
வாழ்க்கை மிகவும் தாழ்ந்த நிலையில் ஆரம்பமாகி, இளமையின் தொடக்கத்தில் தெருப் பிச்சைக்காரனாக அலைந்து, இறுதியில் பட்டாளக்காரனாகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, கடைசியில் ஒரு மிகப்பெரிய நாட்டின் ஆட்சியாளராகி, எல்லாரின் மதிப்பிற்கும் பாத்திரமாகி உலகத்தின் கவனத்தை முழுமையாக ஈர்த்த அந்த மகானின் மரணத்திற்குச் சற்று முன்பு அவருடைய முகத்தில் தெரிந்த நிராசையைப் பற்றி கேள்வி கேட்டவர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்:
“வாழ்க்கையின் முடிவு நெருங்கி விட்டது என்பதற்காகக் கவலைப்பட வில்லை. என் வாழ்க்கையின் செயல்கள் தனித்துவம் நிறைந்தவை ஆயிற்றே! அனைத்தும் முழுமையான வெற்றியுடன் முடிந்திருக்கின்றன. எனினும் கடந்து போன காலத்தில் மிகவும் தூரமான ஒரு நிமிடத்தில் எனக்கு உண்டான தாகம் இந்த இறுதி நிமிடத்திலும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது.”
நிறைவேறாத விருப்பத்தை இனி யாராலும் நிறைவேற்றித் தரவும் முடியாது.
இதுவரை பலரும் எழுதிப் பிரசுரித்த உலகப் புகழ்பெற்ற என்னுடைய வாழ்க்கை வரலாறுகளில் எதிலும் வந்திராத ஒரு சம்பவம்.
அந்த நூல்களைப் படிக்கும் எல்லாரையும் நான் மகா பாக்கியசாலிகள் என்றே கருதுகிறேன்.
நான் சாதாரணமானவனாகவும் தெருவில் யாசித்துத் திரிபவனாகவும் இருந்தேன். என்னுடைய இளமையின் ஆரம்பத்தில் பேரழகு படைத்த ஒரு இளம் பெண்ணை எல்லாவற்றுக்கும் மேலாக நான் காதலித்தேன்.
அப்போது எனக்கு வீடோ குடும்பமோ எதுவும் இல்லை. இந்தப் பெரிய உலகத்தில் நான் தனியாக இருந்ததேன். உணவிற்கு வழி இல்லாமல் படுப்பதற்கு இடம் இல்லாமல் அனாதையாக நான் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு உச்சி வேளையில் கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் நான் என்னுடைய காதலியின் வீட்டைத் தேடிச் சென்றேன். காதல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைக்காக அல்ல. வெறும் ஒரு பாத்திரம் குளிர்ந்த நீருக்காக. ஆனால் சிறிதுகூட இரக்கம் இல்லாமல் அவள் சொன்னாள்:
“இது அகதி இல்லமில்லை.”
நான் சொன்னேன்:
“நான் தாகமெடுத்துத் தளர்ந்து விழப் போகிறேன். ஒரு பாத்திரம் நீர்...”
ஆனால் அவள் என்னை அடித்து விரட்டினாள்.
“அடடா! தொல்லைகள் தேடி வர்றதைப் பாரு... போய் சாகு...! போ....”
அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை யென்றாலும் அவளுக்கு அது முடிந்தது.
புகழும் பலமும் எனக்குக் கிடைத்து எதற்கும் கஷ்டமே இல்லை என்று ஆனபோது- காதலுடன் அவள் என்னைத் தேடி வந்தாள்.
ஒரு பாத்திரம் குளிர்ந்த நீரல்ல... எதையும்... எதையும் தர அவள் தயாராக இருந்தாள். இந்த நாட்டிலேயே மிகப் பெரிய பணக்காரியாகி மிகுந்த திருப்தியுடன் அவள் மரணத்தைத் தழுவினாள்.
ஒரு விஷயம்- நான் அவளைக் காதலித்து வழிபட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவளுடைய கையால் ஒரு பாத்திரம் நீர்கூட எனக்குக் கிடைக்கவில்லையே!” அதற்கு யாரும் ஒரு மன அமைதிக்கான வழியைக் கூறவில்லை. யாரும் நிறைவேற்றக்கூடிய ஒன்றல்லவே...! பெரிய நிராசையுடன் அந்த மகான் அந்த வகையில் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவத்தை இதேபோல என்னிடம் கூறிய மனிதரிடம் இதில் இருக்கும் பாடம் என்ன என்று நான் கேட்டதற்கு, அவர் கூறியது இது மட்டும்தான்.
“ஓ... ஒண்ணுமில்ல... வெறும் ஒரு நினைவு மட்டுமே.”