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6372
Piragum Oru Maalai Nerum

ணி ஆறு

புரோகிதரின் முனை வளைந்த செருப்புகள் கறுத்து மினுமினுப்பாகத் தெரியும் மரப்படிகளில் பட்டு மேலே போகிறபோது உண்டாகும் சத்தம் தெருவில் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் மேலே நடந்து போய் சேர்ந்ததும், அதுவும் இறுதியில் நின்று போனது.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு... மணியோசை சிறகடித்துப் பறந்தது. கோபுரத்திற்கு புத்துயிர் வந்ததுபோல் இருந்தது. வண்ணம் இழந்திருந்த ஒலிபெருக்கி விட்டுவிட்டு உச்சஸ்தாயியில் கத்தியது.

‘அல்லாஹூ... அக்பர்ர்ர்...’ - புரோகிதரின் ராகத்துடன் இணைந்த குரல் நகரமெங்கும் பரவி அலைந்தது. உள்ளே கால் மூட்டுகளை மடக்கி, அமர்ந்து, தலைகளைக் குனிந்து, உடலைச் சுருக்கிக் கொண்டு, ஆகாயத்தில் உயர்ந்த சத்தத்திற்கேற்ப தெய்வத்தை நோக்கி மனங்கள் விரிந்தன. மற்ற பள்ளி வாசல்களில் இருந்தும் தெய்வத்தைப் பற்றிய வார்த்தைகள் காற்றில் பரவி வந்தன. நகரத்திற்கு மேலே ஆகாயத்தில் மனங்கள் தங்களைத் தேடி அலைந்தன. ஒன்றையொன்று பின்தொடர்ந்து சென்று இருட்டோடு சங்கமமாயின.

‘ஃபா’-பேலம்மா கத்தினாள். தொடர்ந்து நிலத்தில் காறித் துப்பினாள்.

மேற்கு திசையில் ஆகாயத்தில் சூரியன் அஸ்தமனமாகி விட்டதற்கான அடையாளங்கள் எஞ்சி இருந்தன. இரத்தம் தோய்ந்த துணியைப் போல சிவப்பு வர்ணம் படர்ந்த ஒரு மேகம். கொஞ்சம் மஞ்சள் நிறம். இழுத்துக் கட்டிய வலையைப் போல ஆகாயத்திற்குக் கீழே நீண்டு வளைந்து அழுக்கேறிப் போய் கிடக்கும் மேகங்களுக்குப் பின்னால் கொஞ்சம் பிரகாசம். இலேசாக வெளிறிப் போயிருக்கும் நீல ஆகாயம். ஒரு பக்கம் இருட்டில் பறந்து மறையும் இரண்டு காகங்கள். பருந்துகள் பழுப்படைந்து காணப்படும் அஸ்தமன வானத்தை நோக்கி கறுத்த சிறகுகளை வீசி ஒருவித சுயஉணர்வு இன்மையுடன் பறந்து செல்கின்றன. சிவப்பு வர்ணகற்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் பாசி பிடித்த பழமையான சுவருக்கு மேலே நாம் இத்தனை விஷயங்களையும் பார்க்கலாம்.

பழைய மூத்திரத்தின் வாடை. அழுகிப் போன ஆட்டின் குடல்கள். ஓடிக் கொண்டிருக்கும் அழுக்கு நீர். காய்ந்து போய் கிடக்கும் சாலையில் இருக்கும் குதிரைச் சாணம். சுற்றிலும் கறுத்த கடலைப்போல கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் இருட்டு.

அந்தப் பக்கத்தில் இருந்த பெரிய சாலையில் இருந்து வெளிச்சங்களும், சத்தங்களும் இடைவிடாது வந்து நாலா பக்கங்களிலும் பரவிக் கொண்டிருந்தன.

பேலம்மா நிழல் பக்கம் இலேசாக தள்ளி அமர்ந்து கொண்டு தன் கால்களை சாலைப் பக்கம் நீட்டி வைத்தாள். புடவையை மேல் நோக்கி தூக்கி தடித்துப் போன கால்களைச் சொறிந்தாள். சொறிந்தவாறு கால் மூட்டுகளில் தலையை வைத்து குனிந்து அமர்ந்தாள். சிவப்பு வர்ண டவுண் பஸ்கள் இரைச்சலை உண்டாக்கிக் கொண்டு ஓடுவதை அவள் கவனித்தாள். உள்ளே இருந்த வெளிச்சத்தில் களைத்துப் போய் வியர்வை அரும்பிய முகங்களுடன் பின்னால் அமர்ந்திருக்கிற பயணிகளை அவள் மனதிற்குள் பார்த்தாள். அவர்கள் எல்லோரும் ஒவ்வொரு கேட்டைத் திறப்பார்கள். மணல்கள் வழியாக ஓசை எழும்ப நடப்பார்கள். திண்ணையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைப் பாசத்துடன் வாரி எடுப்பார்கள். மனைவியைப் பார்த்து சிரிப்பார்கள்.

வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மரத்தால் ஆன சக்கரங்கள் மேல் குதிரை வண்டிக்காரர்கள் தார்க்குச்சியை நீட்டி உரசினார்கள். குதிரைகள் ஓடின. சைக்கிள்கள் நிற்காமல் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தன. கார்களின் ஹார்ன் சத்தம் விடாது முழங்கியது. பேலம்மா கார்களை ஓட்டிக் கொண்டிருந்தவர்களையும், பின்னால் கண்ணாடி ஜன்னல்களுக்கு உள்ளே சாய்ந்து உட்கார்ந்திருப்பவர்களையும் நினைத்துப் பார்த்தாள்.

உள்ளே பார்த்து கூப்பிட்டாள்:

“ஏ... அம்மா...!”

உள்ளே பாய் நிலத்தில் வேகமாக சுற்றப்படும் சத்தம் கேட்டது. பாத்திரங்களில் ஏதோ உரசும் சத்தம். தொடர்ந்து சில முக்கல்கள்... முனகல்கள்...

பெட்ரோல் வாசனை தெருவில் வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றோடு சேர்த்து அந்த வாசனையை பலவந்தமாக இழுத்து மூக்குத் துவாரத்தின் வழியே உள்ளே விட்டாள். பின்னால் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பலகையால் ஆன கதவின் இடைவெளி வழியே உள்ளே பார்த்தாள். “பிசாசே... நான் கூப்பிட்டது கேட்கலையா?” - முடிந்த வரையில் தன் குரலை உயர்த்திக் கொண்டு கத்தினாள்.

வெளிறிப் போயிருந்த தடிமனான சுவர்களுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் இருந்த பனையோலைக் கதவைத் திறந்து ஒரு கூன் விழுந்து காணப்பட்ட கிழவி வெளியே வந்தாள். பாதி திறந்திருக்கும் கதவு வழியாக உள்ளே மங்கலாக எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு, ஒரு அடுப்பு, கொஞ்சம் கரி படர்ந்த பாத்திரங்கள், பக்கத்தில் இருந்த ஒரு சிறு அறை, அதில் கிழிந்து போய் காணப்படும் நிறம் போன ஒரு பழைய பாய், ஒன்றிரண்டு பழந்துணிகள் - இவை எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.

கிழவி நாற்றமெடுத்த போர்வையை நன்றாக இழுத்து போர்த்தியவாறு தெருவில் இறங்கி நடந்தாள். கூன் விழுந்து நடந்த அந்த உருவம் பள்ளி வாசலின்  மதிலையொட்டி நடந்து மெயின் ரோட்டிற்குத் திரும்பும் வழியின் முனையில் போய் குத்த வைத்து உட்கார்ந்தது. தூரத்தில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கின் இலேசான வெளிச்சத்தில், ஒரு நரைத்த கருங்கல்லைப்போல, குவித்து வைக்கப்பட்ட ஒரு மண் குவியலைப்போல, அந்த உருவம் அங்கே உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் ஆக்கிரமித்து விட்டிருந்த இருட்டின் ஒரு பகுதியாகவே அது கலந்து போய் விட்டிருந்தது. வயதாகிப் போன முகத்தில் கண்கள் மட்டும் பிரகாசமாக இருந்தன. பிசாசைப் போன்று பயங்கரமாக இருந்த, கொடுமையான, மர்மங்கள் நிறைந்த, ஆர்ப்பாட்டமான இருட்டு அந்த கிழவியின் முகத்தை முழுமையாக விழுங்கி இருந்தது.

பேலம்மா ஒரு கல்லை எடுத்து அந்த உருவத்தை நோக்கி எறிந்தாள். ஒன்றிரண்டு காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளையும் அவிழ்த்து விட்டாள்.

