Logo

காமவெறி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 14023
kaamaveri

வளுடைய நிறம் கறுப்பாக இருந்ததால் அவள் முதல் காதல் தோல்வியில் முடிந்தது. அவள் காதலித்தது பக்கத்து வீட்டில் இருந்த ராமச்சந்திரனைத் தான். மெலிந்து, வெளுத்து, சுருண்ட முடிகளைக் கொண்ட ஒரு பதினெட்டு வயது இளைஞன்தான் ராமச்சந்திரன். அவன் அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டிருந்த பல கருத்துக்களைப் பார்த்து அவன் மீது அவளுக்கு ஈடுபாடு உண்டானது.

ஒருநாள் மாலை நேரத்தில் அவன் வீட்டு தொழுவத்திற்குப் பின்னால் ஒரு முருங்கை மரத்திற்கு அருகில் நின்றவாறு அவன் அழகான ஒரு வேலைக்காரியை முத்தமிட்டுக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

அன்று முதல் அவளுக்கு ஆண்களின் காதல் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

காதலிலோ, காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ அவளுக்கு சிறிதுகூட நம்பிக்கை வரவில்லை. அதே நேரத்தில் ஆண் என்ற உண்மை மீது நம்பிக்கை கொள்ளாமல் அவளால் இருக்க முடியவில்லை. உறுதியான சதைப்பிடிப்பு கொண்ட உடல்கள், முத்தமிடும்போது உடம்பெல்லாம் கிளர்ச்சியை உண்டாக்குகிற அரும்பு மீசைகள், கனத்த குரல்கள்... இவை எல்லாமே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன.

அவளுக்குப் பதினாறு வயது நடக்கும்போது அவளுடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிச் செல்லலாம் என்று வந்திருந்த தூரத்து சொந்தக்கார இளைஞன் அவள் கையைப் பிடித்து, "நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா?" என்று கேட்டான். அவனுக்கு சயரோகம் ஏற்பட்டிருந்தது. திருமண வாழ்க்கைக்குப் பிறகு அந்த நோய் படிப்படியாகக் குறைந்து குணமாகிவிடும் என்று அந்த இளைஞனின் தாய் முழுமையாக நம்பினாள்.

அவன் பார்ப்பதற்கு அப்படியொன்றும் அழகாக இல்லை. சவரம் செய்து பிரகாசமாக இருக்கும் முகத்தில் ஒரு இளம் பச்சை நிறம் தெரியும். அவனுடைய சிறய பற்களால் ஆன சிரிப்பு அவளுக்குக் கொஞ்சம்கூட பிடிக்காது. இருந்தாலும் அவள் அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பையனுக்கு தந்தையின் சாயல் இருந்தது. அவனை சுதாகரன் என்று அவள் அழைத்தாள்.

பையன் பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் கணவனின் தாய் மரணத்தைத் தழுவினாள். அதற்குப் பிறகு சாவிக்கொத்தை இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டு வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு அந்த வீட்டின் எஜமானியாக அவள் வலம் வந்து கொண்டிருந்தாள். தன்னுடைய வாழ்க்கையில் ஒருவித விரக்தி அவளுக்குத் தோன்றினாலும், அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவள் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. தேவையில்லாமலோ, ஆடம்பரப் பொருட்கள் வாங்கவேண்டும் என்பதற்காகவோ பணம் செலவழிக்க அவள் விரும்புவதேயில்லை. கணவனுக்கு உரிய நேரத்தில் மருந்தும் உணவும் கொடுப்பதில் மட்டும் அவள் எப்போதும் தவறுவதேயில்லை.

நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கும் போது, அவளுடைய பசுக்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு இளைஞன் வந்தான். அவன் ஆறடி உயரத்தைக் கொண்ட திருமணமாகாத ஒருவனாக இருந்தான். கிட்டத்தட்ட இருபத்தைந்து வயது இருக்கும். நல்ல வெண்மை நிறம். அவன் பசுக்களிடம் பால் கறப்பதற்காக தரையில் உட்காரும்போது, அவள் அவனுக்குப் பக்கத்தில் போய் நின்றிருப்பாள். அவனுக்கு அது கொஞ்சமும் பிடிக்காது.

