Logo

கமலம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7422
kamalam

தாயின் சிதையிலிருந்து ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தவாறு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான் தம்பி. கமலம் தன் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரை விரல்களால் துடைத்தாள். மனதில் ஆட்சி செய்து கொண்டிருந்த துயரத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அவள் தன்னுடைய தம்பியின் அருகில் சென்றாள். அவனை இறுக அணைத்துக் கொண்டாள். “தம்பி, அழக்கூடாது. என் தம்பிக்கு நானிருக்கேன். அழாதே... அழாதே...”

அவள் அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் சகோதரியின் தோளில் தன்னுடைய தோளைச் சாய்த்துக் கொண்டான். அதற்குப் பிறகும் அவனால் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏங்கி ஏங்கி அழுத வண்ணம் இருந்தான்.

அப்போது தம்பிக்கு ஏழு வயதும், கமலத்திற்கு பன்னிரண்டு வயதும் நடந்து கொண்டிருந்தது. இத்தனைப் பெரிய உலகத்தில் அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் மட்டுமே ஆதரவு என்று இருந்தனர். தாய் இறந்த துயரம் அவர்களை விட்டு இன்னும் நீங்கவில்லை. அந்த நினைவுகள் இன்னும் அவர்கள் மனதை விட்டு மறையாமல் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தன. அதற்குள் வாழ்க்கையின் கொடுமையான போராட்டங்களில் காலடி எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் அந்த இருவருக்கும் உண்டானது. கமலம் அதற்காகக் கவலைப்படவில்லை. தன்னுடைய தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் போராட்டத்தைத் தைரியமாக எதிர் கொண்டாள்.

தாயும் தந்தையும் சம்பாதித்து வைத்திருந்த வீட்டுப் பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்றும், பக்கத்து வீடுகளில் வேலை செய்தும் அவர்கள் இரண்டு வருடங்கள் எப்படியோ வாழ்க்கையை ஓட்டினார்கள்.

பல நேரங்களில் கமலம் பட்டினியுடன் கடுமையாகப் போராடினாள். ஆனால், பட்டினியின் கொடும்பிடி தன் தம்பி மீது படாத அளவிற்கு அவள் பத்திரமாக அவனைப் பார்த்துக் கொண்டாள். கஞ்சி தயாரித்தால் அவள் நீரை மட்டும் குடிப்பாள். தம்பிக்கு சோற்றைத் தந்துவிடுவாள். சில நேரங்களில் அவளுக்கு குடிப்பதற்கு அந்த கஞ்சி தண்ணீர் கூட இருக்காது. தம்பிக்கு நல்ல ஆடைகள் எடுத்துத் தருவாள். ஆனால், அவளோ ஏதாவது கிழிந்து போன ஆடைகளை அணிந்திருப்பாள்.

அவர்களின் தாய் இறப்பதற்கு முன்பு, அவர்கள் இருவரும் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். தாய் இறந்த பிறகு, அவள் பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டாள். தம்பியை மட்டும் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைத்தாள். அவள் எப்போதும் தன் தம்பியின் படிப்பு விஷயத்திலேயே மிகவும் கவனமாக இருந்தாள். அவனும் தன் படிப்பு விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டவனாகவே இருந்தான்.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி முடிந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் இல்லாமல் போயிருந்தன. பக்கத்து வீடுகளில் கிடைப்பதை வைத்து தம்பியின் தேவைகளை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. தன் தம்பியின் தேவைகள் மட்டுமே கமலத்தின் மனத்தில் சதா நேரமும் வலம் வந்து கொண்டிருந்தன. கமலத்திற்கென்று தனிப்பட்ட முறையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம்பி ஆசைப்படும் பொருள் எதுவானாலும், அதை உடனே அவனுக்குக் கிடைக்கும்படி செய்வதொன்றே அவளின் வாழ்க்கையில் இலட்சியமாக இருந்தது.

பக்கத்து வீடுகளில் வேலை செய்வதுடன், அவள் கோழிகளை வளர்க்கவும் ஆரம்பித்தாள். அவளுக்கு கூடைகள் பின்னத் தெரியும். அதைச் செய்யவும் ஆரம்பித்தாள். இப்படிப் பல தொழில்களைச் செய்து அவள் சம்பாதிக்க முயற்சித்தாள். காலைப் பொழுது புலர்ந்தது முதல் நள்ளிரவு நேரம் வரை கூட அவள் கஷ்டப்பட்டு வேலை செய்தாள். அவள் எந்த வேலையைச் செய்தாலும், தன்னுடைய தம்பியைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பாள். அவன் உடல்நிலை, படிப்பு, எதிர்காலம்- இவை மட்டும் அவள் மனம் முழுக்க நிறைந்திருக்கும்.

