Logo

தோழி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6711
thozhi

"நான் இங்கே இருக்குறப்போ இந்த மாதிரி தான்தோன்றித்தனமான காரியங்கள் நடக்குறதுக்கு நிச்சயமா சம்மதிக்க மாட்டேன். இதென்ன கூத்தா இருக்கு. அந்தப் புலையப் பொண்ணு கூட இனிமேல் பழகக்கூடாதுன்னு நீங்கதான் மகள் கிட்ட கண்டிச்சு சொல்லணும். தாய் இல்லாத பொண்ணுன்னு அவ என்ன பண்ணினாலும், கண்டபடி பிடிவாதம் பிடிச்சாலும் அதைக் கண்டிக்காம அவ போக்குலேயே விட்டுக்கிட்டு இருக்குறது நீங்கதான்.

நான் தப்பித் தவறி ஏதாவது சொல்லிட்டா... அவ்வளவு தான்- நான் அவளைப் பெத்ததாய் இல்லைன்னு என்மேல தேவையல்லாம பழி வந்து விழ ஆரம்பிச்சிடும். அங்க பாருங்க... வயல்வழியா நம்ம பொண்ணு வர்றதை! அந்தக் காளி பொண்ணோட தோள்மேல கையைப் போட்டுக்கிட்டு ஆடி ஆடி நடந்து வர்றதைப் பாருங்க. நல்லா ரசிச்சுப் பாருங்க..."

இவ்வளவையும் சொல்லிவிட்டு கழுத்தை ஒரு மாதிரி வெட்டியவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் மாதவியம்மா.

'பகவத் கீதை' படித்துக் கொண்டிருந்த கோவிந்த மேனன் புத்தகத்திலிருந்து கண்களை எடுத்து மூக்குக் கண்ணாடி வழியாக தனக்கு முன்னால் தெரிந்த வயல் பக்கம் கூர்மையாகப் பார்த்தார். புத்தகங்களை மார்புடன் சேர்த்துப் பிடித்தவாறு பிரபாவும் காளியும் பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மாலை நேர வெயில் அவர்கள் முகத்தில் மஞ்சள் வண்ணத்தைப் பூசியிருந்தது. மூன்று பாதைகள் சந்திக்கும் இடம் வந்ததும் அவர்கள் இருவரும் பிரிய வேண்டும். காளி பிரபாவைக் கிச்சுக்கிச்சு மூட்டியபடி பின்னால் திரும்பி வேகமாக ஓடினாள். அதற்கு பதிலாக பிரபாவும் அவளை விரட்டியபடி வேகமாக ஓடினாள். இருந்தாலும் தன்னுடைய பருமனான உடலுடன் அவளால் அதிக தூரம் ஓட முடியவில்லை. அவளின் ஆங்கில நோட்டுப் புத்தகம் வயலில் போய் விழுந்தது. இடது காலில் அணிந்திருந்த கொலுசு கழன்று சேற்றில் விழுந்தது. அவள் அவற்றை எடுப்பதற்காகச் சேற்றில் இறங்கினாள். அவளின் முழங்கால் வரை சேற்றுக்குள் புதைய என்ன செய்வதென்று தெரியாமல் அவள் காளியை அழைத்தாள்.

அடுத்த நிமிடம் காளி ஓடிவந்து அவளைச் சேற்றிலிருந்து மேலே கையைப் பிடித்து தூக்கினாள். தன் தோழியின் காலில் இருந்த சேற்றை அவள் நீரால் தேய்த்து கழுவி விட்டாள்.

நேரம் அதிகமாகி விட்டதால், அதற்கு மேல் அவர்கள் விளையாடவில்லை. "மீதியை நாளைக்குப் பார்த்துக்குவோம்" என்று சொல்லியவாறு பிரபா திரும்பி நடந்தாள்.

கோவிந்தமேனன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொரு நேரமாக இருந்தால் கள்ளங்கபடமில்லாத அந்தச் சிறுமிகளின் விளையாட்டை அவர் கண்குளிர பார்த்து ரசித்திருப்பார். ஆனால், மாதவியம்மா ஏற்கனவே அவரின் மனதில் சில விஷ வித்துக்களை விதைத்து விட்டிருந்ததால், பிரபா, காளி இருவரும் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த அவருக்குக் கோபம் தான் உண்டானது. அவர் ஒரு பிரம்பைக் கையிலெடுத்துக் கொண்டு குரலைச் சற்று உயர்த்தி "பிரபா, இங்கே வா" என்று அழைத்தார்.

அவள் அஞ்சி நடுங்கும் ஒரு மான்குட்டியைப் போல தன்னுடைய கறுத்த விழிகளால் பார்த்தவாறு மெதுவாக தன் தந்தையை நோக்கி நடந்து சென்றாள். கோவிந்த மேனன் அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் அப்போது இனம் புரியாத ஒரு உணர்ச்சி வேறுபாடு தோன்றியது. கலங்கிப் போயிருந்த பிரபாவின் நீலநயனங்களில் அவளுடைய இறந்து போன தாயின் முகத்தை அவர் பார்த்தார். அப்போது அவருடைய கண்களில் கண்ணீர் அரும்பத் தொடங்கியது. அது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய முகத்தை வேண்டுமென்றே இன்னொரு பக்கம் திருப்பிக் கொண்டு, கண்களில் இருந்த ஈரத்தை மறைக்க முயற்சித்தவாறு, கையிலிருந்த பிரம்பைக் கீழே வைத்த அவர் பிரபாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு நிமிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றார். பிறகு மெதுவாக பதறிய குரலில் அவர் சொன்னார்:

"பிரபா, நீ சொன்னபடி கேட்க மாட்டியா?"

அதைக் கேட்டு பிரபாவின் கண்கள் கலங்கின. அவள் கேட்டாள்: "நான் அப்படி என்னப்பா தப்பு பண்ணிட்டேன்?"

கோவிந்தமேனன் மகளை தன் மார்போடு சேர்த்து அணைத்தவாறு சொன்னார்: "அந்தத் தாழ்ந்த ஜாதிப் பொண்ணுகூட நீ பழகுறது அவ்வளவு நல்லது இல்ல. நீ அவளைத் தொட்டு விளையாடுறதை யாராவது பார்த்தாங்கன்னா நம்மளைப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க?"

