Logo

தங்க மோதிரம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7764
thanga mothiram

ரு நாள் என்னுடைய மனைவி ஒரு பழைய தங்கத்தால் ஆன மோதிரத்தை, அவள் பெட்டியின் அடியில் இருந்து தேடி எடுத்து, தன் விரலில் அணிந்து, அதன் அழகை ரசித்தவாறே என்னிடம் கேட்டாள்:

"நல்லா இருக்கா?''

நான் கேட்டேன்:

"இந்தப் பழைய மோதிரம் உனக்கு எங்கே இருந்து கிடைச்சது?''

"இது தங்கம்தான்.'' மனைவி சொன்னாள்: "இந்த மோதிரம் என்னோட அப்பாவுக்கு அம்மாவோட அம்மாவுக்கு அம்மாவோட அப்பாவுக்கு ஒரு மகாராஜா அன்பளிப்பா கொடுத்தது...''

அதைக்கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

"நீ எப்படிடீ இந்தத் தங்க மோதிரத்தை அணியலாம்?'' நான் சொன்னேன்: "நியாயமா பார்க்கப் போனா, இந்தத் தங்க மோதிரத்தை அணிய வேண்டியது நான்தான். உனக்குத்தான் தெரியுமே...

சில தலைமுறைகளைத் தாண்டி நான் பின்னாடி போனா... போய் விழுறது மன்னர் அக்பரோட மடியிலயா இருக்கும். உண்மையான வரலாறு இதுதான். அப்படிப் பார்த்தால் தங்க மோதிரத்தோட உண்மையான சொந்தக்காரன் நான்தான். ஒழுங்கா எனக்கு அதைத் தந்திடு. “விரல்ல போட்டு நான் நாலு பேருக்குத் தெரியிற மாதிரி நடக்குறேன்!''

"இந்த மோதிரத்து மேல அப்படியொரு ஆசை உங்களுக்கு இருந்துச்சுன்னா, கேக்குற சமயங்கள்ல நான் தர்றேன்.'' மனைவி சொன்னாள்.

"அப்படியொரு ஈவு, இரக்கம் ஒண்ணும் எனக்குத் தேவையில்லை...''

"அப்படின்னா அதுவும் இல்ல...'' உறுதியான குரலில் என் மனைவி சொன்னாள்: "இந்தத் தங்க மோதிரத்தை உங்க கையால தொட நான் விட மாட்டேன்!''

"ஓ... ஹோ...!''

"ஆ... ஹா...!''

"அப்படியா? நான் யார்னு உனக்குக் காட்டுறேன்.'' நான் மீசையைத் திருகினேன்.

கடவுள் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என் மனைவி கர்ப்பமானாள். என் விரலில் தங்க மோதிரம் ஒளி வீசுவதற்கு உரிய நேரம் தேடி வந்தது. கர்ப்பம் என்ற ஒன்று ஸ்டைலாக என் மனைவியிடம் வந்து சேர்ந்தபோது, நான் அவளிடம் கேட்டேன்.

"அடியே... உன் வயித்துல இருக்குறது ஆணா, பெண்ணா?''

மனைவி புன்னகைத்தாள். பிறகு கேட்டாள்:

"எதுவோ இருக்கும்...''

நான் சொன்னேன்:

"ஆண்தான்!''

மனைவி சொன்னாள்:

"நான் சொல்றேன்... பொண்ணு...''

"பந்தயம் எவ்வளவு?''

மனைவி சொன்னாள்.

"அம்பது ரூபா...''

"சம்மதம்.'' நான் சொன்னேன்: "வயித்துல இருக்குறது ஆணா இருந்தா, உன் விரல்ல கிடக்குற மோதிரத்தை எனக்கு நீ தந்திடணும்.''

"இதையா?'' விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்தவாறு மனைவி சொன்னாள்: "இதோட விலை ரொம்பவும் அதிகமா இருக்கும். என்ன இருந்தாலும் பழைய தங்கமாச்சே! அதுவும் மகாராஜாவோட மோதிரம்!''

"மகாராஜாவோட மோதிரமா இருக்கலாம்.'' நான் சொன்னேன்: "இருந்தாலும் மோதிரம் பழையதாச்சே! அந்த ராஜாவோட செருப்புக்கு இப்போ என்ன விலை இருக்கும்? உன்னோட ஒரு பழைய ப்ளவுஸுக்கு இப்போ என்ன விலை?''

அவள் எந்தவித உற்சாகமும் இல்லாமல் மோதிரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் சொன்னேன்:

"இப்போ இந்த மோதிரத்தை எடை போட்டு விற்றால், பெரிசா ஒண்ணும் கிடைக்காது. நான் உன்னோட கணவனாச்சே! நஷ்ட ஈடா உனக்கு ஏதாவது நான் கட்டாயம் தரணும். அது என்னோட கடமை. புருஷ தர்மம்! அதனால அம்பது ரூபா தந்து, இந்த மோதிரத்தை நானே எடுத்துக்குறேன்....''

என் மனைவி சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தாள். பிறகு சொன்னாள்:

"அப்படியா? சரி... என் வயித்துல இருக்குறது பொண்ணா இருந்தால், எனக்கு அம்பது ரூபா நீங்க தரணும்.''

நான் சொன்னேன்:

"உன் வயித்துல இருக்குறது ஆணா இருந்தால் எனக்கு நீ இந்தப் பழைய மோதிரத்தைத் தந்திடணும்... அடியே... கையை இங்க கொடு...''

நானும் என் மனைவியும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கைகளைக் குலுக்கிக் கொண்டோம்.

காரியங்கள் இப்படிப் போய்க் கொண்டிருக்கிறபோது, எனக்கு ஒரு பயம். அவளுக்குப் பிறக்கப் போவது பெண்ணாக இருக்கும் பட்சம், எனக்கு ஐம்பது ரூபாய் நஷ்டமடைய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி ஒரு நிலை வராமல் இருப்பதற்கு என்ன வழி? இது பற்றி தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இது குறித்த சிந்தனையில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், மூன்று நாயர்களையும், இரண்டு திய்யர்களையும் நான் பார்த்தேன். இவர்கள் எல்லாரும் என்னை "குரு” என்று பொதுவாக அழைத்துக் கொண்டிருந்தார்கள். (இப்போது எங்களுக்குள் உறவு அவ்வளவு சீராக இல்லை. இந்துக்கள் மேல்- சொல்லப்போனால்- எனக்கு நம்பிக்கை இல்லாமல் ஆகிவிட்டது. இனிமேலும் என்னை "குரு” என்று அழைக்கக்கூடாது என்று உறுதியான குரலில் கூறி விட்டேன்). சம்பவம் என்னவென்றால், மேலே நான் சொன்ன மூன்று நாயர்களும் இரண்டு திய்யர்களும் சேர்ந்து ஒவ்வொருவரும் பத்து ரூபாய் வீதம் பந்தயம் கட்டினார்கள். அவர்கள் என் மனைவியின் வயிற்றில் இருப்பது பெண் என்று பந்தயம் கட்டினார்கள். நான் வயிற்றுக்குள் இருப்பது ஆண் என்று பந்தயம் கட்டினேன். தொடர்ந்து நாங்கள் ஒருவரையொருவர் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். அப்போது இந்துக்களில் ஒருவன் சொன்னான்:

"இதற்கு எதிராக ஒரு சட்டத்தைக் கட்டாயம் கொண்டு வரணும். இந்த முட்டாள் அரசாங்கத்துக்கு ஏதாவது அறிவு இருக்கா? முஸ்லிம்கள் தங்கள் இஷ்டப்படி முன்னூறு பொண்டாட்டிகளைக்கூட வச்சுக்கலாம். அப்பாவி இந்துக்களுக்கு மட்டும் ஒண்ணே ஒண்ணா?''

