Logo

கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8190
khalil-gibranin-100-kutti-kadhaigal

சுராவின் முன்னுரை

‘கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள்’ (Khalil Gibran’s 100 short stories) என்ற இந்நூலை மிகவும் ரசித்து, முழுமையான ஈடுபாட்டுடன் நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த மிகச் சிறந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ஜிப்ரான்.

அவருடைய ஒவ்வொரு நூலையும் படித்து நான் மெய் சிலிர்த்துப் போயிருக்கிறேன், வியந்திருக்கிறேன், என்னை நானே மறந்திருக்கிறேன், கவித்துவ உணர்வில் தேனுண்ட வண்டாக மாறி மயக்கத்தில் இருந்திருக்கிறேன், ஆன்மீக வலையில் சிக்கி மகிழ்ந்திருக்கிறேன். அவரின் எழுத்து ஒவ்வொன்றுமே வைரத்தையும் தாண்டி விலை மதிப்புள்ளவை என்பதே என் கருத்து.

இந்த நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்

லெபனானிலுள்ள பெஷாராவில் பிறப்பு. பிறந்த ஆண்டு 1883. முழுமையான பெயர் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான். தந்தையின் பெயர் கலீல் ஜிப்ரான். தாயின் பெயர் கமீலா. பிறந்த நகரத்தில் ஆரம்ப கல்வி. பன்னிரெண்டு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவின் பாஸ்டனில் குடியேற்றம். இரண்டரை வருடங்கள் அங்குள்ள பொது பள்ளிக் கூடத்திலும் ஒரு வருடம் இரவு பாடசாலையிலும் கல்வி கற்ற பிறகு, மீண்டும் லெபனானுக்குத் திரும்பி வருகை. மத்ரஸத் - அல் - ஹிக்மத் என்ற கல்லூரியில் கல்வி தொடர்ந்தது. இலக்கியம், தத்துவம், மத வரலாறு - இவைதான் அங்கு கற்றவை. 1902 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவிற்கு. 1908 இல் பாரிஸில் கவின் கலைக் கழகத்தில் பிரபல சிற்பி ஆக்ஸ்த்ரோடின் கீழில் பயிற்சி. பாரிஸிலிருந்து மீண்டும் நியூயார்க்கிற்குப் பயணம். ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தது அரபு மொழியில்தான். அரபு மொழியிலும் ஆங்கிலத்திலுமாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 1923 ஆம் ஆண்டு ‘தீர்க்கதரிசி’ வெளியே வந்தது. 1931 ஏப்ரல் 10 ஆம் நாள் நியூயார்க்கில் மரணத்தைத் தழுவினார். முக்கிய நூல்கள் : தீர்க்கதரிசி, முறிந்த சிறகுகள், பைத்தியக்காரன், அலைந்து திரிபவன், மணலும் நுரையும், கண்ணீரும் புன்னகையும்.


ஆடைகள்

ரு நாள் அழகும் அசிங்கமும் கடற்கரையில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டன. அவை தங்களுக்குள் கூறிக்கொண்டன: ‘நாம கடல்ல குளிப்போம்.’

அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து வைத்துவிட்டு அவை இரண்டும் கடலில் இறங்கின. நீந்த ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு அசிங்கம் கரையில் ஏறியது. அழகின் ஆடைகளை எடுத்து அணிந்து தான் வந்த பாதையில் அது நடந்து சென்றது.

அழகும் குளித்து முடித்து கரைக்கு வந்தது. அதன் ஆடைகள் காணாமற் போயிருந்தன. அதற்கு மிகவும் வெட்கமாகி விட்டது. அசிங்கத்தின் ஆடைகளை எடுத்து அணிந்து அதுவும் தான் வந்த வழியே நடந்து சென்றது.

இப்போது பெண்களும் ஆண்களும் அழகையும் அசிங்கத்தையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும், அழகின் முகத்தைப் பார்க்கும் சிலராவது அதை அடையாளம் கண்டு கொள்ளத்தான் செய்கிறார்கள். அணிந்திருக்கும் ஆடைகள் எதுவாக இருந்தாலும், அசிங்கத்தின் முகத்தை வைத்து அதை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆடைகளால் அவர்களின் பார்வையிலிருந்து அசிங்கத்தை மறைக்க முடியவில்லை.

கழுகும் வானம்பாடியும்

பாறையில் வானம்பாடியும், கழுகும் சந்தித்துக் கொண்டன.

‘நீங்கள் நல்லா இருக்கணும்’ என்று கழுகைப் பார்த்து வானம்பாடி வாழ்த்தியது. ஒருவித வெட்கத்துடன் கழுகு வானம்பாடியைப பார்த்தது. பிறகு அது வானம்பாடியைப் பார்த்து சொன்னது : ‘நீயும் நல்லா இருக்கணும்’.

வானம்பாடி தொடர்ந்து சொன்னது: ‘உங்களுடைய எல்லா விஷயங்களும் நல்லா போய்க்கொண்டு இருக்குன்னு நான் நினைக்கிறேன்.

அதற்கு கழுகு சொன்னது : ‘நீ சொன்னது உண்மைதான். எல்லாம் நல்லா நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் பறவைகளின் அரசர்கள். உனக்கு தெரியுமா?  நாங்க வாய் திறக்குறதுக்கு முன்னாடியே நீ எங்க கூட பேச கூடாது!

‘நாம எல்லாம் ஒரே குடும்பம்னு நான் நினைச்சேன்’- வானம்பாடி சொன்னது.

அதற்கு கழுகு கேட்டது : ‘நீயும் நானும் ஒரே குடும்பம்னு யார் சொன்னது.’

‘ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துறேன். நீங்க பறக்குற உயரத்துக்கு என்னாலும் பறக்க முடியும். பாட்டு பாடவும் பூமியில் இருக்கும் உயிர்களை மகிழ்ச்சிப் படுத்தவும் என்னால முடியும். ஆனா, உங்களால யாருக்கும் சந்தோஷமோ, ஆனந்தமோ தர முடியாது.’ - வானம்பாடி சொன்னது.

‘சந்தோஷமும் ஆனந்தமும்! ஆணவம் பிடித்த ஒரு சிறு பறவை! ஒரே கொத்துல உன்னை என்னால கொல்ல முடியும். என் கால் பாதம் அளவுதான் இருக்கே நீயே’ - கழுகு கேலியுடன் சொன்னது.

அதைக் கேட்டதும் வானம்பாடி பறந்து மேலே சென்று கழுகின் முதுகில் போய் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய சிறகைக் கொத்த ஆரம்பித்தது. அதை கழுகால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அது படு வேகமாக உயர நோக்கி பறந்து, தன் மீது அமர்ந்திருக்கும் பறவையைக் கீழே விழச் செய்ய முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சியில் கழுகுக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியில், அதே மலை மீது இருந்த அதே பாறையை நோக்கி திரும்பவும் கழுகு வந்தது. முன்பு எப்போதும் இருந்ததை விட, மிகவும் மன பாதிப்பிற்கு ஆளாகிவிட்டிருந்தது அது. அந்த நிமிடத்தில் விதியை அது பலமாக நொந்து கொண்டது. அப்போதும் அந்த வானம்பாடி கழுகின் முதுகின் மீதுதான் இருந்தது.

அந்த நேரத்தில் சிறிய ஒரு ஆமை அந்த வழியாக வந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து சிரித்து சிரித்து அது தலை கீழாக கவிழ்ந்து விட்டது. கழுகு ஆமையை கோபத்துடன் பார்த்தது. பிறகு அது சொன்னது:

‘ஊர்ந்து ஊர்ந்து நடந்து போற பிறவி! நீ எப்போ பார்த்தாலும் மண்ணுல ஒட்டிக்கொண்டே இருக்கக்கூடிய உயிர்! நீ யாரைப் பார்த்து கேலி பண்ணுற?’

ஆமை அதற்கு பதில் சொன்னது :

‘நான் இப்போ என்ன பார்த்துக் கொண்டு இருக்கேன்! நீ ஒரு குதிரையா மாறிட்டியா என்ன? ஒரு சின்ன பறவை உன் முதுகுல ஏறி சவாரி செய்துக் கொண்டு இருக்கு. அந்த சின்ன பறவை ஒரு நல்ல பறவை. அது மட்டும் உண்மை.’

அதைக் கேட்டு கழுகிற்கு கோபம் வந்துவிட்டது.

கோபத்தில் அது உரத்த குரலில் கத்தியது :

‘நீ உன் விஷயத்தைப் பாரு. இது ஒரு குடும்ப விஷயம். என் சகோதரி வானம்பாடியும் நானும் சம்பந்தப்பட்ட எங்க குடும்ப விஷயம் இது.’

நான் எல்லா கவிஞர்களையும் வெறுக்கிறேன்

விஞர் காதல் கவிதை எழுதினார். அருமையான காதல் கவிதை. அதன் பல பிரதிகளை தன்னுடைய நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும், ஆண்கள் பெண்கள் வித்தியாசம் பார்க்காமல் அவர் அனுப்பி வைத்தார். மலைகளைத் தாண்டி வசிக்கும் இளம் பெண்ணுக்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்திருந்தார்.

ஒன்றிரண்டு நாட்கள் கடந்திருந்தன. அந்த இளம் பெண்ணின் கடிதத்துடன் ஒரு ஆள் வந்தான். அவள் தன் கடிதத்தில் கூறியிருந்தாள் : ‘நீங்க எனக்கு எழுதியிருந்த காதல் கவிதை என்னை ரொம்பவும் கவர்ந்திடுச்சு. வாங்க இப்பவே வாங்க. என் பெற்றோர்களை வந்து பாருங்க. திருமண நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை நாம செய்வோம்.’

அதற்கு கவிஞர் பதில் எழுதினார்:

‘சினேகிதியே, ஒரு கவிஞன் தன் இதயத்திலிருந்து எழுதிய ஒரு காதல் கவிதை அது. அவ்வளவுதான். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் எழுதக் கூடிய காதல் கவிதை.’

அந்த இளம் பெண் மீண்டும் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதில் அவள் எழுதினாள்:

‘அப்படியா நீ கபட நாடகம் ஆடுகிறாய்! வார்த்தைகள் மூலம் பொய் கூறக் கூடிய மனிதன் நீ. இந்த நிமிடத்திலிருந்து நான் மரணமடையும் நிமிடம் வரை எல்லா கவிஞர்களையும் நான் வெறுக்கிறேன். அதற்குக் காரணம் நீ. நீ மட்டும்.

முதலையும் கழுதைப் புலியும்

நீல நதியின் கரையில் ஒரு மாலை நேரத்தில் முதலையும் கழுதைப் புலியும் சந்தித்துக் கொண்டார்கள். பயணத்தை நிறுத்தி விட்டு, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக் கொண்டார்கள்.

கழுதைப் புலி விசாரித்தது : ‘உங்க வாழ்க்கை எப்படி இருக்கு?’

‘ரொம்பவும் மோசமா இருக்கு, நண்பா. வேதனைகளாலும், கவலைகளாலும் நான் பல நேரங்கள்ல என்னையே மறந்து அழுதிடுறேன். அந்த மாதிரி நேரங்கள்ல மற்ற உயிர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? ‘முதலைக் கண்ணீர் விடுது... முதலைக் கண்ணீர் விடுது’ன்னு சொல்வாங்க. சொல்ல முடியாத அளவுக்கு அந்த வார்த்தைகள் என்னைக் காயப்படுத்துது. வேதனைப்பட வைக்குது’ முதலை சொன்னது.

‘உங்க வேதனைகளையும் கவலைகளையும் நீங்க சொல்றீங்க. என்னைப் பற்றி ஒரு நிமிடம் நினைச்சுப் பாருங்க. இந்த உலகத்தின் அழகை கண்ணை இமைக்காமல் நான் பார்க்கிறேன். அதன் அற்புதத்தையும், வினோதங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அப்போ உண்டாகுற சந்தோஷத்துல என்னையே மறந்து நான் சிரிச்சிடுறேன். பகல் சிரிக்கிற மாதிரிதான். ஆனாகாட்டு வாழ் மனிதர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘இது வெறும் கழுதைப் புலி சிரிப்பு. அவ்வளவுதான்’னு அலட்சியமா சொல்லுவாங்க.

கழுதைப் புலி தன் வேதனையைச் சொன்னது.


திருவிழாவிற்கு வந்த இளம் பெண்

கிராமப் பகுதியிலிருந்து அழகான ஒரு இளம் பெண் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளுடைய முகத்தில் ரோஜா மலரும் லில்லி மலரும் இருந்தன. தலைமுடியில் சூரியனின் அஸ்தமனமும் உதடுகளில் அதிகாலைப் பொழுதின் புன்சிரிப்பும்.

இதற்கு முன்பு அறிமுகமில்லாதவள் என்றாலும், அந்த இளம்பெண் கண்ணில் பட்டவுடன் இளைஞர்கள் அவளிடம் ஓடி வந்தார்கள். அவளைச் சுற்றி அவர்கள் வட்டமிட்டு நின்றிருந்தனர். ஒருவன் அவளுடன் சேர்ந்து நடனமாட விரும்பினான். இன்னொருவன் அவளை வாழ்த்தி கேக் வெட்ட விரும்பினான். எல்லோரும் அவளுடைய முகத்தில் முத்தமிட விரும்பினார்கள். என்ன இருந்தாலும் அது ஒரு திருவிழாதானே?

இளம்பெண் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். எல்லா இளைஞர்களும் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். அவர்களை அவள் வாய்க்கு வந்தபடி திட்டினாள். ஒன்றிரண்டு இளைஞர்களை அவள் கன்னத்தில் அடிக்கக் கூட செய்தாள். பிறகு அவள் அங்கிருந்து ஓடி விட்டாள். வீட்டிற்குச் செல்லும் வழியில் அவள் தன் மனதிற்குள் கூறினாள்: ‘நான் வெறுத்துப் போயிட்டேன். அந்த இளைஞர்களுக்கு எப்படி நடந்துக்கணும்னே தெரியல்ல. அவர்கள் ஏன் அவ்வளவு கீழ்த்தரமா வளர்க்கப்பட்டிருக்காங்க! மன்னிக்கிறதுக்கு ஒரு அளவு இல்லையா?’

அதற்குப் பிறகு ஒரு வருடம் நடந்தோடியது. ஒவ்வொரு நாளும் அவள் திருவிழாவைப் பற்றியும் அந்த இளைஞர்களைப் பற்றியும் நினைத்துப் பார்ப்பாள். அவள் மீண்டும் திருவிழாவிற்கு வந்தாள். முகத்தில் ரோஜா மலரும் லில்லி மலரும் இருந்தன. கூந்தலில் சூரிய அஸ்தமனமும் உதடுகளில் அதிகாலைப் பொழுதின் புன்சிரிப்புமாக அவள் இருந்தாள்.

அவளைப் பார்த்த இளைஞர்கள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள். அன்று முழுவதும் அவளை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. அவள் மட்டும் தனியாக அந்த நாளைச் செலவழித்தாள்.

மாலை நேரத்தில் வீட்டிற்குச் செல்லும் பாதையில் நடந்து சென்ற போது அவள் தேம்பித் தேம்பித் தேம்பி அழுதாள். ‘நான் வெறுத்துப் போயிட்டேன். எப்படி நடந்துக்கணும்னே கொஞ்சம் கூட அந்த இளைஞர்களுக்கு தெரியவே இல்ல. அவர்கள் எவ்வளவு மோசமா வளர்க்கப்பட்டிருக்காங்க! மன்னிக்கிறதுக்கும் ஒரு அளவு இல்லையா?’- அவள் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்.       

இரண்டு இளவரசிகள்

வாக்கிஸ் நகரத்தில் ஒரு இளவரசன் இருந்தான். அவனை எல்லோரும் விரும்பினார்கள். ஆண்களும் பெண்களும் அடிமைகளும் வயலில் இருக்கும் உயிர்கள் எல்லோரும் அவனைக் காண ஓடி வருவார்கள்.

ஆனால், அவனுடைய மனைவியான இளவரசிக்கு அவன் மீது சிறிது கூட விருப்பமில்லை. அது மட்டுமல்ல. அவள் அவனை வெறுக்கவும் செய்தாள். இந்த விஷயம் ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

ஒரு நாள் அருகிலிருந்த நகரத்தைச் சேர்ந்த இளவரசி ஷவாக்கிஸின் இளவரசியைப் பார்ப்பதற்காக வந்தாள். பேசிப் பேசி அவர்கள் தங்களின் கணவன்மார்கள் விஷயத்திற்கு வந்தார்கள்.

ஷவாக்கீஸ் இளவரசி ஆவேசம் பொங்க சொன்னாள்:

‘திருமணமாகி எத்தனையோ வருடங்கள் ஆன பிறகும் கணவனுடன் சந்தோஷமாக நீங்க வாழ்றதைப் பார்க்குறப்போ எனக்கு பொறாமை தோணுது. என் கணவரை நான் வெறுக்குறேன். அவர் எனக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. என் அளவுக்கு கவலைப்படுற ஒரு பெண் இங்கு வேறு யாரும் இல்லை.’

பார்ப்பதற்காக வந்திருந்த இளவரசி அவளையே கண் இமைக்காமல் பார்த்தாள். பிறகு சொன்னாள்: ‘உன் கணவர் மேல நீ பிரியம் வச்சிருக்கே. அது உண்மை. இன்னும் பயன்படுத்தப்படாத உணர்வுகள் அவர் மீது உனக்கு இருக்கு. பெண்ணின் வாழ்க்கை பூந்தோட்டத்தின் வசந்தம் மாதிரி. என்னையும் உன் கணவரையும் பார்த்து நீ பரிதாபப்படணும். நாங்கள் ஒருத்தரையொருத்தர் சகிச்சிக்கிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்- பொறுமையுடன், அமைதியா. இதை எங்களின் சந்தோஷமா நீயும் மற்றவர்களும் நினைச்சுக்கிறீங்க.

இடி மின்னல்

டுமையான காற்று வீசிய நாளன்று பாதிரியார் தேவாலயத்திற்குள் இருந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சேராத ஒரு பெண் பாதிரியாரின் முன்னால் வந்து நின்று கேட்டாள்: ‘நான் கிறிஸ்துவப் பெண் அல்ல. நரகத்துல இருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா?’

அந்தப் பெண்ணை கூர்ந்து பாதிரியார் பார்த்தார். பிறகு அவர் பதில் சொன்னார்: ‘இல்ல... நிச்சயமா இல்ல. ஞானஸ்தானம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.’

பாதிரியார் சொல்லி முடிந்ததும், தேவாலயத்தின் மீது இடி விழுந்து, தீ பிடித்தது.

நகர மக்கள் ஓடி வந்தார்கள். அவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்கள். ஆனால், பாதிரியார் நெருப்புக்கு இரையாகிவிட்டிருந்தார்.

துறவியும் உயிரினங்களும்

ச்சை மலைகளுக்கு இடையில் துறவி ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். தூய்மையான மனதையும் நிர்மலமான இதயத்தையும் கொண்ட ஒரு துறவி அவர்.

பூமியிலிருக்கும் எல்லா மிருகங்களும் வானத்திலிருக்கும் எல்லா பறவைகளும் ஜோடி ஜோடியாக அவரைத் தேடி வருவார்கள். ஒவ்வொன்றையும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்பார்கள். அவரைச் சுற்றிலும் ஆர்வத்துடன் அவர்கள் குழுமியிருப்பார்கள். மாலை நேரம் வரும் வரை அவர்கள் திரும்பிப் போகாமல் அங்கேயே இருப்பார்கள். இரவு வந்தவுடன் அவர் அவர்களைப் போகும்படி கூறிவிடுவார். போகும்போது அவர்களை ஆசீர்வதித்து, காற்றும் காடும் அவர்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டி அனுப்புவார்.

ஒரு மாலை நேரத்தில் துறவி காதலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு புள்ளிமான் தலையை உயர்த்தி கேட்டது.

‘நீங்க காதலைப் பற்றி பேசுறீங்க. அப்படின்னா உங்க ஜோடி எங்கே?’

‘எனக்கு ஜோடி இல்ல’ - துறவி சொன்னார்.

அதைக் கேட்டதும் மிருகங்களும் பறவைகளும் அதிர்ச்சியடைந்து நின்று விட்டார்கள். அவர்களிடம் ஒரு வித பரபரப்பு வந்து ஒட்டி கொண்டது. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். காதலைப் பற்றியும் உடல் ரீதியாக இணைவது பற்றியும் அவர் எப்படி பேச முடியும்? அவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதே!

வெறுப்புடன், அமைதியாக பறவைகளும் மிருகங்களும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்கள்.

அன்று இரவு துறவி மட்டும் தனியாக இருந்தார். பாறையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு முகத்தை பூமி மீது வைத்தவாறு அவர் தேம்பி தேம்பி அழுதார். கைகளை மார்பில் அடித்துக் கொண்டு ஒலமிட்டார்.


