Logo

அன்புள்ள தியோ

Category: வாழ்க்கை வரலாறு
Published Date
Written by sura
Hits: 7441
anbulla-theo

ஆரம்ப வருடங்கள்

தி ஹேக், ஜனவரி 28, 1873

ன்புள்ள தியோ,

உன் கடிதம் மிகவும் விரைவாக கிடைத்தது குறித்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ப்ரஸ்ஸல்ஸ உனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் அங்கு தங்குவதற்கு ஒரு அருமையான இடத்தைப் பிடித்து விட்டதாகவும் எழுதியிருந்தாய். அதைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். நாம் நினைத்ததைப் போல் சில நேரங்களில் நடக்காமல் போய் விடலாம். அதற்காக மனம் தளர்ந்து விடாதே. எல்லா விஷயங்களுமே நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இரு. யாருக்குமே அவர்கள் நினைத்த வண்ணம் ஆரம்பத்திலேயே நடந்துவிடுமா என்ன?

ஹெய்ன் அங்கிளுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவாக குணமாக வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதே நேரத்தில் தியோ, அவர் ஒருவேளை குணமாகாமலே போய்விடுவாரோ என்ற பயமும் என் மனதில் இல்லாமல் இல்லை. சென்ற கோடை காலத்தின்போது அவர் நல்ல உற்சாகமுள்ள மனிதராக இருந்தார். அவர் மனதில் ஏகப்பட்ட திட்டங்கள் இருந்தன. வியாபாரம் மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று என்னிடம் சொன்னார். இப்போது உண்மையாகவே மிகவும் கவலையாகத்தான் இருக்கிறது. போன ஞாயிற்றுக்கிழமை நான் கார் அங்கிளின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அன்றைய பொழுது எனக்கு மிகவும் உற்சாகமாகக் கழிந்தது. எவ்வளவோ நல்ல விஷயங்களை அங்கு நான் பார்த்தேன். உனக்குத் தெரியுமா? அங்கிள் அப்போதுதான் பாரீஸிலிருந்து வந்திருந்தார். வரும்போது அருமையான படங்களையும், ஓவியங்களையும் தன்னுடன் அவர் கொண்டு வந்திருந்தார். திங்கட்கிழமை காலை வரை நான் ஆம்ஸ்டர்டாமிலேயே தங்கிவிட்டேன். காட்சியகங்களை மீண்டும் பார்க்கச் சென்றேன். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இப்போதிருக்கும் ட்ரிப்பென்ஹ்யூ காட்சியகத்திற்கு பதிலாக அவர்கள் ஆர்ம்ஸ்டர்டாமில் மிகப்பெரிய மியூசியம் ஒன்றை உருவாக்கப் போகிறார்களாம். இந்த முடிவு உண்மையிலேயே மிகச்சிறந்த முடிவு என்றே நான் நினைக்கிறேன். காரணம்- ட்ரிப்பென்ஹ்யூ காட்சியகம் மிகவும் சிறியதாக இருக்கிறது. இடம் இல்லாமல் அங்கிருக்கும் பல ஓவியங்களை நம்மால் ஒழுங்காகப் பார்க்கக்கூட முடியவில்லை.

க்ளைஸெனேயின் அந்த ஓவியத்தைப் பார்க்க நான் எப்படி ஆசைப்பட்டேன் தெரியுமா? அவரின் சில ஓவியங்களை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவரின் ஓவியங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீ அனுப்பியிருந்த இன்னொரு ஓவியம் ஆல்ஃப்ரட் ஸ்டீவன்ஸ் வரைந்ததுதானே? இல்லாவிட்டால் வேறு யாராவது வரைந்ததா? இதைப் பற்றி எழுது, புகைப்படத்தில் இருந்தது ரோட்டா (இத்தாலி நாட்டு ஓவியர்) என்பது எனக்குத் தெரியும். அவரின் படத்தை ப்ரஸ்ஸல்ஸ் கண்காட்சியிலேயே பார்த்திருக்கிறேன். நீ புதிதாக என்ன ஓவியங்களைப் பார்த்தாய் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீ எனக்கு கொடுத்த ஆல்பம் நான் உன்னிடம் வேண்டும் என்று கேட்டதல்ல. நான் கேட்டது கோரோவின் ஓவியங்களை. இருந்தாலும் எனக்காக நீ எடுத்த சிரமத்திற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். சிஸ்டர் அன்னாவிடமிருந்து வெகு விரைவில் ஒரு கடிதம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். தாமதமாகக் கடிதம் எழுதுவதற்காக ஒருவேளை அவள் வருத்தப்பட்டு எழுதினாலும் எழுதலாம். அவளுக்கு உடனடியாக ஒரு கடிதத்தை எழுதிப் போட்டு, அவளை ஆச்சரியப்பட வை. அப்படி நீ கடிதம் எழுதினால், அவள் மிகவும் சந்தோஷப்படுவாள். நீ மிகவும் பிஸியாக இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். அப்படி இருப்பது ஒரு நல்ல விஷயமே. இங்கு குளிர் அதிகமாக இருக்கிறது. எல்லோரும் ஸ்கேட்டிங் போய்க் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ, அவ்வளவு தூரம் நான் நடக்கிறேன். நீ அங்கு ஸ்கேட்டிங் போவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இத்துடன் என்னுடைய புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு கடிதம் எழுதும்போது, இதைப் பற்றி நீ குறிப்பிட வேண்டாம். ஏனென்றால் அப்பாவின் பிறந்த நாளன்று அனுப்புவதற்காக அதை நான் வைத்திருக்கிறேன். அங்கிள், ஆன்ட்டி, திரு.ஸ்மித், எட்வர்ட் ஆகியோரை நான் மிகவும் விசாரித்ததாக கூறவும்.

என்றும்,
உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

ஹானேபீக்கில் உள்ள எல்லோரையும், ஃபீ ஆன்ட்டியையும், ரூவையும் நான் மிகவும் கேட்டதாகக் கூறவும்.

***

 லண்டன், ஜூலை 31, 1874

அன்புள்ள தியோ,

மிச்லேயைப் பற்றி நீ படித்தது குறித்தது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவரைப் பற்றி படித்ததன் மூலம் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். மக்கள் தற்போது நினைத்துக் கொண்டிருப்பதைவிட காதல் என்ற ஒன்று எந்த அளவிற்கு மேன்மையானது என்பதை இந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கும்போதுதான் நமக்கே புரிகிறது.

அந்தப் புத்தகம் எனக்கு நிறைய விஷயங்களைத் தெரிய வைத்திருக்கிறது. ஒரு வேத புத்தகத்தைப் போல மதிப்பு மிக்கதாக அதை நான் நினைக்கிறேன். ‘எந்தப் பெண்ணுமே வயதானவள் இல்லை’ என்று அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. (உலகில் வயதான பெண்களே இல்லை என்பது இதன் அர்த்தமல்ல. அவள் யாரையாவது காதலிக்கும் போதோ அல்லது யாராவது ஒருவரால் காதலிக்கப்படும் போதோ சாதாரணமாக அவள் இருக்கும்போது இருப்பதைவிட, மிகவும் இளமையாக அவள் தோற்றம் தருகிறாள் என்பதுதான் இதன் அர்த்தம்). அந்தப் புத்தகத்தில் ‘இளவேனிற்காலத்தைப் பற்றிய நினைவுகள்’ என்றொரு அத்தியாயம் இருக்கும். அடடா... என்ன அருமையான அத்தியாயம்!

ஒரு ஆணைவிட ஒரு பெண் நிச்சயமாக வித்தியாசமானவள்தான். அவளைப் பற்றி நாம் இதுவரை ஒன்றுமே தெரியாமல் இருக்கிறோம் என்று நீ எழுதியிருந்தாய். அதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியாக இரண்டு பாதி என்றில்லாமல் இருவரும் சேர்ந்து ஒன்று என இருக்க முடியும் என்ற உன் கருத்தை நானும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

ஏ, நன்றாக இருக்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து தினமும் காலாற நடந்து செல்கிறோம். கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இருந்தால், பார்க்கும் எல்லாமே இங்கு அழகாகத்தான் இருக்கின்றன. ஆனால், அந்தக் கண்களில் ஒரு உயிர்ப்பு இருக்க வேண்டும். அது முக்கியம். அது மட்டும் இருந்தால், கண்களில் தெரியும் எல்லாமே அழகானவைதாம்.

திரு.தெர்ஸ்ட்டீக் வாங்கிய திஜ் மேரியின் ஓவியம் மிகவும் அழகானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதைப் பற்றி முன்பே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோன்ற ஒரு ஓவியத்தை நானே வாங்கி விற்பனை செய்திருக்கிறேன்.


இங்க்லாண்டுக்கு வந்த பிறகு படம் வரைய வேண்டும் என்ற ஆவல் தற்காலிகமாக நின்று போயிருக்கிறது. எனினும், மிக விரைவிலேயே படம் வரைவதைத் தொடர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஜனவரி 1, 1875ஆம் தேதி அனேகமாக இன்னொரு பெரிய இடத்திற்கு மாறுவோம் என்று நினைக்கிறேன். திரு.ஒபாக் தற்போது பாரீஸில்தான் இருக்கிறார். இன்னொரு வர்த்தகத்தை எடுக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக அவர் அங்கு வந்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி நீ இப்போது யாரிடமும் பேச வேண்டாம்.

நீ நலமாக இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சீக்கிரம் உன் கடிதத்தை எதிர்பார்க்கிறேன். படங்களை ஏ, மிகவும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறாள். பௌட்டன், மேரி, ஜேக் ஆகியோரின் கை வண்ணங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அது ஒரு நல்ல விஷயம்தானே? ஆனால், அவள் விரும்புகிற ஒன்றைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகவே இருக்கிறது. எது எப்படியோ, ஹாலண்டில் இருப்பதைவிட இங்கிருப்பதே அவளுக்கு நல்லது என்று என் மனதிற்கு படுகிறது. வணக்கம்.

வின்சென்ட்.

ஏ.யுடன் நான் இங்கு இருப்பது என்பது எவ்வளவு இனிமையான ஒரு விஷயம் என்பதை உன்னால் உணர முடியும். படம் நல்ல முறையில் வந்து சேர்ந்தது என்று திரு.தெர்ஸ்டீக்கிடம் கூறு. நான் அவருக்கு விரைவில் ஒரு கடிதத்தை தனியாக எழுதுகிறேன் என்பதையும் அவரிடம் தெரியப்படுத்து.

***

 லண்டன், மார்ச் 6, 1875,

அன்புள்ள தியோ,

நன்றாக இருக்கிறாய் அல்லவா? ‘ஆதம் பீட்’டில் இருந்த பெண்களை நீ மிகவும் பாராட்டி இருந்தாய். அதை நானும் ரசித்தேன். மைக்கேல் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் இருந்த வெட்டவெளியும், மலை வழியே கிராமத்திற்குள் போகும் மணல் பாதையும், பாசி படர்ந்த கூரையைக் கொண்ட, சுண்ணாம்பு அல்லது களிமன் பூசப்பட்ட குடிசைகளும் காவி மண் மேட்டின் இரு புறங்களிலும் இங்குமங்குமாய் வளர்ந்திருக்கும் அடர்த்தியான முட்புதர்களும், அவற்றுக்கு மேலே தெரியும் இருண்டு போன வானமும், அதன் மூலையில் தெரியும் ஒளிக்கீற்றும்...

ஆனால், மைக்கேலின் ஓவியத்தில் இருந்ததைவிட இதில் உணர்வுகள் மேலும் கூர்மையாக வெளிப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அடிக்கடி சொல்லக்கூடிய கவிதையைக் கொண்ட புத்தகம், ரெனா வரைந்த ‘ஜீசஸ்’ மிச்லெ வரைந்த ‘ஜோன் ஆஃப் ஆர்க்’, ‘லண்டன் நியூஸ்’ஸில் இருந்த கோரோவின் படம் (அதே படம் என்னுடைய அறையிலும் இருக்கிறது) ஆகியவற்றை நாங்கள் அனுப்பும் பெட்டியில் நான் வைத்திருக்கிறேன்.

லண்டனுக்கு நீ விரைவில் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

வாழ்க்கை சாதாரணமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதற்காக நீ வருத்தப்படாதே. என் வாழ்க்கை கூட அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்பது நீண்டது. வெகு சீக்கிரம் ஒரு நல்ல நேரம் வந்து சேரும். அப்போது அந்த நேரம் உன்னை நீ நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்குக் கொண்டு செல்லும்.

வணக்கம். நம் நண்பர்கள் எல்லோரையும் கேட்டதாகக் கூறு, உறுதியான கை குலுக்கலுடன், வின்சென்ட்.

***

பாரீஸ், ஜூலை 24, 1875

அன்புள் தியோ,

சில நாட்களுக்கு முன்பு தே நிட்டி வரைந்திருந்த ஒரு ஓவியம் எங்களுக்கு வந்தது. ஒரு மழை நாளின்போது லண்டன் நகரம் எப்படி இருக்கும் என்பதை அந்த ஓவியத்தில் அற்புதமாக அவர் தீட்டியிருந்தார். வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் பாராளுமன்ற கட்டிடமும் மழை பெய்து கொண்டிருக்கும்போது பார்க்க எப்படி இருக்கும் என்பதை ஓவியத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தை கடந்துபோய் வந்து கொண்டிருந்தவன் நான். வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் பாராளுமன்ற கட்டிடமும் சூரியன் மறைகிற நேரத்தில் எப்படி தோற்றம் தரும் என்பதை கண்கூடாக ஒவ்வொரு நாளும் நான் பார்த்திருக்கிறேன். காலை நேரத்தின்போது, குளிர் காலத்தில், பனிப்படலம் போர்த்தியிருக்கும் போது பனிக்கட்டிகள் விழும் காலத்தில் - இப்படி ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் பாராளுமன்ற கட்டிடமும் எப்படி தங்களை வெளிப்படுத்தும் என்பதை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

அந்த ஓவியத்தைப் பார்த்தபோது லண்டனை நான் எந்த அளவுக்கு நேசித்திருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. அப்படி உணர்ந்ததற்காக ஒரு விதத்தில் நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். லண்டனுக்கு நீ அனுப்பப்படுவாய் என்பதில் நிச்சயமாக நான் நம்பிக்கை கொள்ளவில்லை. ரக்கே வரைந்த ‘வாழ்க்கையின் வசந்த காலம்’, ‘நள்ளிரவு’ ஆகியவற்றை அனுப்பி வைத்ததற்காக நன்றி. முதல் படம் மிகவும் அருமையாக இருந்தது. இரண்டாவது ஓவியம் முஸ்ஸேயின் ‘செப்டம்பர் இர’வை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதை உனக்கு அனுப்பி வைக்கும் ஆவல் எனக்கு இருக்கிறது. ஆனால், தற்போது அது என் கைவசம் இல்லை. நேற்று தி ஹேக்கிற்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் உனக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி இருக்கிறேன். அன்னாவும் லிபெயும் வீட்டில் இருப்பதாக அறிந்தேன். அவர்களைப் பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.

எப்போதும் போல மகிழ்ச்சியாக இரு. உன் கடிதத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். அழுத்தமான கைகுலுக்கலுடன்,

உன் அன்பு சகோதரன்,
வின்சென்ட்.

***

 பாரீஸ், செப்டம்பர் 17, 1875

அன்புள்ள தியோ,

மத ரீதியான உணர்வுகளும், இயற்கையின் அழகும் வெவ்வேறுதானா என்ற எண்ணம் பலருக்கும் பல நேரங்களில் உண்டாகி விடுகிறது. இவை இரண்டிற்குமிடையே மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

உலகில் உள்ள எல்லோருமே இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள் தான். அதே நேரத்தில் கடவுள்தான் எல்லாவற்றுக்கும் மூலம் என்றும், அவர்தான் அனைத்துக்கும் சக்தியாக இருப்பவரென்றும், அவரை ஆத்மார்த்தமாகவும் உண்மையுடனும் வழிபட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நம் பெற்றோர்கூட அத்தகைய எண்ணத்தைக் கொண்டவர்களே. வின்சென்ட் அங்கிள்கூட இந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்தான்.


 ‘உலகம் அழியலாம். ஆனால், உணர்வுகள் அப்படியேதான் இருக்கும்’, ‘நம்மிடமிருக்கும் நல்ல விஷயங்களை யாராலும் எடுத்துப் போக முடியாது’, ‘முடிவற்ற வாழ்க்கை மீது நீர் பொழிந்து கொண்டே இருக்கிறது’ போன்ற வாசகங்கள் இருக்கத்தானே செய்கின்றன. நாமும் கடவுளைத் தொழுவோம். ஆனால், இந்த விஷயங்களைப் பற்றி மிகவும் ஆழமாக நாம் சிந்தித்து திரிய வேண்டாம். போகப் போக உனக்கே இதைப் பற்றி தெளிவாகப் புரியும். கடவுளின் வேலைக்காரர்களில் கடைசி ஏழையாக நாம் இருந்தால் போதும். இதுதான் வாழ்க்கையில் நம்முடைய பங்கு. ஆனால், நாம் அதை விட்டு வேறெங்கோ தூரத்தில் நின்றிருக்கிறோம். நம் கண் தனித்துவம் கொண்ட கண்ணாக மாற வேண்டும் என்று பிரார்த்திப்போம். அப்படியென்றால்தான் நம்முடைய உடல் பிரகாசிக்கத் தொடங்கும்.

ரூவையும், என்னைப்பற்றி விசாரித்தவர்களையும் கேட்டதாகக் கூறவும்.

உன்னுடைய அன்பு சகோதரன்,
வின்சென்ட்.

 

கலையைப் பற்றி நான் சொல்வதும் இதுதான். அதில் முழுமையாக உன்னை இழந்துவிடாதே. உன்னுடைய வேலையை ஈடுபாட்டுடன் செய். திரு.தெர்ஸ்டீக்கிற்கு மரியாதை கொடு. அதற்கு அவர் எவ்வளவு தகுதியானவர் என்பது இப்போது புரிவதைவிட பின்னர் உனக்கு அதிகமாக புரிய வரும்.

இதற்கு மேல் இதைப்பற்றி நீ சிந்திக்க வேண்டாம்.

உணவு விஷயம் எப்படி இருக்கிறது? எவ்வளவு சாப்பிட விருப்பப்படுகிறாயோ, அந்த அளவிற்கு சாப்பிடு. நாளைக்கு என் காலணிகளுக்கு பிரகாசம் தரவேண்டும்.

***

 பாரீஸ், செப்டம்பர் 25, 1875

அன்புள்ள தியோ,

பாதை குறுகலாக இருக்கிறது. அதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. நாம் போக நினைக்கும் இடத்தை பலர் எப்படிப் போய் அடைந்தார்கள் என்பதை ஒரு நிமிடம் மனதிற்குள் நினைத்துப் பார். வேறு வழியில்லை. அந்தக் குறுகலான பாதையில் நாம் போய்த்தான் ஆக வேண்டும். நாம் தினமும் செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காகச் செய்வோம். என்னவெல்லாம் நம்மால் செய்ய முடிகிறதோ அவற்றையெல்லாம் நாம் செய்வோம். அதற்கான வலிமை நம்மிடம் இருக்கவே செய்கிறது. கடவுள் நிச்சயம் நமக்குத் தர வேண்டிய பரிசைத் தருவார். அதை யாரும் தட்டிப் பறித்து விட முடியாது. நாம் அவரிடம் தினமும் அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆதலால், கிறிஸ்துவை நம்பக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும், அவன் ஒரு புதிய பிறவி எடுத்தவனே. அவனின் பழைய விஷயங்கள் எல்லாமே அவனை விட்டு போய்விட்டன. இப்போது இருப்பவை எல்லாமே புதியவையே.

கிறிஸ்துமஸ் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதுவரை பொறுமையாக இருந்ததுதானே ஆகவேண்டும். வெகு சீக்கிரமே அது வரத்தானே போகிறது.

தைரியமாக இரு. நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாகக் கூறு. என்மீது நம்பிக்கையாக இரு.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்

எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படங்களுக்கான பணத்தை அனுப்பி வைக்கிறேன். திரு.தெர்ஸ்டீக்கிற்கு எழுதுகிறபோது, தற்போது என்னிடம் பணம் கொஞ்சம் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதை தெரியப்படுத்துகிறேன். கேஷியரிடம் என்னுடைய சம்பளத் தொகையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான என்னுடைய பயணத்தின்போது எனக்கு நிறைய பணம் தேவைப்படும் அல்லவா? எது எப்படியோ, கூடிய சீக்கிரம் நான் பணத்தை அனுப்பி வைக்கிறேன்.

***

 பாரீஸ், பிப்ரவரி 19, 1876

அன்புள்ள தியோ,

உன்னுடைய கடைசி கடிதத்திற்கும் கடைசியாக வந்த பெட்டியில் அனுப்பி வைத்திருந்த கேட்டலாக்கிற்கும் நன்றி.

ஆன்டர்சனின் கதைகளை அனுப்பி வைத்ததற்காக நான் உனக்கு நன்றி சொன்னேனா என்பது ஞாபகத்தில் இல்லை. அப்படி நான் சொல்லியிருக்காவிட்டால், இப்போது கூறுகிறேன். இந்த வசந்த காலத்தின்போது வர்த்தகம் சம்பந்தமாக நீ பயணம் மேற்கொள்ளப் போவதாக வீட்டிலிருந்து தகவல் வந்தது. அதற்காக உன் மனதில் வருத்தம் இருக்காது என்று நினைக்கிறேன். அது ஒரு அருமையான விஷயம் என்றே நானும் நினைக்கிறேன். பயணம் செய்வதன்மூலம் எவ்வளவு அருமையான விஷயங்களை உன்னால் பார்க்க முடியும், அது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதையும் நான் எண்ணி பார்க்கிறேன்.

அடுத்த தபாலில் நீ லாங்ஃபெல்லோவை எதிர்பார்க்கலாம். நேற்று மாலையில் க்ளாட்வெல் என்னுடன்தான் இருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அவர் என்னைத்தேடி வந்துவிடுவார். இருவரும் நேரம் போவதே தெரியாமல் கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்போம்.

‘ஹைப்பெர்ஷ’னை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால், அது ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பதை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். எலியட்டின் ஒரு அருமையான நூலை சமீபத்தில்தான் படித்து முடித்தேன். ‘ஸீன்ஸ் ஃப்ரம் க்ளெரிக்கல் லைஃப்’ என்ற அந்தப் புத்தகத்தில் மூன்று கதைகள் இருக்கின்றன. கடைசி கதையான ‘ஜானேயின் வருத்தம்’ என்ற கதை என் மனதை வெகுவாக உலுக்கிவிட்டது. ஒரு நகரத்தின் அழுக்கடைந்து போயிருக்கும் தெருக்களில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தும் ஒரு பாதிரியாரைப் பற்றிய கதை அது. வீடுகளின் சிவப்பு கூரைகளையும், தோட்டங்களில் இருக்கும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும், ஏழை மக்களின் புகை படர்ந்த அடுப்புகளையும் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே அவரின் வாழ்நாள் ஓடிக்கொண்டிருக்கிறது. சரியாக சமைக்காத மாமிசமும், நீர் நிறைந்த உருளைக்கிழங்கும்தான் அவருக்கு சாப்பாடு. தன்னுடைய முப்பத்து நான்காவது வயதில் அந்த மனிதர் இறந்துவிடுகிறார். அவருடைய நீண்ட உடல் நலமற்ற வாழ்க்கையில் அவரை அக்கறையுடன் ஒரு பெண் கவனித்துக் கொள்கிறாள். அவள் மதுவிற்கு அடிமையானவள். அவருடைய அறிவுரையாலும், தன்மீது அவர் கொண்ட ஈடுபாட்டாலும் மதுவின் பிடியிலிருந்து அவள் மீளுகிறாள். அதற்குப் பிறகுதான் அவளின் மனதிற்கு அமைதியே கிடைக்கிறது. அவரை அடக்கம் செய்யும் இடத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு அத்தியாயத்தைப் படிக்கிறார்கள். அது சொல்கிறது- ‘நான்தான் இறுதி அடைக்கலம். நான்தான் வாழ்க்கை. என்மீது முழுமையான நம்பிக்கையை யார் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் இறந்தபிறகும்கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், மறுபடியும் சனிக்கிழமை மாலை வந்துவிட்டது. நாட்கள் எவ்வளவு விரைவாக நீங்கிக் கொண்டிருக்கின்றன. மிக விரைவிலேயே நான் இங்கிருந்து புறப்படும் நேரம் வரவிருக்கிறது.

ஸ்கார்பரோவிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. அன்பு வாழ்த்துக்களும், கை குலுக்கல்களும்.

என்றும் உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***


ராம்ஸ்கேட், இங்க்லாண்ட், ஏப்ரல் 28, 1876

அன்புள்ள தியோ,

இந்த நல்ல நாள் மீண்டும் வந்துகொண்டே இருக்கட்டும். என்னுடைய வாழ்த்துக்கள். நாம் ஒருவருடன் ஒருவர் கொண்டிருக்கும் அன்பு வருடம் ஆக ஆக இன்னும் பல மடங்கு அதிகமாகட்டும்.

நம் இருவருக்கும் பல விஷயங்களில் நெருங்கிய ஒற்றுமை இருப்பதை நினைத்து உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். இளம் பிராயத்து நினைவுகளை இருவரும் இன்னும் சிறிதுகூட மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்றுவரை நான் எந்தத் தொழிலில் இருக்கிறேனோ அந்த தொழிலில்தான் நீயும் இருக்கிறாய் என்பதும், எனக்கு எந்தெந்த இடங்களைத் தெரியுமோ, எந்தெந்த மனிதர்களைத் தெரியுமோ உனக்கும் அவற்றை, அவர்களைத் தெரிந்திருக்கிறது என்பதும், என்னைப் போலவே நீயும் இயற்கையையும் கலையையும் உயிரென நேசிக்கிறாய் என்பதும்கூட நம் இருவருக்குமிடையே இருக்கும் ஆச்சரியமான ஒற்றுமையே.

லண்டனிலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்தால் போய் சேரக்கூடிய தேம்ஸ் நதிக்கரையில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு தன்னுடைய முழு பள்ளிக்கூடத்தையும் விடுமுறைக்குப் பிறகு கொண்டு போக தீர்மானித்திருப்பதாக திரு.ஸ்டோக்ஸ் என்னிடம் கூறினார். மாறுபட்ட ஒரு பள்ளிக்கூடமாக, அதே நேரத்தில் சற்று விரிவுபடுத்தி அவர் அதை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

நேற்று நாங்கள் இருவரும் நடந்து சென்றதைப் பற்றி இப்போது உன்னிடம் கூறப் போகிறேன். நாங்கள் நடந்து சென்ற பாதையின் இரு பக்கங்களிலும் இளம் கதிர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த வயல்கள் இருந்தன. அந்த வயல்களுக்கு வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியே நடந்து போனால், கடலை நாம் அடையலாம்.

அந்த இடத்தை அடைந்த பிறகு எங்களின் இடது பக்கம் பார்த்தால் கல்லும் மணலும் அடங்கிய ஒரு மிகப்பெரிய மேடு தெரிந்தது. ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு அது இருந்தது. அதன் உச்சியில் செடிகளடங்கிய பெரிய புதர்கள். அந்தச் செடிகளின் கருப்பு, சாம்பல் நிறங்களில் பாசி பிடித்திருந்த தண்டுகளும் கிளைகளும் காற்றால் ஒரு பக்கம் வளைந்து ஆடிக் கொண்டிருந்தன. வயதாகிப்போன புதர்களும் அங்கு இருந்தன.

நாங்கள் நடந்து சென்ற மணல் முழுக்க சாம்பல் நிறத்தைக் கொண்ட பெரிய கற்களும், சுண்ணாம்பும், சிப்பிகளும் இருந்தன. வலது பக்கத்தில் கடல் இருந்தது. ஒரு குளத்தைப் போல அது அமைதியாக காணப்பட்டது. சூரியன் மறைந்து கொண்டிருந்த சாம்பல் நிற வானம் கடலில் தெரிந்தது.

அலையையே பார்க்க முடியவில்லை.

நேற்றைய உன் கடிதத்திற்கு நன்றி. வில்லெம் வாக்கி வேலைக்கு சேர்ந்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷப்பட்டேன். நான் அவரை மிகவும் கேட்டதாகக் கூறு. ஸ்கேவனின்ஜினுக்கு மரங்கள் அடர்ந்திருக்கும் வழியே இன்னொரு முறை உன்னுடன் நடந்து செல்ல நான் பிரியப்படுகிறேன்.

ஒவ்வொரு நாளும் உனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கட்டும். என்னை விசாரிப்பவர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் உன் அன்னைப் கூறு.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

மகிழ்ச்சியான, வளமான வருடமாக இருக்க வேண்டும் என்று மீண்டும் உன்னை வாழ்த்துகிறேன். எவ்வளவோ பெரிய விஷயங்களை நாம் இந்தக் காலகட்டத்தில் செய்தாக வேண்டும். எல்லாமே நல்ல முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதயப்பூர்வமான கைகுலுக்கலும், வணக்கமும்.

***

ஐல்வர்த், இங்க்லாண்ட், அக்டோபர் 7, 1876

அன்புள்ள தியோ,

இன்று மறுபடியும் சனிக்கிழமை. மீண்டும் உனக்கு கடிதம் எழுதுகிறேன். உன்னைக் காண வேண்டுமென்று எவ்வளவு நாட்களாக நான் காத்திருக்கிறேன். நாட்கள் ஆக ஆக மனதில் இருக்கும் என்னுடைய ஏக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சீக்கிரம் கடிதம் எழுது. ஒரே ஒரு வார்த்தை - நீ எப்படி இருக்கிறாய் என்பதைப் பற்றி.

போன புதன்கிழமை இங்கிருந்து ஒரு மணி நேரம் ஆகக்கூடிய ஒரு கிராமத்திற்கு நீண்ட தூரம் நடந்து சென்றோம். சாலை புல்வெளிகள் வழியாகவும், வயல்களைத் தாண்டியும் புதர்களைக் கடந்தும் சென்றன. இரண்டு பக்கங்களிலும் கருப்பு பெர்ரி பழங்கள் பழுத்துக் கிடந்தன. ஆங்காங்கே பெரிய எம் மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. சாம்பல் நிற மேகங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது. அப்போது விழுந்த நிழல்களைப் பார்க்க வேண்டுமே. திரு.ஸ்டோக்ஸ் நடத்திக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தோம். அங்கு எனக்குத் தெரிந்த பையன்கள் பலர் இருந்தனர்.

சூரியன் மறைந்து நெடு நேரம் ஆனபிறகும் கூட மேகங்கள் சிவப்பு வர்ணத்திலேயே காட்சியளித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வயல்கள் மேல் இருட்டு வந்து மூடியது. தூரத்திலிருந்த கிராமத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். உனக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது திரு.ஜோன்ஸ் என்னை அழைத்தார். லண்டன் வரை நடந்து சென்று அவருக்கு கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்ட வர முடியுமா என்று என்னிடம் கேட்டார். மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பார்த்தால் அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அதில் உன்னைப் பற்றி அவர் எழுதியிருந்தார். உங்கள் இருவரையும் பார்க்க நான் எவ்வளவு ஆவலாக இருக்கிறேன் தெரியுமா? இப்போதும் நீ பலவீனமாக இருந்தாலும், முன்னால் இருந்ததைவிட இப்போது எவ்வளவோ முன்னேற்றம் தெரிகிறது என்பதை அறிந்து கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நீ நினைத்திருந்தாய். இப்போது வீட்டிற்கு அம்மாவைப் பார்க்கப் போகிறாய் என்பதை அறிகிறபோது எனக்கு கான்ஸியன்ஸின் வார்த்தைகள்தான் ஞாபகத்தில் வருகின்றன.

‘நான் உடல் நலமில்லாமல் இருக்கிறேன். என் மனம் மிகவும் களைத்துவிட்டது. என் ஆன்மா குழப்பத்தில் இருக்கிறது. என் உடல் பயங்கரமாக வலிக்கிறது. இருப்பினும் கடவுள் என் மனதிற்கு நல்ல சக்தியைத் தந்திருக்கிறார். அன்பு என்ற உணர்வு என்னிடம் மிகவும் நிறையவே குடி கொண்டிருக்கிறது. கசப்பான விரக்தியின் எல்லைக்குள் நான் காலப்போக்கில் விழுந்து  இதயத்திற்குள் மரணத்தைத் தரும் நஞ்சு எப்படி புகுந்தது என்பதை எரிச்சல் மேலோங்க பார்க்கிறேன். மலைப் பகுதிகளில் நான் மூன்று மாதங்கள் இருந்தேன். அங்கு இருக்கும்போது என்னுடைய ஆன்மா எந்த அளவிற்கு அமைதியை அனுபவித்தது தெரியுமா? அங்கு கிடைத்த ஓய்வு அதற்கு மிகவும் பிடித்திருந்தது. சுற்றிலும் நிலவிய அமைதி. மனதிற்கு இனம்புரியாத ஒரு சந்தோஷத்தை அளித்தது. கடவுளின் அந்த விலை மதிப்பற்ற படைப்புக்கு முன்னால் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களையும் சமூக கட்டமைப்புகளையும், அதன் பிணைப்புகளையும் விட்டெறிய வேண்டும்போல் இருந்தது.


இளமை எனக்குள் பாய்ந்தோடுவதைப் போல் நான் உணர்ந்தேன். அப்போது வாயிலிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வார்த்தையுமே கடவுளிடம் வேண்டிக் கொள்வதாகவே இருந்தன. இயற்கையுடன் ஒன்றிப் போகாத எல்லாமும் இதயத்தை விட்டே காணாமல் போனது. ஓ... களைப்படைந்த ஆன்மாக்கள் அங்குதான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. விரக்தியடைந்து போன மனிதன் அங்குதான் தன்னுடைய இளமை சக்தியைத் திரும்பப் பெறுகிறான். என்னுடைய உடல் நலமற்ற நாட்கள் என்னை விட்டு கடந்து போய்விட்டன. அதற்குப் பிறகு வந்த ஒரு மாலை நேரம்... நெருப்பு முன்னால் எரிந்து கொண்டிருக்க, நான் உட்கார்ந்திருந்தேன். கால்களை சாம்பலில் வைத்துக்கொண்டு, கண்களை நட்சத்திரங்களின் மேல் வைத்துக்கொண்டு நான் இருந்தேன். நட்சத்திரம் தன்னுடைய கதிரை சிம்னி அடுப்பில் இருந்த ஓட்டை வழியே அனுப்பி என்னை ‘வாவா’ என அழைத்தது. நெருப்புக்கு முன்னால் அமர்ந்து ஜுவாலைகள் எழுவதையும், கண் சிமிட்டுவதையும், ஒன்றையொன்று ஒடுக்க பார்ப்பதையும், கண்களால் பார்த்தவாறு நான் கனவில் மிதந்திருந்தேன். மனித வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் அப்போது என் மனதில் வந்து அலை மோதிய வண்ணம் இருந்தன. பிறந்து, வேலை செய்து, அன்பு செலுத்தி, வளர்ந்து, மறைந்து... இதுதானே மனித வாழ்க்கை.

இனிவரும் நாட்களில் நான் பாடங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்று திரு.ஜோன்ஸ் சொல்லிவிட்டார். ஆனால், நான் அவரின் சர்ச்சில் பணியாற்றலாம் என்றார். மக்களை சந்தித்து பேசலாம் என்றார். கடவுள் என்னை தன்னுடைய கருணையால் ஆசிர்வதிக்கட்டும். நான் லண்டனுக்கு நடந்து சென்ற விஷயத்தை இப்போது உன்னிடம் கூறப் போகிறேன். இங்கிருந்து நான் காலை பன்னிரண்டு மணிக்கு கிளம்பினேன். நான் அடைய வேண்டிய இடத்தை அடைந்தபோது மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஆகிவிட்டது. ஸ்ட்ரேன்ட்டைச் சுற்றியுள்ள அந்தப் பகுதியில் நான் நடந்து சென்றபோது, எனக்குத் தெரிந்த பலரையும் அங்கு சந்தித்தேன். அந்தப் பகுதியில்தானே பெரும்பாலான ஓவியக் காட்சியகங்கள் இருக்கின்றன. அப்போது உணவு நேரம். ஆதலால் பெரும்பாலானவர்கள் தெருக்களிலேயே இருந்தார்கள். சிலர் அலுவலகத்தை விட்டு வந்து கொண்டிருந்தார்கள். சிலர் அலுவலகத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். முதலில் ஒரு இளம் பாதிரியாரைப் பார்த்தேன். இங்கு மதத்தை முன்பு பரப்பிக் கொண்டிருந்த இளைஞர் அவர். அப்போது அவர் எனக்கு நன்று அறிமுகமாகி இருந்தார். திரு.வேலியிடம் பணிபுரியும் ஒருவரைப் பார்த்தேன். வேலி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே கூட பார்த்தேன். அவர் வீட்டிற்கு நேரம் கிடைக்கிறபோது சாதாரணமாக நான் போவதுண்டு. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. என்னுடைய பழைய நண்பர்களான திரு.ரெட்டையும், திரு.ரிச்சர்ட்ஸன் பாரீஸல் இருந்தார். அப்போது நானும் அவரும் பே லாக்கே வரை நடந்து சென்றிருக்கிறோம்.

அதற்குப் பிறகு நான் வைஸ்லிங்கிற்குச் சென்றேன். அங்கு இரண்டு சர்ச் ஜன்னல்களுக்கான படங்களைப் பார்த்தேன். ஒரு ஜன்னலுக்கு நடுவில் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண்ணின் படம் இருந்தது. புனிதமான முகத்தைக் கொண்டிருந்த பெண் அவள். அந்தப் படத்திற்கு மேலே ‘நீ நினைத்தது நடக்கும்’ என்ற வாசகங்கள் இருந்தன. அடுத்த ஜன்னலில் அந்தப் பெண்ணின் மகளுடைய படம் இருந்தது. ‘நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதன்மேல் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் இதுவரை பார்க்காததொன்றின் மீதுகூட முதலில் வைக்க வேண்டியது நம்பிக்கைதான்’ என்ற வாசகங்கள் அந்தப் படத்திற்கு மேலே குறிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த குபில் அன்ட் கம்பெனியின் காட்சியகத்தில் அழகான படங்களையும் ஓவியங்களையும் பார்த்தேன். கலை வெளிப்பாட்டின் மூலமாக ஹாலண்டைப் பார்த்தது எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.

நகரத்தில் திரு.க்ளாட்வெல்லையும் புனித பால் சர்ச்சையும் போய் பார்த்தேன். நகரத்திலிருந்து லண்டனின் இன்னொரு மூலைக்குச் சென்றபோது ஒரு பையனைப் பார்த்தேன். உடல்நலமில்லாததால் அவன் திரு.ஸ்டோக்ஸின் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிவிட்டிருந்தான். நான் பார்க்கும்போது அவன் நன்றாகவே இருந்தான். அப்போது அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். திரு.ஜோன்ஸுக்கு பணம் வாங்கும் இடத்திற்கும் சென்றேன். லண்டனின் புறநகர் பகுதிகள் மிகவும் அழகாக இருந்தன. சிறு சிறு வீடுகளுக்கும் தோட்டங்களுக்கும் மத்தியில் இருந்த திறந்தவெளியில் சர்ச்சோ, பள்ளிக்கூடமோ அல்லது பணிமனைகளோ இருந்தன. அவைகூட புல், மரங்கள், செடிகள் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தன. மொத்தத்தில்- மாலை நேரத்தில் போர்த்தியிருந்த மென்மையான பனிப்படலத்துக்கு மத்தியில் மறைந்து கொண்டிருந்த சூரியனை அந்தச் சூழலில் பார்க்கும்போது மனதிற்கு சுகமாக இருந்தது.

நேற்றைய மாலைப்பொழுது இப்படியென்றால் அதற்குப் பிறகு நான் கண்ட லண்டன் காட்சிகளை நீயும் பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நான் பிரியப்பட்டேன். மாலை மயங்கிய பிறகு நகரத்தின் தெருக்களில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அப்போது எல்லோரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கண்ணில் கண்ட ஒவ்வொன்றுமே அது சனிக்கிழமை இரவு என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் ஒரு அமைதி நிலவியதையும் உணர முடிந்தது. நாளை வரப்போகும் ஞாயிற்றுக்கிழமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வம் அங்கிருந்த ஒவ்வொன்றிலுமே தெரிந்தது. அந்த பரபரப்பான தெருக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்ற விடுமுறை தேவைதான். அந்த ஆறுதல் அவசியம்தான்.

நகரம் இருட்டில் மூழ்கியிருந்தது. வரிசையாக சர்ச்சுகளைக் கடந்து கொண்டே நடப்பது என்பது ஒரு அழகான அனுபவம்தான். நேரம் அதிகமாகிவிட்டதால் ஸ்ட்ராண்டில் நான் பஸ்ஸில் ஏறி பயணம் செய்தேன். திரு.ஜோன்ஸின் சிறிய சர்ச்சைத் தாண்டிய பிறகு தூரத்தில் இன்னொரு சர்ச்சைப் பார்த்தேன். அந்த நேரத்திலும் அங்கு ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் அந்த சர்ச்சுக்குள் நுழைந்தேன். மிகவும் அழகான சிறிய கத்தோலிக்கன் சர்ச் அது. நான் போனபோது சில பெண்கள் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு இருளடைந்து போயிருந்த பூங்காவிற்கு வந்தேன். அதைப்பற்றி முன்பே உனக்கு நான் எழுதியிருக்கிறேன். அங்கிருந்து பார்த்தபோது தூரத்தில் ஐல்வர்த்தின் விளக்குகளும், அங்கிருக்கும் சர்ச்சும், கல்லறையும், அங்கு தேம்ஸ் நதிக்குப் பின்னால் வளர்ந்திருக்கும் வில்லோ மரங்களும் தெரிந்தன.

