Logo

சரசு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9290
sarasu

ழைய ப்ளாட்ஃபாரத்தில் அந்த அளவுக்கு அதிக கூட்டமில்லை. கடைகள் நடத்துபவர்களும், உணவு விடுதிகள் நடத்திக் கொண்டிருந்தவர்களும், நடந்து கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தவர்களும் புதிய ப்ளாட்ஃபார்ம் கட்டியவுடன் அங்கு மாறிவிட்டிருந்தார்கள். சிதிலமடைந்து போயிருந்த சிமெண்ட் தரையில் முன்பு எப்போதோ இறக்கப்பட்ட மீன் கூடைகளிலிருந்து ஒழுகிய கறுப்பு திரவம் படர்ந்து படிந்திருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் பறந்து கொண்டிருந்தன.

அருகிலிருந்த கான்க்ரீட்டாலான பெஞ்சில் காக்கிசட்டை அணிந்த ஒரு மனிதன் கவிழ்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒருவேளை இரயில்வேயில் பணிபுரிபவனாக இருக்கலாம். அதைத் தாண்டி இருந்த எல்லா பெஞ்சுகளும் ஆள் யாரும் இல்லாமல் வெறுமனே கிடந்தன.

பாசஞ்சர் வண்டி பழைய பிளாட்ஃபாரத்தில்தான் வந்து நிற்கும். அதில் ஏறக்கூடிய பயணிகள் மிகவும் குறைவாக இருந்தார்கள். பயணிகள் அறையில் வேண்டுமென்றால் போய் உட்கார்ந்திருக்            கலாம்.  வேண்டாம். காலியாக கிடந்த ஒரு பெஞ்சில் சிறிய சூட்கேஸை வைத்தவாறு இரும்பாலான தூணுக்குப் பக்கத்தில் சிகரெட் புகைத்துக் கொண்டு அவன் நின்றிருந்தான்.

அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை. அந்த வகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். யாராவது பார்த்தால் எங்கு போகிறீர்கள்- எப்போது திரும்பி வருவீர்கள்- என்ன விசேஷம் என்றெல்லாம் கேட்கத்தான் செய்வார்கள்.

எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மனிதர்களுக்கு எப்போதும் மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் மட்டும் அதிக ஆர்வம் இருந்துகொண்டே இருக்கும்.

அந்தப் பக்கத்தில் இருந்த புதிய ப்ளாட்ஃபாரத்தில் மெயில் வண்டியில் பயணம் செய்யப் போகிற பயணிகளின் ஆரவாரம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

அவன் தன்னுடைய மனதை தானே அமைதியாக இருக்கும்படி திட்டிக் கொண்டிருந்தான். அப்படியே யாராவது பார்த்தால்தான் என்ன? இன்றும் நேற்றும் மட்டுமா அவன் பயணம் செய்து கொண்டிருக்கிறான்? அவன் பயணம் செய்கிறான். போகும்போது ஏதாவதொரு சிறிய ஸ்டேஷனில் தனக்குத் தெரிந்த யாராவது ஒருவரைப் பார்க்கிறான். பேசுகிறான். சில நேரங்களில் அவன் மட்டும் தனியே பயணம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகிறது. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. சந்தேகப்படுவதற்கும் தான்.

வேண்டுமென்றால் உண்மையைச் சொல்லலாம்:

"சரஸ்வதி என் கஸின் தான். அவ பஞ்சாயத்து அலுவலகத்துல க்ளார்க்கா இருக்கா.’’

வேண்டுமென்றால்-

முன்பொருமுறை புகைவண்டியில் அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கிற காலத்தில் மாமா இடமாற்றம் கிடைத்து நகரத்திற்கு வந்தார். சரஸ்வதியின் படிப்பு முடிந்த வருடம் அது. குதிரை வண்டிக்காரர்கள் வண்டிகளை நிறுத்தும் இடத்திற்குப் பக்கத்தில் செட்டிகள் வசிக்கக்கூடிய வீடுகளுக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய வீட்டில் அப்போது அவன் இருந்தான்.

உதட்டில் திரைப்படப் பாடல்களும் மனதில் ஷ்யாமளா மேனனைப் பற்றிய இனிய கனவுகளுடனும் அவன் நடந்து திரிந்த நாட்கள் அவை. எனினும், சாயங்கால நேரம் வந்துவிட்டால் முகத்தைக் கழுவி, சிறிது பவுடர் பூசி சைக்கிளுடன் அவன் கிளம்பிவிடுவான்.

"எங்கே?’’

"சும்மா சுத்திட்டு வருவேன்.’’

மாமா எக்சைஸ் அலுவலகத்தில் காவலாளியாக இருந்தார். அப்போது "மாமாவோட வீடு வரை’’ என்று தைரியமாகக் கூற முடியவில்லை.

எட்டு மணிக்குப் பிறகுதான் ஹாஸ்டலுக்குத் திரும்பிச் செல்வான்.

மாமா மாலை நேரத்தில் வீடு திரும்புவார். காக்கி ஆடைகளை மாற்றிக் கொண்டே அவர் கேட்பார்.

"யாருடி அது?’’

"அது... ராஜன்.’’

தொண்டை வறண்டு போய்விடும். எக்சைஸ் அலுவலகத்தில் காவலாளியாகப் பணியாற்றினாலும் மாமா ஒரு முரட்டுத்தனமான மனிதர் என்பதை அவன் நன்கு அறிவான். மாமா என்ன கூறுவார்? முன்பு எப்போதும் இல்லாத ஒரு பாசம் இப்போது எங்கிருந்து வந்தது?

அத்தை சாப்பிடுவதற்கு அவனை அழைத்தாலும் அவன் செல்ல மாட்டான். அத்தையிடமும் சந்திரனிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விடுவான். உள்ளேயிருக்கும் இருப்பதிலேயே விசாலமான ஒரு அறையின் சுவரில் தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு, கால்களை நீட்டியவாறு மாமா சொருகிய கண்களுடன் படுத்திருப்பார். கஞ்சாவின் மணம் கலந்திருக்கும் புகை அந்த அறையில் மேகத்தைப்போல தங்கியிருக்கும்.

போகும்போது பின்னால் திரும்பி அவன் ஒருமுறை பார்ப்பான்.

கிராமத்தில் நடக்கும் திருவிழாவைப் பார்ப்பதற்காகப் பிள்ளைகள் புறப்பட்டார்கள். தேங்காய் எண்ணெய் கடத்திக் கொண்டு போனதைப் பிடித்த வழக்கில் மாமா நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அதனால் கிராமத்திற்கு அவர் போக முடியாது. அப்போது அத்தை வழி கண்டுபிடித்தாள்.

"ராஜனுக்கு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தானே? ராஜன் பிள்ளைகளை அழைச்சிட்டுப்போய் விட்டுட்டு வரட்டும்.’’

முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. பார்த்தால் வெறுப்பு வருகிற இந்தப் பிள்ளைகளுடன் எப்படிப் போவது? ஆனால், முடியாது என்று கூறவும் முடியவில்லை. சரசுவும் இருக்கிறாள். இரண்டாகப் பிரிக்கப்பட்ட கூந்தலில் பன்னீர் மலர்களைச் சூடி தொங்கவிட்டு, கண்ணுக்கு மையிட்டு காட்சியளிக்கும் ஷ்யாமளாவை மனதில் நினைத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் சரசுவும் இருந்தாள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் சரசு.

நான்கு பேரும் போவதற்குத் தயாராக இருந்தார்கள். கடைசியில் புறப்பட வேண்டிய நேரத்தில் சரஸ்வதி மட்டும் போவதாக முடிவானது.

குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்தபோது எல்லாரும் பார்த்த வாறு நின்றிருந்தார்கள். தான் நல்லவன் என்பதை எல்லாருக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக அவன் முடிந்தவரை விலகியே இருந்தான்.

பயணச்சீட்டு எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. கையில் மாமா தந்ததற்கு மேலே கொஞ்சம் பணம் இருந்தது. இன்டர்க்ளாஸ் பயணச்சீட்டு வாங்கினான்.

மூன்று மணி நேரங்கள் நீண்டிருந்த பயணத்தில் இரண்டு பேர் மட்டும் தனியாக இருந்தார்கள். கடன் வாங்கியிருந்த கூலிங்கிளாஸ் வழியாக தாவணி அணிந்திருந்த சரசுவை அவளுக்குத் தெரியாமல் பார்த்தவாறு மனதில் உற்சாகத்துடன் அவன் சிகரெட் புகைத்து, வரைந்து கறுப்பாக்கிய தன் மீசையைத் தடவிக்கொண்டே பந்தாவாக உட்கார்ந்திருந்தான். ஒவ்வொரு ஸ்டேஷனை வண்டி அடையும்போதும் அவன் வெளியே எட்டிப் பார்ப்பான். தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வெளியே இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்குத்தான்.

இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. வெளுத்து மெலிந்து காணப்பட்ட ஒரு ரயில்வே அதிகாரி ஜன்னலுக்கு அருகில் நின்று சரசுவைப் பார்த்தார். அணிந்திருக்கும் ஆடைகளைக் கழற்றிப் பார்ப்பதைப் போன்ற ஒரு பார்வை. அதற்குப் பிறகுதான் அவர் அவனைப் பார்த்தார். அவர் பிறகு பல்லை இளித்துக் கொண்டே நடந்து சென்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளை கோட் அணிந்திருந்த மனிதனிடம் போய் என்னவோ மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.


இப்போது சரசுவுடன் தான் பயணம் செய்வதை யாரும் பார்க் காமல் இருக்க வேண்டுமென்று அவன் மனதில் வேண்டிக் கொண்டான்.

வண்டி வந்தது. ஒரு நிமிட நேரம் அமைதியாக இருந்த ப்ளாட்ஃபாரம் சுறுசுறுப்பானது. அவன் சூட்கேஸைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்கள் இல்லாத இடமாகப் பார்த்து நடந்தான். மூன்று முதல் வகுப்பு பெட்டிகளும் காலியாக இருந்தன.

கதவை அடைத்து, சூட்கேஸைத் திறந்து, முந்தின நாள் வாங்கிய புத்தகத்தைக் கையிலெடுத்து, இருக்கையில் இருந்த தூசியைத் தட்டிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.

இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இப்போது யாராவது வந்தால் தூரத்திலிருந்து வருவதாகக் கூறிக்கொள்ளலாம். எந்த காரணமும் இல்லை. வெறுமனே.

"இறங்கலையா?’’

"இல்ல...’’

"எங்கே போறாப்ல?’’

"ம்... திருச்சூருக்கு...’’

“பிஸினஸ்?’’

"ம்... கொஞ்சம். பிறகு... முளங்குன்னத்துக் காவில் சானிட்டோரியத் துல என் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொண்ணு...’’

"ஓ...’’

"அவ அங்கே காத்திருப்பா.’’

தேவையில்லாமல், தினமும் எத்தனை பொய்களை அவன் கூறுகிறான்! எவ்வளவு வேகமாக மனதில் விளக்கங்கள், நியாயங்கள், சாக்குப் போக்குகள் வருகின்றன!

கபடமுள்ள மனம்.

கல்லூரி ஆண்டு மலரில் ஒருமுறை அவன் கட்டுரை எழுதியிருக்கிறான். எழுத்தாளனாக ஆகியிருக்கலாம். என்ன விஷயம்? படிக்கிற காலத்தில் அவனுடைய செட்டில் நான்கு பேர் இருந்தார்கள். நூலகத்திலிருந்து புத்தகமெடுத்து அவன் படிப்பான். யாராவது பேசினார்கள் என்றால், அதைக் கேட்பதற்காகப் போவான். ராமச்சந்திரன் ஆசிரியரானான். ஷாரடி வக்கீலாகி, தேர்தலில் நின்று தோற்றான். வாசு மட்டும் எழுத்தாளன் ஆனான். அதற்குப் பிறகு நடந்தது என்ன? முழு உலகத்தின்மீதும் கோபத்தைக் காட்டுகிற மாதிரி குளிக்காமல், சவரம் செய்யாமல், அழுக்கு ஆடைகளுடன் அவன் நடந்து திரிந்தான். நான்கு க்ளார்க்குகளும் இரண்டு தொலைபேசிகளும் இருக்கும் மரத் தொழிற்சாலையின் உரிமையாளராக இருக்கும்போது, பழைய வாசு ஒரு பண சேகரிப்பிற்காக வந்தான்.

நகரம் பின்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. மலைப் பொருட்களும் மரங்கள் ஏற்றப்பட்ட லாரிகளும் முற்றிலும் மூடப்பட்ட கார்களும் பைத்தியக்காரர்களும் இருக்கும் நகரம். கம்பிக் கால்களுக்குக் கீழே தெரு விலை மாதர்களும், இருட்டுப் பகுதியில் சாராயம் விற்பவர்களும், குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் பெரிய மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரம். புழுக்களும் ரத்தம் குடிக்கும் அட்டைகளும் துடித்துக் கொண்டிருக்கும் அழுக்குத் தொட்டி நீரைப்போல வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அதை விட்டு அகலும்போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. விலகி இருக்கும்போது வேதனை உண்டாகிறது. திரும்பி வந்துவிட்டால் மனதில் சந்தோஷம். மீண்டும் அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற நிமிடம் வரை அந்த சந்தோஷம் நீடித்திருக்கும். நகரம் மனைவியைப்போல. ஓடி ஒளிந்தாலும் மனதிற்குள் கோபப்பட்டாலும் இறுதியில் அங்குதான் திரும்பி வந்தாக வேண்டும்.

தேங்காய் மட்டைகள் ஊறிக் கிடக்கும்- கறுப்பான சேறு நிறைந்திருக்கும் ஆற்றின் கரைகளை அவன் பார்த்தான். ஆற்றின் ஆரம்பப் பகுதி மரத்தடிகளுக்குக் கீழே மறைந்து கிடந்தது. உச்சிப்பொழுது வெயில் விழுந்து கொண்டிருந்த திறந்தவெளியைப் பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான்.

