Logo

வாழ்க்கை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7544
Vazhkkai

ந்தச் சிறிய நதி, அந்தப் பச்சைப் பசேல் என்றிருக்கும் மலையைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. நதியின் அந்த வளைவில் ஒரு பள்ளம் இருக்கிறது. இரு கரைகளிலும் வளர்ந்திருக்கும் செடிகளும் சுற்றிலும் வளர்ந்திருக்கும் புதர்களும் பெரிய மரங்களும் அந்தத் திருப்பத்திற்கு ஒரு நிரந்தரமான இருட்டை உண்டாக்கி விட்டிருக்கின்றன. அங்கு நிலவிக் கொண்டிருக்கும் ஆழமான அமைதியைக் கிழித்துக்கொண்டு எப்போதாவது ஒரு மீன்கொத்தியோ அல்லது குருவியோ அங்கு பறந்து வரும்.

அந்த ஆற்றின் கரையும், மலைச் சரிவும் சேரும் இடத்தில் ஒரு பெரிய கரும் பாறை இருக்கிறது.

அவ்வப்போது நடக்கும் பல சம்பவங்களுக்கு அமைதியான சாட்சியாக அந்த மலையும் நதியும் பாறையும் அங்கு இருந்து கொண்டிருக்கின்றன.

ஒரு ஏழைக் குடும்பம் அந்த மலைச்சரிவில் கொஞ்சம் இடத்தை வெட்டி, சரிபண்ணி, அங்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்குப் புதிய நிலம் என்ற ஒரு பெயர் எப்படியோ கிடைத்து விட்டது.

மெலிந்து, தலைமுடி நரைத்து, குறுகி, கண் பார்வை சரிவரத் தெரியாத ஒரு முரட்டுக் கிழவன், ஒரு கழியைக் கையில் வைத்துக் கொண்டு முனகிக்கொண்டும் சொறிந்து கொண்டும் அந்தக் குடிசையின் வாசற்பகுதியில் எப்போதும் வெயிலில் காய்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பான்.

ஒன்பது வயதுகொண்ட நாராயணியும், ஐந்து வயதான அம்முவும், ஒன்றரை வயதான கோபாலனும் அந்தக் கிழவனுடைய மகனின் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் தந்தை வயநாட்டிலிருக்கும் ஒரு ரப்பர் தோட்டத்தில் வேலைக்காரனாக இருந்தான். அவன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து இன்னும் ஒரு வருடம்கூட ஆகவில்லை. அந்தக் குழந்தைகளின் தாய் சிருதா அவர்களுடன் இருந்தாள். அவர்கள் சிறிது விவசாயம் செய்தும், கயிறு திரித்தும் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

ஓணப் பண்டிகைக் காலத்தின் ஒரு பூக்காலம். ஆண் குழந்தைகள் பூக்கூடையைக் கழுத்தில் அணிந்துகொண்டு கூட்டத்துடன் சேர்ந்து பூப்பாட்டுப் பாடியவாறு மலையின் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

“ஒண்ணாம் மலை அம்மா ஒண்ணு அடிக்குது அம்மா

ஒண்ணல்லவோ! மங்கைமார்கள் பாலை நட்டார்கள்

பாலைக்கு இலை வந்தது, பூ வந்தது, காய் வந்தது

பாலைக்குப் பால் கொடு பார்வதியே!”

அர்த்தம் இல்லையென்றாலும் கருணையும் ஆனந்தமும் நிறைந்திருந்த அந்தப் பாடலைக் கேட்டு தெச்சிப் பூங்குலை தலையை ஆட்டியது. அரிப்பூ புன்னகை புரிந்தது. ஒடிச்சு குத்திப் பூ வெட்கப்பட்டு நின்றது.

பனி விழுந்து நனைந்திருந்த கொடிகளிலும், செடிகளின் சிறு கிளைகளிலும் சிறார்களின் கைகள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் விளையாடிக் கொண்டிருந்தன. பூவோ மலர்ந்த பூவோ என்று அவர்கள் உண்டாக்கிய பாட்டுச் சத்தம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

உடனே குன்றின் அந்தப் பக்கத்திலிருந்து இன்னொரு பிள்ளைகள் கூட்டம் போட்டிப் பாட்டுப் பாடியவாறு மேல்நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவன் கேளப்பன் என்ற ஒரு சிறு போக்கிரி.

அந்தக் கூட்டம் இவர்களை நெருங்கியது. உடனே ஒரு சிறுமி எதிர் கூட்டத்தில் பட்டுச் சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்த சுமார் பத்து வயது இருக்கக் கூடிய அழகான முகத்தைக் கொண்ட ஒரு சிறுவனைச் சுட்டிக் காட்டியவாறு புதிய நிலத்தைச் சேர்ந்த நாராயணியிடம் சொன்னாள்: “பாரு... அவன்தான் குன்னத்து அதிகாரியின் மருமகன் பாலகிருஷ்ணன்.”