நாளை என்னுடைய புதிய வேலைக்காக இரண்டாவது முறையாக ஒரு சிறு சம்பளத்தை வாங்கப் போகிறேன். அதைக் கொண்டு புதிதாக ஒரு ஜோடி காலணிகளையும் ஒரு புதிய தொப்பியையும் வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அதற்குப்பிறகு கடவுளின் ஆசியுடன் எங்கேயாவது காலாற நடந்து போய் வர வேண்டும்.


லண்டன் தெருக்களில் மணம் கமழும் வயலட் மலர்களை எங்கு பார்த்தாலும் விற்கிறார்கள். அந்தப் பூக்கள் வருடத்திற்கு இரண்டு முறை இங்கு பூக்கின்றன. திருமதி.ஜோன்ஸுக்காக நான் கொஞ்சம் மலர்களை வாங்கினேன். அதை அவரிடம் தந்தால், அவ்வப்போது நான் குழாயில் புகை பிடிப்பதை, குறிப்பாக - சாயங்கால வேளைகளில் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது - அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடுவார் என்பது என் எண்ணம்.

தியோ, சீக்கிரம் நீ நன்கு குணமாக வேண்டும். அம்மா உன்னுடன் இருக்கும்போது இந்தக் கடிதத்தைப் படி. உங்கள் இருவருடனும் நான் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். திரு.ஜோன்ஸ் தன்னுடைய சர்ச்சில் எனக்கு வேலை தருவதாக சொன்னதற்காக நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்பதை நான் சொல்லவே வேண்டியதில்லை. நான் என்ன விரும்புகிறேனோ அதை படிப்படியாக அடைந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் உன்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். உனக்கும் உன்னுடன் உட்கார்ந்திருக்கும் அம்மாவுக்கும் தனித்தனியாக கையை நீட்டுகிறேன் - குலுக்குவதற்கு. ரூஸ் குடும்பத்தினருக்கும், எனக்குத் தெரிந்த எல்லோருக்கும், குறிப்பாக - திரு.தெர்ஸ்டீக்கிற்கும் என் அன்பை வெளிப்படுத்து. லண்டனுக்குப் போய் வந்த அந்த நீண்ட நடைக்குப் பிறகு அம்மா பின்னிய அந்த ஒரு ஜோடி காலுறையைத்தான் நான் அணிந்தேன் என்றும், அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன என்பதையும் நான் கூறியதாக அம்மாவிடம் கூறு.

இன்று காலையில் சூரியன் மீண்டும் அழகாக உதித்தது. அதை நான் ஒவ்வொரு நாளும் பையன்களை எழுப்பும்போது பார்க்கிறேன். வணக்கம்.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

டார்த்ரெ, ஹாலண்ட், ஏப்ரல் 16, 1887

அன்புள்ள தியோ,

உன் கடிதம் கிடைத்தது. நன்றி, தைரியமாக இரு. கடவுள் உன் மனதிற்குத் தேவையான பலத்தைத் தருவார். இன்று வீட்டிலிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்திருக்கிறது. அதில் அப்பா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம் இருவரும் சேர்ந்து ஆம்ஸடர்டாமுக்குப் போய் கார் அங்கிளைப் பார்க்க முடியுமா என்று என்னைக் கேட்டு எழுதியிருக்கிறார். நீ வருவதாக இருந்தால், நான் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கே தி ஹேக்கிற்கு வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து அடுத்த நாள் காலையில் முதல் ட்ரெயினிலேயே ஆம்ஸ்டர்டாம் சென்று விடுவோம்.

நாம் இதை செய்வதுதான் சரி என்று என் மனதிற்குப் படுகிறது. அப்பா இதை மிகவும் விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். மேலும் நாம் இருவரும் சேர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையை செலவழித்ததாகவும் இருக்கும். ஒரு இரவு முழுக்க உன்னுடன் தங்க முடிந்தால் தங்குகிறேன். இல்லாவிட்டால் ஏதாவதொரு ஹோட்டலைப் பார்த்து நான் போய் தங்கிக் கொள்கிறேன். இது விஷயமாக உடனடியாக ஒரு அஞ்சலட்டையில் எழுதிப் போடு. நாம் இருவரும் சீக்கிரம் சேர பார்ப்போம்.

இன்று மதியம் மிகவும் தாமதமாக ஒரு நீண்ட நடையை நான் மேற்கொண்டேன். அப்படிப் போனால் என்ன என்று என் மனதிற்குத் தோன்றியது. முதலில் சர்ச்சை சுற்றிலும், அதற்குப் பிறகு புதிய சர்ச்சைத் தாண்டியும், பிறகு மில்கள் இருக்கும் சாலை வழியாகவும்... அந்த சாலையை ஸ்டேஷனுக்கு அருகில் நடக்கும்போதே ஒருவர் பார்க்கலாம். இந்த இடங்களை சுற்றிப் பார்க்கிறபோது அவை என்னென்னவோ நம்மிடம் சொல்வதைப் போல் இருக்கிறது. ‘தைரியமாக இரு. பயப்படாதே’ என்று அவை சொல்வதாக எனக்குத் தோன்றும். என்னுடைய வாழ்க்கையை முழுமையாக கடவுள் சேவைக்கும் அவரின் சொற்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் அர்ப்பணிக்கக்கூடிய சூழ்நிலை சீக்கிரம் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக நான் தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். என் வார்த்தைகளை அவர் காது கொடுத்து கேட்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மனதில் முழுமையான நம்பிக்கையுடன் நான் இதைச் சொல்கிறேன். யாராவதொருவர், நடைமுறையில் இது நடக்காது என்று சொல்வார்களேயானால், நான் அந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க ஆரம்பிக்கிறேன். எது நடக்காது என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அந்த எண்ணத்துக்குக் கீழே நான் புகுந்து உள்ளே நுழைகிறேன். அதற்குப் பிறகு என் மனம் கடவுளுடன் தொடர்பு கொள்கிறது. அவரால் முடியாதது உலகத்தில் என்ன இருக்கிறது? எது முடியாது என்கிறார்களோ, அது கடவுளால் முடியும் என்றாகிறது. அவர் இருக்கும்போது நடக்காமல் போகுமா?

இந்த விஷயத்தில் மட்டும் நான் வெற்றி பெற்றால், மனதிற்குள் இருக்கும் அந்தத் தாழ்வு மனப்பான்மை முழுமையாக இல்லாமல் போனால், எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏனென்றால் நான் மேற்கொண்ட காரியங்கள் எல்லாமே தோல்வியில் போய் முடிகின்றன. எனக்கு உண்டாகும் அதிர்ச்சிகளும் மனதில் ஆக்கிரமித்திருக்கும் கவலை அலைகளும் என்னை விட்டுப் போய், வாய்ப்பு, மனபலம் இரண்டும் முழு வடிவத்தில் என்னிடம் வந்து சேர்ந்தால் அப்பாவும் நானும் கடவுளுக்கு முழு மனதோடு நன்றி கூறுவோம். கை குலுக்குகிறேன். ரூஸைக் கேட்டதாகக் கூறு.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

ஆம்ஸ்டர்டாம், செப்டம்பர் 18, 1877

அன்புள்ள தியோ,

மெஸர்ஸ் குபில் அண்ட் கோவிற்காக வர்த்தகப் பயணத்தை நீ மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. உன்னை மீண்டும் பார்க்கப் போகிறேன் என்பதை நினைக்கும்போது மனதிற்கு இப்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பப்படுகிறேன். ஒரு முழு நாள் நானும் நீயும் சேர்ந்து இருப்பது மாதிரி ஒரு ஏற்பாட்டை நீ செய்யக்கூடாதா? அப்படி நீ செய்தாய் என்றால் ஒருநாள் முழுக்க அமைதியாக நாம் இருவரும் சேர்ந்து நம் நேரத்தை செலவழிக்கலாமே.

 இந்த வாரம் மெந்தெஸ் நகரத்தில் இல்லை. ஸோலில் இருக்கும் அவரின் பழைய மாணவரான ரெவ.ஸ்ரோடருடன் சில நாட்கள் இருப்பதற்காக அவர் போயிருக்கிறார். அதனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதில் நீண்ட காலமாக மனதில் ஒதுக்கி வைத்திருந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தேன். அது ட்ரிப்பன் ஹியூவிற்குச் சென்று ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களைப் பார்த்து வர வேண்டும் என்பதுதான். இன்று காலையிலேயே அங்கு போய்விட்டேன். அங்கு போனதற்காக உண்மையிலேயே மிகவும் சந்தோஷப்படுகிறேன். அங்கிருக்கும்போதே என் மனதிற்குள் நீயும் நானும் மீண்டுமொரு முறை இதை சேர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இந்த விஷயத்தைக் கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு ஒன்றோ இரண்டோ நாட்களை இதற்கென ஒதுக்க முடியுமா என்று பார்.


நான் அப்பாவைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். இரவு நேரங்களில் கூட நீண்ட தூரம் கையில் விளக்குடன் நடந்து சென்று நோய் வாய்ப்பட்ட மனிதர்களையும், மரணத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கும் மனிதனையும் போய்ப் பார்த்து அவர்களிடம் கடவுளைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பதை என் மனம் அசை போட்டுப் பார்க்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் ரெம்ப்ராண்டின் ‘தி ஃப்ளைட் டூ ஈஜிபட் இன் தி நைட்’, ‘பரியல் ஆஃப் ஜீசஸ்’ போன்ற ஓவியங்களைப் பார்க்கும்போது என்ன நினைப்பார்? ட்ரிப்பென்ஹ்யூவில் இருக்கும் அந்த ஓவியங்கள் மிகவும் உன்னதமானவை. நான் இதற்கு முன்பு வேறு எங்கும் பார்த்திராத பல ஓவியங்களை அங்கு பார்த்தேன். ஃபோடர் மியூசியத்தில் இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களைப் பற்றி அங்கிருந்தவர்களே சொன்னார்கள். உன்னால் முடியுமென்றால் இது விஷயமாக திரு.தெர்ஸ்டீக்கிடம் பேசிப் பார். அதைக் கடிதத்தில் எனக்குத் தெரியப்படுத்து. நான் என் வேலைகளை முடித்துவிட்டு தயாராக இருக்கிறேன். நீ இங்கு வந்த பிறகு அதைப் போய் பார்ப்போம்.

இந்த மாதிரியான ஓவியங்களை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. உன்னைப் பற்றியும் வீட்டில் உள்ள எல்லோரைப் பற்றியும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

நான் வேலை செய்யும்பொழுதே காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் எதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன். நான் யாரையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும், எந்த மாதிரி விஷயங்களால் அவர்கள் கவரப்பட்டிருக்கிறார்கள் போன்ற விஷயங்களை நான் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ‘ஓவியத்தை நன்றாக ஆராய்ந்து பார்’ என்ற வாசகத்தை நாம் மிகவும் சாதாணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது - அது எத்தனைப் பெரிய வழிகாட்டியாக இருக்கிறது என்பதை ஒரு நிமிடம் மனதில் நினைத்துப் பார்க்கிறேன். அந்த வார்த்தையை சிரமேற்கொண்டு நான் உன் வேலையில் தீவிரமாக ஈடுபட எண்ணுகிறேன். அப்படியென்றால் மட்டுமே முடிவற்ற அந்தப் பொக்கிஷத்திலிருந்து எத்தனையோ பழைய, புதிய விஷயங்களை நம்மால் கொண்டு வர முடியும்.

ஆன்ட்வெர்ப்பிற்கு நீ போயிருந்ததாக எனக்கு அப்பா எழுதியிருந்தார். அங்கு நீ என்னவெல்லாம் பார்த்தாய் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆவலாய் இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு முன்பு நான் அங்குள்ள மியூசியத்தில் பழைய ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். ரெம்ப்ராண்ட்டின் ஒரு அழகான ஓவியத்தை இப்போதுகூட என்னால் மறக்க முடியவில்லை. எந்த விஷயத்தையும் மறக்காமல் ஒரு மனிதன் ஞாபகத்தில் வைத்திருப்பானேயானால், அது உண்மையிலேயே நல்ல ஒரு காரியம்தான். ஆனால், அது சாலையில் தெரியும் காட்சிகளைப் போலத்தான். தூரத்தில் இருக்கும் பொருட்கள் எப்படி சிறியதாகவும் தெளிவில்லாமலும் தெரியுமோ, அப்படித்தான் அவை நம் ஞாபகத்தில் இருக்கும்.  

ஒருநாள் நதியில் ஒரு நெருப்பு பற்றி எரிந்த சம்பவம் நடைபெற்றது. சாராயம் ஏற்றப்பட்டிருந்த ஒரு படகு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது நான் அங்கிளுடன் வாஸ்னாரில் இருந்தேன். பெரிய ஆபத்து எதுவும் நல்லவேளை நடக்கவில்லை. வெகு சீக்கிரமாகவே எரிந்து கொண்டிருந்த அந்தப் படகை மற்ற கப்பல்கள் நிற்கும் இடத்திலிருந்து மாற்றி வேறொரு இடத்திற்கு கொண்டு போய் கட்டிப் போட்டு விட்டார்கள். நெருப்பு ஜுவாலை உயர்ந்து எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வெளிச்சத்தில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கறுப்பு வர்ணத்தில் தெரிந்தார்கள். சுற்றிலும் நின்றிருந்த மற்ற சிறு படகுகள் கருப்பாக நீரில் தெரிந்தன. புகைப்படக் கண்காட்சியில் பார்த்த ஜாஸ் எடுத்த ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’, ‘நெருப்பு’ ஆகிய படங்களை உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? படகு நெருப்பில் எரிந்தது அந்த புகைப்படங்களைத்தான் எனக்கு ஞாபகப்படுத்தியது.

அந்தி வெளிச்சம் தெரிகிறது. ‘ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம்’ என்றார் டிக்கன்ஸ். அவர் சொன்னது சரியே. ஒரே மாதிரி மனதில் சந்திக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்று சேர்ந்து இருந்தார்களேயானால் அது உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம்தான். இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்தமர்ந்து கடவுளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார்களேயானால், அது உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம்தான். அப்போது அவர்களுடன் நிச்சயம் கடவுள் இருப்பார். இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்து எவன் அவற்றைப் பின்பற்றுகிறானோ, உண்மையிலேயே அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான். ரெம்ப்ராண்ட் தன் இதயத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷக் குவியலில் இருந்து செப்பியா, கரி, மை ஆகியவற்றால் உண்டாக்கிய அற்புதமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அது பிளீட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. பெத்தானியில் உள்ள வீட்டை எனக்கு அது ஞாபகப்படுத்தியது. அந்த அறைக்குள் மாலை நேர வெளிச்சம் ஜன்னல் வழியாக உள்ளே விழுந்து கொண்டிருக்கிறது. அப்போது கடவுளின் உருவம் அந்த அறைக்குள் சற்று இருட்டுக்குள் மூழ்கி, கடுமையாக இருப்பதைப் போல் நமக்குத் தோற்றம் தருகிறது. இயேசுவின் காலடியில் மேரி அமர்ந்திருக்கிறாள். அந்த இடம் அவளே தேர்ந்தெடுத்தது. அந்த இடத்தை அவளிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. மார்த்தா அதே அறையில் இருந்து கொண்டு வேறு ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். உன் ஞாபகம் சரியாக இருந்தால், அவள் நெருப்பை மூட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த ஓவியத்தை என்னால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. அது இந்த வாக்கியத்தை சொல்வதுபோல் எனக்குத் தோன்றும். ‘உலகத்திற்கு நானே விளக்காக இருக்கிறேன். என்னை யார் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் இருட்டில் நிச்சயம் நடக்க மாட்டார்கள். மாறாக, வாழ்க்கையின் வெளிச்சம் அவர்கள் மேல் விழும்.’

காதால் கேட்பவர்களுக்கு, இதயத்தால் புரிந்து கொள்பவர்களுக்கு, கடவுள் மேல் நம்பிக்கை கொள்பவர்களுக்கு அந்த அந்தி வெளிச்சம் பல விஷயங்களை சொல்லத்தான் செய்கின்றன. அதே அந்தி வெளிச்சம் ரைபெரே வரைந்திருக்கும். ‘இமிட்டேஷன் ஆஃப் ஜீஸஸ் க்ரைஸட்’ என்ற ஓவியத்திலும் ரெம்ப்ராண்ட்டின் இன்னொரு ஓவியமான ‘டேவிட் இன் ப்ரேயர் டு காட்’ என்பதிலும்கூட இருக்கிறது.

ஆனால், எப்போதுமே அந்த ஆசீர்வதிக்கப்பட்ட அந்தி வெளிச்சம் இருக்கும் என்று சொல்ல முடியாது. என்னுடைய கையெழுத்தை வைத்தே அதை நீ புரிந்து கொண்டிருக்கலாம். நான் மாடியில் விளக்கின் அருகில் அமர்ந்திருக்கிறேன். விருந்தாளிகள் சிலர் கீழே அமர்ந்திருக்கிறார்கள். என்னுடைய புத்தகங்களுடன் நான் அங்கு அமர்ந்திருக்க முடியாது. ஜான் அங்கிள் உன்னை மிகவும் விசாரித்தார்.


உனக்கு நல்லது நடக்கட்டும். சீக்கிரம் எனக்கு கடிதம் எழுது, விரைவில் உன்னை எதிர்பார்க்கிறேன். உன்னை மீண்டும் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நாம் நிறைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது. வெகு விரைவில் திறக்கப்பட இருக்கிற பொருட்காட்சியை இந்தக் கோடையின்போது நாம் போய் பார்ப்போம். ரூஸ் குடும்பத்தை மிகவும் கேட்டதாகக் கூறு. வணக்கம். கை குலுக்கலுடன்.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

லேக்கன், ப்ரஸ்ஸல்ஸின் புறநகர் பகுதி, நவம்பர் 15, 1878

அன்புள்ள தியோ,

நாம் இருவரும் சேர்ந்திருந்த அந்த மாலை நேரம் மிகவும் வேகமாக ஓடிவிட்டதைப்போல எனக்குத் தோன்றுகிறது. மீண்டும் உனக்கு கடிதம் எழுத வேண்டும்போல் எனக்கு இருந்தது. உன்னை மீண்டும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் உண்டானதற்கும், உன்னுடன் பேசிக் கொண்டிருந்ததற்கும் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அந்த நாள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட நாள்தான். கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த நாள் போய்விட்டாலும், மனதில் அந்த நினைவு எப்போதும் தங்கி நிற்கும். ஒருநாளும் அந்த கணங்களை மறக்கவே முடியாது. விடுமுறை எடுத்துவிட்டு, நான் நடந்து வரலாம் என்று போனேன். குறுகிய தூரத்திற்கு அல்ல, நீண்ட தூரத்திற்கு. வழியெங்கும் நிறைய பட்டறைகள் இருக்கினற்ன. பார்ப்பதற்கு அவை அழகாக இருக்கின்றன. குறிப்பாக- மாலை நேரங்களில் விளக்குகளுக்கு மத்தியில் அந்தப் பணிமனைகளைப் பார்க்கிறபோது அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அங்கிருக்கும் தொழிலாளிகளும், வேலை செய்பவர்களும் நாம் அவர்களுடன் பேசினால் பேசுகிறார்கள். நான் அவர்களுடன் பேசும்போது அவர்கள் சொன்னார்கள்- ‘பகல் நேரங்களில் கடுமையாக வேலை செய்ய வேண்டும். இரவில்தான் நாம் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லையே.’

அந்த நேரத்தில் தெருவை சுத்தம் செய்பவர்கள் தங்களின் வண்டிகளை வீதிகளின் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். அந்த வண்டிகளில் வெள்ளை நிற குதிரைகள் பூட்டப்படடிருந்தன. வரிசையாக அந்தக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வெள்ளை குதிரைகள் சில பழங்கால ஓவியங்களை, அவை பெரிய கலைத்தன்மை கொண்டதாக இல்லாமல் இருக்கலாம், என் மனதில் ஞாபகப்படுத்தின. ஆனால், என்னிடம் அவை மிகப்பெரிய தாக்கத்தையும், ஈடுபாட்டையும் உண்டாக்கியதென்னவோ உண்மை. நான் எதை சொல்கிறேன் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? ‘ஒரு குதிரையின் வாழ்க்கை’ என்பதைத்தான் கூறுகிறேன். அந்த ஓவியத்தில் ஒரு வெள்ளை குதிரை இருக்கும். மிகவும் மெலிந்து போய், வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைத்ததன் விளைவாக மிகவும் தளர்ந்து போய் அது காணப்படும். அந்த அப்பிராணி குதிரை ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் யாருக்குமே இல்லாமல் தான் மட்டும் தனியே நின்றிருக்கும். அது நின்றிருக்கும் இடத்தைச் சுற்றிலும் காய்ந்து போன புல் இருக்கும். அருகில் ஒரு வயதான மரம் சூறாவளியால் வளைந்து சாய்ந்து கிடக்கும். நிலத்தில் ஒரு மண்டையோடு கிடக்கும். தூரத்தில் ஒரு குதிரையின் பழைய எலும்புக்கூடு... அந்த எலும்புக் கூட்டுக்குப் பக்கத்தில் குதிரையின் தோலை உரித்து விற்பவனின் குடிசை. அதற்கு மேல் ஓவியத்தில் இருப்பவை- அதிர்ந்து கொண்டிருக்கும் வானம், குளிர்காலம், வெளிச்சம் அதிகமில்லாத பகல், இருண்டு போன சீதோஷ்ண நிலை...

உண்மையிலேயே மனதிற்கு மிகவும் வருத்தத்தையும் சோகத்தையும் தரக்கூடிய காட்சி அது. அதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நாமும் ஒருநாள் இப்படி மரணம் என்ற பள்ளத்தாக்கைத் தாண்டத்தானே வேண்டியிருக்கிறது என்று கட்டாயம் நினைப்பார்கள். மரணத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. அந்தப் புதிருக்கான விடை கடவுளுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் இறந்தவர்களுக்கு மீண்டும் புதுவாழ்வு இருக்கிறது என்பதைத் தன்னுடைய வார்த்தைகளில் அவர் கூறியிருக்கிறார்.

அப்பிராணி குதிரை, முன்பு அவனுக்கு உண்மையாக உழைத்த உயிர், பொறுமையாக, அதே நேரத்தில் தைரியமாக நின்று கொண்டிருக்கிறது. அது தன்னுடைய கடைசி நேரத்திற்காக காத்திருக்கிறது. இந்தக் குதிரைகளைப் பார்த்தபோது எனக்கு அந்த ஓவியம்தான் ஞாபகத்தில் வந்தது.

குதிரை வண்டிக்காரர்களின் தோற்றத்தைப் பார்த்தேன். அழுக்கடைந்த ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். வறுமையின் பிடியில் அவர்கள் பலமாக சிக்கிக் கிடப்பதை பளிச்சென என்னால் பார்க்க முடிந்தது. அவர்களைப் பார்த்தபோது மாஸ்டர் தெக்ரூவின் ‘பென்ச் ஆஃப் தி புவர்’ என்ற ஓவியம்தான் என் மனக்கண்ணில் தோன்றியது. இந்த மாதிரியான வறுமைக் கோலங்களைப் பார்க்கிற போது மனரீதியாக நான் அதிர்ச்சியடைந்து போகிறேன். வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு பரிதாப நிலையை நான் உணர்கிறேன். வறுமை, கஷ்டம், தனிமை - எல்லாவற்றையும் பார்க்கிறபோது மனதில் தாங்க முடியாத துயரம்தான் உண்டாகிறது. இந்த மாதிரியான நேரங்களில்தான் நம் மனம் கடவுளை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது. நான்கூட கடவுளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறேன். அப்பா அடிக்கடி சொல்லுவார்- ‘மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணம் உண்டாகிறதென்றால் அந்த எண்ணம் உண்டாகும் ஒரே இடம் சர்ச் மட்டுமே. வேறு எந்த இடத்திலும் அந்த எண்ணம் உண்டாவதாக நான் நினைக்கவில்லை. அங்குதான் நாம் உண்மை எதுவென்று நன்கு புரிந்திருக்கிறோம். நாம் இருவரும் சேர்ந்து மியூசியத்தைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தெக்ரூவின் ஓவியங்களையும், லெஸ் வரைந்த ஓவியங்களையும், வேறு சில ஓவியங்களையும் - குறிப்பாக கூஸ்மேனின் கைவண்ணத்தையும் பார்க்க முடிந்ததற்காக நான் மனப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன். நீ எனக்குத் தந்த இரண்டு படங்களையும் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ‘தி த்ரீ மில்ஸ்’ என்ற ஓவியம் உன்னிடம்தானே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தொகையை நீயே கட்டிவிட்டாய். பாதியாவது என்னைக் கட்ட நீ விடவில்லையே. நீ இந்த ஓவியத்தை உன்னிடம் இருக்கும் மற்ற ஓவியங்களுடன் சேர்த்து வைத்து பாதுகாக்க வேண்டும். அதன் பிரதி எடுத்தது சரியில்லாமல் இருந்தால்கூட, அது ஒரு மிகச்சிறந்த ஓவியம் என்பதில் சந்தேகமில்லை. இத்துடன் ‘சார்பனேஜ்’ என்ற அவசர அவசரமாக வரைந்த சிறு ஓவியத்தை நான் இணைத்திருக்கிறேன்.

என் வழியில் நான் பார்த்த விஷயங்களை வைத்து பல ஓவியங்களை வரைய என் மனம் விழைகிறது. ஆனால், அவற்றை வரைவதாக இருந்தால், என்னுடைய அன்றாட வேலைகள் மிகவும் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லதென்று நினைக்கிறேன்.


‘சார்பனேஜ்’ என்ற அந்த ஓவியத்தில் குறிப்பிட்டுக் கூறும்படி எதுவுமில்லை. ஆனால், அதை நான் வரைந்ததற்கான காரணம் - அதைப் பார்ப்பவர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதே. அவர்கள் வித்தியாசமான மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நான் சொல்லுவேன். அந்த சிறு வீடு சாலையை விட்டு மிகவும் தூரத்தில் இல்லை. அங்கிருக்கும் பெரிய நிலக்கரி ஷெட்டை ஒட்டி இருக்கும் சிறு அதையே அது. வேலை செய்யும் தொழிலாளிகள் ரொட்டி சாப்பிடுவதற்காகவும் பீர் குடிப்பதற்காகவும் மதிய உணவு நேரத்தில் அந்த சிறு அறையைத் தேடி வருவார்கள்.

இங்க்லேண்ட்டில் இருக்கும்போது, நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கும் இடத்தில் போய் பணியாற்ற வேண்டும் என்று இவன்ஜெலிஸ்ட் வேலைக்கு நான் மனு போட்டேன். ஆனால், என்னுடைய வயது இருபத்தைந்தாவது இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். பைபிளின் அடிப்படைகளில் ஒன்று என்று கூறுவதானால், ‘இருட்டிலிருந்து உண்டாகும் வெளிச்சம்’ என்ற வாசகத்தைத்தான் சொல்ல வேண்டும். இந்த வாசகம் யாருக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும்? நீயே யோசித்துப் பார். இருட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத்தான் நிலக்கரிச் சுரங்கங்களில் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் -இந்த வாசகம் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? இந்த வாசகத்தை அவர்கள் விரும்புவதோடு நின்று விடாமல், அதை முழுமையாக நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. பெல்ஜியத்திற்குத் தெற்கே ஹெனால்ட் பகுதியில் ஃப்ரென்ச் எல்லைவரை, ஏன் - அதையும் தாண்டி என்றுகூட சொல்லலாம் போரினேஜ் என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது. அங்கு இருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மண்ணியலைப் பற்றி நான் வைத்திருந்த சிறு புத்தகமொன்றில் அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது- ‘போரின்ஸ் (மான்ஸுக்கு மேற்கே இருக்கும் போரினேஜில் வசிப்பவர்கள்) என்றழைக்கப்படும் மனிதர்கள் அங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிகிறார்கள். இந்தச் சுரங்கங்கள் பூமிக்கு 300 மீட்டருக்குக் கீழே இருக்கின்றன. தினமும் இந்தத் தொழிலாளர்கள் சுரங்கங்களுக்குள் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது, அவர்கள் மீது நமக்கு பரிதாபமும், மதிப்பும் கட்டாயம் தோன்றும். பகல் வெளிச்சத்தை போரினேஜில் இருக்கும் தொழிலாளி பார்க்கவே முடியாது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவன் சூரிய பார்க்கிறான். மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்கு வெளிச்சத்தில் குறுகலான ஒரு சத்துக்குள் தன்னுடைய உடம்பை வளைத்துக் கொண்டு, சரியாக சொல்வதாக இருந்தால்- ஊர்ந்தவாறு அவன் அங்கு வேலை செய்கிறான். பல்வகை ஆபத்துக்களையும் தன்னைச் சுற்றிலும் வைத்துக் கொண்டுதான் அந்தத் தொழிலாளி பூமிக்குள்ளிருந்து நிலக்கரியை எடுக்கிறான். ஆனால், பெல்ஜியம் நிலக்கரித் தொழிலாளி மகிழ்ச்சியாகவே இருக்கிறான். காரணம்- அந்த வாழ்க்கைக்கு அவன் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டதுதான். இருட்டில் வழிகாட்டக்கூடிய விளக்கை தலையில் இருக்கும் தொப்பியில் அணிந்துகொண்டு சுரங்கத்திற்குள் இறங்கும் தொழிலாளி தன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்து விடுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்தான் அவன் கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்கிறார். அவர்தான் அவனின் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுகிறார்.

போரினேஜ் லெஸினேக்கு தெற்கில் இருக்கிறது. அங்கு போனால் கல் குவாரிகளை நிறைய பார்க்கலாம்.

அங்கு கிறிஸ்தவ மத பிரச்சாரகராக செல்ல நான் மனப்பூர்வமாக விரும்பினேன். அதற்கென ரெவ.தேயாங்க், ரெவ.பீட்டர்ஸென் இருவரும் தந்த மூன்று மாத பயிற்சிகூட எனக்கு முடிந்துவிட்டது. செயின்ட்பால் மதத்தைப் பரப்புவதற்கு முன்பு அரேபியாவில் மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார். அதே போன்று மூன்று வருடங்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமானால், அந்த இடத்தில் நான் தெரிந்து கொள்ளும் விஷயங்களாலும், பல விஷயங்களை கூர்மையாக கவனிக்க நேர்வதாலும், வெளியே வரும்போது குறிப்பிட்டுக் கூறும்படியான சில தகுதிகளுடன்தான் வருவேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு முழுமையான நம்பிக்கையுடன்தான் நான் இந்த வார்த்தைகளைக் கூறுகிறேன். கடவுள் மட்டும் எனக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கச் செய்தாரேயானால், என்னுடைய பயிற்சியாலும் அனுபவத்தாலும் இப்போதிருப்பதைவிட மிகச்சிறந்த ஒரு மனிதனாக என்னால் மாறிக்காட்ட முடியும்.

இந்த விஷயத்தைப் பற்றி நாம் பலமுறை பேசிய பிறகும்கூட, அதை மீண்டும் உனக்கு நான் எழுதுகிறேன்.

போரினேஜில் ஏற்கனவே ப்ராட்டஸ்டன்ட் இனத்தவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள்கூட இருக்கின்றன. மதப்பிரச்சாரகராக எனக்கு வேலை கிடைக்கும் பட்சம், பைபிளை மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூற என்னால் முடியும். அங்கிருக்கும் ஏழைகளுக்குத்தான் இது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. இது தவிர, மக்களுக்கு பாடம் சொல்லித் தரவும் என்னால் முடியும்.

செயின்ட் கில்லுக்கு நீ போயிருக்கிறாய் அல்லவா? நான் ஏற்கனவே அங்கு போயிருக்கிறேன். ஆல்ஸெம்பெர்க் என்ற மலைக்கு வலது பக்கத்தில் செயின்ட் கில்லின் கல்லறை இருக்கிறது. அங்கு இடத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென எப்போதும் இருக்கும். அங்கிருந்தவாறு நாம் முழு நகரத்தையும் பார்க்கலாம்.

இன்னும் சிறிது தாண்டி போனால், ஒரு காட்டை அடையலாம். அந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மலைச் சரிவுகளில் பழமையான வீடுகள் இருக்கும். பாஸ்பூம் வரைந்திருக்கும் ஓவியங்களில் காட்சியளிக்கும் குடிசைகளைப்போல் அவை இருக்கும். எல்லா வகையான வயல் வேலைகளையும் நாம் அங்கு பார்க்கலாம். தானியங்களை விதைப்பது, உருளைக் கிழங்கைத் தோண்டி எடுப்பது, முள்ளங்கியைக் கழுவுவது, விறகு பொறுக்குவது - எல்லாமே பார்க்க அழகாக இருக்கும். மான்மார்த்ரேயை எனக்கு அது ஞாபகப்படுத்தும். பழமையான வீடுகளில் பசுமையான கொடிகள் படர்ந்திருக்கும். சிறு சிறு வீடுகள் நிறைய இருக்கும். வீடுகளுக்கு மத்தியில் ஒரு கடுகு விவசாயம் செய்யும் மனிதனின் வீட்டை நான் பார்த்திருக்கிறேன். திய் மேரியின் ஓவியத்தைப் பார்ப்பதைப்போல் அந்த வீடு இருக்கும். ஆங்காங்கே கல் குவாரிகள் இருக்கும். அதன் வழியே சாலைகள் வளைந்து வளைந்து செல்லும். குதிரைகள் வெள்ளை நிறத்தில் சிவப்பு வர்ண குஞ்சத்தைக் கட்டியவாறு வண்டியை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கும். குதிரை வண்டியை ஓட்டுபவன் நீல நிறத்தில் மேற்சட்டை அணிந்திருப்பான். ஆடு, மாடு மேய்ப்பவர்கள்கூட அங்கு தென்படுவார்கள். கருப்பு ஆடைகள் அணிந்திருக்கும் பெண்கள் வெள்ளை நிற தொப்பிகளை அணிந்திருப்பார்கள். தெக்ரூவின் ஓவியங்களை ஞாபகப்படுத்துவார்கள் அவர்கள். சில இடங்களில் போய் வேலை செய்கிறபோது நமக்கு வீட்டு ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கும்.


ஆனால், இங்கு அப்படியல்ல... நம் வீட்டில் இருப்பதைப்போலவே ஒரு உணர்வு நமக்குத் தோன்றும். அந்த உணர்வு மனதிற்கு ஒரு புது தெம்பைத் தரும். அது எப்படி வருகிறது என்பது தெரியவில்லை... என்ன காரணத்தாலோ வேலை செய்வதற்கு புது சக்தியும், உற்சாகமும் நமக்கு கிடைக்கிறது என்பதென்னவோ உண்மை. காட்டைக் கடந்து நான் பக்கவாட்டில் போன பாதை வழியே நடந்து போனால், பாசி படர்ந்த ஒரு சர்ச்சில் போய் அது முடிந்தது. அங்கு நிறைய லின்டென் மரங்கள் இருந்தன. ஆல்பெர்ட்துரே வரைந்த ‘ரிட்டர், டோட் அன்ட் ªபூஃபே’ என்ற ஓவியத்தை அங்கு நான் கண்ட காட்சி ஞாபகப்படுத்தியது. கார்லோ டால்ஸியின் ‘தி கார்டன் ஆஃப் ஆலிவ்ஸ்’ என்ற ஓவியத்தை நீ பார்த்திருக்கிறாயா? ரெம்ப்ராண்ட்டின் முத்திரை பலவற்றை அதில் நாம் பார்க்கலாம். நான் சமீபத்தில் அதைப் பார்த்தேன். இரண்டு பெண்களும் தொட்டிலும் உள்ள ‘தி பைபிள் ரீடிங்’ என்ற ஓவியத்தை நீ பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஃபாதர் கோரோ அதே விஷயத்தைப் பற்றி வரைந்திருக்கும் ஓவியத்தை நீ பார்த்திருப்பதாகச் சொன்னது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் மரணமடைந்து சிறிது நாட்களில் நடத்தப்பட்ட கண்காட்சியில் அவரின் அந்த ஓவியத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து நின்றுவிட்டேன்.

ஒருவன் எதைப் பார்த்தானோ, அதை மட்டுமே அவன் மனதில் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அதுதான் உயர்வான கலையம்சம் கொண்டது. அதற்குப் பிறகு அவன் நிச்சயமாக ஒரு தனிமையை அனுபவிக்கும் மனிதன் இல்லை. அவன் தனியாக இருக்கிறான் என்று அதற்குப் பிறகு நாம் கூறவும் முடியாது. அவன்தான் தான் பார்த்த கலையம்சம் கொண்ட பொருளைப் பற்றிய ஞாபகங்களுடன் இருக்கிறானே.

இதய மகிழ்ச்சியுடன் நான் கை குலுக்குகிறேன். நல்லது நடக்கட்டும். வேலையில் வெற்றிகள் பல காண வாழ்த்துகிறேன். வாழ்க்கைப் பாதையில் நல்ல விஷயங்கள் பலவற்றை நீ சந்திக்க வாழ்த்துக்கள். அவை என்றும் நம் மனதில் நிலை பெற்று அதை மேலும் வளமுள்ளதாக ஆக்கட்டும். மவ்வைப் பார்த்தால், நான் கேட்டதாகச் சொல்.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

இந்தக் கடிதத்தை என்னிடமே பல நாட்கள் இருக்க வைத்துவிட்டேன். நவம்பர் 15ம் தேதி கடந்து போய் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ரெவ.தேயோங்கிடமும் மாஸ்டர் போக்மாவிடமும் பேசிப் பார்த்தேன். ஃப்ளெமிஷ் மாணவர்களை அனுமதித்ததைப்போல் என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு மேலும் நான் இருப்பதாக இருந்தால், இப்போது இருப்பதைவிட எனக்கு அதிகம் பணம் தேவைப்படுகிறது. அதனால் போரினேஜ் செல்லும் திட்டத்தை மேற்கொள்வதே சரியென எனக்குப் படுகிறது. அங்கு நான் போய்விட்டால் இன்னொரு பெரிய நகரத்தை சமீப காலத்திற்கு நான் நினைத்துப் பார்க்கவே மாட்டேன்.

கடவுள்மேல் முழுமையான நம்பிக்கை இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் நமக்கு தைரியம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.

***

ஹாலண்ட்

எட்டன், ஹாலண்ட், நவம்பர் 3, 1881.

அன்புள்ள தியோ,

என்னுடைய இதயத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை நான் உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும். ஒரு விதத்தில் பார்க்கப் போனால், இந்த விஷயம் உனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்ததுதான், புதிதான ஒன்றுமல்ல. இந்தக் கோடையில் கீ மீது எனக்கு ஒரு ஆழமான காதல் பிறந்துவிட்டது என்பதை உன்னிடம் சொல்ல நான் பிரியப்படுகிறேன். என் காதலை அவளிடம் வெளிப்படுத்தியபோது அதை அவள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். கடந்த காலம், எதிர்காலம் எல்லாமே தனக்கு ஒன்றுதான் என்கிறாள் அவள்.

அவள் அப்படிச் சொன்ன பிறகு எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் என் காதலை ஒரேயடியாக மறுத்துவிட்டாள் என்பதை ஏற்றுக்கொண்டு வெறுமனே இருந்துவிடுவதா, இல்லாவிட்டால் அவள் இன்னும் சரியான முடிவெடுக்கவில்லை என்று நினைத்து, மேலும் நம்பிக்கையை மனதில் வைத்துக்கொண்டு என் காதலைக் காற்றில் பறக்கவிடாமல் இருப்பதா?

இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதே நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் என் காதலை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு நான் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அவள் அப்படி என் காதலை மறுத்ததற்காக ஒரு விதத்தில் நான் ஏமாற்றமடைந்தாலும், இந்த நிமிடம் வரை அப்படி அவள் சொன்னாள் என்பதற்காக நான் மனதிற்குள் வருத்தப்படவில்லை. இந்த மாதிரியான பல விஷயங்களை நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அவற்றைப் படிக்கும்போது மனதில் ஒரு வகை உணர்ச்சி அரும்பவும் செய்யும். ஆனால், அவற்றையே நேரில் சந்திக்கிறபோது, எத்தனைப் பேருக்கு அவை வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கிறது?

எது எப்படியோ - மனதளவில் நான் என் செயலுக்காக மகிழ்ச்சியடையவே செய்கிறேன். நான் வெளிப்படையாக என் காதலை வெளிப்படுத்தியது பிறருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அப்படி தைரியமாக செயல்பட்டதற்காக உண்மையிலேயே நான் சந்தோஷப்படுகிறேன்.