தீர்க்கதரிசியும் சிறுவனும்

ரியா என்ற தீர்க்கதரிசி தன்னுடைய தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபேபது ஒரு சிறுவன் ஓடி வந்து காலை வணக்கம் சொன்னான்.

தீர்க்கதரிசியும் பதிலுக்கு அவனுக்கு காலை வணக்கம் சொன்னார்.

‘இன்றைய நாள் உனக்கு நல்லா இருக்கணும். நீ மட்டும் தனியா வந்தியா என்ன?’ - தீர்க்கதரிசி சிறுவனைப் பார்த்து கேட்டார்.

‘என் ஆயாவை ஏமாற்றி விட்டு ஓடி வர்றதுக்கு எவ்வளவோ நேரமாச்சு! நான் அந்த வேலிக்கு வெளியே நின்று கொண்டிருக்கேன்னு ஆயா நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, நான் இங்கே வந்து நிக்கிறதுதான் உங்களுக்கு தெரியும்ல?’

மகிழ்ச்சியுடன், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்னான். தன் கண்களை இமைக்காமல் அவன் தீர்க்கதரிசியின் முகத்தைப் பார்த்துவிட்டு, சொன்னான்:

‘நீங்களும் தனியாகத்தானே இருக்கீங்க? உங்க ஆயாவை நீங்க என்ன பண்ணுனீங்க?’

‘அது ஒரு தனி கதை. அவளை நான் இழக்க விரும்பல. நான் இந்த தோட்டத்துக்குள்ளே வந்தவுடன், அவள் அந்த வேலிக்குப் பின்னாடி என்னைத் தேடிக்கிட்டிருந்தா.’

அதைக் கேட்டு சிறுவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

‘நீங்களும் என்னை மாதிரியே காணாமப் போயிட்டீங்க... அப்படித்தானே? காணாமப் போறதுன்றது நல்ல ஒரு விஷயம்தானே?’

தொடர்ந்து சிறுவன் கேட்டான்:

‘நீங்க யாரு?’

‘எல்லாரும் என்னை தீர்க்கதரிசி ஷரியான்னு கூப்பிடுவாங்க. நீ யார்?’

‘நான் நான்தான். என் ஆயா என்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. நான் எங்கே இருக்கேன்னு அவங்களுக்கு தெரியாது.’

தீர்க்கதரிசி வெறுமையாக இருந்த வானத்தை சில நிமிடங்கள் பார்த்தார். பிறகு சொன்னார்:

‘நானும் என் ஆயாக்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன். சில நிமிடங்கள்ல அவள் என்னை கண்டு பிடிச்சிடுவா. அது மட்டும் உண்மை.’

‘என் ஆயா என்னையும் கண்டுபிடிச்சிடுவாங்க. எனக்கு அது நல்லா தெரியும்.’

அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. சிறுவனின் பெயரைச் சொல்லி அவள் அழைத்தாள். அதைக் கேட்டதும் சிறுவன் சொன்னான்:

‘பார்த்தீங்களா? நான்தான் சொன்னேனே... அவங்க என்னை எப்படியும் கண்டு பிடிச்சிடுவாங்கன்னு!’

அதே நேரத்தில் இன்னொரு குரலும் கேட்டது:

‘ஷரியா, நீ எங்கே இருக்கே?’

‘சிறுவனே... நீ பார்த்தியா? அவள் என்னையும் கண்டுபிடிச்சிட்டா...’

உயரத்தை நோக்கி தன்னுடைய முகத்தை உயர்த்திய தீர்க்கதரிசி சொன்னார்:

‘நான் இங்கே இருக்கேன்.’

அழகான வலி

சிப்பி அருகிலிருந்த சிப்பியிடம் சொன்னது:

‘எனக்குள்ளே தாங்க முடியாத ஒரு வலி இருக்கு. சுமை அதிகமானவுடன் தலையே சுத்துற மாதிரியான ஒரு வலி. நான் மிகப் பெரிய ஆபத்துல இருக்கேன்.’

அதைக் கேட்டு இரண்டாவது சிப்பி சொன்னது - ஆணவம் கலந்த மகிழ்ச்சியுடன்:

‘சொர்க்கத்திற்கு வணக்கம்! கடலுக்கு வணக்கம்! எனக்குள் எந்த வலியும் இல்ல. நான் நல்லா இருக்கேன். உள்ளும் புறமும் நான் முழுமையான நலத்துடன் இருக்கேன்.’

அப்போது அந்த வழியே கடந்து போன ஒரு நண்டு சிப்பிகள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டது. உள்ளும் புறமும் நலமாக இருக்கும் சிப்பியைப் பார்த்து அது சொன்னது:

‘நீ சொல்றது சரிதான். நீ நலமா இருக்கே. முழுமையான உடல் நலத்துடன் இருக்கே. ஆனா, உன் பக்கத்துல இருக்குறவ அனுபவிக்கிற வலி இருக்குது பாரு... அது மிக அழகான முத்தொன்றைப் பெறப் போகிற வேதனைன்றதைப் புரிஞ்சுக்கோ!

உடலும் மனமும்

சாளரம் வசந்தத்தை நோக்கி திறந்திருந்தது. அதற்கருகில் ஒரு பெண்ணும் ஆணும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். பெண் சொன்னாள்:

‘நான் உங்களைக் காதலிக்கிறேன். நீ மிகவும் அழகானவர். பணக்காரர், எல்லா நேரங்களிலும் அழகாக ஆடைகள் அணிந்திருப்பவர்.’

அதற்கு அந்த ஆண் சொன்னான்:

‘நானும் உன்னைக் காதலிக்கிறேன். எப்போதும் உன்னைப் பற்றியே நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். கை விட முடியாத அபூர்வ பொருள் நீ. என் கனவுகளின் இசை நீ.’

அதைக் கேட்டு அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. அவள் அந்த இடத்தை விட்டு தள்ளி உட்கார்ந்தாள். பிறகு அவள் சொன்னாள்: ‘நீங்க என்னைப் பற்றி என்ன சொல்றீங்க? நான் உங்களின் சிந்தனைப் பொருள் அல்ல. கனவுகளில் வரும் அபூர்வ பொருளும் அல்ல. நான் ஒரு பெண். என்னை ஒரு மனைவியாக, பிறக்க இருக்கும் குழந்தைகளின் தாயாக நீங்க பார்க்கணும், விரும்பனும். அதுதான் எனக்கு தேவை!’

அவர்கள் மேலும் தள்ளி உட்கார்ந்தார்கள். அப்போது அந்த ஆண் சொன்னான்:

‘இங்க பாரு... இன்னொரு கனவும் பனிப் படலமாக மாறிவிட்டது.’

அதற்கு அந்தப் பெண் சொன்னாள்:

‘என்னை பனிப் படலமாகவும் கனவாகவும் மாற்றிப் பார்க்கும் ஆண் என்ன ஆண்! அப்படிப்பட்ட ஒரு ஆணைப் பற்றி நான் என்ன சொல்றது!’

மண்ணில் எழுதிய வரிகள்

ரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்தார்கள். முதலாவது நண்பன் சொன்னான்:

‘முன்பு கடலில் அலைகள் பலமாக இருந்த நேரத்தில் என் ஊன்றுகோலின் முனையை வைத்து மணலில் நான் ஒரு வரி எழுதினேன். அதை வாசிப்பதற்காக மக்கள் சிறிது நேரம் அப்படியே நின்னுட்டு போவாங்க. அந்த வரி அழியாம இருக்கணும்னு அவங்க நினைச்சாங்க.’

இரண்டாவது நண்பன் அதற்கு சொன்னான்:

‘மணலில் நான் ஒரு வரி எழுதினேன். அது அலைகள் வந்து மோதுற இடத்துல இருந்தது. பரந்து கிடக்கும் கடலில் இருந்து வரும் அலைகள் அந்த வரியை அழித்துவிட்டன. ஆமா... நீங்க என்ன எழுதினீங்கன்னு எனக்குச் சொல்ல முடியுமா?’

‘நான் எழுதினது இதுதான்: ‘நான் அவன் ஆனேன். அவன் யாரோ அதுதான் நான். ‘சரி... நீங்க என்ன எழுதினீங்க?’

‘மிகப் பெரிய இந்த கடலில் ஒரு துளி மட்டுமே நான்.’


மூன்று பரிசுகள்

ல்ல மனம் கொண்ட ஒரு மன்னன் அந்த நகரத்தில் இருந்தான். மக்கள் அனைவரும் அவன் மீது அன்பு செலுத்தினார்கள். அவனைப் பெரிதாக மதித்தார்கள்.

மிகவும் வறுமையில் சிக்கிக் கடந்த ஒரு மனிதன் மட்டும் மன்னனை வெறுத்தான். அவனுடைய மோசமான நாக்கு மன்னனை கீழ்த்தரமாக எப்போதும் பேசிக் கொண்டே இருந்தது. இந்த விஷயம் நன்கு தெரிந்தாலும், மன்னன் அதைச் சகித்துக் கொண்டான்.

அந்த ஏழையைப் பற்றி மன்னன் தீவிரமாக சிந்தித்தான். மன்னனின் பணியாள் ஒரு நள்ளிரவு நேரத்தில் அந்த ஏழையின் வீடு தேடி வந்து, ஒரு மூட்டை தானிய மாவு, ஒரு மூட்டை சோப்பு, ஒரு மூட்டை சர்க்கரை ஆகியவற்றை கொண்டு வந்து அங்கு வைத்து விட்டு சொன்னான்:

‘இந்த பரிசுகளை மன்னர் உனக்காக கொடுத்து அனுப்பினார்.’

அதைக்கேட்டு அந்த வறுமையில் சிக்கிக் கிடக்கும் மனிதன் உற்சாகமாகி விட்டான். தன்னுடைய அன்பைப் பெறுவதற்காக மன்னன் அந்தப் பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பியிருப்பதாக அவன் நினைத்தான். ஆணவத்துடன் அவன் பாதிரியாரைத் தேடிச் சென்றான். மன்னன் செய்திருக்கும் காரியத்தை அவன் அவரிடம் விளக்கினான்.

‘மன்னன் என் மனதில் இடம் பிடிக்க விரும்புற விஷயத்தை உங்களால இப்போ புரிஞ்சிக்க முடியுதா?’

அதற்கு பாதிரியார் சொன்னார்:

‘மன்னர் எவ்வளவு பெரிய புத்திசாலி! உனக்கு எதுவுமே புரியல. அவர் பொருட்கள் மூலம் உனக்கு விஷயத்தைப் புரிய வைக்க நினைக்கிறார். தானிய மாவு உன்னுடைய காலியாகக் கிடக்கும் வயிறுக்கும், சோப்பு உன்னுடைய அழுக்கு படிந்த தலைமுடிக்கும், சர்க்கரை கசப்பு நிறைந்த உன்னுடைய நாக்கை இனிப்பு உள்ளதா மாற்றுவதுக்கும் கொடுத்து அனுப்பப்பட்டிருக்கு...’

அன்று முதல் அந்த ஏழைக்கு தன்னைப் பற்றி நினைக்கும்போது வெட்கமாக இருந்தது. மன்னன் மீது அவன் கொண்ட வெறுப்பு மேலும் அதிகமானது. அதை விட அதிகமான வெறுப்பு அவனுக்கு பாதிரியார் மீதுதான். மன்னனின் மனதை விளக்கி சொன்னவர் பாதிரியார்தானே!

எது எப்படியோ, அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த ஏழை அமைதியான மனிதனாகி விட்டான்.

நாகரீகம்

மூன்று நாய்கள் வெயிலில் நின்றவாறு ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருந்தன.

கனவு கண்டதைப் போல முதல் நாய் சொன்னது:

‘நாய்கள் நிறைந்திருக்கும் இந்தக் கால கட்டத்தில் நாம வாழ்றது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம். கடலுக்கு அடியிலும், கரையிலும், வானத்திலும் நாம் எவ்வளவு சாதாரணமா உலாவிக் கொண்டு இருக்கிறோம்! நாய்கள் சவுகரியமா இருக்கணும்ன்றதுக்காக நம்முடைய கண்களுக்கும் காதுகளுக்கும் மூக்குகளுக்கும் தேவையான கண்டுபிடிப்புகளைப் பற்றி கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க.’

இரண்டாவது நாய் சொன்னது:

‘நாம் கலைகள் விஷயத்தில் மிகவும் அக்கறை உள்ளவர்கள். நம்முடைய முன்னோர்களை விட தாள லயத்துடன் நாம் நிலவைப் பார்த்து குரைக்கிறோம். நீரில் நம்மை நாமே பார்க்குறப்போ, நம்முடைய உடல்ல இருக்குற ஒவ்வொண்ணையும் முன்பை விட தெளிவா நாம பார்க்குறோம்.’

இப்போ மூன்றாவது நாய்:

‘என்னை மிகவும் கவர்ந்தது எது தெரியுமா? நாய்களுக்கு மத்தியில் இருக்குற ஒரு அமைதித் தன்மை. அதுதான் என் மனதை ரொம்பவும் சந்தோஷப்படுத்துற ஒரு விஷயம்.’

அப்போது அந்த நாய்கள் சுற்றிலும் கண்களை ஓட்டின. சற்று தூரத்தில் நாய் பிடிக்கும் மனிதன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் அந்த நாய்களை நெருங்கிக் கொண்டிருந்தான்.   

அவ்வளவுதான் –

மூன்று நாய்களும் வேகமாக பாய்ந்து தெருவில் ஓட ஆரம்பித்தன. ஓடிக் கொண்டிருக்கும்போது, மூன்றாவது நாய் சொன்னது:

‘கடவுளே! உயிர் வேணும்னா ஓடிடு. நம்மைப் பிடிக்கிறதுக்காக நாகரீகம் பின்னாடி வந்து கொண்டிருக்கு!

நடனப் பெண்ணின் மனம்

ன்னனின் சபைக்கு பாடகர்களுடன் ஒரு நடனப் பெண்ணும் வந்திருந்தாள். சபை அவளை வரவேற்றது. புல்லாங்குழல், வீணை ஆகியவற்றின் இசைக் கேற்ப அவள் நடனம் ஆடினாள்.

பலவகைப்பட்ட நடனங்களும் அங்கு அரங்கேறின. நெருப்பு ஜ்வாலைகளின் நடனம், வாள், ஈட்டி ஆகியவற்றின் நடனம், நிர்மலமான வானத்தின் - நட்சத்திரங்களின் நடனம், கடைசியாக காற்றிலாடும் மலர்களின் நடனம்...

அதற்குப் பிறகு மன்னனின் சிம்மாசனத்திற்கு முன்னால் உடலை மட்டும் குனிந்து கொண்டு அவள் தொழுதவாறு நின்றாள். மன்னன் மேலும் சற்று அருகில் வரும்படி அவளிடம் சொன்னான்:-

‘அழகிய பெண்ணே! உடல் வனப்பு, சந்தோஷம் ஆகியவற்றின் வாரிசே! உன் திறமைகள் உனக்கு எங்கிருந்து கிடைத்தன? தாளலயங்களுக்கேற்ப நீ எப்படி நடனமாடுகிறாய்?’

மன்னனை வணங்கிய அவள் அதற்கு பதில் சொன்னாள்:

‘கருணையும் அறிவும் கொண்ட மன்னா! உங்களின் கேள்விக்கான பதில்களை எனக்கு கூற தெரியவில்லை. ஒன்று மட்டும் எனக்கு தெரியும். தத்துவ ஞானிகளின் மனம் தலையில் இருக்கிறது. கவிஞர்களின் மனம் இதயத்தில். பாடகர்களின் மனம் தொண்டையில். நடனப் பெண்ணின் மனம் அவளின் முழு உடலிலும்....’

சிலையின் விலை

லைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஆதிவாசி மனிதனிடம் கை தேர்ந்த ஒரு சிற்பி செதுக்கிய சிலை இருந்தது. அவனுடைய வீட்டு வாசலில் அந்த சிலை தலை குப்புற மண்ணில் கிடந்தது. அவன் அதைப் பற்றி கவலையே படவில்லை.

அந்தச் சிலையைப் பார்த்த ஒரு நகரத்து மனிதன் அதைப் பற்றி அவனிடம் விசாரித்தான்:

‘இந்த சிலையை விற்பதற்கு நீ தயாரா?’

‘இந்த அழுக்கு படிந்த, மங்கிப் போன சிலையை யாரு வாங்குவாங்க?’

'இந்த சிலைக்கு நான் ஒரு வெள்ளி காசு தர்றேன்.'

அதைக்கேட்டு அந்த ஆதிவாசி ஆச்சரியப்பட்டான். மகிழ்ச்சியுடன் அந்தச் சிலையை நகரத்திலிருந்து வந்த அந்த மனிதனுக்கு அவன் அளித்தான்.

சில முழு நிலவு நாட்களுக்குப் பிறகு அந்த மலை வாழ் மனிதன் நகரத்தைப் பார்ப்பதற்காகச் சென்றான். அவன் தெருக்கள் வழியாக நடந்து சென்றான். ஒரு கடையின் முன்னால் ஆட்கள் கூட்டமாக நின்றிருந்தனர். ஒரு ஆள் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்:

‘வாங்க... உள்ளே வாங்க... உலகத்தில் இருக்குறதுலயே அற்புதமான, அழகான சிலை! ஒரு தடவை வந்து பாருங்க... பார்த்து ரசிங்க... பார்க்க ரெண்டு வெள்ளி காசுகள் தான் கட்டணம்!

இரண்டு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து மலை வாழ் மனிதன் உள்ளே நுழைந்தான். உள்ளே அவன் பார்த்தது என்ன தெரியுமா! ஒரு வெள்ளி காசுக்கு அவன் விற்ற அதே சிலைதான்.


பரிமாற்றம்

ழை கவிஞனும் பணக்காரனான முட்டாளும் சாலையில் சந்தித்துக் கொண்டார்கள். இரண்டு பேரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். தங்களின் சந்தோஷமற்ற தன்மையைத்தான் அவர்கள் பெரும்பாலும் வெளிப்படுத்தினார்கள்.

அந்த சாலை வழியாக கடவுளின் தூதர் அப்போது சென்றார். அவருடைய கைகள் கவிஞன், பணக்காரன் இருவரின் தோள்களையும் தொட்டன. அப்போது ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு விஷயம் நடந்தது. அவர்கள் இருவரின் சொத்துக்களும் ஒருவருக்கொருவர் கை மாறியது.

அவர்கள் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், உண்மையில் நடந்தது இதுதான். கவிஞன் தன் கைகளைப் பார்த்தான். காய்ந்த மணலைத் தவிர அங்கு எதுவும் இல்லை.

முட்டாள் கண்களை மூடினான். தன் இதயத்தில் மேகங்கள் வேகமாக நீங்கிக் கொண்டிருப்பதை மட்டும்தான் அவனால் உணர முடிந்தது.

இதயத்தில் உள்ளது

பெண் ஆணிடம் சொன்னாள்:

‘நான் உங்களைக் காதலிக்கிறேன்.’

ஆண் அதற்கு பதில் சொன்னான்:

‘உன் காதலுக்குக் காரணமான ஏதோ ஒண்ணு என் இதயத்தில் இருக்கு.’

அப்போது பெண் கேட்டாள்:

‘உங்களுக்கு என் மேல காதல் இல்லையா?’

ஆண் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான். எதுவும் அவன் சொல்லவில்லை.

அந்த நிமிடமே பெண் உரத்த குரலில் சொன்னாள்: ‘நான் உங்களை வெறுக்கிறேன்.’

‘உன் வெறுப்புக்குக் காரணமான ஏதோ ஒண்ணு என் இதயத்தில் இருக்கு’ - ஆண் பதில் சொன்னான்.

கனவுகள்

ரு மனிதன் ஒரு கனவு கண்டான். அவன் கண் விழித்ததும், தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆளைத் தேடிச் சென்றான். தன்னுடைய கனவை ஆராய்ந்து விளக்க வேண்டுமென்று அவன் கேட்டுக் கொண்டான்.

எதிர்கால பலன்களைக் கூறும் மனிதன் சொன்னான்:

‘நீங்கள் கண் விழித்திருக்கிறப்போ, காணுற கனவுகள் இருக்குமல்லவா? அந்தக் கனவுகளுடன் என்னைத் தேடி வாங்க. அவற்றின் அர்த்தத்தை நான் விளக்குகிறேன். ஏன் என்றால், நீங்க தூங்குறப்போ காணும் கனவுகள் என் அறிவுக்கும் உங்களின் செயலுக்கும் சொந்தமானவை அல்ல. நம் விருப்பப்படி நடக்கக் கூடியவையும் அல்ல.