நாராயணி அவனைக் கூர்ந்து பார்த்தாள். அதிகாரியின் வீட்டிற்குச் சில வேளைகளில் வேலைக்குப் போயிருந்த தன்னுடைய தாயிடமிருந்து, இப்படியொரு சிறுவன் நகரத்திலிருந்து அங்கு வந்திருக்கிறான் என்பதை அவள் இரண்டு நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தாள்.

இரண்டு குழுக்களும் ஒன்றையொன்று திட்டிக்கொண்டு பாட்டுப் பாடினார்கள். இறுதியில் பூப்பாட்டு வசைபாடும் பாட்டாக மாறியது. இரண்டு பக்கங்களிலும் இருந்தவர்கள் தங்களுக்கிடையே ஒரு கை பார்த்தால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அங்கேயே ஓணச் சண்டை போடத் தீர்மானித்தார்கள்.

இந்தச் சண்டைக்காக கேளப்பன் ஒரு பெரிய காட்டுச் செண்பக மரத்தின் உயரமான கிளையில் ஏறி நின்றதும், கிளை ஒடிந்து அவன் கீழே ஒரு பாறையின்மீது விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. அத்துடன் எதிர்க் குழுவினரின் ஆரவாரமும் அட்டகாசமும் முழுமையாக நின்றன. இங்கிருந்த கூட்டம் கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள்.

வெயில் அதிகமானபோது நிறைந்த கூடைகளுடன் சிறார்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். பாலகிருஷ்ணன் மட்டும் அங்கேயே இருந்தான். அவன் தன்னுடைய வீட்டிற்குச் செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்குவதற்காகக் கால்களை எடுத்து வைத்தபோது ஒரு பூச்சி அவனுடைய காலைக் கடித்துவிட்டது. அவன் தன் கையிலிருந்த பூக்கூடயை வீசி எறிந்துவிட்டு காலைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

‘காத்துல பூத்த இளங்கொடி வெற்றிலை

நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?

தும்பைப்பூவே, பூத்த இரவே

நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?’

இனிமையான அந்தப் பாடலைப் பாடியவாறு ஒரு சிறுமி தன்னுடைய தங்கையை இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த ஒற்றையடிப் பாதை வழியாக வந்துகொண்டிருந்தாள். அவள் பாலகிருஷ்ணனை உற்றுப் பார்த்தாள். பிறகு அவனுடைய காலைப் பார்த்தாள். அவள் தன் தங்கையைக் கீழே வைத்துவிட்டு ஓடிப்போய் கொஞ்சம் மூலிகை இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தாள். பூச்சி கடித்த இடத்தில் அதைச் சாறு பிழிந்து விட்டாள். பாலகிருஷ்ணனுக்கு எரிச்சல் குறைந்தது மாதிரி இருந்தது.

சிறிது நேரம் சென்றதும் அவன் கேட்டான்: “உன் பேர் என்ன?”

“நாராயணி.”

“நீ எங்கே இருக்கே?”

“அதோ... அங்கே...”

அவள் புதிய நிலத்தைச் சுட்டிக்காட்டினாள். தொடர்ந்து அவள் அவனுடைய கூடையிலிருந்து விழுந்த பூக்களைப் பொறுக்கி எடுத்து அவனிடம் தந்தாள்.

அன்று, அந்த வகையில் அந்த இடத்தில் அவர்கள் இருவருக்குமிடையே நட்பு ஆரம்பமானது.

மறுநாளும் அவர்கள் பூப் பறிப்பதற்காக மலை உச்சிக்குச் சென்றார்கள். அதே ஒற்றையடிப் பாதையில் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். நாராயணி அவனைத் தன் வீட்டிற்கு விளையாடுவதற்கு அழைத்தாள்.

அவர்கள் இருவரும் சொட்டாங்கல் ஆடி விளையாடுவார்கள். இல்லாவிட்டால் ஆற்றின் கரைக்குச் சென்று மணல்வீடு உண்டாக்கவோ, குழி தோண்டி விளையாடவோ செய்வார்கள். சில நேரங்களில் பாலகிருஷ்ணன் காட்டில் கிளிக்கூடு தேடிச் செல்வான். அவனுடன் விறகு பொறுக்குவதற்காக நாராயணியும் புறப்படுவாள். அவன் அவளை ராணி என்று விளையாட்டாக அழைத்தான். அந்த அழைப்பு அதற்குப் பிறகு மாறவே இல்லை.