இந்த விஷயத்தை முன்கூட்டியே உனக்கு நான் ஏன் தெரியப்படுத்தவில்லையென்றால், அந்த சமயத்தில் தெளிவற்ற ஒரு மனநிலையுடனும், பக்குவப்பட்ட ஒரு முடிவுடன் நான் இல்லாமலிருந்ததும் தான் காரணங்கள். நிலைமை அப்படியிருக்கும்போது, நான் எப்படி இதைப் பற்றி விளக்கமாக உனக்கு எழுத முடியும்? ஆனால், இப்போது எந்த கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை ஒரு நிமிடம் மனதில் நினைத்துப் பார். இந்த விஷயத்தை அவள் தவிர, அம்மா, அப்பா, அங்கிள், ஸ்ட்ரிக்கர் ஆன்ட்டி, ப்ரிசெனேஜில் இருக்கும் ஆன்ட்டி, அங்கிள் எல்லோரிடமும் நான் மனம் திறந்து கூறிவிட்டேன்.

நான் சந்தித்து சொன்னவர்களிலேயே யாருக்குமே தெரியாமல் மறைமுகமாக வந்து எனக்கு இதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், கடுமையாக முயற்சி செய்தால் நிச்சயம் எனக்கு வெற்றி கிடைக்குமென்றும் சிறிது கூட நான் எதிர்பார்த்திராத ஒரு மனிதர் என்னைப் பார்த்து சொன்னார். அவர் யார் என்று நினைக்கிறாய்? நம் வின்சென்ட் அங்கிள்தான். கீ என்னிடம் ‘நான் ஒருபோதும் உன்னை விரும்பியதில்லை. நமக்குள் அப்படி ஒரு உறவு எந்தக் காலத்திலும் நடக்க சாத்தியமே இல்லை’ என்று சொன்னதை மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் மேலோட்டமாக எடுத்துக் கொண்ட என் போக்கு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.


அவர் சொன்னபடியே இனிமேல் நடந்து கொள்ள நான் தீர்மானித்திருக்கிறேன். தேவையில்லாமல் கவலையையும் தாழ்வு மனப்பான்மையையும் என்னுடன் கூன் சதாநேரமும் ஒட்டிக் கொண்டிருக்கச் செய்ய வேண்டும்? அதற்கு பதிலாக இந்த விஷயத்தில் நான் மேலும் தீவிரமாக உழைக்கலாமே. அவளைச் சந்தித்த பிறகு, என் படைப்புகள் மேலும் சிறப்பானவையாக இருக்கின்றன என்ற உண்மையையும் நான் இங்கு ஒத்துக்கொள்ள வேண்டும்.

நான் என்னுடைய நிலைமையை முழுமையாக உன்னிடம் விளக்கிவிட்டேனென்று நினைக்கிறேன். இருப்பினும், என்னை விட வயதில் மூத்த மனிதர்களுடன் எனக்கு பலவிதத்திலும் பிரச்னைகள் உண்டாக வாய்ப்பிருக்குமென்பதையும் நான் மறக்காமலில்லை. நான் கீயைப் பார்த்து கேள்வி கேட்டதுடன், இந்த விஷயம் முழுமையாக முடித்து போய்விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என் மனதில் இருக்கும் காதலை முழுமையாக தூக்கியெறிந்துவிடும்படி அவர்கள் கேட்டுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. தற்போதைக்கு அவர்கள் என் விஷயத்தில் அனுசரனையுடன் நடந்து கொள்வது மாதிரி இருக்கலாம். நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசி என் மனதில் திருப்தி உண்டாக்க அவர்கள் முயற்சிக்கலாம். இந்த விஷயம் அங்கிள், ஆன்ட்டி இருவரின் திருமண வாழ்க்கையின் வெள்ளி விழா கொண்டாட்டம் டிசம்பர் மாதம் நடப்பது வரை தொடரலாம். அதற்குப் பிறகு என்னை ஒரேயடியாக தூக்கி விட்டெறிய அவர்கள் நடவடிக்கைகள் எடுக்கலாம்.

உண்மையான நிலைமையை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சற்று கடுமையான வார்த்தைகள் மூலம் நான் எழுதுவதற்காக தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நான் பயன்படுத்தும் வர்ணங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கலாம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய கோடுகள் முரட்டுத்தனமாக வரையப்பட்டவையாகக் கூட தோன்றலாம். புதருக்குள் எப்படி நான் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை இவற்றின் மூலம் உன்னால் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? அதனால் பெரியவர்களிடம் நான் சிறிதும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதாக எந்த காரணத்தைக் கொண்டும் என்னைக் குற்றம் சொல்லாதே. அவர்கள் எல்லோருமே ஏற்கனவே தீர்மானித்த முடிவின்படி என் காதலுக்கு எதிராக நின்று கொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். நானும் நீயும் ஒருவரையொருவர் சந்திக்காதவண்ணம், ஒருவரோடொருவர் பேசாத வண்ணம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள நேர்ந்தாலோ அல்லது ஒருவர் மற்றவருக்குக் கடிதம் எழுத நேர்ந்தாலோ அல்லது பேச நேர்ந்தாலோ கீ தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டாலும் கொள்ளலாம் என்று அவர்கள் நினைப்பதே இதற்குக் காரணம்.

தன்னுடைய மனம் எந்தவித காரணத்தைக் கொண்டும் மாறவே மாறாது என்று கீயே நினைக்கிறாள். அவள் தன்னுடைய மனதை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதை பெரியவர்கள் அவளைப் பார்த்து கூற முயற்சிக்கிறார்கள் என்ற விஷயமும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்படி எங்கே அவள் மாறிவிடப் போகிறாளோ என்று உள்ளபடியே அவர்கள் பயப்படுகிறார்கள். கீ தன்னுடைய மனதை ஒருவேளை மாற்றிக் கொண்டுவிட்டால், இந்தப் பெரிய மனிதர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. மாறாக, நான் வருடமொன்றுக்கு 1000 கில்டார்கள் சம்பாதிக்கக்கூடிய ஒரு மனிதனாக மாறினேனென்றால், ஒருவேளை அவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக மீண்டும் என்னைப் பொறுத்துக் கொள். பலரும் உன்னைப் பார்த்து சொல்லலாம் அல்லது உன் காதுகளுக்கு அப்படியொரு கோணத்தில் செய்தி வந்து சேர்ந்திருக்கலாம். சூழ்நிலையை நான் மிகவும் கடுமையாக ஆக்குகிறேன் என்று. காதல் விஷயத்தில் இருக்கும் அத்தகைய கடுமையையும், அழுத்தத்தையும் புரிந்து கொள்ளாத ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். வற்புறுத்தல் எண்ணமெல்லாம் என் மனதில் சிறிதும் இல்லவே இல்லை என்பதே உண்மை. ஆனால், அதே நேரத்தில் கீயும் நானும் சந்திக்க வேண்டும் என்று எண்ணுவதோ, ஒருவருக்கொருவர் எழுதிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதோ எப்படி தவறான, செய்யக்கூடாத ஒரு செயலாக இருக்க முடியும்? இந்தக் காரியங்களைச் செய்வதன் மூலம் ஒருவரையொருவர் மேலும் நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்தானா என்று இருவருமே தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பிருக்கிறது என்பது உண்மை அல்லவா?

ஒருவருட காலமாவது எங்களை மிகவும் நெருக்கமாகப் பேசி பழக விடுவது எங்கள் இருவருக்குமே பயனுள்ள ஒரு காரியமாக இருக்கும். ஆனால், பெரியவர்கள் இந்த விஷயத்திற்கு சிறிதாவது ஒத்துக் கொண்டால்தானே.

அவளுடன் என்னை நெருக்கமாகக் கொண்டு வரும் ஒரு விஷயத்தைக்கூட நான் விடுவதாக இல்லை. அது ஒன்றே இப்போது என் மனதில் இருக்கும் எண்ணம்.

அவளை நீண்ட காலம் நான் காதலித்ததால் அவள் இறுதியில் என்னைக் காதலிப்பாள்.

தியோ, உனக்கு காதல் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதில் இருக்கும் சின்னஞ்சிறு துயரத்திற்குக்கூட எவ்வளவு மதிப்பு இருக்கிறது தெரியுமா? சில நேரங்களில் நம்பிக்கை என்ற ஒன்றே நமக்கு இல்லாமல் போகலாம். சில வேளைகளில் நரகத்தில் நாம் இருக்கிறோமோ என்றுகூட நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். ஆனால், அதே நேரத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பல விஷயங்களும்கூட அதில் இருக்கவே செய்கின்றன. அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகை- நாமும் யாரையும் காதலிக்காமல் மற்றவர்களும் நம்மைக் காதலிக்காமல் இருப்பது.

இரண்டாம் வகை- நாம் மட்டும் காதலித்து, நாம் காதலிப்பவர் நம்மை பதிலுக்கு காதலிக்காமல் இருப்பது.

மூன்றாம் வகை- நாமும் காதலித்து, நாம் காதலித்தவர்களும் நம்மை காதலிப்பது.

இப்போது சொல்கிறேன்- இரண்டாவது வகை முதல் வகையை விட சிறந்தது. ஆனால், மூன்றாவது வகைதான் எல்லாவற்றையும்விட மிக மிகச் சிறந்தது. தியோ, நீயும் காதல் என்ற வலையில் விழு. விழுந்த பிறகு என்னிடம் கூறு. உன்னுடைய ஆதரவு இந்த விஷயத்தில் எனக்கு வேண்டும். என்னை நீ புரிந்து கொள்ள வேண்டும். 

ராப்பார்ட் இங்கு வந்திருக்கிறார். அவர் தன்னுடன் மிகச்சிறந்த வாட்டர் - கலர்களைக் கொண்டு வந்திருக்கிறார். மவ் மிக விரைவில் இங்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால் நான் அவரைத் தேடி போக வேண்டியதிருக்கும். நான் மிகவும் கஷ்டப்பட்டு வரைந்து கொண்டிருக்கிறேன். படிப்படியாக நான் முன்னேறுகிறேன் என்பதை நீ நம்பு. முன்பைவிட நான் இப்போது பிரஷ்ஷை அதிகமாக பயன்படுத்துகிறேன். இங்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. வேலைக்காரி, கூடை பின்னும் மனிதன் போன்றவர்களை அறைக்குள் அமர்ந்துகொண்டே வரைகிறேன்.

எண்ணத்தில் கை குலுக்குகிறேன், விரைவில் எழுது. என்னை முழுமையாக நம்பு.

உன்
வின்சென்ட்.


நீ எப்போதாவது காதல் வலையில் விழ நேர்ந்து, நீ காதலிக்கும் பெண் ‘நான் உன்னை ஒருபோதும் காதலிக்கவில்லை, காதலிக்கவும் மாட்டேன்’ என்று சொல்வாளேயானால், அதற்காக நீ கலையை படாதே. ஆனால், நீ அதிர்ஷ்டசாலி. உனக்கு அத்தகைய நிலை எப்போதும் உண்டாகாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

***

எட்டன், டிசம்பர் 1881,

அன்புள்ள தியோ,

ஒரு புத்தகம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நீ எங்கே அதை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விடுவாயோ என்று நான் உள்ளபடியே பயப்படுகிறேன். இந்தக் கடிதம் முரட்டுத்தனம் கொண்ட ஒன்றாகவே இருந்தாலும், இரக்கத்துடனும், பொறுமையுடனும் இதை நீ படிக்க வேண்டும்.

தி ஹேக்கில் இருந்து நான் கடிதத்தில் எழுதியபடி, உன்னிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. நான் இப்போது இங்கு திரும்பி வந்துவிட்டேன். தி ஹேக்கிற்கு நான் சென்ற பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது என்னால் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியவில்லை. மவ்வைப் பார்க்க நான் சென்றபோது என் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. என் மனதிற்குள் நானே கூறிக்கொண்டேன். மவ்வும் எனக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி என்னை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடுவாரா? இல்லாவிட்டால் நான் அங்கு சற்று வித்தியாசமாக நடத்தப்படுவேனா? அவர் எனக்கு பலவிதத்திலும் உதவியாக இருந்தார். மிகவும் பாசத்துடனும், இயல்பாகவும் நடந்து கொண்டதுடன் என்னை உற்சாகப்படுத்தவும் செய்தார். அதற்காக நான் செய்த எல்லாவற்றையும் அவர் சரியென்று ஏத்துக் கொண்டார் என்று சொல்லவில்லை. ‘இது சரியில்லையே’ என்று சொன்ன அதே நேரத்தில் ‘இந்த மாதிரி முயற்சித்தால் இது சரியாக வரும்’ என்று அவர் கூறுவார். வேண்டுமென்றே விமர்சிக்க வேண்டும் என்ற சிலரின் கொள்கையை விட அவரின் இந்தப் போக்கு நிச்சயம் நல்லதே. ‘எனக்கு உடல்நலமில்லை’ என்று யாராவது உன்னைப் பார்த்து சொன்னால் அது எந்தவிதத்தில் உனக்கு உதவியாக இருக்கும்? அதற்கு மாறாக ‘இந்த மாதிரி செய்தால் நீ நோயிலிருந்து தப்பிக்கலாம்’ என்று மவ் சொன்னது மாதிரி இருக்குமேயானால், நிச்சயம் அந்த அறிவுரை உனக்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.

அவரைப் பார்க்கப் போகும்போது என்னிடம் வாட்டர் கலர் கொண்டு வரைந்த சில ஓவியங்கள் இருந்தன. அவை என்னுடைய அதி அற்புத படைப்புகள் என்று நான் கூறவில்லை. அதே நேரத்தில், அவற்றில் ஒரு ஒழுங்கும், உண்மைத் தன்மையும் மறைந்திருந்தன என்பதென்னவோ உண்மை. அதற்கு முன்பு நான் வரைந்த ஓவியங்களில் இருந்ததைவிட, இந்த அம்சங்கள் அவற்றில் அதிகமாக இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். கனமான விஷயங்களை இப்போதுதான் வரையத் தொடங்கியிருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன். ப்ரஷ், பெயின்ட் ஆகியவற்றைத்தான் நான் பயன்படுத்துகிறேன் என்றாலும், எல்லாமே எனக்கு புதுமையாகத்தான் தெரிகின்றன.

செயல் வடிவில் பல விஷயங்களை நான் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது. முதல் காரியமாக நான் ஒரு பெரிய அறையைப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு அறை கிடைத்தால்தான் நான் தூரத்தில் அமர்ந்து படம் வரைய முடியும்.

என்னுடைய ஓவியங்களைப் பார்த்த மவ் சொன்னார்- ‘நீ உன்னுடைய மாடலுக்கு மிகவும் அருகில் அமர்ந்திருக்கிறாய்’ என்று. இந்த விஷயம் எனக்கு பல விதத்திலும் இடைஞ்சலாக இருப்பதையும், சரியான அளவு படத்தில சில நேரங்களில் வராமல் போவதையும் என்னால் உணர முடிகிறது. இந்த விஷயத்தை உடனடியாக நான் கவனித்தே ஆக வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், உடனடியாக நான் ஒரு பெரிய அறையை எங்காவது கண்டுபிடித்து வாடகைக்கு எடுத்தே ஆக வேண்டுமென்று. அதற்கு வாடகை அப்படியொன்றும் அதிகமாக வராது. தொழிலாளர்கள் வசிக்கக்கூடிய ஒரு வீட்டை இந்தப் பகுதியில் வாடகைக்கு எடுப்பதாக இருந்தால், வருடத்திற்கு 30 கில்டார்கள் வரும். அந்த வீட்டைப்போல் இரண்டு மடங்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுப்பதாக இருந்தால் 60 கில்டார்கள் வரப் போகிறது. அந்த வாடகையை என்னால் ஓரளவுக்குத் தந்துவிட முடியும். அத்தகைய ஒரு அறையை நான் கூற்கனவே பார்த்து வைத்திருக்கிறேன். ஆனால், அதில் ஏகப்பட்ட வசதிக் குறைவுகள் இருக்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில். ஆனால், சீதோஷ்ண நிலை சற்று நன்றாக இருக்கிறபோது என்னால் நிச்சயம் அங்கு இருந்தவாறு வேலை செய்ய முடியும். இன்னொரு விஷயம் என்னவென்றால், எட்டனில் இருந்து மட்டுமல்ல ப்ரபான்டில் இருக்கும் கிராமப் பகுதிகளிலிருந்துகூட என்னால் மாடல்களைக் கண்டுபிடிக்க முடியும்.

ப்ரபான்ட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அங்குள்ள விவசாயிகளைத் தாண்டி வேறு பாடல்கள் ஏதாவது கிடைக்காதா என்று இப்போது பார்க்கப் போகிறேன். இங்கு குறைவான செலவில் என்னால் வாழ்க்கையை நடத்த முடியும். இப்போதிருப்பதைவிட சிறந்த ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து என்னால் படம் வரைய முடியும் என்றும், இப்போது பயன்படுத்துவதைவிட சிறந்த பெயின்ட்டையும் சிறந்த தாளையும் நான் இனிமேல் பயன்படுத்தப் போவதாகவும் மவ்விடம் கூறியிருக்கிறேன்.

படம் வரைவதற்கு இங்க்ரெஸ் தாள் நன்றாகவே இருக்கிறது. கடைகளில் ஏற்கனவே தயார் பண்ணி வைத்திருக்கும் புத்தகங்களை வாங்குவதை விட நானே வரைந்து ஸ்கெட்ச் புத்தகங்களாக வைத்துக் கொள்வது மிகவும் விலைக் குறைவாக இருக்கிறது.

என்னிடம் கொஞ்சம் இங்க்ரெஸ் தாள்கள் இருக்கின்றன. என்னுடைய ஓவியங்களைத் திருப்பி அனுப்புகிறபோது, அவற்றுடன் இங்க்ரெஸ் தாள்களையும் சேர்த்து அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். அதற்காக வெள்ளை நிறத்தில் அந்த தாள்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தியோ, வர்ணங்களைப் பற்றி மனதில் எண்ணிப் பார்க்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வர்ணங்களைக் குறித்த உணர்வு ஒரு மனிதனுக்கு இல்லாமல் இருக்கும் பட்சம், உண்மை வாழ்க்கையிலிருந்து அவன் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறான் என்பதை ஒரு நிமிடம் நான் நினைத்துப் பார்க்கிறேன். இதற்கு முன்பு நான் பார்த்திராத பல விஷயங்களைப் பார்க்க எனக்கு மவ் கற்றுத் தந்திருக்கிறார். அவர் என்னவெல்லாம் எனக்கு சொல்லித் தந்தாரோ, அவற்றையெல்லாம் ஒருநாள் நான் உன்னிடம் கூறுகிறேன். நீ கூட இன்னும் பார்க்காத பல விஷயங்கள் அவற்றில் இருக்கவே செய்கின்றன. கலை சம்பந்தப்பட்ட பல கேள்விகளை நாமிருவரும் ஒருநாள் தனியே உட்கார்ந்து நமக்குள் கேட்டுக்கொண்டு, அது பற்றி தீவிரமாக விவாதிப்போம். பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை மவ் என்னிடம் சொல்லியபோது, எனக்கு உண்மையிலேயே அது இதற்கு முன்பு நான் தெரிந்திராத ஒரு புதிய விஷயமாக இருந்தது.


போலித்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இத்தனை ஆண்டுகளாக நான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். புலர் காலை நேரத்து வெளிச்சம் எனக்கு முன்னால் தெரிகிறது. என்னுடன் அடுத்து வந்த இரண்டு ஓவியங்களில் நான் வாட்டர் கலர்களை பயன்படுத்தியிருப்பதை நீ கவனித்திருப்பாய். மற்ற எல்லா வாட்டர் கலர் ஓவியங்களைப் போலத்தான் அவையும் என்பதுபோல உன் மனதில் பட்டிருக்கும். அதில் ஒரு முழுமையற்ற தன்மை இருப்பதுகூட உனக்கு தெரிந்திருக்கும். அவற்றில் எனக்கு திருப்தியில்லை என்பதை நானே எல்லோருக்கும் முன்னால் ஒத்துக் கொள்கிறேன். இருந்தாலும் இதற்கு முன்பு நான் வரைந்த ஓவியங்களைவிட அவை மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும் என்பதையும், முன்பிருந்த என்னுடைய ஓவியங்களை விட அவை தெளிவாகவும், பிரகாசமானவையாகவும் இருக்கும் என்பதையும் நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். எதிர்காலத்தில் வேறு யாராவது இதைவிட தெளிவாகவும் பிரகாசமானதாகவும் இருக்கக்கூடிய ஓவியங்களை வரையலாம். ஒரு மனிதன் என்ன மனதில் நினைக்கிறானோ, அதை உடனடியாக அவன் தன் படைப்பில் கொண்டு வந்துவிட முடியாது. எதுவுமே படிப்படியாகத்தான் நடக்கும்.

அந்த இரண்டு ஓவியங்களையும் நான் என்னுடனே வைத்துக்கொள்ள பிரியப்படுகிறேன். அவற்றை இனிமேல் நான் இங்கிருந்து வரையப் போகும் ஓவியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறேன். மவ்வின் முன்னால் வரைந்த ஓவியம் அளவிற்காவது இனிமேல் நான் வரையப் போகும் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நான் ஆசைப்படுகிறேன். மாதக் கணக்கில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துவிட்டு மார்ச் மாதத்தில் மவ்வை நான் சந்தித்தபோது, நன்கு விலை போகக்கூடிய ஓவியங்களை இனிமேல் நான் வரைவேன் என்று அவர் சொன்னார். ஆனால், இங்கோ நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மாடலுக்கான சம்பளம், ஸ்டுடியோ, ஓவியம் வரைய பயன்படுத்தும் பெயிண்ட் மற்றும் இதர பொருட்களின் விலை எல்லாமே மிகவும் அதிகமாக இருக்கின்றன. நான் எதுவுமே சம்பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அத்தியாவசிய செலவுகளைப் பற்றி நான் கவலையே பட வேண்டாம் என்று அப்பாகூட கூறினார். மவ் நான் கொண்டு சென்ற ஓவியங்களைப் பற்றி சொன்ன அபிப்ராயத்தைக் கேட்டு அப்பாவுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், அப்பா இதற்காக செலவழிக்க வேண்டி இருக்கிறதே என்பதை நினைத்துப் பார்க்கும்போதுதான் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிலைமை வெகு விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனினும், மனதில் என்னவோ பாரம் போட்டு அழுத்தவே செய்கிறது. நான் இங்கு வந்ததிலிருந்து என்னால் அப்பாவுக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை என்பதே உண்மை. பலமுறை எனக்காக அவர் கோட், கால்சட்டை என்று எதையாவது வாங்கித் தந்து கொண்டுதான் இருக்கிறார். எனக்கு அவை தேவையாகவும் இருக்கின்றன. அதே நேரத்தில் எனக்காக அவர் பணம் செலவழிப்பதைப் பார்க்கும்போது மனதில் கவலைதான் உண்டாகிறது. வாழ்க்கையின் மிகவும் தர்மசங்கடமான விஷயங்கள் இவை என்பதை நான் உணராமல் இல்லை. சொல்லப்போனால், நான் ஒரு சுதந்திரமான மனிதனாக இல்லை. நான் செலவிழக்கும் ஒவ்வொரு சென்ட் பற்றியும் அப்பாவிடம் கணக்கு காண்பிக்க வேண்டியதில்லை என்றாலும், நான் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவழிக்கிறேன் என்ற விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். எனக்கென்று ரகசியங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், அது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக கண்ணில் படுபவர்களிடமெல்லாம் கையைத் திறந்து காட்ட நான் தயாராக இல்லை. நான் அன்பு செலுத்துபவர்களுக்கு என்னிடமுள்ள ரகசியங்கள் கூட ரகசியமில்லை என்பது வேறு விஷயம். மவ்வைப் பற்றியோ உன்னைப் பற்றியோ நினைப்பது மாதிரி நான் அப்பாவை நினைக்க முடியாது. அப்பாவை நான் மிகவும் விரும்புகிறேன் என்பது வேறு விஷயம். ஆனால், உன்னையோ அல்லது மவ்வையோ விரும்புவதை விட அப்பா மேல் நான் வைத்திருக்கும் விருப்பம் வேறு மாதிரியானது. அப்பா எனக்காக பரிதாபப்படுவதை நான் பொதுவாக விரும்பவில்லை. என்னை அவரால் புரிந்து கொள்ளவும் முடியாது. அதற்காக அப்பாவின் வாழ்க்கை முறையோடு என்னால் ஒத்துப் போகவும் முடியாது. அப்படி ஒத்துப் போகும்பட்சம், அது என்னை கீழே தள்ளி விட்டு விடும், மூழ்கடித்துவிடும். நானும் பைபிளை அவ்வப்போது வாசிக்கிறேன். மிச்லே அல்லது பால்ஸாக் அல்லது எலியட்டை எப்படி படிக்கிறேனோ அந்த மாதிரிதான் பைபிளையும் படிக்கிறேன். அப்பா வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறாரோ அதிலிருந்து மிகவும் மாறுபட்ட பல விஷயங்களை நான் பைபிளில் பார்க்கிறேன். அப்பா அதிலிருந்து என்ன எடுத்துக் கொண்டிருக்கிறாரோ, அதை என்னால் பைபிளில் பார்க்கவே முடியவில்லை.

பத்தாம் ரெவரெண்ட் கேட், கோதேயின் ‘ஃபாஸ்ட்’ நூலை மொழிபெயர்த்திருந்தார். அதை அம்மாவும் அப்பாவும் படித்திருக்கிறார்கள். பாதிரியார் ஒருவர் அதை மொழிபெயர்த்திருப்பதால், அதிலிருக்கும் எல்லாமே புனிதம்தான் என்ற நினைப்பில் அவர்கள் இருக்கிறார்களோ என்னவோ? (அதற்கு என்னதான் அர்த்தம்?) அவர்கள் அதையெல்லாம் பெரிதாக எண்ணவில்லை. உரிய நேரத்திற்குரிய காதலாக இல்லாததால் உண்டான மோசமான விளைவுகள் என்று அவர்கள் அதை எடுத்துக் கொண்டு விட்டார்கள். அவர்கள் பைபிளைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே என் எண்ணம். உதாரணத்திற்கு மவ்வையே எடுத்துக்கொள். எதையாவது அவர் ஆழமாகப் படிக்கிறார் என்று வைத்துக்கொள். உடனடியாக, அதில் வரும் அவன் இதைச் செய்கிறான், இவன் இதைப் பண்ணுகிறான் என்று அவர் யாரிடமும் கதை அளிப்பதில்லை. கவிதை என்பதே மிகவும் ஆழமானது. அதைப் படித்து முடித்தவுடன் அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி விளக்க முடியாது. ஆனால், மவ்விடம் ஒரு அருமையான உணர்ச்சி இருக்கிறது. விளக்கம், விமர்சனம் எல்லாவற்றையும்விட அந்த உணர்ச்சிக்கு சக்தி அதிகம் என்றே நான் நினைக்கிறேன். நான் ஏராளமான பேரின் படைப்புகளைப் படிக்கவில்லையென்றாலும், தேர்ந்தெடுத்த ஒரு சிலரின் படைப்புகளைப் படிக்கவே செய்கிறேன். படிக்கும் அத்தகைய மனிதர்களை கொஞ்சமும் எதிர்பார்க்காமலே நான் வாழ்க்கையில் கண்டும் பிடித்திருக்கிறேன். நான் அவர்களைப் படிப்பதை மிகவும் விரும்புகிறேன். அதற்குக் காரணம் - வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் விசாலமான பார்வையுடனும், மென்மையாகவும், தீவிர ஈடுபாட்டுடனும் நான் பார்ப்பதைவிட அவர்கள் பார்க்கிறார்கள் என்பதே. வாழ்க்கையைப் பற்றி என்னைவிட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள் வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.


ஆனால், அதே நேரத்தில் நல்லது - கெட்டது, புனிதம் - புனிதமற்றது போன்ற குப்பைத்தனமான விஷயங்களைப் பற்றி பொதுவாக நான் அக்கறை எடுத்துக் கொள்வதே இல்லை. சொல்லப் போனால் இது நல்லது, இது கெட்டது, இது புனிதமானது, இது புனிதமற்றது என்று எதை வைத்து ஒருவரால் சொல்ல முடியும்? இந்த புனிதமானது, புனிதமற்றது என்ற சிந்தனை என்னை மீண்டும் கீயை நோக்கி கொண்டு வருகிறது.

இந்த விஷயத்தைப் பற்றி நான் ஏற்கெனவே உனக்கு எழுதியிருக்கிறேன். இனிமேல் இதைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? வசந்த காலத்தில் ஸ்ட்ராபெரிஸ் பழங்களை சாப்பிடுவதைப் போல எனக்கு இருக்கிறது. உண்மையும் அதுதான். சொன்னதையே உன்னிடம் நான் திருப்பிச் சொல்வதாக நினைத்தால், அதற்காக என்னைப் பொறுத்துக் கொள். ஆம்ஸ்டர்டாமில் நடந்த சம்பவங்களைப் பற்றி என்னவெல்லாம் எழுதினேன் என்பதே எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை.

நான் அங்கு ‘எந்தக் காலத்திலும் நடக்காது.. எந்தக் காலத்திலும் நடக்காது’ என்று கீ சொன்னதை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். இலேசாக குளிர்ச்சி காற்றில் கலந்திருந்தது.

ஒருநாள் மாலையில் நான் கெய்சர்க்ரேயில் இருக்கும் அந்த வீட்டைத் தேடி கடைசியில் கண்டுபிடித்துவிட்டேன். வெளியே இருந்தவாறு மணியை ஒலிக்கச் செய்தேன். குடும்பமே சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. என்னை உள்ளே வரச் சொன்னார்கள். கீயைத் தவிர எல்லோரும் அங்கு இருந்தார்கள். எல்லோர் முன்னாலும் சாப்பிடுவதற்கான தட்டு இருந்தது. கீயின் தட்டை மட்டும் காணவில்லை. கீ வெளியே போயிருப்பதாக நான் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டுமென்று, அதற்காக முன்கூட்டியே அவர்கள் அவளுடைய சாப்பிடும் தட்டை அங்கிருந்து எடுத்து விட்டிருந்தார்கள். ஆனால், அவள் அங்குதான் இருக்கிறாள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் இந்தச் செயல் தமாஷ்போல எனக்குத் தோன்றியது. இதை ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாகக்கூட நான் நினைத்தேன். சிறிது நேரம் கழித்து நான் கேட்டேன் - (வழக்கமான குசலம் விசாரிப்பிற்குப் பிற) ‘கீயை எங்கே?’ அங்கிள் நான் கேட்ட கேள்வியையே தன்னுடைய மனைவியைப் பார்த்துக் கேட்டார். ‘கீயை எங்கே?’ என்று. அதற்கு அவரின் மனைவி ‘கீ வெளியே போயிருக்கிறாள்’ என்றார். சில நிமிடங்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றி அவர்களிடம் நான் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆர்த்தியில் நடைபெறும் பொருட்காட்சியைப் பற்றி சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் உள்ளே போய்விட்டார்கள். அங்கிள் எஸ்., அவரின் மனைவி, நான்- நாங்கள் மூன்று பேர் மட்டுமே அங்கு இருந்தோம். மூவரும் பேசப்பட வேண்டிய இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். அங்கிள் எஸ். இந்த விஷயத்தை ஒரு பாதரியார் என்ற கோணத்திலும், ஒரு தந்தை என்ற முறையிலும் பார்த்தார். எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்ப இருந்ததாகச் சொன்ன அவர் அந்தக் கடிதத்தை உரத்த குரலில் படிக்கத் தொடங்கினார். நான் மீண்டும் அவரைப் பார்த்து கேட்டேன். ‘கீயை எங்கே?’ என்று. (அவள் ஊரில்தான் இருக்கிறாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.) அதற்கு அங்கிள் எஸ். சொன்னார், “நீ இங்கே வர்ற செய்தி தெரிஞ்ச நிமிடத்திலேயே, கீ இந்த வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள்” என்று. அவளைப் பற்றி ஏதோ கொஞ்சம் எனக்குத் தெரியும். இருந்தாலும், இந்த விஷயம் எனக்குத் தெரியாது என்று சொன்னேன் நான். அவளின் செயலைப் பற்றி என்னால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவள் அமைதியாக இருப்பதோ முரட்டுத்தனமாக நடப்பதோ நல்லதற்கா கெட்டதற்கா என்பதை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அவள் இந்த அளவிற்கு மென்மையாகவும் முரட்டுப் பெண்ணாகவும், இரக்கமில்லாமலும் என்னைத் தவிர வேறு யாரிடமும் நடந்து நான் பார்த்ததில்லை. அதனால் இதற்கு மேல் எதுவும் சொன்னால் நன்றாக இருக்காது என்றெண்ணி நான் அமைதி காத்தேன்.

அந்தக் கடிதத்தை அவர் படிக்க நான் கேட்பதா வேண்டாமா என்பது இங்கு ஒரு முக்கிய விஷயமா என்ன? சொல்லப் போனால், அந்தக் கடிதத்தை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

ஆனால், அவரோ கடிதத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார். கடிதம் கட்டுக்கோப்பாகவும், மேதாவித்தன்மை தெரிவது மாதிரியும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுக் கூறும்படி ஒன்றுமில்லை. கீயுடன் தொடர்பு கொள்வதை உடனடியாக என்னை நிறுத்திக் கொள்ளும்படியும் கடுமையாகப் போராடி அவளைப் பற்றிய நினைவுகள் ஏதேனும் என்னுடைய மனதில் இருப்பின், அவற்றை இந்தக் கணத்திலேயே அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் அதில் என்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கடைசியாக ஒரு வழியாக அவர் கடிதத்தைப் படித்து முடித்தார். சர்ச்சில் பிரசங்கம் செய்யும் ஒரு பாதிரியாரைப் போலத்தான் அவர் என் மனதிற்குப்பட்டார். ஏற்ற இறக்கங்களுடன் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த அவரைப் பார்க்கும்போது, ‘ஆமென்’ கூறி பிரசங்கத்தை முடிக்கும் பாதிரியார் ஞாபகத்தில் வந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஒரு சாதாரண பிரசங்கத்தைக் கேட்ட உணர்வுடன் நான் அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தேன்.

எல்லாம் முடிந்ததும் நான் அவரைப் பார்த்து, ‘நீங்க சொன்னது எல்லாத்தையும் நான் கேட்டேன். அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்டதும் அங்கிள் எஸ். தலையை உயர்த்தி என்னையே பார்த்தார். இந்த அளவுக்கு ஏற்கனவே பலமுறை சொல்லியும் இப்போது கடிதத்தைப் படித்துக் காட்டி அறிவுறுத்தியும் நான் அவர் சொன்னபடி கேட்கவில்லையே என்பது தெரிந்ததும் மனித முயற்சியில் எல்லை என்ற ஒன்றில் நின்று கொண்டிருந்த அவர் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவரைப் பொறுத்தவரை இனிமேல், ‘அடுத்து’ என்பதற்கு வேலையே இல்லை. அதனால் இருவரும் அவரவர் நிலைகளில் சரியாக நின்றிருந்தோம். ஆன்ட் எம். இடையில் ஒரு சில வார்த்தைகள் என்னைப் பார்த்து சொன்னார். அதைக் கேட்டு நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன் என்பதென்னவோ உண்மை. அங்கிள் எஸ். கூட தன் பொறுமையை இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரணமாக ஒரு பாதரியார் இப்படி நடந்து கொள்வது இயல்புதானே. ‘நாசமாகப் போ’ என்று மற்றவர்களைப் போல் அவர் என்னைப் பார்த்து சொல்லவில்லை. ஆனால், அங்கிள் எஸ். நிலையில் இருக்கும் ஒரு பாதிரியார் கட்டாயம் அதைச் சொல்வார் என்றே நான் நினைக்கிறேன்.


நான் அப்பாவையும் அங்கிள் எஸ்.ஸையும் எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமே. அதனால், சிறிது நகர்ந்து நின்றவாறு எதுவும் பேசாமல் நான் இருந்தேன். அதன் விளைவாக அவர்கள், நான் பிரியப்பட்டால் அன்று இரவு அங்கு தங்கிச் செல்லலாம் என்றார்கள். ‘நீங்க இப்படி சொன்னதுக்காக ரொம்பவும் சந்தோஷப்படுறேன். ஆனா நான் வர்றது தெரிஞ்சதும் கீ இந்த வீட்டை விட்டு வெளியே போயிருந்தான்னா, நான் இந்த இரவு இங்கே தங்குறதுலயே அர்த்தம் இல்லை. நான் வேற எங்கேயாவது போய் தங்கிக்கிறேன்’ என்றேன் நான். அதற்கு அவர்கள் ‘நீ எங்கே போய் தங்குவே?’ என்று கேட்டார்கள். ‘எங்கே போயி தங்கப் போறேன்னு இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாது’ என்றேன் நான். நான் இப்படிச் சொன்னதும் அங்கிளும் ஆன்டடியும் என்னை ஒரு நல்ல - அதே நேரத்தில் செலவு குறைவாக இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக சொன்னார்கள். தியோ, உண்மையாகவே வயதான அந்த இருவரும் என்னை மிகவும் குளிர்ந்து போய், பனி விழுந்து காணப்பட்ட, சேறு இருந்த தெருக்கள் வழியாக அழைத்துச் சென்று ஒரு நல்ல, காசு குறைவாக வாங்கக்கூடிய ஒரு தங்குமிடத்திற்குக் கொண்டு சென்றார்கள். என்னுடன் வர வேண்டாம் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும், அவர்கள் கேட்கவில்லை என்பதே உண்மை.

அவர்களின் செயலில் கொஞ்சம் மனிதத் தன்மை இருப்பதாக உணர்ந்ததால், நான் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தேன். ஆம்ஸடர்டாமில் நான் இரண்டு நாட்கள் தங்கினேன். அதற்குப் பிறகும் கூட அங்கிள் எஸ்ஸுடன் நான் பேசினேன். ஆனால் கீயின் முகத்தை ஒருமுறைகூட நான் பார்க்கவில்லை. எப்போது நான் போனாலும், என் கண் பார்வையில் படாமல் அவள் பார்த்துக் கொண்டாள். அவர்கள் இந்த விஷயம் அத்துடன் முடிந்து போய்விட்டது என்று நினைத்தாலும், என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி நான் தீவிரமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்று திரும்பத் திரும்ப அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். மிச்லேயின் ஒரு புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். இந்த மாதிரியான நூல்களில் இருக்கும் யதார்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உண்மையை விட உண்மையானது உலகத்தில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் இருக்கும் உயிர்ப்வை விட உயிர்ப்பானது உலகத்தில் எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நாம் ஏன் அப்படி வாழ முடியாமல் போகிறது என்பது தான் விந்தையாக இருக்கிறது.

ஆம்ஸ்டர்டாமில் இருந்த அந்த மூன்று நாட்களும் எனக்கு மிகவும் தனிமை உணர்வு தரக்கூடியதாகவும், நீண்டதாகவும் இருந்தன என்பதே உண்மை. எனக்கு மிகவும் கவலை தரக்கூடிய நாட்களாகவே அவை அமைந்தன. அங்கிளும் ஆன்ட்டியும் எவ்வளவோ என்னிடம் பேசினாலும், எல்லாமே எந்தவித பிரயோஜனத்தையும் தரவில்லை என்பதே உண்மையில் நடந்தது. மனதளவில் நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். அதன் விளைவாக எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் - ‘இனியொரு முறை உனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற ஒன்று இருக்கிறதா என்ன?’ என்று.

