
பதினைந்து வயது ஆனபோது உண்ணி தன்னுடைய தாயை வெறுக்க ஆரம்பித்தான்.
அவனுடைய தந்தை கத்தாரில் இருந்தான். அதனால் தந்தையை வெறுப்பதற்கு எந்தவித காரணமும் இல்லாமலிருந்தது. ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்கு வரும்போது, தனக்கு புதிய ஆடைகளையும் கேமராவையும் கருப்புக் கண்ணாடியையும் பரிசாகக் கொண்டு வந்து தரும் அந்த மனிதனை உண்ணியால் வெறுக்க முடியுமா? இல்லை...
ஆனால், தாய்... தன் தாய் எப்போதும் தன்னுடன் ஆழமான ஒரு நட்புணர்வை உண்டாக்கிக் கொள்வதற்கு தீவிரமாக முயற்சிக்கிறாள் என்பதை உண்ணி புரிந்து கொண்டிருந்தான். தன்னுடைய செயல்களை விமர்சனம் செய்து கொண்டும், தன்னுடைய அபிப்ராயங்களை எடைபோட்டுக் கொண்டும் அவள் எப்போதும் தன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதை உண்ணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழகு முற்றிலும் இல்லாமல்போய்விட்ட அந்த நடுத்தர வயதைக் கொண்ட பெண்ணுக்கு தன்னுடைய வாழ்க்கையின் இனிமையைக் கெடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? பெற்றெடுத்திருக்கிறாள் என்பதற்காக நிரந்தரமாக நன்றி காட்ட வேண்டுமென்று அவள் எதிர்பார்க்கிறாளா?
தன் தாயின் உருவம் மட்டுமல்ல- அவளுடைய வார்த்தைகளும் உண்ணிக்கு பொறுத்துக் கொள்ள முடியாதவையாக இருந்தன. அவளுடைய குரலில் இருந்த முரட்டுத்தனமும், உச்சரிப்பில் இருந்த கிராம வாசனையும் தன்னுடைய தகுதியைத் தகர்ப்பதற்காகவே திட்டமிட்டு உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்கள் என்று உண்ணி நினைத்தான். தன்னுடைய நண்பர்கள் அவளுடன் அறிமுகமாவதை உண்ணி விரும்பவில்லை. அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- பள்ளிக்கூட ஆண்டு விழா நடைபெற்றபோது, தன் தாயிடம் அங்கு வரக்கூடாது என்று உறுதியான குரலில் உண்ணி கூறிவிட்டான். “யாருடைய அன்னையும் வரவில்லை. அதனால், அம்மா நீ வரவேண்டாம்...'' அவன் சொன்னான். அதைக்கேட்டு அவனுடைய அன்னையின் முகம் வாடிவிட்டது.
“உண்ணி, உன்னுடைய சொற்பொழிவைக் கேட்க வேண்டுமென்று ஆசை. அதனாலதான்...'' அவள் சொன்னாள்.
“அம்மா, நீ என்னோட பேச்சைக் கேட்டதேயில்லையா? உன் முன்னால் நான் பத்து பன்னிரண்டு முறை பேசியிருக்கிறேன் அல்லவா? பள்ளிக்கூடத்திற்கு வந்து சொற்பொழிவைக் கேட்க வேண்டுமென்று அப்படி என்ன கட்டாயம்?'' உண்ணி கேட்டான்.
“உண்ணி, நீ கவிதை பாடுவதைக் கேட்க வேண்டும்.'' அவனுடைய அன்னை சொன்னாள். தேவையற்ற ஒரு பரிதாப உணர்ச்சி அந்தக் குரலில் கலந்திருந்தது. அது உண்ணியை மேலும் எரிச்சலடையச் செய்தது.
“அம்மா, நீ வருவதாக இருந்தால், எனக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று கூறிவிட்டு நான் வீட்டிலேயே படுத்து விடுவேன். ஆண்டு விழாவிற்கு நான் போகமாட்டேன்.'' உண்ணி கூறினான்.
சமீபகாலம் வரை தன் தாயிடம் பள்ளிக்கூட விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்ததை உண்ணி கவலையுடன் நினைத்துப் பார்த்தான். தனக்குப் பழக்கமான ஒவ்வொருவரையும் தன் தாய்க்கு அறிமுகம் செய்து வைத்ததுகூட அவன்தான். அவர்களுடைய விஷயங்களில் அவனுடைய தாய் எப்போதும் ஆர்வத்தைக் கொண்டவளாக இருந்தாள்.
தலைமை ஆசிரியரின் வலது கண் அறுவை சிகிச்சை முடிந்ததா?