ஆனால், பாலகிருஷ்ணனுக்கு அந்தக் கிழவனைப் பிடிக்கவில்லை. அவன் அந்தக் கிழவனைப் பார்த்துக் கூறுவான்: “பார்த்தாயா? நத்தை மாதிரி அந்த ஆளு உட்கார்ந்திருக்கிறதை...!”


அவன் கிழவன் உட்கார்ந்திருந்த இடத்தில் சர்க்கரையைச் சிதறி விடுவான். எறும்புகள் வந்து கிழவனை ஒரு வழி பண்ணுவதை அவன் ரசித்துக் கொண்டிருப்பான்.

பாலகிருஷ்ணன் ராணிக்கு நல்ல படங்களைப் பரிசாகத் தருவான். அதற்குப் பதிலாக அவள் அவனுக்கு இலஞ்சிப் பூ மாலை கட்டித் தருவாள்.

ஒருநாள் அவள் மாலை தந்தபோது ஆனந்தமடைந்த அவன் அவளுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

உடனே முகத்தை ஒரு மாதிரி ‘உம்’ என்று வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “ம்... வேண்டாம். நான் என் மாமாகிட்ட சொல்லிடுவேன்.”

பாலகிருஷ்ணன் அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். “நீ என்ன சொல்வே?”

“ம்... நான் செல்வேன்...”

அவன் அவளை மீண்டுமொரு முறை முத்தமிட்டான்.

அவனை ஒரு தட்டுத் தட்டிவிட்டு அவள் ஓடிமறைந்தாள்.

ஓண விடுமுறை முடிந்து, பாலகிருஷ்ணன் தன் சொந்த வீட்டிற்குப் புறப்பட்டான். அவன் குதிரை வண்டியில் நகரத்திற்குத் திரும்பிச் செல்லும்போது, நாராயணி தன் தலையில் ஒரு பெரிய சுமையை வைத்துக்கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் இரவிக்கை மட்டும் மேலே அணிந்திருந்த அவளுடைய மார்புப் பகுதி இலேசாகக் கூசியது. தோள்வரை தொங்கிக் கொண்டிருந்த அந்தத் தென்னை நார்கள் வழியாக அவளுடைய இரண்டு பெரிய கறுத்த கண்களும் பிரகாசித்தன. அவள் சற்று ஓரத்தில் தயக்கத்துடன் நின்றாள். பிறகு மெதுவாக அங்கிருந்து நடந்தாள்.

வண்டிக்காரன் குதிரையை அடித்தான். அவள் சிறிது தூரம் சென்றாள். பிறகு அந்தச் சுமையுடன் அவள் திரும்பிப் பார்த்தாள்.

பாலகிருஷ்ணன் அணிந்திருந்த கோட்டின் நீல நிறத்தை மட்டும் வண்டி திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பு அவள் பார்த்தாள்.

2

று வருடங்கள் கடந்தன.

பாலகிருஷ்ணன் இப்போது ஒரு கல்லூரி மாணவன். அவன் அந்தக் கிராமத்திலிருந்த சொந்தக்காரரின் இல்லத்தில் பதினைந்து நாட்கள் தங்கும் திட்டத்துடன் வந்திருந்தான்.

அவன் புதிய நிலத்திற்குச் சென்று பார்த்தான். அந்தக் கிழவனையும் நாராயணியையும் காணவில்லை. கிழவன் இறந்து விட்டான். நாராயணிக்குத் திருமணம் ஆகிப் போய்விட்டாள்.

அவன் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மறுநாள் வேட்டையாடப் புறப்பட்டான். மதியநேரம் ஆனபோது அவர்கள் மிகவும் களைப்படைந்துவிட்டார்கள். மிகவும் தளர்ந்துபோய் ஆறு மைல் தூரத்திலிருந்த ஒரு மலைச்சரிவை அடைந்தார்கள்.

அருகில் வீடுகள் எதுவுமில்லை. அந்த வயலின் எதிர் கரையில் ஒரு குடிசை இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். எல்லோரும் அந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வாசலில் விரிக்கப்பட்டிருந்த ஒரு பனை ஓலையாலான பாயில் குழந்தையொன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. வேறுயாரும் அங்கு இல்லை.

பாலகிருஷண்ன் உரத்த குரலில் “ஏய்... ஏய்...” என்று அழைத்தான். உள்ளேயிருந்து முண்டும் ரவிக்கையும் அணிந்த ஒரு கர்ப்பிணி வெளியே வந்தாள்.

அவள் பாலகிருஷ்ணனையே உற்றுப் பார்த்தாள். பிறகு உள்நோக்கி நடந்தாள்.

ஒரு புல்லாலான பாயுடன் அவள் மீண்டும் வெளியே வந்தாள். அப்போது அவளுடைய மார்புப் பகுதியை ஒரு கிழிந்துபோன அழுக்குத் துணி மறைத்திருந்தது.

