
நீண்டு நிமிர்ந்து, மார்பை முன்னோக்கித் தள்ளிக் கொண்டு, "நான் இனிமேலும் அடிப்பேன்" என்பதைப் போல நடந்து கொண்டிருக்கும் ஆணுக்குப் பின்னால், "ஓ... அதற்கு நான் எதுவும் சொல்லலையே!’’ என்பதைப் போல, அவனுடன் சேர்ந்து நடக்க படாதபாடு படும் ஊனமுற்ற காலைக் கொண்ட பெண்ணைப் பார்த்து பூங்காவில் அமர்ந் திருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.
காதலனை முதல் முறையாகப் பார்த்த வேளையின் ஞாபகத்திற்காக, மரணம் வரை அவள் ஊனமுற்ற பெண்ணாகவே வாழ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கும் கேலிக் கூத்தை நினைத்துதான் அவர்கள் சிரித்தார்கள். சிரித்தவர்கள் பெண்கள். ஆண்கள் மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினார்கள். அவ்வளவுதான். ஆண்களுடைய அச்செடுத்தாற் போன்ற சாயலைக் கொண்டிருந்தது சூரியனும். தங்க நிற கிளைகளின் வழியாக என்பதைப் போல, சூரியன் மேற்கு திசை வானத்தின் விளிம்பில் தகதகத்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக பூங்கா மஞ்சள் வெளிச்சத்தில் மூழ்கிக் கிடந்தது. மொத்தத்தில்- அழகான ஒரு ஓவியத்தில் இருப்பதைப் போல, பூங்கா ஒரு வகையான சலனமற்ற தன்மையுடன் இருந்தது. அதாவது- முன்னால் நடந்து கொண்டிருந்த ஆணும், பின்னால் நடந்து கொண்டிருந்த நொண்டிக்கால் பெண்ணும் மட்டுமே அசைவு உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். ஆண் நல்ல பலசாலியாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். பெண் பார்ப்பதற்கு அந்த அளவிற்கு அழகியாக இல்லாமலிருந்தாள். எனினும், முழு உலகிற்கும் என்று வைத்திருந்த ஒரு புன் சிரிப்பு அவளுடைய முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. ஆணுக்கு நிகராக நடப்பதற்கு அவள் கடுமையாக முயற்சிப் பதைப் பார்த்தவாறு பூங்காவின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த திருமணமாகாத இரண்டு ஆசிரியைகளில் இளம் கிழவி, தன்னுடைய தோழியான கவலையில் இருந்த பெண்ணிடம் கேட்டாள்:
“அந்த ஊனமுற்ற காலைக் கொண்ட பெண்ணின் நடையைப் பார்த்தியா? அந்தப் பிணம் யார்?''
கவலையுடன் இருக்கும் பெண் சொன்னாள்:
“அது நம்முடைய அந்த மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகள்.''
தேன் ஊறும் வார்த்தைகளில் இளம் கிழவி விசாரித்தாள்:
“அந்த தங்க நிற மனிதன்?''
கவலையில் இருக்கும் பெண் நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னாள்:
“அவளுடைய கணவன்.''
இளம் கிழவிக்குப் பிடிக்கவில்லை.
“அந்த பொன் நிற மனிதனுக்கு அந்த ஊனமுற்ற காலைக் கொண்ட பெண்ணைத் தவிர, வேறு யாரும் கிடைக்கலையா?''
“அந்தப் பொன் நிற மனிதன்தான் அவளுடைய காலை அடித்து ஒடித்ததே!''
“பரம துரோகி!''- இளம் கிழவிக்குக் கோபம் வந்தது.
“அந்த ராஸ்கல் யார்?''
“அவர்...''
“அவரா? அவன்... அவன்...''
“ஒரு கவிஞன்... அவனுடைய கவிதைகள்மீது அவளுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அவற்றை வாசித்து அவள் அவன் மீது காதல் கொண்டுவிட்டாள். அவன் உலகத்தரம் கொண்ட மிகப் பெரிய கவிஞன் என்று அவள் கூறித் திரிந்தாள்...''