பைத்தியமான மனிதன்

பைத்தியங்கள் தங்கியிருக்கும் இடத்தின் பூந்தோட்டத்தில் நான் ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவனுடைய முகம் வெளிறிப் போயிருந்தது. எனினும், அந்த முகம் அழகானதாகவே இருந்தது.

பெஞ்சில் அவனுக்கு அருகில் போய் நான் உட்கார்ந்தேன். அவனைப் பார்த்து நான் கேட்டேன்: ‘நீங்க எதற்கு இங்கே இருக்கீங்க?’

அவன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தான். பிறகு சொன்னான்:

‘நீங்க கேள்வி கேக்குறதே சரியா இல்ல. இருந்தாலும் நான் சொல்றேன். என் தந்தைக்கு தன் வழியில் என்னைக் கொண்டு வரணும்னு ஆசை. என் மாமாவுக்கு தன் வழியில் என்னைக் கொண்டு வரனும்னு ஆசை. என் தாய்க்கு புகழ் பெற்ற என்னுடைய தாத்தாவைப் போல கொண்டு வரனும்னு ஆசை. என் சகோதரிக்கு தன்னுடைய மாலுமி கணவனைப் போல கொண்டு வரணும்னு ஆசை. என் சகோதரனுக்கு தன்னைப் போல மிகச் சிறந்த ஒரு விளையாட்டு வீரனா நான் வரணும்னு ஆசை. என் ஆசிரியர்களும் இதே மாதிரி என்னைப் பற்றி திட்டம் போட்டு வச்சிருக்காங்க. தத்துவ இயல் ஆசிரியர் என்னை தத்துவவாதியா ஆக்கணும்னு நினைக்கிறார். இசை ஆசிரியர் என்னை இசை வித்துவானாக ஆக்கணும்னு நினைக்கிறார். தர்க்கவியல் ஆசிரியர் என்னை தர்க்கவாதியா ஆக்கணும்னு நினைக்கிறார். ஒவ்வொருவருத்தரும் தாங்கள் கண்ணாடியில் பார்க்கும் முகத்தைப் போல தங்களின் பிரதிபலிப்பாக என்னை உருவாக்கிக் கொண்டு வரணும்னு பிடிவாதமா இருக்காங்க. அதனாலதான் நான் இந்த இடத்துக்கு வந்துட்டேன். இந்த இடம் ரொம்பவும் அமைதியா இருக்கு. ஒண்ணுமே இல்லைன்னாலும் நான் நானாக இங்கு இருக்க முடியுது.’

திடீரென்று அவன் என் பக்கம் திரும்பி கேட்டான்:

‘உங்களையும் இங்கே கொண்டு வந்துவிட்டது கல்வியும் மற்றவர்களின் அறிவுரைகளும்தானா? சொல்லுங்க....’

‘நான் வெறுமனே இந்த இடத்தைப் பார்க்க வந்திருக்கும் மனிதன். அவ்வளவுதான்.’

‘ஒ.... புரிந்து விட்டது. இந்த சுவருக்கு வெளியிலிருக்கும் பைத்தியங்கள் இல்லத்தில் தங்கியிருக்கும் ஒருவர் நீங்க.... அப்படித்தானே?’

உறங்காத இரவுகள்

கோடை காலத்தில் ஒரு நாள் ஆண் தவளை தன்னுடைய ஜோடியிடம் சொன்னது.

‘நம்முடைய இரவு நேர பாடல்கள் கரையில் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு தொந்தரவா இருக்குமோன்னு நான் பயப்படுறேன்.’

அதற்கு பெண் தவளை கேட்டது: ‘அவர்களின் பேச்சு கூட நம்முடைய பகல் நேரத்து அமைதியைக் கெடுக்கிறதே!’

‘நாம இரவு நேரத்துல நீண்ட நேரம் பாடிக் கொண்டிருக்கிறோம்ன்றதை மறக்கலாமா?’

‘அவர்கள் பகல் நேரத்துல நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்காங்க. உரத்த குரல்ல பேசுறாங்க. அந்த விஷயத்தை நாம மறந்துடக் கூடாது.’

‘இந்த இடத்தில் முழு அமைதியையும் கெடுக்கக் கூடிய கடவுள் கூட ஒதுக்கி வச்சிருக்கிற, அந்த குளத்துத் தவளைகளோட ஆரவாரம் எப்படி?’

‘அரசியல் கட்சி தலைவர்களையும், புரோகிதர்களையும், விஞ்ஞானிகளையும் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? அவர்கள் எல்லோரும் இந்தக் கரையில் இருந்து கொண்டு வானமே அதிர்கிற அளவுக்கு முழங்குறாங்களே! கொஞ்சம் கூட இனிமையே இல்லாத கரடு முரடான குரல்கள்ல....’

‘நாம இந்த மனிதர்களை விட நல்லவர்களா இருக்கணும். இரவு நேரங்களில் நாம அமைதியாக இருப்போம். நம்முடைய பாட்டுகளை நம்முடைய இதயங்களுக்குள்ளேயே நாம வச்சிக்குவோம். நிலவும் நட்சத்திரங்களும் நம்முடைய பாடல்களைக் கேட்க விரும்பினாலும் ஒண்ணோ ரெண்டோ மூணோ இரவுகளில் நாம அமைதியா இருப்போம்.’

‘ரொம்ப நல்ல விஷயம். நானும் அதற்கு சம்மதிக்கிறேன். ஈரமான உங்கள் இதயத்தின் பரந்த தன்மையை என்னால புரிஞ்சிக்க முடியுது.’

அன்று இரவு தவளைகள் வாயையே திறக்கவில்லை. அடுத்த இரவிலும் அதற்கடுத்த இரவிலும் அவை எந்த சத்தத்தையும் உண்டாக்கவில்லை.

மூன்றாவது நாள் குளக்கரையிலிருந்த வீட்டிலிருந்த வாயாடியான குடும்பத் தலைவி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு தன்னுடைய கணவனிடம் உரத்த குதலில் சொன்னாள்.’

‘கடந்த மூணு இரவுகளிலும் நான் உறங்கவேயில்லை. தவளைச் சத்தம் காதுல விழுந்து கொண்டிருந்தபோது நான் சுகமா தூங்கினேன். இப்போ என்னவோ நடந்திருக்கு. கடந்த மூணு இரவுகளா தவளைகள் சத்தமே போடல. உறங்க முடியாம நான் பைத்தியக்காரி மாதிரி ஆயிட்டேன்.’

அதைக் கேட்ட ஆண் தவளை பெண் தவளையைப் பார்த்து கண்களைச் சுருக்கியவாறு சொன்னது: ‘நாம அமைதியா இருக்குறது நம்மையும் பைத்தியம் பிடிக்க வைக்குதுல்ல?’

‘ஆமா... இரவு நேர அமைதி எவ்வளவு பயங்கரமானதா இருக்கு! ராம பாட்டை நிறுத்த வேண்டிய அவசியமே இல்ல. சுகத்தை விரும்புறவங்க தங்களின் அமைதியை சத்தத்தால நிறைக்கணும்.’

தவளைகளின் பாடல்களைக் கேட்டு நிலவும் நட்சத்திரங்களும் அவர்களை அழைத்தது காரணம் இல்லாமலா?


சட்டம் உண்டாக்கல்

ல நூறு வருடங்களுக்கு முன்பு நல்ல குணங்களைக் கொண்ட அறிவாளியான ஒரு மன்னன் இருந்தான். தன்னுடைய மக்களுக்கு சட்டங்கள் உண்டாக்க அவன் தீர்மானித்தான்.

சட்டங்கள் உண்டாக்குவதற்காக ஆயிரம் ஜாதிகளைச் சேர்த்த ஆயிரம் அறிஞர்களை உடனடியாக அரசவைக்கு வரவழைத்தான்.

எல்லாம் முறைப்படி நடந்தது. ஆயிரம் சட்டங்கள் உண்டாக்கப்பட்டு மன்னனிடம் தரப்பட்டது. அதைப் படித்தபோது மன்னன் மனதிற்குள் கண்ணீர் விட்டான். காரணம்- ஆயிரம் வகையான குற்றங்கள் தன்னுடைய நாட்டில் இருக்கின்றன என்று அதுவரை மன்னனுக்கு தெரியாமல் இருந்தது.

மன்னன் சட்டங்களை எழுதும் அதிகாரியை வரவழைத்தான். எழுதப்பட வேண்டிய சட்டங்களை அவனே சொன்னான் - புன்சிரிப்புடன். மொத்தம் ஏழு சட்டங்கள் மட்டுமே எழுதப்பட்டன.

அறிஞர்களுக்கு அதைப் பார்த்து கோபம் வந்துவிட்டது. அவர்கள் தங்களின் ஊர்களுக்கு திரும்பினார்கள்- தாங்கள் வடிவம் கொடுத்த ஆயிரம் சட்டங்களுடன்.

அந்த எல்லா ஜாதிகளிலும் இன்று வரையிலும் ஆயிரம் சட்டங்கள் இருக்கின்றன.

அந்த நாடு உன்னதமான நாடாக இருந்தாலும் ஆயிரம் சிறை அறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தச் சிறை அறைகள் முழுக்க பெண்களும் ஆண்களும் நிறைந்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஆயிரம் சட்டங்களை மீறியவர்கள்.

அந்த நாடு உண்மையிலேயே உன்னதமான நாடுதான். அங்குள்ள மக்கள் ஆயிரம் சட்டங்களை உண்டாக்கியவர்களின், அறிவாளியாக ஒரு மன்னனின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

நேற்று, இன்று, நாளை

நான் நண்பனிடம் சொன்னேன்:

‘இங்கே பாரு, அந்த ஆளின் கைகளில் அவள் சாய்ந்து படுத்திருக்கா. நேற்று இதே மாதிரி என் கைகளில் அவ சாய்ந்து படுத்திருந்தா.’

அதற்கு நண்பன் சொன்னான்:

‘நாளைக்கு என் கைகளில் அவள் சாய்ந்து படுத்திருப்பா.’

‘இங்கே பாரு... அவள் அந்த ஆளோடு மிகவும் நெருக்கமா உட்கார்ந்திருக்கா. நேற்று அவள் என்கூட மிகவும் நெருக்கமா உட்கார்ந்திருந்தா.’

‘நாளைக்கு அவள் எனக்கு அருகில் இருப்பா.’

‘அதோ பாரு... அந்த ஆளோட கோப்பையில இருந்து அவள் மதுவை அருந்துறா. நேற்று அவள் என் கோப்பையில் இருந்து அது அருந்தினா.’

‘நாளைக்கு என் கோப்பையில் இருந்து அருந்துவா.’

‘அங்கே பாரு... எந்த அளவுக்கு காதல் உணர்வுடன் வெறித்த கண்களுடன் அவள் அந்த ஆளைப் பார்க்கிறா! நேற்று அவள் என்னையும் இதே மாதிரி பார்த்தா.’

‘இதே மாதிரி நாளைக்கு அவள் என்னைப் பார்ப்பா.’

‘அந்த ஆளின் காதுகளில் காதல் கவிதைகளை அவள் மெதுவான குரல்ல சொல்றது உன் காதுல விழுகுதா? நேற்று இதே காதல் கவிதைகளை அவள் என் காதுல சொன்னா.’

‘நாளைக்கு அவள் இதே கவிதைகளை என் காதுகள்ல சொல்லுவா.’

‘இங்கே பாரு... அவள் அந்த ஆளைக் கட்டிப்பிடிக்கிறா. நேற்று அவள் என்னைக் கட்டிப் பிடிச்சா.’

‘நாளை அவள் என்னைக் கட்டிப் பிடிப்பா.’

‘என்ன வினோதமான பெண்ணாக இருக்கிறாள் அவள்!’ - நான் ஆச்சரியப்பட்டேன்.

அதற்கு நண்பன் சொன்னான்:

‘அவள் வாழ்வைப் போன்றவள். எல்லோரும் அவளைக் சொந்தமாக்குறாங்க. அவள் மரணமும் கூடத்தான். எல்லோரையும் அவள் தனக்குக் கீழ்படியச் செய்கிறாள். அவள் சுதந்திரமானவளும் கூட. எல்லோரும் அவளை கட்டிப் பிடிக்கிறார்கள்.’

தத்துவஞானியும் செருப்பு தைப்பவனும்

செருப்புத் தைப்பவனின் கடைக்கு கிழிந்து போன ஷூவுடன் ஒரு தத்துவஞானி வந்தார். அவர் சொன்னார்: ‘தயவு செய்து என்னுடைய இந்த ஷூவைச் சரி பண்ணித்தா.’

‘நான் இப்போ வேறொருவரின் ஷூவைச் சரி செய்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஷூவை சரி செய்வதற்கு முன்னால், வேறு பலரின் ஷூக்களை நான் சரி பண்ண வேண்டியதிருக்கு. உங்க ஷூவை இங்கே வைங்க. இன்னைக்கு இந்த ஒரு ஜோடியை அணியுங்க. உங்க ஷூக்களை நாளைக்கு நான் தர்றேன்.’ - செருப்பு தைப்பவன் சொன்னான்.

அதைக் கேட்டதும் தத்துவஞானிக்கு கோபம் வந்து விட்டது. ‘என் ஷூக்களைத் தவிர வேறொருவரின் ஷூக்களை நான் அணியமாட்டேன்‘ என்றார் அவர்.

அதற்கு செருப்பு தைப்பவன் சொன்னான்:

‘அப்படியா? உண்மையிலேயே நீங்க தத்துவஞானிதானா? வேறொருத்தரோட ஷூவை நீங்க அணிய மாட்டீங்களா? இதே தெருவுல வேறொரு செருப்பு தைக்கிற ஆள் இருக்கான். அவனுக்கு என்னைவிட தத்துவ ஞானிகளைப் பற்றி நல்லா தெரியும். ஷூவைச் சரி பண்ண நீங்க அந்த ஆள்கிட்ட போங்க.’

பாலம் கட்டியவர்கள்

ன்னன் அந்தியோக்கஸ் அஸ்ஸி நதி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பாலம் கட்டினான். நகரத்தின் ஒரு பாதியை இன்னொரு பாதியுடன் இணைப்பதற்காக அந்த பாலம் பயன்பட்டது. கோவேறு கழுதைகள் மீது ஏற்றி மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பெரிய கற்களை பயன்படுத்தி அந்தப் பாலம் கட்டப்பட்டது.

பாலம் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்ததும், அங்கிருந்த தூணில் மன்னன் இந்த வார்த்தைகள் இருக்கும்படி செய்தான்:

‘இரண்டாம் அந்தியோக்கஸ் மன்னன் கட்டி முடித்த பாலம்.’

அழகான அந்தப் பாலத்தின் வழியாக எல்லா மக்களும் நடந்தார்கள்.

ஒரு மாலை நேரத்தில் சிறிது பைத்தியம் பிடித்த நிலையில் இருப்பவன் என்று எல்லோராலும் கருதப்பட்ட ஒரு இளைஞன் அந்தத் தூணின் மீது ஏறினான். அங்கு கொத்தி வைக்கப்பட்டிருந்த வார்த்தைகளைக் கரியால் பூசினான். பிறகு அதற்கு மேலே எழுதினான்:

‘இந்தப் பாலத்தின் கற்களை மலைகளிலிருந்து கீழே கொண்டு வந்தவை கோவேறு கழுதைகள். பாலத்தின் வழியாக இங்குமங்குமாக போய்க் கொண்டிருப்பவர்கள் இந்த பாலத்தைக் கட்டிய கோவேறு கழுதைகளில்தான் சவாரி செய்கிறார்கள்.’

அந்த இளைஞன் எழுதியிருந்ததைப் படித்தவர்களில் சிலர் சிரித்தார்கள். வேறு சிலர் ஆச்சரியப்பட்டார்கள். வேறு சிலர் சொன்னார்கள்: ‘யார் இதை எழுதினதுன்னு எங்களுக்கு தெரியும். அவன் ஒரு அரைப் பைத்தியமாயிற்றே!’

ஆனால், ஒரு கோவேறு கழுதை சிரித்துக் கொண்டே இன்னொரு கோவேறு கழுதையிடம் சொன்னது: ‘இந்தக் கற்களைச் சுமந்தது நாமதான்னு உனக்கு ஞாபகத்துல இருக்குல்ல? இருந்தும் இதுவரையிலும் என்ன சொல்லிக் கொண்டு இருந்தாங்க? இந்தப் பாலத்தைக் கட்டியது அந்தியோக்கஸ் மன்னனாம்!


வரலாறு

ன்னுடைய வழியில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் ஒரு மனிதனை நம்முடைய பயணி சந்தித்தான். பரந்துகிடந்த வயலைச் சுட்டிக் காட்டிய பயணி கேட்டான்:

‘அஹ்லம் மன்னன் தன்னுடைய எதிரிகளைத் தோல்வியடையச் செய்த போர்க்களம் இதுதானே?’

அதற்கு அந்த கிராமத்து மனிதன் சொன்னான்: ‘இது எந்தக் காலத்திலும் ஒரு போர்க்களமாக இருந்தது இல்லை. முன்பு புகழ் பெற்ற சாத் என்ற நகரம் இங்கே இருந்தது. அந்த நகரத்தை நெருப்பு வச்சு எரிச்சிட்டாங்க. இப்போ அந்த இடம் வயலா இருக்கு. நீங்கதான் அதைப் பார்க்குறீங்களே?’

அதற்கு அந்த ஆள் சொன்னான்:

‘அங்கு எந்தச் சமயத்திலும் ஒரு நகரம் இருந்ததே இல்லை. ஒரு துறவியின் மடம் இருந்தது. தெற்கிலிருந்து வந்தவர்கள் அதை அழித்துவிட்டார்கள்.’

பயணி மீண்டும் நடந்தான். மூன்றாவதாக ஒரு ஆளைப் பார்த்தான். பரந்து கிடந்த வயலைச் சுட்டிக் காட்டியவாறு மீண்டும் அவன் கேட்டான்:

‘அங்கு ஒரு துறவியின் மடம் இருந்தது. அப்படித்தானே?’

‘எந்தக் காலத்திலும் ஒரு துறவியின் மடம் அந்த இடத்தில இருந்ததே இல்ல. எங்களோட முன்னோர்கள் சொல்லிக் கொண்டிருந்தது என்ன தெரியுமா? அந்த வயல்ல ஒரு பெரிய எரி நட்சத்திரம் வந்து விழுந்ததாம்.’

ஆச்சரியம் நிறைந்த இதயத்துடன் பயணி தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான். மிகவும் வயதான ஒரு மனிதரை அவன் வழியில் பார்த்தான். அவருக்கு வணக்கம் கூறிய பயணி அவரிடம் சொன்னான்: ‘அய்யா, இந்த ஊரைச் சேர்ந்த மூன்று மனிதர்களை இதே வழியில நான் பார்த்தேன். அதோ அந்த வயலைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டேன். ஒவ்வொரு ஆளும் இன்னொரு ஆளு சொன்னதை மறுத்தாங்க. ஒவ்வொரு புது கதையையும் ஒவ்வொருத்தரும் சொன்னாங்க.’

வயதான பெரியவர் தலையை உயர்த்தினார். பிறகு சொன்னார்: ‘நண்பனே, அவங்க ஒவ்வொருத்தர் சொன்னதும் உண்மைதான். இருக்கும் நிலையுடன் மாறுதல்களை இணைப்பதற்கும் அதிலிருந்து உண்மையைக் கண்டுபிடித்து கூற மிகவும் குறைவான மனிதர்களால் மட்டுமே முடியும்.’

பொற்காசுகள் கொண்ட பெல்ட்

ரண்டு மனிதர்கள் பாதையில் சந்தித்தார்கள். அவர்கள் நகரத்தை நோக்கி நடந்தார்கள். மதிய நேரம் ஆன போது அவர்கள் பரந்து கிடந்த ஒரு நதியின் கரையை அடைந்தார்கள். நதியைக் கடப்பதற்கு பாலம் எதுவும் இல்லை. ஒன்று அதை நீந்தி கடக்க வேண்டும். இல்லாவிட்டால் தெரியாத வழிகளைத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

இரண்டு மனிதர்களும் சேர்ந்து தீர்மானித்தார்கள்: ‘நாம நீந்துவோம். நதி அந்த அளவுக்கு ஒண்ணும் பெருசா இல்ல.’

இருவரும் நீரில் இறங்கி நீந்த ஆரம்பித்தார்கள்.

ஒரு மனிதனுக்கு நதியைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும் நன்கு தெரியும். ஆனால், நதியின் நடுப் பகுதியை அடைந்தபோது, அவன் நிலைகுலைந்து போய் விட்டான். வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் அவனை இழுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது.

முன்பு ஒருமுறை கூட நீரில் நீந்தி பழக்கமில்லாத இரண்டாவது ஆள் வேகமாக நீந்தி எதிர்கரையை அடைந்தான். தன்னுடைய நண்பன் அப்போதும் நீருடன் போராடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் மீண்டும் நதிக்குள் இறங்கி, தன் நண்பனைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான்.

