Logo

ஒழுக்கம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6652
ozhukkam

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க வேண்டும். சரஸ்வதி பவனத்தில் இரண்டாவது மாடியிலிருந்து பெரிய அறையில் நாங்கள் படுத்து நீண்ட நேரமாகிவிட்டது. சலவை வேலை செய்பவர்கள் மது அருந்தி விட்டுக் கீழே பண்ணிக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் எனக்குத் தூக்கமே வரவில்லை.

அவர்களின் ஆரவாரமெல்லாம் முடிந்து அவர்களும் முழுமையான உறக்கத்தில் மூழ்கிப்போன பிறகும் கூட என்னிடம் சண்டை போட்டு விட்டுப்போன தூக்கம் என்னைத் தேடி வருவதாகத் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லாரும் ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். நான் மட்டும் கண்களை அகல விரித்துக் கொண்டு படுத்திருந்தேன். கடைசியில் நான் ஏமாற்றமடைந்த காதலனைப் போல படுக்கையை விட்டு எழுந்துபோய் திறந்து கிடந்த ஜன்னல் வழியாக மேற்குத் திசையைப் பார்த்தவாறு நிற்க ஆரம்பித்தேன்.

கடலை வருடிக் கொண்டுவரும் குளிர்ந்த காற்று அவ்வப்போது ஜன்னல் வழியாக அறைக்குள் வந்து கொண்டிருந்தது. சுற்றிலும் பயங்கர அமைதி நிலவிக் கொண்டிருந்தது. 'பாணகங்கா'வைச் சுற்றி அமைந்திருக்கும் கோவில்களிலிருந்தும், சத்திரங்களிலிருந்தும் மின் மினிப் பூச்சிகளைப் போல சில மங்கலான வெளிச்சங்கள் தெரிந்தன. இருந்தாலும் அங்கேயும் இரவு நேரத்தின் அமைதி வலை வீசியிருந்தது. ஒரு மங்கலான ஓவியத்தைப் போல தூரத்தில் கடல் தெரிந்தது. மகாதேவ ஆலயத்திற்கு மேலே சந்திரன் தெரிந்தது. ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது, அது அந்த ஆலயத்தின் உச்சியில் பதித்த பொன் நகையைப் போல காட்சியளித்தது.

கடலில் குளித்துவிட்டு வந்த குளிர்ந்த காற்று என்னை வருடியவாறு சென்றது. உலகம் முழுவதும் ஆழமான அமைதியிலும் உறக்கத்திலும் இருக்க, நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தேன். பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை அளித்தது. என்னுடைய குளிர்ந்துபோன மூளையிலிருந்து மெதுவாகக் கிளம்பி வெளியே செல்லும் சிந்தனைகள் ஒன்றிற்குப்பிறகு இன்னொன்றாக தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்று ஆராய்ந்தன. 'நைஸா'மின் அரண்மனையும் அங்கிருந்த பூந்தோட்டங்களும் என் முன்னால் வந்து நின்று கொண்டிருந்தன. அதோடு 'வால்கேஸ்வர'த்தில் இருக்கும் கடலின் கரும்பாறைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருக்கும் முக்கால் நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு பைத்தியக்காரியின் முகத்தையும் நான் பார்த்தேன். நான் ஆழமான சிந்தனையில் மூழ்க விரும்பினேன். ஏழைகளைப் பற்றியும், பட்டினி கிடப்பவர்களைப் பற்றியும், பிச்சைக்காரர்களைப் பற்றியும், திருடர்களைப் பற்றியும், கொலை செய்பவர்களைப் பற்றியும் விலை மாதர்களைப் பற்றியும் நான் சிந்தித்தேன்.

இந்தியாவின் ஒரு எல்லை முதல் இன்னொரு எல்லை வரை நடந்து கொண்டிருக்கும் கணக்கிலடங்காத சமுதாய ஒழுங்கீனங்கள் சட்டத்தின் மறைவில் நடந்து கொண்டிருக்கும் அக்கிரமங்கள்- இவையெல்லாம் என்னுடைய சிந்தனைக்கு விஷயங்களாக அமைந்தன.

திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு அழுகைச் சத்தம் காற்றில் மிதந்துவந்து என்னுடைய சிந்தனையைக் கலைத்தது. அதைத் தொடர்ந்து ஒரே ஆரவாரம் கேட்டது.

