
“என் அன்பிற்குரிய நண்பனே, இந்தப் பெண் என்ற இனமே பயங்கரமானது.”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“அவர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்களே!”
“உன்னிடமா?”
“ஆமா... என்னிடம்தான்.”
“பெண்களா? இல்லாவிட்டால் பெண்ணா?”
“இரண்டு பெண்கள்.”
“ஒரே சமயத்தில் இரண்டு பெண்களா?”
“ஆமாம்.”
“அவர்கள் என்ன செய்தார்கள்?”
அந்த இரண்டு இளைஞர்களும் பொலி வார்டுக்கு வெளியே இருந்த ஒரு கஃபேயில் உட்கார்ந்து மதுவில் நீர் கலந்து பருகிக் கொண்டிருந்தார்கள். நீர் வண்ணப் பொருட்களை ஒன்றாகப் போட்டுக் கலந்து விட்டதைப்போல இருந்தது அந்த மதுவின் நிறம். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இருபத்து ஐந்துக்கும் முப்பதுக்கும் இடையில். ஒருவன் கருப்பு நிறத்தில் இருந்தான். இன்னொருவன் வெள்ளையாக இருந்தான். தரகு வேலை பார்ப்பவர்களைப்போல அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்குள்ளும் வரவேற்பு அறைகளுக்குள்ளும் நுழைந்து செல்லும், எந்த இடத்திலும் வசிக்கக்கூடிய, எங்கும் பார்க்க முடிகிற, எந்த இடத்திலும் காதலில் ஈடுபடும் நிலையில் இருக்கும் மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள். அவர்களில் கருப்பாக இருந்த மனிதன் இப்படித் தொடர்ந்து சொன்னான்.
“டிப்பேயில் எனக்கு அறிமுகமான அந்த இளம் அழகியை... அந்த வியாபாரிகள் மனைவியைப் பற்றி நான் உன்னிடம கூறியிருக்கேன்ல?”
“ஆமா...”
“என் நண்பனே, அது எப்படி நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா? பாரிஸில் எனக்கு ஒரு காதலி இருக்கிறாள். என்னுடைய ஒரு பழைய சினேகிதி... அவள் எனக்கு நன்கு பழக்கமானவள்... உண்மையாகச் சொல்லப் போனால், நான் மிகவும் மதிக்கிற ஒருத்தி.”
“உன் சினேகிதியா?”
“ஆமாம்... நான் வழக்கமா பழகுற ஒருத்தி. அவளுக்கு அதே மாதிரி நான். அவளுடைய கணவன் திறமையானவன். நல்ல ஒரு மனிதன். பணக்காரன். அவன்மீது எனக்கு பெரிய மதிப்பு உண்டு.”
“அப்படியா?”
“ம்.... ஆனால், அவர்களால் பாரீஸை விட்டுப் போக முடியவில்லை. நான் டிப்பேயில் மனைவி இல்லாமல் வாழ்ந்தேன்.”
“நீ ஏன் டிப்பேயிக்குப் போனே?”
“ஒரு சின்ன மாறுதலுக்காக. இந்த நகரத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது என்பது யாருக்கும் சோர்வைத் தருகிற ஒரு விஷயமே.”
“அதற்குப் பிறகு?”
“அப்போது கடற்கரையில் நான் முன்பு சொன்ன அந்தப் பெண்ணைச் சந்திச்சேன்.”
“ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவரின் மனைவி...”
“ஆமாம். அவள் மிகவும் கவலையில் இருந்தாள். அவளுடைய கணவன் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வீட்டுக்கு வருவான். அவன் ஒரு மடையன்! எனக்கு விஷயம் முழுவதும் புரிஞ்சிடுச்சு. நாங்கள் சிரித்தும் விளையாடியும் சந்தோஷம் கண்டோம். ஒன்றாக நடனம் ஆடினோம்.”
“அதற்குப் பிறகு?”