தம்பி நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அவள் விருப்பம் கூட அதுதான். ஆனால், அவளால் என்ன பண்ண முடியும்? புத்தகங்கள் வாங்க வேண்டும், ஃபீஸ் கட்ட வேண்டும், மற்ற மாணவர்கள் அணிவதைப் போல தன் தம்பிக்கு நல்ல ஆடைகள் வாங்கித் தர வேண்டும்- இதற்குத் தேவையான பணத்திற்கு அவள் எங்கே போவாள்? என்ன செய்வது? என்ன செய்வது? இப்படி அவள் தன்னைத் தானே கேட்டுக் கொள்வாள்.

வறுமைக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியிலும் அவளுடைய இளமை திரண்டு முன்னுக்கு வந்து கொண்டிருந்தது. இளமையின் மலர்மொட்டு அவள் மார்பில் தெரிந்தது. கஷ்டங்களின் நிழலில் அழகு புன்னகை புரிந்தது. அவள் இளமை பூத்துக் குலுங்கும் பேரழகியாகத் தோன்றினாள்.

யாருமே இல்லாத அனாதையின் அழகு மிகவும் ஆபத்தானது. பலரும் அவள் அழகை அனுபவிக்க முயற்சி செய்தார்கள். அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவளை எப்படியாவது காதலிக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தார்கள். ஆனால், அவர்களின் ஆசை வலையில் அவள் விழுந்தால்தானே? அவள் முழு வாழ்க்கையும் அவளுடைய தம்பியின் எதிர்காலத்திற்காகவே அர்ப்பணிக்கப் பட்டுவிட்டதே!

ஒரு நாள் ஒரு மனிதன் அவளிடம் வந்து அவள் தம்பியின் கல்விக்கு ஆகிற செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். அவன் உண்மையாகவே நல்ல வசதி படைத்தவன்தான். ஆனால், அவன் பல நோய்களைத் தன்னிடம் கொண்டிருந்தவன். பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு அழகற்றவனாக இருந்தான். இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். அவளைப் பொறுத்தவரை அந்த மனிதனின் உடல் ஆரோக்கியமோ, அழகோ முக்கியமாகப் படவில்லை. தன் தம்பியின் படிப்பு ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவளின் மனதில் அப்போது இருந்தது. அதன் விளைவாக அவள் அந்த மனிதனின் மனைவியாக மாறினாள். அவன் தன்னுடைய மனைவியின் மனம் முழுமையான திருப்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக அவளின் தம்பிக்கு எந்தக் கவலையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.

கமலம் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் நீந்தினாள். கணவன் மீது கொண்ட அன்பால் உண்டான மகிழ்ச்சியல்ல அது. மாறாக, தன்னுடைய தம்பியை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் படிக்க வைக்க முடிந்ததே என்ற எண்ணத்தால் உண்டான மகிழ்ச்சியே அது. ஒரு நாள் அவள் தம்பி கமலத்தைப் பார்த்து சொன்னான். “அக்கா நான் ஒரு வக்கீலாகணும்னு ஆசைப்படுறேன். அதற்காக நான் கல்லூரியில படிக்கணும்.”

“ம்... தம்பி, நீ வக்கீலாகணும். அதற்குப் பிறகு ஒரு நீதிபதியா வரணும்...”

“நீதிபதியா. வேண்டாம்க்கா. ஒரு வக்கீலா நான் வந்தா போதும். அக்கா நீ என்னைக் கல்லூரிக்கு அனுப்பி வைப்பியா?”


“நிச்சயமா அனுப்பி வைப்பேன்”- அவள் தன் தம்பியைப் பார்த்து சொன்னாள்.

கமலத்தின் தம்பி பள்ளி இறுதி வகுப்பில் நடந்த தேர்வில் வெற்றி பெற்றான். அந்தச் சமயத்தில் கமலத்தின் கணவன் பணம் செலவு செய்யும் விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம் காட்ட ஆரம்பித்தான். தம்பியைக் கல்லூரியில் சேர்ப்பதற்கு பல வகைகளில் அவன் எதிர்ப்பு காட்டினான். அதைப் பார்த்து கோபத்தின் எல்லைக்கே போய்விட்டாள் கமலம். தன் தம்பியின் கல்லூரி படிப்பிற்கு தேவைப்படும் பணத்தைச் செலவழிக்காவிட்டால், தான் தன் கணவனை விவாகரத்து செய்யவும் தயாராக இருப்பதாக பயமுறுத்தினாள் கமலம். கடைசியில் கமலத்தின் தம்பியின் கல்லூரிப் படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொள்ள சம்மதித்தான் அவள் கணவன்.

நான்கு வருடங்களில் கமலத்தின் தம்பி பி.ஏ. படித்து முடித்தான். அதே நேரத்தில் கமலத்தின் கணவன் கையில் காசே இல்லாத நிலைக்கு ஆளானான்.