நான் சொன்னேன்:

"எனக்கு இருக்குறது ஒரே ஒரு பொண்டாட்டிதானே?''

இன்னொரு தடிமனான இந்து சொன்னான்:

"நீங்க விருப்பப்பட்டால் இன்னும்கூட பொண்டாட்டிகளைச் சேர்த்துக்கலாமே! போதாததற்கு, மன்னர் அக்பர் உங்களோட சொந்தக்காரர் வேற. பிறகு... ஹைதராபாத் நைஸாம்! மொத்தம் முன்னூறு மனைவிமார்கள்...''

நான் சொன்னேன்:

"நீங்க சொல்றது சரிதான். விஷயத்தைக் கேக்குறப்போ நல்லாத்தான் இருக்கு. இது விஷயமா தீவிரமா யோசிக்கிறேன்...''

"விருப்பம்போல சிந்திங்க...'' தடிமனான இந்து சொன்னான்:

"நாங்க நரம்பு அறுந்து போய் ஆணுறைகளை பாக்கெட்ல வச்சுக்கிட்டு நடந்து திரியிறோம். இதுக்கு மேல நாங்க என்ன செய்ய முடியும்? அதே நேரத்துல பாருங்க... முஸ்லிம்கள் ஒவ்வொரு வீடா ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க. கர்ப்பம் சம்பந்தமான பந்தயம் வேற...''

நான் கேட்டேன்:

"உங்களைச் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணச் சொன்னது யாரு? என்னோட வயசுல கல்யாணம் செஞ்சிருந்தா போதாதா? உங்களைப் பந்தயம் வைக்கக்கூடாதுன்னு யாரு தடுத்தது?''

"இவர் சொல்றதும் சரிதான்...'' இந்துக்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: "நாம இந்த விஷயத்தை நினைச்சுப் பார்க்கவே இல்ல. நல்ல வாய்ப்பை நாம தவற விட்டுட்டோம்.''


அதற்குப் பிறகு என் மனம் கட்டுப்பாடில்லாமல் அலைய ஆரம்பித்துவிட்டது. சுகமான பல விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு நான் நடந்து செல்லும்போது, இந்துக்கள் என்னைப் பார்த்துக் கேட்டார்கள்.

"பிரசவம் ஆயிடுச்சா? பொண்ணுதானே?''

நான் சொன்னேன்:

"இந்துக்கள் இந்த விஷயத்துல ஏமாறப் போறது உண்மை. என்னோட மனைவி பெறப் போறது தங்கக்கட்டி மாதிரி ஒரு ஆண் குழந்தையைத்தான். நீங்க ஐம்பது ரூபா எனக்குத் தந்தே ஆகணும்...''

இப்படி இரவும் பகலும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்க, இனிமையான ஒரு காலைப் பொழுதில் நான் திடுக்கிட்டு எழுந்தேன். அடுத்த அறையில் இருக்கும் என்னுடைய மனைவியின் உரத்த சத்தம்... முனகல்கள்... முணுமுணுப்புகள்... பிரசவம் ஆகப் போகிறது!

குஸால்!

நான் சொன்னேன்:

"சிரிடீ... எவ்வளவு பெரிய காரியத்தை நீ செய்யப்போற! நல்லா வாய் விட்டுச் சிரி...''

அவள் பிரசவமாவதை நான் இன்னொரு அறையில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்ததும், அவளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அவள் உரத்த குரலில் கூப்பாடு போட்டாள்.

நான் சொன்னேன்:

"பேசாம இருடி! இதென்ன பெரிய விஷயமா? எத்தனையோ ஆயிரம் பெண்கள் இந்த உலகத்துல பிள்ளை பெத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. இந்த பிரசவ வேதனை அது இதுன்னு சொல்றாங்கள்ல... ஆண்களான எங்களுக்கு இதைப் பற்றி நல்லாவே தெரியும். போசாம இரு...

மூச்... ஜாக்கிரதை!''

அடுத்த சில நிமிடங்களுக்கு எந்தவித ஆர்ப்பாட்டத்தையும் காணோம். தொடர்ந்து வேதனையின் வெளிப்பாடு மாதிரி... பல கடவுள்களின் பெயர்களைச் சொல்லியவாறு கூப்பாடு போட்டாள். நான் அவளை அழைத்துச் சொன்னேன்:

"அடியே... பெரிய பெரிய பெயர்களைச் சொல்லுறதுக்கு மத்தியில "அல்லாமா பஷீர்” என்ற பேரையும் சேர்த்துச் சொல்லுடி. உனக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. ம்... சீக்கிரம்!''

அப்போது அவளிடமிருந்து ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கி விட்டது. வெறும் முக்கலும் முனகலும் மட்டும்தான். இந்த நேரத்தில் பிரசவம் பார்க்கும் ஒரு அழகான நர்ஸ் என் அருகில் வந்து நின்றாள். அவள் ஒரு இந்து அழகி! அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்னும் அவள் குழந்தையும் பெறவில்லை. இருந்தாலும், அவளை ஐந்து ரூபாய்க்கு பந்தயம் கட்டச்சொன்னால் என்ன என்று நினைத்தேன். அதற்குள் அவள் என்னைச் சத்தம் போட ஆரம்பித்தாள்.

நர்ஸ் சொன்னாள்:

"பேசாம அமைதியா இருங்க. எதையாவது சொல்லி அவுங்களை சிரிக்க வைக்காதீங்க. பிரசவ வேதனையைப் பற்றி ஆம்பளைகளுக்கு என்ன தெரியும்?''

இப்படி என்னைப் பார்த்து சொல்லியவாறு அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். நான் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து புகைக்க ஆரம்பித்தேன். மனதில் ஒரே பரபரப்பு. பிறக்கப் போவது ஆணாக இருக்குமா, பெண்ணாக இருக்குமா? எது வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் நல்ல முறையில் நடந்து முடிந்தால் சரி என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அதாவது- பந்தயம்... பணம் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திற்கு நான் மறந்துவிட்டேன் என்று இதற்கு அர்த்தம். அதன் விளைவு- இனிமையான குழந்தையின் அழுகை!