“உலகப் பெரும் கவிஞன்! ராஸ்கல்! இந்த ஆண் ராஸ்கல்கள் எழுதும் கவிதைகளைப் பெண்களாகிய நாம் வாசிப்பது நல்லதே அல்ல. இனிமேல் எந்தச் சமயத்திலும் அவற்றை வாசிக்கக் கூடாது. தெரியுதா? எனக்கு அந்த துரோகி மீது காதல் உண்டாக இருந்தது. ராஸ்கல்! அடடா! அவன் அந்த அப்பிராணி பெண்ணின் காலை அடித்து ஒடித்து விட்டான் அல்லவா? அவனை அரசாங்கம் ஏன் தூக்கு மரத்தில் தொங்க விட்டுக் கொல்லாமல் இருக்கிறது?''
“அந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது. அவளுடைய தந்தை அந்த மனிதன்மீது மிகுந்த விருப்பம் கொண்டவராகவும் வழிபடக் கூடியவராகவும் இருந்தார். அதனால் விஷயங்கள் எதுவும் வெளியே தெரியாமலே நின்றுவிட்டன. பிறகு.... அந்த ஊனமுற்ற பெண்ணை அந்த மனிதன் திருமணம் செய்து கொண்டான் அல்லவா? பிறகென்ன?''
“அப்படின்னா திருமணத்திற்கு முன்பே அந்த மிகப் பெரிய பாவி அந்தக் குழந்தையின் காலை அடித்து ஒடித்திருக்கிறான், அப்படித்தானே?''
“ஆமாம்...''
“என்ன காரணத்திற்காக? அந்த பிச்சைக்காரப் பயலைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவள் சொல்லியிருப்பாள்!''
“அப்படி எதுவும் இல்லை. அவளுக்கு அந்த மனிதன்மீது அளவற்ற காதல் இருந்தது என்று நான்தான் சொன்னேனே! அந்த மனிதனை அவள் பார்த்ததில்லை. நானும் மற்ற மாணவிகளும்- நாங்கள் யாருமே பார்த்ததில்லை. அவன் தான் அச்சடித்திருந்த ஒரு புத்தகத்தை கட்டாகக் கட்டி சுமந்து கொண்டு, ஊர்கள்தோறும் விற்பதற்காக நடந்து திரிந்தபோது, இந்த ஊருக்கும் வந்தான். தலைமை ஆசிரியரின் அழைப்பும் இருந்தது. அவன் வந்து எங்களுடைய பள்ளிக்குள் நுழைந்தான். பார்த்த நிமிடத்திலேயே அவன் ஒரு கவிஞன் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. மந்திர வித்தைகள் செய்யக்கூடியவனாக இருப்பான் என்று நாங்கள் முதலில் நினைத்தோம். பிறகு நினைத்தோம்- ஏதாவது துணி வியாபாரியாக இருப்பானோ என்று. அவன் ஒரு பெரிய தாளால் ஆன கட்டை ஒரு பையனைச் சுமக்கச் செய்து பள்ளிக் கூடத்தின் வாசலில் வைத்துவிட்டு, அதன்மீது ஏறி, கால்மீது காலைப் போட்டுக் கொண்டு அளவற்ற மிடுக்குடன் உட்கார்ந்து, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டிருந்தான். எங்கள் யாரையும் அவன் காதல் பார்வையுடன் பார்க்கவில்லை...''
“ராஸ்கல்! ஆயிரம் ராஸ்கல்!''
“நாங்கள் அந்த மனிதனுக்கு அருகில் போய் ஒருவரோ டொருவர் மெதுவான குரலில் பேசிக் கொண்டபோதும், அவன் பார்க்கவில்லை...''
“அடடா! ப்ளடி ராஸ்கல்! லட்சம் ராஸ்கல்!''