“உட்காருங்க” - அவள் ஒரு புன்சிரிப்புடன் பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னாள். சொல்லிவிட்டுத் திரும்பவும் உள்பக்கமாக ஒதுங்கி நின்றாள்.

அந்த முகத்தை முன்பு எங்கோ பார்த்ததைப் போல பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம் புரிந்துவிட்டது - ராணி!

“யாரு அது? ரா... ராணிதானே? பார்த்தவுடன் எனக்குப் புரியல. கொஞ்சம் வெளியே வா.”

தன்னுடைய நாகரிகமற்ற தோற்றத்தை வெளிக்காட்டும் வெட்கத்துடன் அவள் கதவுக்கு அருகில் பாதி மறைந்து நின்றுகொண்டிருந்தாள்.

தலையில் ஒரு கட்டு மரவள்ளிக் கிழங்குடனும் கையில் ஒரு கோவா மீனுடனும் ஒரு ஆள் வாசலில் வந்து நின்றான். வாசலில் உட்கார்ந்திருந்தவர்களை உற்றுப் பார்த்தவாறு அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

ஐந்து நிமிடங்கள் சென்ற பிறகு, அவன் வாசலுக்கு வந்து பாலகிருஷ்ணனுக்கு முன்னால் பணிவாக நின்றுகொண்டு சொன்னான்: “ நாராயணி சொன்னப்போதான் எனக்கே தெரிஞ்சது...”

பாலகிருஷ்ணன் கேட்டான்: “நீங்க நாராயணியோட கணவரா?”

“ஆமா... அவள் என்கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்கா. அதிகாரியின் வீட்டில் கஞ்சி குடிச்சித்தான் வளர்ந்தோம்னு சொல்லியிருக்கா...”

“உங்க பேரு...”

“ராமன்.”

பாலகிருஷ்ணன் ராமனையே சிறிது நேரம் பார்த்தான்.

தடிமனான, நல்ல உடல் நலத்துடன் உள்ள, சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய, பரவாயில்லை என்று சொல்லும்படியான தோற்றத்தைக் கொண்ட ஒரு இளைஞன்.

“எங்களுக்குத் தாகமா இருக்கு. கொஞ்சம் பச்ச தண்ணி கிடைச்சா நல்லா இருக்கும்.”

ராமன் அருகிலிருந்த நிலத்திற்குச் சென்றான். பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். ஐந்தாறு இளநீர்க் காய்களுடன் திரும்பி வந்தான்.

தாகம் அடங்கியவுடன் அவர்கள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள்.

ராமன் கேட்டான்: “இங்கே சாப்பிடுறதுல ஏதாவது பிரச்சினை இருக்கா?”

பாலகிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நல்ல பசி எடுத்தது.

இறுதியில் பாலகிருஷ்ணன் சொன்னான்: “எங்கக்கிட்ட வேட்டைக்குப் போனப்போ கிடைச்ச கொஞ்சம் பறவைகள் இருக்கு. அதைச் சமையல் செய்து கொடுக்குறதா இருந்தா, நாங்க காத்திருக்கிறோம்.”

“ரொம்ப சந்தோஷம்.”

அன்று சாயங்காலம் ஆகும் வரை சாப்பிட்டும் குடித்தும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ராமன் ஒரு பரமரசிகன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

விடைபெற்றுப் புறப்பட்டபோது பாலகிருஷ்ணன் அந்தக் குழந்தையின் கையில் ஒரு ரூபாய் கொடுத்தான்.

பாலகிருஷ்ணன் பார்வையிலிருந்து மறையும் வரை சமையலறையிலிருந்த ஜன்னல் வழியாக இரண்டு பெரிய கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

3

தற்குப் பிறகு ஆறு வருடங்கள் ஓடின.

பாலகிருஷ்ணன், டாக்டர் பாலகிருஷ்ணனாக ஆனான். அதிகாரியின் சஷ்டியப்த பூர்த்தி நாள். அவன் அந்தக் குன்னத்து கிராமத்திற்குச் சென்றான். அன்று சாயங்காலம் அந்த நதிக் கரைக்கு நடந்து சென்றான். ஆற்றின் அருகிலிருந்த ஒரு பெரிய குழியில் அவன் தவறி விழுந்து விட்டான். உரத்த குரலில் சிரித்தவாறு அருகிலிருந்த ஒரு புதருக்குள்ளிருந்து ஒரு குறும்புக்கார பையன் அவனுக்கு முன்னால் வந்து நின்றான். அதைப் பார்த்து புதிய நிலத்திலிருந்து ஒரு பெண் ஓடி வந்து, ஒரு பெரிய கழியை எடுத்து அந்தச் சிறுவனை அடிப்பதற்காக ஓங்கினாள். அந்தப் பெண் - நாராயணி.