இரயில் தண்டவாளத்திற்கு அருகில் முன்பு, பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நகரத்திற்கு வந்த காலத்தில் ஓலை வேய்ந்த குடிசைகள் நிறைய இருந்தன.

அப்போது தொழிற்சாலையில் அவன் கணக்கு எழுதிக் கொண்டிருந்தான். வாடகைக் காரில் சேர்த்தலையிலிருந்து பிராந்தி புட்டிகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கடத்தி வரும் வேலையில் ஈடுபடுவதற்கு முன்பு அது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு நண்பனுடன் சேர்ந்து முதல் முறையாக அங்கு ஒரு இடத்திற்கு அவன் போயிருந்தான்.

அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்த ஓலை வேய்ந்த குடிசைகளைக்கூட பார்க்க முடியாத இருட்டு வேளையில், இரயில் தண்டவாளத்திலிருந்து கால்பட்டு நழுவி விழுந்து கொண்ருந்த கருங்கல் துண்டுகளை மிதித்து நடந்து கொண்டிருந்தபோது இருட்டு கரிய நிழல்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. எரிந்துகொண்டிருந்த பீடித் துண்டுகள்...

ஆமினா என்பது அவளுடைய பெயர்.

இல்லாவிட்டால், ஃபாத்திமாவா?

முன்பு எப்போதோ படித்த ஒரு புதினத்தின் துணை நாயகனைப் போல புத்தகத்தைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒரு அனுபவம் கிடைக்கிறபோது கருப்பு மேற்சட்டையைக் கொண்ட சிறிய புத்தகத்தில் ஒரு பொன் நட்சத்திரம் கூடுகிறது.

முதுமையை அடைகிறபோது பழைய புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, நினைவுகளை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்து, மாலை வேலைகளைச் செலவழித்துக் கொண்டிருக்கலாம்.

இப்போது அந்த குடிசைகள் இல்லை. புரட்சி ஓங்குக! பண்பாடு காப்பாற்றப்பட்டது.

நரம்புகளை நடுங்க வைக்கும் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்த பழைய மின் விசிறியிலிருந்து சூடான காற்று வந்து கொண்டி ருந்தது. தாகம்... அதிக தாகம் எடுத்தது. ட்ரேசஸ் ஆஃப் ஸுகர். ஹை ப்ளட் ப்ரஷர். நடக்கும்போது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. முப்பத்தேழு வயதில் மனிதனுக்கு சோர்வு உண்டாகி விடுகிறது.

குளியலறையில் முகத்தைக் கழுவி அவன் கண்ணாடியில் பார்த்தான். முகம் சிவந்திருந்தது. வெப்பத்தால் இருக்கலாம். கறுப்பு நிற ஃப்ரேமைக் கொண்ட கண்ணாடியை அணிந்து, வழுக்கை விழுந்த தலையில் இருந்த நீர்த் துளிகளைத் துடைத்தான். கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம்  தோன்றும்- பருமனைக் குறைக்க வேண்டும். நோ ஃபேட்... நோ ரைஸ்... நோ ஸுகர்.

மீண்டும் இருக்கையில் வந்து படுத்தான். புத்தகத்தை விரித்துப் படிக்க முயன்றான். கண்கள் தானாகவே மூடின.

கண்களைத் திறந்தபோது, வண்டி நின்றிருந்தது. வெளியே மீன் கூடைகளை ஏற்றும் சத்தம்.. தாங்க முடியாத நாற்றம்...

ஒரு மணி நேரம் இருக்கிறது, சரசுவின் ஸ்டேஷனை அடைய.வண்டி புறப்பட்டதும் தன்னைத் தயார்படுத்துவதில் அவன் இறங்கிவிட்டான். ஜன்னல்களை ஏற்றிவிட்டான். அடுத்து வரும் ஸ்டேஷன்கள் ஒவ்வொன்றும் அவனுக்கு நன்கு தெரிந்தவையே. தனக்கு பழக்கமான பலரையும் அவன் பார்க்க வேண்டியது வரலாம்.

நேரம் நெருங்க நெருங்க அவனுக்குள் பரபரப்பு அதிகமாகியது. எழுதாமல் இருந்திருக்கலாம்... எழுதாமல் இருந்திருக்கலாம்...

"அப்பா இறந்தப்போ வந்த பிறகு ராஜு அத்தானைப் பற்றி எந்தத் தகவலும் இல்ல.’’ இரண்டு வருடங்களுக்கு முன்பு. பார்க்க வேண்டும் என்று எழுதவில்லை. சந்திரனுக்கு அருகிலுள்ள பள்ளிக்கு இடம் மாறுதல் வேண்டும். எனினும், பதில் எழுதினான்: "17-ஆம் தேதி மதியம் புறப்படும் வண்டியில் நான் வருகிறேன். உனக்கு விடுமுறை இருந்தால், அன்று வந்தால் பார்க்கலாம். பெரியம்மாவின் வீட்டில் இருந்துவிட்டு, மறுநாள் திரும்பி வந்துவிடலாம்.'

"நீ வரவேண்டும். அதை நான் விரும்புகிறேன்' என்று எழுதுவதற் கான தைரியம் இல்லை. உனக்கு வேண்டுமென்றால் வரலாம். உனக்கு வேண்டுமென்றால் பார்க்கலாம். உனக்கு வேண்டு மென்றால்...


உனக்காக கஷ்டப்பட்டு நான் ஒரு தியாகம் செய்கிறேன் என்பதைப் போல!

நேற்றுதான் கடிதம் கிடைத்தது.

இந்த வண்டிக்கு சரசு வருகிறாள். போட்ட கணக்குகள் தவறாது. தேர்ந்த திட்டமிடல்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது அவன் முடிவு செய்தான். இனி சரசுவைப் பார்க்கக்கூடாது. கடிதம் எழுதக் கூடாது.

திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் அங்கு போகவில்லை. பார்க்காமலே இருக்க வேண்டும் என்று மனதில் முடிவு பண்ணி இருந்ததே காரணம்.

பெரியவர் இறந்த தந்தி கிடைத்தபோது, மனதில் ஒரு பெரிய போராட்டமே நடந்தது.

அங்கு துக்கத்தின் இருள் வீடெங்கும் படிந்திருக்கும். அவளுக்கு ஆறுதல் தேவைப்படும்.

எச்சரிக்கையுடன் இருக்கும் கண்களை ஏமாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம்.

ஆனால், பழைய ராஜு அத்தான் இல்லை. இப்போது அவனுக்கு திருமணமாகிவிட்டது. அவன் இப்போது இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத் தலைவன்.

வாதம் செய்யலாம்.

அவள் ஏன் வருத்தப்பட வேண்டும்? கதைப் புத்தகத்தில் வரும் இளம் காதலனைப்போல அவளை முதல் முறையாக தொட்ட நிமிடத்தில், "நான் உன்னைக் காதலிக்கிறேன்... உன்னை... உன்னை மட்டும்' என்று பதறுகிற குரலில் அவன் எதுவும் சொல்லவில்லை.