அவள் முடி வளர்த்திருந்த தன்னுடைய தந்தையின் மார்புப் பகுதியை விரல்களால் சிறிது நேரம் தடவியவாறு நின்றாள். சில நிமிடங்களுக்குப் பிறகு சாந்தம் குடிகொண்டிருந்த தன்னுடைய விழிகளை மேல்நோக்கி உயர்த்தியவாறு அவள் கேட்டாள்: "யாரும் பார்க்காத மாதிரி நான் காளிகூட சேர்ந்து விளையாடலாம்ல?"

அதற்குமேல் கோவிந்தமேனன் மகளிடம் எதுவுமே சொல்லவில்லை.

2

காளிக்குத் தற்போது ஒன்பது வயது நடக்கிறது. அவளுடைய தந்தை வடநாட்டில் சாலைத் தொழிலாளர்களின் மேஸ்திரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவன் பெயர் கண்ணன்குட்டி. ஒவ்வொரு மாதமும் அவனுக்குச் சம்பளமாக பதினோரு ரூபாய் தரப்படுகிறது. மாதமொரு முறைதான் அவன் தன் குடிசையைத் தேடியே வருவான். அவனின் ஒரே மகள் காளி. கண்ணன்குட்டி அவ்வளவாகப் படிக்காததால் தன்னுடைய மகளாவது நன்றாகப் படிக்கட்டும் என்று ஆசைப்பட்டுத்தான் அவளைப் பள்ளிக் கூடத்திற்கே அனுப்பி வைத்தான். அவன் வடநாட்டிற்கு வேலை செய்யப் போய்விட்டால், குடிசையில் இருப்பவர்கள் காளியும் அவளின் தாய் தளியாயியும்தான்.

பிரபாவும் காளியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிரென நேசித்தனர். படிப்பில் மிகவும் திறமைசாலி காளி. எப்போதும் படு சுறுசுறுப்பாக இருபபாள். யாரையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும் ஒரு வித அமைதியான குணமும், ஒரு அறிவாளித்தனமான களையும் அந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியிடம் குழந்தைப் பருவத்திலிருந்தே குடி கொண்டிருந்தன. அவளது கறுத்து மெலிந்து போன உடம்பும், சுருள் சுருளாகக் காணப்படும் தலைமுடியும், விரிந்த கண்களும், நீளமான மூக்கும் பிரகாசமான பற்களும் அவளுக்கு ஒருவித அழகைத் தந்தன.

பிரபா காளியைவிட ஒரு வயது குறைவானவள் என்றாலும் பார்ப்பதற்கு அவளை விட மூத்தவள் மாதிரி தோன்றுவாள். அவள் சதைப்பிடிப்புடன் கட்டுப்பாடே இல்லாமல் வளர்ந்திருந்ததே காரணம். பொன்னிற மேனியைக் கொண்டவள் பிரபா. ஒடுங்கிப் போன சிறிய மூக்கும், சதைப்பிடிப்பான கன்னங்களும், சிறிய நீலநிறக் கண்களும், மெலிதாக மையால் வரையப்பட்டதைப் போலிருக்கும் புருவங்களும் ஒரு ஜப்பானிய சிறுமியின் அழகை அவளுக்கு அளித்தன. எப்போது பார்த்தாலும் அவள் சல சலவென்று பேசிக்கொண்டே இருப்பாள்.


எதைக் கேட்டாலும் கள்ளங்கபடமில்லாமல் சிரிப்பது அவளின் இயல்பு. அப்படிச் சிரிக்கும் போது அவளின் கண்கள் இலேசாகச் சுருங்கும். கன்னங்களில் குழி விழும். பவளத்தைப் போல அப்போது அவள் முகம் சிவந்து காணப்படும். குறும்புத்தனங்கள் எதுவும் செய்யத் தெரியாது என்றாலும், சிறிய அளவிலாவது அவற்றில் எதையாவது காட்ட வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்படக் கூடியவள் பிரபா. சிறு வருத்தம், ஏற்பட்டாலும் கூட, அவளின் சிறிய கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் ஒரு நொடியில் மறந்து விடக் கூடிய மந்த புத்திக்குச் சொந்தக்காரி அவள். அன்பு செலுத்துவது என்ற ஒன்றைத் தவிர பிரபாவிற்கு வேறு எதுவுமே தெரியாது.

அவளின் அடர்ந்து காணப்படும் தலைமுடியை சுதந்திரமாக அவிழ்த்துவிட்டால், அவளையே முழுமையாக மூடிவிடக் கூடிய அளவிற்கு அது நீளமாக இருந்தது. சாதாரணமாக அவளின் தலைமுடி இளம் நீல நிறத்தில்தான் இருந்தது. எண்ணெய் தேய்க்கப்பட்டு விட்டால், அந்தக் கூந்தலே கறுப்பாக மாறிவிடும். எண்ணெய் இல்லாமல் இருக்கும்போது பொன் துகள்களைச் சிதறவிட்டதைப் போல் ஒருவித மினுமினுப்பு அந்தக் கூந்தலில் இருந்து கொண்டே இருக்கும். தன் கூந்தலை முழுமையாக அவிழ்த்துவிட்டவாறு அவள் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தார்களேயானால், அவளை மனிதக் குழந்தையாக எண்ண மாட்டார்கள். சிவப்பு வண்ணத்தில் பட்டுப் பாவாடையை அணிந்து இளம் வெயிலில் வயல் வரப்பில் நடந்து போகும் அந்தச் சிறுமியைப் பார்க்கும் மனிதர்கள் தங்களுக்குள் கூறிக் கொள்வார்கள். "இந்தப் பொண்ணு தங்க விக்கிரகம் மாதிரியே இருக்கு. தேவகியம்மா என்ன அழகான ஒரு பொண்ணைப் பெத்துருக்காங்க" என்று.

பிரபாவின் தந்தை கோவிந்தமேனன் ஒரு பென்ஷன் பதிவாளர். சமுதாயத்தில் அவ்வப்போது உண்டாகும் மாறுதல்களுக்கு தான் எதிரான மனிதரில்லை என்று அடிக்கடி அவர் கூறிக் கொள்வதுண்டு. ஆனால், தன்னுடைய கடவுள் பக்தியையும், ஜாதி வித்தியாசம் பார்ப்பதையும், மாமூல் வாங்குவதில் இருக்கும் விருப்பத்தையும் அவர் கைவிட எப்போதுமே தயாராக இருந்ததில்லை. சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் அவருக்கு எப்போதுமே ஒருவித மதிப்பு இருந்தது. "நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனால், இது என்னோட நம்பிக்கை" என்பார் அவர்.