அவன் தன்னிடம் பேசமாட்டானா என்பதற்காகவே அவள் வலிய ஏதாவது அவனிடம் பேசுவாள். அவனுடைய ஊரில் உள்ள பசுக்களும் இந்த அளவுக்கு பால் கறக்குமா என்பது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை அவனைப் பார்த்து அவள் கேட்பாள்.

ஒருநாள் வேலைக்காரனுக்குப் பக்கத்தில் அவள் சிரித்துக்கொண்டு பேசியவாறு நின்றிருந்ததைப் பார்த்த அவளுடைய கணவன் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அங்கே வந்தான். அன்றே அவளை வீட்டைவிட்டு விரட்டி விட்டான்.

அவள் தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு தாய் வீட்டைத் தேடிவந்தாள். குழந்தையைப் பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்தபோது, அவள் கணவன் அவளைத் திரும்பவும் வீட்டிற்கு வரச்சொன்னான். எதுவுமே நடக்கவில்லை என்பது மாதிரி அவளும் தன்னுடைய கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். மீண்டும் சாவிக்கொத்து அவளுடைய முண்டின் முனையில் தொங்க ஆரம்பித்தது. முன்பிருந்த வேலைக்காரனுக்குப் பதில் ஒரு கிழவன் பசுக்களை கவனிப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்தான்.

அவளுக்கு உடலுறவில் திருப்தியில்லை என்று நினைத்துக் கொண்டோ என்னவோ சில ஊர் சுற்றிகள் அவளைப் பார்க்கும்போது புன்னகை செய்வதும், ஒரு மாதிரி பார்ப்பதுமாக இருந்தனர். ஆனால், அவள் அவற்றையெல்லாம் சிறிதுகூட பொருட்படுத்தவில்லை.

விஷயங்கள் இப்படி போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருநாள் சிறிதும் எதிர்பாராமல் அவள் கணவன் மரணமடைந்து விட்டான். பசுக்களை கவனித்துக் கொண்டிருக்கும் கிழவன் அன்று கள்ளுக்கடையில் உட்கார்ந்து கொண்டு சொன்னான்:

"விஷம் கொடுத்து அந்த ஆளை அந்த அம்மா கொன்னுட்டாங்க!"

இந்தச் செய்தி அவளுடைய பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்ததும் என்னவோபோல ஆகிவிட்டார்கள். அவளைப் போன்ற மோசமான ஒரு பெண்ணைப் பார்த்ததற்கும், பழகியதற்கும் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும் அவளைப் பார்ப்பதற்கும் கணவனை இழந்து அவள் எந்த அளவு துக்கத்தில் மூழ்கியிருக்கிறாள் என்பதை அளந்து பார்ப்பதற்கு அவர்கள் அந்த வீட்டிற்கு வரத்தான் செய்தார்கள். யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் வீட்டுத் திண்ணையில் இருந்த தூண்மேல் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவள் பையன் அருகிலிருந்த மாமரத்திற்குக் கீழே ஓட்டுத் துண்டுகளால் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்த ஒரு பெண் சொன்னாள்: "அந்தக் குழந்தையோட தலையைப் பார்த்தீங்களா? தலையையும் காதுகளையும் பார்க்குறப்போ முன்னாடி பசுக்களைப் பார்க்க வந்த இளைஞனோட ஜாடைதான் தெரியுது."

அவள் சொன்னதை அங்கிருந்த மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அந்தப் பையன் பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்த வேலைக்கார இளைஞனே அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்தான் என்பதை அவர்கள் யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.

அவளுடைய கணவன் இறந்து ஒருமாதம் ஆவதற்கு முன்பு ஒருநாள் மாலை நேரத்தில் அந்த வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தான். அது- அவள் முன்பு காதலித்த ராமச்சந்திரன்தான்.

"நான் திருவனந்தபுரத்துல இருந்து வர்றேன். விஷயத்தைக் கேள்விப்பட்டப்போ, பார்க்கணும்னு தோணுச்சு..." என்று அவன் சொன்னான்.