“ம்... அது பின்னால்தான் நடந்தது. எனினும், நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். விரும்பினோம். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு நான் அவளிடம் சொன்னேன். அதைத் திரும்பவும் சொல்லும்படி அவள் என்னிடம் கேட்டுக் கொண்டாள். என் வழியில் அவள் எந்தவொரு தொந்தரவும் உண்டாக்கவில்லை.”
“நீ அவளை உண்மையாகவே காதலிச்சியா?”
“ஆமா... முழுமையா... அவள் நல்ல பெண்...”
“சரி... இருக்கட்டும். நீ அவளைப் பற்றி சொல்லு.”
“அவள் பாரீஸ்ல இருந்தாள். ம்.. ஆறு வாரங்கள் மிகவும் சந்தோஷமான நாட்களாக இருந்தன. மிகவும் நெருங்கிய உறவுடன் இருந்து நாங்கள் திரும்பி வந்தோம். ஒரு பெண் உன்னிடம் தவறு எதுவும் செய்யவில்லை என்றால் கூட அவளைக் கழற்றி விடுவது எப்படி என்பது உனக்குத் தெரியுமா?”
“ம்... நல்லா தெரியும்.”
“அப்படின்னா சொல்லு... நீ எப்படி அவளைச் கழற்றி விடுவே?”
“நான் அவளை விட்டு ஓடிடுவேன்.”
“ம்... அதை எப்படிச் செயல்படுத்துவே?”
“அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவே மாட்டேன்.”
“ஆனால், அவள் உன்னைத் தேடி வருவாள்னு வச்சுக்கோ. அப்போ?”
“அப்போ நான் வீட்டில் இருக்க மாட்டேன்.”
“அவள் திரும்பவும் வந்தால்...?”
“எனக்கு உடல்நலம் இல்லைன்னு சொல்லுவேன்.”
“சரி... இருக்கட்டும். அவள் உன்னைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டா...?”
“நான் ஏதாவது ஒரு பொய் சொல்லுவேன்.”
“அவள் அதையும் பொறுத்துக் கொள்ளத் தயாரானால்?”
“நான் அவளுடைய கணவனுக்கு ஊமைக் கடிதம் எழுதுவேன். மீதி விஷயங்களை அவன் பார்த்துக் கொள்வான்.”
“அது மிகவும் பயங்கரமான விஷயம். என்னால் அதைச் செய்ய முடியாது. எப்படி உறவை முறித்துக் கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை. அதனால் ஏராளமான காதலிகள் எனக்கு இருக்கிறார்கள். வருடத்தில் ஒரு முறைக்கு மேல் என்னுடன் தொடர்பு கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். பத்து மாதங்கள் ஆனவுடன் தொடர்பு கொள்பவர்கள் இருக்கிறார்கள். இனி வேறொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பமான நாட்களில் ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு ஒன்று சேர்ந்து இருப்போம். நிரந்தரமாக நான் தொடர்பு வைத்திருக்கும் சினேகிதிகள் என்னைத் தொல்லைப் படுத்துவதில்லை. ஆனால், புதிய பெண்களை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாள்வது தான் சிரமமான விஷயம்.”
“பிறகு?”
“பிறகு... பிறகு அந்த இளம் பெண் ஒரேயடியா எரிந்து படர ஆரம்பிச்சிட்டா... அவளுடைய கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதால், முன்கூட்டி அறிவிக்காமலே அவள் என் வீட்டிற்கு வந்துட்டா. இரண்டு தடவை பெரும்பாலும் அவள் என் நிரந்தரக் காதலியை படிகளில் ஏறி வர்றப்போ பார்த்திருக்கிறாள்.”
“ஓ.. ச்சே...”
“ஆமாம். அதனால் தேவையில்லாத பிரச்சினைகள் எதுக்குன்னு நான் அவர்களுக்கு சரியான நாட்களை நிச்சியத்தேன். பழைய பெண்ணுக்கு சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் என்று முடிவு செய்துவிட்டு, புதியவளுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களை ஒதுக்கினேன்.”
“புதியவளுக்கு நீ எப்படி முன்னுரிமை தந்தே?”
