Logo

எனக்குப் பைத்தியமா?

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6819
enakku pythiyama

னக்கு என்ன? பைத்தியமா,  பொறாமையா? எதுவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு அந்த உணர்வு சாதாரணமாகவே இருந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு குற்றச் செயலைச் செய்து விட்டேன் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதைச் செய்ததற்குப் பைத்தியமோ, பொறாமையோ காரணங்கள் அல்ல. ஒரு குற்றச் செயலைச் செய்யக் கூடிய எண்ணத்தை உண்டாக்கும் விதத்தில் எனக்கு நேர்ந்த காதல் துரோகம், எனக்குள் அளவுக்கு அதிகமான வேதனையை உண்டாக்கியது.

அதன் விளைவாக எந்தச் சமயத்திலும் குற்றவாளியாக ஆகியிராத நான் ஒரு குற்றச்செயலைச் செய்து விட்டேன்.

எனக்கு அவள்மீது வெறித்தனமான காதல் இருந்தது. அது உண்மைதானா? நான் அவளைக் காலித்தேனா? இல்லை... இல்லை... அவளுடைய ஆன்மாவும் உடலும் என்னுடையவை. நான் அவளுடைய செல்லப் பிள்ளையாக இருந்தேன். தன்னுடைய புன்னைகையால், அன்பால், அழகான தோற்றத்தால் அவள் என்னைக் கட்டுப்படுத்தினாள். அந்த ஈர்க்கக்கூடிய அம்சங்களைத்தான் நான் காதலித்தேன். ஆனால், அந்த உடம்புக்குள்ளிருந்த பெண்ணை நான் நிராகரித்தேன், வெறுத்தேன். அவள் ஒரு விசுவாசமில்லாத, ஏமாற்றுக்காரியான, மனத்தூய்மை இல்லாத ஒரு பெண்ணாக இருந்ததால், நான் அவளை வெறுத்திருக்கலாம். கேவலமான அம்சங்களைக் கொண்ட ஒரு மாமிச கோபுரம் அவள். அவ்வளவுதான்.

எங்களுடைய காதலின் முதல் மூன்று மாதங்கள் வியப்படையும் விதத்தில் சந்தோஷம் நிறைந்ததாக இருந்தன. அவளுடைய கண்களுக்கு அசாதாரணமான மூன்று நிறங்கள் இருந்தன. இல்லை... நான் பைத்தியக்காரத்தனமாக உளறவில்லை. அப்படித்தான் அந்தக் கண்கள் இருந்தன என்று சத்தியம் பண்ணி நான் கூறுவேன். மதிய நேரத்தில் அவளுடைய கண்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். காலை நேரத்தில் அடர்த்தியான பச்சை நிறத்தில் அவை இருக்கும். காதல் இருந்த நிமிடங்களில் அந்தக் கண்களில் நீலநிறம் நிறைந்திருக்கும். அந்த நிமிடங்களில் அவை விரிந்திருக்கும். அவற்றில் பதைபதைப்பு குடிகொண்டிருக்கும். அவளுடைய உதடுகள் துடித்தன. பாம்புகள் சீறுவதைப்போல, அவளுடைய சிவந்த நிறமுள்ள நாக்கின் நுனி வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அவள் தன்னுடைய கண் இமைகளை உயர்த்தும்போது, நான் அவளுடைய காமவெறி வெளிப்படும் கண்களைப் பார்த்தேன். அப்போது அவளை எனக்குக் கீழ்படியச் செய்து, அதற்குப் பிறகு அந்தப் பூச்சியைக் கொல்ல வேண்டும் என்ற அடிமனதின் ஆசையுடன் நான் துடித்துக் கொண்டிருந்தேன்.

அவள் அறைக்குள் வந்தபோது, அவளுடைய ஒவ்வொரு அடி வைப்பும் என்னுடைய இதயத்திற்குள் எதிரொலித்தது. அவள் நிர்வாணமாக எனக்கு முன்னால் வந்து நின்றபோது, சிறிதும் எதிர்பார்க்காத ஒரு பலவீனம் என்னை வந்து ஆக்கிரமித்தது. என் உடல் உறுப்புகள் தளர்ந்தன. மார்புப் பகுதி உயர்ந்து தாழ்ந்தது. நான் தலை சுற்றிக் கீழே விழுந்தேன். நான் உரு கோழை ஆனேன்.

ஒவ்வொரு காலையிலும் அவள் எழும்போது, அவளை முதலில் பார்க்கவேண்டும் என்பதற்காக நான் காத்திருந்தேன். என்னை அடிமை ஆக்கிய அந்தப் பூச்சிமீது, என் இதயத்தில் வெறுப்பும் கோபமும் அவமானமும் நிறைந்திருந்தன. ஆனால், பளிங்கைப் போன்ற தன்னுடைய கண்களால் களைப்பின், தளர்ச்சியின் அடையாளங்களை வெளிப்படுத்தி அவள் என்னைப் பார்த்தபோது, எனக்குள் அடக்க முடியாத உணர்ச்சி நெருப்பு புகைய ஆரம்பித்தது.

