Logo

‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்!

Category: ஆரோக்கியம்
Published Date
Written by சுரா
Hits: 18940
Vaai Durnattramaa, Bayam Vendaam

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

முருகேசனின் அனுபவம் இப்படி இருக்க, கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னார்:

“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.

நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று.

நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடாதா?’ என்று நப்பாசை. ஆனால், அப்படியும் நாற்றம் போகவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரை நான் சந்திக்க நேரிட்டது.

மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர் ஆயிற்றே, அவரிடம் என் குறையைக் கூறினால், அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன்.

எனக்கு இருக்கும் வாய் துர்நாற்றம் பற்றி அவரிடம் கூறினேன். தாமதிக்காமல் சொன்னார்: ‘தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போவதை நீங்களே உணர்வீர்கள்’என்றார்.

அவர் கூறியதில், அப்போது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும், போகாத துர்நாற்றம், நல்லெண்ணெய்யால் எப்படி போகப் போகிறது என்று கிண்டலாக நினைத்தேன்.

இருந்தாலும், அதையும் செய்துதான் பார்த்து விடுவோமே என்று, மறுநாளில் இருந்தே, ‘ஆயில் புல்லிங்’செய்யத் தொடங்கினேன். பத்து நாட்களில் படிப்படியாக என்னுடைய வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நானே உணர்ந்தேன்.

பதினைந்து நாட்கள் கடந்தபிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! ‘நல்லெண்ணெய்க்கு இப்படியொரு மகத்தான மருத்துவ குணமா..?’

இப்போது நண்பர்கள் என்னுடன் அமர்ந்து, சிரித்த முகத்துடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.

‘வாயில் இருந்த துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று எல்லோரும் கேட்டார்கள்.

நான், ‘ஆயில் புல்லிங்’பற்றி சொன்னேன். அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தார்கள்.

‘நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், இப்போது முழுமையாக நம்புகிறேன். பலனை உண்மையாகக் கண்டபிறகுதான் நல்லெண்ணெய்யின் சிறப்பே எனக்குத் தெரிய ஆரம்பித்தது’என்றேன்.

இதற்கு இடையில், எனக்கு ஆலோசனை கூறிய நண்பர், மருத்துவக் கல்லூரி பேராசிரியரை ஒருநாள் உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். என் வாய் துர்நாற்றம் முழுமையாக பறந்தோடிவிட்ட செய்தியைக் கூறி, அதற்கு மூலகாரணமாக இருந்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.

சந்தோஷ முகத்துடன் என்னைப் பார்த்தார்... ‘நல்லெண்ணெய்யால் வாய் துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று அவரிடமே கேட்டேன்.

அதற்கு, ‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’என்றார்.

இப்படி, மிகக் குறைந்த செலவில் குணப்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்யின் சிறப்பு தெரியாமல், இவ்வளவு காலமும் இருந்திருக்கிறேனே!

எனக்கு நல்லெண்ணெய் வைத்தியத்தை அறிமுகம் செய்த பேராசிரிய நண்பருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறி முடித்த சுந்தர்ராஜன் முகத்தில் வாய்கொள்ள முடியாத அளவு சிரிப்பு ரேகை படர்ந்திருந்தது!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.