
மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து கொண்டிருந்த மழை நகரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அழுகிப்போன வாழை இலைகளும், குப்பைகளும், கெட்டுப்போன காய்கறிகளும் கிடந்து, சாக்கடையில் ஒரு வகையான சகிக்க முடியாத அளவிற்குத் துர்வாசனையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. அது தெருவோடு நிற்காமல் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து, வீட்டிலுள்ளோருக்குக் குமட்டல் வரும்படி செய்து கொண்டிருந்தது.
ஆனால், ஸைனபாவிற்கு இதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லை. சொல்லப் போனால், அவளுக்கு இது பழகிப்போன ஒன்று. அவள் எத்தனையோ வருடங்களாக அனுபவித்து, அனுபவித்து இந்தச் சூழலைக்கூட பழகிக்கொண்டு விட்டாள். மழை பெய்யும் போதெல்லாம் அவளுக்குள் ஒருவகையான கலக்கம் ஏற்படும். மார்பைக் கைகளால் அடித்துக் கொண்டு என்னென்னவோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய திறந்துகிடக்கும் மார்பகங்களைச் சப்பிக் கொண்டு அவளுடைய கடைசிப் பையன் கங்காருவின் குட்டியைப்போலத் தொங்கிக் கொண்டிருப்பான். பார்ப்பதற்கு அவன் ஒரு மானிடப் பிறவி என்று சொல்லவே முடியாது. ஒட்டிப்போன வயிறும், எலும்பும் தோலுமாக இருக்கும் கை, கால்களும் அவன் குழந்தைதான் என்ற வாதத்தைக்கூட மறுப்பது போல் இருக்கும். அவனும் சப்பிச் சப்பித்தான் பார்க்கிறான் ரத்தம் வருமளவிற்கு. ஆனால், பால் வந்தால்தானே?
‘‘என்னக் கடிச்சுக் குதறிடுவே போலயிருக்கே, பாவி மவன்'' என்று கூறியவாறு அவன் தொடைப் பகுதியில் ஒரு அடி கொடுத்தாள் ஸைனபா. அடியின் வேதனை தாங்க முடியாமல் அவன் கதற ஆரம்பித்துவிட்டான். அழுவதற்குக்கூட அந்தக் குழந்தைக்குச் சக்தியில்லை. ‘‘கீ...கீ...'' என்று ஏதோ பறவை கத்துவதைப்போலிருந்தது அவனது அழுகைக் குரல்.
‘‘என்ன ஸைனபா, ஒரே அழுகைச் சத்தமாயிருக்கு! என்ன, குழந்தையை அடிச்சிட்டியா?'' சிகரெட்டும் கையுமாக நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் கேட்டான்.
‘‘ஆமாம் அண்ணே... எல்லாம் என் தலைவிதி குருப்பு அண்ணே... ஒரு துண்டு பாக்கு கொடேன்.''
அதற்குப் பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. குடையை மடக்கிப் பேசாமல் நடந்தான். ஸைனபாவிற்கு ஒரு பக்கம் கோபம்; மற்றொரு பக்கம் வருத்தம். அவளுடைய வயிறு பசி தாங்காமல் எரிந்து கொண்டிருந்தது. நேற்று மாரியம்மன் கோவிலுக்கு முன்னால் கடை போட்டிருந்த கோஸாயி முதலாளி ஒரு துண்டு வேக வைத்த கப்பைக் கிழங்கு கொடுத்தார். அதற்குப் பிறகு அவள் இதுவரை எதுவுமே சாப்பிடவில்லை. அருகிலிருந்த செய்யது குட்டியின் தேநீர் கடையில், அவன் போடும் தேநீர் தங்கம்போல "தகதக’’வென்று கண்ணாடிக் குவளையில் மின்னிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு டம்ளரிலும் இருக்கும் தேநீரை ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் ஸைனபா. ‘‘அந்தப் பக்கம் தள்ளி நில்லு'' என்று கத்தினான் செய்யது குட்டி. மூன்றாவது முறையாக ஏதாவது கிடைக்காதா என்று ஏக்கம் நிறைந்த கண்களுடன் கடையின் முன்னால்போய் நின்று கொண்டிருந்தாள் ஸைனபா. அவளுடைய முகத்தைக் கண்ட கடைக்காரன் சுடுநீரை எடுத்து அவள்மீது வீசியபோது, குழந்தையை மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு அழுதவாறு அவ்விடத்தை விட்டு ஓடத்தான் அவளால் முடிந்தது.
