Logo

அனுபவம் பலவிதம்

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 6483
rasikkathane azhagu-anupavam-palavitham

னிதராய் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும், பிறந்தது முதல் கடைசி மூச்சு உள்ள வரை கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.

தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் பொழுது எதுவுமே புரியாத அனுபவம். அப்போது கிடைக்கும் அனுபவம் அழுகை மட்டுமே. அழுதால் பால் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுவது ஆரம்ப அனுபவம்.

அழுதால் தன்னை அம்மா தூக்கி வைத்துக் கொள்வாள் என்பது அடுத்த கட்ட அனுபவம். பிறக்கும் பொழுது அழும் மனிதர்கள், இறக்கும் பொழுதும் அழுகிறார்கள்.

'பிறக்கும்போதும் அழுகின்றான்,

இறக்கும்போதும் அழுகின்றான்

என்று கவிஞர் பாடினார்.

நம் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.

சில அனுபவங்கள் நம்மை புண்படுத்தும். சில அனுபவங்கள் நம்மை பண்படுத்தும். சில சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும்.

'அவனுக்கென்னப்பா... சுகவாசி! அனுபவிக்கிறான் என்று சொல்வதுண்டு.

'என்னோட கஷ்டத்தை அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்...

'அவர் அனுபவசாலிப்பா. அவர் சொல்றதைக் கேளு.

'என்னோட அனுபவத்துக்கு உன்னோட வயசு.

'வாழ்ந்தா அவனைப் போல அனுபவிச்சு வாழணும்டா...

'அனுபவி ராஜா அனுபவி

'உன் கூட வாழ்ந்த அனுபவம் போதும்

அனுபவம் என்கிற வார்த்தை மனிதர்களிடையே வெவ்வேறு அர்த்தத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றன.

ஒரு ஆண் அல்லது ஒரு பெண், பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடையும்பொழுது நிலை தடுமாறி. கலங்குவது ஒரு சிக்கலான அனுபவம். தன்னை சுதாரித்துக் கொண்டு 'இனி என்ன செய்யலாம்' என்று சிந்தித்து செயல்பட்டு அந்த சிக்கலில் இருந்து விடுபடுவது தைரியமான அனுபவம்.

'ஐயோ நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே... இனி நம் கதி... அதோகதிதான் என்று தானே ஒரு தவறான முடிவிற்கு வந்து திரும்ப மீள முடியாத சூழ்நிலைக்கு ஆளாவது கோழைத்தனமான அனுபவம்.

பெற்ற பிள்ளைகள் நல்ல விதமாக வளராமல், தீய வழிகளில் மனதை செலுத்தி, சரியாக படிக்காமல், ஊர் சுற்றிக் கொண்டிருந்தால்... அதற்காக மனம் கலங்கி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் பயம் கொள்வது ஒரு அனுபவம். பிள்ளைகள், தங்கள் எதிர்காலம் தங்கள் உயர் கல்வியில்தான் அடங்கியுள்ளது என்று அறிந்து அவர்களே முயற்சி எடுத்து படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பது ஒரு அனுபவம்.

சதா சர்வ காலமும் பிள்ளைகளை  'படி, 'படி என்று நச்சரித்து அவர்களுக்கு படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படும்படியாக அறிவுரை என்ற பெயரில் அறுப்பதும், வறுத்து எடுப்பதும் ஒரு அனுபவம். கல்லூரிக்கு சென்ற 'தங்கள் மகள் வகுப்பிற்கு போகாமல் திரையரங்கிற்கு சிநேகிதிகளுடன் போகிறாளோ' அல்லது 'பையன்களுடன் சுற்றுகிறாளோ' என்று அவநம்பிக்கையுடன் கவலைப்படுவது ஒரு அனுபவம்.

'ட்யூஷனே வேண்டாம் அம்மா' என்று கூறி, தானாகவே நன்றாகப் படித்து நிறைய மார்க்குகள் வாங்கும் மகனை / மகளை பார்த்து தாய் அடைவது அளவிட முடியாத மகிழ்ச்சி அளிக்கும் அனுபவம்.