ஒருநாள் அவள் தன் கண்களை விரித்துப் பார்த்தபோது, வேறெங்கோ பார்க்கும் அலட்சியமான பார்வையை நான் பார்த்தேன். விருப்பத்தின் சாயலே இல்லாத பார்வை. அவளுக்கு என்மீது வெறுப்பு வந்துவிட்டது என்று அப்போது நான் நினைத்தேன். எல்லாம் முடிந்துவிட்டன என்று எனக்கும் தோன்றியது. கடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் நினைத்தது சரிதான் என்று உணர்த்திக் கொண்டிருந்தன. என் பக்கத்தில் வரச்சொல்லி உதடுகள் மூலமும் கைகளின் மூலமும் நான் சைகை காட்டி அழைத்தபோது அவள் என்னை விட்டு விலகிப்போய் விட்டாள்.

“என்னை வெறுமனே விடுங்க...” - அவள் சொன்னாள்: “நீங்க கொடூரமான மனிதன்.”

அப்போது நான் சந்தேகம் கொண்டேன். பைத்தியம் பிடிக்கிற அளவிற்குப் பொறாமை கொண்ட மனிதனாக ஆனேன். எனினும், நான் பைத்தியம் ஆகவில்லை. இல்லை... நிச்சயமாக இல்லை. நான் அவளைச் சந்தேகத்துடன் பார்த்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்பதற்காக அல்ல - மிகவும் சர்வசாதாரணமாக எனக்கு பதிலாக வேறொரு மனிதனை அவள் படைத்து விடுவாள் என்பதை நான் புரிந்துகொண்டால்...

சில நேரங்களில் அவள் கூறுவதுண்டு: “ஆண்கள் என்னைச் சோர்வடையச் செய்கிறார்கள். வெறுப்படையச் செய்கிறார்கள். கடவுளே, அது சத்தியமான உண்மை.”

நேர்மையற்றவை என்று எனக்குத் தோன்றிய அவளுடைய சிந்தனைகளைப் பற்றியும் மேம்போக்கான போக்கு குறித்தும் நினைத்த நான் அவள்மீது பொறாமை கொண்டேன். அலட்சியமான பார்வைகளுடன் அவள் எழுந்தபோது, கோபத்தால் எனக்கு மூச்சு அடைத்தது. அப்போது அவளை இறுக்கி மூச்சுவிட முடியாமற் செய்து, அவளுடைய இதயத்திற்குள் மறைந்து கிடக்கும் கேவலமான ரகசியங்களை, அவளே வெளியே கூறும்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது.

எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை.

ஒரு இரவில் அவள் மிகவும் அழகான தேவதையாக இருப்பதை நான் பார்த்தேன். ஏதோ ஒரு புதிய உணர்ச்சி அவளை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்று எனக்குப் பட்டது. அதாவது - அப்படி நான் உணர்ந்தேன். முன்பு இருந்ததைப்போல அவளுடைய கண்கள் பிரகாசித்தன. அவளுக்குக் காதல் நோய் வந்திருந்தது. காதல் என்ற சிறகுகள் மீது ஏறி அவள் தானே பறந்து சென்றாள்.

எதுவுமே தெரியாதது மாதிரி நான் அவளையே வெறித்துப் பார்த்தேன். எனினும் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் காத்திருந்தேன். ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம்... ஏதோ விரும்பக்கூடிய உணர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டதைப்போல அவள் மிகுந்த சந்தோஷம் நிறைந்தவளாக இருந்தாள்.

இறுதியில் நான் தெளிவான முடிவுக்கு வந்தேன். இல்லை, நான் பைத்தியம் இல்லை. இல்லவே இல்லை என்று சத்தியம் பண்ணி நான் கூறுகிறேன். இனம் புரியாத, கொடூரமான இந்த விஷயத்தை நான் எப்படி விளக்கிக் கூறுவேன்? எனக்கு நானே எப்படி உணர்த்திக்கொள்ள முடியும்? இப்படித்தான் நான் முடிவுக்கு வந்தேன்.

ஒரு இரவு நேரத்தில் நெடிய ஒரு குதிரைச் சவாரிக்குப் பிறகு அவள் எனக்கு முன்னாலிருந்த நாற்காலியில் சாய்ந்தது படுத்திருந்தாள். அசாதாரணமான துடிப்பு அவளுடைய கன்னத்தில் இருந்தது. எனக்கு நன்கு பழக்கமான அவளுடைய கண்களிலும் அந்தத் துடிப்பு தெரிந்தது. என்னிடம் எந்தத் தப்பும் உண்டாகவில்லை.