டாக்டர் பாலகிருஷ்ணன் புதிய நிலத்திற்குச் சென்றபோது நாராயணி தேம்பித் தேம்பி அழுதாள்.

அவள் இப்போது ஒரு விதவை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமன் தென்னை மரத்தின் உச்சியிலிருந்து விழுந்து இறந்து போய் விட்டான்.


அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சொன்னாள்: “என் விதி இப்படி ஆயிடுச்சு. போன வருடம் என் அம்மாவும் இறந்துட்டாங்க. இனி எனக்குன்னு இந்த உலகத்துல இருக்குறது இந்தச் சின்னப் பையனும் என் தம்பியும் மட்டும்தான்.” நாராயணியின் மகன் குமாரன் டாக்டர் பாலகிருஷ்ணன் கழற்றி வைத்திருந்த செருப்பைத் தன் கால்களில் அணிந்து கொண்டு உரக்கச் சிரித்தவாறு வாசல் முழுவதும் நடந்து கொண்டிருந்தான். நாராயணி சொன்னாள்: “டேய், உனக்கு இவரைத் தெரியலையா?மல்லாக்கப் படுத்திருந்த காலத்துல உனக்கு ரூபாய் தந்த மனிதர்.”

அந்த ஞாபகம் அவளுடைய கண்களில் நீரை வரவழைத்தது. அந்த அளவிற்குச் சந்தோஷம் நிறைந்ததாக இருந்தது அவளுடைய தாம்பத்திய வாழ்க்கை.

“உன் கணவன் ராமன் ஒரு நல்ல மனிதன்” - பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறுகிற வகையில் சொன்னான்.

அதை கேட்டு அவள் தான் அணிந்திருந்த மேற்துண்டால் கண்ணீரைத் துடைத்தாள். “அப்போ என் வயித்துல மாதவி இருந்தாள்.”

“அவள் எங்கே-”

“அவள் ரொம்பவும் வெட்கப்படக் கூடியவ... உள்ளே ஒளிஞ்சிருக்கா...”

“உன் தம்பி எங்கே?”

“அவன் பெரிய போக்கிரியா ஆயிட்டான். எங்கேயாவது தகராறு பண்ணவோ, சண்டை போடவோ போயிருப்பான்.”

டாக்டர், குமாரனின் கையில் இரண்டு ரூபாய் கொடுத்தான். அவன் ஒரு பைத்தியத்தைப் போல அந்த நாணயங்களைத் தன் வாய்க்குள் போட்டு, சிரித்துக்கொண்டே மண்ணில் படுத்து உருண்டான்.

சுமார் பதினேழு வயது மதிக்கக்கூடிய ஒரு அழகு தேவதை இடுப்பில் ஒரு குடம் நீருடன், வெட்கத்தில் முகத்தைக் குனிந்து கொண்டு வாசல் வழியாகச் சமையலறைக்குள் சென்றாள்.

“பாலகிருஷ்ணன், நாராயணியிடம் கேட்டான்: “அது யாரு?”

“தெரியலையா? அம்மு... என் தங்கச்சி...”

“அம்முவா?”

என்ன மாறுதல்! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நாராயணியின் இடுப்பில் பார்த்த அந்த அழுக்குப் பிடித்த குழந்தை!

இந்த அளவிற்குப் பேரழகு படைத்த ஒரு இளம்பெண்ணை அவன் வேறு ஒரு இடத்திலும் பார்த்ததில்லை.

மறுநாள் ஆற்றின் அருகில் டாக்டர் பாலகிருஷ்ணன் அம்முவைத் தனியாகப் பார்த்தான். அவர்கள் ஒருவரோடொருவர் சிறிது நேரம் பேசினார்கள். இறுதியில் அம்மு சொன்னாள்: “நான் போறேன். அக்கா பார்த்தா...”

“உன் அக்காவைப் போகச் சொல்லு. இன்னைக்கு இரவு நல்ல நிலா வெளிச்சம் இருக்கும். நீ வருவியா?”

“எதுக்கு?”

பாலகிருஷ்ணன் எதுவும் சொல்லாமல் சிரித்தான். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்ததை நாராயணி தூரத்தில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அம்முவைக் கோபமாகத் திட்டினாள்: “என்னடி... ஆம்பளைங்ககூட கொஞ்சுறதுக்கும் குலாவுறதுக்கும் போறியா? உன்னை... அடிச்சு காலை ஒடிச்சாத் தான் சரியா இருக்கும்... பாத்துக்கோ...”

அம்மு அழுதாள். நாராயணி என்றால் அவளுக்கு மிகவும் பயம்.