திருமணம் என்ற வார்த்தையை அவன் எங்கும் உச்சரிக்கவில்லை.

(லாபத்தின் மீது கண்களை வைத்திருக்கும் வியாபாரி அவன். அவனுடைய கணக்கு ஒருமுறை கூட தப்பாக ஆகாது).

இருட்டில் பலம் குறைந்த பலகைகள்மீது அழுத்தமாக மிதிக் காமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு நடந்து, கிறீச்சிடுகிற கதவை மெதுவாகத் தள்ளித் திறந்து அறைக்குள் நுழைந்து, உயரம் குறைவான கட்டிலுக்குக் கீழே முழங்காலிட்டு அமர்ந்து கையை வைத்தபோது அவள் அதிர்ந்து போயிருப்பாள். ஆனால், சரசு அழவில்லை. அவனிடமிருந்து விடுபடு நினைக்கவில்லை; பேசவில்லை.

அப்போது வேறொரு இளம் பெண்ணுடன் கொண்டிருந்த காதலைச் சொல்லி உள்ளேயும் வெளியேயும் பல வகையான பேச்சுகள் உலவிக் கொண்டிருந்தன.

எண்ணெய் ஊற்றப்பட்ட தாழ்ப்பாள் கிறீச்சிடவில்லை. ஏழாவது படியை மிதிக்காமல் எத்தனை முறைகள் வேண்டு மானாலும் அவன் போகலாம் என்றாகிவிட்டது.

அது ஒரு சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் சவால் என்றுகூட சொல்லலாம். திருமணம் முடிந்தவனும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான அவனிடமிருந்து அவள் விலகி இருப்பதாக இருந்தால் இருக்கட்டும்.

இழப்பதற்கு எதுவும் இல்லை.

தனு மாதத்தில் மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்த காலமது. சாயங்காலம் ஸ்டேஷனில் வண்டியை விட்டு இறங்கியது முழுமையான விருப்பத்துடன்தான். திரும்பி வரவேண்டுமென்றால் மறுநாள்தான் வண்டி. குடும்பத்தின் சுவர்களுக்குள் நுழைந்து செல்லத்தான் வேண்டும்.

ஸ்டேஷனில் லாந்தர் விளக்குடன் சந்திரனும் வேலைக்காரனும் காத்து நின்றிருந்தார்கள்.

வயல் வரப்பு வழியாக நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு நீரை மிதித்துக்கொண்டு அவர்கள் நடந்தார்கள்.

வாசலில், பதினான்காம் எண் விளக்கு வெளிச்சத்தில் அத்தை குனிந்து உட்கார்ந்திருந்தாள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும் தான்.

“உன்னைப் பார்த்து எவ்வளவு காலமாச்சு?'' அத்தை அழ ஆரம்பித்தாள்.

காக்கி அரைக்கால் சட்டை அணிந்த, கஞ்சா நிரப்பப்பட்ட பீடியைப் புகைத்துக்கொண்டு மாமா சாயங்கால வேளைகளில் படுத்திருக்கும் தோல் உறை போட்ட சாய்வு நாற்காலி யாரும் இல்லாமல் கிடந்தது.

தேநீர் கொண்டு வந்தபோதுதான் சரசுவை அவன் பார்த்தான். சதைப்பிடிப்பான நீளமான முகத்தையும், பெரிய செந்தூரப் பொட்டையும், முழுமையான இளமையையும், நடக்கும்போது மெல்லிய சுள்ளி உடைகிறதோ என்று தோன்றுகிற மாதிரி மென்மையான குரலையும் கொண்டிருக்கும்- நேராக நிற்கும் உயரமான ஒரு பெண்ணின் உருவம்தான் அவனுடைய மனதில் இருந்தது. சதைகளின் தாள லயங்கள் நிறைந்த குளிர்கால இரவு களில் அவன் பார்த்த அந்த அழகி

எங்கே? எங்கே?

ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொன்னான்:

“சரசு, ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டியே...''

சரசு அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.

விரிசல் ஏற்பட்டிருந்த சுவரில் அத்தை முகத்தின் நிழல் பயமுறுத்துவதைப்போல தெரிந்தது. தொங்கட்டான் அணிந்து நீட்டப்பட்ட காதுகள் நிழலில் ஆடிக்கொண்டிருந்தன.

அத்தை சொன்னாள்:

“மனசுக்கு சுகம் உண்டானாத்தான் உடம்புக்கும் சுகம் உண்டாகும்.''

“எனக்கும் உடம்புக்கு சரியில்ல. தந்தி கிடைச்சதும் வரணும்னு நினைச்சேன்.''

பிறகு என்ன சுகக்கேடு என்பதைச் சொன்னான்:

“ஆஸ்துமா...''

“அதுக்கு சிகிச்சை எதுவும் செய்யலையா, குழந்தை?''

“குளிர் படாம பார்த்துக்கணும். திறந்த வெளியில படுக்கக் கூடாது. வெயில், மழை எதுவும் பாதிக்காம கட்டுப்பாடா வாழணும்.''

அத்தை அதை கவனமாகக் கேட்டிருக்க வேண்டும். திறந்த வெளியில் படுக்கக் கூடாது!

வாசலில் ஒரு பாய் வராமல் இருக்க அதுதான் வழி!

சரசுதான் முதலில் கேட்டாள்:

“குழந்தைகளுக்கு ஒண்ணுமில்லையே?''

அதைக்கேட்டு அவன் ஒருமாதிரி ஆகிவிட்டான்.

“இல்ல...''

“அக்காவுக்கு?''

“இல்ல...''

பனையோலைமீது மழைத்துளிகள் விழுவதைக் கேட்டவாறு உள்ளே அறையில் அவன் படுத்திருந்தான். மேஜைமீது முட்டை விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

மூடியுள்ள பால் கிண்டியில் நீர் கொண்டு வந்து வைத்தபோது வெளிச்சம் விழுந்த சரசுவின் முகத்தை அவன் பார்த்தான். கன்னம் ஒட்டிப்போயிருந்தது. நெற்றி சற்று பெரிதாகிவிட்டதைப்போல் தோன்றியது.

அவன் எழுந்து அவளை நோக்கி மெதுவாக நடந்தான். அவள் முகத்தைக் குனிய வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். தோளில் கை வைத்தபோது, அவனுக்கு நடுக்கம் உண்டானது. அவள் அசையவில்லை. எதுவும் பேசவில்லை. மேலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளைக் கையால் இழுத்து அருகில் கொண்டு வந்தபோது மனம் அமைதியானது. இல்லை... இழக்கவில்லை.

மரக்கட்டைகள் விற்கும் வியாபாரி அவன். நஷ்டம் எங்கு உண்டானாலும் அவனால் தாங்க முடியாது.

“நீ ரொம்பவும் மெலிஞ்சு போயிருக்கே!''

அவள் பனிக்காத கண்களுடன் கால் விரலைத் தரையில் தேய்த்தவாறு நின்றிருந்தாள்.