ஏகப்பட்ட பணம் கொடுத்து ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வாத்யாரை வைத்து ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தும்... கவனக் குறைவாலும், படிப்பில் நாட்டமின்மையாலும் மகன் / மகள் மிகக் குறைந்த மார்க்குகள் வாங்கும் பொழுது மகள் / மகன் மீது சுடு சொற்களை வீச வைக்கும் ஆத்திரமான அனுபவம்.

'என் மகள் என்னிடம் எதையும் மறைக்க மாட்டாள், என்னிடம் அனுமதி பெறாமல் எங்கும் போக மாட்டாள்' என்று மிக்க நம்பிக்கை வைப்பது ஒரு அனுபவம்.

புத்திமதி கூறும் பெற்றோரை தங்களை நன்மைக்காகத்தான் கூறுகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல், அவர்கள் புகட்டும் புத்திமதிகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட பிடிக்காத பிள்ளைகளின் அனுபவம் அறியாமை நிறைந்த அனுபவம்.

'என் மீதுள்ள அக்கறை காரணமாகத்தான் என் அம்மா எனக்கு அறிவுரை கூறுகிறார், என் அப்பா எனக்கு ஆலோசனை வழங்குகிறார் என்று புரிந்து கொண்டு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து வந்த உடனே அம்மாவிடமோ அப்பாவிடமோ அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் மறைக்காமல் கூறுவது சில பிள்ளைகளின் ஒளிவுமறைவற்ற மனப்பான்மையை வெளிப்படுத்தும் அனுபவம்.

பையன்களுக்கு வேறு வித அனுபவம். அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் ஊர் சுற்றுவது. அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து காசை எடுப்பது... எடுப்பது என்ன... திருடுவது... இரவு முழுக்க பெண் சிநேகிகளுக்கு மெஸேஜ் அனுப்புவது...  படிப்பைத் தவிர அத்தனையையும் செய்து விட்டு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கல்லூரி முதல்வரிடமோ அப்பாவிடமோ மாட்டிக் கொண்டு முழிப்பது ஒரு அனுபவம்.

நல்லதையே நினைத்து நல்லதையே செய்து நன்மைகளை அடைவது நல்லதொரு அனுபவம். தீமைகளை மட்டுமே நினைத்து, பிறர்க்கு தீங்கு செய்தபடியே வாழும் மனிதர்களுக்கு, காலம் கடந்து அவர்கள் செய்த தவறுகளை உணர்வது அவர்களை வருத்தத்தில் மூழ்க வைக்கும் அனுபவம்.

வாழ்க்கையில் 'எது வந்தாலும் ஒரு கை பார்த்துடறேன். என்னோட அனுபவத்துக்கு இதெல்லாம் தலைமுடிக்கு சமம்' என்று சிலர் வீறாய்ப்பாய் பேசுவது வீரமான அனுபவம்.

எழுபத்தைந்து வயது நிறைந்த ஒரு முதியவர், 'என்னோட இந்த எழுபத்தஞ்சு வருஷத்து அனுபவத்துல...' என்று ஆரம்பித்தார்கள் என்றால், அவர் ஆரம்பித்த உடனேயே ஆள் அரவம் இன்றி அங்கிருந்து அகன்றுவிடத் தோன்றும்.

சில பெரியவர்கள், தங்கள் அனுபவங்களைப் பற்றி சுவராஸ்ய மான தகவல்களை கூறும்பொழுது, நமக்கு அந்த அனுபவங்களில் இருந்து அநேக பாடங்கள் கிடைக்கும். அறிவுரைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

கடவுள் பக்தியுடன் தெய்வீக சிந்தனையில் ஈடுபடுவோர்க்கு ஒரு அமைதியான அனுபவம். கடவுளை நம்பாமல் நாத்திகம் பேசும் மனிதர்களின் பேச்சில் வேறுவித அனுபவம்.