‘‘கீ...கீ...கீ...'' செப்புப் பாத்திரத்தின் அடிப்பகுதியைக் கைகளால் தட்டினால் ஒரு ஓசை வருமே, அதுமாதிரி இருந்தது அந்தக் குழந்தையின் அழுகை. குழந்தையின் வயிற்றை மெல்ல தடவிக் கொடுத்தாள் அந்த அன்புத் தாய். ‘‘பாபாபா... பாபாபா... பாபா... எங்கப்பன்ல... அழாதே... பாபாபா... எங்கப்பன்ல... என் ராஜால்ல... அம்மா நான் முறுக்கு வாங்கித்தர்றேன். முட்டாயி வாங்கித் தர்றேன். அழாம இருக்கணும் என் ராசா, பாபாபா... பாபாபா...'' என்று குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்குப் போராடிய அந்தத் தாய் தன்னுடைய மார்பகத்தை எடுத்து குழந்தையின் வாய்க்குள் திணித்தாள். ஏதோ வயிறே நிறைந்து விடுகிற மாதிரி குழந்தையும் மார்புப் பகுதியினுள் தலையைப் புதைத்துக் கொண்டது. அவ்வப்போது அவன் தாயைப் பார்த்தான். அவனுடைய முதுகை அன்புடன் தடவிக் கொடுத்தாள் ஸைனபா. அவனைப் பெற்றெடுக்கத்தான் அவள் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டிருக்கிறாள்! உடம்பிலுள்ள நரம்புகள் ஒவ்வொன்றும் அறுந்துவிடும் அளவிற்கு அவளுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருந்தது. உடம்பு முழுவதும் ஒரே நரக வேதனை. காலிலிருந்து தலை வரை நடுக்கம் வேறு. இதற்கு முன்பு அவளும் எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுக்கத்தான் செய்திருக்கிறாள். இந்த அளவிற்குத் துன்பம் ஒருபோதும் அவள் அனுபவித்ததில்லை. அன்று அவள் தன் கணவனின் அன்பின்கீழ் இருந்தாள். அவன் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றினான். வெள்ளை வெளே ரென்று இருக்கும் ஆடையும், தலையில் தொப்பியும், தொப்பிக்கு மேல் தலைப்பாகையும், கழுத்தில் டாலரும், நடக்கும்போது "ஙொய் ஙொய்' என்று ஓசையெழுப்பும் செருப்பும் அணிந்து அவன் தெருவில் நடந்து செல்லும்போது, கொண்டை போட்டு கையில் மடக்கிப் பிடித்த குடையுடன் நின்று கொண்டிருக்கும் ஸைனபா அவனிடம் கேட்பாள்: ‘‘என்ன, உங்களுக்கென்ன ராஜாவுக்கு! பார்க்க சுல்தான் மாதிரியில்ல இருக்கீங்க?'' உட்காருவது, நடப்பது எல்லாமே சுல்தான் மாதிரிதான். அன்று அவன் "ஸைனபா’’ என்று அழைக்கும்போது, அவனுடைய அந்தக் குரலில் தேன் வழிவது போலிருக்கும். ஆனால் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவளுடைய முக அழகே போய்விட்டது. முகத்தில் களையே இருக்காது. அவளையே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவளுடைய சுல்தானுக்கு இல்லாமல் போய்விட்டது. நாட்கள் செல்லச் செல்ல, அவனைக் காண்பதுகூட அரிதாகிவிட்டது. ‘‘நீங்க இத்தன நாளும் எங்க போயிருந்தீங்க?'' என்று அவனைக் காணும் நேரத்தில் அவள் கேட்பாள். ‘‘பேசாம நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போடி...'' என்பான் அவன். வெறுப்பு, அழுகை- இது அந்த வீட்டில் எப்போதும் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது. ‘‘கடவுள் இதையெல்லாம் பொறுக்க மாட்டார்...'' என்று அழுவாள் ஸைனபா. ‘‘நாக்கை அடக்குடி மூதேவி!'' என்று கையை ஓங்குவான் அவள் கணவன். சில சமயங்களில் அவ்வாறு ஓங்கிய அவனுடைய கை அவளுடைய முதுகைப் பதம் பார்த்ததுமுண்டு. அவனுக்கு இளமையிருந்தது; கையில் பணமிருந்தது; உடம்பில் தெம்பு இருந்தது. எலும்பும் தோலுமாக இருக்கின்ற ஒரு பெண்ணைக் சுற்றிக்கொண்டு திரிய வேண்டும் என்பது அவன் தலைவிதியா என்ன? ஒரு விதத்தில் பார்க்கப்போனால் அது நியாயம்தானே? அவளைக் கண்ட போதெல்லாம் அவன் எரிந்து விழுவான். அவளை அவன் நிக்காஹ் செய்து கொண்டதுகூட எத்தனையோ எதிர்ப்புகளை மீறித்தான். சுற்றம் சூழவென்று ஒரு ஆள்கூட இல்லாமலிருந்த அவளைத் திருமணம் செய்ய பலமான எதிர்ப்பு. ஆனால் அமைதியான குணத்தைக் கொண்ட அவளைத் திருமணம் செய்தே தீருவது என்று அவன்தான் ஒரே பிடிவாதமாய் ஒற்றைக் காலில் நின்றான்.
