
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
நாளிதழ்களிலும், வார-மாத இதழ்களிலும், தொலைக்காட்சியில் வரக்கூடிய விளம்பரங்களிலும் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி நான் அவ்வப்போது படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி பல நேரங்களில் பாராட்டி கூறியிருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம். சென்னை - வடபழனி, ஜவஹர்லால் சாலையில் சென்றுகொண்டு இருந்தேன்.
அப்போது, ‘ஆஸ்பின் இன்’ என்ற ஹோட்டலுக்கு முன்னால் ‘ஆயில் புல்லிங்’ சம்பந்தப்பட்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றுக்கொண்டு இருப்பதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்தது.
எனக்குள் ஆர்வம் எழுந்தது. ‘கருத்தரங்கில் என்னதான் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தேன்.
மேடைக்குப் பின்னால் ‘இதயம் வெல்த்தின் ‘ஆயில் புல்லிங்’ கருத்தரங்கம்’என்று தலைப்பிட்டு ‘Back Drop’ தொங்கிக்கொண்டு இருந்தது. மேடையில் நான்கு பேர் அமர்ந்திருக்க, ஹாலில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர்.
அவர்களில் வயதானவர்கள், நடுத்தர வயதுக்காரர்கள், இளம் தலைமுறையினர் என்று எல்லா வயதினரும் இருந்தனர்.
அமர்ந்திருந்தவர்களில் ஒவ்வொருவராக எழுந்துச் சென்று ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றியும், அதை தினமும் தாங்கள் பயன்படுத்துவதால், உண்டான வியக்கத்தக்க பலன்களைப் பற்றியும் ஆர்வத்துடன் கூறினார்கள்.