பார்க்கவன் சாரின் வீடு விற்கப்பட்டு விட்டதா?
சகாதேவன் சகோதரியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதா?
அவளுடைய கேள்விகளுக்கு உண்ணி பதில் கூறவில்லை. மற்றவர்களுடைய விஷயங்களில் அளவற்ற ஈடுபாடு காட்டுவது என்பது உண்ணிக்கு அந்த அளவிற்கு வெறுப்பை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. அம்மா புத்தகங்களை வாசிக்கக் கூடாதா? தையல் வகுப்புகளில் போய் சேரக் கூடாதா? பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களுடன் சேர்ந்து மதிய நேர திரைப்படம் பார்க்கப் போகக் கூடாதா? சகாதேவனின் அன்னை ஆன்மிக விஷயங்கள் உள்ள நூல்களைப் படித்தாள். அவளுக்காக நூலகங்களில் புத்தகங்களைத் தேடும்போது சகாதேவன் ஒருநாள் சொன்னான்: “என் தாய் நாவல், சிறுகதைகள் ஆகியவற்றைப் படிக்க மாட்டாங்க. தத்துவ சிந்தனைகளோ ஆன்மிக விஷயங்களோ வேண்டும். வேறு எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லை.''
உண்ணியின் தாயைப் பற்றி சகாதேவனுக்கு நல்ல மதிப்பு இருந்தது.
“அம்மா, உனக்கு நான் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துக் கொண்டு வந்து தருகிறேன்.'' ஒருநாள் உண்ணி சொன்னான். உண்ணியின் தாய் தன்னுடைய தேய்ந்துபோன பற்களை வெளியே காட்டியவாறு விழுந்து விழுந்து சிரித்தாள்.
“எனக்கு எதற்கு புத்தகம்? வாசிப்பதற்கு நேரமே இல்லையே! எப்போதும் வேலை... துணி சலவை செய்வது... சமையல் செய்வது... பாத்திரங்களைக் கழுவுவது... எல்லாவற்றையும் முடித்துவிட்டால், முதுகைக் கொஞ்சம் சாய்க்கணுமென்று தோன்றும். வாசிக்க வேண்டுமென்று தோன்றுவதில்லை.'' அவனுடைய தாய் முணுமுணுத்தாள்.
“அம்மா, உனக்கு ஒரு வேலைக்காரியை வைத்துக்கொள்ள கூடாதா?'' உண்ணி கேட்டான்.
“வேலைக்காரியை வைத்து பழக்கமில்லை. வேலைக்காரியை வைத்தால், பிறகு நான் என்ன செய்வது? வெறுமனே ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தால், பைத்தியம் பிடிச்சு நான் படுத்த படுக்கையா ஆயிடுவேன்.'' அவனுடைய அன்னை சொன்னாள்.
நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கும் தன் தாயை எந்தவித கூச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு தான் அறிமுகப்படுத்தலாம்- உண்ணி சிந்தித்தான். எல்லா நேரங்களிலும் துடைப்பத்தையோ கரண்டியையோ கையில் வைத்துக் கொண்டு நடந்து திரியும் தன் தாயை அறிமுகப்படுத்துவதுதான் அவனுக்கு கூச்சமான விஷயமாக இருந்தது.
“உண்ணி, நீ ஏன் எங்களை உன்னுடைய வீட்டுக்கு அழைக்காமல் இருக்கிறாய்?'' சகாதேவன் கேட்டான். அதற்கு உண்ணி பதில் கூறவில்லை. தன்னிடம் வீடியோ விளையாட்டுகள் இருக்கின்றன என்றோ ஏராளமான கேசட்டுகள் இருக்கின்றன என்றோ உண்ணி தன் நண்பர்களிடம் கூறியதில்லை.
“நீ ஏன் கத்தாருக்குச் செல்லவில்லை? உன் அன்னையையும் அழைத்துக் கொண்டு கத்தாருக்குப் போகலாமே?'' ஒருநாள் சகாதேவன் கேட்டான்.
தன்னையும் தன் தாயையும் கத்தாருக்கு அழைத்துக் கொண்டு செல்வதில் தன் தந்தை ஆர்வம் காட்டவில்லை என்பதை உண்ணி நினைத்துப் பார்த்தான். தன்னுடைய குடும்பத்தை கத்தாரில் வெளிப்படையாக காட்டுவது என்பது தன் தந்தைக்கு ஒரு வெட்கமான விஷயமாக இருந்ததா? கத்தாரில் இருந்த நண்பர்களுக்கு அழகான, அதிகமாகப் படித்த மனைவிகளும் இருக்கலாம். அவனுடைய அன்னைக்கு ஆங்கிலத்தில் உரையாடத் தெரியாதே!