“பொழுது இருட்டினது தெரியலியா? பிசாசு... சீக்கிரமா போயிருக்க வேண்டாமா?”

கிழவியின் முகம் கருங்கல் துண்டைப்போல எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது. சிறிது நேரம் பேலம்மாவையே முகத்தை ஒரு மாதிரி சுருக்கி வைத்துக் கொண்டு கிழவி பார்த்தாள். அவளையும் அறியாமல் உதடுகளில் இலேசான ஒரு புன்சிரிப்பு புறப்பட்டு வந்தது. கல்லெடுத்து எறியப்பட்ட குளத்தைப்போல, சுருங்கி வாடிப் போயிருந்த முகத்தில் அவநம்பிக்கையும், கோபமும், ரோசமும், மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் மாறி மாறி வந்து முகத்தைக் காட்டின. ‘ஹீ... ஹீ...’ - கிழவி சிரித்தாள்.


கிழவியின் மேல் காரித்துப்பிவிட்டு, பேலம்மா வாசல் கதவைத் திறந்து உள்ளே போனாள். முகம் பார்க்கும் கண்ணாடியின் உடைந்து போன ஒரு சிறு துண்டை தனக்கு முன்னால் பிடித்துக் கொண்டு கொஞ்சம் பவுடர் போட்டு கண்மை இட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். உதடுகளை நாக்கால் தடவியவாறு, சில நிமிடங்கள் கண்ணாடியையே பார்த்தவாறு நின்றிருந்தாள். பிறகு... மீண்டும் வெளியே வந்தாள்.

வாசலில் அமர்ந்து சுற்றிலும் கண்களால் மேய்ந்தாள். ஏற்கனவே பார்த்த விஷயங்களையே மீண்டும் பார்க்க மனம் ஒப்பவில்லை. யாராவது ஆள் கிடைக்க மாட்டானா என்று எதிர்பார்த்து எல்லா மண் குடிசை வாசல்களிலும், முனைகளிலும், சந்துக்களிலும் மறைந்து நின்றிருக்கும் உருவங்களை அவள் பார்த்தாள். தானும் ஒரு காத்திருப்பவள்தானே என்று அவள் மனதிற்குள் எண்ணினாள்.

“வேகமாகப் போ... யாரையாவது ஒரு ஆளை பிடிச்சிட்டு வா...” - கிழவியிடம் சொன்னாள்.

சிறிது தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் சுவரோடு சேர்ந்து நின்றிருந்த ஒரு பெண் இப்போது தெருவில் இறங்கி நடந்தாள்.

இரண்டு கைகளையும் முன்பக்கம் கட்டியவாறு கவலை தோய்ந்த முகத்துடன் நாலா பக்கங்களிலும் பார்த்தவாறு அவள் நின்றாள். கிழவியின் பல் இல்லாத பொக்கை வாய் அவளைப் பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்டியது. சாபமிட்டது.

பேலம்மா கால்களைச் சொறிந்தவாறு மங்கலான வெளிச்சத்தில் தன் கால்களில் இருந்த ஒன்றிரண்டு புண்களை குனிந்து பார்த்தாள். நாசம்! இதைப் பார்த்தால் வருபவன் என்ன நினைப்பான்? நாளை வைத்தியனைப் போய் பார்க்க வேண்டும். அவளுக்கு சங்கடம் தோன்றவில்லை. ஒன்றுமே தோன்றவில்லை. பொதுவாக மனம் முழுவதுமே மரத்துப் போனது போல் இருந்தது. தெருவில் நின்றிருந்த பெண்ணையே அவள் சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். மரத்துப் போயிருந்த மனதில் பழைய நினைவுகள் நிழலாடின.

பேலம்மா தான் தெருவின் நடுவில் இப்படி நின்றிருந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள். அதற்கும் முன்னால் இருந்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களையும், கவலை நிறைந்த மனதுடன் ஒரு இருட்டு அறைக்குள் படுத்தவாறு அடுத்த அறையில் இருந்து வரும் புரிந்து கொள்ள முடியாத முணுமுணுப்புக்களையும், சிணுங்கல்களையும் காதால் கேட்க நேர்ந்த அந்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்த கண்கள், அவை பார்த்த காட்சிகள், வியப்பு, பதைபதைப்பு, நீங்கிக் கொண்டிருந்த வருடங்கள்... பூரிப்படைந்து கொண்டிருந்த சரீரம்... மனதில் நான்கு விஷயங்கள் தெரிய ஆரம்பித்தது... தெருவில் நின்றது... உடலில் புண்கள்... காத்திருப்பு.