நீரோட்டத்தில் சிக்கிய மனிதன் கேட்டான்: ‘நீந்தவே தெரியாதுன்னு நீங்க சொன்னீங்களே? பிறகு எப்படி இந்த அளவுக்கு தைரியமாக உங்களால ஆற்றை நீந்தி கடக்க முடிந்தது?’

அதற்கு அந்த இன்னொரு மனிதன் சொன்னான்: ‘நண்பரே, என்னுடைய இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெல்ட்டைப் பார்த்தீங்களா? இது முழுவதும் பொற்காசுகள் இருக்கு. என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வேணும்னு நான் சம்பாதிச்சது. ஒரு முழு வருடமும் கஷ்டப்பட்டு உழைச்சு நான் இதைச் சம்பாதிச்சிருக்கேன். இந்த பெல்ட்டின் கனம்தான் என்னை நதியைக் கடக்க வச்சது... நான் நீந்திக் கொண்டிருந்தப்போ என் மனைவியும், பிள்ளைகளும் என் தோள்ல ஏறி உட்கார்ந்திருந்தாங்க.’

நகரத்தை நோக்கி இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.

சிவப்பு மண்

ரம் மனிதனிடம் சொன்னது: ‘என் வேர்கள் ஆழமான சிவப்பு மண்ணுக்குள்ளே இருக்கு. நான் என்னுடைய கனிகளை உனக்கு தர்றேன்.’

மனிதன் அதற்கு சொன்னான்: ‘நம்ம ரெண்டு பேர்க்குமிடையில்தான் எத்தனை ஒற்றுமை! என் வேர்களும் ஆழமான சிவப்பு மண்ணுக்குள்ளேதான் இருக்கு. உன் கனிகளை எனக்கு நீ தரணும்ன்றதுக்காக சிவப்பு மண் உனக்கு சக்தியைத் தருது. நன்றியுடன் அதை வாங்கிக்கணும்னு சிவப்பு மண் எனக்கு கற்றுத் தருது.’

முழுநிலவு

கரத்தின் மீது முழு நிலவு ஆட்சி செய்து கொண்டிருந்தது. எல்லா நாய்களும் முழு நிலவைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாய் மட்டும் குரைக்கவில்லை. அது அதிகார தொனியில் சொன்னது:

‘நீங்க குரைச்சு அமைதியை உறக்கத்துல இருந்து எழுப்பிடாதீங்க. நிலவை பூமிக்குக் கொண்டு வர யாராலும் முடியாது.’

அதைக் கேட்டதும் எல்லா நாய்களும் தாங்கள் குரைப்பதை நிறுத்தின. பயந்து போய் அவை அமைதி காத்தன. ஆனால், அதுவரை அறிவுரை கூறிக் கொண்டிருந்த நாய் மட்டும் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டேயிருந்தது - அமைதியை வேண்டி.

சொற்பொழிவாற்றும் துறவி

ரு துறவி நன்கு சொற்பொழிவு செய்யக் கூடியவராக இருந்தார். அவர் மாதத்தில் மூன்று முறைகள் மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று வேதச் சொற்பொழிவுகள் செய்வார். தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் மற்றவர்களுக்குப் பங்கு போட்டு கொடுத்து விடுவார். அவர் ஒரு அருமையான பேச்சாளர். அவருடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.

ஒரு மாலை நேரத்தில் மூன்று மனிதர்கள் அவர் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். துறவி அவர்களை வணக்கம் சொல்லி வரவேற்றார்.

வந்தவர்கள் சொன்னார்கள்: ‘நீங்க தானம் செய்வதைப் பற்றியும், இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதைப் பற்றியும் சொற்பொழிவு செய்றீங்க. உள்ளவர்கள் இல்லாதவர்களுக்குத் தரணும் என்று சொல்றீங்க. உங்களுடைய புகழ் உங்களைப் பணக்காரரா ஆக்கிடுச்சு. இதுல சந்தேகப்படுறதுக்கு எதுவுமே இல்ல. உங்கக்கிட்ட இருக்கிற சொத்தை எங்களுக்குத் தாங்க. நாங்கள் இல்லாதவர்கள். தேவைகள்ல இருக்குறவங்க...’

‘நண்பர்களே, இந்தப் படுக்கையும் பாயும் தலையணையும் தவிர வேறு எதுவுமே என்கிட்ட இல்ல. உங்களுக்கு வேணும்னா, இவற்றை எடுத்துக்கங்க. தங்கம், வெள்ளி எதுவும் என்கிட்ட இல்ல’ - துறவி கூறினார்.

அவர்கள் கேவலமாக துறவியைப் பார்த்தார்கள். பிறகு முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு வெளியேறினார்கள். கடைசி ஆள் ஒரு நிமிடம் வீட்டின் வாசலில் நின்றான். பிறகு அவன் சொன்னான்: ‘சரியான சதிகாரன்... வஞ்சகன்... உன்னால் செய்ய முடியாத விஷயங்களை நீ மற்றவர்களுக்கு சொல்லித் தர்ற... உபதேசம் செய்யிற...’


பழைய மது

ரு பணக்காரன் தன்னுடைய நிலவறையைப் பற்றியும், அங்கு பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் மதுவைப் பற்றியும் மதிப்புடன் நினைத்துப் பார்த்தான். தனக்கு மட்டுமே தெரிந்திருக்கும் விசேஷ நாட்களில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகப் பழமையான மது ஒன்றை ஒரு பெட்டிக்குள் பத்திரமாக அவன் வைத்திருந்தான்.

அந்த மாநிலத்தின் ஆளுநர் ஒரு நாள் அவனைத் தேடி வந்தார். ஆளுநரைப் பற்றி அவன் ஆழமாக யோசித்தான். கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். ஒரு சாதாரண ஆளுநருக்காக அவன் அந்த மது இருக்கும் பெட்டியைத் திறக்க தயாராக இல்லை.

இன்னொரு நாள் பாதிரியார் ஒருவர் வந்தார் பணக்காரன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘இல்ல... அந்தப் பெட்டியை நான் திறக்க மாட்டேன். மதுவின் மதிப்பு என்னன்னு பாதிரியாருக்குத் தெரியாது. அதன் வாசனை அவருடைய நாசித் துவாரங்களுக்குள் நுழையாது.’

வேறொரு நாள் அந்த நாட்டின் இளவரசன் வந்தான். அந்த பணக்காரனுடன் சேர்ந்து அவன் இரவு உணவு சாப்பிட்டான். அப்போது பணக்காரன் நினைத்தான். ‘ஒரு இளவரசன் பருகுவதை விட மதிப்புள்ளது அந்த மது.’

தன்னுடைய சொந்த மருமகனின் திருமணத்தின் போதும் அந்த பணக்காரன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: ‘இந்த விருந்தாளிகளுக்காக நான் அந்தப் பெட்டியைத் திறக்க மாட்டேன்.’

வருடங்கள் கடந்து சென்றன. அவன் கிழவனாகி மரணமடைந்தான். எல்லோரையும் போல அவனையும் மண்ணுக்குள் போட்டு மூடினார்கள்.

அதே நாளில் மற்ற மது வகைகளுடன் சேர்ந்து மிகவும் பழமையான அந்த மதுவையும் வெளியே எடுத்தார்கள். பக்கத்து வீடுகளைச் சேர்ந்த விவசாயிகள் மது முழுவதையும் உள்ளே தள்ளினார்கள். அவர்கள் யாருக்கும் அதன் பழம் பெருமை தெரியவில்லை.

அவர்களைப் பொறுத்த வரையில் கோப்பையில் ஊற்றபட்டது எல்லாமே மது - அவ்வளவுதான்.

மதிப்பு மிக்க கவிதை

நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு ஏதனுக்குச் செல்லும் வழியில் இரண்டு கவிஞர்கள் சந்தித்தார்கள். ஒருவரையொருவர் சந்தித்தது குறித்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

முதல் கவிஞர் கேட்டார்: ‘சமீபத்தில் நீங்கள் என்ன இயற்றினீர்கள்? உங்களின் வீணையுடன் அது எப்படி இணைந்தது?

அதற்கு இரண்டாவது கவிஞர் சொன்னார்: ‘என் கவிதைகளிலேயே மதிப்பு மிக்க கவிதையை நான் சமீபத்துலதான் எழுதினேன். சொல்லப் போனால் கிரேக்க மொழியில் இதுவரையில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச் சிறந்த கவிதை இதுவாகத்தான் இருக்கும். மிக உயர்ந்த ஸியூஸ் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனையே அந்தக் கவிதை.’

தன்னுடைய மேலாடைக்குள்ளிருந்து அவர் ஒரு ஓலையை வெளியே எடுத்தார்.

‘இதோ பாருங்க... இதுதான் அந்தக் கவிதை. இதைப் படிப்பதற்கு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா? வாங்க... வெண்மையான ஸைப்ரஸ் மரங்களின் நிழல்ல நாம போய் உட்காருவோம்.’

கவிஞர் தன்னுடைய கவிதையை வாசித்தார். அது ஒரு நீளமான கவிதையாக இருந்தது.

‘இது ஒரு மதிப்பு மிக்க கவிதையே. பல யுகங்களைத் தாண்டி இந்த கவிதை வாழும். நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள்’ - நண்பரான கவிஞர் சொன்னார்.

‘சரி... இந்த நாட்களில் நீங்க என்ன எழுதுனீங்க?’

‘நான் ரொம்பவும் குறைவாகத்தான் எழுதினேன். எட்டே எட்டு வரிகள்தான். அதுவும் தோட்டத்துல விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பற்றி....’

அந்த வரிகளை அவரும் பாடினார். அப்போது கவிஞரான நண்பர் சொன்னார்:

‘மோசம்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மோசம் ஒண்ணும் இல்ல.’

இரண்டு பேரும் பிரிந்து சென்றார்கள்.

இன்று - இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு அந்த எட்டு வரிகளும் ஒவ்வொரு மொழியிலும் பாடப்படுகின்றன. நேசிக்கப்படுகின்றன. புகழப்படுகின்றன.

அந்த இன்னொரு கவிஞரின் கவிதை பல நூறு வருடங்களாக நூல் நிலையங்களுக்குள்ளும், வித்துவான்மார்களின் அறைகளுக்குள்ளும் இருக்கிறது. அது நினைக்கப்படவும் செய்கிறது. ஆனால், நேசிக்கப்படவில்லை. பாடப்படவில்லை.

லேடி ரூத்

சுமையான குன்றின் மீது தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற அரண்மனை. தூரத்திலிருந்து மூன்று மனிதர்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதல் மனிதன் சொன்னான்: ‘அதோ... லேடி ரூத்தின் அரண்மனை. வயதான கெட்ட மந்திரவாதி அவள்!’

இரண்டாவது மனிதன் அதை மறுத்தான்: ‘நீங்க தப்பா சொல்றீங்க. அவள் ஒரு பேரழகி. வாழ்க்கையை கனவுகளுக்காக ஒதுக்கி வைத்த அழகி அவள்.’

இரண்டு பேர் சொன்னதையும் மூன்றாவது மனிதன் மறுத்தான்: ‘நீங்க ரெண்டு பேருமே தப்பா சொல்றீங்க. பரந்து கிடக்கும் இந்த நிலத்துக்குச் சொந்தக்காரியே அவள்தான். பணியாட்களின் இரத்தம் முழுவதையும் அவள் உறிஞ்சி குடிக்கிறா.’

லேடி ரூத்தைப் பற்றி தங்களுக்குள் விவாதம் செய்தவாறு அந்த மூன்று நபர்களும் நடந்தார்கள். கடை வீதியை அடைந்த அவர்கள் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் கிழவரிடம் கேட்டான்: ‘தயவு செய்து ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா? அந்தக் குன்றின் மீது இருக்கும் வெள்ளை அரண்மனையில் வசிக்கும் லேடி ரூத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’

கிழவர் தலையை உயர்த்தினார். மூன்று பேரையும் பார்த்து அவர் சிரித்தார். பிறகு சொன்னார்: ‘எனக்கு இப்போ தொண்ணூறு வயசு. நான் சின்னப் பையனா இருந்ததுல இருந்து லேடி ரூத்தைப் பற்றி நான் நினைத்துக் கொண்டேதான் இருக்கேன். எண்பது வருடங்களுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க. அந்த வீட்டுல இப்போ யாரும் இல்ல. சில நேரங்கள்ல அங்கே ஆந்தைகள் அலறும். பேய்கள் நடமாடக் கூடிய இடம் அதுன்னு ஆட்கள் சொல்றாங்க.’

அற்புதமான கதை

விஞர் ஒரு விவசாயியைப் பார்த்தார். கவிஞர் சற்று விலகி நின்றார். விவசாயி வெட்கத்துடன் நின்றிருந்தான். எனினும், இருவரும் பேசினார்கள். விவசாயி சொன்னான்: ‘சமீபத்துல நான் கேட்ட ஒரு கதையைச் சொல்றேன். பொறியில ஒரு எலி மாட்டிக் கொண்டது. இரையாக வைத்த வெண்ணையை எலி மகிழ்ச்சியுடன் தின்று கொண்டிருந்தது. அப்போ ஒரு பூனை பக்கத்துல வந்தது. அதைப் பார்த்து எலிக்கும் நடுக்கம் வந்திடுச்சு. அது கொஞ்ச நேரத்திற்குத்தான். எலிக்கு தெரியும் தான் பொறிக்கு உள்ளே பத்திரமா இருக்கோம்னு.

அப்போ பூனை சொன்னது:

‘நண்பனே, நீ சாப்பிடுறது உன்னோட கடைசி உணவு.’

அதற்கு எலி பதில் சொன்னது: ‘ஆமா... உண்மைதான். எனக்கு ஒரு வாழ்வு இருக்கு. அதே மாதிரி ஒரு மரணமும் இருக்கு. உன் விஷயம் அப்படியா? எல்லாரும் சொல்றாங்க உனக்கு ஒன்பது வாழ்வு இருக்குன்னு. அதன் அர்த்தம் என்ன? நீ ஒன்பது தடவைகள் சாகணும்...’

விவசாயி கவிஞரைப் பார்த்துக் கொண்டே கேட்டான்: ‘அற்புதமான ஒரு கதை இது! அப்படித்தானே?’

அதற்கு பதிலெதுவும் கூறாமல் கவிஞர் நடந்து சென்றார். ஆனால், அவர் தனக்குள் கூறிக் கொண்டிருந்தார்: ‘உண்மைதானோ? நமக்கு ஒன்பது வாழ்வா? அப்படின்னா ஒன்பது தடவைகள் நாம சாவோம். ஒன்பது மரணம்! பொறிக்குள் இருந்தாலும் ஒரே ஒரு வாழ்வு மட்டும்... அதுதான் உண்மையிலேயே எல்லாவற்றையும் விட நல்லது. இறுதி உணவிற்காக ஒரே ஒரு துண்டு வெண்ணெய் மட்டுமே வைத்திருக்கும் விவசாயியின் வாழ்க்கை... இருந்தாலும் பாலை வனங்களுடன் காட்டிலிருக்கும் சிங்கங்களுடன் குருதி உறவு கொண்டவராயிற்றே, நாம்?’


சாபத்தின் சக்தி

யதான மாலுமி ஒருமுறை என்னிடம் சொன்னான்: ‘முப்பது வருடங்களுக்கு முன்னால் என் மகள் ஒரு மாலுமியுடன் ஓடி விட்டாள். நான் அவங்க ரெண்டு பேரையும் மனசுக்குள்ளே சபித்தேன். அதற்குக் காரணம் - இந்த உலகத்திலேயே நான் மிகவும் அதிகமா பாசம் வச்சிருந்தது என் மகள் மீதுதான். ஓடிப் போன கொஞ்ச நாட்களிலேயே அந்த மாலுமி இளைஞன் தான் போன கப்பலோடு சேர்ந்து கடலுக்குள்ளே மூழ்கிப் போயிட்டான். அவனோடு சேர்ந்து என் மகளும். ஒரு இளைஞன், ஒரு இளம்பெண் - ரெண்டு பேரின் மரணத்துக்கும் காரணமான ஒரு கொலைகாரனை நீங்க என்கிட்ட பார்க்கலாம். நான் போட்ட சாபம்தான் அவர்களைச் சாகடிச்சிடுச்சு. இப்போ நான் என் சவக்குழிக்குப் போற வழியில் கடவுள்கிட்ட அதற்காக மன்னிப்பு கேக்குறேன்.’

அவனுடைய வார்த்தைகளில் தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு தொனி கலந்திருந்தது. தன்னுடைய சாபத்தின் சக்தியைப் பற்றி அவன் இப்போதும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உணர முடிந்தது.

மாதுளை

ரு மனிதருக்கு சொந்தத்தில் பழத்தோட்டம் இருந்தது. அங்கு நிறைய மாதுளம் பழங்கள் இருந்தன. குளிர்காலத்தில் வீட்டிற்கு வெளியே வெள்ளித்தட்டில் மாதுளம் பழங்களை அவர் வைப்பார். அத்துடன் ஒரு அறிவிப்பையும் வைப்பார்: ‘ஒரு மாதுளம் பழத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆட்கள் அந்த வழியே நடந்து செல்வார்கள். ஒரு பழத்தைக் கூட யாரும் எடுக்கவில்லை.

அவர் ஆழமாக யோசித்தார். அடுத்த இளவேனிற் காலத்தின் போது வீட்டிற்கு வெளியே மாதுளம் பழங்கள் எதையும் அவர் வைக்கவில்லை. அதற்கு பதிலாக பெரிய எழுத்துக்களில் ஒரு அறிவிப்புப் பலகை மட்டும் வைத்தார்:

‘மிகவும் சுவையான மாதுளம் பழங்கள் இங்கு கிடைக்கும். ஆனால், மற்ற எதற்கும் கொடுப்பதை விட அதிகமாக வெள்ளி காசுகள் அதற்கு நீங்கள் தர வேண்டும்.’

அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? பெண்களும் ஆண்களும் முண்டியடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்தார்கள்- மாதுளம் பழங்களை வாங்குவதற்காக.

கடவுளின் எண்ணிக்கை

கரத்திலிருந்த தேவாலயத்தின் படிகளில் நின்று கொண்டு பல கடவுள்களையும் பற்றி மத ஆசிரியர் கூறிக் கொண்டிருந்தார். அப்போது மக்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: ‘அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே! இந்த தெய்வங்கள் அனைத்தும் நம்ம கூட தானே வாழ்ந்து கொண்டிருக்கு! நாம் போகுற இடத்துக்கெல்லாம் நம்ம கூடவே எல்லா தெய்வங்களும் வருமே!’

சிறிது நேரத்திற்குப் பிறகு வேறொரு மனிதன் சந்தை இருக்கும் இடத்தில் நின்று கொண்டு மக்களிடம் சொன்னான்: ‘கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்ல.’

அந்தச் செய்தியைக் கேட்டு பலரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதற்குக் காரணம் - தெய்வங்கள் மீது அவர்கள் எல்லோருக்கும் ஒரு வித பயம் இருந்தது.

இன்னொரு நாள் வேறொரு மனிதன் வந்தான்.அவன் சொன்னான்: ‘கடவுள் ஒண்ணே ஒண்ணுதான்.’

அதைக் கேட்டவர்கள் பயந்து விட்டார்கள். காரணம் – பல தெய்வங்களின் ஆணையை விட ஒரு தெய்வத்தின் ஆணை அவர்களுக்கு மனதில் பயத்தில் உண்டாக்கியது.

அதே நாள் காலையில் இன்னொரு ஆள் அங்கு வந்தான். அவன் மக்களிடம் சொன்னான்: ‘மூன்று தெய்வங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவராக காற்றில் தங்குகிறார்கள். அவர்களுக்கு கருணையே வடிவமான ஒரு அன்னை இருக்கிறாள். அவர்களின் தோழியும் சகோதரியும் கூட அந்த அன்னைதான்.’

அதைக் கேட்டு மக்களுக்கு நிம்மதியாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் மெதுவான குதலில் கூறிக் கொண்டார்கள்:

‘மூன்று கடவுள்களில் யாருக்காவது நம்முடைய வீழ்ச்சியைப் பற்றி மாறுபட்ட கருத்து இருக்கும். தவிர, பெரிய மனதைக் கொண்ட அவர்களின் அன்னை ஏழைகளான இந்த கஷ்டங்களில் இருக்கும் மனிதர்களுக்காக வாதாடுவார்கள்.’

எனினும், தெய்வங்கள் பலர் என்றும், அவர்கள் மூன்று பேர் என்றும், ஒரே ஒரு தெய்வம்தான் என்றும், தெய்வம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், கருணையே வடிவமான ஒரு அன்னை அவர்களுக்கு இருக்கிறாள் என்றும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும், வாதம் செய்யும் மக்கள் இப்போதும் நகரத்தில் இருக்கவே செய்கிறார்கள்.