இப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவர்களைச் சிறிது கூட துன்பப்படுத்தாமல், அமைதியாக மரணத்தைத் தழுவ விடுவதுதான் சரியான செயல் என்று பொதுவாக சிந்திக்கத் தெரிந்தவர்கள் நினைத்தார்கள்.

பிரபாவின் தாய் தேவகியம்மா, பிரபாவிற்கு ஐந்து வயது நடக்கும் போது இறந்து போனாள். கோவிந்தமேனன் தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எதுவென்றால் தன்னுடைய வயதான காலத்தில் ஒரு இளம் பெண்ணை இரண்டாம் தாரமாக அவர் திருமணம் செய்து கொண்டதுதான். அவரின் இரண்டாவது மனைவி மாதவியம்மாவிற்கு இருபது வயதுதான். பிரபா மாதவியம்மாவை 'அம்மா' என்றுதான் அழைப்பாள்.

3

ஜூன் மாத ஆரம்பத்தில் மழைக்காலம் ஆரம்பித்தது.

பிரபாவும் காளியும் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஐந்தாம் வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.

பள்ளிக் கூடத்தில் புது வருடத்தின் தொடக்கம். பிள்ளைகள் மகிழ்ச்சியுடனும் மனதில் உற்சாகத்துடனும் அதை வரவேற்றார்கள். புதிய வகுப்பு, புதிய ஆசிரியர், புதிய புத்தகங்கள், புதிய பாட விஷயங்கள்- மொத்தத்தில் எல்லாமே மகிழ்ச்சி உண்டாக்கக் கூடிய அம்சங்கள். ஒரு மாறுதலின் ஆரம்பம்; ஒரு புதுமையின் இனிமை.

ஆசிரியர் மற்ற பிள்ளைகளுக்குக் கொடுத்ததைப் போல பிரபாவிடமும் புதிய புத்தகங்களுக்கான ஒரு பட்டியலைத் தந்தார்.

மறுநாள் காலையில் அவள் புதிய புத்தகங்களின் ஒரு கட்டைத் தூக்கியவாறு காளியின் குடிசையைத் தேடிச் சென்றாள்.

"இந்தப் புத்தகங்களுக்கு நல்லா அட்டை போட்டு வெளியே ‘ஜெ.பிரபாவதி. ஐந்தாம் வகுப்பு' ன்னு அச்சடிச்சது மாதிரி எழுதித் தா, காளி" என்று அவள் தன் தோழியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

பிரபாவின் புதிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்து அவற்றை முகர்ந்து பார்த்த காளி சொன்னாள்: "ஹா...! என்ன மணம்!"

புத்தகத்தின் தாள்களில் இருந்த இனிய வாசனையை முகர்ந்து இன்பம் கண்ட காளி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டாள். அவளால் இந்த மாதிரி புதிய புத்தங்களை வாங்க முடியாது. ஏற்கனவே ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்குப் போன ஒரு மாணவனின் பழைய புத்தகங்களை அவள் எட்டணா கொடுத்து வாங்கி வைத்திருந்தாள். அந்தப் பழைய புத்தகங்களில் மனதைக் குமட்டக்கூடிய வாசனைதான் இருந்தது.

குடிசையின் வாசலில் பாயை விரித்துப் போட்டு உட்கார்ந்த காளி தன் கால்களை நீட்டி வைத்துக் கொண்டு புத்தகங்களுக்கு அட்டை போட ஆரம்பித்தாள். குடிசையின் மேற்கூரை நிழல் அந்தப் பாயில் விழுந்து கருப்புப் பட்டை ஒன்றை உண்டாக்கியது.

காளி பிரபாவின் புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அட்டை போட்டு முடித்து, வெளியே அழகாக அவள் பெயரை எழுதினாள். அதற்கு பரிசாக பிரபா அவளுக்கு இரண்டு மயிலிறகுகளைத் தந்தாள். "அடுத்த வருஷம் வர்றப்போ இது பெருகி நூறு இறகுகளா ஆகணும்" என்ற தன்னுடைய விருப்பத்தையும் தன்னுடைய தோழியிடம் அவள் சொன்னாள். மயிலிறகு புத்தகத்தில் இருக்கும் போது பெருகி எண்ணிக்கையில் அதிகமாகும் என்று இந்தச் சிறுமிகள் உண்மையாகவே நம்பினார்கள்.

ஆனால், காளியைப் பொறுத்தவரை வாழ்க்கை நிலையில் தான் பிரபாவை விட எவ்வளவோ மடங்கு கீழே இருப்பதை அவள் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறாள். பிரபாவிற்கு அவளின் தந்தை ஒரு பட்டுக்குடை வாங்கிக் கொடுத்தார். ஆனால், காளியோ கால் ஒடிந்த ஓலைக்குடையைக் கையிலெடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போக வேண்டி இருந்தது. பிரபா புதிய சில்க் ஆடை அணிந்திருந்தாள். காளியோ முழங்காலை மறைக்காத ஒரு சிறு முண்டையும் புள்ளிபோட்ட ஒரு ப்ளவ்ஸையும் அணிந்திருந்தாள். பிரபாவின் கழுத்திலும் கையிலும் காதிலும் கல் வைத்த பொன் நகைகள் அலங்கரித்தன. காளியிடம் சாதாரண கண்ணாடி வளையல்கள் மட்டுமே இருந்தன. நகைகளையும் விலையுயர்ந்த ஆடைகளையும் அணிந்து பள்ளிக்கு வரும் பிரபாவைப் பார்த்து 'பிரபா உண்மையிலேயே கொடுத்து வச்சவ!' என்று காளி தனக்குள் சொல்லிக் கொள்வாள்.

ஆனால் பிரபாவிற்கு தான் அணிந்திருக்கும் பொன்னால் ஆன நகைகள் மீதோ மற்ற அலங்காரப் பொருட்கள் மீதோ சிறிதுகூட விருப்பமில்லை. தன்னுடைய தாய்க்கு அவள் பயந்தாள். இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் நகைகளை எப்போதோ கழற்றி காளியின் கையில் அவள் தந்திருப்பாள். பிரபாவிற்கு மலர்கள் கிடைத்தால் போதும்.


மலர்கள் என்றால் அவளுக்கு உயிர். காளி பல்வேறு இடங்களிலிருந்து அவளுக்கு மலர்களைக் கொண்டு வந்து தருவாள். அப்போது பிரபா தன் மனதிற்குள் நினைத்துக் கொள்வாள். 'நான் காளியின் தங்கச்சியா பிறக்காமப் போயிட்டேனே!’ என்று.