நான் ஓடிப்போய் வாசல் பக்கத்தில் நின்றேன். கதவை மூடி வைத்திருக்கிறார்கள். ஆர்வத்தில் உரத்த குரலில் நான் சொன்னேன்:

"கொஞ்சம் நான் குழந்தையைப் பார்க்கணும்!''

நான் சொன்னதற்கு பதில் மாதிரி குழந்தையின் அழுகைக் குரல்! ஆண்களைத் திட்டிக்கொண்டிருக்கும் நர்ஸின் குரல்!

சிறிது நேரம் சென்றதும் கதவு திறக்கப்பட்டது. தங்க விக்ரகத் தைப் போல ஒரு அழகான குழந்தை! அதன் இரண்டு கால்களையும் பிடித்து  தலைகீழாகத் தொங்கவிட்டவாறு நர்ஸ் என்னை நோக்கி கொண்டு வந்தாள். நான் அதை வாங்கி நேராகப் பிடித்து ஒரு இனிய முத்தத்தைப் பதித்து, குழந்தையுடன் நேராக என் மனைவியிடம் போனேன். அவள் வியர்வையில் குளித்துப் படுத்திருந்தாள். கண்கள் திறந்திருக்கவில்லை. குழந்தையை நான் அவளுக்குப் பக்கத்தில் படுக்க வைத்தேன். பிறகு... மெதுவாக அவளின் விரலில் இருந்த தங்க மோதிரத்தை நான் கழற்றி எடுத்தேன். தொடர்ந்து... தர்ம கணக்கில் என் மனைவிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.

"அடியே... ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள்!'' என்று அவளைப் பார்த்துச் சொல்லியவாறு வெளியே வந்தேன். சுவரில் இருந்து கொஞ்சம் சுண்ணாம்பை எடுத்து மோதிரத்தின் மேல் தேய்த்து மினுமினுப்பாக்கியவாறு, அதை என் விரலில் அணிந்தேன்.

"சலாம் மன்னரே!” என்று மோதிரத்தைப் பார்த்துச் சொல்லியவாறு, பற்கள் தேய்த்து, சவரம் செய்து, குளித்து முடித்து, நன்கு தோய்க்கப்பட்ட உடைகள் அணிந்து, காப்பி குடித்து, சிகரெட்டைப் புகைத்தவாறு இந்துக்களைத் தேடி நடந்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்களைக் கண்டுபிடித்து நான் சொன்னேன்:

"என் பொண்டாட்டி பிரசவமாயிட்டா...''சொல்லிவிட்டு இந்துக்களை உற்றுப் பார்த்தேன். அதோடு நிற்காமல், ஒரு வெற்றி வீரனைப்போல பயங்கரமான ஒரு சிரிப்பு சிரித்தேன். அதைப் பார்த்து இந்துக்கள் நடுங்கிவிட்டார்கள். நான் சொன்னேன்:

"காலம் காலமாக இங்கே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பந்தயமும் போட்டியும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அப்பல்லாம் ஜெயிச்சது யாரு? முஸ்லிம்தானே! ஒழுங்கா எடுங்க காசை...!''

இந்துக்கள் அதற்கு பதிலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த ஐந்து பேரும் சேர்ந்து ஐம்பது ரூபாயை என் கையில் தந்தார்கள். அவர்களிடம் என் விரலில் இருந்த தங்க மோதிரத்தைக் காட்டினேன்.

"பாருங்க... மன்னர் தந்த மோதிரம். சுத்தத் தங்கத்தால் ஆனது. இது விக்ரமாதித்த மகாராஜாவுக்குச் சொந்தமானது. இல்ல... இல்ல.. அசோக சக்கரவர்த்தியோடது... ஸாரி... ஹாரூண் அல் ரஷீதுக்குச் சொந்தமானது...''

"இது எப்படி உங்களுக்குக் கிடைச்சது...?'' இந்துக்கள் விசாரித்தார்கள்.

நான் சொன்னேன்: "இது எங்களோட குடும்பச் சொத்து!''

"அப்படியா?'' ஒரு இந்து சொன்னான்: "இது உங்க குடும்பச் சொத்தா? இதைப் பற்றிய சரித்திரம் எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா? திருடர்களின் ராஜாவான காயங்குளம் கொச்சுண்ணியோ, சீப்பவரானோ இந்துக்களிடமிருந்து தட்டிப் பறிச்சதா இருக்கும் இது!''

எது எப்படியோ... இந்துக்களிடமிருந்து வாங்கிய ஐம்பது ரூபாயில் அவர்களுக்கு தேநீரும் பலகாரமும் வாங்கிக் கொடுத்தேன். ஆளுக்கு ஒரு கோல்ட் ஃப்ளேக் பிடித்தோம். இந்துக்கள் எல்லாரும் லாட்டரி டிக்கெட் வாங்க நினைத்தார்கள். முதல் பரிசு ஒரு அருமையான முதல் தர கார். ஒரு ரூபாய்க்கு ஒரு கார் கிடைக்கிறது என்றால் சாதாரண விஷயமா?  இந்துக்கள் இரண்டு மூன்று டிக்கெட்டுகள் வாங்கினார்கள்.


அவர்கள் வற்புறுத்தியதால் நான் குழந்தையின் பெயரில் ஒரு டிக்கெட் வாங்கினேன். அவர்கள் என்னுடன் வர, ஏத்த வாழைப்பழம், தக்காளி, முந்திரிப்பழம், ஆப்பிள், பலாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பேரீச்சம்பழம், அல்வா ஆகியவற்றையும் ஒரு துணியும் வாங்கினேன். மாம்பழம் இல்லாததால் இலேசாக புளிக்கக்கூடிய மாங்காயை வாங்கினேன். எல்லாவற்றையும் சுமை தூங்கும் ஒரு ஆளிடம் கொடுத்து தூக்கி வரச் செய்தேன்.

"அடுத்த தடவை பந்தயத்துக்கு இந்துக்கள் தயாரா?'' என்று கேட்டவாறு நான் வீட்டுக்கு வந்தேன். என் மனைவியும் குழந்தையும் சுத்தம் செய்யப்பட்டு பெரிய ஹாலில் மாற்றப்பட்டிருந்தார்கள்.

நான் மனைவியின் கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மேஜையை இழுத்துப்போட்டு, பழங்களையும் மற்ற பொருட்களையும் அதில் வைத்தேன். என் மனைவி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நான் கொண்டு வந்த துணியை குழந்தைக்கு அணிவித்தேன். மனைவி அதை எடுத்துச் சுருட்டி தூரத்தில் எறிந்தவாறு என்னை முறைத்துப் பார்த்தாள். முகத்தை ஒரு மாதிரி "உம்”மென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் என்னவோ தப்பு செய்துவிட்ட மாதிரி தெரிந்தது எனக்கு. என்ன தப்பு நடந்துவிட்டது என்று யோசித்துப் பார்த்தேன். என்னவென்று எனக்கே தெரியவில்லை.

"அடியே... உனக்கு என்ன வேணும்?'' நான் கேட்டேன்: "நான் போய் பாரிஜாத மலர் கொண்டு வரணுமா? சொல்லு... வேணும்னா ஒண்ணோ ரெண்டோ கொண்டு வர்றேன்...''