“அவனுடைய நடவடிக்கையையும் மிடுக்காக அப்படி உட்கார்ந்திருந்ததையும் பார்த்த போது எங்களுக்கு கோபம் வந்துவிட்டது. "கட்டப்பட்டு இருந்தது அப்பளமாக இருக்கும்' என்று தலைமை ஆசிரியரின் மகள் உரத்த குரலில் கூறியபோது "உள்பாவாடைக்கான துணிகளாக இருக்கும்' என்று நான் சொன்னேன். மற்ற மாணவிகளும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். அந்த ஆள் எங்களையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். கிண்டல் கலந்த குரலில் "புத்தகங்கள்....”என்று சொன்னான். அதைக் கேட்டு நாங்க எல்லாரும் சிரித்துவிட்டோம். அவனுடைய முகம் வெளிறிப் போய் விட்டது. எங்களுக்கு உற்சாகம் வந்து விட்டது. நாங்கள் அவனுடைய முகத்தைப் பற்றியும் மீசையைப் பற்றியும் ஒவ்வொரு குறைகளைச் சொல்லி "கிலு கிலா' என்று சிரித்தோம். அவன் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும், ஒரு பவுண்டன் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்தான். அது அப்படியே எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அவன் என்ன எழுதினான் தெரியுமா? "பெண்களின் சிரிப்பும் அழுகையும்’’என்று தலைப்பிட்டான். பிறகு... "பெண்களுடைய சிரிப்பிற்கும் அழுகைக்கும் எந்தவொரு காரணமும் தேவையில்லை.
வயதை அடைந்திருக்கும் பெண்கள் எதையாவது கேட்டால், உடனே சிரிப்பார்கள். தந்தையோ கணவனோ- யாராவது மரணத்தைத் தழுவி விட்டார்கள் என்று கேட்கும்போதுகூட பெண்களுக்கு முதலில் வருவது வெறும் சிரிப்புதான். ஆனால் அது சிரிக்கக் கூடிய செய்தி அல்ல என்பதே பிறகுதான் அவர்களுக்குத் தோன்றும். உடனே அழ ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப் பார்க்கும் போது- பெண்களுடைய சிரிப்பிற்கும் அழுகைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, உலகமே?' என்று எழுதினான். அதற்குப் பிறகும் அவன் எழுதினான்...''
“அரக்கன்! அயோக்கியன்! கேடி ராஸ்கல்! அவனை நீங்க யாரும் எதுவுமே செய்யலை... அப்படித்தானே? பிறகு...''
“ம்... நான் அவனுடைய முதுகில் மையைத் தெளித்தேன். ஒன்றிரண்டு மைத் துளிகள் அவனுடைய புத்தகத்திலும் விழுந்தன. வேட்டியிலும் விழுந்தன. அவன் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். நாங்கள் ஓடினோம். ஆனால், அந்தத் துரோகி என்னுடைய புடவையை எட்டிப் பிடித்துவிட்டான். என்னுடைய பவுண்டன் பேனாவைப் பிடுங்கி தூரத்தில் எறிந்தான். அதைப் பார்த்து மற்றவர்களும் அருகில் சென்று அவனுடைய முகத்திலும் பிற இடங்களிலும் மையைத் தெளித்தார்கள். அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல என்னுடைய கையைப் பிடித்தான். நான் அழுது விட்டேன். மற்றவர்கள் அவனைக் கடித்தார்கள், கிள்ளினார்கள், அடித்தார்கள். அவனுடைய பின்பாகத்தில் மிதித்த அப்பிராணிகளான ஆறு மாணவிகளின் தலைமுடியை அவன் பிடித்து இழுத்தான். மற்ற மாணவிகளின் பின்னால் பிசாசைப் போல ஓடினான். கையில் கிடைத்தவள் தலைமை ஆசிரியரின் மகள்தான். அவன் அவளை எட்டிப்பிடித்து வாசலில் வீசி எறிந்தான். அப்படி விழுந்ததில்தான் கால் ஒடிந்து விட்டது...''
“மிகப் பெரிய பாவி...! பிறகு..?''