திருவோணத் திருநாளன்றுதான் பிரபா பிறந்தாள். அன்று அவளுக்கு ஒன்பதாவது வயது பிறக்கிறது. ஓணம் பண்டிகைக்கு எடுக்கப்பட்டட ஆடைகளுக்கு மத்தியில் அவளின் தந்தை அவளுக்கு ஒரு ஜரிகை போட்ட முண்டு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த முண்டைத்தான் அன்று பிரபா அணிந்தாள்.

அன்று சாயங்காலம் பிரபாவின் தாய் கைகொட்டிக்களியைப் பார்ப்பதற்காக அடுத்த வீட்டைத் தேடிப்போயிருந்த நேரத்தில் பிரபா வேலைக்காரியின் உதவியுடன் ஒரு பாத்திரத்தில் சாதத்தையும் கூட்டையும் மற்ற உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு காளியின் குடிசையை நோக்கி நடந்தாள்.

"காளி... காளி" என்று அவள் குடிசைக்கு வெளியில் நின்றவாறு அழைத்தாள். தான் மட்டும் தனியாக வந்து ஒருவகை தர்மசங்கடமான நிலையுடன் அவள் அங்கு நின்றிருந்தாள். இடுப்பில் அவிழ்ந்து கொண்டிருந்த முண்டை ஒரு கையால் பிடித்தவாறு அதே நேரத்தில் இன்னொரு கையில் தான் கொண்டு வந்த உணவு பதார்த்தங்கள் கீழே விழுந்து விடாமல் இருக்கும்படி அவள் மிகவும் கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டாள். அந்தக் காட்சியைப் பார்த்த புலையக் கிழவியின் நரைத்த கண்களில் நீர் அரும்பி விட்டது.

காளி இரண்டு மூன்று நாட்களாக பள்ளிக்கூடம் வரவில்லை. அதனால் பிரபா மிகவும் கவலைப்பட்டாள். காளிக்குக் காய்ச்சல் என்ற செய்தி அவளுக்கு வந்தது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அவள் காளியின் குடிசையைத் தேடிப் போனாள். பள்ளிக்கூடத்தைப் பற்றிய பல செய்திகளையும், வேறு பல நகைச்சுவையான விஷயங்களையும் அவளிடம் பேசியவாறு அங்கேயே நீண்ட நேரம் இருந்தாள் பிரபா.

அவள் அங்கு போன விஷயம் எப்படியோ மாதவியம்மாவிற்குத் தெரிய வந்தது. அதற்காக அவள் பிரபாவைப் பார்த்து வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாள்.

பிரபா, "காளியும் என்னைப் போல ஒரு பொண்ணுதானே?" என்று கேட்டாள். அவ்வளவுதான். அதைக் கேட்ட மாதவியம்மாவுக்கு வெறியே வந்து விட்டது. "என்னடி சொன்னே? எலியைப் போல இருந்துக்கிட்டு மலையைப் போல நியாயம் பேசுறியா?" என்று கோபத்துடன் கூறிய அவள் பிரபாவின் இரண்டு கன்னங்களையும் பலமாகக் கிள்ளினாள். "இனிமேல் நீ அந்தக் குடிசைப் பக்கம் போறது தெரிஞ்சதுன்னா, அவ்வளவுதான்... உன்னைச் சாணித் தண்ணியிலதான் குளிக்க வைப்பேன்." என்றாள் பிரபாவைப் பார்த்து கோபத்துடன்.

கோவிந்தமேனனும் அன்று பிரபாவைப் பார்த்து பயங்கரமாகத் திட்டினார். அன்று முழுவதும் பிரபா அழுது கொண்டேயிருந்தாள். நான்கு நாட்கள் கடந்தோடின. காளியின் காய்ச்சல் மேலும் அதிகமாகி விட்டிருக்கிறது என்ற செய்தி அவளுக்கு வந்தது. தன் தோழியின் நிலையை மனதில் நினைத்து, பிரபா தனியே அமர்ந்து வாய்விட்டு அழுதாள்.

சேவல் கூவி முடித்திருந்த நேரம். வானத்தில் நிலவு இப்போதும் இருந்தது. வயலையொட்டி, மரங்களைத் தாண்டி ஒரு சிறுமி மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் காளியின் குடிசையை நோக்கி நடந்தாள்.

காளி கண்களைத் திறந்தபோது, எதிரில் பிரபா நின்றிருந்தாள். ஆனால், அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்சிரிப்பு இல்லாமல் இருந்தது.

"காளி, இதை வாங்கிக்கோ."

அவள் காளியின் கையில் ஒரு சிறு தாள் பொட்டலத்தைத் தந்தாள்.

காளி அதைத் திறந்து பார்ப்பதற்கு முன்பே "அப்போ பிறகு பார்ப்போம். நான் இங்கே வந்ததை யார்கிட்டயும் சொல்லாதே" என்று சொல்லியவாறு பிரபா வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.

காளி அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள். ஒரு அணாவாகவும், காலணாவாகவும் இருந்த காசுகளை எண்ணிப் பார்த்தாள். மொத்தத்தில் பதின்மூன்று அணாக்களும் ஐந்து பைசாவும் அந்தப் பொட்டலத்தில் இருந்தது.

பிரபாவின் ஆறு மாத சம்பாத்தியம் அது. காளிக்காக அவள் நேற்று இரவு தன்னுடைய உண்டியலை உடைத்தாள்.

பனிப்படலம் மூடியிருக்கும் வயல் வழியாக அவள் வேகமாக நடந்தாள். வீட்டை அடைந்ததும், யாருக்கும் தெரியாமல் படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள். அதற்கு மறுநாள், தலைவலியுடன் பிரபா பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வந்தாள்.

கோவிந்தமேனன் அவள் நெற்றியைத் தொட்டு பார்த்தார். படுக்கையில் போய் படுக்கும்படி அவர் சொன்னார். அன்று இரவு அவளால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு "பரவாயில்ல..." என்று சொன்னார்.

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் பிரபாவின் உடல் நிலை சரிப்பட்டு வரவில்லை. காய்ச்சல் அதற்கு மேல் போகாமலும் அதற்குக் கீழே இறங்காமலும் அப்படியே இருந்தது. கோவிந்த மேனன் வேறொரு டாக்டரைத் தேடிப் போனார்.

அதற்கு மேல் ஒரு வாரம் ஓடியது. பிரபாவின் உடல்நிலையில் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. அவளைப் பரிசோதிப்பதற்காக அவளின் தந்தை ஒரு நாட்டு வைத்தியரை அழைத்து வந்தார்.