இன்று அவளை எறிந்து பேசும்போதுகூட அதேமாதிரிதான் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று ஒரே பிடிவாதமாயிருக்கிறான். அவன் தன்னை எடுத்தெறிந்து பேசுவதற்காக அவனை ஸைனபா வெறுக்கவில்லை. தன்னுடைய தாயை அவன் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது ஒரு புறமிருக்க, மூன்றாவது முறையாகத் திருமணக் கோலத்தில் வந்து நின்ற அவனை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள்தான் அவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். அங்கு ஆண்கள் சாதாரணமாகவே பல திருமணங்கள் செய்து கொள்வதுண்டு. விவாகரத்தும் சர்வ சாதாரணமாக நடைபெற்றது. ஒருநாள் அவனும் அவளை விவாகரத்து செய்துவிட்டான். தன்னுடைய எதிர்காலத்தை நினைத்துப் பார்த்த ஸைனபா உண்மையிலேயே நடுங்கிப் போனாள். அவளை இனி யார் திருமணம் செய்துகொள்ள முன்வருவார்கள்?
எல்லாரும் அந்த இடத்தை விட்டுப் போனபின், வானத்தின் நீலத்தையே வெறிக்கப் பார்த்தவாறு நின்றிருந்தாள் ஸைனபா. ‘‘அல்லாஹு'' என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன. தனிப்பறவையாக நின்று கொண்டிருக்கும் அந்த அன்பு அன்னையின் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டு அழுதன அவள் பெற்ற குழந்தைகள்.
நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டே வந்தது. அதே தெருவிலிருந்த மர வியாபாரியின் வீட்டிற்கு வேலை செய்யப் போனாள் ஸைனபா. இரண்டு மாதம்தான் அங்கு வேலை செய்தாள். அதற்குப் பிறகு அங்கு வேலை செய்வதை அவளாகவே நிறுத்திக்கொண்டு விட்டாள். அங்கு வேலை செய்யும் இதர வேலைக்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல்தான் அவள் நின்றுவிட்டாள். ஆனால், தான் வேலைக்குச் செல்லாத உண்மைக் காரணத்தை அவள் யாரிடமும் கூறவில்லை. அவள் எதிர்பார்ப்புடன்தானிருந்தாள். இனியும் ஒரு நிக்காஹ் அந்த வீட்டில் நடக்காமல் போய்விடும் என்பது என்ன நிச்சயம்? தவிர, குடும்பத்திற்கே கெட்ட பெயர் வரும்படி தான் நடந்து கொள்வதா? வாசலில் காலடிச் சப்தம் கேட்கும் ஒவ்வொரு தருணமும், அவளையும் மீறி அவளுடைய இரண்டு விழிகளும் ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்க்கும். அது "கித்தாப்' ஓதுவதற்கு வரும் முஸல்மானாகவோ வாடகை வாங்க வரும் வீட்டின் சொந்தக்காரராகவோ இருக்கும்.