அம்முவை நாராயணி திட்டியதை டாக்டர் மறைந்து நின்று கொண்டு கேட்டான். அவன் சிரித்துக்கொண்டே தன் மனதிற்குள் நினைத்தான். ‘பாவம்!’ பழைய ராணியின் ஏமாற்றமும் பொறாமையும்!

அன்று இரவு, அந்த நிலவு வெளிச்சத்தில், அந்த நதிக்கரையிலிருந்த மணல்மேட்டில் அவன் அம்முவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவள் எப்படியாவது வராமல் இருக்கமாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இறுதியில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு அம்மு வேறொரு வழியாக அவனுக்குப் பின்னால் வந்து நின்றாள். “எதுக்காக என்னை வரச் சொன்னீங்க?” - அவள் பதைபதைப்புடன் கேட்டாள். அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது. மொத்தத்தில் அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் அவளுடைய கையைப் பிடித்தான். இன்னொரு கையால் அவளுடைய முகத்தை உயர்த்தி முத்தம் கொடுக்க முயன்றான்.

அவள் அவனுடைய கையைத் தட்டிவிட்டு விலகி நின்றாள்: “ஏய்.... வேண்டாம். நான் போறேன்.” அவள் பதைபதைப்பு மேலோங்க நான்குப் பக்கங்களிலும் பார்த்தாள்.

பாலகிருஷ்ணன் மேலும் அவளுக்கு அருகில் வந்தான்.

அவள் திரும்பி அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

ஏமாற்றத்துடன் அவன் அந்த இடத்திலேயே மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தான். அவள் திரும்பி வரவேயில்லை.

மறுநாள் காலையிலேயே நகரத்திற்கு அவன் கட்டாயம் போயாக வேண்டும்.

அடுத்த வருடம் மீண்டும் டாக்டர் பாலகிருஷ்ணன் குன்னத்து வீட்டிற்கு வந்தான்.

ஓணக் காலம் அது. மலைமேல் இருந்துகொண்டு சிறார்கள் பூ அழைப்பும் பாட்டுமாக இருந்தார்கள்.

ஆனால், புதிய நிலத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை. அங்கு மகிழ்ச்சியின் எந்த வெளிப்பாடும் இல்லை. பாலகிருஷ்ணனை அங்கு வரவேற்றது நாராயணியின் அழுகைச் சத்தம்தான்.

அம்முவும் குமாரனும் அடுத்தடுத்த நாளில் இந்த உலகத்தை விட்டுப் போய் ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. பக்கத்து கிராமங்களில் பரவிக்கொண்டிருந்த ஒரு விஷக் காய்ச்சலே அவர்களின் மரணத்திற்குக் காரணம்.

வருடங்கள் அதற்குப் பிறகும் கடந்தோடின. டாக்டர் பாலகிருஷ்ணனுக்கத் திருமணமாகியது.

புதிய நிலத்தில் ஒரு தாயும் மகளும், அவர்களை எந்த நேரத்திலும் வந்து தொந்தரவு செய்து, தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த ஊர் சுற்றியான ஒரு இளைஞனும் துக்கம், வறுமை ஆகியவற்றுக்கு மத்தியில் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

4

சில நாட்கள் குன்னத்து வீட்டில் தன் மனைவியுடன் தங்குவதற்காக டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கு வந்திருந்தான்.

புதிய நிலத்தில் ஒரு ஆரவாரம், நாராயணி தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். கோபாலன் மாதவியை ஒரு தென்னை மரத்தில் கட்டிப்போட்டிருந்தான். காளைக்குச் சூடு வைக்கக்கூடிய சூலாயுதத்தைப் போல இருந்த ஒரு இரும்புத் துண்டை சூடு பண்ணி கையில் பிடித்துக் கொண்டு ஒரு அரக்கத்தனமான சிரிப்புடன் அவன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான். “அய்யோ... மாமா... என்னை.... என்னைக் கொன்னுடாதீங்க” என்று அவள் துடித்தவாறு உரத்த குரலில் கூப்பாடு போட்டாள். கோபாலன் அவளுடைய உள்ளங்கையில் அந்த இரும்புக் கம்பியை அழுத்தினான்.

“அய்யோ!” என்றொரு அலறல் சத்தம். அவள் தன் சுய உணர்வை இழந்தாள். அவளுடைய கழுத்து சாய்ந்தது. முகம் குனிந்து விழுந்தது.

பின்னாலிருந்து யாரோ கோபாலனின் கழுத்தைப் பிடித்தார்கள். அவனால் திரும்ப முடியவில்லையென்றாலும், எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தன்னைப் பிடித்த அந்த கையை அவன் தன் கையிலிருந்த இரும்புத் துண்டால் சுட்டான்.