இந்த நாட்களில் பிரபாவின் புறத் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் உண்டாகிவிட்டிருந்தன. அவளின் தடிமனான தோற்றம் மறைந்து மிகவும் மெலிந்து போய் காணப்பட்டாள். முகத்தில் இருந்த ஒளி முழுமையாக இல்லாமற் போனது. வெளிறிப் போன தோற்றத்துடன் அவள் இருந்தாள். கூந்தலில் இருந்த நீல வண்ணம் மறைந்து போய் செம்பட்டை விழுந்திருந்தது. உதடுகளில் இருந்த துடிப்பு முழுமையாக மறைந்து போய் விட்டிருந்தது. ஒரு வகையான நீல நிறம் அவள் உடலெங்கும் பரவியிருந்தது.

அவளின் தலைமுடி படுக்கையில் விரிந்து கிடந்தது. அதற்கு நடுவில் அவளின் உடல் ஒரு பொன் வாளைப் போல பிரகாசமாகத் தெரிந்தது.

கட்டிலுக்குப் பக்கத்திலிருக்கும் ஜன்னல் வழியாக பரந்து கிடக்கும் வயலைப் பார்த்தவாறு அவள் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தாள். கதிர் முற்றிக் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் நெல்லையும், வயலில் இங்குமங்குமாய் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும் கொக்குகளையும் பார்க்கும்போது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வயலில் இன்னொரு கரையில் இருக்கும் அவள் பள்ளிக்கூடம் இங்கிருந்து பார்க்கும்போது நன்றாகத் தெரியும். சாயங்காலம் நான்கு மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு விளையாடி சிரித்துக் கொண்டே நடந்து போகும் மாணவர்களும், மாணவிகளும் தூரத்தில் அவள் கண்களில் தெரிவார்கள். அவர்களையே வைத்தகண் எடுக்காது பார்த்தவாறு அவள் கட்டிலில் படுத்திருப்பாள். இனிமையான பள்ளிக்கூட நினைவுகள் அவள் மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருக்கும்.


ஒருநாள் தன் தாய் அருகில் இல்லாத நேரம் பார்த்து அவள் தன் தந்தையின் முகத்தையே பார்த்தாள். அவள் என்னவோ சொல்ல விருப்பப்படுவதைப் போல் இருந்தது.

"பிரபா, உனக்கு என்ன வேணும்?"- தன் மகளின் நெற்றியைத் தடவியவாறு கோவிந்தமேனன் கேட்டார்.

"அப்பா, எனக்கு காளியைப் பார்க்கணும் போல இருக்கு. அவளை நான் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆயிடுச்சு."

அதைக் கேட்டு என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தார் கோவிந்தமேனன். ஒரு புலைய ஜாதியைச் சேர்ந்த பெண் தன்னுடைய வீட்டிற்குள் வருவதா என்று அவர் யோசிக்கலானார்.

கடைசியில் வெற்றி பெற்றதென்னவோ மகள் பாசம்தான். கோவிந்தமேனன் வேலைக்காரனை அழைத்துச் சொன்னார்: "நீ உடனடியா பிரபா படிக்குற பள்ளிக்கூடத்துக்குப் போ. அங்கே கண்ணன்குட்டியோட மகள் காளி இருப்பா. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் இங்கே அவளை வரச் சொல்லிட்டு வா."

அன்று மாலை நேரத்தில் காளி வந்து அந்த வீட்டிற்கு வெளியே நின்றாள். அருகில் யாரும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும் மாதவியம்மா பசுவிடம் பால் கறப்பதற்காக தொழுவம் இருக்கும் பக்கம் வந்தாள்.

காளி ஒருவித பதைபதைப்பு மனதில் தோன்ற அவளைப் பார்த்து கேட்டாள்: "பிரபாவோட உடம்பு இப்போ எப்படி இருக்கு?"

"பிரபாவா?"- மாதவியம்மா காளியை எரித்துவிடுவதைப் போல பார்த்தாள். தொடர்ந்து அவள் சொன்னாள்: "என்னடி சொன்ன? பிரபாவா? இனிமேல் அந்தமாதிரி பேர் சொல்லி கூப்பிட்டே அவ்வளவுதான். நீ ஒரு தாழ்ந்த ஜாதி பொண்ணுதானடி? இத்தினியூண்டு இருந்துக்கிட்டு நீ என்ன திமிர்தனமா பேசற? உடனே இந்த இடத்தை விட்டு போறியா இல்லியா?"

இப்படி சில கடும் சொற்கள் தன் மீது வந்து விழும் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத காளி மனக்கவலையுடன் அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருக்காமல், அந்த நிமிடத்திலேயே அந்த இடத்தை விட்டு தன் குடிசையை நோக்கி நடந்தாள்.

அன்று சாயங்காலம் காளியைப் பார்க்க முடியவில்லையே என்றெண்ணி பிரபா மனதிற்குள் மிகவும் கவலைப்பட்டாள். அடுத்த நாள் காளியைக் கையோடு அழைத்து வரும்படி வேலைக்காரனை அனுப்பி வைத்தார் கோவிந்தமேனன்.

காளி வேலைக்காரனுடன் வந்து வாசலில் நின்றிருந்தாள். சலவைக்கல் பதிக்கப்பட்ட அந்த வீட்டிற்குள் நுழைவதற்கான மன தைரியம் அவளுக்கு இல்லை.

வேலைக்காரன் அவளின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

அவள் வீட்டிற்குள் நுழைந்து நான்கு பக்கங்களிலும் கண்களால் பேந்தப் பேந்த விழித்தவாறு பார்த்தாள்.

கோவிந்தமேனன் அவளை உள்ளேயிருந்தவாறு அழைத்தார்.

சமையலறையின் ஜன்னல் வழியாக நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்த மாதவியம்மா தனக்குள் முணுமுணுத்தாள். "காய்ச்சல் வந்து கண்டபடி உளறிக்கிட்டு இருக்குற ஒரு சின்னப் பொண்ணு சொல்றான்றதுக்காக இந்த மனுசன் என்ன காரியமெல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஒரு தாழ்ந்த ஜாதிப் பொண்ணை வீட்டுக்குள்ள வர வைக்குறதா? என்ன இது ஒரே பைத்தியக்காரத்தனமா இருக்கு."