பேலம்மாவின் தலை தூக்கக் கலக்கத்தில் ஆடியது. புன்னகையுடன் நின்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழவிகளையும் தாண்டி தெருவில் பந்தாவாக ஒரு குதிரை வண்டியில் போய்க் கொண்டிருந்தாள் பேலம்மா. இருளடைந்து போயிருந்த ஒரு அறையில் நடுங்கிக் கொண்டிருந்த கைகள் அவளின் மேனியைத் தடவிக் கொண்டிருந்தன. திரும்பி வந்தபோது தெரு முழுக்க ஏகப்பட்ட கைகள் அவளை நோக்கி நீண்டன.

“பணம் எங்கே?”

“இல்ல... இல்ல... இல்ல...” உரத்த குரலில் அலறியவாறு பேலம்மா ஓடினாள்.

அடுத்த நிமிடம் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். கிழவி என்ன செய்து கொண்டிருக்கிறாள்? தெருமுனையில் அவள் கூன் விழுந்து உட்கார்ந்தவாறு மெதுவான குரலில் அழைத்துக் கொண்டிருந்தாள்: “வாங்க... வாங்க...” சிலர் திரும்பிப் பார்த்தவாறு நடந்தார்கள். சிலர் தங்களின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தவாறு நின்றுவிட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள். வேகமாகப் போய்க் கொண்டிருந்த சேட்டுமார்கள், பெரிய தலைப்பாகையைக் கையில் வைத்துக்கொண்டு ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்த குஜராத்திகள், அழுக்கடைந்து நாற்றமடிக்கு கிராமத்து மனிதர்கள்.

பேலம்மா தெருவில் நின்றிருந்த பெண்ணை அருகில் அழைத்தாள்:

“மகளே... வீட்டுக்குப் போ...”

அவள் உற்றுப் பார்த்தாள்.

“கொஞ்ச நேரம் போகட்டும். இங்க பாரு...” - புடவையை உயர்த்தி காலில் இருந்த புண்களைக் காட்டினாள்.

வெறுப்புடன் அவள் திரும்பவும் போய் அதே இடத்தில் நின்றாள். பேலம்மா அவளையே பார்த்தாள். ஒன்றிரண்டு தைரியசாலியான இளைஞர்கள் அவளின் உடலை உரசிப் பார்த்தார்கள். அர்த்தமே இல்லாத ஒரு ஓசையை உண்டாக்கியவாறு அவர்கள் முகத்தில் புன்சிரிப்பு தவழ அங்கேயே நின்றிருந்தார்கள். பேலம்மா அந்த இளைஞர்களில் ஒருவனை கையைக் காட்டி அழைத்தாள். ஒருமுறை திரும்பிப் பார்த்த அவன் அடுத்த நிமிடம் அந்தப் பக்கம் இருந்த சாலையில் இறங்கி மறைந்தான். பேலம்மா சிரித்தாள். சில மாணவர்கள் கைச்சிள்களைத் தள்ளியவாறு நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெதுவான குரலில் ஏதோ பேசிக்கொண்டு, அர்த்தம் பொதிந்த பார்வைகளை சுற்றிலும் பாய்ச்சியவாறு, நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை யாரும் அழைக்கவில்லை. பேலம்மா நினைத்தாள். அவர்கள் அருகில் நெருங்கி வந்தபோது, பேலம்மா எழுந்து தலையால் ஆட்டியவாறு அறையின் உள்பக்கத்தைக் காட்டினாள். அவர்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள் என்று அவள் நினைத்தாள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, இதுவரை பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வேகமாக ஓடி மறைந்தார்கள்.

இப்போது ஒருவன் அந்தப் பெண்ணிடம் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் வெட்கப்படுவது போல் நடித்தாள். பிறகு வழியைக் காட்டியவாறு இருளடைந்துபோன ஒரு மூலையை நோக்கி நடந்தாள். அந்தப் பெண்ணின் ஒவ்வொரு சலனத்தையும், அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பேலம்மா நினைத்துப் பார்த்தாள். அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் அவள் முன்பு செய்ததைப் போலவே இருந்தது. அந்தப் பெண்ணுக்குள் தான் இப்போது இருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.