ஸைனபாவின் எதிர்பார்ப்புகூட நாளாக நாளாக தேயத் தொடங்கியது. வெறுமையான நாட்கள் மாதங்களாக, வருடங்களாகப் பரிணாமமெடுத்து ஓடி மறைந்து கொண்டிருந்தன. அழும் குழந்தைகள், உணவு கேட்டுக் குடைந்தெடுக்கும் வயிறு, வெறுப்பைத் தவிர வேறு எதையும் அறியாத மனது- உலகின்மீதே அவளுக்கு வெறுப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக ஆண்களின்மீது. ‘‘உடம்பு பளபளப்பா இருக்குறப்போ மட்டும் கரும்பே, தேனேன்னு பல்லை இளிச்சுக்கிட்டு வருவான்க. உடம்புல ரத்தம் இல்லாமப் போச்சின்னா பெறகு கேட்கவே வேணாம்... எங்க போவான்களோ தெரியாது. வேற எவளாவது ஒருத்தி கிடைக்கமாட்டாளான்னு போயிடுவான்க. இவன்களும் மனுஷ ஜென்மங்கள்தானா? தூ... நாய் பொழைக்கும் இதவிட நல்லா...'' என்று குமுறுவாள். நாட்கள் செல்லச் செல்ல இந்த உலகின்மீது- உலகிலுள்ள ஆண்கள்மீது அவள் கொண்ட வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவள் இப்போது துணிச்சலுடன் உலகைப் பார்க்க ஆரம்பித்தாள். வீட்டுக்கு உள்ளேயிருந்தவாறு தெருவை நோக்கிக் கொண்டிருந்த அவளின் விழிகள், வாசற்படியைத் தாண்டி வெளியே வந்து தெருவை அலசின. அவளைத் தட்டிக் கேட்க யாரால் முடியும்? அதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது?
இளமை மாறாத அந்த முகத்தைக் காண இந்த உலகில் ஆள் இல்லாமற் போய் விடவில்லை. அந்த வீட்டில் அடுப்பு மூட்டி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. பசி தாளாது குழந்தைகள் தொண்டை கிழிய அழுதார்கள். அழுது அழுது, அதற்கடுத்து அழுவதற்குக்கூட அவர்களுக்குச் சக்தியில்லாமல் போய், கொஞ்ச நேரத்தில் அப்படியே உறங்கிவிட்டார்கள். "மினுக் மினுக்’’கென்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின்முன் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் ஸைனபா. வாழ்க்கையின் கஷ்டங்களையெல்லாம் தாங்கித் தாங்கி அவளுடைய உடம்புகூட சற்று வளைந்துவிட்டது. அப்போது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கிழிந்துபோன துணியினால் தலையை மூடிக்கொண்ட அவள் உள்ளே இருந்தவாறு கேட்டாள். ‘‘ம்... யார் அது?''
மெதுவான குரலில் பதில் வந்தது. அவள் ஏக்கத்துடன் பார்த்தாள். துலாபாரத்தின் இரண்டு தட்டுகளும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிக்கொண்டிருந்தன. என்ன முடிவு எடுப்பது? அவள் யோசித்தாள். அவன் படியேறி மேலே வந்தான்.
அவன் திரும்பிச் செல்ல முயலும்போது அவள் கேட்டாள்: ‘‘நீங்க... நீங்க...''
‘‘ம்... என்ன?''
‘‘என்ன நீங்க கட்டிக்கிறீங்களா?''
அவன் கலகலவென சிரித்தவாறு கூறினான்:
‘‘நான் இனியும் வராமப் போயிடுவேனா, என்ன?''
மறுநாள் அந்த வீட்டின் அடுப்பு புகைந்தது. குழந்தைகள் கலகலவெனச் சிரித்தவாறு தங்கள் கவலையை மறந்து வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் விளையாடுவதை வைத்த கண் எடுக்காது பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தாய் வானத்தை நோக்கியவாறு முணுமுணுத்தாள். ‘‘எல்லாத்தையும் பொறுத்துக்கொள் கடவுளே! மாலிக்குள் ஜப்பராய தம்புரானே!''
நான்காம் நாள் அவளுடைய வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். வெளியே வந்து பார்த்தபோது அங்கே அதே தெருவில் குடியிருக்கும் நாயர் வீட்டுச் சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனை ஸைனபா நன்றாக அறிவாள். நல்ல புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தாள் அவள். வீட்டுக்குள் வந்த அவள் முகத்தைத் தன் காலிடுக்கில் புதைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
‘‘என்ன உம்மா?'' குழந்தைகள் அவளுடைய கழுத்தைக் கைகளால் சுற்றிக் கொண்டனர். அவள் ஒன்றும் பேசவில்லை. கண்ணீரைக் கையால் துடைத்தவாறு அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல அவளுக்கென்றிருந்த சில நம்பிக்கை களும் படிப்படியாகத் தகர ஆரம்பித்தன. இஸ்லாமையும் காபரை யும்கூட அவள் மறந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாமே அவளைப் பொறுத்தவரை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள்தான். ஒவ்வொரு ஆணுமே அவளைப் பொறுத்தவரை கெட்டவர்கள்தாம். அவளுக்கு வேண்டியதெல்லாம் பணம். அது அவளுக்குக் கிடைத்தது. அவள் மட்டும் தனியே உட்கார்ந்து அதை எண்ணிக் கொண்டிருப்பாள்.
