Logo

பாரத மாதா

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4781
bharadha maatha

பாலகோபாலன் அலுவலகம் சம்பந்தப்பட்ட சில வேலைகளுக்காக பம்பாய் வந்திருந்தான். புகைவண்டி நிலையத்தில் ராமச்சந்திரன் காத்திருந்தான். அவர்கள் இருவரும் நண்பர்கள். உயர்நிலைப் பள்ளிக் கூடத்திலிருந்து கல்லூரியின் இறுதி வகுப்பு வரை ஒன்றாகவே சேர்ந்து படித்தார்கள்.

கல்லூரியை விட்ட பிறகு,  அவர்கள் இருவரும் இரண்டு வழிகளில் சென்றுவிட்டார்கள். பாலகோபாலனுக்கு சொந்த ஊரிலேயே வேலை கிடைத்தது. ராமச்சந்திரன் ஒரு வேலைக்காக நீண்டகாலம் பம்பாயில் அலைந்து திரிந்தான். இப்போது அவர்கள் இருவரும் வேலைகளில் இருப்பவர்கள், திருமணமானவர்கள். ராமச்சந்திரனுக்கு ஜூஹூ சாலையில் சாந்த் சொஸைட்டியில் ஒரு ஃப்ளாட் இருக்கிறது.

வண்டி வந்து நின்றவுடன், ராமச்சந்திரன்  வேகமாக பாலகோபாலனின் அருகில் சென்றான்.  அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டார்கள்.

“நாம் ஒருவரையொருவர் பார்த்து...''

“ஆறு வருடங்கள்...''

பாலகோபாலன் சொன்னான்.

அவர்கள் வாடகைக் காரில் ஏறி ஜூஹூ சாலையை நோக்கிச் சென்றார்கள். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட மிகவும் அருமையான ஒரு ஃப்ளாட்டை ராமச்சந்திரன் வைத்திருந்தான். அவன் தன்னுடைய மனைவி வாசந்தியை பாலகோபாலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். பாலகோபாலன் தன்னுடைய பெட்டியைத் திறந்து ராமச்சந்திரனின் மகனுக்காக வாங்கிக் கொண்டு  வந்திருந்த விளையாட்டு சாமான்களையும் சாக்லேட்டையும் வெளியே எடுத்தான்.

குளியலும் உணவும் முடிந்த பிறகு, அவர்கள் சிகரெட்டைப் பற்றவைத்து புகைத்துக் கொண்டே பல விஷயங்களைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள் அல்லவா? பேசுவதற்கு

அவர்களுக்கு என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கும்! கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு என்னவெல்லாம் இருக்கும்! பல பழைய நினைவுகளையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டியதிருக்கும்!

“பாலன், பாரத மாதாவை உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?''

கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை மனதில் அசைபோடும்போது, ராமச்சந்திரன் கேட்டான்.

“சந்திரமதியையா?''

“அப்படியென்றால் நீ அவளை மறக்கவில்லை. அப்படித் தானே?''

“எப்படி மறப்பேன்?''

அந்த நிமிடமே பாலகோபாலனின் மனதில் சந்திரமதியின் முகம் தோன்றியது. கல்லூரியில் அவனைவிட அவள் இரண்டு வருடங்கள் பின்னால் இருந்தாள். ஒரு சாதாரண பெண். கொஞ்சம் அதிகமாக தலைமுடி இருக்கும். அவ்வளவுதான். எனினும், இரண்டாவது முறையாகப் பார்க்கும் அளவிற்கு அவளிடம் எதுவுமே இல்லை.

கல்லூரி ஆண்டுவிழாவின் போது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக இருந்தது- டாப்லோ. படகும் படகைச் செலுத்தும் படகோட்டிகளும், மேனகை கொண்டு வந்து காட்டும் குழந்தையை மறுக்கும் விஸ்வாமித்ரன், உறியில் வெண்ணெய் திருடும் ஸ்ரீ கிருஷ்ணன்... இப்படி ஏதாவது ஒரு டாப்லோ எல்லா வருடங்களும் நடப்பது வழக்கமாக இருந்தது.

பாரதத்தின் ஒரு பெரிய வரைபடம்- நீலநிற நதிகள், பனி படர்ந்த மலைகள்- அனைத்தையும் காணலாம். வரைபடத்திற்கு முன்னால் கூந்தலை அவிழ்த்து விட்டு நின்று கொண்டிருக்கும் பாரத மாதா...

மேடையில் கண்களைக் கூச வைக்கும் வண்ண வெளிச்சத்தில் அடர்ந்த கூந்தலை அவிழ்த்துவிட்டு, கண்களில் கங்கையின் ஆழத்தையும் நீல நிறத்தையும் காட்டிக் கொண்டு, உதடுகளில் அழகான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கும் பாரத மாதாவைப் பார்த்து பாலகோபாலன் உணர்ச்சிவசப்பட்டு விட்டான். சாட்சாத் பாரத மாதாவையே தனக்கு முன்னால் பார்த்துவிட்டதைப்போல அவன் பரவசமடைந்து விட்டான்.