காது கேளாத மனைவி

ணக்காரனின் மனைவி இளம் பெண்ணாக இருந்தாள். அதே நேரத்தில் கல்லைப் போல காது கேட்காமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவள் சொன்னாள்: ‘நான் நேற்று சந்தைக்குப் போயிருந்தேன். அங்கே என்னவெல்லாம் விற்பனைக்காக வச்சிருந்தாங்க தெரியுமா? தமாஸ்கஸ்ல இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுத்துணிகள், இந்தியாவுல இருந்து கொண்டு வரப்பட்ட பர்தாக்கள், பெர்ஷியாவுல இருந்து கொண்டு வரப்பட்ட மாலைகள், யேமனிலிருந்து கொண்டு வரப்பட்ட வளையல்கள்... இந்தப் பொருட்களை நம்ம நகரத்திற்கு வியாபாரிகள் இப்போத்தான் கொண்டு வந்திருக்காங்க. என்னைப் பாருங்க... நான் கிழிஞ்சு போன ஆடைகளை அணிஞ்சிருக்கேன்! பேருக்குத்தான் நான் ஒரு பெரிய பணக்காரரின் மனைவி. அந்த அழகான ஆடைகள்ல நான் சிலவற்றை வாங்கணும்.’

அப்போதும் உணவை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவன் சொன்னான்:

‘என் அன்பே! தெருவுல நடந்து போறதுக்கும் மனசுல விருப்பப்பட்டதை வாங்குறதுக்கும் நீ தயங்கவே வேண்டாம்.’

காது கேட்காத மனைவி சொன்னாள்: ‘வேண்டாம்... நீங்க எப்பவும் வேண்டாம் வேண்டாம்னுதான் சொல்லுவீங்க. நான் கிழிந்து போன ஆடைகளுடன் நம்முடைய நண்பர்களுக்கு மத்தியில் வந்து நிற்கணுமா? உங்க செல்வத்தன்மையையும் என்னுடைய சொந்தக்காரர்களையும் நான் அவமானப்படுத்தணுமா?

‘அன்பே! நான் வேண்டாம்னு சொல்லலியே! உன் விருப்பம் போல நீ சந்தைக்குப் போகலாம். நகரத்துக்கு வந்திருக்குறதுலேயே மிகவும் அழகான ஆடைகளையும் இரத்தினங்களையும் நீ வாங்கலாம்’ - பணக்காரன் சொன்னான்.

தன் கணவனின் வார்த்தைகளை மீண்டும் தவறாக எடுத்துக் கொண்ட அவள் சொன்னாள்:

‘பணக்காரர்களிலேயே மிகவும் கஞ்சனாக இருக்குற மனிதர் நீங்கதான். அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்குற பொருட்களை நீங்க எனக்கு மறுக்குறீங்க. என் வயதிலுள்ள மற்ற பெண்கள் இந்த நகரத்துல விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்து பூந்தோட்டங்கள்ல நடந்து திரியிறாங்க.’

சொல்லி விட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் மார்பில் விழுந்தபோது, அவளின் அழுகைச் சத்தம் மேலும் பெரிதானது.

‘வேண்டாம்... வேண்டாம்னு நீங்க எப்பவும் என்கிட்ட சொல்லுவீங்க - நான் ஒரு ஆடையோ, இரத்தினமோ வேணும்னு விரும்பி கேட்டால்...’

அதைக் கேட்டு கணவனுக்கு அவள் மீது இரக்கம் உண்டானது. அவன் எழுந்து நின்றான். தன்னுடைய பணப்பெட்டியிலிருந்து கை நிறைய பொன்னை எடுத்து தன் மனைவிக்கு முன்னால் வைத்தான். பிறகு அன்பான குரலில் சொன்னான்: ‘அன்பே! சந்தைக்குப் போயி உனக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக்கோ.’

அன்று முதல் காது கேட்காத அந்த இளம் பெண் தான் ஏதாவது வேண்டும் என்று விரும்பிய நிமிடங்களில் கண்ணீர் துளிகளுடன் தன் கணவன் முன்னால் வந்து நிற்பாள். கணவன் எதுவும் பேசாமல் கை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து அவள் மடியில் போடுவான்.

அந்த இளம்பெண் ஒரு இளைஞனுடன் காதல் வயப்பட்டாள். அந்த இளைஞன் அதிக தூரம் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவன். அவன் மிகவும் தூரத்தில் இருக்கும்போது அவள் தன்னுடைய அறைக்குள் இருந்து கொண்டு அழுவாள்.

அப்படி அவள் அழுவதைப் பார்க்கும்போது அவளுடைய கணவன் தனக்குள் கூறிக் கொள்வான்: ‘சில புதிய வியாபாரிகள் வந்திருப்பாங்க. புதிய பட்டாடைகளும் அபூர்வமான இரத்தினங்களும் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும்.’

தொடர்ந்து கை நிறைய தங்கத்தைக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் வைப்பான்.


தேடல்

லெபனான் தாழ்வாரத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இரண்டு தத்துவஞானிகள் சந்தித்தார்கள். முதல் தத்துவஞானி கேட்டார்: ‘நீங்க எங்கே போறீங்க?’

‘நான் இளமையின் ஊற்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த மலைகளுக்கு இடையில்தான் இளமையின் ஊற்று இருக்குன்னு எனக்கு தெரியும். அந்த ஊற்று சூரியனைப் பார்த்ததும் விரியும்னு எனக்கு சில ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கு, சரி... அது இருக்கட்டும். நீங்க எதைத் தேடிக்கிட்டு இருக்கீங்க?’

‘மரணத்தைப் பற்றிய ரகசியத்தைத்தான்.’

இரண்டு தத்துவஞானிகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டார்கள். தங்களின் தத்துவத்தில் கூட அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்று ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டார்கள். மன ரீதியாக இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைப் பற்றி இருவருமே வெளிப்படுத்தினார்கள்.

இரண்டு தத்துவஞானிகளும் சண்டைபோட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு யாரென்றே தெரியாத, அவனுடைய சொந்த கிராமமே முட்டாள் என்று நினைத்திருந்த ஒரு மனிதன் அந்த வழியே நடந்து வந்தான். கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவன் சிறிது நேரம் நின்றான். அவர்களின் வாதங்களை அவன் கவனமாக கேட்டான். அடுத்த நிமிடம் அவன் தத்துவஞானிகளை நோக்கி சென்றான். அருகில் சென்று அவன் சொன்னான்: ‘நல்ல மனிதர்களே! நீங்கள் இருவரும் ஒரே விஷயத்துக்குச் சொந்தக்காரர்கள்தான். ஒரே விஷயத்தைத்தான் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வார்த்தைகள் வித்தியாசமா இருக்கு. அவ்வளவுதான் விஷயம். ஒருவர் இளமையின் ஊற்றைத் தேடிக் கொண்டிருக்கிங்க. இன்னொருவர் மரணத்தின் ரகசியத்தை. அவை இரண்டுமே ஒண்ணுன்றதுதான் உண்மை. உங்கரெண்டு பேர்களிடமும் ஒண்ணே ஒண்ணா அது இருக்கவும் செய்யுது.’

அந்த அறிமுகமில்லாத மனிதன் அங்கிருந்து நடந்தான். அவன் தனக்குள் மெதுவான குரலில் சொன்னான்: ‘நான் புறப்படுகிறேன். விஞ்ஞானிகளே! எனக்கு விடை தாருங்கள்.’

ஒரு நிமிடம் இரண்டு தத்துவ ஞானிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு பேராலும் எதுவும் பேச முடியவில்லை. அவர்கள் தங்களை மறந்து சிரித்து விட்டார்கள். பிறகு அவர்களில் ஒரு தத்துவஞானி சொன்னார்: ‘நல்லதாகப் போய் விட்டது. ரொம்பவும் நல்லதா ஆயிடுச்சு. இப்போ நாம ரெண்டு பேரும் ஒண்ணா நடந்து போகலாமே! ஒண்ணா தேடிப் போகலாமே!

தங்க செங்கோல்

ன்னன் தன் மனைவியிடம் சொன்னான்: ‘உண்மையாக பார்க்கப் போனால் நீ அரசியே அல்ல. எனக்கு மனைவியாக இருக்க உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. அந்த அளவுக்கு எதைப் பற்றியும் தெரியாத முட்டாளா நீ இருக்குற. நல்ல மனசு கூட உனக்கு இல்ல.’

அரசியும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அவள் சொன்னாள்: ‘நீங்க உங்களை மன்னனா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. ஆனா, வெறும் வாய்ச்சொல் வீரர்தான் நீங்கன்னு உறுதியா தெரிஞ்சு போச்சு.’

அவள் சொன்ன வார்த்தைகள் மன்னனை கோபம் கொள்ளச் செய்தது. அவன் தன் கையிலிருந்த தங்க செங்கோலை எடுத்து அரசியின் நெற்றியில் ஓங்கி அடித்தான்.

அப்போது அரண்மனை பணியாள் அங்கு வந்தான். அவன் சொன்னான்:

‘நல்ல காரியம்! மன்னா... ரொம்பவும் நல்ல காரியம்! இந்த நாட்டின் மிகப் பெரிய கலைஞன் உருவாக்கின செங்கோல் அது. மன்னனையும் மகாராணியையும் மக்கள் சாதாரணமா மறந்திடுவாங்க. ஆனால், தலைமுறை தலைமுறையாக ஒரு அழகான பொருளாக இந்த செங்கோல் இருந்துட்டு வருது. இப்போ மகாராணி தலையில் இருந்து மன்னரான நீங்க இரத்தம் ஒழுக வச்சிட்டீங்க. அதனால் இந்த செங்கோல் ஒரு தனி கவனத்தைப் பெறும். முன்னால் இருந்ததை விட இது எல்லோராலும் நினைக்கப்படும்.’

கண்ணுக்குத் தெரியாத எல்லையற்ற பரம்பொருள்

லைகளுக்கு மத்தியில் தாயும் மகனும் வாழ்ந்து வந்தார்கள். அந்தச் சிறுவன் அவளுடைய ஒரே வாரிசாக இருந்தான்.

வைத்தியர் என்னதான் காப்பாற்ற முயன்றாலும் முடியாமல் அந்தச் சிறுவன் காய்ச்சலில் படுத்து மரணத்தைத் தழுவி விட்டான்.

அந்தத் தாய் அதனால் அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. அவள் அழுது புரண்டாள்: ‘வைத்தியரே, என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. என் மகனோட மூச்சை ஒரேயடியாக நிறுத்தியது எது? அவனுடைய பாட்டை நிறுத்தியது எது? என்னிடம் சொல்லுங்க...’

‘அவனுடைய மரணத்துக்குக் காரணம் காய்ச்சல்.’

‘காய்ச்சல்னா என்ன?’

‘அதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது. அது உள்ளுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒண்ணு. மனிதக் கண்களால் அதை பார்க்க முடியாது.’

அதைச் சொல்லி விட்டு வைத்தியர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்.

அந்தத் தாய் தனக்குத் தானே பிதற்ற ஆரம்பித்தாள்: ‘கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் ஒண்ணு! மனிதக் கண்களால் அதைப் பார்க்க முடியாது!’

அன்று மாலை நேரம் அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக புரோகிதர் அங்கு வந்தார். கண்ணீர் விட்டவாறு அவள் கேட்டாள்: ‘என் மகன் என்னை விட்டு ஏன் போனான்? என்னுடைய ஒரே மகனை எப்படி நான் இழந்தேன்?’

அதற்கு புரோகிதர் சொன்னார்: ‘என் மகளே, அது கடவுளின் விதி.’

‘கடவுள்னா என்ன? எங்கே இருக்கு கடவுள்? நான் கடவுளைப் பார்ப்பேன். என் மார்பை கடவுளுக்கு முன்னால் கிழிச்சு காட்டுவேன். என் இதயத்துல இருந்து வழியிற இரத்தத்தை கடவுளோட பாதங்கள்ல விழச் செய்வேன். கடவுளை நான் எங்கே, பார்க்க முடியும்? சொல்லுங்க... என்கிட்ட சொல்லுங்க...’

‘கடவுள் எல்லையற்று பரந்து இருப்பவர். அவரை மனிதக் கண்களால் பார்க்க முடியாது’- புரோகிதர் சொன்னார்.

‘கண்ணுக்குத் தெரியாதது என் மகனைக் கொண்ணுடுச்சு. எல்லையற்று பரந்து இருப்பவனின் விதியின்படி அது நடந்திருக்கு. அப்படியா நாம யார்? என்ன?’ - அந்தத் தாய் அழுதுகொண்டே கேட்டாள்.

அப்போது அந்தப் பெண்ணின் தாய் அந்த அறைக்குள் வந்தாள். இறந்து போன சிறுவனின் உடலை மூடக்கூடிய துணி அவளுடைய கையில் இருந்தது. புரேரகிதரின் வார்த்தைகளை அவள் கேட்டாள். மகளுடைய பலவீனமான அழுகையையும்தான். துணியால் அவள் சிறுவனை மூடினாள். பிறகு மகளின் கைகளைத் தன்னுடைய கைகளில் எடுத்த அவள் சொன்னாள்: ‘என் மகளே, நாமதான் கண்ணுக்குத் தெரியாததும், எல்லையற்று பரந்து இருப்பதும், அவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் வழியும் நாமதான்.’

வண்ணத்துப் பூச்சியும் திமிங்கிலமும்

ரு மாலை நேரத்தில் பெண்ணும் ஆணும் சவாரி வண்டியில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்கெனவே சந்தித்தவர்கள்தான்.

அந்த ஆள் ஒரு கவிஞன். பெண்ணின் அருகில் அமர்ந்ததும் கதைகளைக் கூறி அவளை மகிழ்ச்சிப்படுத்த அவன் எண்ணினான். சில கதைகள் அவனே படைத்தவை. வேறு சில கதைகள் அவனுக்கு சொந்தம் அல்லாதவை.

அவன் கதை சொல்ல ஆரம்பித்தவுடனே, அவள் தூங்க தொடங்கி விட்டாள். திடீரென்று வண்டி ஒரு பக்கம் சாய்ந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள். கண் விழித்த அவள் சொன்னாள்: ‘நீங்க சொன்ன அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. என்ன அருமையான கதை சொல்றீங்க! ‘ஜோனாவும் திமிங்கிலமும்’ கதையைச் சொல்றேன்...’

‘பெண்ணே... நான் சொன்னது என் சொந்த கதை. ‘வண்ணத்துப் பூச்சியும் வெள்ளை ரோஜாவும்’ என்ற கதை. அவை இரண்டு ஒன்றோடொன்று எப்படி நட்பாக இருந்தன என்ற கதை!’


வந்தது அமைதி

பூக்களுடன் காட்சியளித்த கிளை தனக்கு அருகிலிருந்த கிளையிடம் சொன்னது: ‘இன்றைய நாள் ரொம்பவும் மோசமா இருக்கும்போல இருக்கே!’

அதற்கு அருகிலிருந்த கிளை சொன்னது: ‘உண்மைதான். வெட்டித்தனமான நாள்தான்.’

அப்போது ஓரு குருவி அந்தக் கிளையில் வந்து உட்கார்ந்தது. இன்னொரு குருவி அருகிலிருந்த கிளையில் வந்து உட்கார்ந்தது.

குருவிகளிலொன்று ‘க்றீச் க்றீச்’ என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டு சொன்னது: ‘என் ஜோடி என்னை விட்டு போயிடுச்சு.’

‘என் ஜோடியும் என்னை விட்டு போயிடுச்சு. அவள் இனி திரும்பி வரப்போறது இல்லைதான். எதுக்கு அதை நெனைச்சுக் கவலைப்படணும்? இரண்டு குருவிகளும் திட்டுவதும் குறை கூறுவதுமாக இருந்தன. அவை இரண்டும் ‘காச் மூச்’ என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவற்றின் உரத்த சத்தம் காற்றில் கலந்து ஒலித்தது.

திடீரென்று வேறு இரண்டு குருவிகள் வானத்திலிருந்து கீழே இறங்கி வந்தன. நிலை குலைந்த மனதுடன் இருந்த முதல் இரண்டு குருவிகளுக்குப் பக்கத்தில் சத்தம் எதையும் உண்டாக்காமல் அந்த குருவிகள் போய் உட்கார்ந்தன. அப்போது அங்கு முன்பில்லாத அமைதி நிலவியது.

அந்த நான்கு குருவிகளும் ஜோடிகளாகி பறந்து சென்றன.

அப்போது முதல் கிளை இரண்டாவது கிளையிடம் சொன்னது: ‘எந்த அளவுக்கு அந்த குருவிகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தன! இப்படியும் அப்படியுமாய் ஓடிக்கொண்டு, மேலும் கீழுமா பறந்து கொண்டு... என்ன ஆரவாரம்!’

‘நீ உன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. இப்போது அமைதியா இருக்கா இல்லையா? விருப்பம்போல இடம் இருக்கு. மேலே இருக்குறவங்க அமைதியா இருக்குறப்போ கீழே இருப்பவர்களும் அமைதியா இருக்குறதுதான் சரின்னு நான் நினைக்கிறேன். காற்று வீசுறப்போ மேலம் கொஞ்சம் நெருக்கமா நீங்க வர்றேங்கள்ல! அந்த மாதிரி...’

‘கொஞ்சமும் எதிர்பார்க்காம, அமைதியான சூழ்நிலைக்காக, வசந்த காலம் முடியிறதுக்கு முன்னாடி... அப்படித்தானே?’

பலமான காற்றோடு சேர்ந்து அவன் வேகமாக ஆடினான்- அவளை இறுக அணைத்துக் கொள்வதற்காக.

நிழல்

ஜுன் மாதத்தில் ஒரு நாள். புல் மரத்தின் நிழலைப் பார்த்து சொன்னது:

‘நீ இடது பக்கமும் வலது பக்கமுமா அப்பப்போ ஆடிக்கிட்டு இருக்கே! நான் அமைதியா இருக்கிறதை நீ தொந்தரவு செய்யிற!’

நிழல் அதற்கு பதில் சொன்னது: நான் இல்லை. நான் இல்லை. வானத்தைப் பாரு. காற்றில் கிழக்கும் மேற்குமா அசையிற ஒரு மரம் இருக்கு. சூரியனுக்கும் பூமிக்கும் மத்தியில...

புல் மேலே பார்த்தது. முதலில் மரம் கண்ணில் பட்டது. அப்போது அது தனக்குள் கூறிக் கொண்டது: ‘அதை எதற்கு பார்க்கணும்? என்னை விட பெரிய ஒரு புல் அங்கே இருக்கு.’

அடுத்த நிமிடம் புல் அமைதியானது.

அலைந்து திரிந்து நடப்பவர்

நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நான் அந்த மனிதரைச் சந்தித்தேன். அங்க வஸ்திரம் அணிந்திருந்த அந்த மனிதரின் கையில் ஊன்றுகோல் இருந்தது. முகத்தில் கவலை நிழல் பரப்பி விட்டிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததும் வணக்கம் கூறிக் கொண்டோம். அதற்குப் பிறகு நான் அந்த மனிதனை அழைத்தேன்: ‘வாங்க. விருந்தாளியாக என் வீட்டுக்கு வாங்க.’

அவர் வந்தார்.

வீட்டு வாசலில் என் மனைவியும் பிள்ளைகளும் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து அந்த மனிதர் புன்னகை செய்தார். அவருடைய வருகை அவர்களுக்கும் பிடித்திருந்தது.

‘நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்தோம். அந்த மனிதன் மிகவும் அமைதியாகவும், ஆழமான சிந்தனையிலும் இருந்ததைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.

இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் நெருப்பைச் சுற்றி அமர்ந்தோம். அந்த மனிதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்ததைப் பற்றி நான் விசாரித்தேன்.

அன்றும் மறுநாளும் எத்தனையோ கதைகளை அவர் கூறினார். அவர் மிகவும் இரக்க மனம் கொண்டவராக இருந்தார். ஆனால், நான் இங்கு கூறும் கதைகள் அவருடைய வாழ்க்கையில் உண்டான கசப்பான அனுபவங்களில் பிறந்தவை. அவர் தான் நடந்து சென்ற பாதையில் பார்த்த பெரிய விஷயங்களையும், சாதாரண விஷயங்களையும் அடக்கிய கதைகள் அவை!

மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் புறப்பட்டு போய்விட்டார். ஒரு விருந்தாளி போய்விட்டதாக எங்களுக்கு தோன்றவில்லை. எங்களில் ஒருவர் அப்போது கூட வெளியிலிருக்கும் தோட்டத்தில் இருக்கிறார் என்றும் இன்னும் அவர் திரும்பி வரவில்லை என்றும்தான் எங்களுக்கு தோன்றுகிறது.