அதே நேரத்தில் எனக்குள் இன்னொன்றையும் நான் சொல்லிக் கொண்டேன். ‘அதற்காக உனக்கு நீயே அதிர்ச்சியடைந்து உட்கார்ந்து விடாதே, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கடைசி முறையாக நான் அங்கிள் எஸ்ஸின் வீட்டிற்குச் சென்றேன். ‘அங்கிள், நான் சொல்றதைக் கேளுங்க. நான் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிற தேவதையாக கீ இருந்தால், ஒரு தேவதையைக் காதலிக்க என்னால் நிச்சயம் முடியாது. அதே நேரத்தில் அவள் ஒரு பேயாக இருந்தால், அவகூட உறவு வச்சுக்கவும் என்னால் முடியாது. ஆனா, கீ விஷயத்துல அப்படி எதையும் நான் பார்க்கல. ஒரு உண்மையான பெண்ணைத்தான் நான் அவள்கிட்ட பாக்குறேன். எல்லாப் பெண்களிடமும் காணக்கூடிய ஆசாபாசங்கள், உணர்ச்சிகள் - இவற்றை கீயிடமும் என்னால் பார்க்க முடியுது. அதனாலதான் அவளை மனப்பூர்வமாக நான் காதலிக்கிறதே. அவளை அப்படி நேர்மையுடன் காதலிக்கிறேன்றதை நினைக்கறப்போ மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்குது. அவள் தேவதையாகவோ பேயாகவோ இல்லாம இருக்குறது வரை, நான் அவளைக் காதலிக்கிற விஷயம் முடிஞ்சு போச்சுன்ற பேச்சுக்கே இடமில்ல..’ என்று நான் அங்கிளைப் பார்த்து சொன்னேன். அவர் அதிகமாக என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனினும், பெண்ணின் உணர்வுகளைப் பற்றி என்னவோ சில வார்த்தைகளைச் சொல்லி அவர் முணுமுணுத்தார். அவர் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பது சரியாக என்னுடைய ஞாபகத்தில் இல்லை. அதற்குப் பிறகு சில நொடிகளில் அவர் சர்ச்சுக்குக் கிளம்பிவிட்டார். இந்த சூழ்நிலையில் ஒரு மனிதம் மிகவும் கடினத்தன்மை கொண்ட மனிதனாக மாறுவதும், ஒரு கல்லைப்போல அவன் ஆவதும் இயல்பானதே. என் வாழ்க்கை அனுபவத்தில் நான் நேரடியாகப் புரிந்துகொண்ட விஷயம் இது. அதே நேரத்தில் இந்த விஷயத்தால் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளான மனிதனாக நான் இருக்க விரும்பவில்லை. மிகப்பெரிய அடியை வாழ்க்கையில் அனுபவித்த மனிதன் என்ற எண்ணம் என்னிடம் உண்டாவதையும் நான் விரும்பவில்லை. இறுகிப்போன, உயிரற்ற சுண்ணாம்பு அடித்த சர்ச் சுவரை எதிர்த்து நின்று கொண்டிருப்பதை நான் உணராமல் இல்லை. மீதியையும் என்னிடம் கேட்க நீ விரும்புகிறாயா? உண்மையான மனிதனாக இந்த உலகத்தில் வாழ்வதென்பது நிச்சயமாக கஷ்டமான விஷயம்தான். ஆனால் நீயும் என்னைப்போல் ஒரு உண்மையான மனிதனாயிற்றே. அதனால் என்னை உன்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் நான் சொன்னேன் - சிலருக்கு என்னுடைய ரகசியங்கள், ரகசியங்களே அல்ல என்று. அப்படி நான் சொன்னதை இப்போதும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இல்லை. என்னைப் பற்றி சிறிது நினைத்துப் பார். நான் செய்தது சரியா என்பதையும் மனதில் அலசிப் பார். அதனால் இப்போது ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

தொடர்ந்து விஷயத்தைச் சொல்கிறேன். ஆம்ஸ்டர்டாமிலிருந்து நான் ஹார்லெம் சென்றேன். நம்முடைய சிறிய தங்கை வில்லெமினுடன் சில மணி நேரங்கள் நான் இருந்தேன். அவளுடன் சில நிமிடங்கள் பல விஷயங்களையும் பேசியவாறு நடந்தது ஒரு அனுபவம். மாலையில் தி ஹேக்கிற்குச் சென்றேன். ஏழு மணி ஆனபோது மவ்வின் வீட்டிற்குச் சென்றேன். நான் மவ்வைப் பார்த்து சொன்னேன் - ‘நீங்க எட்டனுக்கு வந்து எனக்கு சில விஷயங்களை சொல்லித் தர்றதா சொன்னீங்க. படம் வரையிறதுல இருக்குற பல சூட்சுமங்களைக் கற்றுத் தர்றதா சொன்னீங்க.


ஆனா, அதற்கு முன்னாடியே நான் உங்களைத் தேடி வர்றது நல்லதுன்னு என் மனசுக்குப்பட்டது. நீங்க சொன்னா நான் இங்கேயே நாலு வாரமோ ஆறு வாரமோகூட தங்க தயாரா இருக்கேன். இங்கே என்ன செய்றதுன்னு நாமதான் தீர்மானிக்கணும். இந்த அளவுக்கு உங்கக்கிட்ட எனக்கு கேக்குறதுக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்? என்று. அதற்கு மவ் கேட்டார்- ‘நீ உன்கூட எதையாவது எடுத்துட்டு வந்திருக்கியா?’ என்று. நான் என்னுடன் எடுத்து வந்திருந்த சில ஓவியங்களை அவரிடம் காட்டினேன். அவர் அவற்றை வாய்விட்டு புகழ்ந்தார். அதே நேரம் சில ஓவியங்களை விமர்சிக்கவும் செய்தார். மறுநாள் எப்படி அங்கு அமர்ந்து படம் வரைய வேண்டும் என்பதை அவர் எனக்குச் சொல்லித் தந்தார். நான் அங்கே இருந்து சில ஓவியங்களை வரைந்தேன். அவற்றின் இரண்டு ஓவியங்களை வாட்டர் கலர் கொண்டு வரைந்தேன்.

என்னுடைய வேலை இந்தப் போக்கில் போய்க் கொண்டிருந்தது. கையாலும் மூளை கொண்டும் செய்வது மட்டுமே வாழ்க்கையின் எல்லாமுமாகிவிடுமா என்ன?

என்னுடைய மனதின் அடித்தளத்தில் நான் முன்பு குறிப்பிட்ட உண்மையான அல்லது பொய்யான அந்த சர்ச் சுவரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இப்போதும்கூட ஒரு மாதிரி ஆகிவிடுகிறேன் என்பதே உண்மை. ஆனால், அதையே நினைத்துக் கொண்டு சிலையென உட்கார்ந்து விடவும் பொதுவாக நான் விரும்புவதில்லை. அப்போது நான் மனதிற்குள் நினைப்பேன். ஒரு பெண்ணுடன் நான் கட்டாயம் வாழ வேண்டும். காதல் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. பெண் இல்லாமலும்தான். வாழ்க்கை எல்லையற்று விரிந்து கிடப்பது, ஆழமானது, உண்மையானது. அதைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது? அவளை விட்டால் வேறொரு பெண்ணை நினைத்துப் பார்க்கக்கூட கூடாது என்று மனதில் இருந்த எண்ணத்தை மறந்துவிட்டு, நானே இன்னொரு பெண்ணைத் தேடிப் போவதாக இருந்தால், அது சிறிதுகூட அர்த்தமற்ற ஒரு செயலாயிற்றே. அறிவான ஒரு காரியமாக அது நிச்சயம் இருக்காதே. இப்படியொரு கேள்வி என் மனதில் எழும்போது அதற்கும் நான் பதில் கூறுவேன், நான் பெரியவனா? இல்லாவிட்டால் அறிவா? எனக்காக அந்த அறிவுடைய செயல் இருக்கிறதா? இல்லாவிட்டால் அதற்காக நான் இருக்கிறேனா? முறை தவறி அப்படி நான் நடப்பதற்கும் அர்த்தமில்லாமல் அப்படி செயல்படுவதற்கும் என்ன காரணங்கள் இருக்க முடியும்? நான் சரியாக நடக்கிறேனா, தவறாக நடக்கிறேனா என்பது இங்கு முக்கியமில்லை. அந்தச் சுவர் என் மனதைப் பாடாய்ப்படுத்துகிறது என்பதை நான் இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் வேறு மாதிரி நான் எப்படி நடக்க முடியும்? எனக்கென்று ஒரு பெண் வேண்டும். காதல் என்ற ஒன்று இல்லாமல் வாழ்க்கையில் என்னால் வாழ முடியாது. எதற்கு வாழ வேண்டும்? ஏன் வாழ வேண்டும்? நான் ஒரு மனிதன் - அதே நேரத்தில் நான் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு மனிதனும்கூட. எனக்கு ஒரு பெண் அவசியம் வேண்டும். இல்லாவிட்டால் நான் பனியென உறைந்து போய்விடுவேன். கல்லாக மாறிவிடுவேன். சுருக்கமாகச் சொல்லப் போனால் செயலற்ற மனிதனாக நான் ஆகிவிடுவேன். இந்தச் சூழ்நிலையில் என் மனதிற்குள் நானே பலமாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்தக் கடுமையான போராட்டத்தின் விளைவாக கசப்பான பல அனுபவங்களைப் பெற்ற ஆரோக்கியமான விஷயங்கள் சிலவற்றை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒரு மனிதன் தனக்கென்று ஒரு பெண் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க முடியாது. பலரும் கடவுள் என்றும் எல்லாவற்றையும்விட உயர்ந்தது என்றும், பலர் இயற்கை என்றும் அழைப்பது அர்த்தமற்று இருப்பதாகவும், இரக்கமென்ற ஒன்று இல்லாமலிருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. எது எப்படியோ, எனக்கென்று ஒரு பெண்ணைத் தேடுவது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

அதற்காக நான் எங்கோ தூரத்தில் போய் அலைந்து கொண்டிருக்கவில்லை. அப்படி ஒரு பெண்ணை நான் சந்திக்க நேர்ந்தது. அவள் பெயர் க்ளாஸினா மரியா ஹூர்னிக். அவள் இளமையான தோற்றத்தைக் கொண்டவள் அல்ல. அழகி என்றும் கூறுவதற்கில்லை. அவளிடம் குறிப்பிட்டுக் கூறும்படி ஒன்றுமில்லை. எனினும் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள நீ ஆர்வமாக இருப்பாய் என்பதையும் நான் உணராமல் இல்லை. அவள் மிகம் உயரமாக இருப்பாள். உறுதியான உடம்பைக் கொண்டவள். கீயைப்போல மென்மையான கைகளைக் கொண்டவள் இல்லை அவள். மாறாக, கடுமையான வேலை செய்யக்கூடிய ஒரு பெண்ணின் கைகள் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் அவளுடைய கைகள். அவளைப் பற்றி ‘ஆஹா, ஓஹோ’ என்று கூறுவதற்கில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்குரிய அம்சங்களைக் கொண்டவள் அவள். சார்டின் அல்லது ஃபெரே அல்லது யான் ஸ்டீன் வரைந்த ஓவியங்களை ஒத்து அவள் இருந்தாள் என்பதே பொருத்தமானது. அவளுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள். சொல்லப் போனால் அவளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது மிகவும் கஷ்டங்கள் நிறைந்தது. அவள் மற்றவர்களைவிட குறிப்பிட்டுக் கூறும்படியான ஒரு பெண் இல்லை. அவளிடம் அப்படியொன்றும் பெரிய விஷயங்கள் எதுவும் கிடையாது. வியக்கத்தக்க அளவில் அப்படி அவளிடம் எதுவுமே இல்லை என்பதே உண்மை. அவள் ஒரு வேலை செய்யும் பெண். ஒரு பெண் எந்த வயதைச் சேர்ந்தவளாக இருந்தாலும் சரி அவள் மனதில் அன்பு கொண்டவளாகவும் நல்ல இதயத்தைக் கொண்டவளாகவும் இருக்கும் பட்சம், அவள் ஒரு ஆணுக்கு இனிமையான நிமிடங்களை அளிக்க முடியும் என்பதே என் எண்ணம். தியோ, அவளின் சுமாரான தோற்றத்தில் கூட எனக்கு ஒரு கவர்ச்சி தெரிந்தது. அவள் எனக்கு ஒரு அழகான பெண்ணாகவே தெரிந்தாள். சொல்லப் போனால் ஃபெயென்பெரின் அல்லது பெருகினோ ஆகியோரின் ஓவியங்களைக்கூட அவளில் நான் பார்த்தேன். நானொன்றும் தொட்டிலில் கிடக்கும் குழந்தை அல்ல, ஒன்றுமே தெரியாத அப்பாவியும் அல்ல என்பது உனக்கே தெரியும். மனதில் பொங்கிவரும் வாஞ்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிப்பது என்பது எனக்கு புது அனுபவமல்ல. இந்த மாதிரி அழுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மதத்தைச் சேர்ந்த மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீது எனக்கு ஈடுபாடும், அன்பும் இயற்கையாகவே பெருகி நிற்கின்றன என்பதே உண்மை. நான் அவர்களை நிச்சயம் ஒதுக்க மாட்டேன். கண்டிக்க மாட்டேன். அவர்களை ஏமாற்றவும் மாட்டேன். எனக்கு கிட்டத்தட்ட முப்பது வயது ஆகிவிட்டது.


காதல் என்ற ஒன்று எனக்கு அவசியம் வேண்டும் என்று நான் ஏங்கித் திரிவதை உன்னால் உணர முடிகிறதா? கீ என்னை விட வயதில் மூத்தவள். அவளுக்கும் காதல் அனுபவம் இருக்கிறது. அந்த ஒரே காணத்திற்காகத்தான் நான் அவளை பெரிதும் விரும்பினேன். அவள் ஒன்றுமே தெரியாதவள் அல்ல. நானும்தான். தன்னுடைய பழையக் காதலையே இன்னும் மனதில் நினைத்துக் கொண்டு, புதிய காதலை மறுப்பதாக இருந்தால், அது அவளின் சொந்த விஷயம். அவள் தன்னுடைய பழைய வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு என்னை வேண்டாமென்று ஒதுக்கினால் இனிமேலும் என்னுடைய நேரத்தையும், என்னுடைய முழு சக்தியையும் அவளுக்காக ஒதுக்க நான் தயாராக இல்லை. நான் அப்படி நடக்கவும் கூடாது. நான் அவளைக் காதலிக்கிறேன். அதற்காக என்னையே நான் இழக்கவோ, தேவையில்லாத மனக் குழப்பங்களுக்கு ஆளாகவோ நான் விரும்பவில்லை. நான் இப்போது தேடுவது ஒரு வகையான கிரியா ஊக்கியை, நெருப்பின் ஒரு பொறியை. அதைத்தான் நான் காதல் என்கிறேன். இரண்டு ஆன்மாக்களுக்கிடையே இருக்கும் காதலை நான் சொல்லவில்லை.

அந்தப் பெண் என்னை ஏமாற்றவில்லை. எல்லாப் பெண்களையும் ஏமாற்றுக்காரிகள் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதன் எவ்வளவு பெரிய தவறு செய்கிறான் என்பதை நான் உணர்கிறேன். சரியாக எதையுமே புரிந்து கொள்ளாமல் அவன் எப்படி அப்படி சொல்லலாம் என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பெண் என்னிடம் நன்றாக நடந்து கொண்டாள். என்னிடம் அவள் மிகவும் பாசத்துடன் பழகினால். சொல்லப் போனால் இதை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றே. தியோ, உனக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏதாவது இருக்கும் என்று உண்மையிலேயே நான் சந்தேகப்படுகிறேன். அப்படி இருப்பதுகூட நல்லதுதான்.

நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய பணத்தை செலவழித்து விட்டோமோ என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அப்படி செலவழிக்கும் அளவிற்கு என்னிடம் என்ன பணம் கொட்டியா கிடக்கறது? நான் அவளைப் பார்த்து சொன்னேன் - ‘இங்க பாரு, எனக்கு நீ இருக்கே. உனக்கு நான் இருக்கேன்றதைக் காண்பிக்கிறதுக்காக மது அருந்தணும்னு ஒண்ணும் அவசியமில்லை. என் கையில் என்ன இருக்கோ அதை நான் உன் கையிலே தர்றேன்’னு. அப்படி ஒருவேளை அவளுக்காக நான் கொஞ்சம் அதிகமாக செலவழித்திருந்தால், நிச்சயம் அவள் அதற்குத் தகுதியானவளே. நாங்கள் இருவரும் அமர்ந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினோம். அவளுடைய வாழ்க்கை, அவளுக்கு இருக்கும் பொறுப்புகள், வாழ்க்கையில் அவளுக்கிருக்கும் கஷ்டங்கள், அவளின் உடல்நிலை - எல்லா விஷயங்களையும் அவளுடன் நான் மனம்விட்டு பேசினேன். சொல்லப் போனால் மெத்த படித்த பேராசிரியரைப்போல் இருக்கும் கஸினைவிட அவளுடன் உரையாடிக் கொண்டிருப்பதில் நான் இன்பம் கண்டிருக்கிறேன். நான் சொல்லும் இந்த விஷயங்களை வைத்து நான் எந்த அளவிற்கு அன்பு வயப்பட்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ளலாம். நான் கொண்டிருக்கும் அந்த அன்பை முட்டாள்தனமான பாதைகளில் போய் வீணடிக்க விரும்பவில்லை. மாறாக மிகவும் மனத்தெம்புடனும், தெளிவான மன நிலையுடனும், நல்ல உடல் நிலையுடனும் என்னை நான்  வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படியென்றால் மட்டுமே என்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியும். இந்த கோணத்தில் கீ மீது நான் கொண்டிருந்த காதலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவளுக்காக நான் என்னை துக்கத்தில் மூழ்கடித்துக் கொள்ள தயாராக இல்லை. நான் என்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டேன். என்னை தேவையில்லாமல் அதிர்ச்சிக்கு ஆளாக்கி செயலற்ற தன்மையுடன் இருக்க நான் விரும்பவில்லை. பாதிரியார்கள் எங்களைப் பாவம் செய்தவர்கள் என்று குறிப்பிடலாம். பாவத்தில் கருத்தரித்தவர்கள் என்றும், பாவத்தில் பிறந்தவர்கள் என்றும் சொல்லலாம். அடடா, அப்படி அவர்கள் சொன்னார்களென்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஒரு மனிதன் காதலிப்பது பாவமா? காதலுக்காக ஏங்குவது பாவமா? காதல் என்ற ஒன்று இல்லாமல் வாழ முடியாமல் இருப்பது பாவமா? காதல் இல்லாத வாழ்க்கைதான் எனக்கு பாவமானதாகவும் ஒழுங்கற்ற ஒன்றாகவும் படுகிறது. 

மத சம்பந்தப்பட்ட பல கொள்கைகளை சொல்லி வாழ்க்கையிலிருந்து தனிமைப்படுத்தி என்னை வாழ வைத்த அந்த நிமிடங்களுக்காக உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். அப்போதிருந்தே அதைவிட சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மனதில் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் நிமிடத்தில், நீ மட்டும் தனியாக இல்லாமல் உனக்குத் தெரிய வரும்போது அதுவே உன்னை உலகத்தை மேலும் அதிகமான நட்புணர்வுடன் பார்க்குமாறு செய்யும். பாதிரியார்கள் மிகவும் விரும்பக்கூடிய சர்ச் மதில்களையும் மத நூல்களையும் விட நட்புணர்வு கொண்டதாக உலகம் அந்த நிமிடத்தில் உனக்குத் தோன்றும். அவள் இருக்கக்கூடிய அந்த அறை மிகவும் சிறியதுதான், எளிமையானதுதான். சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் வெள்ளை தாள் சாம்பல் வர்ணத்தில் தோற்றம் தரும். எனினும், சார்டின் வரைந்த ஓவியத்தைப்போல அந்த அறை எனக்குக் காட்சித் தரும். மரத்தால் ஆன தரைப்பகுதியில் ஒரு பாய் விரிக்கப்பட்டிருக்கும். அதற்கு மேல் ஒரு பழைய படுக்கை விரிப்பு இருக்கும். அறையின் ஒரு பகுதியில் ஒரு சாதாரண மண்ணெண்ணெய் அடுப்பு இருக்கும். சாமான்களை வைக்கும் ஒரு அடுக்கு, ஒரு பெரிய எளிமையான படுக்கை - மொத்தத்தில் ஒரு வேலை செய்யும் பெண்ணின் வீடு எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் அந்த வீடு. மறுநாள் காலையில் அவள் துணி துவைக்கும் தொட்டிக்கு அருகில் நின்றிருந்தாள். அவள் அங்கு நின்றிருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. கருப்பு நிற பாவாடையிலும் அடர்த்தியான நீல வர்ண மேலாடையிலும் அவள் எந்த அளவிற்கு அழகான ஒரு பெண்ணாக என் கண்களுக்குத் தோன்றினாளோ அதே மாதிரிதான் இப்போது தான் அணிந்திருக்கும் ப்ரவுன் அல்லது சிவப்பு கலந்த சாம்பல் வர்ண ஆடையிலும் எனக்கு அழகாகத் தெரிந்தாள். அவள் அப்படியொன்றும் இளமையானவள் இல்லைதான். சொல்லப் போனால் கீயின் வயதையொத்தவளாக அவள் இருக்கலாம். அவளுக்கும் குழந்தை இருக்கிறது. ஆமாம் - வாழ்க்கை அனுபவம் அவளுக்கும் இருக்கவே செய்கிறது. அவளின் இளமை அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்காக அவளை ஒரு வயதான பெண் என்றெல்லாம் குறிப்பிட வேண்டுமா என்ன?


அவள் மற்ற பெண்களைப் போல இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தையும், கட்டுமஸ்தான உடம்பையும் கொண்டிருந்தாள். மாறுபட்ட விஷயங்களை சதா நேரமும் தேடிக் கொண்டிருப்பவர்கள் பலர் உண்மையில் பல நேரங்களில் அதைப் பார்க்காமலே தவறவிட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் வானத்தின் மேகங்களுக்கு மத்தியிலோ அல்லது பூமிக்குக் கீழேயோ அவற்றைத் தேடுவார்கள். ஆனால், அவர்களுக்கு மிகவும் அருகிலேயே அவை இருக்கும். அதை அவர்கள் கவனிக்காமலே இருந்து விடுவார்கள். நான்கூட பல நேரங்களில் அப்படி இருந்திருக்கிறேன்.

நான் எப்படி நடக்க வேண்டுமென்று நினைத்தேனோ, அதன்படி நடந்திருக்கிறேன் என்பதற்காக உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நான் அப்படி நடப்பதைத் தடுப்பதற்கு இந்த உலகத்தில் ஒரு காரணமும் இல்லை என்பதையும் நான் அறிவேன். என்னிடம் இருக்கும் சக்தியை வீணாக நான் ஏன் இழக்க வேண்டும்? கீயைப் பற்றி மனதில் நினைக்கும் நிமிடங்களில் ‘அவளை விட்டால் வேறொருத்திக்கு இடமில்லை’ என்றுதான் நான் இப்போதும்கூட சொல்லுவேன். ஆனால், மதம் சம்பந்தப்பட்ட மனிதர்களால் கண்டித்து ஒதுக்கப்பட்ட பெண்களுக்காக நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். சொல்லப் போனால், கீ மீது நான் காதல் கொள்வதற்கு முன்பே இத்தகைய உணர்வு எனக்கு இருந்திருக்கிறது. மனதில் பலவிதப்பட்ட பிரச்னைகளை வைத்துக் கொண்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பையில் காசு கூட இல்லாமல், தன்னந்தனியாக தெருக்களில் நடந்து செல்லும் வேளைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து போவதைப் பார்ப்பேன். அந்தப் பெண்களுக்குப் பின்னால் நடந்து செல்லும் ஆண்களைப் பார்த்து நான் பொறாமைப்படுவேன். அவர்களுடன் செல்லும் அந்தப் பெண்களை என் சொந்த சகோதரிகளைப்போல் நான் நினைப்பேன். இப்படி பெண்களை ஒருவகை வாஞ்சையுடன் பார்க்கக்கூடிய குணம் ஆரம்ப காலம் தொட்டே என்னிடம் இருக்கக்கூடிய ஒன்றுதான். என்னிடம் ஆழமாக வேரூன்றிப் போயிருக்கும் ஒரு குணம் அது என்று கூட சொல்லலாம். நான் சிறுவனாக இருக்கும் காலத்திலேயே பெண்களை அளவற்ற கருணையுடனும் மரியாதையுடனும் பார்த்து வந்திருக்கிறேன். அவர்களின் முகம்கூட பாதிதான் என் ஞாபகத்தில் இப்போது இருக்கிறது.

ஆனால் கீ மீது நான் வைத்திருந்த காதல் இதிலிருந்து புதியதான ஒன்று. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதை சிறிதுகூட புரிந்து கொள்ளாமல் அவள் தனக்கென ஒரு சிறையை அமைத்துக் கொண்டு அதற்குள் உட்கார்ந்திருக்கிறாள். அவளின் நிலையும் உண்மையிலேயே பரிதாபமானதுதான். தான் மனதில் ஆசைப்படுவது மாதிரி அவளால் வாழ முடியவில்லையே. தனக்கென்று அவள் ஒரு கட்டுப்பாட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறாள். பாதிரியார்களும் மதத்தை போதிக்கும் பெண்களும் என் மேல் உண்டாக்கியிருக்கும் தாக்கத்தை விட அவளை மிகவும் அதிகமாகவே பாதித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இனிமேலும் அவர்கள் என்மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது. காரணம்- அதற்குள் மறைந்திருக்கும் பல செப்படி வித்தைகளை நான் எப்படியோ கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், அவளோ இன்னும் அதை நம்பிக் கொண்டிருக்கிறாள். அவற்றைத் தாங்க முடியாமல் கனமாக சுமந்துகொண்டும் இருக்கிறாள். அதற்கென இருக்கும் கொள்கைகள், பாவம், கடவுள், சொர்க்கம் - இவற்றை விட்டு மீண்டும் அவளால் வர முடியவில்லை.

அவள் ஒரு விஷயத்தை எப்போதும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். டச் எழுத்தாளர் மல்டாட்டுலி தன் பிரார்த்தனையை எப்போது முடித்தாலும் சொல்லக்கூடிய ‘கடவுளே, கடவுள் என்ற ஒருவர் இல்லவே இல்லை...’ என்ற வார்த்தைகளின் முடிவில்தான் கடவுள் என்ற ஒருவர் ஆரம்பமாகிறார் என்பதே அது. என்னைப் பொறுத்தவரை பாதிரியார்கள் சொல்லக்கூடிய கடவுள் கதவில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணியைப்போல் உயிரற்றவர் என்பதே. அதற்காக என்னை ஒரு இறை மறுப்பாளன் என்று கூறிவிட முடியுமா? பாதிரியார்கள் அப்படித்தான் என்னை நினைக்கிறார்கள். அப்படியே அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால், நான் காதலிக்கிறேன். நான் வாழ்க்கையில் வாழாமல் இருந்தால் எப்படி காதல் என்பதை உணர முடியும்? மற்றவர்கள் வாழாமல் இருந்தால், நான் எப்படி காதலை உணர முடியும்? நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதிலேயே சில புரியாத புதிர்கள் மறைந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. அதை கடவுள் என்று அழை. இல்லாவிட்டால் இயற்கை என்று குறிப்பிடு. இல்லாவிட்டால் நீ மனதில் என்ன சொல்லி அழைக்க விரும்புகிறாயோ அப்படி அழை. ஆனால், அதை சாதாரண வார்த்தைகளால் என்னால் விளக்க முடியாது. அந்த அளவிற்கு அது உயிர்ப்பானது, மிக மிக உண்மையானது. அதுதான் கடவுள்.

தியோ, நான் கீயை ஆயிரம் காரணங்களுக்காக காதலிக்கிறேன். நான் வாழ்க்கையையும் உண்மையையும் வெகுவாக நேசிக்கிறேன். வாழ்க்கையை விட்டு ஒதுங்கி இருக்க நான் விரும்பவில்லை. கடவுள், மதம் ஆகியவற்றைப் பற்றி நான் என்ன கருத்துக்களை வைத்திருக்கிறேனோ, அதே கருத்துக்களைத்தான் கீயும் வைத்திருக்கிறாள் என்னும் போது அவளை விரும்பாமல் எப்படி இருக்க முடியும்? அவளை நான் வெறுமனே விட்டுவிட தயாராக இல்லை. அவள் என்மீது கோபமாக இருக்கலாம். எனினும், நான் பொறுமையைக் கையாள நினைக்கிறேன். அவளின் எந்தச் செயலும் என்னை கோபம் கொள்ளச் செய்யப் போவதில்லை. ஆனால், அவள் பழைய விஷயங்களைப் பிடித்துக் கொண்டு தொங்கத் தொடங்கிவிட்டால், நான் என் மனதை ஓவியத்தின் மீதும், என்னுடைய வேலையின் மீதும் திருப்பியே ஆக வேண்டும். நான் அப்படிச் செயல்படுவதுதான் நல்லதும்கூட. நான் ஏதோ சோகத்தில் இருக்கிறேன் என்றோ விரக்தியில் உழன்று கொண்டிருக்கிறேன் என்றோ கவலையில் மூழ்கிப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறேன் என்றோ என்னைப் பற்றி நீ நினைத்துவிடாதே. அதற்கு மாறாக நான் எப்போதும் ஓவியம் வரைவது, வாட்டர் கலர்கள், படம் வரைவதற்கான ஸ்டுடியோவைத் தேடுவது என்று சுறுசுறுப்பாகவே இருக்கிறேன்.

எனக்கேற்ற ஒரு சரியான ஸ்டுடியோவைக் கண்டுபிடிக்க வேண்டும்.

என்னுடைய கடிதம் மிகவும் நீளமான ஒன்றாக அமைந்துவிட்டது.

மவ்வை சந்திப்பதற்கு முன்பிருந்த என் வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆனால், அந்த நாட்களும் எனக்கு சில நல்லவற்றை செய்திருக்கின்றன என்பதே உண்மை. எனக்கு அடிக்கொருதரம் கடிதம் எழுது. இந்த குளிர்காலத்தின்போது நீ இங்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? மவ் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக நான் ஸ்டுடியோவை வாடகைக்கு எடுக்க விரும்பவில்லை. நான் எடுக்கப் போகும் அறையைப் பற்றிய விவரத்தை அவருக்கு அறிவிப்பதாகக் கூறியிருக்கிறேன். ஒருவேளை அவரே நேரில் வந்து அதைப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்பா இந்த விஷயத்தில் சிறிதும் தலையிட மாட்டார்.


கலை சம்பந்தமான எந்த விஷயத்தையும் அப்பாவால் தீர்மானிக்க முடியாது. எந்த அளவிற்கு என் விஷயத்தில் அவர் அதிகம் தலையிடாமல் இருக்கிறாரோ அந்த அளவிற்கு அவருடன் இணக்கமாக என்னால் பழக முடியும். காரணம்- என்னுடைய வேலைகளில் சுதந்திரமான ஒரு மனிதனாகவும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத ஒருவனாகவும் இருக்கவே நான் விரும்புகிறேன். நான் அப்படி நினைப்பது நியாயம்தானே?

சில நேரங்களில் கீயைப் பற்றி நினைக்கும்போது, நான் உண்மையிலேயே அதிர்ச்சிக்கு ஆளாகி விடுகிறேன். கடந்த காலத்திற்குள் அவள் எந்த அளவிற்கு தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் பழைய செத்துப் போன கொள்கைகளை அவள் பிடித்துக் கொண்டு தொங்குவதையும் பார்க்கும்போது எனக்கு மனதில் சங்கடமாக இருக்கிறது. அவள் அப்படி இருப்பதில் நிச்சயம் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. அவள் தன்னுடைய கருத்துக்களை மாற்றிக் கொண்டால், நிச்சயம் அந்த ஆபத்திலிருந்து அவள் தப்பிக்க முடியும். அப்படியொரு முடிவை அவள் எடுப்பதே அவளுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். மார்ச் மாதத்தில் அவளுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். மார்ச் மாதத்தில் நான் தி ஹேக்கிற்கு மீண்டும் போகலாமென்றிருக்கிறேன். அப்படியே ஆம்ஸ்டர்டாமிற்கும் செல்வேன். கடந்த முறை ஆம்ஸ்டர்டாமை விட்டுப் புறப்படுகிறபோது எனக்கு நானே கூறிக்கொண்டேன் - ‘எந்தவித காரணத்தைக் கொண்டும் மனதில் மகிழ்ச்சி இல்லாமல் உன்னை ஆக்கிக்கொள்ளக் கூடாது. எந்தவித அதிர்ச்சிக்கும் ஆளாகக்கூடாது. உன் வேலைகள் அதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. வளர்ச்சியை நோக்கி அது நடை போட்டுக் கொண்டிருக்கின்ற நிமிடத்தில் அப்படியொரு சம்பவம் நடக்கவே கூடாது’ என்று. இந்த மாதிரியான சூழ்நிலைகள் வாழ்க்கையில் அவ்வப்போது வரத்தான் செய்யும். ஆனால், அது சிறிது காலத்திற்கு மட்டுமே. அதைத் தாண்டி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.

என்னைப் பார்த்து சில காரணங்களுக்காக நீ பொறாமைப்படலாம். நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேனோ, அதை யாராலும் தேடிக் கண்டுபிடித்து விட முடியும். ஏன், என்னை விட வெகு சீக்கிரமே கூட நீ அதைக் கண்டுபிடிக்கலாம். உண்மையாக சொல்லப் போனால் எத்தனையோ விஷயங்களில் நான் மிகவும் பின்தங்கியவனாகவும், குறுகலான மனதைக் கொண்டவனுமாகத்தான் இருக்கிறேன். தப்பு எங்கே இருக்கிறது என்பதை நிச்சயம் நான் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தத் தப்பை கண்டுபிடித்து, அதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும். பல நேரங்களில் நம் கண்களில் இருக்கும் உத்திரத்தை நாம் பார்க்காமலே இருந்து விடுகிறோம் என்பதுதான் விந்தையாக இருக்கிறது. உன்னுடைய பதில் கடிதத்தை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். என் கடிதங்களில் தானியத்தையும் பதரையும் நீ தனித்தனியாக கட்டாயம் பிரிக்க வேண்டும். நான் எழுதிய கடிதங்களில் ஏதாவது உண்மை இருப்பின், நல்ல விஷயங்கள் இருப்பின் அதை மட்டும் எடுத்துக்கொள். அவற்றில் சரியில்லாத பலவும் இருக்கவே செய்கின்றன. பல நேரங்களில் மிகைப்படுத்தப்பட்ட பல விஷயங்களும் அவற்றில் இருக்கின்றன. என்னால் அதைத் தெளிவாக உணர முடிகிறது. நானொன்றும் மெத்த படித்தவனில்லை. நான் ஒரு அப்பாவி மனிதன். எல்லோரையும் போல ஏன் - எல்லோரையும்விட என்றுகூட சொல்லலாம். அப்படி இருப்பதால்தான் பல நேரங்களில் நான் தவறு செய்து விடுகிறேன். ஆனால், அப்படி தவறு செய்கிறபோதுதான், சரியான பாதை எது என்பதே நமக்குத் தெரிய வருகிறது. ‘வாழ்க்கையில் உண்டாகும் சிறு சிறு மாற்றங்கள் கூட ஏதோ சில நன்மைகளை நமக்குக் கொண்டு வரவே செய்கிறது’ என்ற ஜுலி ப்ரெட்டனின் வார்த்தைகளை நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். மவ்வின் பேச்சை எப்போதாவது நீ கேட்டிருக்கிறாயா? அவர் பல சமயப் பிரச்சாரகர்களையும் நகலெடுத்து பேசுவதை நான் பார்க்கிறேன். பீட்டரின் பிரசங்கத்தை மவ் அப்படியே நகலெடுத்து பேசுவதை ஒருமுறை நான் கேட்டிருக்கிறேன். அவர் அதை அப்படியே களவாடியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அவர் கடவுளின் நல்ல நோக்கங்களைப் பற்றி பேசினார். ‘டைக்ரீஸ் அன்ட் யூப்ரட்டீஸ்’ என்பதைப் பற்றி பேசினார். பாதிரியார் பெர்னார்ட்டின் பேச்சை நகலெடுத்து மவ் பேசியதையும் நான் கேட்டேன். ‘கடவுள்... கடவுள்... அவர் எல்லையற்றவர். அவர்தான் கடலைப் படைத்தார். பூமியைப் படைத்தார். வானத்தைப் படைத்தார். நட்சத்திரங்களைப் படைத்தார். சூரியினைப் படைத்தார். நிலவைப் படைத்தார். அவர் எல்லாவற்றையும் செய்வார். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.. இல்லை - அவர் எல்லையற்றவரில்லை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவரால் செய்யவே முடியாது. கடவுளால் செய்ய முடியாத அந்த ஒன்று எது?

ஆமாம் - பாவம் செய்பவனைப் படைக்காமல் அவரால் இருக்க முடியாது.

இத்துடன் கடிதத்தை நிறுத்துகிறேன். தியோ, சீக்கிரம் கடிதம் எழுது. எண்ணத்தில் கை குலுக்குகிறேன். என்னை நம்பு.

உன்
வின்சென்ட்.

***

திஹேக், மார்ச் 1882

அன்புள்ள தியோ,

தெர்ஸ்டீக்கைப் பற்றி நான் எழுதியதற்காக நீ ஒரு மாதிரி ஆகியிருப்பாய். ஆனால், நான் எழுதியது என்னவோ உண்மை. அவரிடம் இதை நேரடியாகச் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர் பல வருடங்களாகவே என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? நான் ஏதோ சதா நேரமும் கனவு கண்டு கொண்டிருப்பவன் என்றும், எதைப் பற்றியும் பெரிதாக நினைக்காதவன் என்றும் என்னை அவர் இப்போதும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு ‘உனக்கு வாட்டர் கலர்களை எப்படி பயன்படுத்தி படம் வரையிறதுன்னே தெரியல’ என்றார்.

அவர் சொன்னது ஒரு விதத்தில் பார்க்கப் போனால் சரிதான். வாட்டர் கலர்களை நான் பயன்படுத்தாதற்குக் காரணம் - என்னுடைய ஓவியங்களை மேலும் தீவிர கவனம் செலுத்தி நான் வரைய விரும்புவதுதான். அதனுடைய வடிவம், ஒழுங்கமைப்பு போன்றவற்றில் நான் முழுமையான சிரத்தை செலுத்த விரும்புகிறேன்.

அவரின் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் வரைந்த ஓவியங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்கிறபோது, நானும் அவற்றை அவருக்கு ஏன் காட்ட வேண்டும்?

என் ஓவியங்களைப் பார்த்து அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார். ஆனால், அந்த ஓவியங்களில் பாராட்டக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவர் இப்படியெல்லாம் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிப்பார் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.


எப்படிப்பட்ட ஓவியங்கள் விற்பனையாகும், எது விற்காது போன்ற விஷயங்களை அவர் என்னிடம் பேசுகிறார். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி எனக்கே நன்றாகத் தெரியும். அவர் சொல்லித்தான் எனக்கு இது தெரிய வேண்டும் என்றில்லை. படங்களை விற்பனை செய்யும் தொழிலில் நீண்ட காலம் இருந்தவன்தானே நான். 

இந்த விஷயத்தில் நான் ஏதாவது அவரிடம் சொல்லிவிட்டால், ஒருவேளை அவருடன் நான் கொண்டிருக்கும் நட்புக்கு பங்கம் வந்தாலும் வந்துவிடும்.

பல நேரங்களில் என்னையும் மீறி நான் உணர்ச்சி வசப்பட்டாலும், நான் அமைதியாக இருக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். அமைதியாக இருப்பதால் என்னால் முழுமையான கவனத்துடன் ஓவியம் வரைய முடிகிறது. என் மன அமைதியின் பிரதிபலிப்பு என் ஓவியங்களில் தெளிவாக தெரிகிறது. என்னை நீண்ட காலமாக நன்கு தெரிந்திருக்கும் அவருக்கு என் சுபாவம் என்னவென்பது நன்றாகவே தெரியும். அதனால்தான் அவர் இப்போதுகூட என்னைப் பார்த்து சொல்கிறார். ‘உனக்கு நிறைய பொறுமை இருக்கிறது’ என்று.

அவர் சொன்னது உண்மையிலேயே தவறானது. கலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவன் அதிக பொறுமையாக இருக்கவே முடியாது. அப்படி சொல்லப்படுவதே சரியில்லாத ஒன்று என்பதுதான் என் கருத்து. என் விஷயத்தில் திரு.தெர்ஸ்டீக்கிற்குப் பொறுமை இல்லை என்பதுதான் உண்மை.

தெர்ஸ்டீக் பல விஷயங்களை இப்போது என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு விஷயத்தையும் எந்த அளவிற்கு தீவிரமாக பார்க்கிறேன் என்பதையும், என்னை பிரதிபலிக்காத படைப்புகளை அனாவசியமாக நான் உருவாக்க மாட்டேன் என்பதையும் அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சொல்லப் போனால் எந்த என் சமீபத்திய ஓவியங்களைப் பார்த்து கடுமையான வார்த்தைகளால் தெர்ஸ்டீக் அர்ச்சனை செய்தாரோ, அந்த ஓவியங்களில்தான் நான் யார் என்பதே சற்று தெரிய ஆரம்பித்திருந்தது.

வாட்டர் கலரை பயன்படுத்தி கடுமையாக முயற்சி செய்து வரையும் பட்சம், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தெர்ஸ்டீக்கும் சரி நீயும் சரி உரிய நேரம் வரும்வரை காத்திருந்துதான் ஆக வேண்டும். அதற்கான தருணம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை. மாடல் இருப்பதால் இங்கு இருக்கும்போது அவர் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார். நான்கூட அவரைப் பார்த்து சொன்னேன், ‘உங்க விருப்பப்படி நீங்க இருக்கலாம். அதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை’ என்று. இதற்கு மேல் நான் என்னதான் சொல்ல முடியும்?

தெர்ஸ்டீக் இங்கு வந்தபிறகு நான் அனாதை இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவன் காலணிகளுக்கு சாயம் பூசுவது மாதிரி ஒரு படம் வரைந்தேன். போகிற போக்கில் நான் இதை வரைந்திருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு சிறுவன் உண்மையிலேயே இருக்கவே செய்கிறான். என் கைகள் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவையாக இருக்கலாம். அதே நேரத்தில் மூளை என்ன நினைக்கிறதோ, அதைப் புரிந்துகொண்டு செயல்படக் கூடியவையாக அவை கட்டாயம் இருக்கும். ஸ்டூடியோவை ஒரு ஓவியமாக வரைந்தேன். அடுப்பு, புகைக்கூண்டு, படம் வரைவதற்கான ஸ்டாண்ட், ஸ்டூல், மேஜை எல்லாமே அந்த ஸ்டூடியோவில் இருப்பது மாதிரி ஓவியத்தில் காட்டினேன். எனினும், அந்த ஓவியம் விற்பனை ஆகக்கூடிய அளவிற்கு இல்லை. எனினும், எனக்கு அது ஒரு திறமையை வளர்க்கக்கூடிய பயிற்சியாக இருந்தது.