நான் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பூசாரி ஒரு சிறு குடிசை கட்டி வாழ்ந்து கொண்டிருந்தான். அங்கிருந்துதான் அந்த அழுகைச் சத்தம் வந்தது. "இங்க பாரு மகனே. ஒவ்வொரு நாளும் ஒண்ணு ரெண்டு தடவை நான் சம்மதிக்கத்தான் செய்யிறேன். இன்னைக்கு அம்மாவுக்கு எதுவுமே செய்ய முடியல. நான் இந்த ஆளுகிட்ட முடியாதுன்னு சொன்னேன். அதுக்கு என்னை இப்படி அடிச்சு உதைச்சா எப்படி?"

தேம்பித் தேம்பி அழுவதற்கு மத்தியில் நான் இப்படி சில மலையாள வார்த்தைகளைக் கேட்டேன். தொடர்ந்து மனித உடலின்மீது விழும் அடி, உதைகளின் சத்தம் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய அழுகைச் சத்தம். 'எங்கம்மாவைக் கொன்னுடாதீங்கப்பா' என்றொரு கெஞ்சல் குரல். கன்னடமும் இந்தியும் கலந்த கோபக் குரல். தொடர்ந்து அடி,உதை, ஓலம். அந்த ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தொடர்ந்திருக்கும். பிறகு ஒரே அமைதி.

அந்தக் குளிர்ந்த காற்று பிறகும் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தது. கடலின் இரைச்சல் சத்தம் தெளிவாகக் காதில் விழுந்தது. அந்த நிலவு கோவிலுக்கு மேலேயிருந்து நகர்ந்து வானத்தின் உச்சியில் பளிச் சென்று தெரிந்தது. அந்தக் குடிசையிலிருந்து கேட்ட அழுகைச் சத்தத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.

அந்தக் கர்நாடகக்காரனின் மனைவி ஒரு மலையாளி. அவள் ஒரு பிராமணப் பெண். அவளின் வாழ்க்கைக் கதையை எங்கள் அய்யப்பன் நாயர் சில நாட்களுக்கு முன்பு எங்களிடம் சொன்னார்.

தெற்குக் கேரளத்தில் ஒரு மூலையில் இருக்கிறது அவளுடைய வீடு. மிகவும் இளம் வயதிலேயே அவள் விதவையாகிவிட்டாள். குறுகிய காலம் மட்டுமே இருந்த அவளுடைய குடும்ப வாழ்க்கையின் விளைவாக, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். சிறிது காலம் அவள் மிகுந்த கடவுள் பக்தியுடன் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டினாள். ஆனால் இயற்கையின் சக்திக்கு முன்னால் அவளால் வெறுமனே நீண்ட நாட்கள் அடங்கி இருக்க முடியவில்லை. சமுதாயம் அவள் மீது உண்டாக்கிவிட்டிருக்கிற ஒழுக்கக் கோட்பாடுகளை தன்னுடைய சிந்தனைகளால் சில இரவுகளில் அவள் மீற ஆரம்பித்தாள். கடைசியில் அவளிடம் உண்டான உணர்ச்சிப் பெருக்கம் அந்தச் சங்கிலியை முழுமையாக அறுக்கச் செய்தது.

சிறிது காலம் ஒழுக்கக் கோட்பாட்டை ஏமாற்றிய அவள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். அவளை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைத்த இயற்கையே அவளுக்கு எதிராகத் திரும்பியது. அவள் கர்ப்பமானாள். சமுதாயத்தில் அவளுக்கு இடமில்லாமல் போனது. அவள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள். குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு காசிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள். எங்கெங்கோ சென்றாள். யார் யாரெல்லாமோ அவளை அனுபவித்தார்கள். கடைசியில் பலவித கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் இங்குவந்து சேர்ந்தாள். எத்தனையோ ஆட்கள் அவள் பின்னால் அலைந்தார்கள். இறுதியில் பலமுள்ளவன் வெற்றி பெறுவான் என்ற விதிப்படி அந்தக் கன்னடக்கார பூசாரி அவளைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான்.

அந்தப் பூசாரி சற்று வயது அதிகம் ஆனவனாகவும், அழகற்ற தோற்றத்தைக் கொண்டவனாகவும், கொடூர குணம் கொண்டவனாகவும் போக்கிரித்தனமான காரியங்களைச் செய்யக்கூடியவனுமாகவும் இருந்தான். கோவில் வாசலில் காசு வாங்குவதற்காக வந்து நின்றிருக்கும் பிச்சைக்காரர்களிடம் அவன் ஒரு பகுதியைத் தட்டிப் பறிப்பான். அவனுக்குக் கள்ளு குடிக்க வேண்டும்; கஞ்சா இழுக்க வேண்டும். அது மட்டுமல்ல- தினந்தோறும் அவனுக்குப் பெண்ணும் இருந்தாக வேண்டும்.