கமலத்தின் தம்பி கேட்டான், “அக்கா இனிமேல் என்ன பண்றது? சட்டக் கல்லூரியில இன்னும் ரெண்டு வருடங்கள் படிக்கணுமே! அதற்கு என்ன செய்றது?”

கமலம் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அவளால் முடிந்தது அவ்வளவுதான். தன் கணவனால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அவனை அவள் செய்ய வைத்தாள். இதற்குமேல் அவள் என்ன செய்ய முடியும்? தன் தம்பி கேட்கும்போது, அவள் என்ன பதில் சொல்லவாள்? அவள் தன்னுடைய புடவைத் தலைப்பால் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தாள்.

அவளின் தம்பி சொன்னான். “அக்கா, நீ கவலைப்படாதே, நான் வேற ஒரு வழியில முயற்சி பண்ணிப் பார்க்குறேன். நான் எப்படியும் ஒரு வக்கீல் ஆகணும். கட்டாயம் நான் வக்கீலா வந்தாகணும். அப்படின்னாத்தான் என்னோட அக்காவான உன்னை நான் சுகமா இருக்கும்படி பார்த்துக்க முடியும்.”

அவள் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள். பேசிய அவன் சில நிமிடங்களில் அந்த இடத்தை விட்டு நீங்கினான்.

யாருக்கும் ஒரு பைசா கொடுக்காத ஒரு கருமியான மனிதனின் கைவசம் ஏகப்பட்ட பணம் இருந்தது. அதே நேரத்தில் அவனுக்கு ஒரு மகளும் இருந்தாள். இவை இரண்டுமே பிரிக்க முடியாத அளவிற்கு இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதனின் மகளோ சிறிதும் அழகு இல்லாதவளாக இருந்தாள். பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. கண்கள் மிகவும் பெரியதாக இருந்தது. மிகவும் அவலட்சணமாக இருந்தாள். ஆனால், அவளைத் திருமணம் செய்து கொள்பவனுக்கு அவளோடு சேர்த்து நிறைய பணம் கிடைக்கும். சொல்லப் போனால் ஒரு பணப்பெட்டியே பரிசகத் தரப்படும் என்ற சூழ்நிலை அங்கிருந்தது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கமலத்தின் தம்பி அந்தப் பணக்காரனை அணுகினான். அந்த மனிதரின் மகளைத் தான் திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதாகச் சொன்னான். பிறகென்ன, பணப்பெட்டி அவனுக்காகத் திறக்கப்பட்டது. கமலத்தின் தம்பி சட்டக்கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தான்.

நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தன் சகோதரிக்குத் தெரிவித்தான். அவள் அவனை வாழ்த்திக் கடிதம் எழுதினாள். இருந்தாலும் அந்த வாழ்த்தில் ஒரு உள்மன பயம் மறைந்து இருந்ததென்னவோ உண்மை. தன் தம்பி தன்னைவிட்டு விலகிச் சென்று விடுவானோ என்று அந்த அன்பு அக்கா அஞ்சினாள். அவள் அதைத் தன் கடிதத்தில் எழுதவும் செய்தாள். அவன் பதிலுக்கு தன் அக்காவிற்குக் கடிதம் எழுதினான். அதில் தனக்கு எல்லாக் காலத்திலும் தன் அக்காதான் முக்கியம் என்று அவன் எழுதியிருந்தான்.

பி.எல். தேர்வு எழுதி, அதில் வெற்றி பெறுவதற்கு முன்பே சங்கரியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் கமலத்தின் தம்பிக்கு உண்டானது. அவன் தன்னுடைய சொந்த வாழ்க்கையை அந்த பணப்பெட்டியின் முன்னால் அடமானம் வைத்தான். அவன் தன்னுடைய எதிர்காலத்தை அந்த அழகற்ற பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுத்தான்.