ஒரு அதிர்ச்சியுடன் அந்தப் பிடி விலகியது. கோபாலன் திரும்பிப் பார்த்தபோது, அங்கு டாக்டர் பாலகிருஷ்ணன் நின்றிருந்தான்.

தாங்க முடியாத வேதனையுடன் பாலகிருஷ்ணன் அங்கு உட்கார்ந்தான். உடனே நாராயணி ஓடி வந்து தீக்காயம் பட்ட அவனுடைய கையில் கொஞ்சம் அடைக்காயின் சாற்றைப் பிழிந்து விட்டாள்.


முன்பு மலைமே* இருக்கும்போது தன்னைப் பூச்சி கடித்தபோது, அவள் செய்த சிகிச்சையை பாலகிருஷ்ணன் அப்போது நினைத்துப் பார்த்தான்.

கோபாலனைப் பார்த்து அவன் சொன்னான்: “அரக்கா... இந்த ஒரு மகளை... என்னை வேதனைப்பட வச்ச உன்னைத் தண்டிச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. நீ ஒரு மிருகம்...”

நாராயணி சொன்னாள்: “அவன் வந்தப்போ கஞ்சி தீர்ந்து போச்சுன்றதுக்காகத்தான் இதெல்லாம்...”

கோபாலன் பாலகிருஷ்ணனின் கால்களில் விழுந்தான். “அய்யா என்னை மன்னிக்கணும்.”

டாக்டர் பாலகிருஷ்ணனின் கையில் நெருப்புப் பட்ட இடம் ஒரு சிறிய சூலாயுதத்தைப் போல கறுத்து வெந்து போயிருந்தது. மாதவியின் கையிலும் அதே அடையாளம் அதைவிட பயங்கரமாக இருந்தது.

அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே, புதிதாக வேயாத அந்தக் குடிசை பாதிக்கப்பட்டு மோசமாகி, தளர்ந்து சொல்லப்போனால், ஒரு அடிமையான யானையைப் போல சாய்ந்தது. குணப்படுத்த முடியாத ஒரு பெரிய நோயைப் போல வறுமை அங்கு இறுக ஒட்டிக் கொண்டது.

கோபாலன் அந்தக் கிராமத்தை விட்டுப் போய் இரண்டு வருடங்களாகிவிட்டன. அவனைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

கற்கடக மாதத்தில் ஒரு இருண்ட நாள். பலமாகக் காற்று வீசிக் கொண்டிருந்தது. புதிய நிலத்தின் அந்தக் குடிசையின் இருண்ட அறையில் இருந்த ஒரு வயதான பெண்ணின் இறந்த உடலுக்குப் பக்கத்தில் அனாதையான ஒரு சிறுமி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு வெளியே வீசிகொண்டிருந்த காற்று மட்டும் அவளுக்கு ஆறுதல் கூறுவது மாதிரி மெதுவாக முனகியது.

5

காலச் சக்கரம் மீண்டும் சுற்றிக்கொண்டிருந்தது. வளர்ச்சியும், மாற்றங்களும் முறைப்படி நடந்துகொண்டிருந்தன.

டாக்டர் பாலகிருஷ்ணன் அரசாங்க மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்ற பதவியிலிருந்து பென்ஷன் வாங்கி ஓய்வு பெறப் போகிறான். அவன் மனைவியை இழந்த ஒரு மனிதன். தனக்கென்று குழந்தை எதுவும் இல்லாதவன். ஏராளமாகப் பணம் சம்பாதித்திருந்தும், அதை அனுபவிக்க அவனுக்கு வாரிசு இல்லை.

மருத்துவமனையின் பிரசவ வார்டில் ஒரு சீரியஸ் கேஸ் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஆபரேஷன் முடிந்து மெத்தைமீது படுக்க வைத்திருந்தார்கள்.

உடனே டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கு வந்தான்.

தாய் இறந்து விட்டாள். குழந்தை உயிருடன் இருந்தது. சந்தேகத்துடன், தாயின் நாடியைச் சோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் அவளுடைய கையைப் பிடித்தான். அந்தப் பெண்ணின் வலது உள்ளங்கையில் சூலாயுத வடிவத்தில் ஒரு கரிந்துபோன அடையாளம் இருப்பதைப் பார்த்து அவன் அதிர்ச்சியுற்றான்.

டாக்டர் பாலகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு மெத்தையின் தலைப்பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்த அட்டையைப் பார்த்தான். ‘மாதவி’ என்று அவன் உரத்த குரலில் படித்தான்.

அவன் நர்ஸிடம் திரும்பிக் கேட்டான்: “இவள் கூட யாரும் வரலையா?”

“யாரையும் இதுவரை பார்க்கல... கணவன் இல்லாமலே உண்டான கர்ப்பம்...”