ஒரு மூலையில் இருந்த கடையில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தொங்கியவாறு காற்றில் ஆடிக்கொண்டிருந்த மாமிசத் தொடைகளையே அவள் கண்கள் வெறித்துப் பார்த்தன. அப்போது அவள் மனதில் ஒரு ஏக்கம் தோன்றியது. பெரிய ஏக்கம்தான். மாமிசம் சாப்பிட வேண்டுமென்றால், பணம் வேண்டுமே! தலைமுடியை இலேசாக ஒதுக்கியவாறு, கால்களை மேலும் வெளியே தெரியும்படி செய்து கொண்டு, அவள் உட்கார்ந்திருந்தாள்.

கிழவியிடம் ஒருவன் மெதுவான குரலில் என்னவோ கேட்பதைப் பார்த்ததும் பேலம்மா எண்ணங்களில் இருந்து விடுபட்டாள். இயந்திரத்தனமாக எழுந்து அவர்களுக்கு அருகில் நடந்தாள். கிழவி தலையால் ஆட்டியவாறு அந்த மனிதனிடம் சாடை காட்டினாள் - “அதுதான்...” பேலம்மா நின்றவாறு முணுமுணுத்தாள்: “மெதுவா உள்ளே வா...” அவன் சுற்றிலும் பார்த்தான். தாழ்ந்த குரலில் கேட்டான்:


“எவ்வளவு?”

“வா... வா... உள்ளே வா...”

“எவ்வளவு?”

“அஞ்சு ரூபா கொடு...”

“வேண்டாம். நான் போறேன்...”

“கையில இருக்குறதைக் கொடு...”

“வேண்டாம்... வேண்டாம்...” - அவனின் கண்களில் இனம் புரியாத ஒரு பதட்டம் தெரிந்தது. முகத்தில் பயம் நிழலாடியது.

“ஒரு ரூபா கொடு... எட்டணா...”

அவனின் அருகில் சென்று, அவனின் கைகளைத் தொட்டு, அவனின் முகத்தைக் கண்களை உயர்த்தி பார்த்தவாறு சொன்னாள்:

“வா...”

மரத்துப் போயிருந்த மனம் உருகி சரீரம் முழுவதும் என்னவோ பரவுவதுபோல் உணர்ந்தாள் அவள். அவளின் உடல் எதையோ எதிர்பார்த்தது. மனதில் இருந்த விருப்பங்கள், ஏக்கங்கள் - எல்லாவற்றையும் தானே மறப்பது போல் அவள் உணர்ந்தாள். அப்போது மங்கலான வெளிச்சத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாமிசத் துண்டுகள் அவளின் ஞாபகத்தில் வந்தன. கிழவியின் பிரகாசமான கண்களில் ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. உடலும் மனதும் பனிக்கட்டியைப் போல் ஆனது. அந்த மனிதன் என்ன நினைத்தானோ, அடுத்த நிமிடம் நடந்து மறைந்தான். தலையை உயர்த்தியவாறு, நடுங்கும் கால்களுடன், வறண்டு போன உதடுகளுடன் அவன் வேகமாக நடந்து சென்றான். அந்தப் பக்கம் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்து கிழவி அவனுக்குப் பின்னால் கெட்ட வார்த்தைகளால் என்னவோ திட்டினாள். அவன் சாலையில் இருந்த வெளிச்சத்திலும் மனிதக் கூட்டத்திலும் சங்கமமாகி காணாமலே போனான்.

திரும்பி வந்து உட்கார்ந்தபோது இருட்டுக்கு மத்தியில் ஒரு அழுக்கடைந்த உருவம் கையில் இருந்த சாட்டையைச் சுழற்றியவாறு பக்கத்தில் வந்தது. குதிரை வண்டிக்காரன். அவன் பணத்தைப் பற்றி கேட்டான்.

“போ... இப்போ இல்ல...”