திருமண நாளன்றுதான் அவனும் அவளும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளவே செய்தார்கள். அப்போதுதான் அந்தப் பற்களையும் பெரிய கண்களையும் அவன் பார்க்கவே செய்தான். இன்னொரு முறை அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு உண்டாகவில்லை. திருமணம் முடிந்த பிறகும் திருமணமாகாத ஒரு மனிதனைப் போலத்தான் அவன் நடந்து கொண்டான். ஒவ்வொரு வாரமும் தவறாமல் கமலத்தின் கடிதம் அவனைத் தேடி வரும். அவள் கணவனின் நோய் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த மனிதனிடமிருந்த பணமெல்லாம் முற்றிலும் செலவழிந்து ஒன்றுமே இல்லாத நிலையில் அவன் இருந்தான். மருத்துவச் செலவுக்குக் கூட அவனிடம் பணம் கிடையாது. சொல்லப் போனால் அன்றாடச் செலவுக்கே கமலமும் அவள் கணவனும் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவள் கடிதத்தில் எழுதியிருந்தாள். “அவர் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் நமக்காக தந்தார். அவரைப் பார்ப்பதற்கு நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?” கமலத்தின் தம்பி அந்தக் கடிதங்களுக்கெல்லாம் நம்பிக்கை ததும்பும் பதில்களை எழுதுவான். ப்ராக்டீஸ் ஆரம்பித்து விட்டால் இந்த மாதிரியான கஷ்டங்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் என்று அவன் தன்னுடைய கடிதத்தில் எழுதுவான். தன் தம்பி ப்ராக்டீஸ் ஆரம்பிக்கும் நல்ல நாளை எதிர்பார்த்து கமலமும் அவள் கணவனும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கமலத்தின் தம்பி பி.எல். தேர்வில் வெற்றி பெற்றான். பட்டம் வாங்கினான். ப்ராக்டீஸ் தொடங்கினான். ஒரு நாள் நீதிமன்றத்திற்குச் செல்வதற்காக அவன் தயாராகிக் கொண்டிருக்கும் போது வாசல் கதவிற்குப் பின்னால் சங்கரியின் நீளமாக வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள் தெரிந்தன. அவள் சொன்னாள்; “நாம இனிமேல் வேற வீட்டுல போய் இருக்கணும்.”

கமலத்தின் தம்பி சில நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு ‘ம்...’ என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அன்று சாயங்காலம் அவன் சங்கரியை அழைத்து, மறுநாள் காலையிலேயே வேறு இடத்திற்குப் போகத் தயாராய் இருக்கும்படி சொன்னான்.

மறுநாள் காலையிலேயே அவர்கள் வேறு வீட்டிற்கு குடி புகுந்தார்கள். தந்தையின் வீட்டை விட்டு கணவனுடன் வாழ்க்கையை நடத்த வந்த பிறகுதான் சங்கரியிடம் அந்த ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களே வெளியே தெரிய ஆரம்பித்தன. அதுவரை தன்னுடைய கணவனுடன் நேருக்கு நேராக நின்று பேசி பழக்கமில்லாத அந்தப் பெண் இப்போது அவனிடம் நேரடியாக வீட்டு விஷயங்களைப் பற்றியும், பண வரவு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள்.


குடும்பத்தைக் கட்டிக் காக்கிற ஒரு இல்லத்தரசியாக அவள் தோற்றம் தந்தாள். அதோடு நிற்காமல் தன்னுடைய கணவனின் தனிப்பட்ட செலவுகளில் கட்டுப்பாடு விதிக்கவும் தொடங்கினாள்.

ஒரு நாள் நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்த தன் கணவனைப் பார்த்து அவள் கேட்டாள்; “இன்னைக்குக் கிடைச்ச பணம் எங்கே...?”

அந்தக் கேள்வியில் ஒரு அதிகாரத் தோரணை கலந்திருந்தது. அதற்கு அவன் எந்தப் பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் என்னவோ யோசித்த அவன் பணத்தை எடுத்து அவள் கையில் தந்தான். அடுத்த நாளும் அவன் நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்தவுடன், அவள் அவனைப் பார்த்து பணத்தைக் கேட்டாள்.

“ரூபா என் கையில இருந்தா போதாதா?” - அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“அது போதாது. உங்க கைக்கு வர்ற பணம் முழுவதையும் என் கையில நீங்க தந்திடணும்.”

“ஏன் அப்படி தரணும்?”

“ஏன் தரணும்னு உங்களுக்குத் தெரியாதா?”

அவன் சில நிமிடங்கள் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு என்ன நினைத்தானோ “ம்...” என்று மெதுவாக முணுமுணுத்தவாறு பணத்தை எடுத்து அவள் கையில் தந்தான்.

இப்படி அவள் கேட்பதும், அவன் பணத்தை எடுத்துத் தருவதும் தினந்தோறும் நடக்கக் கூடிய ஒரு விஷயமாகி விட்டது. கையில் தனக்கென்று ஒரு பைசா வைத்துக் கொள்ள முடியாத நிலை அவனுக்கு உண்டானது. அவனுக்குத் தேவைப்படும் செலவுகளையெல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள். அவன் எதற்கெல்லாம் செலவு செய்யலாம் என்பதைக் கூட, அவனுடைய மனைவிதான் தீர்மானித்தாள்.