இரவில், நித்திரை அன்னை தானாக நம் இமைகளை உறங்க வைப்பது ஒரு நல்ல தூக்கத்தின் அனுபவம். தூக்கமே வராமல் இரவு முழுவதும் தவித்து, படுக்கையில் புரண்டபடி கஷ்டப்படும் பொழுது தூக்கமின்மை ஒரு துன்பமான அனுபவம்.

அலுவலகங்களில் வேலை செய்யும் ஒருவர் அல்லது ஒருத்தி, நேர்மையாக தன் பணிகளை செய்து வருவதால் அதிகாரிகளால் பாராட்டப்படும் பொழுது, உழைப்பிற்கேற்ற பாராட்டுகளை பெறும் அனுபவம்.

குறித்த நேரத்தில் கொடுத்த பணிகளை முடிக்காமல் சோம்பேறித்தனமாய் நாட்களை நகர்த்திவிட்டு பின்னர், உயர் அதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாகி, அவமானப்படுவது ஓர் அனுபவம்.


ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆண் அல்லது பெண் இருவரும் தங்கள் மாணவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, கல்வியை அளிக்கும் பொழுது அவர்களின் சேவை உணர்வு ஒரு உன்னத அனுபவம். இதற்காக அவர்களுக்கு 'நல்லாசிரியர் விருது கிடைக்கும் பொழுது அதற்குரிய மகிழ்ச்சியை அனுபவிப்பது சந்தோஷமான அனுபவம்.

அதே சமயம், ஆசிரியர் பணியில் இருக்கும் சிலர், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆசிரியர் பணிக்குரிய மகத்துவத்தை மறந்து மாணவர்களின் நலன் கருதாமல் சுய நலமாக இருப்பது, தேவையற்ற அனுபவம்.

கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்க்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் அவமதிப்பதும், பின்னாளில் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பதும் மாணவர்களின் அனுபவம். காலம் கடந்து தவறை உணரும் அனுபவம்.

மகன் அல்லது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது, தான் ஒருவரை அல்லது ஒருத்தியைக் காதலிப்பதாக ஒரு அதிர் வெடிச் செய்தியைக் கூறுவது பெற்றோருக்கு அச்செய்தி அளிக்கும் அதிர்ச்சியான அனுபவம்.

தங்கள் மகள் காதலிக்கும் நபர், சரியான நபர் இல்லை என்று தெரியவரும்பொழுது ஏற்படும் அனுபவம் ஏமாற்றத்திற்குரியது. அவனைப் பற்றிய தகவல்களை மகளிடம் சொல்லி, அவனைத் தவிர்க்கச் சொல்லி அறிவுரை கூறும் பொழுது, அதை அவள் ஏற்றுக் கொண்டு, மனம் மாறினாள் எனும்பொழுது ஏற்படுவது நிம்மதியான அனுபவம்.

அதற்கு மாறாக மகள், அவளது காதலனை கண்மூடித்தனமாக நம்பி 'அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பொழுது பெற்றோர்க்கு ஏற்படுவது ஒரு கலக்கமான அனுபவம்.

காதலித்தவனையே  கணவனாக அடையும் பெண்ணுக்கு இந்த உலகையே தன் உள்ளங்கைக்குள் அடக்கி விட்ட எல்லையற்ற மகிழ்ச்சி கிடைக்கும் அனுபவம். இது ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படும் அனுபவம்.

காதல் கை கூடாத நிலை ஏற்பட்டுவிட்டால், உயிரைக் கொடுத்து காதலித்து வந்த காதலர்கள், 'உயிரை மாய்த்துக் கொண்டு உலகை விட்டே போய்விடலாமா?!' என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவது, எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் அனுபவம்.

காதலனோடு / காதலியோடு ஊர் சுற்றும்போது உல்லாஸமான அனுபவம். தெரிந்தவர்கள் யாராவது பார்த்து, வீட்டில் சொல்லிவிட்டால், மாட்டிக் கொண்ட அனுபவம்.

'அவளோட அழகை அனுபவிச்சே தீருவேன்' என்று முறையற்ற சபதம் போடுவார்கள் சிலர். 'அவள் அழகானவள், அடக்கமானவள், அன்பானவள்... அவளை முறைப்படி மனைவியாய் அடைய அவளது பெற்றோரிடம் பேசி அனுமதி பெறுவேன்' என்று சிலர் கண்ணியமாக பேசுவார்கள். இது கௌரவமான அணுகுமுறை அனுபவம்.