அந்தப் பிராமணப் பெண் மிகவும் கஷ்டப்பட்டாள். அவனிடம் படாதபாடுபட்டாள். தான் உயிரென நேசித்த சொந்த ஊரை விட்டும், சொந்த மனிதர்களை விட்டும், எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் பிரிந்து எத்தனையோ மைல்கள் தாண்டிவந்து இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத இந்த ஊரில் ஒரு அரக்க மனம்கொண்ட மனிதனுக்கு அடிமையாக அவள் வாழவேண்டிய கட்டாயம் உண்டாகிவிட்டது. அவளை அந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றவோ, மீண்டும் அவளுக்கு விடுதலை வாங்கித் தரவோ யாரும் முன் வரவில்லை. அவள் ஊர்க்காரர்கள் அவளைத் தேடி வரவில்லை. தான் அனுபவித்துக்கொண்டிருந்த துரோகத்தையும், அக்கிரமங்களையும் அவளும் யாரிடமும் வாய் திறந்து கூறவில்லை. சட்டம்- அது சமுதாயச் சட்டமாக இருந்தாலும் சரி, அரசாங்கச் சட்டமாக இருந்தாலும் சரி. எல்லாமே இப்படிப்பட்டவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதுதான் உண்மை. ஏழைகள் சட்டத்தின் உதவிக் கரங்களைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் கஞ்சா புகைக்கும் மனிதனின் காமவெறி அவளை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவனுடைய காமச் செயல்களுக்கு நடுக்கத்துடன் அடிபணிவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் இரண்டு முறையாவது அவனுடைய காமவெறிக்கு அவள் சம்மதிக்க வேண்டியதிருந்தது. ஒன்றுக்குப்பின் மற்றொன்றாக அவன் மூலம் அவளுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அவள் தளர்ந்துபோய்க் காணப்பட்டாள். உடலில் பலமே இல்லாதவளாக மாறிவிட்டாள். நோயாளியாகி விட்டாள். அதற்குப் பிறகும் அந்தக் கெட்ட மனிதனின் சகிக்கமுடியாத காமச் செயல்களுக்கு ஒரு குறைவும் உண்டாகவில்லை.

அந்தக் குடிசையை விட்டு வெளியே செல்லாமலே அவன் காம தாகத்தைத் தணிப்பதற்காக அவள் எப்போதும் காத்துக் கிடக்க வேண்டும். உலகத்தையும் சமுதாயத்தையும் தான் பெண்ணாகப் பிறந்த கொடுமையையும் மனதில் சபித்துக்கொண்டு நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அவளைத் தேடி அன்று இரவும் அந்தக் காமவெறியன் வந்தான். அவள் சம்மதிக்கவில்லை. அவன் அவளை அடித்தான். தாங்க முடியாமல் அவள் அழுதாள். தன்னுடைய இதயக் குமுறல்களை பாவம் அந்தப் பெண் யாரிடம் சொல்வாள்? கடைசியில் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். இனிமேலும் தன்னால் சகிக்கமுடியாது என்ற நிலை வந்தபோது தன்னுடைய மகனிடம் சொன்ன வார்த்தைகள்தான் என் காதுகளில் வந்து விழுந்தவை. "இங்க பாரு மகனே, தினமும் ஒண்ணோ, ரெண்டோ தடவை நான் அந்த ஆளோட ஆசைக்கு சம்மதிக்கத்தான் செய்யிறேன். இன்னைக்கு அம்மாவுக்கு முடியலே. அதனாலதான் இந்த ஆளுகிட்ட முடியாதுன்னு சொன்னேன்". இதுதான் அவள் கூறியது. குடும்பத்திற்கு நல்ல பெயர் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவளை ஆதரவில்லாத அனாதையாக்கிய சொந்தக்காரர்களும், அவளை அப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வந்த சமுதாயமும் அவளின் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்தால்...

நிமிடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன. அந்தக் குடிசையிலிருந்து இப்போது எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அந்த மோசமான மனிதன் அமைதியாக அடங்கிவிட்டானோ? இல்லாவிட்டால் அவள் அவனுடைய ஆசைக்குச் சம்மதித்திருப்பாளோ? என்னால் எந்த முடிவுக்கும் உறுதியாக வரமுடியவில்லை.