பைத்தியக்காரன்

‘நீங்க கேக்குறீங்க, நான் எப்படி பைத்தியக்காரன் ஆனேன்னு. நடந்தது இதுதான். பல கடவுள்களும் பிறப்பதற்கு முன்பு ஒருநாள். ஆழமான தூக்கத்திலிருந்து கண் விழிக்கிறப்போ, என்னுடைய எல்லா முகமூடிகளும் திருடு போய்விட்டிருந்தன. நான் வடிவமைத்து வைத்திருந்த ஏழு முகமூடிகள். ஏழு பிறவிகளில் நான் அணிந்தவை அவை. மூகமுடி இல்லாமல் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் தெருக்கள் வழியாக நான் ஓடினேன். உரத்த குரலில் கூப்பாடு போட்டேன்: ‘திருடர்கள்! மோசமான திருடர்கள்!’

பெண்களும் ஆண்களும் என்னைப் பார்த்து கிண்டல் பண்ணினாங்க. சிலர் பயந்து நடுங்கி தங்களின் வீடுகளுக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள்.

நான் சந்தை பக்கம் சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞன் உரத்த குரலில் சொன்னான்: ‘அதோ ஒரு பைத்தியக்காரன்!’

அவனைப் பார்க்கணும்னு நினைச்சு நான் மேலே பார்த்தேன். சூரியன் முதல் தடவையா முகமூடியில்லாத என் முகத்தை முத்தமிட்டது. என் மனம் சூரியன் மீது கொண்ட காதலால் துள்ளிக் குதித்தது. அதற்குப் பிறகு முகமூடிகள் எனக்கு எந்தச் சமயத்திலும் தேவைப்படவேயில்லை.

உணர்ச்சிவசப்பட்டு நான் சொன்னேன்: ‘ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்! என் முகமூடிகளைத் திருடிய திருடர்களே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்!’

கடைசியில் நான் ஒரு பைத்தியக்காரன் ஆகிவிட்டேன். என் பைத்தியக்காரத்தனத்தில் சுதந்திரத்தையும் பத்திரத் தன்மையையும் நான் உணர்ந்தேன். தனிமையின் சுதந்திரத்தையும் புரிந்து கொள்வதில் கிடைத்த பத்திரத் தன்மையையும் காரணம்- நம்மை புரிந்து கொள்பவர்கள் நம்மிடமிருக்கும் சிலவற்றையாவது அடிமையாக்கத்தான் செய்கிறார்கள்.

அதே நேரத்தில் என்னுடைய பத்திரத் தன்மையைப் பற்றி நான் அதிகமாக ஆணவம் கொள்ளவும் இல்லை. ஒரு திருடன் கூட இன்னொரு திருடனிடமிருந்து பத்திரத் தன்மையுடன் தான் இருக்கிறான்.’


கடவுளும் நானும்

த்தனையோ வருடங்களுக்கு முன்னால் பேசக் கூடிய ஆற்றல் என்ற ஒன்று என் உதடுகளுக்கு வந்தபோது ‘கடவுளே! நான் உங்களின் அடிமை. உங்களின் இறுதி தீர்மானம் தான் என்னுடைய சட்டம். நான் எப்போதும் உங்கள் விருப்பப்படி நடப்பேன்.’

எதுவும் சொல்லாமல் மிகவும் பலமான ஒரு காற்றைப் போல கடவுள் என்னைக் கடந்து சென்றார்.

ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலைமீது நான் மீண்டும் ஏறி, கடவுளிடம் சொன்னேன்: ‘என்னைப் படைத்த கடவுளே! நான் உங்களின் படைப்பு, என்னைக் களி மண்ணுல இருந்து நீங்க படைச்சீங்க. என்னுடைய எல்லா விஷயங்களுக்குமாக நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.’

எதுவும் சொல்லாமல், வேகம் கொண்ட ஆயிரம் சிறகுகளைப் போல கடவுள் என்னைக் கடந்து சென்றார்.

ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலைமீது நான் மீண்டும் ஏறி, கடவுளிடம் சொன்னேன்: ‘என்னைப் படைத்த கடவுளே! நான் உங்களின் படைப்பு. என்னைக் களி மண்ணுல இருந்து நீங்க படைச்சீங்க. என்னுடைய எல்லா விஷயங்களுக்குமாக நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.’

எதுவும் சொல்லாமல், வேகம் கொண்ட ஆயிரம் சிறுகளைப் போல கடவுள் என்னைக் கடந்து சென்றார்.

ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலை மீது நான் மீண்டும் ஏறி, கடவுளிடம் பேசினேன்:

‘தந்தையே! நான் உங்களின் மகன். கருணையாலும், அன்பாலும் நீங்கள் எனக்கு பிறவி அளித்தீர்கள். அன்பு வழியாகவும் பிரார்த்தனை வழியாகவும் உங்கள் சாம்ராஜ்யத்திற்கு நான் வாரிசாக இருப்பேன்.’

பதில் எதுவும் சொல்லாமல், தூரத்திலிருக்கும் மலைகளை மறைக்கக் கூடிய பனிப்படலத்தைப் போல கடவுள் மறைந்தார்.

ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலை மீது நான் ஏறி கடவுளிடம் மீண்டும் பேசினேன்:

‘என் கடவுளே! என் இலட்சியமே! என் அடைக்கலமே! நான் உங்களின் நேற்று. நீங்கள் என்னுடைய நாளை. உங்களின் பூமியில் வேர் நான். வானத்தில் என்னுடைய மலர் நீங்கள். சூரியனின் ஆசீர்வாதத்தால் நாம் ஒன்றாக வளர்கிறோம்.’

கடவுள் என் மீது சாய்ந்தார். இனிய மந்திரங்களை என்னுடைய காதுகளில் அவர் சொன்னார். பாய்ந்து வரும் அருவியை கடல் வாரி அணைத்துக் கொள்வதைப் போல கடவுள் என்னை இறுக கட்டிக் கொண்டார்.

பிறகு பள்ளத்தாக்குகள் வழியாகவும், சமதளங்கள் வழியாகவும் நான் ஓடியபோது, கடவுள் அங்கும் இருந்தார்.

காதல்

ளம் கவிஞன் அரசியிடம் சொன்னான்: ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்.’

‘நான் உன் மீதும் அன்பு செலுத்துகிறேன். குழந்தே!

‘நான் உங்க குழந்தை இல்ல. நான் ஒரு ஆண். நான் உங்களைக் காதலிக்கிறேன்.’

‘நான் ஒரு தாய். ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் ஆகியோரின் தாய். அவர்கள் எல்லோரும் தங்களின் பிள்ளைகளின், பெண் பிள்ளைகளின் தந்தையும், தாயும் ஆவார்கள். என் ஆண் பிள்ளைகளில் ஒருவன் உன்னை விட வயது அதிகம் கொண்டவன்.

‘இருந்தாலும் நான் உங்களை காதலிக்கிறேன்.’- அந்த இளம் கவிஞன் சொன்னான்.

அதற்கடுத்த சில நாட்களில் அந்த அரசி மரணத்தைத் தழுவினாள். ஆனால், அவளுடைய இறுதி மூச்சு பூமியின் மதிப்பு மிக்க சுவாசத்தை மீண்டும் ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு அரசி தன் மனதிற்குள் கூறினாள்: ‘நான் மிகவும் அதிகமாக விரும்பக் கூடியவனே! என்னுடைய ஒரே வாரிசே! என் இளம் கவிஞனே என்றாவதொரு நாள் நாம் மீண்டும் சந்திப்போம். அப்போ நான் நிச்சயம் எழுபது வயது பெண்ணாக இருக்க மாட்டேன். அது மட்டும் உண்மை.’           

கடவுளை அடைய

ள்ளத்தாக்கு வழியே இரண்டு மனிதர்கள் நடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவன் மலையின் அடிவாரத்தை விரலால் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்: ‘அதோ பாருங்க ஒரு ஆசிரமம் இருக்குறது தெரியுதா? நீண்ட காலமாக இந்த உலகை விட்டு விடுதலை பெற்ற ஒருவர் அந்த ஆசிரமத்தில் இருக்கிறார். இந்த பூமியில் அவர் தேடிக் கொண்டிருப்பது கடவுளை மட்டும்தான். அவர் கடவுளை நிச்சயம் அடைய முடியாது. தன்னுடைய ஆசிரமத்தையும், ஆசிரமத்தின் தனிமையையும் விட்டுட்டு நம்முடைய உலகத்துக்கு திரும்ப வரும் வரை அவர் கடவுளைப் பார்க்கவே முடியாது, நம்முடைய கவலைகளையும் சந்தோஷத்தையும் பங்கு போட்டுக் கொள்ளவும், திருமணக் கொண்டாட்டங்களில் நடனம் ஆடவும், இறந்து போன மனிதர்களின் பாடைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு அழுவதற்கும் திரும்பி வர்றது வரையில் அவர் கடவுளைப் பார்க்கவே முடியாது.’

‘நீங்க சொன்னதை நானும் ஒத்துக்குறேன். இருந்தாலும் அந்த துறவி ரொம்பவும் நல்லவர் என்பதுதான் என்னுடைய எண்ணம். ஒரு நல்ல மனிதர் மற்றவர்களிடமிருந்து விலகிப் போவதன் மூலம் நன்மை செய்றார்னா அது உண்மையிலேயே நல்ல விஷயம்தானே? இந்த மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நடித்துக் கொண்டிருப்பதை விட அது மிகப் பெரிய ஒரு விஷயம் அல்லவா?’

நதியின் வழிகள்

குதித்து வேகமாக கீழே விழுந்து கொண்டிருந்த நதியின் தாழ்வுப் பகுதியில் இரண்டு சிறு அருவிகள் சந்தித்தன.

முதல் அருவி கேட்டது:

‘நண்பனே, நீ எப்படி இங்கே வந்தே? வந்த வழி எப்படி இருந்தது?’

‘நான் வந்த பாதை ரொம்பவும் சிரமங்கள் கொண்டதா இருந்தது. இயந்திரத்தின் சக்கரம் முறிஞ்சு போச்சு. என் ஓட்டத்திலிருந்து தன்னுடைய செடிகளுக்கு என்னைக் கொண்டு போன விவசாயி இறந்துட்டாரு. எதுவுமே செய்யாமல் சுயநல எண்ணங்களுடன் வெயில்ல அலைஞ்சு திரிபவர்களின் நாற்றமெடுத்த அழுக்குடன் வருவதற்கு எனக்கு என்னவோ மாதிரி இருந்துச்சு. சகோதரரே, உன் வழி எப்படி இருந்தது?’

‘நான் வந்த பாதை மிகவும் வித்தியாசமா இருந்தது. அருமையான வாசனையைக் கொண்ட மலர்களுக்கும் வெட்கத்துடன் குனிந்து கொண்டிருக்கும் மரங்களுக்கும் நடுவில் நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தேன். ஆண்களும் பெண்களும் வெள்ளிப் பாத்திரங்களில் என்னை மொண்டு குடித்தார்கள். சிறு குழந்தைகள் தங்களின் ரோஜாப் பூவைப் போன்ற சிறு கால்களால் என் ஓரத்தில் நனைத்து விளையாடினார்கள். என்னைச் சுற்றி ஒரே சந்தோஷச் சிரிப்புகளும், இனிமையான பாடல்களும்தான்.... நீ வந்த பாதை அந்த அளவுக்கு மகிழ்ச்சியானதா இல்ல...! அப்படித்தானே? கேட்கவே ரொம்பவும் கஷ்டமாக இருக்கு.’

அப்போது நதி உரத்த குரலில் சொன்னது: ‘வாங்க... வாங்க... நாம கடலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். சீக்கிரமா வாங்க... இதோ நாம கடலை நெருங்கி விட்டோம். வாங்க... சீக்கிரமா வாங்க... என்னுடன் இணைத்து விட்டால், அலைஞ்சு திரிஞ்ச விஷயத்தையெல்லாம் நீங்க மறந்தே ஆகணும் - அது சந்தோஷமுள்ளதா இருந்தாலும் கவலைகள் நிறைந்ததா இருந்தாலும். வாங்க... சீக்கிரமா வாங்க... நம்முடைய கடல் அன்னையின் இதயத்தை நாம அடையிறப்போ நானும்  நீங்களும் நாம வந்த பாதைகளை முழுமையா மறந்திடுவோம்.


சந்தோஷமும் கவலையும்

மேமாதத்தில் ஒருநாள் குளக்கரையில் சந்தோஷமும் கவலையும் சந்தித்துக் கொண்டன. இருவரும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தனர். தகதகத்துக் கொண்டிருந்த நீர்ப்பரப்பிற்கு அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

பூமியில் நிறைந்திருக்கும் அழகைப் பற்றியும் காடுகளிலும் மலைகளிலும் உள்ள வாழ்க்கையின் வசந்தத்தைப் பற்றியும் சூரியன் தோன்றும் போதும் மறையும் போதும் கேட்கக் கூடிய பாடல்களைப் பற்றியும் சந்தோஷம் பேசியது.    

சந்தோஷம் சொன்ன எல்லா விஷயங்களையும் கவலை ஒத்துக் கொண்டது. அந்த நிமிடத்தின் வசீகரத் தன்மையையும் அழகையும் அது புரிந்துகொண்டதே அதற்குக் காரணம்.

மே மாதத்தில் வயல்களும் மலைகளும் என்பதைப் பற்றி கவலை நீண்ட நேரம் சொல்லிக் கொண்டே இருந்தது.

அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லா விஷயங்களிலும் அவர்கள் ஒரே மனநிலையைக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரத்தில் குளத்தின் அக்கரையில் இரண்டு வேடர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நீர்ப்பரப்பு வழியாக இந்தக் கரையைப் பார்த்த ஒரு வேடன் கேட்டான்:

‘அந்த ரெண்டு ஆட்களும் யாரு?’

‘ரெண்டு ஆட்கள்னா சொன்னே? ஒரே ஒரு ஆளுதானே! தண்ணில கூட ஒரே ஒரு ஆளோட உருவம்தானே தெரியுது!’

‘இல்ல... இல்ல... ரெண்டு ஆட்கள் இருக்காங்க. குளத்துல இருக்கிற தண்ணியில ரெண்டு ஆட்களோட உருவம் தெரியுது!’

‘எனக்கு ஒரு ஆள் இருக்குறதுதான் தெரியுது.’

‘எனக்கு தெளிவா ரெண்டு ஆட்கள் தெரியிறாங்க.’

இப்போது வரையிலும் வேடர்களில் ஒரு ஆள் தனக்குத் தெரிவது ஒரு ஆள் என்றும், இன்னொருவர் தனக்குத் தெரிவது இரண்டு ஆட்கள் என்றும் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இரண்டு ஆட்களைப் பார்ப்பதாகக் கூறும் வேடன் தன் நண்பனுக்கு சரியான பார்வை சக்தி இல்லை என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.

புல்லின் கோபம்

குளிர்காலத்தில் புல் இலையை கோபித்தது: ‘நீ கீழே விழுறப்போ என்ன சத்தம் கேட்குது! என்னுடைய கனவுகளை நீ அதன் மூலம் சிதறடிக்கிறே!’

அதற்கு வெறுப்புடன் இலை பதில் சொன்னது:

‘தரையில் பிறந்து அதே தரையிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவன் நீ. இசை என்றால் என்னவென்று தெரியாத முன் கோபக்காரன் நீ. உன்னதமான காற்று மண்டலத்தில் நீ வாழல. ஒரு பாடலைப் பாட கூட உன்னால் முடியாது.’

பூமியில் விழுந்த இலை உறக்கத்தில் மூழ்கியது. வசந்த காலம் வந்தபோது அது கண் விழித்தது. அப்போது அது ஒரு புல்லாக மாறியிருந்தது.

மீண்டும் குளிர்காலம் வந்தது. அது அப்போதும் நல்ல உறக்கத்தில் இருந்தது. அதற்கு மேலே காற்றில் இலைகள் விழுந்து கொண்டிருந்தன. தனக்குத்தானே அது கூறிக்கொண்டது:

‘குளிர்காலத்தின் இந்த இலைகள்! என்ன சத்தத்தை இந்த இலைகள் உண்டாக்குகின்றன! என்னுடைய கனவுகளையெல்லாம் இந்த இலைகள் சிதறடிக்கின்றன!

வான இயல் ஆராய்ச்சியாளர்

தேவாலயத்தின் நிழலில் ஒரு பார்வை தெரியாத மனிதன் தனியே அமர்ந்திருப்பதை நானும் என்னுடைய நண்பனும் பார்த்தோம். நண்பன் அவனுக்கு நேராக விரலைக் காட்டி சொன்னான்: ‘அதோ பார்... நம்ம ஊரின் விஞ்ஞானி அந்த ஆள்தான்.’

நான் நண்பனிடமிருந்து பிரிந்து பார்வை தெரியாத அந்த மனிதனிடம் சென்றேன். அவனுக்கு ‘வணக்கம்’ சொன்னேன். ஒருவரோடொருவர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கு மத்தியில் நான் கேட்டேன்:

‘நான் கேட்கும் இந்த கேள்விக்காக என்னை நீங்க மன்னிக்கணும். உங்களுக்கு எப்போ இருந்து பார்வை சக்தி இல்லாமற் போனது?’

‘என் பிறவியில இருந்து.’

‘விஞ்ஞானத்தின் எந்தப் பிரிவில் உங்களுக்கு ஈடுபாடு.’

‘நான் ஒரு வான இயல் ஆராய்ச்சியாளன்.’

அவன் தன்னுடைய மார்பில் கை வைத்துக் கொண்டே சொன்னான்: ‘இந்த சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.’

நாடோடி

நான் ஒரு முறை ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தேன். சிறிது பைத்தியக்காரனைப் போல இருக்கும் அந்த ஆள் சொன்னான்: ‘நான் ஒரு நாடோடி. பூமியில் குள்ளர்களுக்கு மத்தியில் நடப்பதைப் போல் நான் உணர்றேன். என்னுடைய தலை பூமியில் அவர்களின் தலையில இருந்து எழுபது முழம் உயரத்துல இருக்கு. அதனால் உயர்ந்த, சுதந்திரமான பல சிந்தனைகள் என்னிடம் உண்டாகின்றன.

உண்மையாக சொல்லப் போனால், நான் நடப்பது மனிதர்கள் மத்தியில் இல்லை. அவர்களுக்கு மேலே நான் நடக்குறேன். பரந்து கிடக்கும் வயல்களில் என் காலடிச் சுவடுகளை மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியுது. என் காலடிச் சுவடுகளின் வடிவத்தைப் பற்றியும், அளவில் அவை பெரிதாக இருப்பதைப் பற்றியும் அவர்கள் விவாதிப்பதையும், ஆச்சரியப்படுவதையும் நான் பல நேரங்கள்ல கேட்டிருக்கேன்.

சிலர் சொல்வாங்க எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த ராட்சஷ உயிரினத்தின் சுவடுகள் அவை என்று. தொலை தூரத்துல இருந்து எரி நட்சத்திரங்கள் விழுந்தது அங்குதான் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால், என் நண்பனே... உங்களுக்கு நல்லா தெரியும் - அவை ஒரு நாடோடியின் காலடிச் சுவடுகள்தானே தவிர, வேறு எதுவும் இல்லை என்ற உண்மை.’

சோளக்கொல்லை பொம்மை

சோளக் கொல்லை பொம்மையிடம் ஒரு நாள் நான் சொன்னேன்: ‘தனிமையான இந்த வயல்ல இருந்து நீ ரொம்பவும் களைச்சுப் போயிருப்பே!’

‘நான் எந்தச் சமயத்திலும் களைப்புன்னு ஒண்ணை உணர்ந்ததே இல்ல. பயமுறுத்துகிறோம்ன்ற சந்தோஷம் ஆழமானதும் நீண்ட நேரமா நிலை பெற்று நிற்கக் கூடியதுமாச்சே!’

ஒரு நிமிடம் சிந்தித்து விட்டு, நானும் அதை ஒத்துக் கொண்டேன்:

‘நீ சொல்றது சரிதான். அந்த சந்தோஷத்தை நானும் அனுபவிச்சிருக்கேன்.’

‘வைக்கோல் நிறைக்கப்பட்டவர்கள் மட்டும்தான் அந்த சந்தோஷத்தை உணர முடியும்.’

சோளக்கொல்லை பொம்மை சொன்னது.

அந்த நிமிடமே நான் அங்கிருந்து கிளம்பினேன். அது என்னைப் பாராட்டியதா இல்லாவிட்டால் அவமானப்படுத்தியதா என்பதையே கண்டுபிடிக்க முடியாமல்.

ஒரு வருடம் கடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சோளக்கொல்லை பொம்மை ஒரு தத்துவ ஞானியாக மாறிவிட்டிருந்தது. அதற்கருகில் மீண்டும் ஒரு நாள் நான் போனேன். அப்போது அங்கு நான் பார்த்தது என்ன தெரியுமா?