மனைவி சொன்னாள்:

"எனக்கு என்னோட தங்க மோதிரம் வேணும். பிறகு... பந்தயத்துல ஜெயிச்சதுக்கு ஐம்பது ரூபா...''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவளிடம், "என்ன சொல்றன்னே புரியல!'' என்றேன். அவள் என்னையே முறைத்துப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில் கேட்டாள்:

"எனக்குப் பிறந்த குழந்தை ஆணா பொண்ணா?''

நான் சொன்னேன்:

"பொண்ணு!''

"ஹா...'' மனைவி சொன்னாள்.

"ஹோ...'' நானும் சொன்னேன்.

மனைவி கேட்டாள்:

"பிறகு...?''

"சின்னத்துணியை வாங்கிட்டு வந்து மகளுக்குப் போட்டேன். வெட்கத்தை மறைக்கணும்ல... பண்பாடு!''

"ஓ... நீங்களும் உங்க பண்பாடும்! எல்லாரும் ஆரம்பத்துல இப்படிப் பொறந்து வந்தவங்கதான்!''

"ஓஹோ... நீ சொல்றதும் சரிதான்!''

"உண்மையாகவே சரிதான்...'' மனைவி சொன்னாள்: "எனக்கு உடனே என்னோட தங்க மோதிரமும் ஐம்பது ரூபாயும் வந்தாகணும்...''

"அடியே... பந்தயத்துல ஜெயிச்சது யாரு? பிரசவம் ஆகுறதுக்கு முன்னாடி நீ என்ன பாட்டு பாடினே? ஞாபகத்துல இருக்கா? "முதல் குழந்தை ஆணா இருக்கணும் -அவன் அப்பாவைப் போல அழகா இருக்கணும்'னு நீ பாடினப்போ, நான் என்ன பாடினேன்? "முதல் குழந்தை பொண்ணா இருக்கணும்- அவ அம்மாவைப் போல பேரழகியா இருக்கணும்'னு பாடினேன்... அந்த டூயட்ல நீ ஆண் குழந்தைன்னு சொன்னே... நான் பெண் குழந்தைன்னு சொன்னேன்!''

"ஒரு புளும்கூஸ் டூயட்டை சாட்சியா கொண்டு வர்றீங்களா?'' மனைவி சொன்னாள்.

நான் சொன்னேன்: "இன்னொரு விஷயம். இந்த பிரசவ வேதனைன்றது உண்மையிலேயே ஒரு பெரிய விஷயம்தான். வேதனை கலந்த பூகம்பமும், சூறாவளியும், இடியும், பேய் மழையும்... அடடா எத்தனை பயங்கரம்! இத்தனை பயங்கர விஷயங்கள் நடக்குறப்போ பெண்கள் பல சம்பவங்களையும் முழுசா மறந்துடுவாங்க. நீ அப்படித்தான் மறந்து போயிட்டே. உனக்கு சாட்சி சொல்ல ஒருத்தர்கூட இல்ல. நம்ம ரெண்டு பேரும் ஏதாவது எழுதி கையெழுத்துப் போட்டிருக்கோமா என்ன? நான் சொல்றது தான் உண்மை. நீ பல விஷயங்களையும் தப்பா புரிஞ்சுக்கிட்டே! என்னென்னவோ நீ சொல்ற? இதுதான் பெண் தர்மமா?''

சம்பவம் குஸால்! என் மனைவியிடம் "இதுதான் பெண் தர்மமா?” என்று எதற்கும், எப்போதும் கேட்பது ஒரு விதத்தில் நல்லதுதான். என் மனைவிக்கு இப்போது இலேசாக சந்தேகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அவள் வலது கையை உயர்த்தி, "சலாம்... சரி... நீங்க போங்க'' என்று சொல்லியவாறு அங்கிருந்த பொருட்களுக்கு மத்தியில் இருந்து ஒரு பச்சை மாங்காயைக் கையில் எடுத்தாள்.

"புளிப்பான மாங்காய் திங்கணும்னு கொஞ்ச நாட்களாகவே நான் நினைச்சிருந்தேன். ஆனா, இது அதுக்கான சீஸன் இல்லைன்னு நினைச்சு உங்கக்கிட்ட சொல்லாம இருந்தேன். நான் சொல்லாமலே வாங்கிட்டு வந்ததற்கு நன்றி'' என்று சொல்லியவாறு என் மனைவி கையில் இருந்த மாங்காயை முகர்ந்து பார்த்தாள். "இதை கொஞ்சம் கழுவணும்.''

என் மனைவி ஒரு சணலைக் கொண்டு மாங்காயைத் துண்டாக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். நான் சொன்னேன்: "புளி மாங்காயைக் கழுவி இப்போ கருமுரான்னு கடிச்சு சாப்பிட வேண்டாம். வேணும்னா உங்க அம்மாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு அதுக்குப் பிறகு சாப்பிடு. இப்போ இனிப்பா ஏதாவது சாப்பிடு!''

நான் ஒரு ஆரஞ்சு பழத்தை உரித்து, அவள் கையில் தந்தேன். அவள் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

மனைவியின் கட்டிலில் கட்டப்பட்டிருக்கும் சணல் மிகவும் நீளமானது. அதன் மறுபக்கத்தில் அறுபது வயது இருக்கக்கூடிய ஒரு பெண் இருக்கிறாள். அவள் சமையலறைக்குப் பக்கத்தில் இருக்கும் ஸ்டோர் ரூமின் மூலையில் எப்போதும் தியானத்தில் இருப்பது மாதிரி அமைதியாக உட்கார்ந்திருப்பாள். காது கொஞ்சம்கூட கேட்காது. ஆனால், என் மனைவியும் அந்தக் கிழவியும் சர்வதேச விஷயங்கள் முதற்கொண்டு அவ்வப்போது பேசிக் கொள்வார்கள். ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு இருக்கிறது அல்லவா? அதை இரண்டு பேரும் சேர்ந்து விளக்குவார்கள். ஆனால், எனக்கோ அவர்களுடன் ஒரு வார்த்தைகூட பேசத் தெரியாது. நான் சொன்னேன்:

"நீ அவங்களைக் கூப்பிட்டு பழங்களை எடுத்து வைக்கச் சொல்லு. பச்சை மிளகாய் சட்னி தயாரிக்க உதவும்.''

நான் மகளுக்கும் மனைவிக்கும் ஒவ்வொரு முத்தம் தந்துவிட்டு, ஒருவித பரபரப்புடன் வெளியே வந்து, முன் பக்கமிருந்த மாமரத்தின் மேல் ஏறி தூரத்தில் இருந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தடியர்களான ஐந்து இந்துக்களும் வருகிறார்களோ?