முகத்தைப் பார்க்க முடியவில்லை. மங்கலான வெளிச்சத்தில் எதையும் படிக்கவும் முடியவில்லை.

“ஏதாவது டானிக் சாப்பிடணும். உடம்பை நல்லா ஆக்கணும்.''

வெளியே காலடி சத்தம் கேட்டதும், அவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள்.

சொல்ல முடியவில்லை: "சரசு, நீ வரணும்.'

வீடு உறக்கமானது. தூக்கம் வரவில்லை. கஞ்சாவின் புகைச்சுருள் உண்டாக்கிய வாசனை காற்றில் கலந்திருப்பது தெரிந்தது.

கடைசியில் தூக்கத்தின் அலைகள் கண்களுக்கு முன்னால் தோன்றி வலை நெய்ய ஆரம்பித்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் நிழலைப் போல சரசு வந்து நின்றிருந்தாள்.

அவள் திரும்பிப் போனபிறகு, இருட்டின் முணுமுணுப்பைக் கேட்டவாறு படுத்திருந்தபோது தன்னைத் தானே அவன் குறை கூறிக் கொண்டான்.


அவள் வந்திருக்க வேண்டியதில்லை. அவன் ஏன் தன்னைத் தானே குற்றப்படுத்திக் கொள்ள வேண்டும்? அவள் திரும்பவும் வந்தாள்... அவள் மீண்டும் வந்தாள்... "எனக்கு இதுல பங்கே இல்ல.' அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

இனிமே சரசுவை பார்க்கவே கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டுதான் அவன் கண்களையே மூடினான்.

மீண்டும் எங்கிருந்தோ திருமண விஷயமாக ஒரு செய்தி வந்திருக்கிறது என்றவுடன், போன மாதம் அவளுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று அவன் நினைத்தான். ரம்பத்தின் இரைச்சல் சத்தம் கேட்டுக் குலுங்கிக் கொண்டிருந்த அலுவலக அறையில்தான். திருமணம்... அதற்குப் பிறகு எல்லாம் முடிந்த மாதிரிதான். தேவையா? எழுத வேண்டுமா?

இருட்டில் குடும்பத்திற்கு நடுவில் தனித்து இருக்கும்போது ஒன்பது வருடங்களுக்கு முன்பிருந்த சதைப்பிடிப்பான அழகியைப் பார்க்கிறான். ஈரம் மாறாது விரிக்கப்பட்ட படுக்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த மெலிந்துபோன உருவத்தை- மனம் பார்க்கக்கூடாததைப் பார்த்து விட்டதைப்போல அழிக்க நினைக்கிறது.

இதுதான் சரசுவின் ஸ்டேஷன். பாதி உயர்த்தப்பட்ட ஜன்னல் பலகையின் மேற்பகுதி வழியாக அவன் வெளியே பார்த்தான். கிராமத்து மனிதர்கள் கூட்டமாக வண்டியில் ஏறினார்கள். ஐந்து நிமிடங்கள் வண்டி நிற்கும். இறங்கிப் பார்க்க அவனுக்கு தைரியம் வரவில்லை. ஒரு வேளை சந்திரன் இருந்தாலும் இருக்கலாம். இல்லாவிட்டால் கோபி... இல்லாவிட்டால் அவனுக்குத் தெரிந்த வேறு யாராவது இருப்பார்கள். முன்பு எல்லா விடுமுறையின் போதும் இங்கு விருந்து சாப்பிட அவன் வந்து விடுவான்.

பார்க்கவில்லை. அவள் வந்திருக்க மாட்டாள். அவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ள முயன்றான்.

அடுத்த ஸ்டேஷன் ஜங்ஷன். வண்டி நின்றவுடன், வெளியே இறங்கினான். கடைசி ப்ளாட்ஃபாரத்திற்கு அருகில் இருந்ததால் ஆரவாரமோ மக்கள் கூட்டமோ பெரிதாக இல்லை. நரம்புகளைக் கட்டுப்படுத்த இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு நடந்தபோது மக்கள் கூட்டத்திற்கு நடுவில், தோல்பையைக் கையில் பிடித்துக்கொண்டு சரசு அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.

சரசு அல்ல. சரசுவின் உயிரற்ற நினைவு. அவன் சிரிக்க முயன்றான்.

“வா...''

அவள் பின்னால் வருகிறாள் என்ற நம்பிக்கையுடன் அவன் வேகமாக கம்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தான். உட்கார்ந்து, சுவாசத்தை சரிபடுத்திக் கொண்டு சொன்னான்:

“ஸ்டேஷன்ல உன்னைக் காணோம். நான் உன்னைத் தேடினேன்.''

“நான் பார்த்தேன்.''

அவனுக்கு நன்கு தெரிந்த ரெஸ்ட்டாரெண்டில் வேலை பார்க்கும் மனிதனைப் பார்த்ததும், அவனிடம் காப்பி கொண்டு வரச் சொன்னான். அடுத்த நிமிடம் அவனைத் திரும்பவும் அழைத்தான்:

“ஒரு போர்ட்டரை வரச் சொல்லு.''

போர்ட்டரின் கையில் ஒரு டிக்கெட் எடுப்பதற்கான பணத்தைக் கொடுத்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியே வந்தது.

விலை குறைவான புடவையும் வளையல்கள் எதுவும் இல்லாத கைகளும் ஒட்டிப்போன கன்னமுமாக இருந்த சரசு இரண்டு வருடங்களுக்குப் பிறகு மேலும் மாறியிருந்தாள்.

“நீ ரொம்பவும் மாறியிருக்கே. பார்த்தவுடனே எனக்கே அடையாளம் தெரியல.''

குறை சொல்வது மாதிரியான தொனி வராமல் இருக்க அவன் பார்த்துக் கொண்டான்.

“ராஜு அத்தான், நீங்களும்தான் மாறிட்டீங்க.''

இருக்கலாம். முன்பு இருந்ததைவிட அவன் சற்று தடித்திருக்கிறான். சற்று கூடுதலாக தொப்பை விழுந்திருக்கிறது. சற்று அதிகமாக வழுக்கை விழுந்திருக்கிறது.

தெரியாத்தனமாக- விவரம் தெரியாமல் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்ட ஒரு பெண் என்றுதான் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். வண்டி புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது. கோயம்புத்தூரிலிருந்து வரும் வண்டிக்குச் செல்லும்- டெர்மினஸுக்குப் போகிற பயணிகள் யாராவது வந்து ஏறாமல் இருக்க மாட்டார்கள்.

அறிமுகமே இல்லாதவனைப்போல பயணம் செய்ய முடியாது. பெட்டியைத் திறந்து ரோஸ் நிறத்திலிருந்த டர்க்கிஷ் துவாலை, சோப், பவுடர் டப்பா, சீப்பு ஆகியவற்றை வெளியே எடுத்து வைத்தான்.

“இந்தா... பாத்ரூமுக்குப் போயி, வேணும்னா முகத்தைக் கழுவிக்கோ.''