அந்த பொம்மையின் தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடு கட்டிக் கொண்டிருந்தன.

தூக்கத்தில் நடப்பவர்கள்

நான் பிறந்த ஊரில் ஒரு தாயும் மகளும் வாழ்ந்தார்கள். இருவருமே தூக்கத்தில் நடக்கக் கூடியவர்கள்.

அமைதி உலகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஒரு இரவு நேரம். தூக்கத்தில் நடக்கும் தாயும் மகளும் பனி போர்த்தி விட்டிருந்த தங்களுடைய தோட்டத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள்.

தாய் உரத்த குரலில் சொன்னாள்: ‘என்னுடைய பரம எதிரி! என்னுடைய இளமையை அழித்தவள்! என்னுடைய அழிவிலிருந்து தன்னுடைய வாழ்க்கையைப் படைத்துக் கொண்டவள்! என்னால் உன்னை கொல்ல முடிந்தால்...!’

மகள் அதற்கு பதில் சொன்னாள்: வெறுப்பு நிறைந்த பெண்! சுயநலவாதி! கிழவி! எனக்கும் என்னுடைய சுதந்திரமான செயல்களுக்கும் நடுவில் நின்று கொண்டிருக்கும் பெண்! வாடி வதங்கிப் போன தன்னுடைய வாழ்க்கையின் எதிரொளியாக என்னுடைய வாழ்க்கையை மாற்ற ஆசைப்பட்டவள்! நீ செத்துப் போயிருந்தா...!’

அந்த நிமிடத்தில் காலை நேர சேவல் கூவியது.

இரண்டு பெண்களின் தூக்கமும் கலைந்தது. தாய் அன்புடன் கேட்டாள்: ‘இது நீயா என் மகளே?’

அதே அன்புடன் மகள் பதில் சொன்னாள்: ‘ஆமாம்... என் அன்பான தாயே!


எலி மழையா எலும்பு மழையா?

கூட்டமாக இருந்த பூனைகளுக்கு மத்தியில் புத்திசாலியான ஒரு நாய் கடந்து போனது.

அருகில் வந்த பிறகும் பூனைகள் தன்னை கவனிக்கவே இல்லை என்பதை நாய் புரிந்து கொண்டது. அது நின்றது.

அப்போது பூனைக் கூட்டத்திலிருந்து தைரியசாலியான ஒரு பெரிய பூனை தன் தலையை உயர்த்தி எல்லோரையும் பார்த்தது. பிறகு அது சொன்னது: ‘சகோதரர்களே! நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உண்மையாகவே எலி மழை பெய்யும். சந்தேகப்படவே வேண்டாம்.’

அதைக்கேட்டதும் நாய்க்கு சிரிப்பு வந்தது. அது பூனைகள் பக்கம் திரும்பி நின்று சொன்னது: ‘குருடர்களே! முட்டாள்களே! பூனைகளே! முன்னோர்களும் எழுதி வைத்ததும் நானும் என்னுடைய பெற்றோர்களும் தெரிந்திருப்பதும் என்ன? பிரார்த்தனைக்கும் நம்பிக்கைக்கும் வேண்டுகோள்களுக்கும் பதிலாக மழை போல வந்து விழுந்தவை எலிகள் அல்ல, எலும்புகள்தான்.’

இரண்டு துறவிகள்

னியாக இருந்த மலையில் இரண்டு துறவிகள் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பு செலுத்தினார்கள். கடவுளை அவர்கள் தொழுவார்கள்.

அவர்களிடம் சொந்தம் என்று இருந்தது ஒரே ஒரு மண் சட்டி மட்டும்தான்.

மூத்த துறவியின் இதயத்திற்குள் பிசாசு நுழைந்தது. அவர் இளைய துறவிக்கு அருகில் சென்று சொன்னார்: ‘நீண்ட காலமாக நாம ஒண்ணா இங்கே தங்கியிருக்கோம். நாம பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம்ம சொத்தை பிரிப்போம்.’

அதைக் கேட்டு இளைய துறவி கவலைக்குள்ளானார். அவர் சொன்னார்: ‘அண்ணா! நீங்க என்னைவிட்டு போகக் கூடாது. நீங்க போறதா சொல்றது என்னை வேதனைப்பட வைக்குது. போகணும்ன்றது கட்டாயம்னா, அப்படியே நடக்கட்டும்.’

சொல்லிவிட்டு அவர் மண் சட்டியை எடுத்து மூத்த துறவியிடம் தந்தார். பிறகு அவர் தொடர்ந்து சொன்னார்: ‘இதை நாம பாகம் பிரிக்க முடியாது. நீங்கள் இதை வச்சுக்குங்க.’

‘நான் தானம் வாங்க மாட்டேன். எனக்குச் சொந்தமானது மட்டும்தான் எனக்கு வேணும். இதை பாகம் பிரிச்சே ஆகணும்’- மூத்த துறவி சொன்னார்.

‘இந்தச் சட்டியை உடைச்சா உங்களுக்கோ எனக்கோ ஒரு பிரயோஜனமும் இல்ல. உங்களுக்கு சந்தோஷம்னா நாம சீட்டு குலுக்கி போடுவோம்.’

‘நியாயமா எனக்கு கிடைக்க வேண்டியது மட்டும் கிடைச்சா போதும். நியாயத்தையும் உரிமையையும் சாதாரண அதிர்ஷ்ட சோதனையிடம் விட்டுவிட முடியாது. எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல. மண்சட்டியைப் பாகம் பிரிச்சே ஆகணும்.’

அதற்கு மேல் வழி சொல்ல முடியாமல் இளைய துறவி சொன்னார்: ‘உங்களுடைய இறுதி முடிவு அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். மண்சட்டியை நாம உடைப்போம்.’

அதைக் கேட்டு மூத்த துறவியின் முகம் இருண்டு விட்டது. அவர் புன்னகைத்தார். அவர் சொன்னார்: ‘கோழை! ஒரு சண்டைக்கு நீ தயாராக இல்லையா என்ன?’

பண்டிதன்

றை முழுக்க தையல் ஊசிகளை வைத்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.

இயேசுவின் தாய் அந்த மனிதனைத் தேடிச் சென்று கெஞ்சினார்: ‘என் மகன் அணிந்திருந்த ஆடை கிழிந்து போய் விட்டது. அதை உடனடியா தைக்கணும். அவன் தேவாலயத்துக்குப் போறதுக்கு முன்னாடியே நான் தைக்கணும். தயவு செய்து எனக்கு ஒரு ஊசி தர முடியுமா?’

ஒரு ஊசியைக் கூட அந்த மனிதன் தருவதற்கு தயாராக இல்லை. கொடுக்கல் வாங்கலைப் பற்றி அவன் ஒரு சொற்பொழிவு நடத்தினான் - தேவாலயத்திற்கு மகன் போவதற்கு முன்பே எப்படி ஆடையைத் தைத்து தயார் பண்ணுவது என்பதைப் பற்றி.

நீதி நிறைவேற்றல்

ரவு அரண்மனையில் விருந்து நடக்கும்போது ஒரு மனிதன் அங்கு வந்தான். அவன் மன்னனை வணங்கினான். விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கு வந்த மனிதனையே பார்த்தார்கள். அவனுக்கு ஒரு கண் இல்லை. கண் குழியிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

‘உங்களுக்கு என்ன ஆச்சு?’ - மன்னன் விசாரித்தான்.

‘மன்னா! நான் ஒரு திருடன். நேற்று இரவு நிலவு இல்லாமலிருந்தது. நான் ஒரு வியாபாரியின் கடைக்கு திருடுவதற்காக போனேன். ஜன்னல் வழியாதான் நான் ஏறினேன். அப்போ நான் தப்பு பண்ணிட்டேன். நான் ஒரு நெய்தல்காரனின் நெசவு நடக்குற இடத்துக்கு தப்பா போயிட்டேன். அப்போ நல்ல இருட்டு. இடிச்சு எனக்கு கண் போயிடுச்சு. அந்த நெசவு செய்யிற மனிதன்தான் எல்லாத்துக்கும் காரணம். மன்னா! நீங்கதான் நீதி சொல்லணும்.’

மன்னன் நெசவு செய்யும் மனிதனை ஆள் அனுப்பி வரவழைத்தான். அவனுடைய கண்களில் ஒன்றைத் தோண்டி எடுக்கும்படி மன்னன் கட்டளையிட்டான்.

நெசவுக்காரன் சொன்னான்: ‘மன்னா! நீங்க கட்டளை இட்டது நியாயப்படி சரிதான். என் கண்கள்ல ஒரு கண்ணைத் தோண்டி எடுக்கும்படி சொன்னீங்க. அது நியாயமான ஒண்ணுதான். ஆனா, நான் நெசவு செய்யிறப்போ துணியின் இரண்டு முனைகளையும் பார்க்கணும்னா ரெண்டு கண்களும் எனக்கு கட்டாயம் வேணுமே! என் பக்கத்து வீட்டுல ஒரு ஆள் இருக்கான். அவன் ஒரு செருப்பு தைப்பவன். அவனுக்கு ரெண்டு கண்கள் இருக்கு. அவனுடைய தொழிலுக்கு ரெண்டு கண்கள் தேவையே இல்ல.’

அந்த நிமிடமே மன்னன் செருப்பு தைக்கும் மனிதனை அங்கு வரும்படி செய்தான். அவனுடைய ஒரு கண்ணைத் தோண்டி எடுக்கும்படி மன்னன் கட்டளை இட்டான்.

அதன்மூலம் நீதி எல்லோருக்கும் திருப்தி அளிக்கும் வண்ணம் நிறைவேற்றப்பட்டது.

ஒட்டகமும் எலியும்

சூரியன் தோன்றிய நேரத்தில் குள்ளநரி தன்னுடைய நிழலைப் பார்த்து விட்டு சொன்னது:

‘இன்னைக்கு என்னுடைய மதிய உணவு ஒரு ஒட்டகம்.’

காலை முதல் அது ஒட்டகத்தைத் தேடி அலைந்தது. ஆனால், ஒரு ஒட்டகத்தைக் கூட அது பார்க்கவில்லை.

மதியம் அது தன்னுடைய நிழலைப் பார்த்து சோர்வுடன் சொன்னது:

‘ஒரு எலி கிடைச்சாக்கூட போதும்.’

மூன்று அற்புத செயல்கள்

ம்முடைய சகோதரரான இயேசுவின் மூன்று அற்புதச் செயல்களை இதுவரையில் புத்தகங்கள் பதிவு செய்யவில்லை.

உங்களையும் என்னையும் போல இயேசுவும் ஒரு மனிதனாக இருந்தார் என்பதையும், இயேசுவிற்கு நகைச்சுவை உணர்வு இருந்தது என்பதையும், பல துன்பங்கள் அவருக்கு உண்டான போதும் அவர் ஒரு வெற்றி வீரராக இருந்தார் என்பதை இயேசுவே அறியாமல் இருந்தார் என்பதையும் எந்தப் புத்தகமும் பதிவு செய்யாமலே இருக்கின்றன.


ஜனநாயகம்

தொலைவில் இருக்கும் அந்த நகரத்தின் மன்னன் பலம் மிக்கவனாகவும் அறிவாளியுமாக இருந்தான். எல்லோரும் மன்னனின் பலத்தைப் பார்த்து பயந்தார்கள். அவனுடைய அறிவாளித் தனத்தை எல்லோரும் விரும்பினார்கள்.

அந்த நகரத்தில் ஒரே ஒரு கிணறுதான் இருந்தது. மக்களும் அரண்மனையில் இருப்பவர்களும் அதிலிருந்துதான் நீர் மொண்டு குடித்தார்கள்.

ஒரு இரவில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மோகினியொன்று நகருக்குள் நுழைந்தது. வினோதமாக ஒரு திரவத்தின் எட்டு துளிகளை கிணற்றுக்குள் அவள் ஊற்றி விட்டாள். ஊற்றிய பின் அவள் சொன்னாள்:

‘இந்த நிமிடம் முதல் இந்த நீரைப் பருகுபவர்கள் பைத்தியமாகி விடுவார்கள்.’

மறுநாள் காலையில் மன்னர், அரண்மனை அதிகாரி இருவரையும் தவிர அந்தக் கிணற்றில் நீர் மொண்டு பருகிய எல்லோரும் பைத்தியமாகி விட்டார்கள். அந்த மோகினி சொன்னபடியே அனைத்தும் நடந்தது.

அன்று பகல் முழுவதும் தெருக்களிலும் கடை வீதிகளிலும் மக்கள் தங்களுக்குள் மெதுவான குரலில் கூறிக் கொண்டார்கள்.

‘நம்ம மன்னனுக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கு. மன்னனும்அரண்மனை அதிகாரியும் சுய அறிவை இழந்துட்டாங்க. பைத்தியம் பிடித்த மன்னன் நம்மை ஆள தகுதி இல்லை. நாம அவனை பதவியில இருந்து இறக்கணும்.’

அன்று மாலையில் மன்னன் ஒரு பொன்னால் ஆன பாத்திரம் நிறைய அந்தக் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரச் சொன்னான். அந்த நீரை மன்னன் எடுத்து குடித்தான். அரண்மனை அதிகாரியும் அந்த நீரைப் பருகினான்.

மறுநாள் நகரம் முழுவதும் ஒரே கூத்தும், கும்மாளமும்தான். மன்னனுக்கும் அரண்மனை அதிகாரிக்கும் சுயஅறிவு மீண்டும் வந்து விட்டதென்று எல்லோரும் கொண்டாடினார்கள்.

புதிய ஆனந்தம்

நேற்று இரவில் புதிய ஒரு ஆனந்தத்தை நான் கண்டுபிடித்தேன். முதலில் நான் அதை சோதித்துப் பார்த்தேன். அப்போது கடவுள் தூதரும் பிசாசும் என்னை நோக்கி வேகமாக வந்தார்கள்.

அவர்கள் இருவரும் என்னுடைய வீட்டு வாசலில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். நான் புதிதாக கண்ட ஆனந்தத்தைப் பற்றிச் சொல்லி இருவரும் ஒருவரோடொருவர் மோதினார்கள்.

ஒருவர் உரத்த குரலில் சொன்னார்: அது பாவம்!

இன்னொருவர் அதை எதிர்த்தார்: அது புண்ணியம்!

சவக் குழி தோண்டுவன்

றந்து போன என்னுடைய சொந்தங்களில் ஒன்றை நான் மண்ணுக்குக் கீழே புதைக்கச் சென்றிருந்தேன். அப்போது சவக்குழி தோண்டும் மனிதன் எனக்கருகில் வந்து சொன்னான்:

‘இங்கு பிணத்தை அடக்கம் செய்ய வருபவர்களில் உங்களை மட்டும் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.’

‘ரொம்ப சந்தோஷம். சரி.... என்னை மட்டும் நீங்க விரும்புறதுக்கு காரணம்?’

‘அவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே வர்றாங்க. திரும்பிப் போறதும் அழுது கொண்டேதான். நீங்க மட்டும் சிரித்துக் கொண்டே வர்றீங்க. சிரித்துக் கொண்டே திரும்பிப் போறீங்க.’

அவன் பதில் சொன்னான்.

தேவாலயத்தின் படியில்

நேற்று சாயங்காலம் தேவாலயத்தின் பளிங்கால் ஆன படியில் ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன்.

அவளுடைய முகத்தின் ஒரு பக்கம் வெளிறிப் போய் காணப்பட்டது. இன்னொரு பக்கம் பளபளப்பாக இருந்தது.

நன்மையும் தீமையும்

ன்மையின் கடவுளும் தீமையின் கடவுளும் மலை உச்சியில் சந்தித்தார்கள்.

நன்மையின் கடவுள் வாழ்த்தியது. தீமையின் கடவுள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. நன்மையின் கடவுள் மீண்டும் கேட்டது:

‘என்ன, ஒரு மாதிரி இருக்கீங்க?’

‘ஆமா... ஆமா... சமீப காலமா பல நேரங்கள்ல என்னை நீங்கன்னு தப்பா நினைச்சிர்றாங்க. உங்க பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடுறாங்க. உங்களை மாதிரியே என்னை நினைக்க ஆரம்பிச்சுடுறாங்க. அது என்னை நிச்சியமா சந்தோஷப் படுத்தல'- தீமையின் கடவுள் சொன்னது.

'என்னைப் பலரும் நீங்கன்னு தப்பா நினைச்சிடுறாங்க. உங்க பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடுறாங்க' - நன்மையின் கடவுள் சொன்னது.

மனிதர்களின் முட்டாள்தனத்தை மனதிற்குள் திட்டிக் கொண்டே தீமையின் கடவுள் அந்த இடத்தை விட்டு நீங்கியது.

முகங்கள்

ரு ஆயிரம் வகைப்பட்ட முகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரே அச்சில் வார்த்ததைப் போல ஒற்றை வெளிப்பாடு கொண்ட முகங்களையும் கூட பார்த்திருக்கிறேன்.

இன்று நான் ஒரு முகத்தைப் பார்த்தேன். அதன் பிரகாசத்துக்கு அடியில் இருந்த அழகற்ற தன்மையையும் என்னால் காண முடிந்தது. மற்றொரு முகத்தின் பிரகாசத்தை நான் தூக்கி பார்த்தேன். அது எந்த அளவிற்கு அழகானது என்பதைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்தேன்.

வெறுமையை அடைந்த காரணத்தால் ஏராளமான சுருக்கங்களைக் கொண்ட வயதான ஒரு முகத்தையும், எல்லா விஷயங்களையும் கொத்தி வைத்திருக்கும் பளபளப்பான ஒரு முகத்தையும் நான் பார்த்தேன்.

எனக்கு முகங்கள் நன்றாகப் புரியும். காரணம்- நான் பார்ப்பது என்னுடைய சொந்த கண்கள் உருவாக்கிய சட்டங்கள் மூலம். அதனால் அடியிலிருக்கும் உண்மையை நான் பார்த்து விடுகிறேன்.

உணர்ச்சிகள்

‘இந்தப் பள்ளத்தாக்கைத் தாண்டி, நீல பனிப்படலம் போர்த்தியிருக்கும் மலையை நான் பார்க்கிறேன். மலை எவ்வளவு அழகாக இருக்கிறது!’ - கண்கள் தன்னை மறந்து சொல்லின.

காது அதைக் கேட்டது. கவனமாக சிறிது நேரம் எதையோ கேட்க முயன்றது. பின்னர் அது சொன்னது:

‘எங்கே இருக்கு மலை? என்னால அதை கேட்க முடியலையே!’

‘மலையை அறிந்து கொள்ளவும் தொடவும் நானும் முயற்சிக்கிறேன். ஆனா, ஒரு பிரயோஜனமும் இல்ல. மலையை என்னால் தொட முடியல’ - உள்ளங்கை சொன்னது.

‘மலையே இல்ல... என்னால வாசனையை உணரவே முடியல...’- மூக்கு தன் நிலைமையைச் சொன்னது.

அப்போது கண் மறுபக்கமாக திரும்பியது. எல்லோரும் சேர்ந்து கண்ணின் அசாதாரணமான நடத்தையைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

‘கண்ணுக்கு ஏதோ பிரச்னை இருக்கு. அது மட்டும் உண்மை.’

மூடு பனியின் இசை

ரு நாள் நான் என்னுடைய உள்ளங்கையை மூடு பனியால் நிறைத்தேன். சிறிது நேரம் கழித்து நான் என்கையைத் திறந்தேன். பார்த்தபோது மூடுபனி ஒரு புழுவாக மாறியிருந்தது.

நான் கையை மூடினேன். மீண்டும் திறந்தேன். அப்போது அதில் ஒரு கிளிக்குஞ்சு இருந்தது.

நான் மீண்டும் கையை மூடினேன். திரும்பவும் திறந்தேன். அதற்குள் வெற்றிடத்தில் அதோ ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். கவலையுடன் இருந்த தன்னுடைய முகத்தை அவன் மேல் நோக்கி உயர்த்தினான்.

நான் திரும்பவும் கையை மூடினேன். மீண்டும் திறந்தேன். அப்போது மூடு பனியைத் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை.

ஆனால், இனிமையான ஒரு இசையை நான் கேட்டுக்

கொண்டிருந்தேன்.


கடலும் மணலும்

வர் கண் விழிக்கும் போது என்னிடம் கூறுகிறார்:

‘நீயும் நீ வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமும் எல்லையற்ற கடலின் எல்லையற்ற கரையின் ஓரு மணல் மட்டுமே.’

நான் என்னுடைய கனவுகளில் அவரிடம் கூறுவேன்:

‘எல்லையற்ற அந்த கடல் நான்தான். எல்லா உலகங்களும் என்னுடைய கரையிலிருக்கும் மணல் மட்டுமே.