4

ந்த இரண்டு இளம் தோழிகளுக்கிடையே உண்டான சந்திப்பு மனதைத் தொடக்கூடிய ஒன்றாக இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபா முதல் தடவையாக சிறிது சிரித்தாள். அவள் காளிக்கு நேராக தன் கையை நீட்டினாள்.

ஆனால், காளியிடம் குடிகொண்டிருந்த பயமும், பதைபதைப்பும் இன்னும் அவளை விட்டு போகாமலே இருந்தன. அவள் ஒருவித கலக்கத்துடன் தன்னைச் சுற்றிப் பார்த்தாள்.

பிரபா அவளின் கையைப் பற்றினாள். மெதுவாக அவளின் கையைத் தொட்டு அவளை படுக்கைமேல் அமரும்படி சொன்னாள். காளி அவள் சொன்னபடி நடக்கவில்லை. மாறாக அவள் சொன்னாள்: "வேண்டாம்... உங்க அம்மா பார்த்தா..."

"அம்மா இங்கே வரமாட்டாங்க. உட்காரு."

கோவிந்தமேனன் அந்தத் தோழிகளைத் தனியாக இருக்கும்படி செய்துவிட்டு வெளியே போனார். பிரபா காளியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கேட்டாள்: "காளி... நீ என்னை ஒரேயடியா மறந்துட்ட இல்ல?"

அதைச் சொல்லும்போது பிரபாவின் கண்கள் குளமாகி விட்டன. காளிக்கும் அழுகை வரும்போல் இருந்தது. அவள் சொன்னாள்: "பிரபா, நான் உங்களை எப்பவும் நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன். நான் நேற்று சாயங்காலம் இங்கே வந்தேன். உங்க அம்மா என்னை வாய்க்கு வந்தபடி திட்டிட்டாங்க."

இரண்டு நிமிடங்களில் அவர்கள் இருவரும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டார்கள். காளி நகைச்சுவையாக பல விஷயங்களைச் சொல்ல, அதைக் கேட்டு பிரபா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்களையும், ஊருக்குள் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நேரம் போவதே தெரியாமல் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். வகுப்பில் பாடமெடுப்பதற்காக புதிதாக வந்திருக்கும் ஒரு சாய்வான பார்வையைக் கொண்ட ஆசிரியை எப்படி பாடம் சொல்லித் தருவாள் என்பதை காளி நடித்துக் காட்டியதைப் பார்த்த பிரபா அடக்க முடியாமல் சிரித்தாள். காளி சொன்னாள்: "பொம்பளைப் பசங்களுக்கு தையல் பாடம் கத்துத் தர்றதுக்கு சினேகம்னு ஒரு புது டீச்சர் வந்திருக்காங்க. அந்த டீச்சருக்கு எங்க மேல எவ்வளவு பிரியம் தெரியுமா?"

சினேகம் டீச்சரின் வயது என்ன? அவள் என்ன நிறம் அவள் தடியாக இருப்பாளா இல்லாவிட்டால் ஒல்லியாக இருப்பாளா, எந்த மாதிரியான புடவையை அவள் கட்டியிருப்பாள் போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் பிரபா.

காளி எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினாள். சினேகம் டீச்சர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வரும்போது ஒவ்வொரு வண்ணத்தில் புடவை கட்டிக் கொண்டு வருவாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு பிரபா காளியைப் பார்த்து கேட்டாள்: "டீச்சர் பசங்களுக்கு புடவை கட்டுறதையும் சொல்லித் தர்றாங்களோ என்னவோ?"

வகுப்பில் அச்சுதன் தலையில் கல் விழுந்தது, நாராயணன் மாஸ்டரின் கண் புருவத்துக்கு அருகில் ஒரு பரு வந்தது- இவையெல்லாம் பொய் சொன்னதற்காக வந்திருக்கும் என்று சொன்னாள் பிரபா. கமலாவும் ஜானுவும் சண்டை போட்டுக் கொண்டது, சாரதாவின் அக்கா திருமணம், வகுப்பிற்குள் ஒரு பைத்தியம் பிடித்த நாய் நுழைந்தது, கேளப்பன் அதை அடித்துக் கொன்றது...

இப்படிப் பல வகைப்பட்ட விஷயங்களையும் பேசி முடித்த பிறகு காளி வகுப்பில் சொல்லித்தந்த புதிய கவிதையை பிரபாவிடம் சொன்னாள்.

பிரபா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்: "கடவுளே, நான் இதையெல்லாம் எப்போ படிக்கிறது?"

காளி பிரபாவைத் தேற்றும் விதத்தில் சொன்னாள்: "ரெண்டு நாட்கள்ல நிச்சயமா உங்க உடல் நிலை தேறிடும்."


அப்போது பிரபா சொன்னாள்: "என் உடல்நிலை சரியான பிறகு எனக்கு ஒரு ஆர்மோனியம் வாங்கித் தர்றதா அப்பா சொல்லியிருக்காரு. ஆமா... சினேகம் டீச்சருக்கு ஆர்மோனியம் வாசிக்கத் தெரியுமா?"

"அது எனக்குத் தெரியாது. ஆனா, அவங்களுக்கு நல்லா பாடத்தெரியும்."

பிரபா காளியின் தொடை மீது தன்னுடைய கை விரல்களால் ஆர்மோனியம் வாசிப்பதைப் போல் சில நிமிடங்கள் நடித்தாள். கோவிந்தமேனன் அறைக்குள் வந்தார். தன் மகளின் முகத்தில் இருந்த பிரகாசத்தைப் பார்த்து, அவர் சந்தோஷப்பட்டார்.

5

பிரபாவிற்கு காய்ச்சல் வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. அவள் மிகவும் தளர்ந்து, வெளிறிப் போய் காணப்பட்டாள்.