“அதுவா? என் நண்பனே, அவள்தானே வயதில் இளையவள்?”
“அப்படின்னா, உனக்கு சுதந்திரம் இரண்டு நாட்களுக்கு மட்டும்தான்.”
“ஓ! ஒரு மனிதனக்கு அது தாராளமா போதும்.”
“ஓ... உன்னைப் பாராட்ட என்னை அனுமதி நண்பா! எனக்கு அதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.”
“சரி... நீ கொஞ்சம் சிந்திச்சுப் பார்... உலகத்திலேயே மிகவும் மோசமான காரியம் எனக்கு நடந்திருச்சு. நான்கு மாதங்கள் எல்லாம் நல்ல முறையில் நடந்தது. எல்லாம் ஒழுங்கா போய்க் கொண்டிருக்குதுன்னு நினைச்சு சந்தோஷமா இருக்குறப்போ அந்த அடி வந்து விழுகுது.
என் வழக்கமான காதலியை வழக்கமான நேரத்தில், மதியம் ஒண்ணே கால் மணிக்கு எதிர் பார்த்துக் கொண்டு, ஒரு சுருட்டைப் புகைத்துக் கொண்டு, கனவு கண்டு கொண்டு இருக்குறபோது தான் வழக்கமான நேரம் கடந்து போயிருப்பதையே நான் உணர்றேன். அவள் மிகவும் சரியா நடந்து கொள்கிறவள் என்பதால் நான் பதைபதைப்பு அடைய ஆரம்பிச்சுட்டேன். ஆனால், ஏதாவது ஒரு விஷயம் அவளைத் தடை செய்திருக்கும் என்று நான் நினைத்தேன். அரை மணிநேரம் தாண்டியது. ஒரு மணி நேரம் கடந்தது. ஒன்றரை மணி நேரம் ஆனது. அப்படின்னா உண்மையாகவே அவளுக்கு ஏதோ தடை உண்டாகியிருக்குன்னு நான் நினைச்சேன்... கடுமையான தலைவலியோ... தொந்தரவு தரும் ஏதாவது விருந்தாளியோ... அந்த மாதிரியான காத்திருத்தல் வெறுப்பபையும் சோர்வையும் கோபத்தையும் உண்டாக்கக்கூடிய ஒன்று என்பதே உண்மை. இறுதியில் வெளியே செல்லலாம் என்று நான் தீர்மானிச்சேன். நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். அவள் அப்போது ஒரு புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். ‘அது சரி...’ - நான் அவளிடம் சொன்னேன். அவள் அதற்கு அமைதியான குரலில் பதில் சொன்னாள்:
‘என் தங்கமே, என்னால் வர முடியவில்லை. ஒரு தடை உண்டாகிவிட்டது.’
“என்ன தடை?”
‘ஒரு காரியம் நடந்திடுச்சு.’
‘என்ன அது?’
‘ஒரு தொல்லை கொடுப்பவன் பார்க்க வந்துட்டான்.’
அவள் உண்மையான காரணத்தைச் சொல்ல மாட்டாள் என்று எனக்குத் தெரியும். அவள் அமைதியாக இருந்தாள். அதைப்பற்றி நினைத்து நான் கவலைப்படல. மறுநாள் இன்னொரு காதலியுடன் சேர்ந்து இருந்து இழந்த நேரத்தைத் திரும்பப் பெற்று விடலாம் என்று நான் நினைத்தேன். செவ்வாய்க் கிழமை. அந்த அதிகாரியின் மனைவியைப் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் ஆர்வத்துடனும் காம எண்ணங்களுடனும் நான் இருந்தேன். ஆனால், அவளும் நிச்சியக்கப்பட்ட நேரத்திற்கு வந்து சேரவில்லை என்ற விஷயம் தெரிந்தபோது, நான் ஒரு மாதிரி ஆகி விட்டேன். நான் கடிகாரத்தை பதைபதைப்புடன் பார்த்தேன். கடிகாரத்தின் முள் முன்னோக்கி நகர்ந்து கொண்ருப்பதாக பொறுமை இல்லாமல் நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அரை மணி நேரம் கடந்தது. இரண்டு மணி ஆனது. என்னால் அங்கு உட்கார்ந்திருக்க முடியல. நான் அறையில் அங்குமிங்குமாக நடந்தேன். அவள் வருவதை எதிர்பார்த்து சாளரத்தில் முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளியே பார்த்தவாறு நின்றிருந்தேன். அவள் படிகளில் ஏறி வரும் சத்தத்தைக் கேட்பதற்காக நான் அறையின் வாசலில் காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டு நின்றிருந்தேன்.