காலத்தின் பழமை

டலும் காட்டிலிருக்கும் காற்றும் எங்களுக்கு வார்த்தைகள் தருவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு, சிறகடிகும், அலைந்து திரியும், கணக்கற்ற ஆசைகள் கொண்ட உயிர்களாக இருந்தோம் நாங்கள்.

இப்போது எங்களுடைய நேற்றின் குரல்களை மட்டும் வைத்துக் கொண்டு நாட்களின் பழமையை எப்படி எங்களால் வெளிப்படுத்த முடியும்?

சிறு மணலும் மணல் பரப்பும்

ரு முறை மட்டும் ஸ்ஃபிங்ஸ் பறவை வாயைத் திறந்து பேசியது.

‘ஒரு சிறு மணல் ஒரு பெரிய மணல் பரப்பு ஒரு பெரிய மணல் பரப்பு ஒரு சிறு மணல். இப்போ நாம் மீண்டும் அமைதியாக இருப்போம்.’

அது சொன்னதை நான் கேட்டேன். ஆனால், எனக்கு எதுவும் புரியவில்லை.

தலைமுறைகள்

ரு நாள் நான் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். இதுவரையிலும் பிறந்திராத அவளுடைய எல்லா குழந்தைகளையும் பார்த்தேன்.

அந்தப் பெண் என்னுடைய முகத்தைப் பார்த்தாள். அவள் பிறப்பதற்கு முன்பே இறந்து போன என்னுடைய எல்லா முன்னோர்களைப் பற்றியும் அவள் எனக்கு சொன்னாள்.

ஆழங்களில் வாழ்க்கை

ருண்ட கல்லான என்னை அற்புதமான இந்த குளத்திற்குள் தெய்வம் எறிந்தது. அப்போது கணக்கற்ற நீர் வளையங்களால் குளத்தின் மேற்பகுதியை நான் தொந்தரவு செய்தேன்.

ஆனால், ஆழத்தை அடைந்தபோது நான் எந்தவித அசைவும் இல்லாதவனாக ஆனேன்.

நாக்கை இழந்தவர்

ல்ல கேட்கும் சக்தி கொண்ட, அதே சமயம் வாய் பேச முடியாத ஒரு மனிதரை நான் ஒரு நாள் சந்தித்தேன். ஒரு போராட்டத்தில் அந்த மனிதரின் நாக்கு இழக்கப்பட்டு விட்டது.

ஊமையாக ஆவதற்கு முன்னால் என்னென்ன போராட்டங்களையெல்லாம் அவர் நடத்தினார் என்ற விஷயங்கள் எனக்கு இப்போது தெரியும்.

அவர் மரணமடைந்ததால், நான் சந்தோஷமே அடைந்தேன்.

காரணம்- எங்கள் இருவரை மட்டுமே வைத்திருக்கக் கூடிய அளவிற்கு பெரிதல்ல, இந்த உலகம்.

சூரியனும் நானும்

கிப்தின் தூசிகளுக்கு நடுவில் பேச்சு எதுவும் இல்லாமல், காலமாற்றங்கள் தெரியாமல் நீண்ட காலம் நான் கிடந்தேன்.

அப்போது சூரியன் எனக்கு உயிர் தந்தது. நான் கண் விழித்து எழுந்தேன். நீல நதியின் கரை வழியாக நடந்தேன்.

பகல்களுடன் சேர்ந்து நான் பாடினேன். இரவுகளுடன் சேர்ந்து நான் கனவு கண்டேன்.

இப்போது ஆயிரம் காலடிகளால் என்னை சூரியன் அழுத்தி மிதிக்கிறது - எகிப்தின் தூசிகளுக்குள் என்னை மீண்டும் புதைப்பதற்காக.

ஆனால், என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய சூரியனால் என்னை மீண்டும் அழுத்தி மிதிக்க முடியவில்லை.

நான் இப்போதும் நேராக தலை நிமிர்ந்து நிற்கிறேன். உறுதியான சுவடுகளுடன் நீல நதியின் கரை வழியாக நான் நடந்து செல்கிறேன்.

சூரியனின் கடிகாரம்

ண்ணற்ற சூரியன்களின் அசைவை ஒட்டி நாம் காலத்தைக் கணக்கிடுகிறோம். அதாவது - அவர்களின் பைக்குள் இருக்கும் சிறிய இயந்திரங்களின் துணை கொண்டு.

இப்போது கூறுங்கள்: ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், எப்போதாவது எப்படியாவது நாம் சந்திக்க முடியுமா?

வழிகாட்டியின் கோபம்

புனித நகரத்திற்குச் செல்லும் வழியில் நான் இன்னொரு புனிதப் பயணியைப் பார்த்தேன். நான் அவரிடம் கேட்டேன்:

‘புனித நகரத்திற்குச் செல்லும் பாதை இதுதானா?’

‘ஆமா... என்னைப் பின் தொடர்ந்து நடந்து வாங்க. ஒரு பகலும் இரவும் முடியிறதுக்கு முன்னால் நீங்க புனித நகரத்தை அடைந்து விடலாம்‘- அந்த மனிதர் சொன்னார்.

நான் அவரைப் பின்பற்றி நடந்தேன். எத்தனையோ பகல்களிலும் எத்தனையோ இரவுகளிலும் நாங்கள் நடந்தோம். எனினும், புனித நகரத்தை நாங்கள் அடையவே இல்லை.

அதற்குப் பிறகும் அவருக்கு என் மீது கோபம்! தவறான வழியில் நடந்ததில்! இந்த விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

என் மனதைத் திட்டினேன்

ழு முறைகள் நான் என் மனதைத் திட்டினேன்.

உயரத்தை அடைய அவள் அடக்கமாக ஆனபோது.

முடவர்களுக்கு மத்தியில் அவள் நொண்டிக் கொண்டே நடந்தபோது.

சிரமங்கள் நிறைந்தது, எளிதானது - இவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டபோது, எளிமையானதை அவள் தேர்ந்தெடுத்தபோது.

அவள் ஒரு தவறு செய்து மற்றவர்களும் அதே தவறைச் செய்ய வேண்டும் என்று விரும்பியபோது.

தன்னுடைய பலவீனத்தால் அவள் பொறுமையாக இருந்து, அந்தப் பொறுமையே தன்னுடைய பலம் என்று மார்தட்டிச் சொன்னபோது.

முகத்தின் அழகற்ற தன்மை முகமூடிகளில் ஒன்று என்பது தெரியாமல் அவள் இருந்தபோது.

ஏழாவதாக - அவள் ஒரு துதிப்பாட்டு பாடி, அதையே சிறந்த ஒரு குணமாக எண்ணியபோது.

சொர்க்கத்தின் திறவுகோல்

சொர்க்கம்.... அதோ அங்கு இருக்கிறது. அந்தக் கதவுக்குப் பின்னால்... அடுத்த அறையில்.

ஆனால், நான் அதன் திறவுகோலைத் தொலைத்து விட்டேன். ஒருவேளை, எங்கோ வைத்துவிட்டு அதை நான் மறந்திருக்கலாம்.

கவிஞரின் வாக்குமூலம்

ரு நாள் நான் ஒரு கவிஞரிடம் சொன்னேன்: ‘நீங்க இறப்பது வரை உங்களின் மதிப்பு என்னன்று உங்களுக்கு தெரியாது.’

‘ஆமாம்... மரணம் எப்போதும் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விடுகிறது. அப்போ என்னுடைய மதிப்பு என்னன்னு உங்களுக்கு தெரியிறதா இருந்தால், என் நாக்கின் மீது இருப்பதை விட இதயத்திலும், கையில் இருப்பதை விட அதிகமாக விருப்பங்களிலும் இருப்பது மட்டுமே அதற்கு காரணம்.’

கவிஞர் பதில் சொன்னார். 

நீங்கள் இன்னொரு மனிதரும்

ங்களின் மிகவும் பளபளப்பான ஆடைகள் இன்னொரு மனிதர் நெய்தது.

இருப்பதிலேயே சுகமான தூக்கம் உங்களுக்கு இன்னொரு மனிதரின் வீட்டில்தான்.

உண்மை அதுவாக இருக்க, நீங்கள் எப்படி இன்னொரு மனிதரிடமிருந்து உங்களைப் பிரித்துப் பார்க்க முடியும்?’

சுதந்திரமும் அடிமைத்தனமும்

கலில் சூரியனுக்கு முன்னால் நீங்கள் சுதந்திரமானவர்தான். இரவில் நட்சத்திரங்களுக்கு முன்னாலும்.

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் இல்லாதபோதும் நீங்கள் சுதந்திரமானவர்தான்.

ஆனால், நீங்கள் நேசிக்கும் மனிதனுக்கு நீங்கள் அடிமை. நீங்கள் அவன் மீது நேசம் வைத்திருப்பதால், உங்களை நேசிப்பவனும் உங்களுக்கு அடிமையே. அவன் உங்களை நேசிப்பதால்.

ஓநாயும் செம்மறி ஆடும்

ரக்க குரணம் கொண்ட ஓநாய் செம்மறி ஆட்டை அழைத்தது:

‘எங்க வீட்டுக்கு ஒரு முறை வருகை தந்து எங்களை பெருமைப் படுத்தலாமே?’

‘உங்க வீட்டுக்கு வர்றதுனால நாங்களும் பெருமை அடைவோம், அது உங்களின் வயிறாக இருந்தால்...!’

செம்மறி ஆடு பதில் சொன்னது.


தேவதூதனும் பிசாசும்

தேவதூதர்களும் பிசாசுக்களும் என்னை வந்து பார்ப்பதுண்டு. ஆனால், நான் அவர்களை சீக்கிரமாக விரட்டியடித்து விடுவேன்.

தேவதூதன் வரும்போது நான் ஒரு பழைய பிரார்த்தனையைக் கூறுவேன். அதைப் பார்த்து அவன் ஒரு மாதிரி ஆகி விடுவான்.

பிசாசு வரும்போது நான் ஒரு பழைய பாவத்தைச் செய்வேன். அப்போது அதுவும் ஒரு மாதிரி ஆகிவிடும்.

அடுத்த நிமிடம் அவர்கள் இருவரும் வேகமாக என்னை விட்டு ஓடி விடுவார்கள்.

சிறை

து எப்படி இருந்தாலும், இது ஒரு மோசமான சிறை அல்ல. எனினும், என்னுடைய அறைக்கும் அடுத்த கைதியின் அறைக்கும் நடுவிலிருக்கும் சுவரை நான் விரும்பவில்லை.

அதற்காக சிறையைக் கட்டியவனையோ அதன் காவலாளியையோ நான் குறை சொல்ல விரும்பவில்லை.

தண்டிக்கப்பட்டவன்

த்தனையோ வருடங்களுக்கு முன்னால் ஒரு மனிதன் வாழ்ந்தான். அந்த அளவிற்கு அன்பு செலுத்துபவனும் அன்பு செலுத்தப்படுபவனுமாக இருந்த காரணத்தால் அவன் தண்டிக்கப்பட்டான்.

நான் நேற்று மூன்று தடவைகள் அந்த அன்பான மனிதனைப் பார்த்தேன்.

சட்டத்தைச் செயல்படுத்துபவர்களிடம் விலை மாதுவை சிறைக்குக் கொண்டு போகக் கூடாது என்று அவன் கெஞ்சிக் கொண்டிருந்தபோது- தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மனிதனுடன் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியபோது-

பாதிரியாருடன் தேவாலயத்திற்குள் அவன் கையால் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது-

கேட்கும்போது வினோதமாக இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மை அதுதான்.

இன்னொரு மனிதன்

ன்னொரு மனிதன் உங்களைக் கேலி பண்ணினால் நீங்கள் அவன் மீது பரிதாபப் படலாம். நீங்கள் அவனைக் கேலி பண்ணினால், உங்களுக்கு ஒருமுறை கூட மன்னிப்பு கிடையாது.

இன்னொரு மனிதன் உங்களைக் காயப்படுத்தினால், அந்த காயத்தை நீங்கள் மறக்கலாம். ஆனால், நீங்கள் அவனைக் காயப்படுத்தினால் நீங்கள் அதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.

இந்த இன்னொரு ஆள் உங்களின் மனசாட்சித்தானே? இன்னொரு உடலில் இருக்கிறது என்பது மட்டும்தான் வித்தியாசம்.

மலை ஏற்றம்

ம்முடைய ஆசைகளின் சிகரத்தை நோக்கி நாம் எல்லோரும் ஏறிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு மலை ஏறுபவன் உங்களின் சொத்தையும் பணத்தையும் அபகரித்து தன்னுடைய சுமையைக் கூட்டுகிறான் என்றால், அதற்காக அவன்மீது பரிதாபப்பட வேண்டும்.

மலை ஏறுவது அவனுடைய உடம்புக்கு தொந்தரவாக இருக்கும். அளவுக்கும் அதிகமான எடை அவனுடைய பாதையின் தூரத்தை அதிகமாக்கும்.

அவனுடைய உடல் முன்னோக்கி நகர கஷ்டப்படும்போது, மெலிந்த உடலைக் கொண்ட நீங்கள் அந்த மனிதன் அடி எடுத்து வைக்க உதவ வேண்டும்.

அது உங்களின் வேகத்தை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும்.

குள்ளநரி

ருபது குதிரைக்காரர்களும் இருபது வேட்டை நாய் வைத்திருப்பவர்களும் ஒரு குள்ளநரியை வேட்டையாடினார்கள். அப்போது குள்ளநரி சொன்னது:

‘நிச்சயமா இவர்கள் என்னைக் கொன்னுடுவாங்க. ஆனால், எந்த அளவுக்கு இவர்கள் மோசமான மனிதர்களா இருக்காங்க! இருபது ஓநாய்களின் துணையுடன் இருபது கழுதைகள் மீது ஏறி வரும் இருபது குள்ளநரிகள் வேண்டுமா என்ன ஒரே ஒரு மனிதனை வேட்டையாடுவதற்கும் கொல்வதற்கும்? நான் அந்த அளவுக்கு தகுதியானவன் அல்ல.’

அறிமுகமில்லாதவர்கள்

ன்னுடைய நண்பனே, நீயும் நானும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களாக இருப்போம். வாழ்க்கையில் நிரந்தரமாக.

தங்களுக்குத் தாங்களே அவனுக்கு அவனே நாம் அறிமுகமில்லாதவர்களாக இருப்போம். நீ பேசும் நாள் வரை, உன் குரலை என் சொந்தக் குரலாக நான் கேட்கும் நாள் வரை, கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதாக எனக்கு நானே நினைத்துக் கொண்டு உனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது வரை.

விஞ்ஞானம் விற்பனைக்கு

நேற்று சாயங்காலம் தத்துவஞானிகளை நான் கடை வீதியில் பார்த்தேன். தங்களுடைய தலைகளைக் கூடைகளில் வைத்துக் கொண்டு அவர்கள் உரத்த குரலில் கூவிக் கொண்டிருந்தார்கள்: ‘விஞ்ஞானம் வேணுமா? விஞ்ஞானம்... விற்பனைக்கு இருக்கு...’

பாவம் தத்துவஞானிகள்!

தங்களின் சொந்த இதயங்களை உயிருடன் வைத்திருக்க தலைகளை விற்க வேண்டிய கேடு கெட்ட நிலைமையில் அவர்கள் இருக்கிறார்கள்.

தத்துவஞானியும் துப்புரவுத் தொழிலாளியும்

தெருவிலிருந்த துப்புரவுத் தொழிலாளியிடம் தத்துவஞானி சொன்னார்:

‘நான் உன்னைப் பார்த்து இரக்கப்படுறேன். கஷ்டங்கள் நிறைந்த மோசமான வேலை உன் வேலை!’

அதற்கு துப்புரவுத் தொழிலாளி நன்றி சொன்னான். பிறகு அவன் கேட்டான்:

‘உங்க வேலை என்ன?’

‘நான் மனிதர்களின் மனதைப் படிக்கிறேன். அவர்களின் செயல்களையும், விருப்பங்களையும் படிக்கிறேன்.’

தத்துவஞானி பதில் சொன்னார்.

துப்புரவுத் தொழிலாளி தன் வேலையைத் தொடர்ந்தான். அதற்கு மத்தியில் அவன் புன்னகைத்து விட்டு சொன்னான்:

‘நானும் உங்களைப் பார்த்து இரக்கப்படுறேன்.’

இயேசுக்கள்

வ்வொரு நூற்றாண்டிலும் நாசரேத்தின் இயேசு கிறிஸ்தவரான இயேசுவை ஒரு முறை சந்திப்பார். அது லெபனானின் மலைகளுக்கு மத்தியில் நடக்கும்.

அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை பிரியும்போதும் நாசரேத்தின் இயேசு, இயேசு கிறிஸ்துவிடம் கூறுவார்: ‘என் நண்பரே! நாம ஒருமுறை... ஓருமுறை கூட ஒத்துப் போகாமலே இருக்கோம்னு நினைச்சு நான் பயப்படுறேன்.’

காட்டிலிருக்கும் கிளி

வர் என்னிடம் சொன்னார்:

‘கையிலிருக்கும் ஒரு கிளி காட்டிலிருக்கும் பத்து கிளிகளை விட மதிப்புள்ளது.’

அதற்கு நான் சொன்னேன்:

‘காட்டிலிருக்கும் ஒரு கிளியும் சிறகும் கையிலுள்ள பத்து கிளிகளை விட மதிப்புள்ளவை. அந்த சிறகுக்குப் பின்னால் இருக்கும் உங்களுடைய தேடல், சிறகு இருக்க கால்களைக் கொண்ட உயிர்... வாழ்வுதான்.

இரண்டு உலகங்கள்

வர் என்னிடம் சொன்னார்:

‘இந்த உலகத்தின் சந்தோஷங்களா? மேலுலகத்தின் அமைதியா? ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுங்கள்.’

நான் இரண்டையும் தேர்வு செய்தேன். இந்த உலக சந்தோஷங்களையும், மேலுலகத்தின் அமைதியையும். காரணம்- என் இதயத்தில் அந்தப் பெரும் கவிஞன் எழுதியது ஒரே ஒரு கவிதைதான். அது முழுமையானதும் முடிவானதும் கூட.’

நான் பதில் சொன்னேன்.

வெருப்பும் கருப்பும்

ழு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏழு வெள்ளைப் புறாக்கள் ஆழமான பள்ளத்தாக்கிலிருந்து பனி மூடிய மலையை நோக்கி உயர பறந்தன.

பறப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஏழு பேரில் ஒருவர் சொன்னான்:

‘ஏழாவது புறாவிற்குப் பின்னாலிருக்கும் கருப்பு புள்ளியை நான் பார்க்கிறேன்.’

இன்று அந்தப் பள்ளத்தாக்கில் இருக்கும் மனிதர்கள் பனிமூடிய மலையின் உச்சியை நோக்கி பறந்து சென்ற ஏழு கருப்பு புறாக்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


வசந்த மலர்கள்

ளவேனிற் காலத்தில் என்னுடைய எல்லா கவலைகளையும் ஒன்றாகச் சேர்ந்து நான் தோட்டத்தில் குழி தோண்டி புதைப்பதற்காக வந்தேன்.

ஏப்ரல் திரும்ப வந்தது. வசந்தம் பூமியை திருமணம் செய்ய வந்தது. அப்போது மற்ற மலர்களை விட அழகான மலர்கள் என் தோட்டத்தில் மலர்ந்தன.

அவற்றைப் பார்ப்பதற்காக என்னுடைய பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தபோது, அவர்கள் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்:

‘இளவேனிற் காலம் திரும்பவும் வர்றப்போ, விதை விதைக்கிற நேரத்தில், எங்களின் தோட்டத்தில் வளர்ப்பதற்காக இந்த மலர்களின் விதைகளைத் தருவீர்களா?’

பெண் துறவியும் விலை மாதுவும்

பாதையில் நடந்து போவோரைப் பார்த்தபடி நீங்கள் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருப்பீர்கள். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஓரு பெண் துறவி உங்களின் வலது பக்கமாக வந்து நிற்பாள். ஒரு விலை மாது இடது பக்கத்தில்.

கள்ளங்கபடமற்ற நீங்கள் கூறுவீர்கள்:

‘ஒரு பெண் எந்த அளவிற்கு புனிதம்! இன்னொருத்தி எந்த அளவுக்கு கெட்டவள்!’

ஆனால், நீங்கள் கண்களை மூடி சிறிது நேரம் காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருங்கள். இனம் புரியாத ஒரு வினோதமான ஒரு மெல்லிய குரல் உள்ளே கேட்கும்:

‘ஒரு பெண் பிரார்த்தனையில் இன்னொரு பெண் கவலையில் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேர்களின் மனதிலும் எனக்காக ஒரு இடம் இருக்கவே செய்யுது.’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.