அந்த வீடும், சுற்றுப்புறமும் மிகவும் அமைதியாக இருந்தன. அப்படி அமைதியாக இருப்பதைத்தான் அவள் விரும்பினாள். அவள் பக்கத்திலிருக்கும் ஜன்னல் வழியாக பரந்து கிடக்கும் ஆகாயத்தையே நீண்ட நேரம் பார்த்தவாறு படுத்திருப்பாள். அந்த நீலக் கடலின் மீன்களைப் போல அவளின் கண்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பருந்தும், அதற்கும் உயரத்தில் அப்பருந்தை மூட முயற்சித்துக் கொண்டிருக்கும் மேகக்கூட்டமும் அவளின் தனிமையைச் சில வேளைகளில் அபகரிக்க முயற்சி செய்யும். சாயங்கால நேரத்தில், ஆகாயம் சிவப்பு நிறத்தில் காணப்படுவதையும் அந்த மேற்கு திசையில் இருக்கும் மலைக்குப் பின்னால் ஒரு பெரிய பொன் நாணயத்தைப் போல சூரியன் கீழே இறங்கி சிறிது சிறிதாக மறைவதையும் கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்தவாறு அவள் படுக்கையில் படுத்திருப்பாள். திடீரென்று மாலை நேரத்து மேகக் கூட்டம் பொன்னால் ஆன ரதங்களாக மாறி வானத்தையே அழகு மயமாக்கிக் கொண்டிருக்கும். அவள் அந்த உயரத்தை நோக்கி சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே போவாள். அதைத் தொடர்ந்து அந்த நெல் வயல்களும், அவற்றுக்கு மத்தியில் இருக்கும் அவள் வீடும், அவள் தந்தையும், காளியும், பூமியும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு தூரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். தான் பூமியை விட்டு விலகி ஏதோ ஒரு வேற்று உலகத்தில் இருப்பதாக அப்போது அவளுக்குத் தெரியவரும். இனம் தெரியாத ஒருவகை பயமும் தனிமையுணர்வும் அவளை வந்து ஆக்கிரமிக்கத் தொடங்கும். ஒருவகை மறதி, தொடர்ந்து வரும் உறக்கம்- இரண்டும் சேர்ந்து வந்து அவளை இறுக அணைத்துக் கொள்ளும். சிரிப்பதற்கோ, அழுவதற்கோ பேசுவதற்கோ முடியாமல் ஒரு வகையான மரத்துப் போன உணர்வுடன் அவள் இருட்டையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

தன் மகளின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கும் கோவிந்தமேனன் பதைபதைப்பு மேலோங்க அவளை மெதுவாக குலுக்கி அழைப்பார். அப்போது அதே உணர்ச்சிப் பிரவாகத்துடன் அவள் தன் தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்ப்பாள்.

அன்று காலையில் பிரபா தன் தந்தையிடம் சொன்னாள்: "என் நகைகளையெல்லாம் எனக்குக் கொண்டு வந்து போடுங்க."

கோவிந்தமேனன் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த அவளின் நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்தார். சிறிதுநேரம் சென்றதும் அவள் சொன்னாள்: "அப்பா என்னோட ஆடைகளையெல்லாம் இங்கே கொண்டு வாங்க."

பிரபாவின் குரலில் எப்போதுமில்லாத அளவிற்கு ஒரு கட்டளைத்தன்மை இருந்தது. அவள் முகத்தில் ஒரு வித கம்பீரம் அப்போது தெரிந்தது. அவள் ஆடைகள் எல்லாவற்றையும் மேஜை மேல் கொண்டு வந்து வைத்த கோவிந்தமேனன் அவளைப் பார்த்துக் கேட்டார்: "மகளே, எதுக்கு இந்த ஆடைகளை இங்கே கொண்டு வரச் சொன்னே?"

அதற்கு பிரபா எந்த பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் சென்றதும் அவள் சொன்னாள்: "அப்பா, எனக்கு பசிக்குது..."

"கஞ்சி கொண்டு வரட்டுமா?"

"ம்..."

மாதவியம்மா கஞ்சி கொண்டு வந்தாள். அவள் படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து வெள்ளை பீங்கான் பாத்திரத்தில் இருந்த கஞ்சி முழுவதையும் குடித்தாள்.

"அம்மா நார்த்தங்காய் இல்லியா?"

மாதவியம்மா நார்த்தங்காய் ஊறுகாயைக் கொண்டு வந்து அவளின் வாயில் தடவினாள்.

"அப்பா, என்னை விட்டு நீங்க போகாதீங்க."

"மகளே, நான் வேற எங்கேயும் போகல."

பன்னிரண்டு மணிக்கு ஒரு டாக்டர் வந்து அவளைப் பார்த்தார். காய்ச்சல் இப்போது பரவாயில்லை என்று கோவிந்தமேனன் மன மகிழச்சியுடன் டாக்டரைப் பார்த்து சொன்னார். டாக்டரும் முன்பிருந்ததைவிட இப்போது பிரபாவின் நிலை பரவாயில்லை என்று சொன்னார். மாதவியம்மா அவ்வப்போது மிகுந்த பிரியத்துடன் அவளின் அருகில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.

பிற்பகல் மூன்று மணி ஆனது. பிரபா மெதுவான குரலில் சொன்னாள்: "காளியை எனக்கு பார்க்கணும் போல இருக்கு."

அடுத்த நிமிடம் காளியை அழைத்து வரும் படி ஆளை அனுப்பினார் கோவிந்தமேனன். உடல் முழுவதும் நகைகள் அணிந்த கோலத்துடன் மெத்தையில் படுத்திருந்த பிரபாவைப் பார்த்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டாள் காளி. எப்போதுமிருக்கும் புன்சிரிப்புடன் பிரபா தன் தோழியை அப்போது வரவேற்கவில்லை.

"காளி, இங்கே வந்து உட்காரு."- பிரபா அவளைத் தன் படுக்கையில் வந்து அமரும்படி அழைத்தாள்.

"காளி, இனிமேல் நீ கண்ணாடி வளையல்களை அணியக் கூடாது. இந்தா, என்னோட தங்க வளையல்கள்."

பிரபா தன்னுடைய கைகளில் இருந்த தங்க வளையல்களைக் கழற்றி காளியின் மெலிந்து போன கைகளில் அவற்றை அணிவித்தாள்.

காளி ஒருவித பயத்துடன் கோவிந்தமேனனின் முகத்தையே பார்த்தாள்.

"நீ அப்பா முகத்தைப் பார்க்க வேண்டாம். இந்த நகைகள் எல்லாமே எனக்குச் சொந்தம். அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாரு"- தன்னுடைய கழுத்தில் இருந்த தங்கத்தால் ஆன மாலையைக் கழற்றி காளியின் கழுத்தில் அணிவித்தவாறு பிரபா சொன்னாள். தொடர்ந்து தன்னுடைய நகைகள் ஒவ்வொன்றையும் கழற்றி அவள் காளிக்கு அணிவித்தாள். காளி, கோவிலில் இருக்கும் சிலையைப் போல நின்றிருந்தாள்.

"காளி, எனக்கு இந்த நகைகள் எதுவும் வேண்டாம். நான்தான் போகப் போகிறேனே. இந்தா... என்னோட ஆடைகள். இதையும் எடுத்துக்கோ."