நான் உன் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீ இங்கு கடந்த கோடைக்கு வந்து போன பிறகு நான் வரைந்த பல ஓவியங்கள் தற்போது என்னிடம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீ பார்க்க வேண்டும். நீ என்னுடைய ஓவியங்களை முழுமையான பிரியத்துடனும் என் திறமை மீது கொண்ட நம்பிக்கையுடனும் பார்ப்பாய். விருப்பமில்லாமல் பார்க்கக்கூடிய குணம் உனக்கு என்றுமை இல்லை.

நான் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறேன். தெர்ஸ்டீக் இதை மிகவும் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் அவரின் எண்ணம் தவறு என்பதை நான் உணர்கிறேன்.

சொல்லப் போனால் நான் மெதுவாக நடந்து போகும் எருமையைப் போல என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இங்கு வரும்போது இங்க்ரெஸ் பேப்பர் கொண்டு வர மறந்துவிடாதே. சற்று அடர்த்தியாக இருக்கும் பேப்பர்தான் நான் விரும்பக்கூடியது. வாட்டர் கலர் கொண்டு வரைவதற்கு அந்தப் பேப்பர்தான் சரியானதாக இருக்கும். கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மை என்பது மிகவும் முக்கியம். மக்கள் மேலோட்டமாக ரசித்து நகர்கிற மாதிரி வரைவதைவிட ஆழமாக ஒரு விஷயத்தை வரைவது என்பது மிகவும் தொந்தரவு தரக்கூடியது. கவலைகளில் மூழ்கிப் போயிருக்கும் நிமிடங்களில் நான்கூட இந்த மாதிரியான மேலோட்டமான படைப்பை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறேன். ஆனால், அடுத்த நிமிடமே எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், ‘உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கரடுமுரடாக இருந்தால்கூட பரவாயில்லை. உண்மை விஷயங்களை படைப்பில் நாம் கொண்டு வரவேண்டும்’ என்று. வியாபாரிகள் பின்னாலும், அரைகுறை அறிவு கொண்ட மனிதர்கள் பின்னாலும் நான் எந்தக் காலத்திலும் ஓட மாட்டேன். என்னைக் காண விரும்புபவர்கள், வரட்டும். நமக்கென்று ஒரு நேரம் வரும், அப்போது அறுவடை செய்வோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனம் தளர்ந்துவிடக்கூடாது.

தியோ, எவ்வளவு பெரிய மனிதர் மில்லெ.

தெ போவிடமிருந்து ஸென்ஸே எழுதிய அந்தப் புத்தகத்தை நான் கடன் வாங்கினேன். என்னை அந்த நூல் வெகுவாகக் கவர்ந்துவிட்டது. பல இரவுகளில் தூக்கத்தை விட்டு எழுந்து விளக்கைப் போட்டு அமர்ந்து அதைப் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். இவ்வளவுக்கும் பகல் வேளைகளில் நான் கட்டாயம் படம் வரைந்தாக வேண்டும்.

முடியுமானால், கொஞ்சம் பணம் அனுப்பி வை. தெர்ஸ்டீக்கிற்காக நான் செலவு செய்தாக வேண்டும். கனவு காண்பதும், வெறுமனே தூங்கிக் கொண்டிருப்பதும், போதை மாத்திரைகள் சாப்பிடுவதும் மட்டுமே வாழ்க்கை அல்ல - ஒரு மனிதன் நான்கு பேருக்குத் தெரிவதற்காக எந்த அளவுக்குக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது என்பதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். மாடலைக் கண்டுபிடித்து, நான் படம் வரைவதற்காக அவர்களை உட்கார வைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல. இந்த ஒரு விஷயம்தான் பெரும்பாலான ஓவியர்களை வெறுப்பு உண்டாகச் செய்வதே. பல நேரங்களில் உணவு, மது, ஆடைகள் எல்லாவற்றையும்கூட தியாகம் செய்துவிட்டு, அந்தப் பணத்தை மாடல்களுக்கு செலவழிக்க வேண்டியது வரும்.

என்ன இருந்தாலும் தெர்ஸ்டீக், தெர்ஸ்டீக்தான். நான், நான்தான்.


அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். எந்தவிதத்திலும் அவருக்கு நான் எதிரானவன் அல்ல. அவர் மன வருத்தம் அடையும்படியும் நான் நடக்க மாட்டேன். ஆனால், அவருக்கு அறிவுறுத்தி என்னைப் பற்றி அவர் கொண்டிருக்கும் கருத்தை மாற்றும்படி செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி செய்ய முடியும் என்று திடமாக நான் நம்புகிறேன். எங்களுக்குள் நட்புணர்வு இல்லாத ஒரு உறவு இருப்பது எனக்கு மன வருத்தத்தையும் கவலையையும் தருகிறது. வெகு சீக்கிரமே உன் கடிதம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தக் கடிதத்தின் தபால் தலைக்காக என்னிடமிருந்த கடைசி காசையும் செலவழித்து விட்டேன். சில நாட்களுக்கு முன்புதான் தெர்ஸ்டீக்கிடம் 10 கில்டார்கள் வாங்கினேன். வாங்கிய நாளன்றே அதில் 6 கில்டார்களை மாடலுக்கும், ரொட்டி செய்யும் ஆளுக்கும், ஸ்டுடியோவை சுத்தம் செய்யும் சிறுமிக்கும் கொடுத்து விட்டேன். நல்ல நலத்துடனும் தைரியத்துடனும் நீ இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். நானும்கூட நல்ல தைரியத்துடன்தான் இருக்கிறேன்.

கை குலுக்கிக் கொண்டு,
வின்சென்ட்.

டச் ஓவியரும் என் நண்பருமான ஜூலி பாக்யூஸெ சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தார். எப்போதெல்லாம் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் அவரைப் பார்க்க நான் கிளம்பி விடுவேன்.

***

 திஹேக், மே 1882

அன்புள்ள தியோ,

மவ்வை இன்று நான் சந்தித்தேன். எங்களுக்குள் மனம் வருத்தப்படும்படியான ஒரு சந்திப்பாக அது அமைந்துவிட்டது. மவ்வும் நானும் நிரந்தரமாகப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இந்த சந்திப்பின்மூலம் நான் புரிந்துகொண்டேன். மவ் எனக்காக எந்த உதவியும் செய்யத் தயாராக இல்லை என்பதை அவரே வெளிப்படையாக என்னிடம் கூறியும் விட்டார். என் படைப்புகளை வந்து பார்க்கும்படி நான் மவ்விடம் சொன்னேன். அதற்கு மவ் மறுத்ததோடு நிற்காமல், அவர் சொன்னார் ‘உன்னைப் பார்க்க நிச்சயமா நான் வரமாட்டேன். எல்லாமே முடிஞ்சிடுச்சு’ என்று.

கடைசியில் அவர் சொன்னார்- ‘நீ ஒரு மோசமான ஆளு’. அவர் அப்படிச் சொன்னதும், நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்கு தனியாக நடந்து வந்துவிட்டேன்.

‘நான் ஒரு ஓவியன்’ என்று நான் சொன்னது மவ்விற்குப் பிடிக்காமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். அதற்காக நான் சொன்ன அந்த வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. நான் அப்படி சொன்னதில் எந்தத் தப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் சதாநேரமும் தேடலில் ஈடுபட்டிருக்கிறேன். எதையாவது கண்டுபிடித்தேன் என்று கூறுவதைவிட தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதே சரியாக இருக்கும்.

‘நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய முழு மனதும் நான் செய்யும் வேலையிலேயே இருக்கிறது’ - இப்படி நான் சொன்னால் அதில் என்ன தப்பு இருக்கிறது?

தியோ, எனக்குச் செவிகள் இருக்கின்றன. யாராவது ‘நீ ஒரு நல்ல மனிதன் இல்லை’ என்று சொன்னால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

நான் வீட்டை நோக்கி தனியாக நடந்து சென்னாலும் என் மனம் மிகவும் கனமாகிவிட்டிருந்தது என்பதென்னவோ உண்மை. மவ் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப மனதில் வலம் வந்துகொண்டே இருந்தன. அவர் அப்படி ஏன் சொன்னார் என்பதை அவரிடம் நான் இனிமேல் கேட்கப் போவதில்லை. அதே நேரத்தில் நான் சொன்ன வார்த்தைகளுக்காக அவரிடம் நான் வருத்தம் தெரிவிக்கப் போவதும் இல்லை. இப்போதுகூட சொல்கிறேன் - தன் செயலுக்காக உண்மையிலேயே பார்க்கப் போனால் மவ்தான் வருத்தப்பட வேண்டும்.

என்னைப் பார்த்து அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். நான் மற்றவர்களுக்குத் தெரியாமல் என்னவோ எனக்குப் பின்னால் மறைத்து வைத்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். வெளிச்சத்தில் ‘பளிச்’ என தெரியாத ஒன்றை நான் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறேன் என்று அவர்கள் நினைத்தால், நான் என்ன செய்ய முடியும்?

சரி.. அது ஒருபுறம் இருக்கட்டும். நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு, நல்ல பண்பாட்டைக் கொண்டு, வாழ்க்கையில் எது சரி என்பதை புரிந்து கொண்டு அதைப் பின்பற்றி நடக்கும் உன்னைப் பார்த்து நான் கேட்கிறேன். ஒரு பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு ஓடிவிடுவது நல்லதா? இல்லாவிட்டால் தூக்கி எறியப்பட்டு அனாதையாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஆதரவாக நின்று கொண்டிருப்பது நல்லதா?

இந்தக் குளிர் காலத்தின்போது நான் ஒரு கர்ப்பமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டவள். அவனுடைய குழந்தையைத்தான் அவள் வயிற்றில் வைத்திருந்தாள்.

குளிர் கடுமையாக வாட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னுடைய உணவிற்காக தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு கர்ப்பமுற்ற பெண்ணை நீயே மனதில் கற்பனை பண்ணிப் பார்.

நான் அந்தப் பெண்ணை மாடலாக வைத்து படம் வரைந்தேன். குளிர்காலம் முழுக்க எனக்கு மாடல் அவள்தான். ஒரு மாடலுக்குத் தரவேண்டிய முழு சம்பளத்தையும் அவளுக்கு நான் தரவில்லை. அதே நேரத்தில் கையிலிருந்த சிறு தொகையை அவளுக்குக் கொடுத்தேன். அவள் எனக்கு கிடைத்தற்காக கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவளையும் அவளின் குழந்தையையும் பசியிலிருந்தும் குளிரிலிருந்தும் நான் காப்பாற்றியிருக்கிறேன். என் சாப்பாட்டை அவளுடன் நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நான் அவளை முதல் தடவையாகப் பார்த்தபோதே அவள் என்னை ஏதோ ஒரு விதத்தில் மிகவும் கவர்ந்துவிட்டாள். அந்த நேரத்தில் அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளை அழைத்து வந்து குளிக்கச் செய்தேன், அவளுக்கு சாப்பிட என்னவெல்லாம் என்னால் தர முடியுமோ, அவற்றையெல்லாம் நான் தந்தேன். சில நாட்களிலேயே அவள் உடல் தேற ஆரம்பித்துவிட்டது. அவளுடன் லேடன் என்ற இடத்தில் இருக்கும் பிரசவ மருத்துவமனைக்குச் சென்றேன். (அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். எப்படியும் நல்ல முறையில் பிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜூன் மாதம் அவளுக்கு பிரசவம்).

இந்த மாதிரியான சூழ்நிலைகள் வருகிறபோது எந்த மனிதனாக இருந்தாலும், என்னைப் போலத்தான் நடக்க முடியும் என்று நினைக்கிறேன்.


யாருக்குமே தெரியாமல் நான் இந்தக் காரியத்தை செய்திருந்தாலும், நான் நடந்து கொண்டது சர்வ சாதாரணமானது என்றே நினைக்கிறேன். படம் வரைவதற்கு போஸ் தருவது என்பது அவளுக்கு உண்மையிலேயே கஷ்டமான ஒரு விஷயம்தான். எனினும், அவள் அதையும்கூட நன்கு தெரிந்து கொண்டுவிட்டாள். அவள் ஒரு நல்ல மாடலாக இருந்ததால் நானும் அவளை வைத்து நல்ல படங்களை வரைய முடிகிறது. அந்தப் பெண் இப்போது வீட்டில் வளர்க்கும் புறாவைப்போல் என்னுடன் மிகவும் ஐக்கியமாகிவிட்டாள். அவளை நான் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறேன். திருமணம் செய்வதன் மூலம்தான் அவளை நான் காப்பாற்ற முடியும். நான் அதை செய்யாவிட்டால் வறுமை விடாமல் துரத்தி மீண்டும் அவளை பழைய பாதைக்கே கொண்டு போய் சேர்த்துவிடும். அவளிடம் காசு இல்லை. இருந்தாலும் என் தொழலில் நான் பணம் சம்பாதிக்க அவள் எனக்கு உதவியாக இருக்கிறாள்.

நான் எனக்கென்று இலட்சியங்கள் வைத்திருக்கிறேன். என் தொழிலை நான் உயிரென நேசிக்கிறேன். மவ் என்னைக் கைவிட்டவுடன், நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அந்த அதிர்ச்சி காரணமாக சிறிது காலம் நான் படம் வரையாமல் கூட இருந்தேன். வாட்டர் கலர்களைக் கையால் தொடாமல் கூட இருந்தேன். அவர் மறுபடியும் இங்கு வந்தால், புதிய உற்சாகத்துடன் நான் ஓவியங்களைத் தீட்ட ஆரம்பிப்பேன். ப்ரஷ்ஷைப் பார்க்கும்போதே, என்னுடைய உடலில் ஒரு நடுக்கம் உண்டாகிறது.

தியோ, மவ்வின் நடத்தையைப் பற்றி நீதான் உன்னுடைய கருத்தை எனக்கு சொல்ல வேண்டும். இந்தக் கடிதத்தின் மூலம் நீ அதைத் தெரிந்து கொள்ளலாம். நீ என்னுடைய சகோதரன். உன்னிடம் நான் பல தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவது என்பது மிகவும் இயல்பானது. ஆனால், அதே நேரத்தில் வேறு யாராவது வந்து ‘நீ மோசமானவன்’ என்று என்னைப் பார்த்துப் பேசினால், அப்படிப்பட்ட மனிதருடன் தற்போதைக்கு ஒரு வார்த்தைகூட பேசாமலிருப்பதே நல்ல விஷயமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இதைவிட நான் வேறு என்ன செய்ய முடியும்? என் கையால் எப்படி வரைய முடியுமோ, அப்படித்தான் என்னால் வரைய முடியும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன். வார்த்தைகளால் அல்ல, அவை இல்லாமல் நான் புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். என் இதயம் எந்தப் பெண்ணுக்காக அடித்துக் கொள்கிறதோ அந்தப் பெண் கீ வோஸை என்னால் சிறிது கூட மறக்க முடியவில்லை. ஆனால் அவளோ என்னை விட்டு எவ்வளவோ தூரத்தில் இருக்கிறாள். என்னைப் பார்க்க முடியாது என்று அவள் ஒரேயடியாகக் கூறிவிட்டாள். ஆனால், இவளோ தெருவில் அலைந்து கொண்டிருப்பவள். உடம்பில் நோயை வைத்துக்கொண்டு, வயிற்றில் கர்ப்பத்தை வைத்துக் கொண்டு பசியுடன் குளிரையும் பொருட்படுத்தாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறாள். நான் இந்த விஷயத்தில் வேறு எப்படி நடக்க முடியும்? என்னுடைய ரொட்டி மவ், தியோ, தெர்ஸ்டீக் - மூவரின் கைகளிலும் இருக்கிறது. அதை எனக்குத் தராமல் என்னிடமிருந்து பறித்துக் கொண்டு விடுவீர்களா? இல்லாவிட்டால் என்னைப் பார்த்து முதுகைக் காட்ட ஆரம்பித்துவிடுவீர்களா? நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

வின்சென்ட்

நான் உனக்கு சில ஓவியங்களை அனுப்பியிருக்கிறேன். இவற்றை வைத்து அவள் போஸ் கொடுத்ததன் மூலம் எனக்கு எந்த அளவிற்கு உதவியிருக்கிறாள் என்பதை நீ புரிந்து கொள்ளலாம்.

என்னுடைய ஓவியங்கள் என்னுடைய மாடலும் நானும் சேர்ந்து செய்த வேலை என்பதே சரி. வெள்ளை தொப்பி அணிந்து காட்சியளிக்கும் பெண், அவளுடைய தாய்.

இந்த மூன்று ஓவியங்களையும் நீ திரும்பவும் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் மிகவும் வித்தியாசமாக நான் வரைகிறேன் என்றும், என்னுடைய ஓவியங்களில் அந்த மாறுபட்ட அம்சம் தெரிகிறது என்றும் எல்லோரும் கூறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த ஓவியங்கள் மிகவும் சிரத்தை எடுத்து வரையப்பட்டவை என்பதை நீ உணரலாம். பின்னர் ஒரு அழகான அறையை நான் அமைக்கிற காலத்தில், இந்த ஓவியங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். நான் என்னுடைய நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை நீ இந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியங்களில் ஒரு புது வகை உத்தியை நான் கையாண்டிருக்கிறேன். உன்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். குனிந்திருக்கும் பெண்ணின் உருவத்தை நல்ல பேப்பரில் வரையவே நான் பிரியப்பட்டிருக்கிறேன். அடர்த்தியான அந்த பேப்பரை டபுள் இங்க்ரெஸ் என்று அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்த ஓவியத்தைப் பார்க்கும்போதே, இதை மிகவும் மெலிதாக இருக்கும் தாளில் வரைந்தால் நன்றாக இருக்காது என்பதை நீயே தெரிந்து கொள்ளலாம். நான் உனக்கு வேறொரு படத்தை அனுப்பி வைக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதில் வரும் ஒரு நாற்காலியை நான் இன்னும் முழுமையாக வரைந்து முடிக்கவில்லை. பழைய ஓக் மரத்தால் ஆன நாற்காலி அதில் இருக்க வேண்டுமென்பது என் ஆசை.

***

திஹேக், மே 1882

அன்புள்ள தியோ,

இன்று உனக்கு சில ஓவியங்களை அனுப்பியிருக்கிறேன். என்னுடைய வேலையிலிருந்து நான் இம்மியளவும் விலகியிருக்கவில்லை என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றை நான் உனக்கு அனுப்பி வைக்கிறேன். நான் முழுமையாக ஓவியம் வரைவதில் ஆழ்த்திக் கொண்டேன் என்பதையும், அதை மிகவும் மகிழ்ச்சியுடன் நான் செய்கிறேன் என்பதையும், அதற்கான முழு உற்சாகமும் என்னிடம் இருக்கிறது என்பதையும் நீ உணர வேண்டும். நான் உன்னிடம் சொன்ன எந்த விஷயமும் என் வேலை மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாட்டை சிறிதும் குறைக்கவில்லை என்பதே உண்மை.

நான் இப்படி சொல்வதற்காக என்மீது நீ கோபப்பட மாட்டாய் என்று நினைக்கிறேன். இருந்தாலும் உன் கடிதத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதுவரை உன் பதில் கடிதம் எதுவும் வரவில்லை. கிறிஸ்டினுடன் நான் இருப்பதை நீ விரும்பாமல் இருப்பாய் என்று நினைக்கவில்லை. இந்த ஒரு காரணத்திற்காக நீ என்னை ஒதுக்கி விடுவாய் என்று நான் மனப்பூர்வமாக எண்ணவில்லை. மவ், தெர்ஸடீக் இருவரிடமும் எனக்கு உண்டான அனுபவத்திற்குப் பிறகு எப்படி மனக்கவலைகளுடன் என் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறதோ, அதே மாதிரி இந்த விஷயத்திலும் எனக்கு நேரிடலாம்.


எது எப்படியோ - உன்னுடைய பதில் கடிதத்திற்காக நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். எந்தவித சந்தேகமும் இல்லாமல் எனக்குத் தெரியும் நீ மிகவும் பிஸியாக இருப்பாய் என்ற விஷயம். மேலும் நீ கடிதம் எழுதி அப்படியொன்றும் அதிக நாட்கள் ஆகிவிடவில்லை. இன்றோ அல்லது நாளையோ குழந்தை வைத்திருக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் வாழ வேண்டிய அனுபவம் உனக்கு நேரிடலாம். அப்படி வாழும் நேரத்தில் ஒருநாள் ஒரு வாரம் போலவும் ஒரு வாரம் ஒரு மாதத்தை விட அதிகமாகவும் உனக்கு தோன்றலாம். அதனால்தான் இந்தச் சமயத்தில் உனக்கு நான் அடிக்கடி கடிதம் எழுதினேன். ஆனால், எனக்கு இன்னும் உன்னுடைய பதில் கடிதம் வரவில்லையே.

இப்போதிருக்கும் அறையை விட வசதியாக இருக்கும் வண்ணம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதைப் பற்றி என் கடிதத்தில் நான் எழுதியிருந்தேன். இது விஷயமாக உன்னிடம் நான் எதுவும் கேட்கவில்லை. நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். இதற்கு முன்பு நீ என்னிடம் எப்படி அன்புடன் இருந்தாயோ அதே மாதிரி இனிமேலும் நீ இருக்க வேண்டும். நான் செய்த செயல் மூலம் என்னை நானே தாழ்த்திக் கொண்டேன் என்றோ அல்லது மரியாதைக் குறைவான மனிதனாக ஆக்கிக்கொண்டேன் என்றோ நிச்சயம் நினைக்கவில்லை. என்னுடைய படைப்பு மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த உலகத்துடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதை என் ஞாபகத்தில் எப்போதும் வைத்திருக்கிறேன். வாழ்க்கையை மிகவும் ஆழமாகப் பார்த்துக் கொண்டு பலவித கஷ்டங்களையும் பொறுப்புகளையும் கடந்துதான் நான் படிப்பான வளர்ச்சியை வாழ்க்கையில் காண வேண்டியிருக்கிறது.

வேறு எந்த விதத்திலும் நான் செயல்பட்டிருக்க முடியாது. அதற்காக பொறுப்புகளிலிருந்தும் தொந்தரவுகளிலிருந்தும் என்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. நான் மனதில் விருப்பப்படுவது ஒன்றே ஒன்றுதான். நான் செய்த இந்தச் செயல் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் உன்னைப் போன்றவர்கள் இந்த விஷயத்திற்காக என்னைப் பரிதாபமாக காலம் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. ஓவியம் வரைவதைப் போலவே வாழ்க்கையின் விஷயங்களிலும் ஒரு மனிதன் பல நேரங்களில் மிகவும் வேகமாக செயல்பட வேண்டியிருக்கிறது. மனதில் ஒரு தீர்மானத்துடன் எந்த விஷயத்தையும் முழுமையான பலத்துடன் சந்தித்து ஒரு மின்னலைப்போல அடையாளத்தைப் பதிக்க வேண்டியிருக்கிறது.

தயங்கி நிற்பதற்கோ மனதில் முடிவெடுக்காமல் சந்தேகப்பட்டு நிற்பதற்கோ இது நேரமல்ல. நம் கைகள் நடுங்காமல் இருக்கலாம். கண்கள் இங்குமங்குமாய் அலைபாயாமல் இருக்கலாம். ஆனால், அவை நமக்கு முன்னால் இருப்பதன் மேல் நிலை குத்தி நிற்க வேண்டும். முழுக்க முழுக்க நாம் அந்த விஷயத்தில் ஈர்க்கப்பட்டு, சிறிய கால அளவிற்குள் பேப்பரில் இதற்கு முன் இல்லாத ஒன்று வரையப்பட்டு விட வேண்டும். இங்கு அந்த விஷயம் எப்படி வந்து மாட்டிக் கொண்டது என்று நாமே அதிசயித்து நிற்க வேண்டும். மனதில் திட்டமிடுவதும் விவாதிப்பதும் காரியம் செயல் வடிவத்தில் வருவதற்கு முன்பே நடந்து விட வேண்டும். ஒரு காரியம் செயல் வடிவில் நடக்கும்போதே அதில் அதன் விளைவும் விவாதமும் மறைந்திருப்பது தெரியும்.

எவ்வளவு சீக்கிரம் செயல்பட வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு மனிதன் செயலில் இறங்க வேண்டும். எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக காரியத்தைச் செய்ய வேண்டும். சில நேரங்களில் விமானத்தை ஓட்டிச் செல்லும் பைலட் சூறாவளியால் பாதிக்கப்படுவதற்கு பதிலாக, அதையே உதவியாக வைத்து விமானத்தை வேகமாக செலுத்தி வெற்றி பெற்றுவிடக்கூடிய அற்புத செயல்கூட நடக்கத்தான் செய்கிறது.

திரும்பவும் உன்னிடம் நான் சொல்ல விரும்பும் செய்தி இதுதான். எதிர்காலத்திற்கென்று எனக்கு பெரிய திட்டங்கள் எதுவும் கிடையாது. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு முறையும் நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. அப்படி கஷ்டப்படுவதை ஒருவிதத்தில் நான் விரும்பவும் செய்கிறேன். அதற்காக நான் மனம் தளர்ந்துவிடவில்லை. அந்தக் கஷ்டங்களிலிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன். இந்தப் பாதையில் போவதால், நான் அழிந்து போய்விடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையில் முழுமையாக மூழ்கிப் போயிருக்கிறேன். இந்த குளிர்காலம் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தாலும் உன்னுடைய உதவியாலும், மவ், தெர்ஸ்டீக் ஆகியோரின் உதவியாலும் நான் பெரிய பணக்காரனாக ஆகவில்லையென்றாலும், நெற்றி வியர்வையை சிந்தி எந்தவித பிரச்னையுமில்லாமல் சாப்பிட்டு வாழக்கூடிய அளவிற்கு என்னால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கிறிஸ்டின் எந்தவிதத்திலும் எனக்குத் தொந்தரவாக இருக்கவில்லை. மாறாக, உதவியாகவே இருக்கிறாள். அவள் தனியாக இருந்திருந்தால், கவலையில் மூழ்கிப் போய் ஒன்றுமில்லாமல் ஆகியிருப்பாள். இந்த சமூகத்தில் ஒரு பெண் தனியாக இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களுக்கு இந்த உலகம் உதவி செய்வதைவிட காலில் போட்டு நசுக்கவே முயற்சி செய்கிறது. ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் தரையில் விழுந்து கிடந்தால், அவள் மேல் வண்டியை ஏற்றி சாகடிக்கத்தான் இங்குள்ள ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.

இந்த மாதிரி பலவீனமாக கீழே விழுந்து கிடக்கும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த சமயத்தில்தான் சமுதாய வளர்ச்சி, நாகரீகம் என்று பலரும் பேசுவதைப் பற்றி எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உண்மையான மனிதாபிமானத்துடன் எந்த விஷயமும் அணுகப்படும் போதுதான் என்னால் இதன்மேல் மரியாதை கொள்ள முடிகிறது. வாழ்க்கையைக் கொடூரமாக ஆக்கும் எந்த விஷயத்தையும் நான் நிச்சயம் மரியாதையுடன் பார்க்க மாட்டேன். இப்போதைக்கு இது போதும். ஒழுங்காக நான் இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுத்து ஒவ்வொரு வாரமும் சம்பளத்தை ஒழுங்காகப் பெற்று நான் இருப்பேனாயானால், அதுவே எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருக்கும். நான் சிறிதும் தைரியத்தை இழக்கவில்லை. இன்னும் சில நாட்கள் காத்திருக்க நான் தயாராகவே இருக்கிறேன். இதன்மூலம் மேலும் பலத்துடனும், ஆர்வத்துடனும் என்னால் என் வேலையில் முழுமையாக ஈடுபட முடியும். பொறுப்புகளில் என்னை முழுமையாக மூழ்கடித்துக் கொள்வதில், எனக்கு மகிழ்ச்சியே.

பலவகைப்பட்ட ஓவியங்களும் அங்கு இருப்பதை உன்னால் உணர முடியும்.


நான் அனுப்பியிருக்கும் ஓவியங்களில் மிகச் சிறந்தவை எவை என்பதை நீயே ஆராய்ந்து பார். இதன்மூலம் சந்தர்ப்பம் வருகிறபோது நீ எனக்கு அவற்றைக் காட்ட முடியும். எஞ்சி இருப்பவற்றை இப்போதோ பிறகோ நான் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன். மிக விரைவில் இங்கு நீ வருவதாக இருந்தால், இந்த ஓவியங்களை நீ வரும்வரை நான் இங்கேயே வைத்திருந்திருப்பேன். ஆனால், உடனடியாக அவற்றை நீ பார்ப்பதுதான் சரியாக இருக்கும். உன்னுடைய பணத்தை செலவழித்துக் கொண்டு நான் வெறுமனே ஒன்றும் செய்யாமல் இருக்கவில்லை என்பதை இதன்மூலம் நீ புரிந்து கொள்ள முடியும். கிறிஸ்டினுடன் நான் கொண்டிருக்கும் உறவை உண்மை நிலையிலிருந்து வேறு விதமாகக்கூட நீ மனதில் நினைக்கலாம்.

 இந்தக் கடிதத்தையும், இதற்கு முன்பு நான் உனக்கு எழுதிய கடிதத்தையும் படித்தாயானால், உன்னால் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு தெளிவான புரிதலுக்கு வரமுடியம்.

நான் பெரிதாக மதிக்கும் மனிதர்கள் என்னுடைய செயல் ஒவ்வொன்றும் அழகான உணர்ச்சிகளிலிருந்தும் காதலை நோக்கிய தேடல்களிலிருந்தும் உண்டானவை என்பதைப் புரிந்து கொள்வார்கள். என்னுடைய விடாமுயற்சியும், மாறுபட்ட அணுகுமுறையும், தன்னம்பிக்கையும் வாழ்க்கை வண்டியை ஓட வைத்துக் கொண்டிருக்கும் சக்திகள் மட்டுமல்ல வாழ்க்கையின் அடிப்படையில் வேரூன்ற நினைக்கும் என்னுடைய மன வெளிப்பாடுகள் என்றுகூட அவற்றை சொல்லலாம். உன்னதமான ஒன்றை அடைய நான் மேலும் யோசிக்க வேண்டுமென்றோ அல்லது இப்போதிருக்கும் என் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றோ என்னைப் பொறுத்தவரை நான் நினைக்கவில்லை. எனக்கு இன்னும் அனுபவங்கள் தேவைப்படுகின்றன. நான் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நான் இன்னும் கனிய வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு நேரமும் பொறுமையும் தேவைப்படுகின்றன. கடிதத்தை முடிக்கிறேன். விரைவில் கடிதம் எழுது.

எனக்கு நீ ஏதாவது அனுப்பி வைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். என்னை நம்பு. கை குலுக்கல்களுடன்.

உன்
வின்சென்ட்

தி ஹேக்கை விட்டு நான் செல்வது குறித்து யாராவது மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால், வேறு எங்கு நான் போகிறேன் என்பது முக்கியமல்ல. யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் போகவே நான் ஆசைப்படுகிறேன்.

மனதறிந்து நான் யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை. தெர்ஸ்டீக் என்னைப் பற்றி சொன்ன விஷயங்களை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதை உன்னுடைய கடிதத்தைப் பார்த்தப் பிறகு நான் புரிந்து கொண்டேன்.

நான் என்னுடைய கடிதத்தில் வீடு பற்றி எழுதியிருந்தேன். அது இப்போது வாடகைக்கு தயாராக உள்ளது. நான் சீக்கிரம் அதை எடுக்கவில்லையென்றால், வேறு யாரேனும் எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படுகிறேன். நான் உன்னுடைய கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு இதுவும்கூட காரணம்தான். மவ், தெர்ஸ்டீக் ஆகியோரிடம் உண்டான அனுபவங்களையும், கிறிஸ்டினைப் பற்றியும் உனக்கு எழுதியிருந்ததிலிருந்து என்னை உன்னால் புரிந்து கொண்டிருக்க முடியும். இப்போது உன்னிடம் மனதைத் திறந்து ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். இந்த விஷயங்கள் எனக்கும் உனக்குமிடையே இருக்கும் உறவில் ஏதாவது மாற்றத்தையோ பிரிவையோ உண்டாக்கி விடுமா என்ன? அப்படி எதுவும் நடைபெறாது என்றால், உண்மையிலேயே நான் சந்தோஷப்படுவேன். எப்போதும் என்னிடம் நீ கொண்டிருக்கும் பாசத்திற்காகவும், எனக்கு செய்யும் உதவிக்காகவும் நான் இரண்டு மடங்கு மகிழ்ச்சியில் திளைப்பேன். எதையும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறைத்து வைத்துக் கொண்டிருப்பதைவிட, மோசமானதாகவே இருந்தால்கூட அதை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளவே நான் பிரியப்படுகிறேன்.

உன் முகத்திலிருந்தே விஷயம் எனக்கு சாதகமாக இருக்கிறதா இல்லாவிட்டால் பாதகமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மவ்வைப் பற்றியும் தெர்ஸ்டீக்கைக் குறித்தும் உன்னுடைய பதில் என்னவென்பதை ஏற்கனவே நான் உன்னிடமிருந்து தெரிந்து கொண்டுவிட்டேன். ஆனால், கிறிஸ்டினைப்பற்றி நீ எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு கலைஞனின் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் தனிப்பட்ட விஷயங்களுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. ஆனால், நாம் அந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது பல வகைகளிலும் உதவியாக இருக்கும்.

அதனால்தான் நான் எல்லாவற்றையும் இப்போதே கூறிவிட விரும்புகிறேன். தியோ, நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல் என்னை அவளுக்கும். கொஞ்சமும் எதிர்பாராமல் இந்த என்னுடைய செயல் உனக்கு ஒருவேளை பிடிக்காமல் போய், என்னைப் பற்றிய உன்னுடைய எண்ணங்களில் மாறுதல் உண்டாகிவிடும் பட்சம், முன்கூட்டியே என்னிடம் ஒரு வார்த்தை கூறாமல் எனக்கு நீ செய்து வரும் உதவிகளை நிறுத்தி விட மாட்டாய் என்று திடமாக நம்புகிறேன். நீ என்ன மனதில் நினைக்கிறாயோ அதை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக என்னிடம் கூறுவாய் என்பது எனக்குத் தெரியும். உன்னுடைய உதவியும் கருணையும் எந்தவித காரணத்தைக் கொண்டும் என்னைவிட்டு விலகிப் போய்விடக்கூடாது. இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் நம் இருவருக்குமிடையில் இருக்கும் நெருக்கம் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அன்பு சகோதரனே, இதுவரை எனக்கு கடிதம் எதுவும் நீ எழுதாமல் இருந்தால், நான் இப்போது எழுதியிருக்கும் விஷயங்களைப் பற்றி உடனடியாக எனக்கு பதில் கடிதத்தில் எழுது. நான் சொன்ன விஷயங்களை நீ ஆதரிக்கிறாயா இல்லாவிட்டால் எதிர்க்கிறாயா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உனக்கும் எனக்கும் இடையில் வானம் தெளிவாக இருக்கட்டும். இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.

***

திஹேக், ஜூலை 1883

அன்புள்ள தியோ,

நானே ஆச்சரியப்படும் விதத்தில் நேற்று உன்னிடமிருந்து பணத்தை உள்ளடக்கிய கடிதமொன்று எனக்குக் கிடைத்தது. நான் எந்த அளவிற்கு அதைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டிருப்பேன் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. அதற்காக இதயப்பூர்வமான நன்றியை உனக்கு நான் கூறுகிறேன். ஆனால், அவர்கள் அந்த வங்கி நோட்டை மாற்ற மறுத்துவிட்டார்கள். காரணம் - அது அளவுக்கதிகமாக கிழிந்து போயிருந்ததே. எது எப்படியோ, அவர்கள் அதன்மேல் பத்து கில்டார்கள் தந்தார்கள். அந்த நோட்டை உடனடியாக பாரீஸுக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கிருக்கும் வங்கி அந்த நோட்டைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டால், நான் அவர்களிடமிருந்து வாங்கிய பத்து கில்டார்களையும் திருப்பித் தந்தாக வேண்டும். பணம் பெற்றுக் கொண்டதாக ரசீதில் நான் கையெழுததுப் போட்டிருக்கிறேன். அதேசமயம் வங்கி அந்த நோட்டை ஏற்றுக் கொண்டால், மீதிப் பணத்தை நான் வாங்கிக் கொள்ளலாம்.


ஒழுங்காக ஒரு மனிதன் காரியங்களை செய்து கொண்டிருக்கும்போது, அதன் முடிவுகள் மிகவும் மோசமாக இருப்பதற்கும் அதே நேரத்தில் தவறான ஒரு காரியத்தை செய்கிறபோது, அதன் விளைவு வேறு மாதிரியாக இருப்பதற்குமிடையே இருக்கும் முரண்பாட்டை நீ உன் கடிதத்தில் எழுதியிருந்தாய். என்னாலும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் மனசாட்சி என்ற ஒன்றுதான் எனக்கு மிகவும் முக்கியம். அதுதான் எல்லாம் என்று நான் நினைக்கிறேன். நாம் தவறாக நடந்திருக்கிறோமோ அல்லது முட்டாள்தனமாக செயலாற்றியிருக்கிறோமா என்பதை நமக்குப் புரிய வைப்பது அதுதான். அதே நேரத்தில் சில தவறான மனிதர்கள் நம்மை விட புத்திசாலித்தனமானவர்களாகவும், நம்மைக் காட்டிலும் வெற்றி பெற்ற மனிதர்களாகவும் காட்சியளிக்கும்போது, நமக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் போய்விடுகிறது. சில நேரங்களில் கஷ்டங்கள் அளவுக்கு மேல் உண்டாகி ஒரு மனிதனை பயங்கரமாக திண்டாட வைக்கும்போது, அவனுக்கு உண்மையிலேயே மனதில் வருத்தம் உண்டாவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இந்த மாதிரியான நேரங்களில் அவன் தன் மனசாட்சியைப் பற்றிக்கூட சற்று குறைவாகவே மதிக்க ஆரம்பித்துவிடுகிறான்.

என்னைப் பற்றி வேறு மாதிரி நீ நினைக்க மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மையாக சொல்லப் போனால் எனக்குள் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என் மூளையே இதனால் ஒருமாதிரி ஆகிவிடுகிறது. பெரும்பாலான விஷயங்களில் எது சரி எது தவறு என்பதைக்கூட என்னால் தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது.

நான் தீவிரமாக ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருக்கும்போது, கலையைப் பற்றி எனக்கு அளவில்லாத நம்பிக்கை உண்டாகிறது. என்னால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற திடமான எண்ணமும் எனக்கு ஏற்படுகிறது. அதேசமயம் என்னுடைய உடல்நலத்திற்கு ஏதாவது கேடு உண்டானாலோ அல்லது பொருளாதார ரீதியாக நான் பாதிக்கப்பட்டுவிட்டாலோ, எனக்குள்ளிருக்கும் அந்த நம்பிக்கை இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்துவிடுகிறது. என்னுடைய மனதில் அப்போது பலவித சந்தேகங்களும் வந்து புகுந்து கொள்கின்றன. நான் உடனடியாக ஓவியம் வரைவதில் உட்காருவதன் மூலம் அந்த அவநம்பிக்கையை வெற்றி கொள்ள முயல்கிறேன். பெண் குழந்தைகளுடன் இருக்கும்போது, சிறுவன் அறைக்குள் கால்களால் தவழ்ந்து என்னை நோக்கி வரும்போதும், மகிழ்ச்சியாக சத்தமிடும்போதும் எல்லா விஷயங்களும் உலகத்தில் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி என் மனதில் சிறிதளவுகூட சந்தேகம் எழுவதில்லை.

அந்தக் குழந்தை என்னை எந்த அளவிற்கு மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறான் தெரியுமா?

நான் வீட்டில் இருக்கிற போது, ஒரு நிமிடம்கூட அவன் என்னைத் தனியாக விட மாட்டான். நான் ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் போது, என் கோட்டைப் பிடித்து அவன் இழுப்பான். இல்லாவிட்டால் என் கால்மேல் ஏறுவான். அவனை என் மடியில் தூக்கி உட்கார வைக்கிறவரை அவன் இப்படித்தான். ஸ்டுடியோவுக்குள் வந்துவிட்டால் எதைப் பார்த்தாலும் அவன் கத்துவான். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அமைதியாக விளையாடத் தொடங்கிவிடுவான். இல்லாவிட்டால் ஒரு நூலையோ அல்லது பழைய ப்ரஷ்ஷையோ கையில் வைத்துக் கொண்டு விளையாடுவான். எப்போது பார்த்தாலும் அவனுக்கு மகிழ்ச்சிதான். அவன் வாழ்க்கை முழுவதும் இதே மாதிரி சந்தோஷமாக இருந்தால், என்னைவிட அவன் புத்திசாலி என்றுதான் நான் சொல்லுவேன்.

வாழ்க்கையில் எப்போது எது நடக்கும என்று யாராலும் கூற முடியுமா? நல்ல விஷயங்கள் கெட்டதில் போய் முடிவதும், கெட்டது முடிந்து நல்லது நடப்பதும்கூட வாழ்க்கையில் சில நேரங்களில் சம்பவிக்கத்தானே செய்கின்றன.