அவள் பதிலெதுவும் கூறவில்லை. அவனுடைய மெலிந்து போன உடலையே பார்த்தவாறு அவள் தூணின் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

ராமச்சந்திரன் பையனைத் தூக்கினான்.

"மகனே, உன் பேரு என்ன?" என்றான்.

அதற்கு மேல் அவன் ஒன்றும் பேசவில்லை. அன்று இரவு அங்கு தங்கிக்கொள்ள அவனுக்கு அவள் அனுமதி தந்தாள். ஹாலில் படுக்கையை விரித்து அவள் தலை நிமிர்ந்தபோது ராமச்சந்திரன் அவள் கையை திடீரென்று பிடித்தான்.


அவன் முகத்தில் காமத்தின் ரேகைகள் தெரிந்தன. அவள் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள்.

அன்று குழந்தைக்கு அருகில் தானும் தன்னுடைய கணவனும் படுத்த கட்டிலில் படுத்துக் கொண்டு அவள் சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதாள். ஒன்றிரண்டு தடவை யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, அவள் நடுங்கினாள்.

காலையில் அவள் கதவைத் திறந்தபோது, ராமச்சந்திரன் போய்விட்டிருந்தான். ஆனால், அவன் அங்கு ஒரு இரவு தங்கினான் என்ற செய்தி ஊரெங்கும் இப்படிப்பட்ட செய்திகளுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களிடம் போய்ச் சேர்ந்தது. கோவில் வாசல்களிலும் துணிக்கடைகளிலும் தன்னைப் பார்த்து பலரும் கிண்டலாகச் சிரிப்பதை அவளே கேட்டாள். ஒருநாள் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு, விவசாய வேலைகளைப் பார்ப்பதற்கு ஒரு பணியாளை ஏற்பாடு செய்துவிட்டு, அவள் குழந்தையுடன் அந்த ஊரை விட்டுக் கிளம்பினாள்.

ஒருவாரம் கழிந்ததும் வேலைக்கு இருந்த ஆளுக்கு அவள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் திருச்சூரிலிருக்கும் ஒரு வீட்டு முகவரிக்கு தேங்காய்களை விற்றதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஒழுங்காக அனுப்பி வைக்கும்படி அவள் எழுதியிருந்தாள்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு அவள் மீண்டும் அந்த ஊருக்குத் திரும்பி வந்தாள். அவளுடன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வேலைக்காரியும், ஒரு அழகான இளைஞனும் வந்திருந்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த இளைஞனின் சிவந்த உதடுகளையும், கம்பீரமான தோற்றத்தையும் வைத்த கண் எடுக்காது பார்த்தார்கள்.

"இது யாரு? தெரியலையே!"- ஒரு ஆள் கேட்டான்.

"இது என் கணவர்"- அவள் சொன்னாள்.

அன்று இரவு பல வீடுகளிலும் பேசப்படும் ஒரு விஷயமாக அவள் மாறினாள். அவள் தன் கணவனைக் கொன்றவள் என்றும், கொஞ்சம் கூட வெட்கமில்லாதவள் என்றும் எல்லோரும் அவளைப் பற்றி தாறுமாறாகப் பேசிக் கொண்டார்கள்.

"அவளுக்கு காமவெறி... எனக்கு அது நல்லா தெரியும்" என்று பசுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த முரட்டுக் கிழவன் சொன்னான். அதைக் கேட்டு கள்ளுக்கடையில் இருந்த எல்லோரும் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்கள். "தன்னுடைய காமவெறி அடங்க இந்தக் கிழவனைக் கூட அவள் விட்டு வைக்கலியா? சிவ... சிவா..." என்ற அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால், அந்த ஊர் மக்களின் கருத்துக்களும், கிண்டல் பேச்சும் அவளைச் சிறிதும் கூட பாதிக்கவில்லை. தன்னுடைய புதிய கணவன் தன் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பு மூலம் தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவள் என்ற எண்ணம் அவளுக்கு உண்டானது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.