மணி இரண்டரையும் கடந்து மூன்று ஆனது! நான் என்னுடைய தொப்பியை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். என் நண்பனே, அவளும் ஒரு புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.
‘அது சரி... இதுதானா விஷயம்...’ - நான் சொன்னேன்.
எந்தவிதமான உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் அவள் சொன்னாள் : ‘தடை காரணமா என்னால் வர முடியாமல் போய் விட்டது.’
‘என்ன தடை..?’
‘ஒரு தொல்லை தரும் மனிதன் வந்துட்டான்.’
உண்மையிலேயே அவர்கள் இருவருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்து போய்விட்டனவோ என்று எனக்கு சந்தேகம் உண்டானது. ஆனால், அவளிடம் எந்தவித அதிர்ச்சியும் இல்லை. நான் என்னுடைய சந்தேகங்களை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்தேன். அது முற்றிலும் இயற்கையாகவே நடந்திருக்கிறது என்று நான் முடிவெடுத்திருந்தேன். அவள் பக்கம் எந்தவொரு திருட்டுத் தனமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரைமணி நேரம் நட்புடன் பேசிக் கொண்டிருந்த பிறகு (அவளுடைய மகள் உள்ளே வந்ததால், கிட்டத்தட்ட பன்னிரண்டு தடவைகள் அதற்குத் தடை உண்டாகியிருக்கிறது) மிகுந்த கவலையுடன் நான் வெளியே நடந்தேன். அடுத்த நாள் நடந்த விஷயத்தைச் சிந்திச்சுப் பாரு.”
“அதேதான் நடந்ததா?”
“ஆமாம்... அடுத்த நாளும் அதேதான் நடந்தது. எந்தவொரு விளக்கமும் இல்லாமல் மூன்று வாரங்கள் அதேதான் தொடர்ந்து நடந்தது. அந்த வழக்கத்திற்கு மாறான செயலோ, நான் சந்தேகப்பட்ட ரகசியமோ எந்தவொரு விளக்கத்தையும் எனக்குத் தரவில்லை.”
“அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா?”
“நான் அப்படி நினைக்க வேண்டியதிருக்கு! எப்படி? அதைக் கண்டுபிடிப்பது வரை எனக்கு ஒரே பரபரப்பா இருந்தது.”
“இறுதியில் நீ எப்படி அதைக் கண்டுபிடிச்சே?”
“அவர்களுடைய கடிதங்களில் இருந்து... ஒரே நாளில் ஒரே மாதிரியான காரணங்களைச் சொல்லி அவர்கள் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.”
“அப்படியா?”