காதலில் ஓர் அனுபவம். அந்தக் காதல், கல்யாணத்தில் முடிந்தால் கலகலப்பான சந்தோஷ அனுபவம்! அந்தக் கல்யாணம் முறிந்துவிட்டால் கசப்பான அனுபவம். விவாகரத்து பெற்று, அதன் பின் வாழும் வாழ்க்கை கஷ்டமான அனுபவம். கணவனை இழந்த பெண்ணுக்கு துக்க அனுபவம். மறுமணம் புரிந்து கொண்டால்... அது ஒரு அனுபவம். மனைவியை இழந்த ஆணுக்கு, அவன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், வேதனையான அனுபவம்.

'வரதட்சணை கேட்க மாட்டோம், உங்கள் மகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டதைக் கொடுங்கள்' என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் பொழுது, பெண்ணைப் பெற்றோருக்கு பணம் புரட்டும் பாரம் இல்லை எனும் நிம்மதியான அனுபவம். ஆனால், அளவிற்கதிகமாக வரதட்சணை கேட்டு நெருக்கும்பொழுது 'ஐய்யோ... இத்தனை பணத்திற்கு என்ன செய்வது? எங்கே போவது?' என்று தூக்கத்தைக் கெடுக்கும் இரவுகளோடு போராடும் அனுபவம்!

தாங்கள் பார்த்து, நிச்சயம் செய்து மகளுக்கு மணம் முடித்தவன் நல்லவன் இல்லை, தப்பானவன் அல்லது ஏற்கனவே திருமணமாகி ஏமாற்றுபவன் எனும் உண்மையைத் தெரிந்துகொள்ளும் பொழுது பெற்றோருக்கு இதயத்தில் இடி இறங்குவது போன்ற அனுபவம்.

மனைவியாக வாழும்போது, பெண்ணுக்கு ஒரு அனுபவம். அவள் தாயான பின் ஏற்படுவது தாய்மை அனுபவம். மாணவனாக இருந்தவன், ஒருத்திக்கு மணவாளனான பின்னர் ஏற்படுவது மகிழ்ச்சியான அனுபவம்.

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த புது மணப்பெண், அங்குள்ளோரை, குறிப்பாக மாமியாரைப் பற்றி ஒரு 'புரிந்துக் கொள்ளுதல்' ஏற்படும் வரை குழப்பமான மனநிலையில் இருக்கும் அனுபவம்.

அலுவலகம் போயிருக்கும் கணவன் திரும்பி வந்து, 'அவர் சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம்...' அல்லது 'அவருடன் சேர்ந்து சாப்பிடலாம்' என்று அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிக்கு, கணவன் ஆபிஸிலிருந்து விரைவாக வந்துவிட்டான் என்றால் வெகு சந்தோஷமான அனுபவம்.

ஆனால், அலுவலகம் முடிந்த பின்னும் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு கணவன், தாமதமாக வீடு திரும்பினால், காத்திருக்கும் மனைவிக்கு மிக எரிச்சலான அனுபவம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாக இன்றி, இறைவன் கெடுத்த வரமாக அமைந்து விட்டால் தன் விதியை நொந்து கொள்ளும் அனுபவம்.

தங்கள் மகன் அல்லது மகள் பெற்றோர் நினைத்தபடி டாக்டருக்கோ வக்கீலுக்கோ படித்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது பிள்ளைகளுக்கு ஒரு கசப்பான அனுபவம்.

'நான் டாக்டர். ஆகவே நீயும் டாக்டராகத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, பிள்ளைகளின் மனதை காயப்படுத்துவது ஓர் ஆதிக்க அனுபவம்.

பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசி, 'உனக்கு எந்த துறையில் ஈடுபட விருப்பம்? அதற்காக நீ எந்தக் கல்வியை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாய்? என்று தெளிவாகக் கேட்டு, அவர்களின் ஆசைப்படி அவர்களுக்கு வழிகாட்டியாய் உதவிக்கரம் நீட்டும் பொழுது, பிள்ளைகளுக்கு நம்பிக்கை கிடைக்கும் அனுபவம்.

எனக்குத் தெரிந்த ஒரு பிரபல மருத்துவரின் மகள். ஓவியம் தீட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவள். மிக்க திறமை கொண்டவள். மகள், ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடு கொள்வதைக் கண்ட அந்த மருத்துவர், அவளது மனதை மாற்றி, அவளை மருத்துவத்துறை படிப்பில் ஈடுபடுத்தி, ஓவியம் வரையும் கலையையும், அது குறித்த திறமையையும் அறவே மறக்க வைத்தார். மருத்துவக் கல்வி, அது தொடர்பான உயர் கல்வி, மேலை நாட்டுக் கல்வி... என்று தொடர் சங்கிலியாய் பல வருடங்கள் மருத்துவப்படிப்பை படித்து முடித்த அந்தப் பெண், இப்போது அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து, பெருமளவில் சம்பாதித்து வருகிறாள். பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றுவிட்டாலும் ஆத்மார்த்தமான திருப்தி இல்லாமல் இயந்திர கதியான வாழ்முறைக்கு... தான் தள்ளப்பட்டுவிட்டதை நினைத்துப் பார்க்காமல் இருப்பாளா?


திருமணமான ஒரு பெண், கர்ப்பமாகி இருக்கும் பொழுது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக அல்லது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், கனவு காண்பதும் பெண்மையின் பூர்ணத்துவமான தாய்மை அனுபவம். தன் மனதில் எண்ணியபடி பெண் குழந்தை பிறக்காமல் ஆண் குழந்தையாக பிறந்துவிட்டால் ஏற்படுவது ஏமாற்றமான அனுபவம். எதிர்பார்த்தபடியே அவளுக்கு விருப்பமான குழந்தை பிறக்கும் பொழுது அடையும் இன்பம், பேரின்பமான அனுபவம்.

பொது இடங்களில் வழி தவறி போய்விட்ட குழந்தையைக் காணாமல் தாய் தவிக்கும் அனுபவம். குழந்தை கிடைத்துவிட்டால் அவனை உச்சி முகர்ந்து, வாரி அணைக்கும் வாஞ்சையான அனுபவம். சில தாய் அல்லது தகப்பன், குழந்தை கிடைத்த பிறகு 'எங்கேடா போய்த் தொலைஞ்சே... என் கையை பிடிச்சுக்கோன்னு எத்தனை தடவை சொன்னேன்?' என்று குழந்தையை முதுகில் மொத்து மொத்தென்னு மொத்தும் கோபமான அனுபவமும் ஏற்படும்.

குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்தால், குதூகலிக்கும் அனுபவம்! துரதிஷ்டவசமாக குழந்தை இறந்துவிட்டால், கதறி அழும் அனுபவம்.

மாமியார் மெச்சும் மருமகளாக பெயர் எடுக்கும் பொழுது மகிழ்ச்சியான அனுபவம். மாமியாரின் ஏச்சுக்களாலும், ஏடாகூட மான பேச்சுக்களாலும், துன்புறுத்தும் நடவடிக்கைகளாலும் உள்ளம் நொறுங்கும்பொழுது ஏற்படுவது வேதனையான அனுபவம்.

ஒரு கண்ணில் வெண்ணைய்யையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போன்று, தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகளிடத்திலேயே ஒரு பிள்ளைக்கு சிறப்பாகவும், இன்னொரு பிள்ளைக்கு சுமாராகவும் எல்லா விஷயங்களையும் செய்யும் பொழுது பாதிக்கப்படும் பிள்ளைக்கு ஏக்கமான அனுபவம். பெற்றோர்கள் மட்டுமின்றி, மாமியார் - மாமனார் தங்கள் வீட்டில் வாழ வந்துள்ள மருமகள்களிடையே பாரபட்சம் காட்டுவது மிக மிக சங்கடமான அனுபவம்.