இப்படித்தான் அவள் மூன்றாவது முறையாக கர்ப்பிணியானாள். அவளுக்குப் பிறந்தது என்னவோ, கங்காருக்குட்டி போன்ற இந்தத் தொத்தல் குழந்தைதான். அப்போது அவளுடைய உள்ளத்தில் எழுந்த கேள்வி இதுதான். இந்தக் குழந்தையின் உண்மையான தந்தை யாராக இருக்க முடியும்? அருகிலுள்ள பெண்கள் சில நேரங்களில் இதை அவளிடம் கேட்பார்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவள் ஒன்றுமே பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருப்பாள். அதற்கு அவள் என்ன பதிலைக் கூறுவாள்?
அதுவே பேச்சுக்கிடமான ஒரு விஷயமாகிவிட்டது. உடனே அவளை வீட்டை காலி செய்யும்படி கூறிவிட்டான். அதே தெருவில் குடியிருக்கும் நாயர் வீட்டுச் சிறுவன் ஒருவன்- வீட்டின் சொந்தக்காரன். குழந்தை பிறந்த பத்தாவது நாள் பச்சிளங் குழந்தையையும், மற்ற இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள் ஸைனபா. வீட்டின் படியைவிட்டு இறங்கும்போது அவளையும் மீறி அவளுடைய விழிகள் இரண்டிலுமிருந்தும் கண்ணீர் அருவியென வழிந்தது. அதைக் கையால் துடைத்த அவள், அதற்குப் பிறகு அழவேயில்லை.
நகரம் ஒரே சத்தமும் சந்தடியுமாக இயங்கிக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் சென்றன. பசியைத் தாங்க முடியாமல், ஒருநாள் அவளுடைய இரண்டு குழந்தைகளும் எங்கோ ஓடிவிட்டனர். பச்சிளங் குழந்தையை மட்டும் மார்பில் இடுக்கியவாறு ஸைனபா கடை வீதிகளில் அலைந்து திரிந்தாள். ஒரு கடையின் ஓரம்தான் அவளும் அந்தக் குழந்தையும் வசிக்கும் இடம்.
எத்தனை முறை சப்பினாலும் பால் வராமல் போகவே "கீ...கீ...' என்று இடைவிடாமல் அழுதது குழந்தை.
அப்போதும் மார்போடு அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டுதானிருந்தாள் ஸைனபா. ‘‘பாபா... பாபா... என் ராசா இல்ல... மந்திரி இல்ல... பாபாபா!''
ஆனால், அவனுடைய அழுகை மட்டும் நிற்கவேயில்லை. அவனுக்குத் தேவை தாலாட்டு அல்ல, உணவு... பால்...
தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸைனபா. நேரம் மாலையாகி விட்டிருந்தது. மழை வருவதுபோல இருந்தது. வானத்தில் இங்குமங்குமாக மேகங்கள் திரள் திரளாக நகர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய உடல் குளிரால் வெடவெடத்துக் கொண்டிருந்தது. குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. ‘‘கீ...கீ...கீ...''
அவளால் என்ன செய்ய முடியும்? கடைகளிலிருந்து மின்சார விளக்குகள் ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. செய்யது குட்டியின் தேநீர்க் கடையில் ஒரே கூட்டம். நோன்பு காலமாதலால் நோன்பு துறக்க வருபவர்களின் கூட்டம் இந்த நேரத்தில் அவன் கடையில் சற்று அதிகமாகவே இருக்கும். தங்கம்போல தகதகக்கும் தேநீர் கண்ணாடிக் குவளையில் பளபளத்துக் கொண்டிருந்தது. ஸைனபாவுக்கு நோன்பு இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவள்தான் தினமும் நோன்பு இருக்கிறாளே!