எப்போதுமே வாழ்க்கையில் இருளும், துன்பமும் மட்டும்தான் இருக்கும் என்று ஒரு மனிதன் நினைக்கக்கூடாது. அபபடி அவன் நினைப்பானேயானால், அவன் பைத்தியக்காரனாகி விடுவான். அதற்கு மாறாக அவன் தன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் போல வேலைகளில் தீவிரமாக ஈடுபட தொடங்க வேண்டும். நல்லது, கெட்டது இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். காலம் செல்லச் செல்ல மனதில் தெம்பு உண்டாகி, நாளடைவில் எல்லா கஷ்டங்களையும் எதிர்த்து போராடக்கூடிய அளவிற்கு தான் துணிச்சல் கொண்ட மனிதனாக மாறியிருப்பதை அவனே உணரத் தொடங்கி விடுவான். வாழ்க்கையில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கத்தான் செய்கின்றன. கவலையோ, சோகங்களோ இருக்கத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் தாண்டித்தான் வாழ்க்கையில் மனிதன் முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது. வாழ்க்கை என்பது கதைகளில் வருவதைப் போல எளிமையானதாகவோ, தேவாலயங்களில் பாதிரியார்கள் சொல்வதைப்போல் மிகவும் சாதாரணமாகவோ இருந்துவிட்டால், மனிதன் தான் வாழ்க்கையில் முன்னேற இந்த அளவிற்குக் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் உண்மையில் வாழ்க்கை அப்படியா எளிமையானதாக இருக்கிறது? இங்கிருக்கும் ஒவ்வொன்றுமே பிரச்னைக்குரியதாகத்தான் இருக்கிறது. இயற்கையில் எப்படி கருப்பும் வெண்மையும் கலந்தே இருக்கிறதோ அப்படித்தான் நல்லதும் கெட்டதும் தனித்தனியாக இல்லாமல் சேர்ந்தே இங்கு இருக்கிறது. வலியத்தானே இருளில் போய் விழுந்து விடாத மாதிரி ஒருவன் மிகவும் கவனமாக வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். வெள்ளை அடிக்கப்பட்டிருக்கும் சுவற்றில் இருக்கும் வெண்மையைப் பார்த்துக்கூட ஒருவன் ஏமாந்துவிடக்கூடாது. அதுகூட ஒருவேளை போலியானதாக இருக்கலாம். எதையும் பலமுறை சிந்தித்து அதே சமயம் தன்னுடைய மனசாட்சி கூறக்கூடிய பாதையில் நடை போடக்கூடிய ஒரு மனிதன் வாழ்க்கையில் நேர்மையானவனாகவும், பாதை தவறி போகாதவனாகவும் இருப்பான் என்பது நிச்சயம்.

பாதிரியார்களிடம் இருக்கும் குறுகிய மனப்பான்மையைவிட இத்தகைய மனிதர்களிடம் பரிதாப உணர்ச்சியும் இரக்க குணமும் அதிகமாகவே இருக்கவும் செய்யும்.

ஒரு மனிதனை யாரும் சாதாரணமானவனாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இறுதியில் மிகப்பெரிய சாதனைகள் புரியக்கூடிய மனிதனாகக்கூட அவன் இருக்க முடியும். மனதின் நிலையை படிப்படியாக உயர்த்திச் சென்று ஒரு மனிதன் வியக்கத்தக்க வெற்றிகளை இங்கு உண்டாக்கிக் காட்ட முடியும். அந்த மாதிரியான நேரங்களில் சாதாரண மனிதர்கள் பலரும் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்று கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட மனிதன் தேவையில்லாத விமர்சனங்களிலோ, தேவையில்லாத அரட்டைகளிலோ, கேலி-கிண்டல்கள் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் கூட்டத்திலோ தன்னை எந்தக் காரணம் கொண்டும் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வான். ஆனால், இந்த சூழ்நிலை உடனடியாக உண்டாகிவிடாது. படிப்படியாகத்தான் உண்டாகும். மிச்லெயின் ஒரு வாசகத்தை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.


‘சாக்ரட்டீஸ் ஒரு சாதாரண மனிதராகத்தான் பிறந்தார். ஆனால், தியாகத்தாலும், கடுமையான உழைப்பாலும், ஒன்றுமில்லாத விஷயங்கள் பலவற்றை வாழ்க்கையிலிருந்து தூக்கியெறிந்ததாலும் தன்னிடம் அவர் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கிக் கொள்ள முடிந்தது. மரணத்தை சந்திக்கும் நிமிடத்தில் நீதிபதிகள் முன்னால் நின்று கொண்டிருக்கும்பொழுது, வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு தெய்வத் தன்மை அவருக்குள்ளிருந்து வெளிப்பட்டது. பார்த்தினானுக்கு வெளிச்சம் தந்த ஒரு தெய்வீக ஒளி அவரிடமிருந்து வெளியே வந்தது’ - இதுதான் மிச்லெ சொன்னது.

இந்த விஷயத்தை நாம் இயேசுவிடமும் பார்க்கலாம். அவர் ஒரு சாதாரண தச்சன்தான். ஆனால், அவர் தன்னை எந்த அளவிற்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். கருணை, அன்பு, நல்ல குணங்கள், தீவிரத்தன்மை எல்லாமே கொண்ட, அனைவரும் விரும்பக்கூடிய ஒரு மனிதராக தன்னை அவர் வாழ்க்கையில் வளர்த்துக் கொள்ளவில்லையா? பொதுவாக தச்சனிடம் உதவியாளராக இருக்கும் ஒருவன் படிப்படியாக வளர்ந்து ஒரு பெரிய தச்சனாக மாறுவான். குறுகலான புத்தி, கவலை தோய்ந்த மனம், வறண்டு போன வாழ்க்கை - இப்படித்தான் அவனுடைய வாழ்க்கை இருக்கும். ஆனால், இயேசுவின் வாழ்க்கை அப்படி அமையவில்லையே. அவரின் வாழ்க்கையே வேறு மாதிரி அமைந்துவிட்டதே. வாழ்க்கையைப் பற்றிய இயேசுவின் பார்வை வேறு வகையில் இருந்ததுதானே அதற்குக் காரணம்? நான் இருக்குமிடத்திற்குப் பின்னால் ஒரு தச்சன் இருக்கறார். அவர் படிப்படியாக வளர்ந்து ஒரு வீட்டு உரிமையாளர் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இருப்பினும், இயேசு தன்னைப் பற்றி நினைப்பதைவிட, தன்னை மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.

எதுவுமே செய்யாமல் இருக்கும் மனிதனாக இருக்கும் ஆசை எனக்கில்லை. நான் என்னுடைய பலத்தை மீண்டும் பெற வேண்டும். அது மட்டும் எனக்கு வந்துவிட்டால், என்னுடைய வேலை சம்பந்தமான புதுப்புதுக் கருத்துக்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதன்மூலம் இப்போதிருக்கும் வறட்சி நிலையை என்னால் முழுமையாக வெற்றி கொள்ள முடியும்.

நீ இங்கு வரும்போது, நாம் இதைப் பற்றி பேசுவோம். விரைவில் நடக்கக்கூடிய விஷயமாக அது எனக்குத் தோன்றவில்லை.

இப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைவிட சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிட்டால்தான் இப்போதிருக்கும் மோசமான நிலைமையிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் என்னால் முழுமையாக தேறி மேலே வர முடியும். வீட்டை விட்டு வெளியே சென்று ஒருவன் உயிரென நேசிக்கக்கூடிய தன்னுடைய தொழிலைத் தீவிரமாகச் செய்தாலே, அவனுக்குத் தேவையான பலமும் ஆரோக்கியமும் உடனடியாக அவனிடம் வந்து சேர்ந்துவிடும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

அதே நேரத்தில் இப்போது என்னுடைய வேலை மிகவும் மெதுவாகவும் மகிழ்ச்சியடையக்கூடிய விதத்திலும் இல்லை என்பதையும் உனக்கு நான் சொல்லியாக வேண்டும்.

தெளிவான ஒரு பகலைப்போல என்னுடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான மாற்றம் உடனடியாக தேவை என்பதையும் நான் உணர்கிறேன். இந்த வருட என்னுடைய வேலைகளை நீ பார்த்த பிறகு, இது விஷயமாக உன்னிடம் பேச நான் விரும்புகிறேன். என்னுடைய வேலையில் நீ திருப்தி அடையும்பட்சம், நாம் எல்லா கஷ்டங்களையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. நாம் சிறு விஷயத்தில்கூட முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் வங்கி நோட்டை மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறேன். எனக்காக ஏதாவதொரு தொகையை அனுப்பி வைக்க நீ முயல்வதைப் பார்த்து உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உடல்நலக் கேட்டிலிருந்து இந்தப் பணம் என்னைக் காப்பாற்ற உதவும். வங்கி நோட்டின் முடிவு என்ன என்பதை உனக்கு நான் தெரியப்படுத்துகிறேன். ஆகஸ்டு ஒன்றாம் தேதி வாக்கில் எப்போதும் போல ஒரு தொகையை நீ அனுப்பி வைத்தால் எனக்கு உதவியாக இருக்கும். வேலையில் தீவிரமாக ஈடுபடும் நேரத்திலேயே இன்னொரு சிந்தனையிலும் நான் இறங்கி விடுகிறேன். எதிர்காலத்திற்காக சில அருமையான திட்டங்களில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்பதே அது. எனக்கென்று உலகத்தின் ஏதாவதொரு இடத்தில் ஒரு வேலை இருக்காமலா போகும்? லண்டன் அருகில் இருப்பதால், நான் அங்கு ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாம்.

விற்பனையாகக்கூடிய ஒன்றை நான் உருவாக்கிவிட்டால், உண்மையிலேயே அதற்காக பெரிதும் மகிழ்ச்சியடைவேன். உன்னிடமிருந்து வரும் பணத்திற்குள் என் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னைப் போலவே உனக்கும் பணம் அங்கு தேவைப்படும் அல்லவா? மீண்டும் நன்றி. இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.

உன்னுடைய
வின்சென்ட்

***

நியூஆம்ஸ்டர்டாம், செப்டர் 1883

அன்புள்ள தியோ,

ட்ரென்த்தில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திலிருந்து இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதுகிறேன். அடர்ந்த காடுகளைக் கடந்து நீண்ட தூரம் பயணம் செய்து நான் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன். இந்த இடத்தைப் பற்றி என்னால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் வருவேனா என்கின்றன. இருந்தாலும் மைக்கேல்ஸ் அல்லது ரூஸே, வான்கோயே அல்லது ப் தெ கொனின் ஆகியோரின் படைப்புகளில் வரும் வாய்க்கால் கரைகளை மனதில் நினைத்துப் பார்த்துக் கொள்.

பல வர்ணங்களில் இருக்கும் மேகங்கள் செல்லச் செல்ல மிகவும் மெலிந்து போய் வானத்தில் விளிம்பை அடைகின்றன. ஆங்காங்கே சிறு சிறு ஷெட்டுகள் கண்களில் படுகின்றன. சிறு சிறு விளைச்சல் நிலங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. எஞ்சியிருக்கும் இடங்களில் பிர்ச், பாப்லார், ஓக் மரங்கள். எங்குப் பார்த்தாலும் மண் குவியல்கள். இந்த மண் குவியல்களையும், புதர்களையும் கடந்துதான் யாரும் எந்த இடத்திற்கும் செல்ல வேண்டும். மிகவும் மெலிந்து போய் காணப்படும் பசுக்களும், ஆடுகளும், பன்றிகளும் மாறுபட்ட வர்ணங்களில் இங்குமங்குமாய் காட்சியளிக்கின்றன. இந்த வெட்ட வெளியில் தெரியும் உருவங்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்குவதென்னவோ உண்மை. சில நேரங்களில் மனதில் தெரியும் அந்த பிம்பம் மிகவும் அழகானதாகக்கூட இருக்கிறது. நான் இங்கு நிறைய படங்கள் வரைந்தேன். தலையில் அணிந்திருக்கும் துணிக்கு மேல் தங்க நிற தட்டுகளை வைத்திருக்கும் ஒரு பெண் தீவிர சிந்தனையில் இருப்பதைப்போல் ஒரு படத்தை வரைந்தேன். அதற்குப்பிறகு குழந்தையைக் கையில் வைத்திருக்கும் ஒரு பெண்ணை ஓவியமாகத் தீட்டினேன். அந்தப் பெண்ணின் தலையில் ஒரு சாம்பல் வர்ண சால்வை இருந்தது. பன்றி, காகங்கள், புதர்களுக்கு மத்தியில் தெரியும் லில்லி - இப்படி பலவற்றையும் வரைந்தேன்.


இந்த இடத்திற்கு பயணம் வந்ததற்காக உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். இங்கு நான் பார்த்த காட்சிகள் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. இந்த மாலைவேளையில் இங்கிருக்கும் மண் குவியல்கள் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. தௌபினி வரைந்த ஒரு ஓவியத்தில் இத்தகைய ஒரு காட்சியைப் பார்க்கலாம். வானம் இந்த மாதிரிதான் இருக்கிறது என்று வாயால் சொல்ல முடியாத அளவிற்கு சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. மேகங்கள் திட்டுத்திட்டாக என்றில்லாமல் சாம்பல், வெள்ளை, பழுப்பு என்று பல்வேறு நிறங்களில் அடர்த்தியாக வானமெங்கும் படர்ந்திருக்கின்றன. அவற்றுக்கு நடுவில் வானத்தின் விளிம்பில் பிரகாசமான ஒரு சிவப்பு ஒளிக்கீற்று தெரிகிறது. அதற்குக் கீழே ப்ரவுன் வர்ணத்தில் மலைகள் காட்சியளிக்கின்றன. அந்த சிவப்பு கீற்றுக்கு மிகவும் கீழே வரிசையாக அமைந்திருக்கும் சிறு குடிசைகள் தெரிகின்றன. மாலை நேரங்களில் இந்த இடம் மிகவும் அமைதி தவழும் ஒரு இடமாக நமக்கு காட்சித் தரும். டான்குய்க்ஸாட்டின் கதைகளில் வரும் மில்களும், பாலங்களும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மாலை நேர வானத்திற்குக் கீழே நிழல் வடிவத்தில் தெரியும். மாலை நேரத்தில் இந்த கிராமம் தண்ணீரில் பிரகாகமாகத் தெரியும் ஜன்னல்களைப் பிரதிபலித்தபடி நமக்கு ஒரு அழகான காட்சியாகத் தெரியும்.

ஹூக்வீனை விட்டு புறப்படுவதற்கு முன்னால் நான் பல படங்களை வரைந்தேன். அவற்றில் ஒன்று பாசி படர்ந்த ஒரு பெரிய வீடு. அதை வரையும்போது என்னை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொண்டேன். சொல்லப் போனால் அதை வரையும்போது என்னையே நான் மறந்துவிட்டேன். அந்த ஓவியம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

நீ அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டதைப் போலவே, நான் கிழக்கு இந்தியத் தீவுகளுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்திருக்கிறேன். இந்த மாதிரியான ஆசைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே கவலை தரக்கூடிய ஒரு விஷயம்தான். ஜன்னல் வழியாக இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளை நீ பார்க்க என்று பிரியப்படுகிறேன். அமைதி தவழும் இந்த கிராமம் - ஒரு மனிதனை நம்பிக்கையுடையவனாகவும், ஓய்வுடன் இருக்கக்கூடியவனாகவும், வேலையில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கக்கூடியவனாக மாற்றிவிடும். இங்கிருந்தவாறு நிறைய படங்களை வரைய வேண்டும் என்பதற்காகவே சற்று அதிகமாக இங்கு நான் தங்கிவிட்டேன். ஸ்வீலூவிற்கு மிகவும் அருகில்தான் நான் இருக்கிறேன். பலருடன் லிபர்மேனும் அங்குதான் இருக்கிறார். இங்கு பழமையான, பெரிதாக இருக்கும் பல குடிசைகளை நீ பார்க்கலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மாட்டுத் தொழுவத்திற்கும் வசிக்குமிடத்திற்குமிடையே ஒரு சிறு தடுப்புகூட இருக்காது. இத்தகைய ஒரு இடத்தைத்தான் பார்க்க வேண்டும் என்று இத்தனை நாட்களாக நான் காத்திருந்தேன்.

இந்த கிராமத்தில் இருக்கும் பழமை, பரந்து கிடக்கும் தன்மை, அமைதி - இதை இங்கு வரும் ஒவ்வொருவரும் காணலாம். நிரந்தரமாக எனக்கென்று ஒரு முகவரியை உன்னிடம் கொடுக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். காரணம் - அடுத்து வரும் சில நாட்களுக்கு நான் எங்கு இருப்பேன் என்ற விஷயம் எனக்கே தெரியாததுதான். ஆனால், அக்டோபர் 12ஆம் தேதி நான் ஹூக்வீனில்தான் இருப்பேன். அந்த முகவரிக்கே நீ அந்த சமயத்தில் கடிதம் எழுதலாம். நான் கடிதத்தைப் பிரித்துக் கொள்வேன்.

இப்போது நான் இருப்பது புதிய ஆம்ஸ்டர்டாமில்.

அப்பா பத்து கில்டாருக்கு போஸ்டல் ஆர்டர் அனுப்பியிருந்தார். அதோடு சேர்ந்து நீ அனுப்பியிருந்த பணமும் வந்தது. இதை வைத்து நான் கொஞ்சம் படங்களை வரையலாம்.

இப்போது நான் தங்கியிருக்கும் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். இங்கிருந்த அந்தப் பெரிய குடிசைகள் இருக்கும் இடத்திற்கு நான் எளிதாக போய் வர முடியும். அங்கு விசாலமான இடங்கள் நிறையவே இருக்கின்றன. வெளிச்சத்திற்கும் பஞ்சமேயில்லை. அந்த ஆங்கிலேயர் வரைந்த ஓவியத்தைப் பற்றி நீ உன் கடிதத்தில் எழுதியிருந்தாய். மெலிந்து போன பூனையும் கல்லறையும் உள்ள அந்த ஓவியத்தை அந்த மனிதர் இருட்டறைக்குள் இருந்தவாறு வரைந்தார் என்று குறிப்பிட்டிருந்தாய். இருட்டான அறைக்குள் அமர்ந்து படம் வரைவது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். அப்படி வரையப்பட்ட ஓவியம் நிச்சயம் ஆழமில்லாததாகவே இருக்கும். அந்த ஓவியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தால், அதில் இருக்கும் உருவங்கள் எவ்வளவு பலமில்லாததாக இருக்கின்றன என்பது தெரிய வரும்.  திறந்து வைக்கப்பட்டிருந்த கதவு வழியாக அறைக்குள் அமர்ந்து வெளியே தெரிந்த சிறு தோட்டத்தை ஓவியமாக வரைந்தபோது நான் எனக்குக் கிடைத்த அனுபவம் இது.

நான் உன்னிடம் சொல்ல வருவது என்னவென்றால் அத்தகைய ஒரு கஷ்டம்கூட இங்கு இல்லை என்பதைத்தான். நல்ல வெளிச்சம் உள்ள ஒரு அறையை இங்குதான் பெற முடியும். குளிர் காலத்தின்போது வெப்பத்தைக் கொண்டு வருவதும் இங்கு ஒரு பிரச்னையாக இல்லை. நீ இனிமேலும் அமெரிக்காவைப் பற்றி நினைக்காமல் இருந்தால், பல காரியங்கள் தானாகவே நடக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

அங்கிள் சி.எம்.வான்கா ஏன் அமைதியாக இருக்கிறார் என்பதற்கு நீ கொடுத்த விளக்கம் எனக்கு சரி என்றே படுகிறது. ஆனால், பல நேரங்களில் ஒரு மனிதர் இந்த மாதிரி சிரத்தை இல்லாமல் வேண்டுமென்றே இருப்பதுகூட நடக்கக்கூடியதுதான். பின் பக்கத்தில் நீ சில படங்களைப் பார்க்கலாம். நான் அவசரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இப்போதே நேரம் அதிகம் ஆகிவிட்டது.

இங்கு நாம் இருவரும் சேர்ந்து நடக்க வேண்டும், நாம் இருவரும் சேர்ந்து படம் வரைய வேண்டும் என்று நான் ஆசைப்படுவது நியாயம்தானே? இந்த கிராமம் உனக்கு மிகவும் பிடிக்கும். நிச்சயமாக இது உன்னைக் கவரும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன். நீ நலமாக இருப்பாய், நல்ல விஷயங்கள் பலவும் அங்கு நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது உன்னைப் பல சமயங்களில் நான் நினைத்திருக்கிறேன். கை குலுக்கிக்கொண்டு.

உன்
வின்சென்ட்

***


ந்யூனென், ஹாலண்ட், ஜூன்,
ஜூலை 1884

அன்புள்ள தியோ,

உன்னுடைய கடிதத்திற்கும் அத்துடன் சேர்த்து அனுப்பியிருந்த 200 ஃப்ராங்கிற்கும் இதயப்பூர்வமான நன்றி.

ப்ரெய்ட்னரைப் பற்றி நல்ல செய்தி கேள்விப்பட்டதற்காக பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். அவருடைய ஓவியங்கள் சிலவற்றை சென்ற முறை நான் பார்த்தேன். அந்த அளவிற்கு பெருமைப்படக்கூடிய விதத்தில் அவை இல்லை என்பதே உண்மை. அவருடைய ஸ்டுடியோவில் நான் பார்த்த மூன்று ஓவியங்களுமே யதார்த்தம் என்ற அளவிலும் சரி கற்பனை என்ற கோணத்திலும் சரி குறிப்பிட்டுக் கூறும்படியாக இல்லை. ஆனால், அவர் அப்போது தன் கைவசம் வைத்திருந்த வாட்டர் கலர்கள் கொண்டு வரையப்பட்ட சில ஓவியங்கள், குறிப்பாக குதிரைகள் இருக்கும் ஒரு ஓவியம் சற்று பரவாயில்லை என்று கூறக்கூடிய விதத்தில் இருந்தது. அவற்றில் உள்ளடங்கியிருந்த விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை வைத்து சொல்கிறேன். நீ சொல்லக்கூடிய அவரின் ஓவியங்கள் நிச்சயம் சிறப்பானதாகவே இருக்க வேண்டும். ட்ராட்ஸ்மென் சொஸைட்டியைப் பற்றி நான் முழுமையாக மறந்தே போய்விட்டேன். நான் ஓவியம் வரைவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததே காரணம். உன்னுடைய கடிதத்தைப் பார்த்தப் பிறகுதான் எனக்கு அதைப்பற்றிய ஞாபகமே வந்தது. நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சென்ற கோடையின்போதே நான் உன்னிடம் சொன்னேனே - நான் உறுப்பினராகச் சேர மனு செய்யும்பட்சம், நிச்சயமாக என்னை மறுத்துவிடுவார்கள் என்று. அப்படி மறுக்கும் நிலையே வரும் வருடத்திலும் தொடரலாமே.

இதையெல்லாம் மீறி நான் இந்த விஷயத்தை மறந்துதான் போனேன். என்னிடம் ஒரு வாட்டர் கலர்கூட கைவசம் இல்லை. உடனடியாக எவ்வளவு விரைவாக வரைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புதிய ஓவியங்களை வரைய வேண்டும். இந்த வருடத்தைப் பொறுத்தவரை, தாமதமாகி விடவில்லை என்றே நினைக்கிறேன்.

நெசவு செய்பவர்களின் வீட்டின் உட்பகுதியை இரண்டு பெரிய ஓவியங்களாக வரைவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்வதிலிருந்தே நான் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தும் நிலையில் இல்லை என்பதை நீ புரிந்து கொள்ளலாம். தவிர தி ஹேக்கில் இருக்கும் பெரிய மனிதர்களுக்கு நான் திரும்பவும் மனு செய்தால் தேவையில்லாத பிரச்னைகள்தான் வரும்.

நான் வரைந்து கொண்டிருக்கும் இந்த இரண்டு ஓவியங்களில் ஒன்றில் தறி, ஆள், ஒரு சிறு ஜன்னல் - இவை இருப்பது மாதிரி வரைந்திருக்கிறேன்.

இன்னொரு ஓவியம் உட்பகுதியை வைத்து வரையப்பட்டது. மூன்று சிறு ஜன்னல்கள், வெளியே தெரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் வர்ண மலர்கள், அதற்கு முரண்பாடாக தறியில் இருக்கும் நீல வர்ண துணி, நெய்து கொண்டிருப்பவர் அணிந்திருக்கும் வேறு மாதிரியான நீல நிற மேற்சட்டை - அந்த இரண்டாம் ஓவியத்தில் இருப்பது இதுதான்.

இயற்கையின் வனப்பு என்னை மிகவும் பாதித்துவிட்டிருந்தாலும், நான் இன்னும் வேலையை ஆரம்பிக்கவில்லை. காரணம் - நல்ல ஒரு மாடல் எனக்கு கிடைக்காததே. பாதி விளைந்திருக்கும் சோள வயல்கள் அடர்த்தியான பொன் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. வானத்தின் நீல வர்ணத்திற்கு ஏற்றபடி இந்தப் பொன்நிறத்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ஓவியத்தில் அதிகமாக்கிக் காட்டலாம்.

இந்தப் பின்புலத்தில் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் திடகாத்திரமான ஒரு பெண் உருவத்தை நீ கற்பனை பண்ணிப் பார். சூரியனின் ஒளி முகத்திலும், கைகளிலும், கால் பாதத்திலும் பட்டு பிரகாசித்துக் கொண்டிருக்க, தூசி படிந்த ஆடைகள், குட்டையாக வெட்டப்பட்டிருக்கும் கூந்தலுக்கு மேலே காட்சியளிக்கும் தொப்பி ஆகியவற்றுடன் இருக்கும் ஒரு பெண்ணை உன்னால் மனதில் எண்ணிப் பார்க்க முடிகிறதா? வேலைக்குப் போவதற்காக தூசி படிந்த பாதை வழியே வயலுக்கு நடுவில் அவர்கள் நடந்து போவார்கள். அவர்களின் கைகளில் பச்சை நிற மரக்கொம்பு இருக்கும். தோளில் வேலை செய்ய பயன்படும் கருவி ஏதாவது இருக்கும். கையில் கறுப்பு நிற ரொட்டி - இல்லாவிட்டால் பித்தளையால் ஆன காபி பாத்திரம் இருக்கும். இந்த மாதிரியான விஷயங்களை சமீப காலமாக பலமுறை திரும்பத் திரும்ப அவ்வப்போது பல மாறுபாடுகளுடன் பார்த்துக் கொண்டுதானிக்கிறேன். உண்மையாகவே என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள் இவை என்பதை மீண்டும் உன்னிடம் உறுதியான குரலில் கூறுகிறேன்.

மிகவும் செழிப்பாக, அதே நேரம் - மிகவும் எளிமையாக, கலைத்தன்மை மேலோங்க இவை அனைத்தும் இருப்பதென்னவோ உண்மை. நான் ரொம்பத்தான் இவற்றால் ஈர்க்கப்பட்டு விட்டேன்.

நான் பயன்படுத்தும் வர்ணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது. அதனால் செலவும் அதிகம்தான். தவிர, மாடல்களுக்குக் கொடுக்க வேண்டிய பணமும் அதிகமாகிறது. நான் விரும்புகிற மாதிரியான மாடல்கள் எனக்குக் கிடைக்க வேண்டும். அதுதான் பிரச்னையே. (கடுமையான தோற்றத்துடன், தட்டையான முகத்துடன், சற்று கீழே இறங்கிய நெற்றியுடன், முரட்டுத்தனமான உதடுகளுடன், கூர்மையாக இல்லாமல் அதே நேரத்தில் முழுமைத் தன்மையுடன் - கோதுமை நிறத்தில - நான் தேடும் மாடல் இப்படித்தான் இருக்க வேண்டும்.) அவர்கள் அணிந்திருக்கும் அதே ஆடைகள் எனக்கு போதும்.

ஓவியம் என்பது மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஆடைகளின் நிறத்திலிருந்து நாம் எப்படி விலகிப் போய் விட முடியும்? சோளக் கதிர்களின் சிவப்பு நிறத்தில் மறைந்திருக்கும் ஆரஞ்சு வர்ணத்தில் ஓவியம் மேலும் அழகுப் பெற்று திகழ்கிறது என்பதே உண்மை.

கோடைக் காலத்தைப் பற்றி சற்று சிறப்பித்து கூறியே ஆகவேண்டும். அதைப்பற்றி விளக்கி கூறுவது என்பது சற்று கடினமான ஒரு காரியமே. இதே விஷயம் மாலை நேர வெயிலுக்கும் பொருந்தும். கோடையை ஓவியத்தில் கொண்டு வருவதென்பது சாதாரண விஷயமா என்ன? மற்ற காலங்களைக் கொண்டு வருவதைப் போலவே, கோடையை ஓவியத்தில் தீட்டுவதும் மிகவும் சிறப்பானதுதான், எளிமையானதுதான். ஓவியத்தில் கோடையைப் பார்ப்பது என்பதே ஒரு சுகமான அனுபவம் என்று நான் சொல்லுவேன்.

வசந்த காலம் சுகமானது. பசுமையான இளம் தாவரங்களும் மலர்ந்து மேலும் காட்சியளிக்கும் ஆப்பிள் பூக்களும் – அப்பப்பா...

இளவேனிற் காலத்தில் எங்கு பார்த்தாலும் காட்சியளிக்கும் பழுத்த இலைகளைப் பார்க்க வேண்டுமே.

குளிர்காலத்தில் பனியுடன் கூடிய கறுப்பு நிழல் வடிவங்கள்...

கடிதத்தை இத்துடன் முடிக்கிறேன். லண்டனுக்குச் செல்வதாக இருக்கும் உன் பயணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அம்மா இப்போது சற்று நன்றாக நடக்கிறார். மீண்டும் உன் கடிதத்திற்கும், அதற்குள் இருந்த பணத்திற்கும் நன்றி. என்னை நம்பு.

உன்
வின்சென்ட்.

***


நியூனென், ஜூன் 1885.

அன்புள்ள தியோ,

உன்னுடைய கடிதத்திற்கும் அதற்குள் இருந்த விஷயத்திற்கும் நன்றி. மாதத்தின் ஆரம்பத்தில் எப்படி கடுமையாக உழைத்தேனோ, அதேபோல் மாதத்தின் இறுதியிலும் நான் கடுமையாக பணியாற்ற அவை உதவின.

ஓவியர் ஸெரேவைப் பற்றி நீ ஏற்கெனவே பல விஷயங்களை எழுதியிருந்தாய். அவை எல்லாம் என் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆனால், அவரின் பெயரை மறந்து விட்டேன். அவ்வளவுதான். நான் இந்தக் கடிதத்தில் எழுதுவதைவிட அதிகமாக உனக்கு எழுத வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால், பகல் முழுவதும் வெயிலில் உட்கார்ந்து படம் வரைந்துவிட்டு, தாமதமாக வீட்டுக்கு வந்த பிறகு நான் நினைத்தபடி என்னால் கடிதம் எழுத முடியவில்லை. ஸெரே சொன்னவற்றோடு நான் உடன்படுகிறேன். நான் உடனடியாக அவருக்கு ஒரு கடிதம் எழுதப் போகிறேன். அவருடன் நட்பு உண்டாக்கிக் கொள்ள மனப்பூர்வமாக பிரியப்படுகிறேன். ஏற்கனவே உன்னிடம் சொன்னபடி சமீப காலமாக படம் வரைவதில் நான் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிக்கிறேன். ஸெரேவிடம் நீ காட்ட வேண்டும் என்பதற்காக அவற்றை நான் உனக்கு அனுப்பிவைக்கிறேன். நான் மிகவும் வித்தியாசப்பட்டு இருக்கிறேன் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றை அனுப்புகிறேன்.

வேலி, விஸலிங் இருவரையும் நீ பார்த்தாயா? விஸலிங்கிற்கு சமீபத்தில் ஒரு ஓவியத்தை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால், அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட எனக்கு பதில் வரவில்லை. இப்போது மீண்டும் அவருக்கு நான் எதையாவது அனுப்பி வைத்தால், தேவையில்லாத அவமதிப்புத்தான் எனக்கு பரிசாக கிடைக்கும்.

பல வருடங்களாக நான் நெருங்கிய நட்பு வைத்திருந்த வான் ராப்பார்ட் மூன்று மாதங்கள் மவுனமாக இருந்துவிட்டு தி ஹேக்கில் இருந்து போனபிறகு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கடிதம் முழுக்க கேலியும் கிண்டலும் அவமதிப்பு கொண்ட வார்த்தைகளும்தான். ஒரு நண்பர் என்ற முறையில் அவரை நான் இழந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

என் சொந்த ஊரான தி ஹேக்கில் இருக்கும்போதே மனக்கவலைகளுக்கான மூல காரணங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடவே நான் விரும்புகிறேன். என் ஊருக்கு வெளியே போய் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

வேலியைப் பார்க்கும்போது, வாட்டர் கலர் விஷயமாக எப்படி பேச வேண்டுமென்று நினைக்கிறாயோ, அப்படிப் பேசு. நான் படம் வரைவதன் மூலம் ஏதாவது சம்பாதித்து நாம் சிறிய அளவிலாவது பலமாக பூமியில் காலூன்றி விட்டோம் என்று வைத்துக் கொள். அதற்குப்பிறகு நம்முடைய அன்றாட வாழ்விற்கு எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு ஓவியனாக வரவேண்டும் என்ற மனதிற்குள் இருக்கும் ஆவலைப் பற்றிப் பேசும்போது எனக்கு ஸோலாவின் நாவலான் ‘ஜெர்மின’லில் வரும் ஹென்பே என்ற கதாபாத்திரம்தான் ஞாபகத்தில் வருகிறது. வயதோ மற்ற விஷயங்களோ ஒரு பொருட்டா என்ன? எதிர்காலம் என்பது ஒருவன் மனதில் நினைக்கிற மாதிரியே இருக்காது. அதைப்பற்றி உறுதியாக நாம் என்ன கூற முடியும்? ஓவியம் வரைவதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை - ஒரு மனிதன் வரையும் படங்கள் ஒழுங்காக விற்பனையாகவில்லையென்றால் அவன் மேலும் மேலும் ஓவியம் வரைவதற்குத் தேவைப்படும் பெயிண்ட்டிற்கும் மாடல்களை பயன்படுத்துவதற்கும் பணம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படியொரு சூழ்நிலை உண்டாவது உண்மையிலேயே மிகவும் வருத்தம் தரக்கூடியதுதான். அதே நேரத்தில் என்னுடைய இன்னொரு கருத்தையும் நான் கூறுகிறேன். வாழ்க்கையில் நமக்கு கவலைகள், பிரச்னைகள் என்று ஆயிரம் இருக்கட்டும், கிராமத்து வாழ்க்கையை ஓவியமாக வரைய உட்கார்ந்து விட்டால், எல்லா துன்பங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் உடலுக்கே ஒரு புத்துணர்வு வந்து சேர்ந்து விடுகிறது. அதாவது - ஓவியம் என்பது நம் சொந்த வீட்டைப் போல. அதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும்போது, நமக்கு ஹென்பேக்கு உண்டானதுபோல வீட்டுக் கவலை சிறிதும் உண்டாகாது. உனக்காக நான் அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதி வைத்த வாசகங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. குறிப்பிடத்தக்க ஒரு மனிதனாக வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கும் ஒருவன்தானே நான்.

ஒரே மாதிரியான சூழ்நிலையில் வாழ்வது என்பதைப் பொதுவாக நான் வெறுக்கிறேன். நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு எப்போதும் உண்டாக வேண்டும். குளிர்காலத்தின்போது பனிக்குள் வாழ பழகிக் கொள்ள வேண்டும். இளவேனிற் காலத்தில் மஞ்சள் வர்ண இலைகளுடன் ஒன்றிப் போய் வாழ வேண்டும். கோடைக் காலத்தில் அகன்று கிடக்கும் விளைந்த கதிர்களுடன் வாழ தெரிந்திருக்க வேண்டும். வசந்த காலத்தின்போது புல்லுக்கு மத்தியில் வாழ வேண்டும். கோடைக் காலத்தில் அகன்று கிடக்கும் வானம் தலைக்கு மேல் இருக்க, குளிர்காலத்தில் அருகில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க சதா நேரமும் வேலை செய்பவர்களுடனும் விவசாயப் பெண்களுடனும் இருப்பது என்பது எவ்வளவு அருமையான ஒரு விஷயம். இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் எனக்கு உண்டாகிறது.

ஒருவன் வைக்கோலின் மீது படுத்திருக்கலாம். கறுப்பு வர்ணத்தில் இருக்கும் ரொட்டியை சாப்பிடலாம். அவனுடைய வாழ்க்கை சுகமானதாகவே இருக்கும்.

நான் உனக்கு இனியும் அதிகமாக எழுத ஆசைப்படுகிறேன். ஆனால், திரும்பவும் சொல்கிறேன் - எழுதக்கூடிய மனநிலையில் தற்போது நான் இல்லை. ஸெரேவிற்கு ஒரு கடிதத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். நீயும் அவருக்கு நான் எழுதியிருப்பதைப் படிக்க வேண்டும். கடந்த சில நாட்களாகவே நான் அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஓவியங்களைப் பற்றி இதில் எழுதியிருக்கிறேன். ஸெரேவிற்கு என்னுடைய படைப்புகளைக் காட்ட வேண்டும் என்று நான் விரும்புவதே காரணம். வணக்கம்.

உன்
வின்சென்ட்

ஓவியங்களை வரைவது, அவற்றை விற்பனை செய்வது - இரண்டுமே தனித்தனி விஷயங்கள் என்ற உன் கருத்துடன் ஸெரே உடன்படுவார் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த விஷயம் உண்மையே அல்ல. மில்லேயின் அனைத்து ஓவியங்களையும் பாரீஸிலும் லண்டனிலும் பார்த்தபோது மக்கள் எந்த அளவிற்கு உற்சாகமடைந்தார்கள் என்பதுதான் நமக்குத் தெரியுமே. அப்படியென்றால் மில்லேயின் ஓவியங்களை மறந்து, அவற்றை மறைக்க முயன்றவர்கள் யார்? கலை வியாபாரிகள், அதாவது - விற்பன்னர்கள் என்று சொல்லப்படுபவர்கள்.

***

ஆன்ட்வெர்ப், நவம்பர் 1885,
சனிக்கிழமை மாலை

அன்புள்ள தியோ,

ஆன்ட்வெர்ப்பைப் பற்றி சில விஷயங்களை உனக்கு நான் எழுத விரும்புகிறேன்.

இன்று காலையில் மழை பெய்து கொண்டிருக்கும்போது நான் பயனுள்ள வகையில் நடந்து சென்றேன். கஸ்டம் ஹவுஸில் இருந்து என்னுடைய சரக்குகளை எடுத்து வருவதுதான் நோக்கம். வழியில் இருந்த சரக்குகளை வைத்திருக்கும் இடங்கள் எல்லாமே பார்க்க மிகவும் அழகாக இருந்தன.


நான் இதற்கு முன்பும் அதே வழியில் பலமுறை நடந்து சென்றிருக்கிறேன். அந்தப் பக்கம் இருக்கும் எல்லா இடங்களும் எனக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக மணலும் மண் குவியலும் அமைதியும் நிறைந்த விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமப் பகுதியிலிருந்து அந்த இடத்திற்கு வருபவர்களுக்கு இந்த இரண்டுக்குமிடையில் இருக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரியும். அந்த இடத்தின் ஒவ்வொரு பகுதியும் மாறுபட்ட முறையில் அமைந்திருப்பதை யாராலும் உணர முடியும். ஜப்பானிய பாணியில் அமைந்திருக்கும் அந்தக் கட்டிடங்கள் வித்தியாசமானவையாகவும், பார்க்க அழகாகவும், இதற்கு முன்பு நாம் பார்த்திராத மாதிரியும் இருப்பதென்னவோ உண்மை.

நான் உன்னுடன் அந்த இடத்திற்கு நடந்து செல்ல விரும்புகிறேன். நாமிருவரும் ஒரே காட்சியைப் பார்க்கிறோமா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அங்கிருக்கும் எல்லாவற்றையுமே ஒருவர் விரும்பி பார்க்கலாம். அங்கு நின்றிருக்கும் கப்பல்கள், கடல் நீர், வானத்தின் சாம்பல் வர்ணம் - எல்லாமே பார்க்கக் கூடியவைதாம். ஒவ்வொரு பொருளிலும் ஒரு துடிப்பு ஒளிந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும். மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பதை அங்கிருக்கும் எல்லாமே பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

 சேற்றில் ஒரு வெள்ளை குதிரை நின்றிருக்கிறது. ஒரு மூலையில் வியாபாரப் பொருட்கள் துணியால் மூடப்பட்டு குவிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குப் பக்கத்திலேயே கறுப்புப் புகை பிடித்த கட்டிடங்கள், சுருக்கமாகச் சொல்லப் போனால் கறுப்பும் வெள்ளையும் கலந்த அந்த இடம் உண்மையாகவே மனதைக் கவரக்கூடியதுதான்.

