Logo

படுக்கையில் சிறுநீர் கழிப்பவன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7708
padukkaiyil siruneer kalippavan

ப்போது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும். என்னுடைய தம்பி அப்துல்காதருக்கு என்னைவிட ஒரு வயது குறைவு. அவன் செல்லப்பிள்ளையாக இருந்தான். அருமைக் குழந்தை. மிகவும் அதிகமாக ஏங்கி, ஆசைப்பட்டு, எத்தனையோ பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றின் பலனாகப் பிறந்தவன் நான். ஆனால், என்னால் நீண்ட காலத்திற்கு செல்லப் பிள்ளை என்ற பெயரை வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

அப்துல்காதரின் வலது காலில் ஒரு ஊனம் இருந்தது. அதன் மூலம் பரிதாப உணர்ச்சி முழுவதும் அவன் மீதுதான். அவன் தவறு செய்யாத உத்தமன். உலகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் பதில் கூற வேண்டியவன் நான்தான். செய்யாத தவறுகளுக்கு நான்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அப்துல் காதரும் நானும் பெரும்பாலும் படுப்பது வாப்பாவுடன்தான்- கட்டிலில். இப்படி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு பயங்கரமான சம்பவம் நடக்கிறது. சம்பவம் சுத்த சிறுநீரைப் பற்றியது! யாரோ படுக்கையில் படுத்து இரவில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

யார் அது?

அப்துல்காதரா, நானா?

ஒரு பிடியும் கிடைக்கவில்லை. யாரை அடிக்க வேண்டும்? உம்மாவும் வாப்பாவும் தீவிரமாக சிந்தித்தார்கள். ஒரு தும்பும் கிடைக்கவில்லை.

ஒருநாள் மாலை நேரத்தில் என்னைக் குற்றவாளியாக ஆக்கக்கூடிய அந்த கொடுமையான சம்பவம் நடைபெறுகிறது. எங்களுடைய வாசலில் இருக்கும் வெள்ளை மணல், பளபளா என்று மின்னிக் கொண்டிருக்கிறது. அதில்தான் நீதிபதிகளான யோக்கியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லாரும் இருக்கிறார்கள். வாப்பாவும் வாப்பாவின் நலம் விரும்பிகளும். மாதவன் நாயர், கிருஷ்ணன், அவுஸேப்பு மாப்பிள்ளை, சங்கரன் குட்டி, ஆனக்கார். பிறகு... வாப்பாவின் மைத்துனரும் என்னுடைய மாமாவும் பெரிய சண்டைக்காரரும் பயங்கரமான பேச்சாளரும் பெரிய பயில்வானுமான பாலசேரில் முஹம்மது. மாமாவின் மடியில் ஊனக்கால் உடையவ னும் செல்லப் பிள்ளையுமான அப்துல் காதர் சந்தோஷத்துடன் உட்கார்ந்திருக்கிறான்.

அந்த அவைக்கு வாப்பா என்னை அழைத்தார். எதற்கு என்று தெரியவில்லை. நான் சென்றேன். வாப்பா என்னைப் பிடித்து அருகில் நிறுத்தினார். பிறகு என்னுடைய வேட்டியைப் பிடித்து அவிழ்த்து முழுமையாக நிர்வாணமாக்கி நிற்கச் செய்தார். என்னுடைய இடுப்பில் வெள்ளி அரைஞாண் இருந்தது. அதில் வெள்ளி டாலர்கள் இருந்தன. அனைத்தும் பாசி படர்ந்து கறுத்துப் போயிருந்தன. வாப்பா சொன்னார்: “இவன் இரவு வேளையில் பாயில் படுத்து சிறுநீர் கழிக்கிறான். பார்த்தீர்களா? எல்லாம் கறுத்து பாசி பிடித்துப் போயிருக்கு.''

மாதவன் நாயர் மிகுந்த கம்பீரத்துடன் சொன்னார்: “இரவுப் பனி!''

நான் சொன்னேன்: “பாயில் படுத்து சிறுநீர் கழிப்பவன் அப்துல்காதர்தான். நான் இல்லை.''

அப்துல் காதர் சொன்னான்: “அண்ணன்தான்... நான் இல்லை.''

மூன்று பேர் பாயில் இரவுப் பொழுதில் படுத்து உறங்குகிறார்கள். அதிகாலை வேளையில் பாயில் சிறுநீர் காணப்படுகிறது. ஒரு ஆள் பாயில் படுத்து சிறுநீர் கழித்துவிட்டான். அது யார்? அது தான் பிரச்சினையே. நான்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

நான் உறுதியான குரலில் சொன்னேன்: “நான் இல்லை!''