கமலத்தின் கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. தன்னுடைய தம்பி ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவள் ஏற்கனவே அறிந்திருந்தாள். கேஸ்கள் கிடைக்கின்றனவா, உடல்நலம் எப்படி இருக்கிறது அடிக்கடி விசாரித்து அவள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். தங்களுடைய செலவெல்லாம் போக ஏதாவது மிச்சம் என்று இருந்தால் மட்டும் தனக்கு அனுப்பி வைத்தால்  போதும் என்று அவள் கடிதம் எழுதினாள்.

அக்கா எழுதிய கடிதத்தைப் பார்த்த அவளுடைய தம்பி அதற்கு என்ன செய்வான்? அவனுக்கு கேஸ்கள் நிறைய வருகின்றன. செலவெல்லாம் போக நிறைய மிச்சம் உண்டாகிற அளவிற்கு வரவும் வரத்தான் செய்கிறது. நாட்கள் செல்லச்செல்ல வரக்கூடிய பணத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தன்னுடைய விருப்பப்படி ஒரு பைசா கூட அவனால் செலவு செய்ய முடியாது. அவனுக்கு வரவு என்று எதுவும் இல்லாமல் இருந்த காலத்தில் அவன் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். சொந்தத்தில் சம்பாத்தியம் என்ற ஒன்று உண்டானபோது அவனுக்கென்று கையில் ஒரு பைசா கூட இல்லை. இதற்கு முன்பு அவன் இதைப்போல ஒரு தரித்திர நிலையில் என்றுமே இருந்ததில்லை. அவன் வளர்ச்சிக்காக எதை வேண்டுமானாலும்- தன்னுடைய சொந்த வாழ்க்கையையே பணயம் வைக்கத் தயங்காத தன்னுடைய சகோதரிக்குத்தான் எப்படி மனமகிழ்ச்சி அளிப்பது என்பது தெரியாமல் அவன் தத்தளித்தான்.

ஒருநாள் அவன் நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்தபோது எப்போதும் போல அவனுடைய மனைவி வந்து கையை நீட்ட அன்று அவன் கம்பீரமான குரலில் சொன்னான். “இனிமேல் உன் கையில பணம் தர்றதா இல்ல.”

“பிறகு யாருடைய கையில் தரப்போறீங்க?”

“யார் கையிலயும் தரப்போறதில்ல. நான் என் கையிலயே வச்சுருக்கிறதா இருக்கேன்.”

அவ்வளவுதான்- அவள் முகம் திடீரென்று மாறிவிட்டது. அவளின் அந்தப் பெரிய கண்களை அப்போது பார்க்க வேண்டுமே! கோபம் உண்டாகும்போது அந்தக் கண்களில் தெரியும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவள் சொன்னாள்; “உங்க கையில பணத்தை வச்சிருக்கிறதா இருந்தால், அது உங்களோட பணமா இருக்கணும்...”

“என் பணம்தான். பிறகு... இது வேற யாரோட பணம்? நான் வேலை செய்து சம்பாதிச்ச பணம்தானே இது?”

“நீங்க வேலை செய்து சம்பாதிச்ச பணமா! நீங்க வேலை செய்ற அளவுக்கு எப்படி வளர முடிஞ்சது? யாரோட பணத்தை வச்சு நீங்க படிச்சீங்க? இதெல்லாம் நான் வாய் திறந்து சொல்லணுமா?”

அடுத்த நிமிடம் இடி விழுந்ததைப் போல அவன் செயலற்று நின்று விட்டான். தன்னுடைய கோட்டை அவிழ்த்து அவள் முன்னால் போட்டு விட்டு அவன் தன்னுடைய அறையை நோக்கி நடந்தான்.

கமலத்தின் ஒரு கடிதம் வந்தது. தன்னுடைய தம்பியையும் அவனுடைய மனைவியையும் தான் பார்க்க விரும்புவதாக அவள் எழுதியிருந்தாள். தன்னுடைய வறுமை சூழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் அவள் அந்தக் கடிதத்தில் மறைமுகமாக கோடிட்டுக் காட்டியிருந்தாள். அவன் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு கவலை குடிகொள்ள உட்கார்ந்து விட்டான். அப்போது சங்கரி அவனுடைய அறைக்குள் வந்தாள். அவள் கேட்டாள்; “என்ன ஒரேயடியா கவலையில இருக்கீங்க?”

அவன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

அவள் அவன் கையில் இருந்த கடிதத்தை வாங்கி பார்த்தாள். அடுத்த நிமிடம் அவளின் பெரிய கண்கள் நிலை குத்தி நின்றன. “கடவுளே! இப்போத்தான் அக்கா, தம்பி உறவெல்லாம் ஞாபகத்துல வருதா? தம்பி கையில பணம் புரள ஆரம்பிச்சது தெரிஞ்சவுடனே தம்பி, தம்பியோட பொண்டாட்டி எல்லாரையும் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சாச்சு. அப்படித்தானே?”