விமானமோ, ரயிலோ... பயணத்தின்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு ஊர் போய் சேரவில்லை எனில் வெறுப்பான அனுபவம். பிரயாணத்தின் நடுவழியில் சாப்பிடுவதற்கும். படுத்துக் கொள்வதற்கும் இடமில்லாமல் தவித்து. அதன்பின் ஊர் வந்து சேர்ந்து 'ஐயோ கடவுளே... இந்த மாதிரி அனுபவம் இனி என்னிக்குமே கிடைக்கக் கூடாது' என்று புலம்பும் அனுபவம்.

கடுமையான வெய்யில் அடிக்கும்பொழுது, அந்த உஷ்ணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் வியர்வையில் நனைந்து துன்பப்படும் அனுபவம். பலத்த மழை பெய்தால்... வெளியில் போக இயலாமல், அலுவல்கள் தடைபடும் பொழுது 'இந்த மழை நின்னு தொலையக் கூடாதா' என்று மழைக்கு சாபமிடும் அனுபவம்.

பேனா, க்ரெடிட் கார்ட், ரேஷன் கார்ட்... இது போன்ற முக்கியமான பொருட்களை எங்காவது வைத்து விட்டு, அதைத் தேடும் பொழுது தவியாய் தவிக்கும் அனுபவம். அப்பொருட்கள் கையில் கிடைத்துவிட்டால் 'அப்பாடா... கிடைச்சுடுச்சு' என்கிற நிம்மதியான அனுபவம்.

பத்திரிகைகளுக்காக கதை எழுதி அனுப்பி, அது பிரசுரமாகும் போது பரபரப்பான சந்தோஷம் தரும் அனுபவம். பிரசுரத்திற்கு தகுதி இல்லை என்று கதைகள் திரும்பி வரும்பொழுது ஏமாற்றத்தை அளிக்கும் அனுபவம்.

இது போலவே... திரைப்படத்தில் கதாசிரியராக, வசனகர்த்தா வாக, இயக்குநராக, நடிகர், நடிகையராக வருவதற்கு முயற்சி செய்யும் பொழுது, ஏற்றுக் கொள்ளப்பட்டால் குதியாட்டம் போடும் கொண்டாட்டமான அனுபவம். நிராகரிக்கப்பட்டுவிட்டால் ஆசை, நிராசையாகிப் போன அனுபவம்.

திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது ஏகப்பட்ட நம்பிக்கைகளோடு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். 'தங்கள் படம் நிச்சயம் வெற்றி அடையும், நூறு நாள் ஓடும், வசூலில் சாதனை படைக்கும்' என்ற நம்பிக்கையோடு மிகுந்த சிரமப்பட்டு படத்தை வெளியிடுவார்கள். எதிர்பார்த்தபடி படம் வெற்றி பெற்றால் ஜெயித்துவிட்ட அனுபவம். ஆனால் படம் தோல்வி அடைந்து நஷ்டத்தைத் தழுவினால்... மனம் துவண்டு விடும் அனுபவம்.

நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் 'இந்தப் படம் எனக்கு ஒரு 'ப்ரேக் கொடுக்கும், மறுவாழ்வு அளிக்கும் என்ற மனக் கோட்டையில் காத்திருப்பது நம்பிக்கை நிறைந்த அனுபவம். அந்த மனக்கோட்டை, மண்கோட்டையாக சரிந்து போக நேரிடும்போழுது  'இனி என்ன செய்வது' என்ற தவிப்பில் மனம் கலங்கி, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றால் அவதிப்படும் அனுபவம்.

'அனுபவம் புதுமை... அவனிடம் கண்டேன்...' காதலனை நினைத்து, காதல் கீதம் பாடும் கதாநாயகி, அந்த ஏக்கமான அனுபவத்தை என்னமாய், திரைப்படத்தில் பிரதிபலிக்கிறார்?!

'அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனசிலே அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவி... அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவி...  நாம் காணும் உலகம் கையில் வராத வாலிபம் எதற்காக?.. ' என்று அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஒரு திரைப்படத்தில் பாடி இருந்தார். இந்த 'அனுபவம்' எனும் வார்த்தையையும் உணர்வையும் திரைப்பட பிரிவினர் கூட விட்டு வைக்கவில்லை. அந்தப் பாடல் வரிகளைப் போல் உலகிலுள்ள அழகை அனுபவித்து, மனசிலுள்ள ஆசைகளை அனுபவித்து வாழும் மனிதர்கள் உள்ளனர். இவர்கள் 'எப்படி வேண்டுமானாலும் வாழலாம்' என்று மனம் போன போக்கில் வாழும் ரகத்தை சேர்ந்தவர்கள். அளவுடன் ரஸித்து, நெறிமுறை தவறாமல் அடக்கமான மனதுடன் அழகை அனுபவிப்பவர்களும் உள்ளனர். இவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நேர்மையான கொள்கை உடையவர்கள்.

பிரபல நடிகரான ஒருவர், ஒரு நடிகையுடன் காதல் புரிந்து, அவளை திருமணம் செய்து கொள்வதாக கண்டபடி வாக்குறுதி களை அள்ளி வீசுவார். ஆனால் அவர் திடீரென 'அந்தர் பல்ட்டி அடித்து, 'நட்பு ரீதியாக மட்டுமே பழகினேன் என்று 'ரீல் விடும் பொழுது அந்த நடிகைக்கு 'கிளிசரின் போடமலே வரும் அழுகை ஓர் அவலமான அனுபவம். பொழுது போக்கிற்காக (டைம் பாஸ்) மட்டுமே தன்னுடன் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றினார் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் பொழுது ஏற்படுவது கசப்பான அனுபவம்.

உண்மையாகவே காதலித்து, அந்த நடிகையையே ஊரறிய திருமணம் செய்து, அதன் பின்னரும் மனம் மாறாமல் ஒன்றுபட்டு வாழும் திரை உலக தம்பதிகளின் அனுபவம் திகட்டாத தேன் போன்ற இனிமையான அனுபவம்.

புதிதாக ஒரு தொழிலை துவங்கும் பொழுது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அத்தொழிலைத் தொடங்குபவர், அது தொடர்பான விரிவான விஷயங்களைக் கேட்டு அறிவது ஆர்வம் நிறைந்த அனுபவம்.

'என்னுடைய இந்தத் தொழில் ஜெயிக்கும். எனது நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பொருள், மக்களிடையே நல்லதொரு இடத்தைப் பிடிக்கும்' என்று உறுதி பூண்டு செயல்படுவது நம்பிக்கை அளிக்கும் அனுபவம். நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எதிர்பாராதவை நடைபெறும் பொழுது, கிடைக்கும் அனுபவம், சோர்வு மிகுந்த அனுபவமாகும்.


நம்பிக்கையை நிலை நிறுத்தும்படி அவரது தயாரிப்புகள் மக்களிடையே பிரபலமாகி, அவரது தொழில் கிடுகிடுவென முன்னேறும் பொழுது ஏற்படும் அனுபவம் தன்னம்பிக்கை எனும் அற்புதமான பரிசைப் பெறும் அனுபவமாகும்.

சமூக விரோதிகள், திருடர்கள், குண்டர்கள், கொலைகாரர்கள், கடத்தல் செய்பவர்கள், கற்பழிப்பு குற்றம் புரிபவர்கள்... மோசடி செய்பவர்கள், குழந்தைகளை கடத்தி விற்பவர்கள், இன்னும் பல... குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை காலம் கடக்காமல் உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கும் காவல் துறையினருக்கு, தங்கள் கடமைகளை செவ்வனே செய்து வரும் மனநிறைவான அனுபவம். இதற்கு மாறாக லஞ்சம் வாங்கிக் கொண்டு, குற்றவாளிகளை வெளியில் உலவ விட்டு மேலும் சமூக விரோதிகளை உருவாக்கும் சில அதிகாரிகளுக்கு அவர்கள் மாட்டிக் கொள்ளும் பொழுது ஏற்படும் அவமானமான அனுபவம்.