மாமா கோபக் குரலில் கர்ஜிப்பதைப் போல நீதி வழங்கினார்: “இவன் இல்லை; நீதான்!''

எல்லாரும் என்னைப் பார்த்தார்கள். படுக்கும் பாயில் படுத்து சிறுநீர் கழிக்கும் கேடு கெட்டவன்! நான் உம்மாவை அழைத்தேன். உம்மா அழைப்பைக் கேட்கவில்லை. எல்லாரும் சேர்ந்து நீதி வழங்கி விட்டார்கள். பாயில் படுத்து சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டுமென்றால், இரவுப் பனி இல்லாமல் போக வேண்டுமென்றால் ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கிறது. அதை நான் செய்ய வேண்டும். அதாவது:

“ஆண் யானையின் காலுக்கு நடுவில் நுழைய வேண்டும்!''

அப்படி நீதி வழங்கிவிட்டு கூட்டம் பிரிந்தது. நினைத்துப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழவில்லை. நான் பார்க்கும்போது ஆண் யானை மண்ணைத் தும்பிக்கையால் எடுத்து வெளியே போடுகிறது. பயங்கரமாக வெளுத்துக் கூர்மையாக இருக்கும் கொம்புகள்! இரக்கமே இல்லாத குரூரமான கண்கள்!

நான் உம்மாவின் அருகில் சென்று பயத்துடன் சொன்னேன்:

“உம்மா, கேள்விப்பட்டீர்களா? நான் ஆண் யானையின் காலுக்கு அடியில் நுழையணுமாம்!''

“நீ படுத்திருக்கும்போது சிறுநீர் கழித்தாய் அல்லவா?'' உம்மா கேட்டாள்.

நங்ஙேலி சொன்னாள்: “தங்க மகனுக்கு இரவுப் பனி இருக்கு.''

வாப்பா சொன்னார்: “நீ படுத்து சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டுமென்றால், யானையின் அடியில் நுழையணும்.''

“பெண் யானையின் அடியில் நுழைந்தால் போதுமா?''

“போதாது. ஆண் யானையின் அடியில் நீ நுழையணும். நீ ஆணாக்கும்.''

சரி. அப்படியென்றால் எல்லாவற்றையும் முடிவு செய்து நீதி வழங்கி முடித்துவிட்டார்கள். இரவில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பவன் நான்தான். ஆண் யானையின் கால்களுக்கு நடுவில் நுழைய வேண்டியவன் நான்தான்.

நான் நுழைய வேண்டிய யானை காட்டு யானையாக இருந்தது. அடர்ந்த காட்டில் முழுமையான சுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். அவனைப் பிடித்துப் பழக்கினார்கள். முழுமையாகப் பழக்கவில்லை. "இடப் பக்கம்... யானை' என்று கட்டளை இட்டால், அவன் வலப் பக்கம் திரும்புவான். இல்லாவிட்டால் கேட்காததைப் போல நிற்பான். யானைக்காரன் கொம்பைப் பயன்படுத்தி இழுப்பான். அவன் பயங்கரமான சத்தத்துடன் கத்துவான். எனினும், நான் அவன்மீது ஏறியிருக்கிறேன். யானைக்காரன் என்னைப் பிடித்திருந்தான். பயந்து நடுங்கி அவன்மீது நான் சிறுநீர் பெய்ததாக யானைக்காரன் சொன்னான். அது பச்சைப் பொய். ஆனால், அதை யானை கேட்டது. அவன் ரசிப்பானோ என்னவோ!

யானைக்கு அடியில் நான் நுழைய வேண்டிய விசேஷ நாள் வந்து சேர்ந்தது. ஆண் யானையைக் குளிப்பாட்டி கொண்டு வந்து நிறுத்தினார்கள். என்னையும் குளிப்பாட்டினார்கள். அதாவது நானும் ஆண் யானையும் ஒன்றாக ஆற்றில் குளித்தோம். எனக்கு புதிய வேட்டியும் புதிய சட்டையும் புதிய தொப்பியும் அணிவித் தார்கள்.

நான் முழுமையாக யானையைப் பார்த்தேன். கருப்போ கருப்பு. பருமனான உருண்டை மலை. நான்கு கால்களும் வாலும் தும்பிக் கையும் கொம்புகளும்... பயங்கரமான பகையை வெளிப்படுத்தும் கண்கள்... எனக்கு மூச்சு அடைப்பதைப் போல தோன்றியது. யானை என்னை மிதித்துக் கொன்றுவிடுமோ? தும்பிக்கையால் சுற்றிப் பிடித்து வாய்க்குள் போட்டு என்னை மென்று தின்றுவிடும். வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் ஓடி விடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எங்கு போவேன்? எப்படிப் போவேன்?