பரவாயில்லை. அதற்கு பதிலாக மற்ற விஷயம் நடந்தால்கூட போதும் என்ற எண்ணத்துடன் அவன் புன்னகைத்தான்... கறை படிந்த பற்களும் கண்களும் இருட்டில் ‘பளிச்’ என தெரிந்தன. அவன் அருகில் வந்து அவளின் தோளைத் தொட்டான். பேலம்மாவிற்கு மனமே செத்துப் போனதுபோல் இருந்தது. தாங்க முடியாத அளவிற்கு கவலையும் வெறுப்பும் ஒரே நேரத்தில் உண்டாயின. நாவால் அதற்குமேல் வெறுமனே இருக்க முடியவில்லை. வேகமாக எழுந்து குதிரை வண்டிக்காரனின் முகத்தில் காரித் துப்பினாள். பலமாக கத்தியவாறு அவனின் முகத்தில் அடித்தாள். கையில் இருந்த சாட்டையால் அதைத் தடுக்கப் பார்த்தான் அந்த ஆள். பேலம்மா சாட்டையைப் பிடுங்கி அதைக் கொண்டு அடித்தாள். முகம், உடம்பு, கால் - எல்லா இடங்களிலும் கண் மண் தெரியாமல் அடித்தாள். வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி திட்டினாள். அவள் கண்களில் கண்ணீர் ஆறாக ஒழுகியது. கதவுகளும் ஜன்னல்களும் வேகவேகமாகத் திறந்தன. பல தலைகளும் வெளியே தெரிந்தன. நகச் சாயம் பூசிய கால்கள் தெருவில் வேகமாக நடந்தன. ஆட்கள் சுற்றிலும் கூடினார்கள். வண்டிக்காரன் சாட்டையைக் கையில் வாங்கிக் கொண்டு ஓடினான். கூடிய ஆட்கள் கலைந்தனர். ஒரு போலீஸ்காரன் வந்து கேட்டான்:

“என்னம்மா?”

பேலம்மா வீட்டிற்குள் சென்று நாலணா எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் தந்தாள். அவன் இடத்தை விட்டு நீங்கி அடுத்த தெருவை நோக்கி போனான். ‘அடுத்த தெருவில் இருந்த இந்தத் தெருவிற்கு வரும் புழுக்கள்...’ பேலம்மா மனதிற்குள் நினைத்தாள். அவள் மீண்டும் காத்திருந்தாள்... உட்கார்ந்தாள்... கால்கள் வலித்தன. உடலில் பயங்கர வேதனை இருப்பதுபோல் வலித்தன. அப்போது ஒருவன் அவளின் தோளைத் தொட்டான். மவுனமாக அவனின் முகத்தை அவள் பார்த்தாள். வாசல் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அவன் பின் தொடர்ந்தான். கதவை மூடத் தொடங்கியபோது, கிழவியின் குரல் பலமாகக் கேட்டது. தொடர்ந்து தெருவில் ஓடும் கால்களின் சத்தங்கள்... அவன் எந்தவிதமான அசைவும் இன்றி வாசல் கதவையே பார்த்தவாறு நின்றிருந்தான். கதவைத் திறந்து ஒரு பெண் வேகமாக உள்ளே நுழைந்தாள். பேலம்மா திகைத்துப் போய் நின்றாள். அந்தப் பெண் இருவரின் கண்களையும் மாறி மாறி பார்த்தவாறு முறைத்தாள். அவள் அவனின் மனைவி என்பதை பேலம்மா புரிந்து கொண்டாள். அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஒழுகியது. பேலம்மாவின் மனதில் படங்கள் ஓடின. திறக்கின்ற கேட்டுகள்... புன்னகை தவழ காட்சியளிக்கும் குழந்தைகள்... அழகான முகங்களுடன் காப்பி கப்புகளை நீட்டும் மனைவிமார்கள்...

கண்களை மூடியவாறு, தலையைக் குனிந்து கொண்டு அந்தப் பெண் தரையில் அமர்ந்தாள். பேலம்மா அசையாமல் நின்றிருந்தாள். அவன் மெதுவாக அருகில் வந்து தன் மனைவியின் தோள்களில் கையை வைத்து அவளை எழுந்திருக்கச் செய்து கண்ணீரைத் துடைத்தான். அவள் பர்ஸைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து பேலம்மாவிடம் நீட்டினாள். அதையே சிறிது நேரம் உற்று நோக்கிய பேலம்மா, கையால் தடுத்து வேண்டாம் என்றாள். தரையில் அமர்ந்து கைகளால் கண்களை மூடிக்கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவர்கள் வெளியே இறங்கி நடந்தார்கள்.

பேலம்மா வாய்விட்டு அழுதவாறு தரையில் புரண்டாள். வெளியே வாசல் படிமேல் கூன்விழுந்த முதுகுடன் அமர்ந்திருந்த கிழவி பாதி தூக்கத்தில் யாரிடம் என்றில்லாமல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தாள்:

“வாங்க... வாங்க...”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.