சிறிது நேரம் சென்றபின் "மிஸ்ரு” என்று அழைக்கப்படும் முஸ்லிம் விரோதிகளான எறும்புகள் என்னைக் கடிக்க ஆரம்பித்ததால், வேறு வழியில்லாமல் மரத்தைவிட்டு நான் கீழே இறங்க வேண்டியதாயிற்று. என் தோட்டத்தின் ஒரு மூலையில் போய் யாருக்கும் தெரியாமல் நின்றேன். அங்கே ஒளிந்திருக்க இடமில்லை. என்ன செய்வது?

அவ்வளவுதான்- நான் அண்டர்கிரவுண்டாகி விட்டேன். ஒற்றையடிப் பாதை வழியே நடக்க ஆரம்பித்தேன். இந்துக்களின் வீடுகளுக்கு முன்னால் நடந்து செல்கிறபோது, குடையை வேண்டுமென்றே மறைத்துப் பிடித்தவாறு நடப்பேன். இல்லா விட்டால் வெளியே போவதே இல்லை. எப்போது பார்த்தாலும் வீட்டிற்குள்ளேயே இருக்க ஆரம்பித்தேன்.


என்னைத் தேடி வருபவர்களைப் பார்க்கக்கூடிய அறையைத் தாழ்ப்பாள் போட்டு பூட்டியாகிவிட்டது. என் மனைவி குழந்தை பெற்றிருப்பதைப் பார்ப்பதற்கு பெண்கள் வருவார்கள். எல்லா விஷயத்தையும் இந்துக்கள் தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். வேறு எங்காவது யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு வீட்டை மாற்றிவிட்டால் என்ன? மனைவி கேட்பாள்! ஆனால், இந்துக்கள் இதைத் தெரிந்திருப்பார்களா? அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படியே எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு நான் வீட்டிலேயே அமர்ந்திருந்தேன். மகளுடன் விளையாடியவாறு மனைவியின் அருகே

உட்கார்ந்திருந்தேன். அப்போது பகல் மூன்று மணி இருக்கும். சமையலறையில் தூய வெண்மை நிறத்தில், தாளின் அடர்த்தியில் "அரிசி பத்திரி” தயார் பண்ணுகிறேன். (கேரளத்தில் காலை நேர உணவிற்காக தயாரிக்கப்படும் ஒரு வகை டிஃபன் இது). ஸ்டைலாக ஆட்டுக்கறி சமைக்கிறேன். இந்த நேரத்தில் வெளியே யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம்! தொடர்ந்து ஒருவர் இல்லை- வீட்டின் ஐந்து பக்கங்களில் இருந்தும் ஐந்து பேர் உரத்த குரலில் கேட்கிறார்கள்.

"புஹோயி! குரு இங்கே இருக்காரா?''

இந்துக்கள்தான். அவர்கள் வீட்டைச் சுற்றிலும் நின்றிருக்கிறார்கள்!

என்ன செய்வது?

நான் என் மனைவியைப் பார்த்து மெதுவான குரலில் சொன்னேன்:

"அடியே... நான் இங்கே இல்லைன்னு சொல்லு. முக்கியமான விஷயமா எகிப்து நாட்டுக்குப் போயிருக்கேன்னு சொல்லுடி... இல்லாட்டி... சும்மா திருப்புணித்துறை வரை போயிருக்கேன்னு சொல்லு. ம்... வேண்டாம்டி. மதராஸ் போயிருக்கேன்னு சொல்லு...''

அப்போது வெளியே இருந்து சத்தம்-

"நாங்க உள்ளே வரணும். அம்மாவையும் குழந்தையையும் நாங்க பார்க்கணும்...''

"வரக்கூடாதுன்னு சொல்லுடி” என்று நான் கூறுவதற்கு முன்பே தடியர்களான அந்த ஐந்து இந்துக்களும் மானம், மரியாதையுடன் ஒரு முஸ்லிம் பெண் பிரசவம் ஆகி படுத்திருக்கும் அறைக்குள் வருகிறார்கள். அக்பர், ஹைதரோட் ஷாஜஹான்- கடவுளே, ரத்தம் கொதிக்கிறது.

நான் அவர்களை முறைத்துப் பார்த்தேன். ஆனால், அந்த இந்து தடியர்கள் என்னைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ள வில்லை. ஒருவன் கையில் ஒரு பெரிய தேன் பாட்டில் இருந்தது. அவர்கள் அதை என் மனைவியின் கையில் கொடுத்தார்கள். மனைவி அதை என்னிடம் தந்தாள். நான் அதன் மூடியைத் திறந்து, இரண்டு அவுன்ஸ் என் வாய்க்குள் ஊற்றி ருசித்துப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. அரை அவுன்ஸ் மனைவி வாயிலும் இரண்டு துளிகள் சூழந்தையின் நாக்கிலும் ஃபீட் செய்து, பாட்டிலை மூடி மேஜை மேல் வைத்தேன்.

இந்துக்களில் ஒருவன் குழந்தையைத் தூக்கினான். எல்லாரும் குழந்தையைச் சுற்றி நின்றிருந்தார்கள். அதையே வைத்த கண் எடுக்காது பார்த்தார்கள். பிறகு சொன்னார்கள்:

"சரிதான்... பெண் குழந்தை!''

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. கணவன் சொன்னபடி மனைவி கேட்டிருக்க வேண்டும். நான் கொடுத்த அந்த அழகான துண்டுத் துணியை ஒழுங்காக குழந்தையின் உடம்பில் அணிவித் திருந்தால், இந்த நிலை உண்டாகி இருக்குமா?

இந்துக்களில் ஒருவன் கேட்டான்:

"மகளுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?''

என் மனைவி  சொன்னாள்:

"ராஜகுமாரின்ற அர்த்தத்துலன்னு நினைக்கிறேன்- ஷாஹினா...''

"ஷாஹினா.'' இந்துக்கள் சொன்னார்கள்: "என்ன இருந்தாலும் சுல்தானோட மகளாச்சே. குழந்தையும் தாயும் நல்லா இருக்கணும். நல்ல உடல் ஆரோக்கியத்தோட எல்லா செல்வங்களையும் வாழ்க்கையில பெற்று நீண்ட காலம் வாழணும்.'' சிறிது நேரம் கழித்து மெல்லிய குரலில் சொன்னார்கள்.

"தந்தையும்தான்!''

அவர்கள் மேஜை மேல் இருந்தவற்றில் பெரியனவாகப் பார்த்து ஐந்து நேந்திர வாழைப்பழங்களை எடுத்து ஒவ்வொருவராக தோலை நீக்கிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். நான் சொன்னேன்:

"ஒரு முஸ்லிம் தந்தையோட ரத்தமும், நரம்பும், எலும்பும், சதையும் இந்த ஏத்தப் பழத்துல இருக்கு. அதைத்தான் இந்துக்களான நீங்க இப்ப சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க...''