சுற்றிலும் ஆட்கள். ஒரு பக்கம் முழுவதும் என்னுடைய நண்பர்கள்.


யானையைத் தாண்டி ஓலைக் கீற்றில் வாப்பா, மாமா, மாதவன் நாயர், சங்கரன் குட்டி, கிருஷ்ணன், அவுஸேப் மாப்பிள்ளை -எல்லா ரும் உட்கார்ந்து பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாமா வின் மடியில் எப்போதும் போல அப்துல் காதர் உட்கார்ந்திருக்கிறான். அவனுடைய வாயிலும் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு பழம்.

வாப்பா பெரிய ஒரு குலை பாளேங்கோடன் பழத்தைக் கொண்டு வந்து யானைக்கும் யானைக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத் தார். எனக்கு மட்டும் தரவில்லை. கால் குலை பழம் வாப்பாவிற்கு அருகில், அப்துல் காதருக்கு அருகில் ஓலையில் இருக்கிறது. நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்: “வாப்பா... எனக்குப் பழம் தரவில்லை.''

“இங்கு வச்சிருக்குடா.'' வாப்பா சொன்னார்: “நீ யானையின் அடியின் வழியாக வா.''

இந்தப் பக்கம் முழுவதும் பெண்கள். என்னுடைய உம்மா, தங்கைமார்கள், உம்மாவின் உம்மா, அத்தை, நங்ஙேலி, அவுஸேப் மாப்பிள்ளையின்- சங்கரன் குட்டியின்- கிருஷ்ணனின் மனைவி மார்கள்... பெண்களின் கூட்டத்தில் நத்தை தாமுவும் இருந்தான்.

உம்மா சொன்னாள்: “பயப்படாதடா.''

பயத்தைவிட பழம் கிடைக்காததால் உண்டான கோபமும் வருத்தமும்தான் அதிகமாக இருந்தன. அப்துல் காதர் குப்புகுப்பு என்று பழத்தைத் தின்று கொண்டிருந்தான். நான் பெண்களுக்கு அருகில் யானையின் இந்தப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன். கோபமும் பதைபதைப்பும் பயமும்... கால்கள் இரண்டையும் பூமி விழுங்கிவிட்டதைப் போல இருந்தன. அசையவில்லை. வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தேன். வாயில் நீர் இல்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுகிறது. கஷ்டம்... தலை சுற்றுகிறதோ? கண்களின் பார்க்கும் சக்தி இல்லாமல் போய்விட்டதோ? இல்லை. கருகருத்த வாசல் வழியாகப் பார்ப்பதைப் போல யானையின் அடிப்பகுதியின் வழியாக வாப்பாவையும் மற்றவர்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பழக்குலையையும். அப்துல் காதர் கைகளில் இருந்த இரண்டு பழங்களையும் விழுங்கி முடித்துவிட்டான். மீண்டும் அவன் பழத்தை உரிக்கிறான். நான் அழைத்துச் சொன்னேன்:

“வாப்பா... அவன் அந்தப் பழங்கள் முழுவதையும் தின்று விடுவான்.''

வாப்பா பழக்குலையை எடுத்து எனக்கு நேராக நீட்டினார். மாமா பயங்கரமான குரலில் கட்டளையிட்டார்.

“இங்கே வாடா!''

நான் அசையவில்லை.

கிருஷ்ணனின் மனைவி சக்தி சொன்னாள்:

“அந்த கால்களுக்கு நடுவில் நுழைந்து அந்தப் பக்கம் போ. உனக்கு வெட்கமாக இல்லையா? கல்யாணம் பண்ண வேண்டிய வயசு வந்தி டுச்சு. அதற்குப் பிறகும் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறது...''

“படுத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது நான் இல்லை. அப்துல் காதர்தான்.''

“நீதான்!'' உம்மா சொன்னாள்.

நங்ஙேலி சொன்னாள்: “ஏன் பயப்படுறே? நான் இங்கே நிற்கிறேன்ல?''

அப்போது அவனுடைய கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டும் போல எனக்குத் தோன்றியது.

உம்மா சொன்னாள்:

“மகனே, பிஸ்மி சொல்லிட்டுப் போ.''