“அம்மா, உனக்கு என் அப்பாவுடன் கத்தாரில் வசிக்கணும் என்ற விருப்பம் உண்டாகவில்லையா?'' உண்ணி கேட்டான். உணவு பரிமாறுவதற்கு மத்தியில் அவனுடைய அன்னை விழுந்து விழுந்து சிரித்தாள்.
“உன்னை இங்கு தனியாக விட்டுட்டு நான் கத்தாருக்குப் போவதா? நான் போய்விட்டால், உனக்கு யார் சோறும் குழம்பும் வச்சு தர்றது?''
“என்னுடைய விஷயத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம். நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்வேன். அம்மா, நீ கொஞ்சம் சந்தோஷமாக இருக்க வேண்டும். வேலை எதுவும் செய்யாமல் கொஞ்சகாலம் அங்கு சந்தோஷமாக வாழவேண்டும்.'' உண்ணி சொன்னான்.
“உன்னைப் பார்க்காமல் வாழும்போது, எனக்கு எங்கே யிருந்து சந்தோஷம் கிடைக்கும்?'' அவனுடைய தாய் கேட்டாள்.
“என் பள்ளிக்கூடம் மூடப்படும்போது, நாம் இரண்டு பேரும் கத்தாருக்குப் போவோம். நான் அப்பாவுக்குக் கடிதம் எழுதுகிறேன்.'' உண்ணி சொன்னான்.
“அப்பாவுக்குக் கடிதம் எழுத வேண்டாம். அப்பா நிம்மதியாக அங்கு வாழட்டும். கத்தாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. நமக்கு வேண்டிய அளவுக்கு அவர் பணம் அனுப்பி வைக்கிறார். அங்கு போய் அப்பாவுக்கு சுமையாக இருப்பதில் எனக்கு சிறிதுகூட விருப்பமில்லை.'' அவனுடைய அன்னை சொன்னாள்.
“அம்மா, நீ அப்பாவிடமிருந்து பணத்தை மட்டுமே விரும்புகிறாயா?'' உண்ணி வெறுப்புடன் கேட்டான்.
“உணவு சாப்பிடு.'' அவனுடைய அன்னை சொன்னாள்.
“சில பெண்கள் ஆண்களிடமிருந்து பணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.'' உண்ணி முணுமுணுத்தான்.
“உனக்கு என்னடா கேடு வந்திருக்கு, உண்ணி?'' அவன் தாய் கேட்டாள். அவளுடைய கண்கள் திடீரென்று ஈரமாயின.
தன் அன்னையின் சமையல் மிகவும் மோசமாக இருக்கிறது என்று அப்போதுதான் உண்ணிக்குத் தோன்ற ஆரம்பித்தது.
“எனக்கு பிம்பீஸுக்குப் போவதற்கு பணம் தந்தால் போதும். அம்மா, நீ சப்பாத்தி தயார் பண்ண வேண்டாம்.'' அவன் சொன்னான்.
தான் சைவம் சாப்பிடக்கூடியவளாக இருந்தாலும், தன் மகனுக்கும் கணவருக்கும் மீனையும் மாமிசத்தையும் சமையல் செய்து கொடுப்பதில் அவனுடைய அன்னைக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை.
“உனக்கு என்ன வேண்டுமென்றாலும், இங்கு நான் தயார் பண்ணி தருகிறேன். ஹோட்டலில் போய் சாப்பிட்டால், வயிற்றுவலி உண்டாகும்.'' அவனுடைய தாய் சொன்னாள்.
“அம்மா, நீ அதிகமாக மிளகாய் சேர்க்கிறாய்.'' உண்ணி சொன்னான்.
“இனி மிளகாய் சேர்க்காமல் சமையல் பண்ணுகிறேன்.'' அவனுடைய அன்னையின் குரலில் தேம்பி அழும் சத்தம் கலந்து வந்தது. அவள் கெஞ்சுகிற குரலில் தன் மகனிடம் பேச ஆரம்பித்தாள். அந்த மாறுதல் உண்ணிக்கு வெறுப்பை உண்டாக்கியது.
ஒரு சாயங்கால நேரம். உண்ணி திரும்பி வந்தபோது, உள்ளே அவனுடைய தாய் இன்னொரு ஆளிடம் உண்ணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்.