இந்துக்கள் எதுவுமே பேசவில்லை. அவர்கள் பழத்தோலை மேஜை மேல் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்தார்கள். அதற்குப் பிறகு அங்கே இருந்த பெரிய கோரைப் பாயைச் சுவரோடு சேர்த்து விரித்து, இந்துக்கள் ஐந்து பேரும் சுவரில் சாய்ந்து அதில் உட்கார்ந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தார்கள். ஒரு தடிமனான இந்து விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு மற்ற இந்துக்களிடம் சொன்னான்:

"நாணிக்குட்டியை ஏமாற்ற முடியுமா? அவள் பார்த்துக்கிட்டு இருக்குறப்போ, குடையை மறைச்சுப் பிடிச்சுக்கிட்டு, குனிஞ்ச தலை நிமிராம வேறொரு ஆளு மாதிரி போறாரு ஒரு முஸ்லிம் தந்தை!''

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு இந்துக்கள் மெதுவான குரலில் சொன்னார்கள்.

"ம்ஹும்... பெண் குழந்தைதான்!''

அப்போது என் மனைவிக்கு ஒரு சந்தேகம். திடீரென்று ஒரு வெளிச்சம் வந்ததைப் போல அவள் கேட்டாள்:

"உங்கக்கிட்ட ஏதாவது பந்தயம் போட்டிருக்கிறாரா என்ன?''

நாணிக்குட்டியின் கணவனான தடிமனான இந்து சொன்னான்:

"ஆமா... பெண் குழந்தை பிறந்தால், முஸ்லிம் தந்தை அப்பிராணி இந்துக்களுக்கு தலா பத்து ரூபா தர்றதா பந்தயம். பொறக்குறது ஆண் குழந்தையா இருந்தால், அப்பிராணி இந்துக்கள்கிட்ட இருந்து முஸ்லிம் தந்தை ஐம்பது ரூபா வாங்கிக்கலாம்!''

"அதுக்காக...?'' என் மனைவி அவர்களைப் பார்த்துக் கேட்டாள். அவள் பார்வை என் முகத்தின் மேல் இருந்தது.

இன்னொரு தடிமனான இந்து சொன்னான்:

"முஸ்லிம் தந்தை பிரசவமான விஷயத்தைச் சொல்லி, அப்பிராணி இந்துக்கள்கிட்ட இருந்து ஐம்பது ரூபா வாங்கிட்டாரு. அதுதான் விஷயம்...''

என் மனைவி என்னையே பார்த்தாள். அவள் கேட்டாள்:

"பொறந்தது ஆண் பிள்ளைன்னு இவர் சொன்னாரா?''

"சே... அப்படிச் சொல்லல.''

"பிறகு என்ன சொன்னாரு?'' என் மனைவி குரலில் ஏதோ சந்தேகம்.

ராணிக்குட்டியின் கணவனும் தடியனுமான இந்து சொன்னான்:

"முஸ்லிம் தந்தை எங்களைத் தேடி வந்து ரொம்பவும் கவனமா இருக்குற மாதிரி சிரிச்சுக்கிட்டே, "மனைவி பிரசவமாயிட்டா”ன்னு சொன்னாரு. "இந்துக்கள் தோத்தாச்சு”ன்னும் சொன்னாரு. அப்பிராணி இந்துக்களான நாங்க இலேசா சிரிச்சிக்கிட்டே முஸ்லிம் தந்தை கையில ஐம்பது ரூபா தந்தோம்!''

கள்ள இந்துக்கள்! பணம் தந்தது உண்மை. ஆனால் அதை சிரித்துக்கொண்டு தரவில்லை. பிறகு ஏன் அப்படி பொய் சொல்ல வேண்டும்?

அங்கு ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இந்துக்கள் அப்பிராணி முஸ்லிமின் ஆப்பிளை எடுத்து கருமுரா என்று கடித்து, மென்று தின்று கொண்டிருக்கும் சத்தம் அங்கு பயங்கரமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

என் மனைவி என் விரலில் இருந்த தங்க மோதிரத்தைச் சுட்டிக்காட்டியவாறு கேட்டாள்:

"இந்த மோதிரத்தைப் பார்த்தீங்களா?''


"மோதிரத்தைப் பார்க்குறப்பவே கம்பீரமாக இருக்கு!'' இந்துக்கள் சொன்னார்கள்: "இது யாரோட கையில கிடந்தது? மோதிரத்துல ஒரு ராஜகளை தெரியுது. இது அசோகன் கையில் கிடந்ததா? இல்லாட்டி அக்பரோட கையிலயா? இல்லாட்டி... ஹாரூண் அல் ரஷீதோட கையில கிடந்தா?''

"என்னோட விரல்ல கிடந்தது.'' என் மனைவி சொன்னாள்: "என்னோட அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட தந்தை ஒரு ராஜாவை எதிரிகள்கிட்ட இருந்து காப்பாத்தினாரு. அதற்குப் பரிசா பல பொருட்களையும் மகாராஜா கொடுத்தாரு. அதுல ஒண்ணு இந்த மோதிரம். இதோட உண்மையான சொந்தக்காரி நான்தான். ஆனா, இவர் வந்து கழற்றி இவர் கையில போட்டுக்கிட்டாரு...''

"என்ன இருந்தாலும் சுல்தானேச்சே! பிறகு...''

என் மனைவி சொன்னாள்:

"எங்க ரெண்டு பேருக்குமிடையில் ஒரு சின்ன பந்தயம். நான் ஆண் குழந்தையைப் பெற்றால் என் விரல்ல இருந்த மோதிரத்தை இவருக்கு தந்திடணும். எனக்குப் பிறந்தது பெண் பிள்ளையா இருந்தால், எனக்கு இவர் ஐம்பது ரூபா தரணும். பிரசவம் ஆனவுடனே இவர் வந்து மோதிரத்தை என் விரல்ல இருந்து கழற்றுறப்போ, நான் சிரிச்சேன்...''

"அடியே... பொய்யா. சொல்ற!'' நான் சொன்னேன்: "நீ எங்கேடி சிரிச்சே? நான்தான் பார்த்தேனே! வியர்வை வழிஞ்சு தளர்ந்துபோய் நீ படுத்துக் கிடந்தது தெரியாதா?''

"ஏன்- மனசுக்குள்ளேயே நான் சிரிச்சுக்கக் கூடாதா?'' மனைவி கேட்டாள். நான் இந்துக்களைப் பார்த்துச் சொன்னேன்: "தர்ம கணக்குல ஒரு உபதேசம் சொல்றேன், கேட்டுக்கோங்க. பெண்களோட மட்டும் எந்தக் காலத்திலயும் வாக்குவாதம் பண்ணாதீங்க.''

"ரொம்ப சந்தோஷம்.'' இந்துக்களில் ஒரு வளைந்த பல்லைக் கொண்டிருந்தவன் சொன்னான்: "எல்லாரும் படுத்தாச்சா?''

இந்துக்கள் ஐந்து பேரும் பக்கத்தில் இருந்த சிமெண்ட் திண்ணையில் காலை நீட்டிப் படுத்தார்கள்.

நான் கேட்டேன்:

"என்ன செய்றீங்க?''