நான் பிஸ்மி சொன்னேன். வாப்பா பழக்குலையை நீட்டிக் கொண்டிருந்தார். பயங்கரமான கோபம். யானையின் பலமான வாசனை. அப்துல்காதர் குமுகுமா என்று பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் பழங்கள் முழுவதையும் சாப்பிட்டு விடுவான். நான் கனவில் நடப்பதைப் போல நடந்தேன். யானையின் தாங்கிக் கொள்ள முடியாத நாற்றம். நான் குகைக்குள் செல்வதைப் போல யானையின் கால்களுக்கு நடுவில் நுழைந்து அந்தப் பக்கத்தை அடைந்தபோது என்னுடைய தலையில் சிறுநீர் கழிப்பதற்கு யானை ஒரு வீணான முயற்சியைச் செய்தது. யானை மிகவும் தாமதமாக சிறுநீர் கழிக்கத் தொடங்கியது. யானையின் சிறுநீர் என்னுடைய தலையில் விழவில்லை.

மக்கள் சந்தோஷத்துடன் சத்தம் போட்டார்கள். வாப்பா என்னை அள்ளி எடுத்தார். நான் கைகளையும் கால்களையும் உதறி, கீழே இறங்கினேன். பழக்குலையைக் கையில் எடுத்தேன். அப்துல் காதரின் கையில் இருந்த பழங்களைப் பிடுங்கினேன். பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு பழமாகக் கொடுத்தேன். கணக்கு காட்டித் தரும் சினேகிதிக்கும் ராதாமணிக்கும் ஆளுக்கு இரண்டு பழங்கள் வீதம் கொடுத்தேன். நாங்கள் பழத் தோல்களை ஒன்று சேர்த்து ஒரு உருண்டையாக ஆக்கி யானைக்குக் கொடுத்தோம். கொடுத்தவன் யானைக்காரன்.

யானையின் கால்களுக்கு நடுவில் பயமே இல்லாமல் நுழைந்த யோக்கியன்! மகான்!

நான் அப்படி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கால்களுக்கு நடுவில் நுழைந்த பிறகு நான் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவில்லை என்று உம்மா கூறுகிறாள். காரணம்- நான் படுப்பது வாப்பாவுடன் அல்ல. உம்மாவுடன். அப்படி அனைத்தும் நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பாதி இரவு வேளை யில், "அய்யோ' என்றொரு அழுகைச் சத்தம் கேட்டது. வாப்பா அப்துல் காதரை மனம் போனபடி அடித்துக் கொண்டிருக்கும் கோலாகலம். தீப்பெட்டியை உரசி விளக்கைப் பற்ற வைத்துப் பார்க்கும்போது, அப்துல்காதர் வாப்பாவின் படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறான்!

அப்படியென்றால் இவ்வளவு காலமாக வாப்பாவின் படுக்கையில் தொடர்ந்து சிறுநீர் கழித்த குற்றவாளி யார்? இவ்வளவு காலமும் பழி சுமத்தப்பட்ட நிரபராதி யார்? உலகம் போகும் போக்கைப் பார்த்தீர்களா? ஆண் யானையின் கால்களுக்கு நடுவில் நுழைந்திருக்க வேண்டியவன் அப்துல் காதர்தானே? ஆனால், அப்துல் காதர் இரண்டு கைகளாலும் நெஞ்சில் அடித்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறான். செல்லப் பிள்ளை அழுது கொண்டே சொன்னான்:

“சிறுநீர் கழித்தது நான் இல்லை. அண்ணன் மறைந்து வந்து சிறுநீர் பெய்துவிட்டுப் போய்விட்டார்.''

அவன் தவறு செய்தவன் அல்ல!

“உண்மையாக இருக்கும்.'' உம்மா சொன்னாள்.

உலகத்தின் போக்கைப் பார்த்தீர்களா? நிரபராதிகள் தண்டிக் கப்படுகிறார்கள். குற்றவாளி நான்! சமீபத்தில் பார்த்த சிறுநீரான சிறுநீரைக் கழித்த அப்துல் காதர் பரம யோக்கியன்!

சிறுநீர் பற்றிய வழக்கு ஆதாரம் எதுவும் கிடைக்காமல் கிடக்கிறது. உம்மாவிற்கும் வாப்பாவிற்கும் சந்தேகம் இருந்தது. குற்றவாளி நானா, அப்துல் காதரா? எது எப்படி இருந்தாலும், மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்திலும் இரண்டு கருத்துகளையும் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்துல் காதர் பலருக்கும் பலவற்றையும் கொடுத்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். நத்தை தாமு அணி சேரா கொள்கையைப் பின்பற்றி னான். அவன் சொல்லித் தந்தான்:

"படுக்கையறையில் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது நானோ அப்துல் காதரோ அல்ல... வாப்பாதான்!'

அதைக் கேட்டு நங்ஙேலியும் சங்கரன் குட்டியும் சேர்ந்து நத்தை தாமுவை வயல் முழுவதும் விரட்டி மனம் போனபடி அடித்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.