“அந்தச் சம்பவம் நடந்த உடனேயே தலைமை ஆசிரியரும் ஆசிரியைகளும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். நடந்த சம்பவங்களை அவன் விளக்கிச் சொன்னான். எந்தச் செயலுக்கும் தான் குற்றவாளி அல்ல என்றும் சொன்னான்.''
“ராஸ்கல்! பரம துரோகி! அவன் குற்றவாளி அல்ல என்று சொன்னானா? அப்பிராணியான சின்னப் பொண்ணுங்களை நோக்கி மனம்போனபடி பாய்ந்த அரக்கன்! அயோக்கியன்! துரோகி! அடடா! அவன் கவிஞன் அல்லவா? அவனுக்கு பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதா? அவன்... ராஸ்கல்! பிறகு...?''
“பிறகு... தலைமை ஆசிரியர் சமாதான சூழ்நிலையை உண்டாக்கினார். உடனே பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். உடன் அந்த ஆளும் போனான்.''
“துரோகி! எதற்கு?''
“படியில் இருந்து விழுந்து விட்டதாகக் கூறினார்கள். ஒரு மாத காலம் மருத்துவமனையிலேயே இருந்தாள். இரவும் பகலும் அவனும் அவளுடன் இருந்தான். "அன்புக் காதலியின் வீழ்ச்சி' என்று அதைப் பற்றி அவன் ஒரு பூடக காவியத்தையும் இயற்றினான். அதை நூலாகக் கொண்டு வந்தபோது, அதை அவளுக்கு சமர்ப்பணம் செய்திருந்தான்.''
“ராஸ்கல்! அவனுடைய மிடுக்கு! பிறகு... அந்த அப்பிராணி சின்னப் பொண்ணு அதற்கும் சம்மதித்து விட்டாள், அப்படித்தானே?''
“சம்மதித்து நடக்குறப்போ,. அந்த ஆள் அவளைத் திருமணமும் செய்து கொண்டான். அது முடிந்து, இப்போ நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அவன் எப்போதாவது அவளை...''
“அதற்கும் அவள் சம்மதிக்கிறாள், அப்படித்தானே?''
“அதற்கு அவள் கூறுகிறாள்- "மனைவியை அடித்து உதைக்காத கணவன், மனைவி மீது அன்பே இல்லாதவன்' என்று. "கணவர்கள் மனைவியின் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து அவர்களை உதைக்கவோ அடிக்கவோ செய்வது- ஒரு வகையில் பார்க்கப் போனால், அளவற்ற அன்பு காரணமாகத்தான்' என்று அவள் கூறுகிறாள். அன்பு கொண்ட கணவனே பெண்களை வேதனைப் படுத்து வார்கள்!''
இளம் கிழவி சற்று நேரம் கழித்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னாள்:
“உண்மையாக இருக்கலாம். ஆனால், நாம் எப்படி சோதித்துப் பார்ப்பது? ஒரு கணவன் வருவது எனக்கும் விருப்பமான ஒரு விஷயம்தான். ஆனால், என்னுடைய காலை அடித்து ஒடிப்பது என்பது...''
“இருந்தாலும்... கணவன் என்ற ஒருவன் இருப்பான் அல்லவா?''- கவலை நிறைந்த பெண் நீண்ட பெருமூச்சை விட்டாள்: “நம்முடைய தலை முடியைக் கொத்தாகப் பிடித்து, நம்முடைய முகத்தில் அடிப்பதற்காவது ஒரு ஆள் இருக்கிறான் என்பது நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு விஷயம் அல்லவா?''
அவர்கள் பொறாமையுடன் பார்த்தார்கள். அப்போதும் அந்த மனைவியும் கணவனும் பூங்காவின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். "நான் இனிமேலும் அடிப்பேன்' என்பதைப் போல நீண்டு நிமிர்ந்து முன்னால் கணவனும், "அதற்கு நான் எதுவும் இப்போ சொல்லலையே!” என்பதைப் போல பின்னால் மனைவியும்...