இந்துக்கள் சொன்னார்கள்:

"சத்யாக்கிரகம்! மரணம் வரை உண்ணாவிரதம். கோஷங்கள் நிறையவே கை வசம் இருக்கு. இந்துக்களுக்குக் கொடுக்க வேண்டியதை இந்துக்களுக்குக் கொடுக்கணும்... மனைவிக்குத் தர வேண்டியதை மனைவிக்குத் தரணும்... இங்கிலாப் சிந்தாபாத்!''

அப்போது மகள் ஷாஹினா சிணுங்கி அழ ஆரம்பித்தாள். நான் சொன்னேன்:

"மகளே, பயப்படாதே!''

இந்துக்கள் மணம் பிடித்தவாறு எழுந்து, சமையலறைப் பக்கம் போனார்கள்.

"மாமிசம் சமைக்கிறீர்களா? நல்லதாப் போச்சு! உண்ணாவிரதத்தை இப்போ மாத்திக்கிறதா முடிவெடுத்துட்டோம். மரணம் வரை உட்கார்ந்தவாறே சத்யாக்கிரகம்.'' இந்துக்களில் ஒரு தடியன் சொன்னான்: "ஆறரை மணிக்கு எங்களைப் பார்க்கலைன்னா எங்களோட பொண்டாட்டிகளும் நாற்பத்தியேழு குழந்தைகளும் இங்கே வந்திடுவாங்க. அவுங்களும் எங்க கூடவே இருந்திடுவாங்க!''

என் மனைவி என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொன்னேன்:

"அவுங்க சொன்னது காதுல விழுந்ததா? இந்துக்கள் ஒவ்வொருத்தருக்கும் சராசரி ஒன்பது சொச்சம் குழந்தைகள். இதுல பாவப்பட்டவங்களும் அறிவில்லாதவங்களும் முஸ்லிம்கள்தான்...''

"முன்னூறு பேரைக்கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு...''

பாவப்பட்டவனும் அறிவில்லாதவனுமான முஸ்லீமான நான் சொன்னேன்: "உலகில் உள்ளோரே! நம்முடைய பூமி இருக்குதே... இது லட்சம் வருடங்களுக்கு முன்பே இருக்கு. அப்போ எந்த அளவில் இருந்ததோ அதே பரப்பளவுதான் இப்போதும். ஆனா, மனிதர்களோட தொகை மட்டும் நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்குல ஆட்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே இருக்கு. சாப்பிடுறதுக்கு உணவு இல்ல. இருக்குறதுக்கு இடம் இல்ல. காடுகளும் வயல்களும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டேவருது.

எல்லாமே ஒரே நெரிசலா இருக்கு. அதை முஸ்லிம்கள் நினைச்சுப் பார்த்தாங்க. ரெண்டு பிள்ளைங்க நமக்கு இருந்தா போதும்ன்ற முடிவுக்கு அவுங்க வந்தாங்க. ஆனா, இந்துக்கள்...''

"இந்துக்கள்தான் இந்த விஷயத்தை முதல்ல சொன்னது!'' ஒரு இந்து சொன்னான்.

இன்னொரு இந்து சொன்னான்:

"கிறிஸ்துவர்கள்தான் இதை முதல்ல சொன்னாங்கன்னு நான் நினைக்கிறேன்!''

நான் சொன்னேன்:

"உண்மையை யார் சொன்னா என்ன? முஸ்லிம்கள் தாங்கள் எடுத்த முடிவுப்படி நடந்தாங்க. மனைவி ஒண்ணு, பிள்ளைங்க ரெண்டு... ஆனா,  இந்துக்களோ? நீதான் கேட்டியேடி.. ஒரு ஆளுக்கு ஒன்பது சொச்சும் குழந்தைங்க...''

என் மனைவி மெதுவாக எழுந்தாள். இந்துக்களை முறைத்துப் பார்த்தாள். நான் சொன்னேன்:

"அடியே... உனக்கு பிள்ளை பெத்த உடம்பு. நீ இந்துக்களை அடிக்கவோ, உதைக்கவோ செஞ்சா நல்லா இருக்காது. மெல்ல ரெண்டு கெட்ட வார்த்தைகளால அவுங்களைத் திட்டு. நான் அதை லவுட் ஸ்பீக்கர்ல சொல்ற மாதிரி உரத்த குரல்ல சொல்றேன். ஒன்பது சொச்சும் பிள்ளைங்க...''

ஒரு இந்து என் மனைவியைப் பார்த்து சொன்னான்:

"எங்க மேல வேணும்னே குற்றச்சாட்டு சொல்லணும்ன்றதுக்காக இதைச் சொல்றாரு. இவருக்கு இனியும் கல்யாணங்கள்

பண்ணிக்கணும்னு எண்ணம் இருக்கு. என்ன இருந்தாலும் சுல்தான் ஆச்சே!''

"கட்டிக்கிட்டு வரட்டும்.'' மனைவி சொன்னாள்: "ஒரு உலக்கையோட நான் கேட்டுக்குப் பக்கத்துல நிற்பேன். ஒவ்வொருத்தியா வரட்டும். எல்லாரையும் உலக்கையாலயே அடிச்சுக் கொல்றேன்!''

"இதுதான் பெண் தர்மம்ன்றதா?'' நான் ஆச்சரியத்துடன் சொன்னேன்: "கிருஷ்ண பகவான் இருந்த காலத்துல இந்த உலக்கையைப் பயன்படுத்துற பழக்கமெல்லாம் கிடையாது!''

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே என் மனைவி என்னவோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

"பாருக்குட்டி, தாக்ஷு, விஸ்வலட்சுமி, லலிதா, நாணிக்குட்டி- இதுல நாணிக்குட்டிக்கு மட்டும்தான் மூன்று குழந்தைகள் இருக்காங்க.''

நாணிக்குட்டியின் கணவனான தடியன் சொன்னான்:

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? ரெண்டாவது தடவை பிரசவம் ஆகுறப்போ நாணிக்குட்டி ரெட்டைக் குழந்தையா பெத்துட்டா!''

இந்துக்கள் பல நியாயங்களும் சொல்வார்கள். நான் சொன்னேன்: "அவங்க நினைச்சாங்கன்னா எப்ப வேணும்னாலும் ரெட்டைக் குழந்தை பெத்துக்கலாம்!''

மனைவி கேட்டாள்:

"அப்படின்னா இவுங்க சொல்ற முப்பத்தாறு குழந்தைங்க யாரு?''

நான் சொன்னேன்:

"இந்துக்களோட கள்ளச்சந்தையில பிறந்த குழந்தைங்க...''

"கள்ளச்சந்தை குழந்தைங்க!'' என் மனைவி இந்துக்களை வியப்புடன் பார்த்தாள். "அந்தக் குழந்தைகள் எங்கள் சகோதரியின் குழந்தைகள்” என்று அவர்கள் சொல்வதற்கு இடம் தராத வகையில் நான் சொன்னேன்:

"அடியே... அந்தக் கயிறைப் பிடிச்சு ஒண்ணு ரெண்டு தடவை நீ இழு. பிறகு அரை பத்திரியும், ஒரு சிறு துண்டு கறியும் எடுத்து வச்சு எல்லா இந்துக்களும் கொடுக்கச் சொல்லு. எல்லா விஷயமும் நல்லாவே முடிஞ்சிருச்சு. நாயர்களுக்கு அஞ்சு ரூபா வீதமும் திய்யர்களுக்கு நாலரை ரூபா வீதமும் கொடுக்குறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!''