“எங்கக்கா என்னைப் பற்றி இப்போத்தான் விசாரிக்குதுன்னு நினைக்காதே. நான் பணம் சம்பாதிப்பேன்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாம இருந்த காலத்திலேயே என்னைப்பற்றி நினைச்சுப் பார்க்குறதுக்கு இந்த உலகத்துலேயே எங்க அக்கா மட்டும்தான் எனக்கு இருந்தாங்க. என்னைப் பற்றி கவலைப்பட்டதும், என்னை வளர்த்ததும் எங்கக்காதான். என்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்ச ஒரே காரணத்தாலதான் இப்போ அவங்க வறுமை வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க.”

அவன் வார்த்தைகளைக் கேட்டு சங்கரியின் கண்கள் மேலும் பெரிதாயின. “அவங்கதான் உங்களை வளர்த்தாங்கன்னா, அவங்க தான் உங்களை படிக்க வைச்சாங்கன்னா, இங்கே ஏன் நீங்க வரணும்? அவங்ககூட நீங்களும் இருந்திருக்கலாமே? எங்கப்பாவோட பணம், எனக்கு வர வேண்டிய பணம்- அதை நீங்க உங்களுக்காக ஏன் செலவழிக்கணும்?”

அதோடு இல்லாமல் மேலும் பல கேள்விக் கணைகளை அவள் தொடுத்த வண்ணம் இருந்தாள். அதைத் தாங்க முடியாமல் அவன் அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தான்.

தன்னுடைய சகோதரிக்கு சிறிதளவு பணம் அனுப்பி வைக்கக்கூட அவனால் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவனுக்கு நன்றாக பணம் வந்து கொண்டுதானிருந்தது.


ஆனால் அவன் கையில் ஒர காசு கூட மீதி என்று இருந்தால்தானே? மறுநாள் ஒரு கட்சிக்காரர் கொடுத்த பணத்தில் இருந்து அவன் இருபது ரூபாயைத் தனியாக எடுத்து வைத்தான். ஒரு மணியார்டர் ஃபாரத்தில் தன் சகோதரியின் முகவரியை எழுதி வைத்து விட்டு குளிக்கச் சென்றான். குளித்து முடித்து விட்டு சாப்பிடலாம் என்று வந்து உட்கார்ந்தபோது சில தாள்கள் அவன் முன்னால் கிழித்து எறியப்பட்டு வந்து விழுந்தன. அவன் திரும்பிப் பார்த்தான். சங்கரியின் பெரிய கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவன் பயந்தே போனான்.

அவள் உரத்த குரலில் கத்தினாள். “உங்க அக்காவுக்கு மணியார்டர் அனுப்புறீங்களா? அதற்காக யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்து ஒளிச்சு வச்சுக்கிட்டீங்களா? எங்கே நீங்க பணம் அனுப்பி வைக்கிறதை நானும்தான் கொஞ்சம் பார்க்கிறேனே! எங்கப்பா பணம் செலவழிச்சு உங்களைப் படிக்க வைச்சது கண்டவங்களுக்கெல்லாம் பணம் அனுப்பி வைக்கிறதுக்கு இல்ல. புரிஞ்சுக்குங்க...” -இன்னும் என்னென்னவோ அவள் பேசிக் கொண்டு போனாள்.

அடுத்த நிமிடம் அவன் சாப்பிடாமல் எழுந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அன்று நீதிமன்றத்தில் ஆட்கள் நிறைய கூடியிருந்தனர். பிரபலமான ஒரு கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன் தருவதைப் பற்றி வாக்குவாதம் நடக்கும் நாளது. கமலத்தின் தம்பி தான் குற்றவாளிக்கு வாதாடுபவன். அவனுடைய சட்ட சம்பந்தமான படிப்பையும், வாதத்தையும் சோதித்துப் பார்க்கக் கூடிய வழக்கு அது என்று கூட சொல்லலாம். வக்கீல்கள் வாதம் செய்வதைக் கேட்பதற்காக அங்கு கூடியிருந்த மக்கள் இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவன் குற்றவாளியின் சார்பாக வாதாடுவதால் நிச்சயம் குற்றவாளிக்கு ஜாமீன் கிடைப்பது உறுதி என்று சிலர் சத்தியம் பண்ணிக் கூறினார்கள். வேறு சிலரோ குற்றவாளி மோசமான நடத்தைகளைக் கொண்ட ஒரு மனிதன் என்பதையும், சட்டத்தின் பக்கங்கள் அவனுக்கு ஆதரவாக இல்லாததாலும் நிச்சயம் ஜாமீன் கிடைக்கவே கிடைக்காது என்றார்கள்.