அந்தப் பிராமணப் பெண்ணின் வார்த்தைகள் என்னுடைய மூளையில் ஒரு வாளைப்போலத் திரும்பத் திரும்ப சுழன்று கொண்டே இருந்தன. நான் தீவிரமாக அதைப் பற்றிச் சிந்தித்தேன். எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். இந்த உலகத்திற்கும், வாழ்க்கைக்கும் பொதுவாக இருக்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? மனித வாழ்க்கைக்கு நிரந்தரமான மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரக்கூடிய சட்டத்தை மனிதனால் உருவாக்க முடியுமா? இந்த ஒழுக்கத்தின் சரியான விளக்கம் என்ன? அது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பின்பற்றப்படுகிறதா? விபச்சாரம் செய்தாள் என்ற குற்றத்திற்காக அந்தப் பிராமணப் பெண்ணை அவளுடைய குடும்பம் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறது. இப்போது அந்தப் பிராமணப் பெண் பதினான்கு வயது கொண்ட மகனிடம் சித்தப்பனின் காமச் செயல்களைத் தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறுகிறாளென்றால் அவளின் அந்த வார்த்தைகள் ஒழுக்கத்தின்மீது எந்த அளவிற்குப் புயலென விழுந்திருக்கும். ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு காட்டு ஜாதி மனிதர்களுக்கிடையே இருக்கும் ஒழுக்கத்தைப் பற்றிப் படித்ததை நான் நினைத்துப் பார்த்தேன். அவர்களுக்கிடையே ஒரு பெண்ணின் கணவன் மரணமடைந்துவிட்டால் அவள் அதற்குப் பிறகு தன்னுடைய மூத்த மகனைக் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்களின் ஒழுக்கச் சட்டம் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இல்லாவிட்டால் மரணமடைந்த பிறகு சம்பந்தப்பட்ட பெண் நரகத்தில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியதுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதுதான் தொடர்ந்து அவர்கள் பின்பற்றி வரும் ஒழுக்கம்.

மீண்டும் அந்தக் குளிர்ந்த காற்று என்னை வருடிக்கொண்டு போனது. எதையும் புரிந்துகொள்ள முடியாமல் எதைப் பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் நான் அந்த இருட்டையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.

அதற்குப் பிறகும் சில நிமிடங்கள் கடந்தன. நிலவு கடலுக்குச் சற்று நெருக்கமாக வந்திருந்தது. அந்தக் குளிர்ந்த காற்று இன்னும் வீசிக் கொண்டுதானிருந்தது.

திடீரென்று அறையில் மின்சார மணி தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தது. நான் சென்று கதவைத் திறந்தேன். எப்போதும் பால் கொண்டு வரும் பையன் பால் பாத்திரத்துடன் வாசலில் நின்றிருந்தான். அவனுடைய முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. நான் அவனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டேன். "என்னடா, எப்போதும் இல்லாத ஒரு சந்தோஷம் உன் முகத்துல இன்னைக்குத் தெரியுது?"

கையிலிருந்த பால் பாத்திரத்தைக் கீழே வைத்த அவன் ஒரு புன்சிரிப்பு உதட்டில் தவழ இந்தியில் சொன்னான்: "ஹங்க் ஏக் சோக்ரா ஆயா" (எனக்கொரு மகன் பிறந்திருக்கிறான்.)

அவ்வளவுதான். நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். இதென்ன தமாஷ் என்று நினைத்தேன். அந்தப் பையனின் ஊரும் வீடும், மனைவியும் குடும்பமும் - எல்லாமே காசியில்தான். இங்கு அவன் ஒரு நாள் கூட விடாமல் பால் தரத் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் அவன் ஒருநாள் கூட தன்னுடைய ஊர் பககம் போகவில்லை. பிறகு எப்படி அவனுக்குக் குழந்தை பிறந்தது?

எதையுமே புரிந்துகொள்ள முடியாமல் நான் பையனைப் பார்த்துக் கேட்டேன்: "நீ ஒரு வருடத்துக்கு மேலா இங்கத்தானே இருக்கே? எப்படி உனக்கு ஒரு குழந்தை பிறந்திச்சு?"

இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்பது மாதிரி அந்தப் பையன் என்னையே வெறித்துப் பார்த்தவாறு சொன்னான்: "க்யா, ஹமாரா பாய் உதர் நை ஹை?" (ஏன், என் தம்பி இல்லையா அங்கே?)

எனக்கு அன்றுதான் இந்த பய்யாமார்களின் சில சமுதாய சட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

அவர்கள் மூன்று, நான்கு சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிறகு சகோதரர்களில் ஒருவனை மட்டும் ஊரில் விட்டுவிட்டு மீதியுள்ளவர்கள் பால் வியாபாரம் பண்ணுவதற்காகவும் வேறு ஏதாவது வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்தியாவின் நாலா பக்கங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் இப்படிப் பல இடங்களிலும் இருந்து பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். ஒரே ஒரு சகோதரன் மட்டுமே ஊரில் இருந்து குழந்தையை உண்டாக்குகிறான்.

அது அவர்களுடைய சமுதாயத்தின் ஒழுக்கம்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.