ஆங்கிலேயர்களின் பாணியில் கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கும் மது அருந்தும் சாலையின் ஜன்னல் வழியே பார்த்தால், அழுக்கடைந்து போய் காணப்படும் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் தெரிகிறது. தூரத்தில் நின்று கொண்டிருக்கும் கப்பலிலிருந்து எருமையின் கொம்புகளை முரட்டுத்தனமாக மனிதர்களோ இல்லாவிட்டால் பலம் பொருந்திய மாலுமிகளோ இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அழகான ஒரு ஆங்கிலேய இளம்பெண் ஜன்னலுக்கு அருகில் நின்றவாறு சாமான்கள் இறக்கப்படும் இந்தக் காட்சியையோ அல்லது வேறு ஏதோ காட்சியையோ பார்த்தவாறு நின்றிருக்கிறாள். சேற்றுக்கு மேலே காட்சியளிக்கும் வானம், எருமையின் கொம்புகள் - இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும் போது நமக்கே ஒரு மாறுபாடு தெரியும். திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்ட சதைப்பிடிப்பான மாலுமிகள் தங்களின் ஆஜானுபாகுவான தோள்களை உலுக்கியவாறு ஆன்ட்வெர்ப்பிற்கே உரிய கிராமத்து மொழியைப் பேசிக் கொண்டும் மாமிசத்தைத் தின்று கொண்டும், பீரை அருந்திக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உரத்த சத்தம் கலந்தும், வேகமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஒரு மெலிந்த தோற்றத்தைக் கொண்ட பெண்ணொருத்தி கருப்பு வர்ணத்தில் உடையணிந்து கையை மார்பின்மேல் வைத்தவாறு சாம்பல் நிற சுவரோரமாக எந்தவித ஓசையும் இல்லாமல் எதையோ திருடி வைத்துக் கொண்டு வருகிறாள். அவளின் சுருண்டு போன கறுப்பு முடி, சிறு வட்ட வடிவ முகம்... ஆமாம்... அவளின் முகத்தின் நிறம் ப்ரவுனா இல்லாவிட்டால் ஆரஞ்சும், மஞ்சளும் கலந்ததா என்பதைப் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அடுத்த நிமிடம் அவள் தன்னுடைய விழிகளை மேல்நோக்கி உயர்த்தி சற்று சாய்வாக பார்க்கிறாள்.

அவள் ஒரு சீன தேசத்துப் பெண் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பூனையைப் போல மிகவும் அமைதியாக அவள் இருக்கிறாள். பூச்சியைப்போல் உடல் சிறுத்து காணப்படும் பெண் அவள். மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலம் பொருந்திய அந்த மனிதர்களையும் இவளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கு இரண்டுக்குமிடையில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் பளிச்சென்று தெரியும்.

இன்னொரு வித்தியாசத்தையும் நாம் பார்க்கலாம். நாம் நடந்து செல்ல வேண்டுமென்றால் குறுகலான தெரு வழியேதான் செல்ல வேண்டும். தெருவின் இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த கட்டிடங்கள், பட்டறைகள், சரக்குகளை அடைத்து வைத்திருக்கும் இடம் ஆகியவை இருக்கும். இதே தெருவின் சற்று தாழ்வான பகுதியில் எல்லா தேசத்து ஆண்களும் பெண்களும் வந்துகூடக்கூடிய விபச்சார விடுதிகள், சாப்பிடும் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள், மாலுமிகளின் உடைகள் விற்கப்படும் கடைகள், ஹோட்டல்கள் எல்லாமே இருக்கின்றன. அங்கிருக்கும் கூட்டத்தைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்.

தெரு மிகவும் நீளமானதுதான். ஒவ்வொரு நிமிடமும் அந்தத் தெருவில் ஏதாவது வித்தியாசம் தெரிந்து கொண்டே இருக்கும். வரிசை வரிசையாக மக்கள் நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஏதோ சண்டையோ சச்சரவோ தெருவில் எப்போதாவது உண்டாகிவிட்டால், தெருவின் சூழ்நிலையை முற்றிலும் மாறிவிடும். தெருவில் நாம் நடந்து செல்லும்பொழுதே உற்சாகக் குரல்களும், எல்லா வகையான  கூச்சல்களும் நம்மைச் சுற்றி கேட்டுக் கொண்டே இருக்கும். பட்டப் பகலில் மாலுமி ஒருவன் ஒரு கட்டிடத்திலிருந்து வெளியே தூக்கியெறியப்படும் காட்சியை நாம் பார்க்கலாம். அவனைத் தூக்கி வெளியே எறிந்த பெண்களும், கோபமே வடிவமாக நின்றிருக்கும் மனிதனும் அவனைத் தொடர்ந்து வெளியே வருவார்கள். அவர்களைப் பார்த்து அவன் பயந்து நடுங்குவான். சாக்குமூட்டைகள் மேல் தடுமாறி விழுந்து ஏதாவதொரு சரக்குகள் வைக்கப்படும் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக தப்பியோடும் மனிதனைப் பார்க்கும் போது எனக்கே என்னவோ போல் இருக்கும். 

எல்லாவற்றையும் கடந்து நாம் கடைசிக்குப் போனால் அங்கு இயந்திரப் படகுகள் நின்றிருக்கும். அதற்கு மேல் அங்கு எதுவும் இல்லை. பரந்து விரிந்து காட்சியளிக்கும் வயல்களில் ஈரம் இருக்கும். ஈரம் பட்டிருக்கும் கதிர்கள் காற்றில் இங்குமங்குமாய் ஆடும். எங்கு பார்த்தாலும் சேறு. ஆற்றில் ஒரே ஒரு கருப்பு வர்ண படகு மட்டும் இருக்கும். முன்னால் இருக்கும் நீர் சாம்பல் வர்ணத்தில் இருக்கும்.  வானமும்தான். பனியும் குளிர்ச்சியும் சுற்றிலும் இருக்கும். சுற்றிலும் தெரியும் சாம்பல் நிறம் ஏதோ பாலைவனத்தில் இருக்கும் பிரமையை நமக்கு உண்டாக்கும்.

துறைமுகம் இருக்கும் பகுதியை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் அங்கிருக்கும் சூழ்நிலையே அடியோடு மாறிவிடும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க முடியாத அளவிற்கு அதன் தோற்றமே மிகவும் வித்தியாசமானதாகிவிடும். பல்வேறு வர்ணங்களும் இங்குமங்குமாய் தெரிய, நமக்கே அது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மோல் வரைந்த ஓவியங்களில் தென்படும் அழகான கோடுகளைப் போல் வனப்பு மிக்கதாக இருக்கும் அந்த முழுப் பகுதியும்.


இப்போது அழகான உடலமைப்பைக் கொண்ட ஒரு இளம்பெண் உற்சாகமான முகத்துடன் வெளியே பார்க்கிறாள். அடுத்த நிமிடமே பார்த்தாலே பயம் உண்டாகிற மாதிரியான தோற்றத்துடன் இன்னொரு மெலிந்து போன பெண் வந்து நிற்கிறாள். அம்மை பாதித்த முகத்தைச் சற்று மனதில் கற்பனை பண்ணிப் பார். அதுதான் அவளின் தோற்றம். ஒளி மங்கிப் போன சாம்பல் நிறக் கண்கள், அதற்குமேல் புருவம் கிடையாது. சிறிய அடர்த்தி குறைவான கூந்தல், மஞ்சள் நிறம்... ஸ்வீடன் அல்லது டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல்தான் இருக்கிறது.

எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக் கொண்டு இருப்பது?

நான் ஒவ்வொரு தெருவாக சுற்றி அலைந்தேன். பெரிதாக அங்கு ஒன்றும் நான் பண்ணவில்லை. ஆனால், பலதரப்பட்ட பெண்களுடன் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஒரு மாலுமி என்று நினைத்துவிட்டார்கள்.

ஓவியம் வரைவதற்கு அங்கு நல்ல மாடல்கள் கிடைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இன்று என்னுடைய சாமான்களையும், ஓவியம் வரைய பயன்படும் பொருட்களையும் பெற்றுக் கொண்டேன். இதற்காக நான் எப்படியெல்லாம் காத்திருந்தேன்.

என்னுடைய ஸ்டுடியோ கிட்டத்தட்ட தயாராகிவிட்ட மாதிரிதான். பணம் எதுவும் செலவழிக்காமல் நல்ல மாடல்கள் கிடைத்தால், நான் பயப்படுவதற்கு அவசியமே இல்லை. அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு என்னிடம் என்ன பணம் இருக்கிறது? அதற்காக நான் வருத்தப்படவில்லை. போஸ் தருவதற்காக அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது என்பதுதான் உண்மையிலேயே சரியான விஷயம். காரணம் - நகரத்தில் இருக்கும் மாடல்களுக்குத் தரும் பணத்திற்கும் இங்கிருக்கும் விவசாயிகளுக்குத் தருவதற்குமிடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. ஆன்ட்வெர்ப் ஒரு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இடம். ஒரு ஓவியனுக்கு ஏற்ற இடம் இது.

என்னுடைய ஸ்டுடியோ அப்படியொன்றும் மோசமானதாக இல்லை. நிறைய சிறு சிறு ஜப்பானிய படங்களை நான் சுவரில் மாட்டி வைத்திருக்கிறேன். அப்படி மாட்டி வைக்கப்பட்டிருக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. தோட்டங்களில் இருக்கும் பெண்கள், கடற்கரையில் இருக்கும் பெண்கள், குதிரை வீரர்கள், மலர்கள், முட்செடிகளின் கிளைகள் - இப்படி பல்வேறு வகைப்பட்ட படங்கள் என் ஸ்டுடியோவின் சுவரை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

என் வேலையை நான் தொடங்கிவிட்டேன் என்பதற்காக உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். இந்த குளிர் காலம் வரையில் நான் வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக மனதில் மகிழ்ச்சியடைகிறேன். அது ஒரு சிறிய இடம் என்பது வேறு விஷயம். காலநிலை மிகவும் மோசமாக இருக்கும்போதுகூட நான் அங்கு அமர்ந்து ஓவியங்களை வரைய முடியும் என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் உன்னிடம் நான் சொல்லியாக வேண்டும். கடந்த பல நாட்களாகவே நான் அப்படியொன்றும் வசதியாக வாழவில்லை என்பதே அது. முதல் தேதி எனக்குக் கடிதம் வருவது மாதிரி நீ அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். அதுவரை சாப்பிடுவதற்குத் தேவையான பணம் என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் நான் பிரச்னைக்குரிய மனிதனாகவே ஆவேன்.

நான் எதிர்பார்த்ததைவிட என்னுடைய சிறிய அறை மிகவும் நன்றாக இருக்கிறது. அப்படியொன்றும் மோசமாக இருப்பதுபோல் அது தோன்றவில்லை. என்னிடம் நான் வரைந்த மூன்று ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றை ஓவியங்களை விற்பனை செய்யும் நபர்களிடம் கொண்டு செல்லலாம் என்று இருக்கிறேன். தெருவைப் பார்க்கும் ஜன்னலே இல்லாத பெரிய மாளிகைகளில் அவர்கள் வசித்துக் கொண்டிருப்பார்கள்.

இங்கிருக்கும் பூங்கா மிகவும் அழகாக இருக்கிறது. ஒருநாள் காலையில் அங்கு அமர்ந்து நான் ஓவியம் தீட்டினேன்.

அப்படியொன்றும் அதிர்ஷ்டக் குறைவு உள்ள மனிதனாக நான் இல்லை. தங்குவதற்கான இடத்தைப் பொறுத்தவரை எனக்குக் கிடைத்திருப்பது நல்ல இடமே. சில ஃப்ராங்குகளைச் செலவு செய்து நான் ஒரு ஸ்டவ்வையும் ஒரு விளக்கையும் வாங்கி வைத்திருக்கிறேன்.

அவ்வளவு எளிதில் நான் தளர்ந்துவிட மாட்டேன். அதை மட்டும் உன்னிடம் உறுதியாக என்னால் கூற முடியும். லெர்மி வரைந்த ‘அக்டோபர்’ என்ற ஓவியத்தைப் பார்க்க நேர்ந்தது. மாலை நேரத்தில் ஒரு உருளைக்கிழங்கு தோட்டத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள். மிகவும் அழகான ஓவியம் அது. ஆனால், நான் ‘நவம்பர்’ என்ற ஓவியத்தை இதுவரை பார்க்கவில்லை. உன்னிடம் அது இருக்கிறதா? ரஃபேல் வரைந்த ஒரு அழகான ஓவியத்தையும் சமீபத்தில் எனக்கு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

என்னுடைய முகவரி- 194, ர்யூ தேஇமேஜஸ். உன்னுடைய கடிதத்தை அந்த முகவரிக்கே அனுப்பு. தே கான்கோ ஃப்ரெஞ்ச் ஓவியங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது பாகத்தையும் நீ படித்து முடித்தபிறகு, எனக்கு அனுப்பி வை. இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.

உன்
வின்சென்ட்

என்னுடைய ஓவியங்கள் இங்கு இருப்பதைவிட நகரத்தில் பார்க்கும்போது கறுப்பாக இருப்பது விநோதமான ஒரு விஷயம்தான். நகரமெங்கும் இருக்கும் வெளிச்சம் கிராமப் பகுதியைவிட சற்று குறைவு என்பது இதற்கு அர்த்தமா? இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதைக் கேட்டு உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு இருந்துகொண்டு என்னுடைய ஓவியங்கள் எப்படி இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அதைவிட கறுப்பாக நீ அவற்றைப் பார்க்கிறாய் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். எது எப்படியோ, இப்போது என் கைவசம் இருக்கும் ஓவியங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மோசமானதாக இல்லை. மில், இளவேனிற்கால மரங்கள் நிறைந்த சாலை ஆகியவற்றுடன் வேறு சில ஓவியங்களும் தற்போது என்னிடம் இருக்கின்றன.

***

ஆன்ட்வெர்ப், ஜனவரி 1886

அன்புள்ள தியோ,

நான் பாரீஸுக்கு வருவதை, ஜுன், ஜூலைக்கு முன்னால் இருக்கும்படி நீ பார்த்துக் கொண்டால் எனக்கு மிகவும் உதவியாக இருக்குமென்று எண்ணுகிறேன். அங்கு வருவதைப் பற்றி நான் மனதில் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

ஒழுங்கான சாப்பாடும் மற்ற விஷயங்களும் கிடைத்தால் ஆறு மாத காலத்திற்குள் நிச்சயம் நான் நல்ல நிலைக்கு வந்துவிடுவேன்.

நான் மிகவும் பலவீனமாக இருப்பதாக உணர்கிறேன். அளவுக்கு அதிகமான வேலை காரணமாக நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். சாதாரணமாக இது நடக்கக்கூடியதுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. நல்ல உணவை சாப்பிட வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.


ப்ரபாண்டில் மாடல்களை பயன்படுத்துவதற்காக நான் அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டியது வரலாம். இதே கதை எப்போதும் தொடரலாம். இது ஒரு நல்ல விஷயமாக எனக்குப் படவில்லை. இந்த வழியில் போனால் நம்முடைய பாதையை விட்டு நாம் விலகிச் செல்வதாக அர்த்தமாகிவிடும். அதனால் சீக்கிரம் என்னை அங்கு வருமாறு செய்.

பாரீஸில் வாடகைக்கு ஒரு அறையை எடுத்து என்னுடன் கொண்டுவரும் பெயிண்ட் பெட்டியையும் மற்ற ஓவியம் வரைய பயன்படுத்தும் பொருட்களையும் வைத்து மிகவும் அவசியமென்று தோன்றக்கூடிய சில ஓவியங்களை நான் உடனடியாக வரையலாம் என்று இருக்கிறேன். அந்த ஓவியங்கள் நான் கார்மனைப் பார்க்கப் போகும்போது மிகவும் உதவியாக இருக்கும். நான் லவ்ரே அல்லது இகோ தே பே ஆர்ட்ஸில் இருந்து வரையலாம்.

புதிய இடத்திற்குப் போவதற்கு முன்னால் நாம் பல விஷயங்களையும் முறைப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மார்ச் மாத வாக்கில் நான் கட்டாயம் நியூனெனுக்குப் போக வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். அங்கு விஷயங்கள் எப்படி இருக்கின்றன, மக்கள் எப்படி இருக்கிறார்கள், என்னால் மாடல்களை அங்கு பெற முடியுமா, முடியாதா போன்ற விஷயங்களை நான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு அவசியமில்லையென்றால், மார்ச் மாதத்திற்குப் பிறகு நான் நேராக பாரீஸுக்கு வந்து லவ்ரேயில் இருந்து படங்களை வரைகிறேன்.

ஸ்டுடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்தால் என்ன என்று நீ எழுதியிருந்ததை நான் யோசித்துப் பார்த்தேன். எனக்கும் அது சரியான விஷயமென்றே பட்டது. நாம் இருவரும் சேர்ந்து இருப்பதற்கு முன்னால் தற்காலிகமாக நான் மட்டும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரை இருந்து கொள்கிறேன்.

பாரீஸில் இருக்கும்போது என் சொந்த வீட்டில் இருப்பதைப்போல் நான் உணர்வேன் என்று என் மனம் சொல்கிறது.

நான் மிகவும் உற்சாகமாகவே இருக்கிறேன்.

நான் அகாடெமிக்குச் செல்லும்போது என்னைப் பார்த்து அகாடெமியில் இருக்கும் சிலர் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அதை என்னால் உண்மையாகவே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தை மிகவும் வருத்தத்துடன் உன்னிடம் நான் கூறுகிறேன்.

எனினும், தேவையில்லாத சண்டை எதுவும் உண்டாகாமல் தவிர்க்கவே நான் விரும்புகிறேன். எந்த பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளாமல் என் பாதையில் போக வேண்டும் என்பதே என் விருப்பம். எதை நோக்கி போக வேண்டுமென்று நினைக்கிறேனோ, அந்தப் பாதையில் போய்க்கொண்டு இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

அகாடெமிக்குச் செல்வதை மனப்பூர்வமாக நான் விரும்புகிறேன். பல்வேறு விஷயங்களையும் நான் அங்கு தெரிந்து கொள்ள முடிகிறது என்பதே காரணம்.

எது நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ, அதுதான் நடக்கும். அதே நேரத்தில் வாழ்க்கையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதனால்தான் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் நான் இருக்கிறேன்.

அகாடெமியில் ஒரு மனிதன் புதிதாக கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. வர்ணம், மாடலிங் போன்ற விஷயங்கள் எனக்கு இவ்வளவு எளிதாக கை வசம் வரும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

மாலை வகுப்பில் நடக்கும் போட்டிக்காக நான் வரைந்த ஓவியத்தை நேற்றுத்தான் முடித்தேன். ஜெர்மானிக்கஸ் என்ற ரோமன் சிலையைத்தான் நான் வரைந்திருக்கிறேன். என்னுடைய ஓவியம் பெரிதாக அவர்களால் எடுத்துக் கொள்ளப்படாது என்று நான் நினைக்கிறேன். மற்ற எல்லோருடைய ஓவியங்களும் ஒரே மாதிரி பாணியில் இருக்கின்றன. என்னுடைய ஓவியம் மட்டும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அவர்கள் மிகச்சிறந்த ஓவியமாக எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை வரையும்போதே நான் பார்த்திருக்கிறேன். அந்த ஓவியத்தை வரையும்போது, நான் பின்னால் உட்கார்ந்து கவனித்துக் கொண்டுதானிருந்தேன். நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள். அந்த ஓவியத்தில் உயிர்ப்பு என்பது இல்லவே இல்லை. நான் பார்த்த எல்லா ஓவியங்களின் கதையும் இதுதான்.

இந்த மாதிரியான விஷயங்கள்தான் நம்மை ஸ்ரிச்சலடையச் செய்வன. இருந்தாலும் உன்னதமான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் பெறுகிறோம்.

உன்னுடைய வாழ்க்கையில் நீயும் அதிகமாக பலம் சேர்க்க வேண்டியிருக்கிறது. நாம் இருவரும் இணைந்து பல வெற்றிகளைப் புரியும்பட்சம், தனித்தனியாக தெரிந்து கொண்டதைவிட நாமிருவரும் இணைந்து தெரிந்து கொண்டது அதிகமாக இருக்கும். நம்மால் இன்னும் எவ்வளவோ விஷயங்களைப் பண்ண முடியும்.

பால் மன்ட் சொன்ன ஒரு வாசகம் உனக்கு தெரியுமா? ‘வாழ்க்கையில் பெண்கள்தான் அதிக கஷ்டங்களைத் தருகிறார்கள்’ என்பதே அது. ஒரு கட்டுரையில் நான் அதை சமீபத்தில் படித்தேன்.

அதை நாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு நமக்கில்லாத அனுபவமாக அது இருக்கும். ஸோலா எழுதிய ஒரு நூலில் ஒரு அத்தியாயத்தைப் படித்தபோது நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஓவியர் மானேக்கும் ஒரு பெண்ணுக்கும் சண்டை உண்டானதாக அதில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெண் அவருக்கு ஓவியம் வரைவதற்காக போஸ் தந்தவள். மானே அவளின் நடவடிக்கைகளைப் பார்த்து பயங்கர கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம். இந்த விஷயம் அந்த நூலில் மிகவும் விரிவாக சொல்லப்பட்டிருந்தது. நிலைமை இப்படி இருக்கும்போது அகாடெமியில் பெண்களை ஓவியமாகத் தீட்டுவது என்றால் என்ன செய்ய முடியும்?

அவர்கள் மிகவும் அரிதாகத்தான் நிர்வாணமாக இருக்கும் பெண்களை மாடல்களாக பயன்படுத்துகிறார்கள். சொல்லப் போனால் வகுப்பறையில் பயன்படுத்துவதேயில்லை. விதிவிலக்காக ஒரு தனி இடத்தில்தான் அது நடக்கும்.

அப்படியே ஏதாவதொரு வகுப்பில் இருந்தால்கூட பத்து ஆண் மாடல்கள் இருந்தார்கள் என்றால், ஒரே ஒரு பெண் மாடல்தான் இருப்பாள்.

பாரீஸில் நிச்சயம் இந்த விஷயம் சற்று சிறப்பாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஆண் உருவத்தை பெண் உருவத்துடன் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடியும். நிச்சயமாக இந்த இரண்டுக்குமிடையில் ஒவ்வொரு விஷயத்திலும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கலாம். கலையில் அல்லது வாழ்க்கையில் கஷ்டம் என்ற ஒன்றில்லாமல் ஏதாவது இருக்கிறதா என்ன?

இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன். விரைவில் எனக்கு கடிதம் எழுது. கைகுலுக்கியவாறு,

உன்
வின்சென்ட்

மார்ச் மாதத்தில் நியூனெனில் நான் இருக்க வேண்டும் என்பதே ஒரு சிறு மாறுதலுக்குத்தான். ஒரு இட மாற்றத்திற்காகவாவது நான் அங்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் அங்கு போவதையே நான் விரும்பவில்லை.

***


பாரீஸ்

பாரீஸ், கோடை, 1887

அன்புள்ள தியோ,

உன்னுடைய கடிதத்தில் இருந்த விஷயங்களுக்கு நன்றி. நாம் வரையும் ஓவியம் மிகப்பெரிய பாராட்டையும் வெற்றியையும் பெற்றாலும்கூட, அதற்காக நாம் செலவழித்த பணம் கூட நமக்கு திரும்பி வருவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போது மனதில் உண்மையிலேயே விரக்திதான் உண்டாகிறது.

வீட்டைப் பற்றி நீ எழுதியிருந்ததைப் படித்து நான் மனம் நெகிழ்ந்துவிட்டேன். ‘அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களைப் பார்க்கும்போது வருத்தம்தான் உண்டாகிறது’ என்று நீ எழுதியிருந்த வரிகள் என் மனதை மிகவும் தொட்டுவிட்டது. பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னால் குடும்பம் என்றைக்கு இருந்தாலும் தழைத்தெழும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். உனக்கு சீக்கிரம் திருமணம் நடந்தால், அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள். உன்னுடைய உடல்நலத்தையும், வேலையையும் முன்னிட்டாவது இனிமேல் நீ தனியாக இருக்கக்கூடாது.

திருமணத்தைப் பற்றியோ குழந்தைகள் இருப்பதைப் பற்றியோ பொதுவாக எனக்கு ஆர்வம் இல்லை. என்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் பல நேரங்களில் கவலை வந்து ஆட்கொண்டு விடுகிறது. சில நேரங்களில் இந்தப் பாழாய்ப் போன ஓவியம் வரைவதற்காக என் மீதே எனக்கு வெறுப்பு உண்டாகி விடுகிறது. இந்த நேரத்தில் ரிச்பின் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன். அவர் சொன்னது இதுதான்- ‘கலைமீது கொண்ட காதல் என்றால் உண்மைக் காதலை நாம் இழக்கிறோம் என்று அர்த்தம்.’

அவர் சொன்னது உண்மையான வார்த்தைகள் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் உண்மைக் காதல் ஒரு மனிதனை கலை மீது வெறுப்பு கொள்ளவே செய்யும் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் எனக்கு மிகவும் வயதாகிவிட்டதைப் போலவும், நிலை குலைந்து விட்டதைப்போலவும் உணர்கிறேன். ஆனால், காதல் உணர்வு என்ற ஒன்று என்னிடம் பட்டுவிடாமல் இன்னும் இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் ஓவியம் வரைவதற்கான உற்சாகம் பல நேரங்களில் என்னை விட்டு இல்லாமலும் போகிறது. ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமென்றால, அவனுக்கு இலட்சியம் என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், இலட்சியம் என்ற ஒன்றே முட்டாள்தனமாகவும் படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி என்னால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. நான் உனக்கு அதிக சுமையாக இருக்கக் கூடாதென்று எண்ணுகிறேன். எதிர்காலத்தில் அது ஓரளவுக்கு சாத்தியமாகும் என்றும் நினைக்கிறேன். அந்த அளவுக்கு ஒரு வளர்ச்சியை நான் அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எந்தவித பாரபட்சமும் பார்க்காமல், என் ஓவியங்களை நீயே பாராட்டக்கூடிய அளவிற்கு நான் வளர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தெற்கு திசை நோக்கி நான் போக முடிவெடுத்திருக்கிறேன். மனிதர்கள் என்ற முறையில் என்னை வெறுப்படைய வைத்திருக்கும் பல ஓவியர்களின் பார்வையிலிருந்து நான் எங்கே ஓர் இடத்திற்கு விலகிச் செல்ல விரும்புகிறேன்.

ஒரு விஷயத்தை நீ மனதில் வைத்துக்கொள். டாம்பரின்னுக்காக நிச்சயம் நான் எந்த வேலையும் செய்வதாக இல்லை. நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அது யாரோ ஒருவருக்கு பயன் என்று போகிறதே தவிர, நமக்கல்ல. அதை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் வருத்தப்படக்கூடியது.

செகாட்டரி விஷயம் வேறு. நான் இன்றும் அவள் மீது பாசம் வைத்திருக்கிறேன். அவளுக்கு என்மீது அன்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால், அவளின் நிலைமை தான் மிகவும் மோசமாக இருக்கிறது. அவள் சுதந்திரமாக இருப்பதாகவும் தெரியவில்லை. அவள் வீட்டிலேயே அவள் பொறுப்புள்ள ஒரு பெண்ணாக இருப்பதாகவும் தெரியவில்லை. அவள் நோய் வாய்ப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

நான் இதை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். அவள் கர்ப்பச் சிதைவு பண்ணியிருப்பாள் என்று நினைக்கிறேன் (தவறான வழியில் அவள் கர்ப்பமாகி இருக்க வேண்டும்). எனினும், அவள் இருக்கும் நிலையில், அவளை நான் குற்றம் சுமத்தக்கூடாது. இரண்டு மாதங்களில் அவள் நிலைமை சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். நான் அவளைப் பணத்திற்காக கஷ்டப்படுத்தாமல் இருப்பதற்காக என்னை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பாள் என்று எதிர்பார்க்கிறேன். அவள் குணமடைந்த பிறகு ஏதாவது தகராறு பண்ணினாலோ அல்லது எனக்கு சேர வேண்டிய பணத்தைத் தராமல் இருந்தாலோ நான் அவளை சும்மாவிட மாட்டேன். ஆனால், நிலைமை அந்த அளவிற்கு போகாது என்று நினைக்கிறேன். அவளை நான் நன்றாக அறிவேன். இப்போதும் அவள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வியாபார ரீதியாக அவள் தன்னுடைய நிலையை சரிப்படுத்திக் கொண்டு முன்னோக்கி செல்வானேயானால், அவளை நான் குற்றம் சொல்ல மாட்டேன். மாறாக, பாராட்டக்கூட செய்வேன்.

நேற்று நான் தேங்குய்யைப் பார்த்தேன். நீ இங்கிருந்து போன பிறகு நான்கு ஓவியங்களை வரைந்தேன். தற்போது என் கைவசம் ஒரு பெரிய ஓவியம் இருக்கிறது. நான் சமீபத்தில் வரைந்த ஒரு ஓவியத்தை தேங்குய்கூட மாட்டி வைத்திருந்தார்.

பெரிய ஓவியங்களைப் பொதுவாக விற்பனை செய்வது மிகவும் சிரமமான காரியம் என்பதை உணர்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு சாப்பாட்டு அறையையோ ஒரு பண்ணை வீட்டையோ அழகுபடுத்தக்கூடிய ஒன்றாக அவை இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

நீ காதலில் விழுந்து, திருமணம் செய்து, மற்ற ஓவிய விற்பனையாளர்களைப் போல நீயும் ஒரு பண்ணை வீட்டிற்குள் குடி புகுந்தால், நான் நிச்சயம் ஆச்சரியப்பட மாட்டேன். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தால், நன்கு செலவழிக்கலாம். அதன்மூலம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பார்ப்பதற்கு மோசமாகத் தெரிவதைவிட பணக்காரத்தனமாக தெரிவதுதான் பொதுவாகவே நடைமுறையில் நல்லது. தற்கொலை செய்து கொள்வதைவிட வாழ்க்கையை சந்தோஷத்துடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது. வீட்டில் உள்ள அனைவரையும் கேட்டதாகக் கூறு.

உன்னுடைய
வின்சென்ட்.

 ஆர்ள்

ஆர்ள், டிசம்பர் 23, 1888

அன்புள்ள தியோ,

உன்னுடைய கடிதத்திற்கும் அதற்குள் இருந்த 100 ஃப்ராங் நோட்டிற்கும், 50 ஃப்ராங்க் ஆர்டருக்கும் நன்றி.

காகின் ஒரு எல்லையை மீறி போய்க் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆர்ளில் அவர் நடந்து கொள்ளும் முறை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. நாங்கள் அமர்ந்து படங்கள் வரையும் சிறிய மஞ்சள் நிற வீட்டில் என்னிடம் அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்?

அவரும் சரி நானும் சரி பல்வேறு வகைப்பட்ட பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கிறது.


இந்தப் பிரச்னைகள் எங்களுக்குள் தான் இருக்கிறது. வெளியே வேறெங்கும் இல்லை.

ஒன்று அவர் இந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக போய் விடலாம். இல்லாவிட்டால் இங்கேயே இருந்தாலும் இருக்கலாம்.

எதையும் செய்வதற்கு முன்னால் தெளிவாக சிந்திக்கும்படி அவரிடம் கூறியிருக்கிறேன். எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டுப் பார்க்கும்படி சொல்லியிருக்கிறேன்.

காகின் பலசாலியான ஒரு மனிதர். அற்புதமான படைப்பாற்றல் உள்ளவர். அதற்காகவாவது அவர் மனதில் அமைதியுடன் இருக்க வேண்டும்.

இங்கு அது அவருக்குக் கிடைக்காவிட்டால் வேறு எங்காவது கிடைக்குமா என்ன?

உறுதியான ஒரு முடிவு எடுக்கும்வரை அவருக்காக நான் காத்திருக்கிறேன்.

இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.

வின்சென்ட்

***

(அடுத்த நாள், அதாவது -- டிசம்பர் 24ம் தேதி காகினிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் தியோவை உடனடியாக ஆர்ளுக்கு வரும்படி அவர் எழுதியிருந்தார். வின்சென்ட் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டு கடுமையான காய்ச்சல் ஆக்கிரமித்திருக்க தன்னுடைய காதின் ஒரு பகுதியை அறுத்து பரிசாகக் கொண்டு சென்று விலைமகளிர் இருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு இளம்பெண்ணிடம் கொடுத்திருக்கிறான். அதற்குப் பிறகு அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகள். ரூளின் என்ற தபால்காரர் வின்சென்ட்டை வீட்டில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அடுத்த நிமிடம் போலீஸ்காரர்கள் அங்கு வந்துவிட்டார்கள். இரத்தம் ஒழுகிய கோலத்தில் மயக்கமடைந்து படுக்கையில் படுத்திருந்த வின்சென்ட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். தியோ அவனை அங்கு பார்க்கிறான். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அந்த ஊரிலேயே இருக்கிறான் தியோ. காகின் தியோவுடன் சேர்ந்து பாரீஸுக்குப் போகிறார். டிசம்பர், 31ம் தேதி நல்ல செய்தி வருகிறது. 1ம் தேதி வின்சென்ட் இந்தக் கடிதத்தை பென்சிலால் எழுதுகிறான்).

***

ஆர்ள், ஜனவரி 1889

அன்பு தம்பி,

காகின் அங்கு நன்றாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

நான் மீண்டும் ஓவியம் வரைய தொடங்க வேண்டும்.

சமையல் செய்யும் பெண்ணும் என்னுடைய நண்பர் ரூளினும் வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தில் இருக்கும்படி அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

நான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபிறகு என்னுடைய பழைய பாதையில் திரும்பவும் நான் நடை போட வேண்டும். மீண்டும் நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தில் அமர்ந்து நான் மீண்டும் ஓவியம் வரைய வேண்டும்.

உன்னுடைய பயணத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் நான் மிகவும் துயரத்திற்கு உள்ளாகிவிட்டேன். நீ அதைத் தவிர்த்திருக்கலாம். எனக்கு மோசமாக எதுவும் சம்பவித்துவிடாது. தேவையில்லாமல் உன்னை ஏன் நீ கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டும்?

நீ மனநலத்துடன் இருப்பது குறித்து உண்மையிலேயே நான் சந்தோஷப்படுகிறேன். பாங்கர்ஸைப் பற்றி எழுதியிருந்தாய். அதைப் படித்ததும் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?

ஆன்ட்ரேயை நான் விசாரித்ததாகக் கூறு.

ஆர்ளில் நான் நல்ல நிலையில் இருக்கும்பொழுதே உன்னை அழைத்திக்க வேண்டும். நீ இங்கு வந்தபோது, நிலைமைதான் இப்படி ஆகிவிட்டதே.

எது எப்படியோ, எப்போதும் தூய இதயத்துடன் இரு. ப்ளேஸ்லமார்ட்டின் முகவரிக்கு, நேரடியாக எனக்கு கடிதங்கள் அனுப்பவும். காகின் விருப்பப்பட்டால், கூடிய சீக்கிரம் வீட்டிலிருக்கும் அவரின் ஓவியங்களை அனுப்பி வைக்கிறேன். நாற்காலிகளுக்காக அவர் செலவழித்த பணத்தை நாம் அவருக்குத் திரும்ப தர வேண்டியிருக்கிறது.

இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன். நான் மீண்டும் மருத்துவமனைக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. வெகு விரைவில் நான் குணமாகி, வெளியே வந்துவிடுவேன்.

உன்
வின்சென்ட்.

எனக்காக அம்மாவுக்கு ஒரு வரி எழுதிப் போடு. அப்படியென்றால்தான் யாரும் எனக்காக கவலைப்படாமல் இருப்பார்கள்.

*பாங்கர் என்று வின்சென்ட் குறிப்பிடுவது, தியோ விரைவில் மணக்க இருக்கும் ஜோஹன்னா பாங்கரை. தியோவுக்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தமாகிவிட்டது. அவள் தன் சகோதரன் ஆன்ட்ரீஸுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் பாரீஸில் தியோ, வின்சென்ட் இருவருக்கும் நண்பன். ஜோஹன்னாவை தியோ திருமணம் செய்து கொள்ளப் போகும் செய்தியைத் தெரிந்து வின்சென்ட்டிற்கு அது பேரதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அவனின் உடல்நல பாதிப்பிற்கு அது ஒரு முக்கய காரணம் என்கிறார்கள். திருமணமாகிவிட்டால் எங்கே தனக்கு தியோவிடமிருந்து வரும் பண உதவி நின்று போய்விடுமோ என்று வின்சென்ட் பயந்ததுகூட உண்மையாக இருக்கலாம்.

***

ஆர்ள், ஏப்ரல் 1889

அன்புள்ள தியோ,

நீயும் நீ திருமணம் செய்யப் போகும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். உணர்ச்சி வசப்படுவதன்மூலம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரங்களில் வாழ்த்துவதற்கு நான் மிகவும் சிரமப்பட வேண்டி வந்துவிடுகிறது. இதை வைத்து மற்றவர்களை விட நான் குறைவான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன் என்று நீ கருதிவிடக்கூடாது. என்னைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும்.

உன்னுடைய சென்ற கடிதத்திற்காக உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தாஸேயிடமிருந்து பெயிண்ட் வாங்கி அனுப்பியதற்காகவும், ஃபோரெய்ன் வரைந்த ஓவியங்களை அனுப்பியதற்காகவும்தான். அந்த ஓவியங்களை நான் வரைந்திருக்கும் ஓவியங்களுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தேன். என்னை அந்த ஓவியங்கள் வெகுவாக பாதித்ததென்னவோ உண்மை.

நீங்கள் ஆம்ஸ்டர்டாமிற்கு எப்போது புறப்படுவீர்கள்? உங்கள் திருமணம் நடக்கப்போவது ப்ரெடாவிலா இல்லாவிட்டால் ஆம்ஸ்டர்டாமிலா என்பது எனக்குத் தெரியவில்லை. அது நடக்க இருப்பது ஆம்ஸ்டர்டாமில்தான் என்ற என் எண்ணம் சரியாக இருந்தால், இந்தக் கடிதம் உன் கைகளில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும்.

நேற்றுதான் நம்முடைய நண்பர் ரூவின் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் தன்னுடைய வாழ்த்துக்களை உனக்குத் தெரிவிக்கும்படி சொன்னார். அவர் இங்கு வந்திருந்தது எனக்கு நிறைந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் பெரிய பெரிய சுமைகளைத் தூக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. மிகவும் கனமான சுமைகள் அவை. அதற்காக அதைப்பற்றி அவர் சிறிதும் கவலைப்படுவதில்லை. ஒரு விவசாயிக்கு உரிய பலம் பொருந்திய உடற்கட்டை அவர் பெற்றிருப்பதால் எப்போது பார்த்தாலும் உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடனும்தான் அவர் காணப்படுகிறார். வாழ்க்கையோடு ஒன்றிப்போய் ஒருவன் வாழ்ந்தால், அது கஷ்டமானதாகவே அவனுக்கு இருக்காது என்பதை அவரிடமிருந்து தான் நான் தெரிந்துகொண்டேன்.

ஸேலே, ரே இருவரும் கூறியபடி ஈஸ்டருக்குள் நான் என்னுடைய ஸ்டுடியோவை விட்டு வெளியேறியாக வேண்டும். அதைப்பற்றி ரூளினுடன் நான் பேசினேன்.

வீட்டை நான் வைத்திருந்ததை விட அழகாக வைத்திருப்பதற்காக ரூளினைப் பாராட்டினேன்.

அவர்கள் என்னை வெளியேறும்படி கூறுகிறார்கள். அங்கு நான் ஏதாவது சேதம் உண்டாக்கலாமா என்று பார்க்கிறேன். ஆனால், அதை செய்யும் மனம்தான் எனக்கு இல்லை.


என் மனதிற்குள் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நல்ல ஒரு இடத்தை பெயர் தெரியாத யாருக்காவது கொடுக்கும் முயற்சிதான் இது. நான் கொண்ட கருத்தைத்தான் ரூளினும் கொண்டிருந்தார். என்னை மார்செல்ஸில் தங்கும்படி அவர் சொன்னார்.

 நான் இப்போது நன்றாக இருக்கிறேன். மனதில் விவரிக்க முடியாத சில கவலைகள் இருக்கின்றன. எது எப்படியோ - உடல் பலம் முன்பிருந்ததைவிட சற்று கூடியிருப்பதென்னவோ உண்மை. நான் தற்போது படம் வரைவதில் இறங்கிவிட்டேன்.

சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக நின்றிருக்கும் பீச் மரங்களுக்குப் பக்கத்தில் இருந்தவாறு வரைந்து கொண்டிருக்கிறேன். பின்னால் மலைகள் தெரிகின்றன. மோனேயைப் பற்றி ‘ஃபிகரோ’ பத்திரிகையில் ஒரு அருமையான கட்டுரை வந்திருக்கும் போலிருக்கிறது. ரூளின் அதைப் படித்துவிட்டு, மிகவும் அதில் ஒன்றிப் போய்விட்டதாக சொன்னார்.

உடனடியாக ஒரு புதிய வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். ஸேலே 20 ஃப்ராங்கிற்குக் கிடைக்கக்கூடிய ஒரு அழகான வீட்டைப் பற்றி சொன்னார். நான் அதை எடுத்துக் கொள்ளலாமா என்பதைப் பற்றி அவர் தீர்மானமாக எதுவும் சொல்லவில்லை.