என் மனைவி சொன்னாள்:

"பத்திரியும் கறியும் வயிறு நிறைய எல்லாருக்கும் கொடுக்குறேன். அதோட சாயாவும்...''


நான் சொன்னேன்:

"மகிழ்ச்சி...''

இப்படி எல்லா விஷயங்களும் ஒரு மாதிரி முடிவுக்கு வந்து கொண்டிருந்தபோது, இந்துக்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் ஏதாவது பிரச்சினையை உண்டாக்க வேண்டுமே! நாயர்கள் எதையோ நினைத்து சிரித்தார்கள். ஒரு நாயர் சொன்னான்:

"நீங்க சொன்னது சரிதான். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அரை ரூபா குறைவு. சரியான முடிவுதான்!''

நாணிக்குட்டியின் கணவனான தடியன் திய்யர் ஜாதியைச் சேர்ந்தவன். இதைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

"யாரைப் பார்த்து தாழ்ந்த ஜாதின்னு சொல்றீங்க? திய்யர்களான எங்களுக்கு முஸ்லிம் தந்தை தர வேண்டியது நாற்பது ரூபா!''

நாயர்கள் என்ன இளப்பமானவர்களா? ஒரு நாயர் சொன்னான்:

"அந்தக் காலத்துல கொலை அது இதுன்னு இருந்தவங்கதான். இருந்தாலும் நாயர்களான எங்களுக்கு முஸ்லிம் தந்தை தரவேண்டியது அறுபது ரூபா. வட்டிக்கு பதிலா வயிறு நிறைய பத்திரியும் கறியும்...''

என் மனைவி என்ன இலேசுப்பட்டவளா? அவள் சொன்னாள்:

"என்னோட மகள் ஷாஹினாவோட அப்பா எனக்கு தர வேண்டியது ஒரு தங்க மோதிரம்... அதோட ஐம்பது ரூபாவும்...''

இப்படித்தான் என் மனைவியும் இந்துக்களும் பந்தயத்தில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் முன்னிலையில் என் மனைவி கையில் தங்க மோதிரத்தையும், ஐம்பது ரூபாயையும் தந்தேன். இந்துக்களுக்கு பத்திரியும், கறியும், தேநீரும், சிகரெட்டும், நூறு ரூபாயும் கிடைத்தது. இந்துக்கள் ஒன்றாகக்கூடி எங்களை எதிர்த்து நின்றார்கள். அப்போது என் மனைவி கேட்டாள்:

"தங்க மோதிரத்தைச் சும்மா அணியவா?''

நான் சொன்னேன்:

"வேண்டாம்டி புல்லே!''

மகள் சொன்னாள்:

"குங்குரு!''

நான் சொன்னேன்:

"சரிதான் மகளே!''

மனைவி கேட்டாள்:

"மகள் என்ன சொல்லுது?''

நான் சொன்னேன்:

"கடவுள் இருக்கார்னு சொல்லுது!''

கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவர்களை யாராலும் வெற்றி பெற முடியுமா என்ன? சமீபத்தில் ஒரு நாள் நகரம் வரை போய்விட்டு வந்த நான் என் மனைவியைப் பார்த்து கேட்டேன்.

"அடியே... ரொக்கப்பணம்! உன்னோட அந்தப் பழைய மோதிரத்துக்கு என்னடி வேணும்?''

மனைவி சொன்னாள்:

"நூற்றியொரு ரூபா.''

"சரி...'' நான் சொன்னேன்: "சிரிச்ச முகத்தோட... கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டே அந்த மோதிரத்தைக் கழற்று... இந்தா பணம்...''

நான் நூற்றியொரு ரூபாயை என்னுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து அவள் கையில் தந்தேன். மனைவி மோதிரத்தைக் கழற்றி என்னிடம் தந்தாள். நான் அதை விரலில் மாட்டிக் கொண்டேன்.

"தங்க மோதிரம்... ஸ்டைலாத்தான் இருக்கு!''

தொடர்ந்து ஒற்றை நோட்டுகள் பலவற்றையும் எடுத்து மகளின் உடல்மேல் சிதற விட்டேன். மனைவி ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தவாறு, "மகள் கிழிச்சிடப் போகுது'' என்று சொல்லியவாறு நோட்டுகள் அனைத்தையும் பொறுக்கி எடுத்து எண்ணிப் பார்த்தாள்.

"முந்நூற்றி அறுபத்தஞ்சு ரூபா... ஆமா... இந்தப் பணம் எங்கே இருந்து கிடைச்சது?''

"கடவுள் கொடுத்தார். மகளோட பேர்ல வாங்கிய சீட்டுல ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ கிடைச்சது. இந்துக்களுக்கு ஒண்ணுமே கிடைக்கல. நாங்கள் ரேடியோவை விற்றோம். நானூற்றி எழுபத்தஞ்சு ரூபா கிடைச்சது. மீதி ரூபாய்க்கு நாங்க சாயா குடிச்சோம். இப்போ சொல்லு... யார்டி ஜெயிச்சது?''

மனைவி சொன்னாள்:

"நான்!''

"நீயா?'' நான் தங்க மோதிரத்தை விரலில் இருந்து கழற்றி, ஒரு நூலில் அதைக் கட்டி ஆட்டியவாறு சொன்னேன்: "பெயர்கூட மண்ணோடு மண்ணாக மறைந்துபோன ராஜாவே! உங்களோட ஆத்மாவுக்கு நிரந்தர அமைதி கிடைக்கட்டும்னு நாங்க வேண்டிக்கிறோம். உங்களின் ஆசீர்வாதத்தோடு மிகச் சாதாரணமான மனிதனான நான் இந்த மோதிரத்தை என்னோட மகளின் கழுத்தில் அணிவிக்கப் போறேன்!''

நான் அந்த மோதிரத்தை மகளின் கழுத்தில் கட்டித் தொங்க விட்டேன். தங்க மோதிரம் மகளின் நெஞ்சில் ஒளி வீசியது.

மகள் சொன்னாள்:

"டாட்டா.. குங்குரு..''

நான் சொன்னேன்:

"மகளே... குருகுரு...''

காலங்கள் கடந்தோடும். நானும் என்னுடைய பெயரும் கடந்து போன எத்தனையோ கோடி வருடங்களுக்குள் மூழ்கிக் கரைந்து போகும். அப்போது ஒரு பெண் கூறுவாள்: "என்னோட அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட, அம்மாவோட கழுத்துல அவங்க அப்பா கட்டித் தொங்கவிட்டதுதான் இந்தத் தங்க மோதிரம்!''

மங்களம்

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.