தன்னுடன் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைப்பதை அவள் புரிந்துகொள்வாளா?

போர்ட்டர் டிக்கெட்டையும், ரெஸ்ட்டாரெண்ட் பணியாள் காப்பியையும் ஒன்றாகவே கொண்டு வந்தார்கள்.

பாத்ரூமிலிருந்து மாய வித்தைபோல பழைய சரசு வெளியே வருவாள் என்று ஒரு நிமிடம் முட்டாளைப்போல அவன் ஆசைப்பட்டான்.

சரசு வெளியே வந்தாள். இல்லை... அப்படியொன்றும் குறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் நடக்கவில்லை. பவுடர் பூசியதால் சற்று வெள்ளை நிறம் முகத்தில் கூடியிருந்தது. தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்தியதில், நெற்றி மேலும் அகலமாகிவிட்டிருந்தது.

“காப்பி குடி.''

எதிர்பக்க ப்ளாட்ஃபாரத்தில் வண்டி வந்தது. பலரும் வந்து ஏறினார்கள். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அவனுக்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை.

கம்பார்ட்மெண்ட் நிறைந்ததும், அவன் அவளை நெருங்கி உட்கார்ந்தான். வெளியே கூட்டம் அதிகரித்தது. அடுத்த நிமிடம் வாசலில், நகரத்தில் தனக்குத் தெரிந்த ஒரு முகத்தை அவன் பார்த்தான். பத்திரிகையை எடுத்து விரித்து தன்னுடைய முகத்தை மறைத்துப் பிடித்துக்கொண்டு மிடுக்காக அதை அவன் படிக்க ஆரம்பித்தான்.

மெதுவாக நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சரசும் கீழே இருந்த பத்திரிகையில் ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். வெறுமனே பத்திரிகையை அவள் விரித்து கையில் பிடித்திருக்கிறாள் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அவள் எதையும் வாசிக்கவில்லை.

ஒரு விதத்தில் ஆட்கள் வந்து  ஏறியது நல்லதாகப் போய் விட்டது. தனியாக இருந்திருந்தால் ஏதாவது கட்டாயம் பேச வேண்டியதாகி இருக்கும்.

கடைசியில் வண்டி புறப்பட்டது. வெயில் குறைந்திருந்தது. பேப்பரைக் கீழே வைத்துவிட்டு, எதிர்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக அவன் வெளியே பார்த்தான்.

தேக்குக் காடுகளையும் அறுவடை முடிந்த வயல்களையும் கடந்து வண்டி போய்க் கொண்டிருந்தது. அடுத்தடுத்து ஸ்டேஷன்கள். குறிப்பாக யாரும் ஏறவும் இல்லை; இறங்கவும் இல்லை. பகல் வேகமாக இருண்டு கொண்டிருந்தது.

மனதில் கணக்குப் போட்டு பார்த்தான். இறங்கும்போது மணி ஆறே முக்கால் ஆகியிருக்கும். நகரம் இருள ஆரம்பித்திருக்கும். மாலை நேரத்தின் முடிவில் நகர வெளிச்சங்களுக்கு மத்தியில் பயணம் செய்யும்போது உடனடியாக ஆளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

அறுவடை முடிந்த வயல்களைத் தாண்டி, மர வீடுகளைத் தாண்டி வானத்தில் அரக்கனின் ரத்த விழிகளைப்போல வானொலி நிலையத்தின் வெளிச்சம் தெரிந்தது. நகரம் அடுத்து வருகிறது. நிம்மதியும் பரபரப்பும் ஒரே நேரத்தில் தோன்றின.

ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, எதிர்பார்த்ததையும் விட இருட்டு அதிகமாகி விட்டிருந்தது.

அவன் சூட்கேஸைக் கையில் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். அவனை நிழல்போல சரசு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.


வேகமாக வந்த ரிக்ஷாக்காரர்களையும் கூலிக் காரர்களையும் தாண்டி, இருபக்கங்களிலும் பார்க்காமல் அவர்கள் வெளியே வந்தார்கள்.

முதலில் பார்த்த வாடகைக் காரில் ஏறி உட்கார்ந்தபோது, சரசுவின் பெரியம்மாவின் வீடு அருகில்தான் இருக்கிறது என்பது ஞாபகத்தில் வந்தது. அங்கு போவதாகச் சொல்லிவிட்டுத்தான் அவள் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறாள்.

“எங்கே சார்?''

“டவுனுக்கு விடு.''

நகரத்தின் ஆரம்பத்தில் மேடாக இருக்குமிடத்தில் இருக்கும் நன்கு தெரிந்த ஹோட்டலை நெருங்கியவுடன் காரை நிறுத்தும்படி அவன் சொன்னான்.

வாடகைக்காரனிடம் தேவையில்லாமல் ஒரு பொய்யைச் சொன்னான்:

“ஒரு ஃபோன் பண்ணிட்டு வர்றேன்.''

கவுண்டருக்குப் பக்கத்தில் பணியாள் ஜான் நின்றிருந்தான். சாயங்காலம் வந்துவிட்டால் அவன் குடிக்க ஆரம்பித்து விடுவான். வந்திருப்பது யாரென்று தெரிந்து அவன் சிரித்தபோது மனம் குளிர்ந்த மாதிரி இருந்தது.

“அறை இருக்குல்ல?''

மேனேஜர் கேட்டார்:

"சிங்கிளா டபுளா?’’

“டபுள்.''

திரும்பி வந்து கார் கதவைத் திறந்து சரசுவிடம் அவன் சொன்னான்: “இறங்கு...''

ஹோட்டலின் மாடியிலும் அந்தப் பகுதியிலும் இருந்தவர்கள் தன்னை கவனிக்கலாம் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். எங்கிருந்தோ ஒரு பெண்ணை அங்கு தள்ளிக்கொண்டு வருகிறான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

படிகளில் ஏறி மாடியை அடைந்தபோது பணியாள் அறையின் கதவைத் திறந்து விட்டிருந்தான். உள்ளே நுழைந்து அவனிடம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு சொன்னான்:

“அந்தத் தோல் பையையும் பெட்டியையும் எடுத்திட்டு வா. இதை மாற்றி வாடகைக்கார்காரன்கிட்ட எவ்வளவு கொடுக்கணும்னு கேட்டு கொடு.''

ஒல்லியான மூக்கையும் நெற்றியில் குறியையும் கொண்டிருந்த வளைந்து போயிருந்த அந்த மனிதன் தன்னுடைய ஓரக் கண்ணால்  சரசுவைப் பார்ப்பதை  தான் கவனிக்காதது மாதிரி  அவன் காட்டிக் கொண்டான். ஜான் மனதில் கனக்கு போட்டிருப்பான். இரவின் பிற்பகுதி நேரத்தில் வாடகைக்கார்களில் "கூட்டிக் கொடுப்பவர்கள்’’ அழைத்துக் கொண்டு வரும் விற்பனைச் சரக்குகளுடன் அவன் சரசுவை மனதில் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். யார்மீதோ அவனுக்கு கோபம் வந்தது.

“உட்காரு.''