ஒரு ரிக்ஷா நீதிமன்றத்தின் முன்னால் வந்து நின்றது. எல்லாரும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். கையிலிருந்த ஒரு கடிதத்தை மடித்து பாக்கெட்டினுள் இட்டவாறு கமலத்தின் தம்பி ரிக்ஷாவை விட்டு கீழே இறங்கினான். இனம்புரியாத ஒரு கவலை அவன் முகத்தில் தெரிந்தது. யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் அமைதியாக அவன் நீதிமன்றத்துக்குள் நுழைந்தான். அங்கு அமர்ந்திருந்த வக்கீல்கள் அவனைப் பார்த்து ‘குட் மார்னிங்’ சொன்னார்கள். அவன் அவற்றைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. தலையைக் கூட உயர்த்தாமல் மூலையில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் போய் அமர்ந்தான். டெஸ்க்கின் மீது தன்னுடைய தலையை இலேசாக சாய்த்தான்.

ஒரு வக்கீல் இன்னொரு வக்கீலைப் பார்த்து கேட்டார். “இவர் முகத்துல இன்னைக்கு என்ன எப்பவும் இல்லாத ஒரு வாட்டம் தெரியுது?”

“ஜாமீன் கிடைக்காதுன்னு ஒருவேளை இவரே சந்தேகப்படுறாரோ என்னமோ!”

“கட்டாயம் ஜாமீன் வாங்கித் தர்றேன்னு கட்சிக்காரருக்கு இவர் வாக்கு கொடுத்திருக்கிறாரே?”

“ஜாமீன் மட்டும் கிடைச்சிட்டா, இவருக்கு முன்னூறு ரூபா கிடைக்கும்.”

இப்படி வக்கீல்கள் பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்கள் பேசியது எதையும் கவனிக்கவேயில்லை. அவன் மீண்டும் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தான். அதில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கிறுக்கல் மாதிரி எழுதப்பட்டிருந்தது. அவனுடைய சகோதரியின் கடிதம்தான் அது. அவனுடைய பழைய வரலாற்றை அவள் அந்தக் கடிதத்தில் சில வரிகளில் எழுதியிருந்தாள். அதில் இருந்த ஒவ்வொரு வரியிலும் கண்ணீர் இருந்தது. கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருமூச்சு கலந்திருந்தது. அதன் ஒவ்வொரு எழுத்தும் தியாகத்தின் கதைகளைக் கூறிக் கொண்டிருந்தன. அவன் திரும்பத் திரும்ப அந்தக் கடிதத்தையே படித்தான். அடுத்த நிமிடம் கைக்குட்டையால் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

திடீரென்று ஒரு நிசப்தம் உண்டாக ஆரம்பித்தது. நீதிபதி நியாயம் வழங்கும் ஆசனத்திற்கு முன்னால் வந்து நின்றதே காரணம். எல்லா வக்கீல்களும் எழுந்து நீதிபதிக்கு மரியாதை செலுத்தினார்கள். கமலத்தின் தம்பி தலையை உயர்த்திப் பார்த்தான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. மீண்டும் கைக்குட்டையை எடுத்து கண்களை துடைத்துக் கொண்ட அவனும் எழுந்து நீதிபதியைப் பார்த்து வணங்கினான்.

நீதிபதி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து எல்லாரும் அமர்ந்தார்கள். ஜாமீன் மனு சம்பந்தமான வாதத்திற்கு நீதிபதி அனுமதி அளித்தார். எல்லாரின் பார்வையும் கமலத்தின் தம்பி மீதே பதிந்தது.

அவன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்தான். முகத்தில் இதுவரை இருந்த அந்த கவலைப் படலம் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தது. ஒரு மிடுக்கும், அச்சமின்மையும் அவனுடைய முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது. அவன் உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்டம், புத்திசாலித்தனம், உலக நீதிகள் எல்லாம் இலக்கிய வாசனை கொண்ட வார்த்தைகள் மூலம் அவனுடைய வாயிலிருந்து வெளிப்பட ஆரம்பித்தன. நீதிமன்றம் பயங்கர அமைதியில் மூழ்கியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அவன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான். பேசி முடித்த அவன் தன்னுடைய டெஸ்க்கிற்குப் பின்னால் அமர்ந்தான். ப்ராஸிகியூஷன் தரப்பிலிருந்து எதிர்வாதம் தொடங்கியது. அவன் மீண்டும் எழுந்தான். கூர்மையான வார்த்தைகளுடன் தன்னுடைய வாதத்தை மீண்டும் அவன் தொடுத்தான். வாதம் முடிந்ததும், டெஸ்க்கின் பின்னால் அமர்ந்தான்.