ஈஸ்டருக்குள் நான் மூன்று மாத வாடகையைக் கட்ட வேண்டும். பெரிய அளவில் அதிர்ஷ்டம் என்பது எந்தத் திசையில் பார்த்தாலும் தெரியாமல் இருக்கும்பொழுது, நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாமே மனச்சோர்வைத் தருவதாகவே இருக்கின்றன.

இந்தக் குளிர்காலத்தில் ஆர்ளில் நிலவிய அமைதியற்ற போக்கை பொதுவாக தான் விரும்பவே இல்லை என்றார் ரூளின். லிபர்ட்டியில் நான் வசித்துக் கொண்டிருந்த வீட்டில் என்னை இருக்க விடாமல் துரத்துவதற்காக பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் புகார் செய்த விஷயத்தைக் கூட நான் சிறிதும் விரும்பவில்லை என்றார் அவர்.

எல்லா இடங்களிலும் இதே நிலைதான். வியாபாரம் சரியாக நடக்கவில்லை. இயற்கை வளம் வற்றிப் போய்விட்டது. மக்கள் விரக்தியின் எல்லைக்குப் போய்விட்டார்கள். தேவையில்லாத மனக்குழப்பத்தில் ஒவ்வொருவரும் இருக்கின்றனர்.

வெகு விரைவில் நான் முற்றிலும் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் இந்த சூழ்நிலையும் எனக்கு நன்கு பழகிப் போய்விட்டது. நீண்ட காலத்திற்கு ஒரு ஆதரவு இல்லத்தில் நான் தங்க நேர்ந்தாலும் என் மனதை அதற்கேற்றபடி தயார் பண்ணி கொள்வேன். ஓவியம் வரைவதற்கான பல விஷயங்கள் எனக்கு அங்கு கிடைக்கலாம்.

உனக்கு நேரம் இருக்கும்பட்சம், விரைவில் கடிதம் எழுது.

ரூளினின் குடும்பம் இப்போதும் கிராமத்தில்தான் இருக்கிறது. அவர் சற்று அதிகமாக சம்பாதித்தாலும், தனித்தனியாகப் பார்க்கும்போது செலவு என்னவோ அதிகமாகத்தான் வருகிறது. அதனால் அவர்கள் அப்படியொன்றும் வசதியான நிலையில் இல்லை. அதற்காக அவர் மனதில் ஆசைகள் இல்லாத மனிதனுமல்ல.

சீதோஷ்ண நிலை நன்றாகவே இருக்கிறது. சூரியன் வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்களின் மனக் கவலைகளையெல்லாம் தற்காலிகமாக மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் படு உற்சாகமாக இருக்கிறார்கள்.

நான் டிக்கன்ஸின் ‘கிறிஸ்துமஸ் புக்ஸ்’ நூலை திரும்பவும் ஒருமுறை படித்தேன். அதில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. திரும்பத் திரும்ப படிப்பதற்கு அதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை கார்லைலின் நூலில் வரும் விஷயங்களுடன் நிறைய ஒத்துப்போகின்றன.

ரூளின் ஒரு தந்தை என்ற அளவிற்கு வயதானவராக இல்லை என்றாலும், அமைதியான குணம், மென்மைத்தன்மை ஆகியவற்றுடன் வயதான ஒரு படை வீரர் தன்னைவிட மிகவும் வயது குறைந்த ஒரு இளைஞனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி அவர் நடப்பதாக நான் நினைக்கிறேன். எப்போதும் ஒரு சிந்தனை என் மனதை அலைக் கழித்துக் கொண்டே இருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. எது வேண்டுமானாலும் நடக்கட்டும். என்னைப் பற்றி நினைப்பதை மறந்துவிடாதே. ஆர்ளில் உள்ள எந்த விஷயத்தையும் உன்னிடம் புகார் செய்ய நான் விரும்பவில்லை. காரணம்- இங்கு நான் பார்த்த பல விஷயங்களை எவ்வளவு நாட்கள் ஆனாலும் என்னால் மறக்க முடியாது.

இப்போது நேரமாகிவிட்டது. உனக்கும் ஜோவிற்கும் ஏராளமான சந்தோஷங்கள் கிடைக்க மீண்டும் வாழ்த்துகிறேன். மனதில் கை குலுக்கியவாறு-

உன்
வின்சென்ட்

***

 செயின்ட்-ரெமி

செயின்ட்-ரெமி, ஜுன் 1889

அன்புள்ள தியோ,

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு சில சாதாரண ப்ரஷ்களை அனுப்பி வை. ஒவ்வொன்றிலும் அரை டஜனாவது இருந்தால் நன்றாக இருக்கும். நீயும், உன் மனைவியும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அனுபவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இங்கு சூரிய வெளிச்சத்திற்கு குறைவேயில்லை.

என் உடல்நிலை நன்றாக இருக்கிறது. என் மூளை விஷயத்தை எடுத்துக் கொண்டால், அது நேரத்தையும் சகிப்புத் தன்மையையும் சார்ந்திருக்கிறது.

இங்குள்ள இயக்குநர் உன்னிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகவும், அவர் உனக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவர் என்னிடம் எதையும் சொல்வதில்லை. நானும் அவரிடம் எதையும் கேட்பதில்லை. அவர் மிகவும் குள்ளமான ஒரு மனிதர். பல வருடங்களாக மனைவியை இழந்த மனிதராகவே இருந்து வருகிறார். கருப்பு வர்ணத்தில் அடர்த்தியான கண்ணாடி அணிந்திருக்கிறார். அவர் தான் செய்யும் வேலையில் மிகவும் சந்தோஷம் அடைவது மாதிரி தெரியவில்லை. எது எப்படியோ - அவரிடம் நன்றாக வாழ்வதற்கான எல்லா வசதிகளும் இருக்கின்றன.

ஒரு புதிய மனிதன் இங்கு வந்திருக்கிறான். அவன் கண்ணில் படும் பொருட்களையெல்லாம் ஒரு வழி பண்ணிவிடுகிறான். இரவு, பகல் எந்நேரமும் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறான். தன் சட்டையைத் தானே கிழித்துக் கொள்கிறான். தன்னுடைய படுக்கையைத் தூக்கி வீசி எறிகிறான். சாப்பிடும் உணவை கீழே போடுகிறான்... இப்படி எத்தனையோ அமர்க்களங்கள். அவனைப் பார்ப்பதற்கே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனினும், இங்கு எல்லோரும் பொறுமை காக்கிறார்கள். அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்துவிடுகிறார்கள். புதிய விஷயங்கள் பலவும் மிகவும் சீக்கிரமாகவே பழையதாகி விடுகின்றன. இப்போதிருக்கும் என்னுடைய மனநிலையில் நான் பாரீஸுக்கு வருகிறேன் என்று வைத்துக்கொள். ஒரு கருப்பு படத்திற்கும் பிரகாசமான இம்ப்ரஸனிஸ்ட் ஓவியத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் இப்போது என்னால் பார்க்க முடியாது.

தெலாக்ரூ, மில்லே, ரூஸோ, துப்ரே, தாபினி ஆகியோரின் ஓவியங்களில் இருக்கும் நிரந்தர இளமையை நான் நினைத்துப் பார்க்கிறேன். ரொமான்டிக்ஸை விட இம்ப்ரஸனிஸம் பெரிதாக சாதித்திருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாக நம்ப நான் தயாராக இல்லை. அதற்காக நான் மதிக்கும் லியான் க்ளேஸ் அல்லது பெரா போன்றோருக்கும் இடையே ஒரு கோடு இருக்கவே செய்கிறது என்கிறேன் நான்.


இன்று காலையில் என்னுடைய ஜன்னல் வழியாக கிராமத்தைப் பார்த்தேன். நான் பார்க்கும்போது சூரியன் இன்னும் உதிக்கவில்லை. அது உதிப்பதற்கு எவ்வளவோ முன்னால்தான் நான் பார்த்தது. அப்போது அதிகாலை நேர நட்சத்திரம் வானத்தில் இருந்தது. அது எவ்வளவு பெரியதாக இருந்தது தெரியுமா? தாபினி, ரூஸோ ஆகியோர் அதைத்தான் ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவியங்களில் ஒரு நெருக்கம், கம்பீரம், அமைதித் தன்மை, தனித்துவம் எல்லாற்றையும்விட இதயத்தைப் பிழியும் தன்மை இருக்கும். இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு நான் எதிரானவன் அல்ல.

பல நேரங்களில் கனவுகளில் ஆழ்ந்து விடுவதே என்னுடைய வேலையாகி விடுகிறது. தீவிரமாக எங்கெங்கோ இருக்கும் விஷயங்களை மனதில் நினைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறேன். அதனால் நான் செய்ய நினைக்கும் விஷயங்களில் ஓரளவுக்கே என்னால் ஈடுபட முடிகிறது. காலப்போக்கில் இந்நிலை மேலும் அருமையான ஓவியங்களைத் தீட்ட உதவும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நிலை இதுவரை வரவில்லை.

நான் இங்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. வேறு எங்கிருந்தும் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை. பார்க்க வேண்டும் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. அதன் விளைவாக, நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இப்போது என் மனதில் வலிமை பெற்று நின்று கொண்டிருக்கிறது.

வேறு எங்காவது போக வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களிடம் இருப்பது மாதிரி எனக்குத் தோன்றவில்லை. வாழ்க்கையை நடத்துவதற்காக நாம் வெவ்வேறு இடங்களில் சிதறக் கிடப்பதால் நமக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.

என்னால் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியாதது, எல்லோரும் எப்படி ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான். அதுதான் தெற்கில் உள்ளவர்களின் மிகப்பெரிய தவறு. அவர்களின் அழிவிற்குக் காரணம்கூட இந்தப் போக்குதான். ஆனால் என்ன அழகான கிராமம் தெரியுமா இது? வானத்தின் நீலமும் மேலே தெரியும் சூரியனும்... அடடா, இருந்தாலும் நான் கார்டனை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஜன்னல் வழியே எதைப் பார்க்க முடியுமோ அதைப் பார்க்கிறேன்.

மாப்பசானின் புதிய நூலான ‘ஸ்ட்ராங் அஸ் தி டெட்’ஐப் படித்தாயா? என்ன அருமையான கதை தெரியுமா அது? அந்த வரிசையில் அமைந்த நூல்களில் நான் படித்த கடைசி புத்தகம் ஸோலாவின் ‘தி ட்ரீம்’. அதில் காட்டப்பட்டிருக்கும் எம்ப்ராய்டரி பண்ணும் பெண்ணின் உருவம் மிக மிக அழகானது. எம்ப்ராய்டரியைப் பற்றிய விளக்கம் பொன் வர்ணத்தில் சொல்லப்பட்டிருந்தது. பொன் வர்ணம் என்பது பல்வேறு மஞ்சள் வர்ணத்தின் ஒரு கூட்டுதானே. ஆனால் அதில் இருந்த மனிதனின் உருவம் அவ்வளவு இயற்கையாக இல்லை என்பதே என் எண்ணம். பெரிய சர்ச்சின் உருவத்தில்கூட எனக்கு திருப்தியில்லை. அதுகூட அதிக நீல வர்ணத்தில் இருக்கிறது என்பதே என் கருத்து. வேறு வர்ணங்களை பயன்படுத்தியிருந்தால், நிச்சயம் அது மேலும் நன்றாக இருந்திருக்கும். அந்த மாதிரியான விஷயங்களை லமார்ட்டினில் பார்க்கலாம்.

நான் உனக்கு அனுப்பியிருந்த ஓவியங்களில் மிகவும் மோசமாக இருப்பவற்றை நீயே விட்டெறிந்து விடுவாய் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் நன்றாக இருப்பதை மட்டுமே மற்றவர்களிடம் காண்பிப்பாய் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது.

நான் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மனதில் வைத்துக்கொள். புதிய கேன்வாஸும் பெயின்ட்டுகளும் என் கைக்கு வந்தபிறகு, நான் வெளியே போய் இந்தக் கிராமத்தின் ஒரு பகுதியைப் பார்த்து வரலாமென்று இருக்கிறேன்.

எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. பார்க்கும் திசைகளெல்லாம் பல்வேறு வர்ணங்கள் கண்ணில் தெரியும் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன? அதனால் ஐந்து மீட்டர் அதிகமாக கேன்வாஸை எனக்கு அனுப்பி வை.

பூக்கள் கொஞ்ச நாட்கள்தான் இருக்கும். அதற்குப் பிறகு மஞ்சள் வர்ணத்தில் தானியக் கதிர்கள் வந்துவிடும். ஆர்ளில் நான் பார்த்ததைவிட, இங்கு அது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்ளில் இருந்ததைவிட, இங்கு மலைகள் அதிகம் இருப்பதால், சூறாவளி காற்றின் வேகம் குறைவாகவே இருக்கிறது. இதுவே ஆர்ளாக இருந்தால், காற்றின் கொடுமையைத் தாங்கவே முடியாதே.

தோட்டத்தில் நான் வரைந்த ஓவியங்கள் உன் கையில் கிடைத்த பிறகு, நான் இங்கு அதிக கவலையில் இல்லை என்பதை நீயே உணர்வாய்.

இத்துடன் இப்போதைக்கு கடிதத்தை முடிக்கிறேன். உன்னிடமும் ஜோவிடமும் மனதிற்குள் கைகுலுக்கிக்கொண்டு.

உன்
வின்சென்ட்.

***

செயின்ட்-ரெமி, பிப்ரவரி, 1890

அன்புள்ள தியோ,

சிறிது நேரத்திற்கு முன்புதான் உன்னிடமிருந்து நீ தந்தையான நல்ல செய்தியை அறிந்தேன். ஜோவிற்கு இருந்த இக்கட்டான நேரம் முடிவடைந்தது குறித்து மகிழ்ச்சி. பொடி பையன் நன்றாக இருக்கிறான் அல்லவா? நான் வார்த்தையால் சொல்வதைவிட இந்த செய்தி எனக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது. இதைக் கேட்டு அம்மா எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். உனக்கு என்ன நடக்க வேண்டுமென்று நான் நினைத்தேனோ, அது நடந்திருக்கிறது. நான் கடந்த பல நாட்களாக உன்னைப் பற்றி என்னவெல்லாம் நினைத்தேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். உன் கடிதம் என் மனதை மிகவும் தொட்டுவிட்டது. ஜோ இரவில் உட்கார்ந்து எனக்கு கடிதம் எழுதியதை நினைத்து மனதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கஷ்டமான நிமிடங்களில்கூட அவள் தைரியமாகவும் அமைதியாகவும் இருந்ததை மனதிற்குள் எண்ணி பெருமிதம் கொள்கிறேன். நான் உடல்நலமில்லாமல் இருந்த கடைசி நாட்களை மறக்க இந்தக் கடிதம் உதவியது. நான் இப்போது எங்கிருக்கிறேன், என் மனம் எங்கெல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை.

என்னுடைய ஓவியங்களைப் பற்றி ஆல்பெர்த் ஆரே எழுதியிருந்த கட்டுரையை நீ அனுப்பியிருந்ததைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். எப்படியெல்லாம் வரையக்கூடாது என்பதைவிட எப்படியெல்லாம் வரையலாம் என்பதைப் பற்றித்தான் நான் அதிகமாக சிந்திக்கிறேன் என்பது நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டுமா என்? அந்தக் கட்டுரையாளர் மிகவும் சரியாகவே எழுதியிருந்தார். ஒரு பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தது சரியே. அது எனக்கு மட்டும் சொல்லப்பட்ட ஒன்றல்ல. எல்லா இம்பரஷனிஸ்ட்டுகளுக்கும் கூறப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சரியான நேரத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கட்டுரையாளர் பல்வேறு விஷயங்களையும் தெரிந்திருக்கும் ஒரு நபர் என்று எப்படி மற்றவர்கள் கண்களுக்குப் படுகிறாரோ, அதே மாதிரிதான் என் கண்களுக்கும் படுகிறார். ஆங்காங்கே நல்லவை பல இருக்கவே செய்கின்றன என்கிறார் - என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு. உண்மைதான்.


என்னுடைய முழுமையில்லாத ஓவியங்களில்கூட பாராட்டக்கூடிய அம்சங்கள் பலவும் இருக்கத்தான் செய்கின்றன. அதை சொன்னதற்காக அவரை மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நன்றியுடன் நோக்குகிறேன். என்னால் அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களைத் தாங்கிக் கொள்ளவே கஷ்டமாக இருக்கிறது. காரணம்- அதில் அளவுக்கு மேல் இருக்கும் என்னைப் பற்றிய புகழ்ச்சியுரைகளே. அந்த அளவிற்கு என்னைப் பற்றி அவர் புகழ்ந்திருக்க வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். மிகவும் அதிகப்படியாக என்னை அவர் உயர்த்தி சொல்லியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதேபோன்றுதான் ஐசக்சன் உன்னைப் பல நேரங்களில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். சமீப காலமாக ஓவியர்கள் தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதில்லை. போல்வார்ட் மான்ட்மார்த்ரேயில் இருக்கும் சிறு கடையில் மிகவும் அமைதியாக ஒரு இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நீ புரிந்து கொள். பொதுவாக நான் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருப்பதையே விரும்பவில்லை. நம் மனதில் இருக்கும் விஷயத்தை வார்த்தையால்தான் வெளியே சொல்ல வேண்டும் என்ற அவசியமெதுவும் இல்லையே. நீ ஓவியத்தைப் பார்க்கலாம்... ஆனால் அதே மாதிரி உன்னால் வரைய முடியுமா? ஐஸக்சன்னையும் சரி வேறு விமர்சகர்களையும் சரி நான் தேவையில்லாமல் அவர்களைப் பற்றி ஏதாவது சொல்ல விரும்பவில்லை. உனக்கோ, எனக்கோ புகழ் ஒன்று கொஞ்சம் வருகிறதென்றால், அந்த நேரத்தில் நாம் மிகவும் அமைதியாகவும், சலனமில்லாத மனதை வைத்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

என்னுடைய சூரியகாந்திப் பூக்களைப் புகழ்ந்த க்வோஸ்ட்டின் அழகு ஓவியங்களைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? எது எப்படியோ - அந்தக் கட்டுரைக்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன், பெருமைப்படுகிறேன். ஒரு கலை எப்படி படைப்பு சக்தி கொண்டு இருக்கிறதோ அதேபோன்றுதான் ஒரு கட்டுரையும். அந்த கோணத்தில் அதைப் பார்த்தோமானால், அதை நமக்கு கட்டாயம் மதிக்கத்தான் தோன்றும்.

காகின் தன் பெயரில் ஒரு ஸ்டுடியோ உண்டாக்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை சொன்னார். திரும்பத் திரும்ப ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என்று நினைத்தால் கூட அது முடிகிறதா என்ன?

என்ன இருந்தாலும், நீயும் நானும் அவரின் நெருங்கிய நண்பர்கள் என்பதை அவர் நிச்சயம் மனதில் நினைப்பார் என்றே கருதுகிறேன். போன வருடம் எழுதியதைவிட இப்போது அவர் எழுதும் கடிதத்தில் கவலை அதகம் தெரிகிறது. விரக்தி அதிகமாக வெளிப்படுவதை உணர முடிகிறது. ரஸ்ஸலுக்கு நான் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். காகினைப் பற்றி அதில் நான் ஞாபகப்படுத்தியிருக்கிறேன். ரஸ்ஸல் ஒரு பலம் கொண்ட மனிதர் என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். உன்னையும் என்னையும் விட காகினும் ரஸ்ஸலும் மனதளவில் கிராமத்து மனிதர்களே. எங்கோ இருக்கும் வயல்களின் வாசனையைத் தங்களிடம் இன்னமும் கொண்டிருக்கும் மனிதர்கள் - அப்படித்தான் அவர்கள் எனக்குப் படுகிறார்கள்.

உனக்கு ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். மில்லேயின் சில படைப்புகளை நான் பிரதியெடுக்க விரும்புகிறேன். நான் அதை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன். காரணம் - தேவையில்லாமல் யாராவது என்னைப் பற்றி விமர்சனம் செய்யலாம். நானோ ரஸ்ஸல், காகின் ஆகியோரையும் இதில் தீவிரமாக ஈடுபடுத்த நினைக்கிறேன்.

நீ எனக்கு அனுப்பியிருந்த மில்லேயின் படைப்புகள் மிகவும் சிறப்பாக இருந்தன. நல்லவையாக தேர்ந்தெடுத்து நீ அனுப்பியிருந்தாய். அவற்றில் சிலவற்றை நான் எந்தவித தயக்கமும் இல்லாமல் ரஸ்ஸலுக்கு அனுப்பி வைக்கிறேன். இதைப் பற்றிய உன்னுடைய கருத்தைத் தெரிவித்து கொண்டே பின்பே நான் இந்த வேலையை ஆரம்பிப்பேன். வேறு சிலரிடம் கூட இதைப் பற்றிய கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

ரஸ்ஸலிடமிருந்து அவரின் கருத்தை வெகு சீக்கிரம் நான் எதிர்பார்க்கிறேன். ரஸ்ஸல் ஒருவேளை பயங்கரமாக கோபப்படலாம். ஏதாவது வெகுண்டெழுந்து கூறலாம். நான் அவரிடமிருந்து சில நேரங்களில் எதிர்பார்ப்பதும் அதைத்தான். என்னுடைய உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், மகத்தான இந்த ஓவியங்களைப் பிரதியெடுக்கக்கூட என்னால் முடியவில்லை என்பதே உண்மை. நான் மனதிற்குள் அவை எப்படி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேனோ, அப்படி அவை வரவில்லை. உடல் நலமில்லாமல் இருக்கும்பொழுது, இதைத் தொடர முடியுமா என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். ஆனால், அதே நேரத்தில் இதை செய்வதற்காக தீவிரமாக இறங்கி விடுகிறபோது, அதை மிகவும் அமைதியாக இருந்து செய்திருக்கிறேன். நான் முழுமையாக முடிந்த ஐந்து அல்லது ஆறு கேன்வாஸ்களை உனக்கு அனுப்பி வைக்கிறேன். அதற்குப்பிறகு அவற்றைப் பற்றிய உன்னுடைய கருத்தைச் சொல்.

திரு.லாஸே இங்கு வருவார் என்று நினைக்கிறேன். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் நிமிடங்களை நான் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். ப்ராவென்ஸில் தான் அனுபவித்த கஷ்டங்களை அவர் சொன்னதை மனதில் அசை போட்டுப் பார்க்கிறேன். ஏற்கனவே முடிந்து போன விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், செய்யப் போகும் விஷயத்தைப் பற்றி பேசும் அவரின் குணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சைப்ரஸ் மரங்கள் வளர்ந்திருக்கும் நிலப்பகுதி. நிச்சயம் அது எளிதான ஒன்றாக இருக்காது. ஆரியேகூட இதைப்பற்றி கூறியிருக்கிறார். கறுப்புகூட ஒரு வர்ணம்தான் என்கிறார் அவர். நெருப்பு ஜுவாலையைப் போன்ற அவர்களின் தோற்றம் - நான் அதை மனதில் நினைத்துப் பார்க்கிறேன். அது நம்மால் முடியுமா என்பது தெரியவில்லை. அதைப்பற்றி இதற்கு முன்பு நமக்கு ஒன்றுமே தெரியாதே என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். நாம் ஏற்கனவே தெரிந்து கொண்டிருப்பது மட்டுமே போதும் என்ற எண்ணம் நம்மிடம் இருக்கக்கூடாது. வேறு எங்கோ உயரத்திலிருந்து நாம் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் மட்டுமே அழகான பல விஷயங்களை நாம் செய்ய முடியும். சூரியகாந்தி மலர்களை நான் வரைந்தபிறகு, அதற்கு நேர் எதிரான அதே நேரத்தில் சரிசமமாக இருக்கும் ஒன்றை நினைத்துப் பார்த்தேன். அதுதான் - சைப்ரஸ் மரங்கள்.

ஒரு சினிகிதிக்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவள் உடல் நலமில்லாமல் இருக்கிறாள். அவளைப் போய் நான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நான் அவளை மஞ்சள், கறுப்பு வர்ணங்களில் ஓவியமாக வரைந்திருக்கிறேன். நரம்பு பாதிப்பு உண்டாகி அவன் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். அதனால் உண்டாகும் வேதனையைத் தாங்க முடியாமல் அவள் படும் கஷடத்தைப் பார்ப்பதற்கே நமக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. போன முறை நான் பார்த்தபோது ஏதோ வயதான ஒரு உருவத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது.


இரண்டு வாரங்களுக்குள் நான் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதற்குள் நானே உடல்நலமில்லாமல் படுத்துவிட்டேனே. எது எப்படியோ, நீ அனுப்பியிருந்த நல்ல செய்தியும் அந்தக் கட்டுரையும் என்னை இன்று உற்சாகத்துடன் இருக்க வைத்திருக்கின்றன என்பதென்னவோ உண்மை. என் மனதில் இன்று நல்ல மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். திரு.சேல் உன்னைப் பார்க்கவில்லை என்பது குறித்து எனக்கு வருத்தம்தான். அன்புச் சகோதரி வில் கடிதம் எழுதியதற்காக மீண்டும் நன்றி. இன்று அவளுக்கு பதில் கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், சில நாட்கள் சென்றபிறகு எழுதலாம் என்று வைத்து விட்டேன். ஆம்ஸ்டர்டாமிலிருந்து அம்மா ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார் என்று அவளிடம் கூறு. அதற்காக அவளும் சந்தோஷப்படுவாள்.

இந்தக் கடிதத்தை நான் இப்போது முடித்தாலும், என் மனதில் உன்னை நான் நினைத்துக் கொண்டேதான் இருப்பேன். ஜோ இப்போது இருப்பதைப்போல, நமக்காக எப்போதும் நலமுடன் இருக்க வேண்டும். சின்னப் பையனை அப்பாவின் நினைவு வருகிற மாதிரி தியோ என்று ஏன் நாம் அழைக்கக்கூடாது? அது நம் எல்லோருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்குமே. கை குலுக்கியவாறு-

உன்
வின்சென்ட்.

திரு.ஆரியோவைப் பார்த்தால் அவருடைய கட்டுரைக்காக நன்றி சொல்லவும். அவருக்கும் ஒரு வரி நான் தனியாக எழுதுகிறேன்.

***

ஓவேர்

ஓவேர்-சர்-ஓஸ், மே 1890

அன்புள்ள தியோ, அன்புள்ள ஜோ,

இன்று காலையில் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. அதில் இருந்த ஐம்பது ஃப்ராங்கிற்கும்தான்.

இன்று நான் டாக்டர் காஷேயைப் பார்த்தேன். செவ்வாய்க்கிழமை காலையில் அவருடைய வீட்டில் அமர்ந்து நான் படம் வரையப் போகிறேன். அவருடன் சேர்ந்து உணவருந்தப் போகிறேன். அதற்குப் பிறகு அவர் நான் வரைந்த ஓவியங்களைப் பார்க்க வருவார். அவர் ஒரு உணர்ச்சிவசப் படக்கூடிய நல்ல மனிதராக இருக்கிறார். தான் பார்க்கும் வேலை குறித்து மிகவும் விரக்தியடைந்து போயே காணப்படுகிறார். ஒரு கிராமத்து மருத்துவர் என்ற முறையில் அவர் விரக்தியடைவது நயாயமாகக்கூட இருக்கலாம். நான் என் ஓவியங்களை நினைத்து விரக்தி அடைவதில்லையா, அப்படி என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் அவரிடம் ஒருவரையொருவர் வேலையை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டேன். எது எப்படியோ - அவருடன் நான் கொண்டிருக்கும் நட்பு கடைசி வரை நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால் தாங்க முடியாத அளவிற்கு என்னுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிற மாதிரி ஏதாவது நடந்தால், அதை குறைப்பதற்கு அல்லது இல்லாமற் செய்வதற்கு தன் திறமையை எப்போதும் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அவரிடம் எதையும் மனம் திறந்து பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். எந்த விஷயத்தையும் கூற தயங்கவே கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். அவர் எனக்கு கட்டாயம் தேவை என்ற நேரம் நிச்சயம் வரத்தான் போகிறது. அது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இப்போது நன்றாகவே இருக்கிறேன். உங்களின் குழந்தையை நான் மனதில் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் எப்போதும் போல ஹாலண்டுக்கு பயணம் செய்வதை விட இந்த கிராமப் பகுதியிலேயே தங்கி ஓய்வெடுக்கலாம். ஆனால், அம்மா குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அதனால்தான் நீங்கள்கூட அங்கு போகலாம் என்று நினைத்திருப்பீர்கள்.

ஆனால் குழந்தைக்கு நல்லது எது என்பதை அவர் தெரிந்து கொண்டால், ஒன்றும் கூற மாட்டார் என்று நினைக்கிறேன்.

பாரீஸிலிருந்து இந்த கிராமம் மிகவும் அதிகமான தூரத்தில் இருப்பதென்னவோ உண்மைதான். தாபினிக்குப் பிறகு இந்தக் கிராமம்தான் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது. நிறைய கட்டிங்கள் இருக்கின்றன. நவநாகரீகமான வீடுகள் இருக்கின்றன. சூரியனின் கதிர்கள் மலர்கள் வழியாக விழுந்து கொண்டிருக்கின்றன.

இது ஒரு எளிமையான கிராமம். பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகம் கிளர்ந்தெழுந்து மேலே வருகிறது. அதன் அழகை நம்மால் ரசிக்க முடிகிறது. சுத்தமான காற்று எங்கு பார்த்தாலும் வீசிக் கொண்டிருக்கிறது. எங்கும் அமைதி நிலவுகிறது. இங்கு தொழிற்சாலைகள் இல்லை. எங்கு நோக்கினாலும், பச்சைப் பசேல் என இருக்கிறது. மொத்தத்தில் - கிராமம் நன்றாக இருக்கிறது.

மில்லே, போக் எந்தப் படத்தை வாங்கினார்? அவரின் சகோதரருக்கு நான் கட்டாயம் ஒரு கடிதம் எழுதி நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய இரண்டு படங்களை அவர்களிடம் தந்துவிட்டு அவர்களின் இரண்டு படங்களை நான் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். படர்ந்து நிற்கும் ஒரு கொடியை தற்போது வரைந்து வைத்திருக்கிறேன். பிங்க் வர்ணத்தில் இருக்கும் செஸ்ட்நட்டையும் வெள்ளை செஸ்ட்நட்டையும் வரைந்து வைத்திருக்கிறேன். நேரம் இருந்தால், அந்த ஓவியங்களை சற்று ‘டச்’ பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். சில படங்கள் என் மனதிற்குள் தெளிவில்லாமல் முகம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. அது முழுமையான உருவத்துடன் என் மனதில் லலம் வரும். அதற்கு கொஞ்சம் காலமாகும். சிறிது சிறிதாகத்தானே எதுவும் ஒரு முழுமைக்கு வர முடியும்? எனக்கு மட்டும் உடல்நலம் பாதிக்காமல் இருந்திருந்தால், போக்கிற்கும் ஐஸாக்சன்னுக்கும் எப்போதோ நான் கடிதம் எழுதியிருப்பேன்.

இன்னும் என்னுடைய பெட்டி வந்து சேரவில்லை. அதனால் மிகவும் கவலையாக இருக்கிறேன். இன்று காலையில் இது குறித்த தகவல் அனுப்பியிருக்கிறேன்.

நீ அனுப்பியிருந்த கேன்வாஸுக்கும் பேப்பருக்கும் நன்றி. நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. காற்றுகூட பலமாக வீசுகிறது. எனினும் அதைப் பார்க்க மனதிற்கு சுகமாகவே இருக்கிறது. படுக்கைகள் இன்னும் வந்து சேரவில்லை. இதையெல்லாம் மீறி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களை விட்டும் மற்ற நண்பர்களை விட்டும் நான் மிகவும் அதிக தூரத்தில் இல்லை என்று நினைத்து மனதிற்குள் சந்தோஷப்படுகிறேன். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டாக்டாகள்கூட அதைத்தான் சொல்கிறார்கள். குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி ஜோவிடம் கூறு. சொல்லப் போனால் அவள் இரு மடங்கு சாப்பிட வேண்டும். குழந்தையை வளர்க்க வேண்டியதிருக்கிறது அல்லவா? அது இல்லாத வாழ்க்கை நேர்கோட்டில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் ட்ரெயினைப் போல என்று கூறுவதுதான் சரியானது. மனதிற்குள் கைகுலுக்கிக் கொண்டு -

உன்னுடைய
வின்சென்ட்.

***


 ஓவேர், ஜூலை 1890

அன்புள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும்,

ஜோ எழுதிய கடிதம் எனக்கு ஒரு வேதத்தைப்போல இருந்தது. நான் அங்கு உங்களுடன் இருந்த நாட்களின்போது உண்டான மன பாதிப்பின் வெளிப்பாடுதான் அந்தக் கடிதம். அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்திற்காக தினமும் உழைத்துக் கொண்டிருக்கும் நமக்கு உண்மையிலேயே அந்த நிமிடங்கள் சாதாரணம் இல்லைதான். சாப்பிட்டு வாழும் வழக்கமான வாழ்க்கையைத் தாண்டி மேலும் பல இருக்கின்றன என்று நாம் நினைக்கக் கூடியவர்கள்தானே. அதே நேரத்தில் வாழ்க்கையை நடத்த பல கஷ்டங்களையும் நாம் தாண்டத்தான் வேண்டியிருக்கிறது.

என் விஷயத்தை எடுத்துக் கொண்டால், பல நேரங்களில் நான் கூட கவலையில் ஆழ்ந்து விடுகிறேன். உங்களை அழுத்தும் வாழ்க்கையின் பாரம் என்னையும் அழுத்துவதாகவே நான் உணர்கிறேன். என்ன செய்ய முடியும்? முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயல்கிறேன். ஆனால், பல நேரங்களில் என் வாழ்க்கையின் அடிவேரே ஆட்டம் கண்டு விடுகிறது. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிலையில்லாத போகிறது.

உங்களுக்கு நான் பெரிய அளவில் இல்லையென்றாலும், சிறிதளவிலாவது சுமையாக இருக்கிறேனோ என்றும், அதனால் என்னை நீங்கள் விலக்கி வைப்பீர்களோ என்றுகூட பல நேரங்களில் நான் பயப்படுகிறேன். ஆனால், ஜோ எழுதிய கடிதம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களைப்போலவே நானும் மிகவும் சிரமத்தில் இருக்கறேன் என்பதையும் நீங்கள் என்னைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதையும் அந்தக் கடிதத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

நான் மீண்டும் இங்கு ஓவியம் வரைய உட்கார்ந்துவிட்டேன். ப்ரஷ் கையை விட்டு நழுவி கீழே விழும் அளவிற்கு நான் வரைந்து கொண்டிருக்கிறேன். இதுவரை மூன்று படங்களை வரைந்து முடித்து விட்டேன்.

மேகங்கள் சூழ்ந்து இருண்டு போய் காணப்படும் வானத்திற்குக் கீழே பரந்து கிடக்கும் தானியக் கதிர்களை ஓவியத்தில் வரைந்திருக்கிறேன். அங்கிருக்கும் சோகத்தையும் தனிமையின் உச்ச நிலையையும் தேவையில்லாமல் ஓவியத்தில் கொண்டு வரும் அளவற்கு நான் போக வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். வெகு சீக்கரமே இந்த ஓவியங்களை நீங்கள் பார்ப்பீர்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த ஓவியங்களை நான் பாரீஸுக்குக் கொண்டு வந்து உங்களுக்குக் காட்டுகிறேன். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாததை இந்த ஓவியங்களில் சொல்லி இருப்பதை அதைப் பார்க்கும்போது உங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த கிராமப் பகுதியில் இருக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையையும், கிராமத்திற்கென்றே இருக்கும் உயிர்ப்பையும் கூட நீங்கள் அவற்றில் காணலாம். நான் வரைந்திருக்கும் மூன்றாவது ஓவியம் - தாபினியின் தோட்டம். இங்கு வந்து சேர்ந்ததிலிந்து அந்த ஓவியத்துடன்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் பயணம் உங்கள் மனதிற்கு சிறிது மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனக்கு எப்போதும் குழந்தையைப் பற்றித்தான் சிந்தனை. இருக்கும் சக்தி எல்லாவற்றையும் படங்களை வரைந்து கொண்டிருப்பதற்காகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், குழந்தையை வளர்ப்பது எவ்வளவோ மேல். என்னால் அதை உணர முடிகிறதே தவிர, நிச்சயம் வாழ்க்கையைப் பின்னோக்கி திருப்பிக் கொண்டு போக முடியுமா என்ன? நான் அதைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டேன். மாறுபட்டு எதையாவது யோசிப்பதுகூட என்னைப் பொறுத்தவரை வீண் என்று உணர்கிறேன். அப்படிப்பட்ட ஆசைகள் என்னைவிட்டு முழுமையாகப் போய் விட்டன. ஆனால், அந்த எண்ணம் உண்டாக்கும் காயங்கள் என்னவோ இப்போதும் மனதில் எஞ்சி இருக்கத் தான் செய்கின்றன.

கில்லாமினை மீண்டும் பார்க்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், என் ஓவியங்களை அவர் பார்த்தார் என்பதை அறிந்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சிறிது காத்திருந்து அவரைப் பார்த்து பேசியிருக்கலாம். ஆனால், நான் புகை வண்டியைத் தவற விட்டிருப்பேன்.

அதிர்ஷ்டம், தைரியம், வளம் - எல்லாம் வாழ்க்கையில் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அம்மாவையும், நம் தங்கைகளையும் நான் மிகவும் விசாரித்ததாகக் கூறவும். நான் அவர்களை நினைத்துக்  கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லவும். அவர்களிடமிருந்து இன்று காலையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு சீக்கிரம் பதில் எழுத வேண்டும். மனதிற்குள் கை குலுக்கியவாறு-

உங்களின்
வின்சென்ட்

என்னிடமிருக்கும் பணம் அதிக நாட்கள் தாங்காது. ஆர்ளிலிருந்து வந்த லக்கேஜுக்கு நான் கையிலிருந்த பணத்தைக் கட்டியிருக்கிறேன். பாரீஸ் பயணம் பற்றிய இனிய நினைவுகள் என் மனதில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. என் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று எவ்வளவு நாட்களாக நான் நினைத்திருந்தேன் தெரியுமா? நான் சந்தித்த அந்த டச்சுப் பெண் நல்ல அறிவாளி என்பதை உணர்கிறேன். லாத்ரெக் வரைந்த இசைக் கலைஞனின் ஓவியத்தைப் பார்த்து நான் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று விட்டேன். அந்த ஓவியத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன் என்பது உண்மை.

***

ஓவேர், ஜூலை 1890

அன்புச் சகோதரனுக்கு,

உன்னுடைய கடிதத்திற்கும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்த 50 ஃப்ராங்க் நோட்டிற்கும் நன்றி. முக்கியமான விஷயம் நன்கு போய்க் கொண்டிருக்கிறது. முக்கியத்துவம் இல்லாத விஷயங்களைப் பற்றி உன்னிடம் ஏன் நான் அதிகமாக சொல்ல வேண்டும்? நாம் நம்முடைய தொழிலைப் பற்றியும், வியாபாரத்தைப் பற்றியும் நிறைய பேசிக் கொண்டிருப்போம். ஆனால், நாம் போக வேண்டிய தூரமோ நிறைய இருக்கும்.

மற்ற ஓவியர்கள் மனதிற்குள் என்ன நினைத்துக் கொண்டாலும் பொதுவாக அவர்கள் அதிகம் பேசுவதில்லை. தங்கள் தொழிலைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்காமல் அவர்கள் விலகி நிற்பதையே விரும்புகிறார்கள்.

உண்மை என்னவென்றால் நம்முடைய ஓவியத்தைத்தான் நான் பேச செய்ய வேண்டும். நான் திரும்பவும் ஒரு உண்மையைச் சொல்கிறேன். கோரோவில் இருக்கும் மற்ற விற்பனையாளர்களை விட நீ மாறுபட்டவன். பல ஓவியங்கள் உருவானதில் உன் பங்கும் நிச்சயம் இருக்கிறது என்பதே என் எண்ணம்.

இப்போதிருக்கும் குழப்பமான நிலையில் இந்த விஷயத்தை நான் உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும். ஓவியங்களை விற்பனை செய்பவர்களுக்கும் ஓவியர்களுக்குமிடையே உறவு மிகவும் மோசமாக நிலவிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நான் இதை சொல்வது அவசியமும்கூட.

நான் ஓவியம் வரைவதற்காக என் வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன். அது இருக்கட்டும். நான் பார்த்த வியாபாரிகளைப் போல உள்ள மனிதன் நீ இல்லை. உன் பாதையை நீயே தேர்ந்தெடுத்துக் கொண்டாய் - முடிந்தவரை மனிதாபிமானத்துடன் இருப்பது என்று. ஆனால், அதற்குரிய பலன் என்ன?

இந்தக் கடிதம்தான் வின்சென்ட், தியோவிற்கு எழுதிய கடைசி கடிதம். இது வின்சென்ட் 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டபோது, அவனின் உடல்மேல் கிடைத்தது. தியோவின் வியாபார விஷயமாக வின்சென்ட் எழுதிய பல வாக்கியங்கள் இங்கு  நீக்கப்பட்டிருக்கின்றன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.