“அது இப்படித்தான் நடந்தது. பெண்கள் நிறைய பின்களை பயன்படுத்திகிறவர்கள் என்ற விஷயம் உனக்குத் தெரியும்ல! எனக்கு ஹேர்பின்களை மட்டும் தான் தெரியும். அவற்றின்மீது எனக்கு சந்தேகம் இருந்ததால், நான் அவற்றை கவனிக்கிறேன். ஆனால் மற்ற பின்கள் இருக்கின்றனவே! அவை மிகவும் ஆபத்தானவை. கருப்பு நிறத்தில் தலையைக் கொண்டிருக்கும், பிரச்சினைகளுடன் ஒரே மாதிரி நம்மையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பின்கள்.... நாம் நாயையும் குதிரையையும் வேறுபடுத்தித் தெரிந்து கொள்வதைப்போல, அந்த பின்கள் நாம் முட்டாள்கள் என்பதைத் தெரிந்து கொள்கின்றன. ஒருநாள் அந்த அலுவலக அதிகாரியின் மனைவி அந்தக் ‘கலைப்பொருளை’ என் கண்ணாடிக்கு அருகில் ஒரு தாளில் கட்டி வைத்தாள். ஆனால், என்னுடைய வழக்கமான காதலி அந்தக் கருப்பு நிறப் பொருளைப் பார்த்தவுடன், அதை எடுத்துக் தன் கையில் வைத்தாள். ஒரு வார்த்தைகூடக் கூறாமல், அவள் தன் கையில் இருந்த ஹேர் பின்கள் மாறுபட்டு இருந்தாலும், பார்க்கும் போது ஒரே மாதிரி தோன்றும் அந்தப் பின்களை... அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய் விட்டாள். மறுநாள் அதிகாரியின் மனைவி... அவள் தன் அறையில் மறந்து வைத்து விட்டுப் போன ‘பொருளை’ எடுப்பதற்காக வந்தபோது, அதற்கு பதிலாக வேறொன்று அங்கே இருப்பதை திடீரென்று அவள் பார்த்தாள். அப்போது அவளுக்கு சந்தேகம் வந்திடுச்சு. அவள் என் இன்னொரு காதலியைத் தேடினாள். என் வழக்கமான காதலி இந்தக் கம்பி இல்லா கம்பி செய்திக்கு பதிலாக மூன்று கருப்பு நிற ஹேர் பின்களை அனுப்பி வைத்தாள்.
அங்கும் இங்கும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளாமல் அவர்கள் அந்தத் தகவல் பரிமாற்றத்தைத் தொடர்ந்தார்கள். இறுதியில் என் வழக்கமான காதலி... அவளுக்குத்தான் கூடுதல் தைரியம்... தெரியுதா? ஒரு தாளில் இப்படி எழுதி அங்கே போட்டாள்.
‘சி.டி. போஸ்ட் ரெஸ்ட்டா ரெண்ட்
பொலிவார்ட் மால்பெர்பெட்’
அதற்குப் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதத் தொடங்கினார்கள். ஆனால், அவர்கள் எல்லா விஷயங்களையும் பரிமாறிக் கொள்ளவில்லை. எனினும், மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் விளையாட்டைத் தொடர்ந்தார்கள். என் வழக்கமான காதலி தைரியத்தை வர வழைத்துக் கொண்டு இன்னொரு காதலியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தேடி நடந்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன கூறிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுடைய சந்திப்பிற்கான செலவை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியது வந்தது. அது மட்டுமே நான் தெரிந்துகொண்ட ஒரு விஷயம்.
அதற்குப் பின்னால் உள்ள விஷயங்களெல்லாம்தான் உனக்குத் தெரியுமே!”
“அவ்வளவுதானா?”
“ஆமாம்...”
“அதற்குப் பிறகு நீ அவர்களைப் பார்க்கலையா?”
“மன்னிக்கணும். நாங்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளவில்லை. அதனால் அவர்களை நான் சினேகிதிகளாகத்தான் பார்க்குறேன்.”
“அதற்குப் பிறகு அவர்கள் ஒருவரையொருவர் மீண்டும் சந்தித்தார்களா?”
“ஆமாம்... நண்பனே! அவர்கள் நெருக்கமான தோழிகளாக மாறிட்டாங்க.”
“அதற்குப் பிறகும் உனக்கு ஒரு ஆசை தோணலையா?”
“இல்லை. என்ன ஆசை? நீ என்ன சொல்ல வர்றே?”
“நீ ஒரு அப்பிராணிதான்! அவர்களுக்கு ஹேர் பின்கள் எங்கிருந்து கிடைத்தனவோ, அதே இடத்தில் அவற்றைத் திரும்பவும் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கு!”