அந்தப் பெண் குழந்தையை டாக்டர் தத்தெடுத்தான். அந்தக் குழந்தைக்கு ராணி என்று அவன் பெயரிட்டான்.

அடுத்த வருடமே டாக்டர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கி ஓய்வு பெற்றான். அதற்குப் பிறகு அந்தச் சிறிய கிராமத்தில் கொஞ்சம் சொத்துக்களை வாங்கி, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்க அவன் தீர்மானித்தான்.

6

தற்குப் பிறகு எட்டு வருடங்கள் கடந்தன.

ஓணக் காலம். குன்னத்து வீட்டின் ஒரு அறையில் ஒரு கிழவன் படுத்திருக்கிறான். மெலிந்து போய், எலும்புகள் வளைந்து, தோல் சுருங்கி, மூப்பு பிடித்த உடம்பு... தாளைப் போல வெளுத்த தலை முழுமையாக நரைத்துவிட்டிருந்தது. பாதி மூடிய - பார்வையை இழந்த கண்கள்... பற்கள் முழுவதும் விழுந்து கன்னங்கள் ஒட்டிப் போன முகம்... டாக்டர் பாலகிருஷ்ணனின் முதுமை அவனுடைய முகத்திலிருந்த அந்தப் பெரிய வளைந்த மூக்கிற்கு மட்டும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.

அறையின் கதவு திறக்கப்படும் ஓசையைக் கேட்டு கிழவன் கண்களைத் திறந்தான். “யாரு? ராணியா?” என்று கேட்டான்.

சுமார் ஒன்பது வயதான அழகான ஒரு சிறுமி அறைக்குள் வந்தாள். அவளுடைய கழுத்தில் ஒரு பூக்கூடை தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் கிழவனின் மெத்தைக்கு அருகில் வந்து நின்று சொன்னாள்: “அப்பா,” நான் பத்மநாபன்கூட மலைமேல பூப்பறிக்கப் போய் வரட்டுமா?

அந்தக் கிழவன் ஈறு முழுவதையும் வெளியே காட்டி சிரித்தான். பிறகு மிகவும் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு, நெற்றியில் முத்தமிட்டவாறு கேட்டான்: “ராணி, உனக்குப் பூப்பாட்டு தெரியுமா?”

“ம்... தெரியும்... கல்யாணி எனக்குப் பூப்பாட்டுப் சொல்லித் தந்தா.”

“ஒரே ஒரு பாட்டுப் பாடு. அப்பா கேக்குறேன்.”

அவள் முதலில் தயங்கினாள். பிறகு மெதுவாக ஒரு இனிய குரலில் அவள் பாடத் தொடங்கினாள்:

“காத்துல பூத்த இளங்கொடி வெற்றிலை

நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?

தும்பைப் பூவே, பூத்த இரவே,

நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?”

எத்தனையோ வருடங்களுக்கு முன்பு புதிய நிலத்தின் பாறைக்கு அருகில் இருந்துகொண்டு நாராயணி பாடிய அதே பாட்டு! அதே உருவம்!

கிழவனின் கைகளிலிருந்து விடுபட்ட ராணி உற்சாகத்துடன், சுதந்திரத் துடிப்புடன் வெளியே ஓடினாள். மலைச்சரிவில் அவளுடைய நண்பர்களும் தோழிகளும் அவளுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் கூட்டமாகப் பாட்டுப் பாடியவாறு மலைமீது ஏறினார்கள்.

பாலகிருஷ்ணன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். அவனால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எனினும் அவன் மனதில் நினைத்தான்: “உலகமே! எல்லா விஷயங்களும் திரும்பத் திரும்ப நடக்குறது மாதிரி செய்யிறதுதான் உன் பழக்கமா? சரி... எனக்கு முன்னாடி நீ இதே செயலை எத்தனை முறை திரும்பத் திரும்பச் செய்திருப்பே!”

அந்த மலையும் நதியும் நடுவிலிருக்கும் அந்தப் பாறையும் இப்போதும் அங்குதான் இருக்கின்றன. அவற்றுக்கு அருகிலிருந்த புதிய நிலமும் அந்தப் புல்லாலான குடிசையும் இப்போது அங்கு இல்லை. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு பெரிய மாந்தோப்பு இருக்கிறது.

அந்தப் பாறைக்கு அருகில் புற்களாலான புதரில் பாதி மறைந்து போயிருக்கும் ஒரு கல்லறையை நாம் பார்க்கலாம். அதன்மீது இப்படிப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் பாலகிருஷ்ணன்

பிறப்பு: 1849

மரணம்  : 1930

மரணம் - உண்மையான தூக்கம்.

வாழ்க்கை - அந்தத் தூக்கத்தில் நிறைவேறாத கனவு.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.