“அவனுக்கு என்ன ஆச்சு? என்ன செய்தாலும் குற்றம் கூறுகிறான். அன்பே இல்லை என்று தோன்றுகிறது. மீதி எல்லாரிடமும் பாசம் இருக்கு. என்னை மட்டும் பார்க்கவே பிடிக்கவில்லை...''
உள்ளே நுழைவதற்கு தயங்கிக் கொண்டே அவன் வெளியே நின்றிருந்தான். ஒரு நிமிடம் கடந்ததும் சாவித்திரி வெளியே வந்தாள்.
“உண்ணி... நீ இங்கேயா இருக்கே?'' அந்த இளம்பெண் கேட்டாள்.
அவன் தலையை ஆட்டினான். அவனுடைய அன்னை தன் கைகளை முண்டில் துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.
“வா, உண்ணி... நான் சாவித்திரிக்கும் சேர்த்து காபி தயாரித்தேன். இரண்டு பேரும் சேர்ந்து காபியையும் பலகாரத்தையும் சாப்பிடுங்க.'' அவள் சொன்னாள்.
“எனக்கு பசி இல்லை. வரும் வழியில் ஹோட்டலுக்குள் நுழைந்து, தேநீரும் பலகாரமும் சாப்பிட்டேன்.'' உண்ணி மெதுவான குரலில் சொன்னான்.
“உண்ணி, உனக்கு பணியாரம் வேண்டாமா?'' அவனுடைய அன்னை கேட்டாள்.
“எனக்கு எதுவும் வேண்டாம்...'' அவன் சொன்னான்.
“வேண்டாமென்று கூறும்போது, கட்டாயப்படுத்தாதீங்க.'' சாவித்திரி உண்ணியின் தாயிடம் சொன்னாள்.
“சரி... இனி நான் வற்புறுத்தமாட்டேன்.'' உண்ணியின் அன்னை சொன்னாள். அவள் சமையலறைக்குள் நுழைந்தாள். சாவித்திரி ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்து, தன் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தாள். அந்த வேகமான கால் ஆட்டல் உண்ணியை என்னவோ செய்தது. சம வயதைக் கொண்டவளாக இருந்தாலும், தனக்கு அறிவுரை கூறுவதற்கு முயற்சிக்கும் அந்தச் சிறுமிமீது உண்ணிக்கு வெறுப்பு தோன்றியது.
“நல்லா படிக்கிறாய் அல்லவா?'' சாவித்திரி கேட்டாள்.
உண்ணி தலையை ஆட்டினான்.
“உண்ணி, உனக்கு ஆங்கிலம் எளிதாக இருக்கிறது. இல்லையா?'' சாவித்திரி கேட்டாள்.
அப்போதும் உண்ணி தலையை ஆட்டினான்.
“க்ளாஸ் கிடைக்கும் அல்லவா?''
“கிடைக்கும்...''
தேர்வு நடைபெறும் இரண்டாவது நாளன்று உண்ணியின் தாய் சாலையில் விழுந்து மரணமடைந்து விட்டாள். சாலையைக் கடந்தபோது, பேருந்து வந்து மோதி விட்டது. தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைப்போல தோற்றம் தந்த அந்த முகத்தைப் பார்த்தபோது, உண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதான். தன்னுடைய கொடூர தன்மையை நினைத்துதான் அவன் அழுது கொண்டிருந்தான்.
“தேர்வை முழுமையாக எழுதவேண்டும். உண்ணி,
உனக்கு க்ளாஸ் கிடைக்கும் என்று அம்மா சொன்னாங்க.'' சாவித்திரி சொன்னாள்.
அவன் தன் அன்னையின் இறந்த உடலுக்கு முன்னால் நின்று வணங்கினான். அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந் தவர்களின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
“தேர்வு முடிந்தவுடன், இவனை நான் கத்தாருக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவேன்.'' உண்ணியின் தந்தை எல்லாரிடமும் கூறினார்.
“உண்ணியைத் தனியாக விடவேண்டாம்.'' சாவித்திரி சொன்னாள்.
“மகனை அவனோட அம்மா பிரியாமலே இருந்தாங்க.'' பக்கத்து வீடுகளில் ஒரு வீட்டைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்.
“இனி உண்ணி இந்த துக்கத்தை எப்படித் தாங்கிக் கொள்வான்?''
உண்ணி பிம்பீஸிற்குச் சென்று, சிக்கன் சாப்பிட்டு, முதல் முறையாக சிகரெட்டைப் புகைத்தான்.
“நான்தான் அம்மாவைக் கொன்னுட்டேன்.'' அவன் யாரிடம் என்றில்லாமல் கூறினான்.