அவள் அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.

பெரியம்மாவின் வீட்டுக்குப் போகாததைப் பற்றி விளக்க மெதுவும் கொடுக்கவில்லை.

ஜான் திரும்பி வந்து மெத்தையின் விரிப்புகளை மாற்றினான்.

கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு பத்து.

“ரெண்டு பேருக்கு சாப்பாடு.''

புத்தகத்தை விரித்தபோது சரியான பெயரையும் முகவரியையும் எழுதினான். கடைசி காலி இடத்தில் "குடும்பத்துடன்' என்றெழுதிச் சேர்த்தபோது, பணியாளின் முகத்தில் மீண்டும் மெல்லிய சிரிப்பு மலர்வதை அவன் பார்த்தான்.

“வேற எதுவும் வேண்டாமா சார்?''

“ம்... பீர் கொண்டு வா. குளிர்ச்சியான பீர்.''

மேஜைமீது புட்டிகளையும், இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் வைத்தபோது அவன் சொன்னான்:

“ஒரு டம்ளர் போதும்.''

அவன் கதவை அடைத்துவிட்டு வெளியே சென்ற பிறகு சரசுவிற்கு முதுகைக் காட்டியவாறு அவன் புட்டியைத் திறந்து டம்ளரை நிறைத்தான். நுரை வெளியே வழிந்தது.

தான் குடிக்கும் விஷயம் சரசுவிற்குத் தெரியுமா? ஒரே மூச்சில் டம்ளரை காலி செய்துவிட்டு, எதிர்பக்கமிருந்த மெத்தையில் வந்து உட்கார்ந்துகொண்டு அவன் சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“இது வெறும் பீர்தான். உடம்புக்கு இதைக் குடிப்பதால் எந்த பிரச்சினையும் இல்ல...''

வெறுமனே ஒரு சமாதானம்... அதைக் கேட்டு அவள் சிரித்தாளா என்ன?

அவள் அவனைப் பற்றி மேலும் கொஞ்சம் தெரிந்து கொள்கிறாள். யாராலும் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. "சரசு, யாரும் யாரையும் புரிந்துகொள்ள முடியல.’’ அவன் தனக்குள் கூறிக்கொண்டான்: "இந்த அழகான ஹோட்டல் அறையில் நீயும் நானும்  மட்டும் தனியா இருக்கோம். ஒரு நேரத்தில் உன் கனவுகளின் மையமாக இருந்த (அப்படி நான் இருந்தேனா?) மனிதன் உனக்கு இதோ முழுமையா கிடைச்சிருக்கு. சில மணி நேரங்கள்னாகூட இந்த மவுனம் என்னை பாடாய்ப் படுத்துது.’’

டம்ளர் மீண்டும் நிறைந்து, காலியாயின. புட்டிகள் வாசல் வழியாகப் பயணம் செய்தன.

சாதம் வந்தபோது அவன் சொன்னான்:

“நீ சாப்பிடு.''

“ராஜு அத்தான், நீங்க சாப்பிட்ட பிறகு நான் சாப்பிடுறேன்.''

இது வீடு அல்ல. சடங்குகள் இங்கு தேவையில்லை.

“சாப்பிடு.''

அவள் சாப்பிட உட்கார்ந்தாள். பிரம்பால் செய்யப்பட்ட சிறிய டீப்பாயை கட்டிலுக்குப் பக்கத்தில் நகர்த்திய அவன் ஒவ்வொரு மடக்காக குடித்து உள்ளே தள்ளினான்.

“முடிஞ்சதா?''

“முடிஞ்சது''.

“இவ்வளவு சீக்கிரமாவா?''

"நீ நல்லா சாப்பிடணும். உன் உடம்பைப் பார்க்குறப்போ எனக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு. மறைந்துபோன உடல் அழகு மீண்டும் திரும்பி வர்றதை நான் பார்க்குறேன். சதைப்பிடிப்பின் தாள லயங்களின் வெளிப்பாடுகள்.' அவன் தனக்குள் பேசிக் கொண்டான்.

வியர்வையில் குளித்தபோதுதான் மின்விசிறி இயங்கவில்லை என்பதே அவனுக்குப் புரிந்தது. ஸ்விட்சைப் போட்டான். குளிர்ச்சி பரவியது.

அவன் மீண்டும் அவளைப் பற்றிய நினைவில் மூழ்கினான்: "சரசு, நீ என்னை நினைச்சு ஆச்சரியப்படுறியா? மழைக்காலத்தில் மழை விடாம பெய்யிறப்போ, இருண்ட படிகளுக்கு மத்தியில் மனப் பூர்வமாக சந்திக்கிற மாதிரி சூழ்நிலையை உண்டாக்கி, கட்டிப் பிடிச்சு உணர்ச்சிகளை ஒருவரோடொருவர் பரிமாறி கட்டுப் பாட்டைவிட்டு விலகி நிற்கிறப்போ... ஞாபகத்துல இருக்கா, சரசு? கொஞ்சம்கூட நன்றியில்லாம அப்போ நான் சொன்னேன். "இனிமேல இந்த விஷயம் நடக்கக்கூடாது’’ன்னு... அதற்குப் பிறகும் இருட்டில் ஒளிந்து நின்ன என்னை உனக்குத் தெரியல. உனக்கு மட்டுமில்ல. வேற யாருக்குமே. பாகிக்கும் புரியல. முழு உலகமும் எதிர்த்தப்போ அவளையே மனசுல நினைச்சு, அவபேரைச் சொல்லிக்கிட்டு நான் திரிஞ்சேன். கள்ளக்கடத்தல் வியாபாரமும் மர வியாபாரமும் செய்து பணம் நிறைய கையில வந்தப்போ, எதிர்ப்புகள் பின் வாங்கினப்போ, அவளை மிதித்து தாண்டிப் போன என்னை அவளால புரிஞ்சிக்க முடியல. அஸ்தாவிற்கும் மரியாவுக்கும் என்னைப் புரிஞ்சிக்க முடியல.

மூலையில் ஆறாம் நம்பர் அறை இது. சுகம் விற்பனை செய்யக்கூடிய தரகர்கள் இந்த அறைக் கதவை எனக்காக எத்தனையோ முறை தட்டியிருக்காங்க.

சரசு, உன்னை நினைச்சு நான் அழ விரும்புறேன்.

பாகியை நினைச்சு...

மரியாவை நினைச்சு...

ஆஷ்தா ஸலோனனை நினைச்சு...

பலவற்றையும் மறந்துவிட்ட நான் அழுவதற்கும் மறந்து போனேன். சிரிக்கவும்தான்.

இழந்துவிட்ட பெரிய தருணங்கள்.'

அவன் தனக்குள் பேசிக்கொண்டே போனான்.

“சாப்பிடலையா?''

“நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்?''

“எதுவும் சொல்லல.''