அவன் பழைய சிந்தனைகள் கொண்டவன். பாரதம், பாரத மாதா என்றெல்லாம் கேட்கும்போது சிலிர்ப்படைந்து விடுவான்.

அன்றிலிருந்து அவன் சந்திரமதியை ரகசியமாக வழிபட்டுக் கொண்டிருந்தான். அது காதல் இல்லை. நாட்டின்மீது கொண்ட பக்தியாக இருந்தது.

அந்த சந்திரமதியை கல்லூரியை விட்டு வெளியே வந்தபிறகு, அவன் பார்க்கவே இல்லை.

“நான் சமீபத்தில் பார்த்தேன்...''

“எங்கே?''

“இந்த பம்பாயில்தான்...''

அதைக்கேட்டு பாலகோபாலனின் மனம் துடித்தது.

“திருமணமாகிவிட்டது. கணவனுக்கு இந்த தொழிற்சாலையில்தான் வேலை... குழந்தைகள் இருக்கிறார்கள்.''

இரவு உணவுக்கு முன்னால் அவர்கள் சிறிது விஸ்கி பருகினார்கள். பொதுவாக ஒரே ஒரு "பெக்'குடன் நிறுத்திக் கொள்ளும் பாலகோபாலன் அன்று நான்கு "பெக்'குகளை உள்ளே தள்ளினான். தொடர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைத்தான்.

“ராமா...'' இருட்டில் மின்னிக் கொண்டிருந்த தெருவிளக்குகளைப் பார்த்து அவன் மெதுவான குரலில் சொன்னான்: “நான் சந்திரமதியைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.''

"பொழுது விடியட்டும்...''

மேலும் ஒரு "பெக்'கை பாலகோபாலன் பருகினான். பேசும்போது நாக்கு குழைய ஆரம்பித்தது.

மறுநாள் காலையில் பாலகோபாலனும் ராமச்சந்திரனும் வெளியே வந்தார்கள். மதியத்திற்கு முன்பே பாலகோபாலன் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டான். பிறகு அவர்கள் சந்திரமதியைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டார்கள்.

“வீட்டிற்குச் சென்று பார்ப்போம்.''

“அது தேவையா?'' ராமச்சந்திரன் தயங்கினான். “அவள் தன் மூத்த குழந்தையை அழைத்துச் செல்வதற்காக பள்ளிக் கூடத்திற்கு வருவாள். அங்கு சென்று பார்த்தால் போதாதா?''

“சரி...''

அதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகில் வாடகைக் காரை நிறுத்திவிட்டு, ஒரு விளக்குக் கம்பத்திற்குக் கீழே காத்து நின்றிருந்தார்கள்.

பாலகோபாலன் எதுவும் பேசவில்லை. அவனுடைய மனம் முழுவதும் பாரத மாதாவின் உருவம்தான் இருந்தது. அவிழ்த்து விடப்பட்ட- அடர்த்தியாக வளர்ந்திருந்த கறுத்த கூந்தல்... கங்கையும் யமுனையும் ஓடிக்கொண்டிருக்கும் கண்கள்... பனிமலைகளில் விழும் வெயிலைப்போல பளபளத்துக் கொண்டிருக்கும் புன்னகை...

“அதோ... உன்னுடைய பாரத மாதா வந்து கொண்டிருக்கிறாள்!''

ராமச்சந்திரன் குரலைக் கேட்டு, அவன் தன்னுடைய நினைவுகளிலிருந்து திரும்பினான்.

சாலையின் ஓரத்தில் மெலிந்து வற்றிப்போன ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். இடுப்பில் ஒரு குழந்தை... விரல் நுனியில் இன்னொன்று... அதற்குப் பின்னால் மேலும் ஒன்று...

அவள் மெதுவாக சாலையைக் குறுக்காக கடந்து பள்ளிக்கூடத்தின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

சலவை செய்து... சலவை செய்து... நிறம் மங்கிப்போன ஒரு பழைய புடவையை அவள் அணிந்திருந்தாள். ஒரு கருப்பு நிறக் கயிறு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. தாழ்ந்த கண்களுக்குக் கீழே கறுப்பு அடையாளங்கள் இருந்தன. துருத்திக் கொண்டிருக்கும் கன்ன எலும்புகள்... போதாதற்கு இடுப்பிலும் விரல் நுனிகளிலும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்...

"பாரத மாதாவைப் பார்த்துவிட்டாய் அல்லவா?'' ராமச்சந்திரன் சொன்னான்.

"இனி நாம் போகலாம்.''

பாலகோபாலன் எதுவுமே கூறாமல் ராமச்சந்திரனுடன் சேர்ந்து குனிந்த தலையுடன் நடந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.