பிரபா தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் எடுத்தாள். காளியின் கைகளில் அவை முழுவதையும் தந்தாள்.

கோவிந்தமேனன் நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

அடுத்த நிமிடம் பிரபா மேஜையைத் திறந்து புத்தகங்களையும் தன்னுடைய அட்டைப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வரும்படி தந்தையிடம் சொன்னாள்.

அந்த அருமையான வாசனை வந்து கொண்டிருந்த புதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் அவள் காளிக்குப் பரிசாகத் தந்தாள். தொடர்ந்து அவள் அந்த அட்டைப் பெட்டியைக் கையிலெடுத்தாள். அந்தச் சிறுமி தன் வாழ்க்கையில் மிகவும் மதித்த பொருட்கள் அந்தப் பெட்டிக்குள் இருந்தன.


ஒரு புதையலைத் திறந்து பார்ப்பதைப் போல அவள் அந்தப் பழைய 'வினோலியா ஒயிட் ரோஸ்' பெட்டியைத் திறந்து காட்டினாள்.

தலைமுடியைக் கட்ட பயன்படும் பல்வேறு வண்ணங்களிலிருந்த மூன்று நான்கு பட்டு நாடாக்கள், உடைந்த கண்ணாடி வளையல்கள், முனை முறிந்த ஒரு சிறு கத்திரிக்கோல், புதிய வேஷ்டிகளிலும் முண்டுகளிலுமிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட சில தலைவர்மார்களின் படங்கள், ஒன்றிரண்டு வண்ணக் குச்சிகள், எரிந்து முடிந்து ஃப்யுஸ் ஆகிப்போன இரண்டு மின்சார பல்புகள், பாதி எழுதிய ஒரு சிறிய பழைய பாக்கெட் டைரி, ஒரு ஜப்பான் முத்து மாலை, ஒரு சிறிய சென்ட் குப்பி, ஒரு பவுண்டன் பேனா மூடி, சில மயில் இறகுகள், தையல்காரர்களிடமிருந்து சேகரித்த சில வண்ணத் துணித்துண்டுகள், வண்ணத்துப் பூச்சியைப் போல் இருந்த ஒரு கூந்தலில் வைக்கும் பின் - இவ்வளவு சாமான்களும் அந்த அட்டைப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "காளி, இது எல்லாம் இனிமேல் உனக்குத்தான்" என்றாள் பிரபா.

தான் சேகரித்து வைத்திருந்த, தான் பெரிதாக நினைத்த கலைப் பொருட்கள் அடங்கிய அந்தப் பெட்டியைத் தன்னுடைய தோழியிடம் தந்த பிரபா படுக்கையில் படுத்தாள். அவள் காளியின் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். "நான் தந்த நகைகளைவிட, ஆடைகளைவிட விலை மதிப்பு உள்ளதாயிற்றே இது?" என்ற அர்த்தம் அந்தப் பார்வையில் பொதிந்திருந்தது.

ஆனால், காளியின் முகம் இப்போதும் மரத்துப் போனது மாதிரியே இருந்தது. அந்த அறை முழுவதும் வெப்பம் நிறைந்த புகை சூழ்ந்திருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். எதையும் நினைத்துப் பார்ப்பதற்கோ, அங்கு நடந்து கொண்டிருப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கோ அவளால் முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே அசையாமல் சிலையென தான் நின்றிருந்தோம் என்பது அவளுக்கே தெரியாது. அவள் ஒரு பெரிய அலறல் சத்தத்தைக் கேட்டாள். ஏராளமான பேர் அறையை விட்டு நகர்ந்து கொண்டிருப்பது நிழல்கள் மாதிரி அவள் கண்களில் தெரிந்தது. "அய்யோ... என் பிள்ளை என்னை ஏமாத்திட்டாளே."

"கொஞ்சம் தள்ளி நில்லுங்க..."

"காற்று வரட்டும். ஒண்ணும் பயப்பட வேண்டாம். கோவிந்த மேனனைப் பிடிச்சுக்க..."

இப்படி சில வார்த்தைகள் காளியின் காதுகளில் விழுந்தன.

திடீரென்று யாரோ வந்து அவளைப் பிடித்து குலுக்கியவாறு உரத்த குரலில் சொன்னார்கள்: "போடி வெளியே"

அடுத்த நிமிடம் அவள் அதிர்ச்சியடைந்து நின்றாள். இப்போது அவளுக்கு மெதுவாக சுய உணர்வு வந்தது. அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் கனவில் நடக்கும் ஒரு சிறுமியைப் போல அவள் நடந்து வெளியே வந்தாள்.

அவள் கண்கள் புகை மூடியதைப் போல் இருந்தன. மூளையில் ஒரு சூறாவளியே வீசிக் கொண்டிருந்தது. அவள் வாசலுக்கு வந்தாள். அழுகைச் சத்தம் கேட்டு அவள் தாய் அருகிலிருந்த நிலத்தில் வேலிக்கருகில் வந்து நின்றிருந்தாள். தன் தாய் தளியாயியைப் பார்த்ததும், காளி தளர்ந்து போய் விட்டாள். வாய் விட்டு உரத்த குரலில் அவள் அழுதாள். மனதில் ஒருவித கலக்கத்துடன் அவள் தன் தாயின் அருகில் போக நகர்ந்தாள். ஆனால், ஒரு அடி முன்னால் வைப்பதற்கு முன்பே அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

கோவிந்தமேனன் கலங்கிய கண்களுடன் அவளைப் பிடித்துத் தூக்கி நிற்க வைத்து கீழே விழுந்த பொருட்களை எடுத்து அவளின் கையில் தந்தார். பிறகு அவளைக் கைகளால் தூக்கிக் கொண்டு வாசல் வரை கொண்டு போனார். என்னவோ மனதில் நினைத்தவாறு அவர் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவளைக் கீழே இறக்கிவிட்டு அன்பு மேலோங்க அவளின் தோளை இலேசாகத் தட்டியவாறு அவர் சொன்னார்: "அழாதே, போ..."

6

காளி இன்று ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியை. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற அந்தச் சம்பவத்தை இப்போது கூட அவள் மனதில் நினைத்துப் பார்ப்பதுண்டு. பரந்து கிடக்கும் அந்த நிலத்தில் இருக்கும் பிரபாவின் கல்லறைக்கு நீர் வழியும் கண்களுடன் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு பூங்கொத்துடன் அவள் போகாமல் இருப்பதில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.