குழந்தை அப்போதும் நிறத்தவில்லை. "கீ...கீ...கீ...” என்று அது அழுது கொண்டேயிருந்தது. அவள் கால்கள் அவளையும் மீறி தேநீர்க் கடையை நோக்கி நடந்தன. ‘‘காக்கா ஒரு சாயா கொடேன். நான் நோன்பு இருக்கேன்.'' அவள் துணிந்து பொய் கூறினாள். அவளை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. அந்த அளவிற்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. வாழைக்காய் வறுவலை எடுத்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்த அவளுடைய வாயில் எச்சில் ஊறியது. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. அவளும் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ஆனால் ஒருவருடைய கவனமாவது அவள்மீது பட வேண்டுமே!
குழந்தை- மேலும் மேலும் அழுது கொண்டேயிருந்தது. அவ்வளவுதான்- அவள் மிருகமாகி விட்டாள். ‘‘தேவடியாளுக்குப் பொறந்த பசங்க. எவ்வளவு நேரமா நின்னுக்கிட்டிருக்கேன். என்னை பார்க்கிறான்களா? இவனுங்க எல்லாம் உருப்படுவானுங்களா... கட்டையில போறவன்க...'' என்று அவள் வெடித்துக் கொண்டிருந்தாள்.
ஸைனபாவின் உடம்பில் இருந்த தெம்பே போய்விட்டது. கை, கால்களிலெல்லாம் ஒரே குடைச்சல். தலைக்குள் ஏதோ மின்சாரம் பாய்வதுபோலிருந்தது. இனிமேலும் அவளால் நிற்க முடியாது என்ற நிலை உண்டாகவே "நச்’’சென்று தரையில் உட்கார்ந்தாள். அப்போதும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
‘‘கீ...கீ...கீ...''
மார்போடு அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள் ஸைனபா. தாலாட்டு பாடிப் பார்த்தாள். முதுகைத் தடவிக் கொடுத்துப் பார்த்தாள். ஊஹும்... குழந்தை இதற்கெல்லாம் மசிவதாய் இல்லை. அது வீறிட்டுக் கொண்டே இருந்தது.
‘‘கீ...கீ...கீ...''
அவளுடைய செவிகளில் அந்தக் குழந்தையின் அழுகை பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் செருகுவது போலிருந்தது. அது மேலும் மேலும் இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. ஆன்மாவின் அடித்தளம் வரை போய் அது குடைந்து கொண்டிருந்தது. வேதனை... வேதனை... நரக வேதனை... அவள் துடித்தாள். ஸைனபாவின் கண்கள் வெறித்து எதையோ நோக்கின. அவளுடைய கைவிரல்கள் குழந்தையின் மார்பைத் தடவிக் கொண்டிருந்தன. இறுதியில் அவை குழந்தையின் கழுத்தைத் தொட்டு நின்றன. அங்கேயே நின்ற அவளின் கை விரல்கள் குழந்தையின் கழுத்தை மெல்ல இறுக்கின. குழந்தை கதறியது: ‘‘கீ...கீ...கீல்...கீல்...!''
அவளுடைய விழிகள் இப்போதும் வானத்தை வெறித்துக் கொண்டுதானிருந்தன. தன் மகனை அவள் பார்க்கவில்லை. எலும்பு மட்டுமே எஞ்சி இருந்த அவளின் விரல்கள் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தன.
‘‘கீல்...கீல்...ங்..!''
அவளுடைய கை மேலும் இறுக்கியது. அந்த அழுகை நிரந்தரமாக நின்றது.
ஒரே அமைதி. வாகனங்களின் ஹாரன் சத்தத்தையும், குதிரை வண்டிகளில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் குளம்பொலியையும் தவிர, லைனபாவின் காதுகளில் வேறு எதுவும் கேட்கவில்லை.
வெறுமையாகிப் போன நிமிடங்கள்... பள்ளி வாசலில் ஒலித்த சங்கொலி கேட்டு, அவள் சுய உணர்விற்கு வந்தாள். அவளுடைய கை அப்போதும் குழந்தையின் கழுத்தில்தான் இருந்தது. "பிஸ்மி’’ கூடக் கூறிக் கொள்ளாமல் அந்தக் குழந்தை உலகை விட்டுப் போய்விட்டது.
இப்போது தன்னை ஒரு விடுதலை பறவைபோல் உணர்ந்தாள் ஸைனபா. தன்னையும்மீறி அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
சிறிது நேரத்தில் அவள் கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். சிரித்து முடித்ததும் அழுதாள். அழுது முடித்ததும் சிரித்தாள்... சிரித்து முடித்ததும்...
அவளுடைய அழுகையும் சிரிப்பும் அப்பகுதி முழுவதும் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.