ஒரு மணி நேரம் முடிந்ததும், கட்சிக்காரரை ஜாமீனில் விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கமலத்தின் தம்பி நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தான். பாராட்டுகளும், வாழ்த்துகளும் அவன் மீது வந்து குவிந்தன. அவன் அவை எதையும் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. முகத்தில் சிறிது கூட சிரிப்பே இல்லாமல் ‘உம்’மென்று வைத்தவாறு அவன் ரிக்ஷாவில் போய் அமர்ந்தான். பாராட்டு மழையில் நனைந்தவாறு ரிக்ஷா கேட்டைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. அவன் மீண்டும் பாக்கெட்டில் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்தான். இடையில் கைக்குட்டையை எடுத்து கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைக்கவும் செய்தான்.

தான் இருக்கும் வீட்டை அடைந்ததும், வராந்தாவை நோக்கி நடந்தான். உள்ளே இருந்து ஒரு உரத்த சத்தம் கேட்டது. அவன் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றான்.

“என் பணத்தை வச்சுத்தான் அவர் படிச்சதே! தெரியுமா?” -சங்கரியின் குரல்தான்.

யாரோ அதற்கு பதில் கூறினார்கள். என்ன பதில் சொன்னார்கள் என்று அவனுக்குச் சரியாகக் கேட்கவில்லை. சொன்னதை அவனால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.


சங்கரி தொடர்ந்து உரத்த குரலில் சொன்னாள்; “படிக்கிறதுக்கு வசதியில்லாம தெருத்தெருவா அலைஞ்சு எங்ககிட்ட வந்து நின்னப்போ, எங்கப்பாதான் பணம் தந்தாரு. நாங்க கொடுத்த பணத்தை வச்சு படிச்சு, வக்கீலா மாறி பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சதைக் கேள்விப்பட்டு சொந்தமும் பந்தமும் தேடி வரத் தொடங்கிட்டீங்களா? சொந்தம்னு சொல்லிக்கிட்டு இங்கே யாரும் வரக்கூடாது. தெரியுதா? யாருக்கும் ஒரு பைசா தர நான் சம்மதிக்க மாட்டேன்.”

அதற்கு யாரோ மெதுவான குரலில் என்னவோ சொன்னார்கள்.

“தம்பியைப் பார்க்கணும்னா வழியில எங்காவது நின்னு பார்த்துக்க வேண்டியதுதான்...”

அடுத்த நிமிடம் அவன் வீட்டுக்குள் புயலென நுழைந்தான்.

கமலம் சுவர் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவள் கிட்டத்தட்ட ஒரு எலும்புக்கூட்டைப் போலவே மாறியிருந்தாள்.

“அக்கா... என் அக்கா...” - அந்த அன்புத்தம்பி அந்த எலும்புக்கூட்டைக் கட்டிப் பிடித்தான்.

“என் பிள்ளையே! தம்பி...” - அவள் தன்னுடைய தம்பியின் கைப்பிடிக்குள் போய் விழுந்தாள்.

அவ்வளவுதான் - சங்கரியின் பெரிய கண்கள் பயங்கரமாக கோபத்துடன் மேலும் பெரிதாயின. அவள் கத்தினாள். “இதெல்லாம் இங்கே வேண்டாம்... பிச்சை எடுத்து தெருவுல அலையிறவளையெல்லாம் கட்டிப்புடிச்சு அழுற இடம் இது இல்ல...”

“அடியே...!”- கமலத்தின் தம்பியின் குரல் முதல் தடவையாக அந்த வீட்டில் உரத்து ஒலித்தது. “அடியே... என் சகோதரியைப் பார்த்தா நீ பிச்சைக்காரின்ற? என் சகோதரி பிச்சைக்காரின்னா, அதற்குக் காரணம் நான்தான். எனக்காகத்தான் அவங்க பிச்சை எடுக்குற நிலைமைக்கு வந்ததே!”

“ஒரு பிச்சைக்காரியும் என் வீட்டுக்குள்ளே வரக்கூடாது...”

“உன் வீடு... உன் வீடு...!” அவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. தன்னுடைய சகோதரியை மார்பில் தாங்கியவாறு அவன் சொன்னான்; “உன் வீட்டுல மனிதப் பண்புக்கு இடமே இல்ல... அடியே! நாசமாப் போறவளே! என்னை நீ ஒரு தொழிற்சாலையா நினைச்சிட்டே! உங்கப்பா முதல் போட்டு உனக்கு லாபம் சம்பாதிச்சுத் தர்ற ஒரு வியாபார இடமா என்னை நீ கணக்கு போட்டுட்டே... போதும். இவ்வளவு லாபம் நீ சம்பாதிச்சது போதும். இனிமேல் நான் மனிதனா ஆகுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தச் பிச்சைக்காரியோட தம்பியா நான் வாழப் போறேன். உன்னை இனிமேல் நான் பார்க்குறதாகவே இல்ல...”

அவன் தன் சகோதரியைத் தூக்கி தோளில் போட்டவாறு, வேகமாக வெளியே நடந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.