மீண்டும் அவனுடைய மன ஓட்டம்-

"அகலமான இரட்டைக் கட்டிலில் பாபுவும் ஷீபாவும் தாயுடன் படுத்து உறங்கிகிட்டு இருக்காங்க. அதுக்குப் பக்கத்துல கையை நீட்டினா ஆட்டக்கூடிய தூரத்துல இருந்த தொட்டிலில் கட்டப் பட்டிருந்த கொசு வலைக்குள் ஒன்பது மாத சாரு தூங்கிக்கிட்டு இருக்கா.


குற்றம் யாரோடது? கோவிலைப் பல முறைகள் சுற்றி, காதுல துளசிப் பூவும் நெற்றியில் சந்தனமும் அணிந்து, சாயங்கால விளக்குக்குப் பக்கத்துல உட்கார்ந்து கடவுள் பெயரைச் சொல்லி வளர்ந்த பதினொரு வயதுள்ள புத்திசாலிப் பையனை எனக்கு ஞாபகத்துல இருக்கு.

புத்திசாலிப் பையன்'ன்றது என்னோட மறந்துபோன செல்லப் பேரு.’’

பாதை தவறியது எங்கு?

மீண்டும் சுய உணர்விற்கு அவன் வந்தான்.

“நீ என்ன? எதுவும் பேச மாட்டேங்குற?''

“என்ன பேசுறது?''

வெளியே எங்கோ கண்ணாடிப் பாத்திரங்கள் உடையும் சத்தம் கேட்டது. தூரத்தில் எங்கோ ஒரு கோவிலில் வெடி வெடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜன்னலின் திரைச்சிலை இடைவெளி வழியாக நகரத்தின் மங்கலான வெளிச்சங்கள் தெரிந்தன.

“காலையில ஆறு மணிக்கு ஒரு வண்டி இருக்கு.''

அவன் தனக்குள் கூறிக் கொண்டான்: "காலையில்... ம்... வெளிச்சம் வர ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி... பக்கத்து கிராமங்கள்ல இருந்து இரவு வேளையில் வாடகைக்கார்களில் பந்தாவா வரும் இளம் பெண்கள், புடவை முந்தானையில் சுருட்டி வச்சிருக்குற ரூபாய் நோட்டுகளும் சோர்வடைந்த உடல்களும் தூக்கம் தங்கியிருக்குற கண்களுமாக திரும்பிப் போற வண்டி.. ஞாபகத்துல இருக்கு...’’

மேஜைமீது எச்சில் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. மூடப்பட்ட கதவுக்கு உள்ளே நான்கு சுவர்களுக்குள் உள்ள சிறிய உலகம் இருள்கிறது.

"வா... குழந்தை... வா... இன்னொரு முறை அழிவின் இருண்ட குகைக்குள் சாத்தானைப்போல நான் காத்து நின்னுக்கிட்டு இருக்கேன். இனியொரு முறை இதே விஷயத்தைத் தொடரக் கூடாது. மேலும் ஒரு முறை. ஒருவேளை விடியப் போறது வாழ்க்கை யின் புதிய ஒரு காலையாக இருக்கலாம். பிரகாசத்தின் இசையின் புலர்காலைப் பொழுது.’’

இருட்டு.

சத்தம் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டான். நகரத்தில் மைய இடத்தில் இருக்கும் புகழ்பெற்ற கோவிலிலிருந்து ஒலி பெருக்கி பரப்பிய பக்திப் பாடல் அந்த அதிகாலை வேளையை இனிமையான ஒன்றாக ஆக்கிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில் ஒலிகள் மிதந்து வந்தன.

ஜன்னல் திரைச்சீலையை அகற்றி அவன் வெளியே பார்த்தான். வெளிச்சம் வருவதற்கு முன்பு இருக்கும் நரைத்த இருட்டு. குளிர் எழுந்த ஜன்னலுக்கு அருகில் போய் நின்றான். கொஞ்சம் தலைவலி இருப்பதைப்போல் இருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து அவன் பற்ற வைத்தான்.

சரசு தூங்கிக் கொண்டிருந்தாள். நேரம் ஐந்தரை மணி. அப்போது அவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.

நகரம் இன்னும் கண் விழிக்கவில்லை. சாலையில் கால் வைத்தபோது வாகனங்கள் இல்லை. ரிக்ஷாக்கள் இல்லை.

நடந்தான். அவனுக்குப் பின்னால் சரசு நடந்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. காங்க்ரீட் சாலை ஈரமாக இருந்தது. ஈரமான காற்றில் வெப்பத்தின் அடையாளங்கள் இருந்தன.

மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்துக்கொண்டு ப்ளாட்ஃபாரத் திற்கு வந்தபோது நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்- வண்டி வந்து கொண்டிருந்தது. குளிரில் சுருங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்த பயணிகளுக்கு நடுவில் நடந்து பெண்கள் கம்பார்ட்மெண்ட்டை அடைந்து அவன் டிக்கெட்டை சரசுவின் கையில் தந்தான்.

“பணம் ஏதாவது வேணுமா?''

“வேண்டாம்.''

“ஏதாவது தேவைப்பட்டா, எழுது.''

அவள் எழுத மாட்டாள் என்று அவனுக்கு நன்கு தெரியும். அதனால் அந்த அமைதியை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். வண்டி புறப்படும் நேரம் வரை காத்திருந்து, கடைசி நிமிடத்தில் கையை உயர்த்தி விடை பெறுவது- அதை நினைத்தபோது அவனுக்கே கஷ்டமாக இருந்தது. நிச்சயம் அவனால் முடியாது.

“நான் போகட்டுமா?''

அவள் தலையை ஆட்டி மெதுவான குரலில் சம்மதம் சொன்னாள். அதற்குமேல் அங்கு காத்திருக்காமல் ஆட்கள் கூட்டத்திற்கு மத்தியில் அவன் வேகமாக நடந்தான். நடந்து ஹோட்டல் படிகளை அடைந்தபோது, அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். படிகளில் ஏறி மாடியை அடைந்தபோது அவனுடைய நண்பரான ஒரு படகு காண்ட்ராக்டர் அங்கு நின்றிருந்தார்.

“ஹலோ.''

பதைபதைப்பை அடக்கிக்கொண்டு அவருக்குப் பக்கத்தில் அவன் சென்றான்.

“ராத்திரி வர்றப்போ நான் பார்த்தேன். தொந்தரவு செய்ய வேண்டாம்னு கூப்பிடல.''

அவர் ஒரு கிண்டல் சிரிப்பு சிரித்தார்.

“சரக்கை எங்கே பிடிச்சீங்க?''

“போனேன். வழியில கிடைச்சது.''

“பார்க்குறப்பவே தெரிஞ்சது. கச்சடா...''

"உண்மைதான். கச்சடாதான். நீங்க சொல்றது சரிதான்’’ என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டியவாறு அவன் அறையை நோக்கி நடந்தான்.

எள்ளெண்ணெய்யின் வாசனை அறையில் தங்கியிருந்தது. குளிர்ந்த போயிருந்த மெத்தையில் ஒரு புழுவைப்போல அவன் சுருண்டு படுத்தான்.

அவனுக்கு இறக்க வேண்டும்போல் இருந்தது.

கொல்ல வேண்டும் போலவும் இருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.