கட்டிப் பிடித்துக் கிடக்கும் நிமடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட வெளிப்பாட்டையும், பிரகாசத்தையும்  நான் அவளுடைய கண்களில் பார்த்திருக்கிறேன். காதல்! ஆனால், அவள் யாரைக் காதலிக்கிறாள்? என்ன? என் சிந்தனையில் ஏதோ இருட்டு உண்டானதைப்போல் நான் உணர்ந்தேன். அவளைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய முகத்தை சாளரத்திற்கு நேராகத் திருப்பினேன். ஒரு வேலைக்காரன் அவளுடைய குதிரையை லாயத்தை நோக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். குதிரை விலகிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். அடுத்த நிமிடம் அவள் கட்டிலில் விழுந்து தூங்கிவிட்டாள். அந்த இரவு முழுவதும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். - ஏதோ ஆழங்களுக்குள் என்னுடைய மனம் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. காமத்தில் திருப்தி கிடைத்திராத ஒரு பெண்ணின் சிற்றின்ப வெறியை, சிற்றின்ப உணர்ச்சியை யாரால் கணக்கிட முடியும்?

எல்லா காலை வேளைகளிலும் அவள் குதிரைமீது அமர்ந்து மலைகள் வழியாகவும், அடிவாரங்கள் வழியாகவும் வெறிபிடித்து குதித்து வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் அவள் மிகுந்த சோர்வுடன் திரும்பி வந்தாள். இறுதியில் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது. அவளுடைய குதிரை மீதுதான் எனக்குப் பொறாமையே! அவளுடைய முகத்தை முத்தமிட்ட காற்றுமீது, தலையைக் குனிகிற இலைகள்மீது, பனித்துளி மீது, அவள் அமர்ந்திருந்த குதிரைமீது, இருந்த இருக்கை மீது... எல்லாவற்றின் மீதும் எனக்குப் பொறாமை தோன்றியது. பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். நான் அவளுக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தேன். சவாரி முடிந்து திரும்பி வரும்போது, குதிரை மேலிருந்து இறங்க அவளுக்கு நான் உதவினேன். அப்போது அவன் - அந்தக் குதிரை கெட்ட எண்ணத்துடன் என்னை நோக்கி குதித்தான். அவள் அவனுடைய கழுத்தை வருடினாள். தன் உதடுகளைக்கூட துடைக்காமல் அவள் அவனுடைய துடித்துக் கொண்டிருந்த மூக்கு நுனியை முத்தமிட்டாள். நான் என்னுடைய வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன்.

நான் ஒருநாள் அதிகாலை வேளையில் எழுந்து அவள் மிகவும் விருப்பப்பட்ட மரக் கூட்டங்களுக்கு நடுவில் இருந்த பாதைக்குச் சென்றேன். என் கையில் ஒரு கயிறு இருந்தது. ஒரு கடுமையான சண்டைக்குத் தயார் பண்ணிக்கொண்டு போவதைப்போல என்னுடைய துப்பாக்கியை நான் என் சட்டைக்குப் பின்னால் மறைத்து வைத்தேன். பாதையின் இரு பக்கங்களிலும் இருந்த இரண்டு மரங்களிலும் கயிறின் ஒவ்வொரு முனையையும் கட்டி, பாதையின் குறுக்காக ஒரு தடையை உண்டாக்கிய பிறகு நான் புதருக்குள் ஒளிந்திருந்தேன். சிறிது நேரத்தில் அவளுடைய குதிரையின் குளம்புச் சத்தத்தை நான் கேட்டேன். கண்களில் காம வெறியின் வெளிப்பாட்டுடனும், கன்னத்தில் துடிப்புடனும், வெறித்தனமான வேகத்துடன் அவள் குதிரைமீது அமர்ந்து குதித்தவாறு வந்து கொண்டிருந்தாள். உடலுறவில் உச்சத்தை அடைந்ததைப்போல, வேறு ஏதோ கிரகத்தை அடைந்துவிட்டதைப்போல அவளுடைய நடவடிக்கை இருந்தது.

அந்தக் குதிரையின் முன்னங்கால்கள் கயிற்றின் மீது பட்டது. அடுத்த நிமிடம் அது மூக்கு தரையில் பட விழுந்தது. அவள் கீழே விழுவதற்கு முன்பே, நான் அவளை என்னுடைய கைகளில் வாரி எடுத்து நிலத்தில் நிற்கச் செய்தேன். தொடர்ந்து மறைத்து வைத்திருந்த என்னுடைய துப்பாக்கியை எடுத்து நான் குதிரையின் காதோடு அதைச் சேர்த்து வைத்து, விசையை அழுத்தினேன் - ஒரு ஆணைச் சுடுவதைப்போல.

அவள் என் பக்கம் திரும்பி, தன் கையிலிருந்த சாட்டையால் என் முகத்தில் வேகமாக அடித்தாள். அவள் மீண்டும் என்னை அடிக்க முயன்றபோது நான் அவளை நோக்கி குண்டுகளைப் பொழிந்தேன்.

இப்போது சொல்லுங்கள், எனக்குப் பைத்தியமா?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.