கணவனை இழந்த கைம்பெண் (விதவை), தன் சுற்றத்தாராலேயே நிந்திக்கப்படுகிறாள். இளக்காரமாக எண்ணி இழிவாக பேசப்படுகிறாள். அவதூறு பேசப்படுவதற்கும் ஆளாகிறாள். இத்தகைய துன்பம் அளிப்பது கொடுமையான அனுபவம். கணவனை இழந்த பின் அவள் வாழ்வதே வீண், அவள் வாழவே கூடாது என்கிற ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் அந்தக் காலம் ஓரளவு மாறிவிட்டது. கணவனின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்திருந்த அந்தப் பெண், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் கௌரவமாக ஒரு உத்யோகம் தேடிக் கொண்டு, சொந்தக் கால்களில் ஊன்றிக் கொண்டு வாழும் துணிவை அவளுக்கு ஏற்படுத்துவது தைரியமான அனுபவம். படித்த பெண்ணாக இருந்தால் தகுதிக்கேற்ற உத்யோகத்தை தேடிக் கொள்வாள். போதுமான கல்வி இல்லாத பெண் எனினும் சுய தொழில் செய்யும் வழிமுறைகளை பின்பற்றிக் கொள்வாள்.

கணவனை இழந்தவர்களை விட கணவனை பிரிந்து வாழும் இளம் பெண்களின் நிலைமை மிக மோசமான அனுபவங்களை அளிப்பதாக உள்ளது. பொருளாதார ரீதியாக கஷ்டப்பட வேண்டிய நிலைமை தவிர கணவன் எனும் ஒரு துணை இல்லாத பெண்ணை, இந்த சமூகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. 'தனியாக வாழும் பெண்தானே இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற தவறான எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இப்படிப்பட்ட நிலைகளைத் தாண்டி, தனக்கென்று ஒரு கௌரவம் கிடைப்பதற்காக போராடும் அனுபவம், எதிர்நீச்சல் போடும் அனுபவம். உள்ளத்திற்குள் போராட்டம். கண்களில் நீரோட்டம் என தடுமாறி நிற்கும் அனுபவம் துயரமானது.

தன்னைவிட அதிகமாக சம்பாதிக்கும் மனைவியின் முன்னேற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மை கொண்ட ஆண்கள், தங்கள் மனைவிக்கு வீசும் வார்த்தை சவுக்குகள் அளிப்பது வலிமிக்க அனுபவம். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு, அவனது தாழ்வு மனப்பான்மை எனும் பேயை ஓட்டுவதற்காக அவள் மேற்கொள்ளும் பொறுமை, மிக மிக கொடுமையான அனுபவம். தாழ்வு மனப்பான்மை எனும் சகதிக்குள் விழுந்துவிட்ட தன் கணவன் செய்யும் கொடுமைகளை சகித்துக் கொண்டு தாய்மை உணர்வோடு, அவனை நல்வழிப்படுத்து வதற்காக அவள் எடுக்கும் நடிவடிக்கைகள், தியாக அனுபவங் களாகும்.

அபலைப் பெண்கள், அனாதைக் குழந்தைகள் ஆகியோர் 'தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா? அடைக்கலம் கிடைக்காதா' என்று ஏங்கித் தவிக்கும் அனுபவம் கொடியது. இவர்களுக்கு அபயம் அளிக்கும் கருணை இல்லங்கள் செய்யும் மகத்தான சேவைகள் புனிதம் நிறைந்த அனுபவமாகும்.

உடலுக்கு ஏதாவது வியாதி ஏற்பட்டுவிட்டால் உடனே மருத்துவரிடம் செல்கின்றோம். எக்ஸ்ரே, ஸ்கேன்... அது... இது என்று ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார் மருத்துவர். அந்தப் பரிசோதனைகளின் ரிப்போர்ட்களை மருத்துவரிடம் காட்டுவதற்காக மருத்துவமனை சென்று, காத்திருக்கும் பொழுது... 'டாக்டர் என்ன சொல்வாரோ...  ஏதாவது பயங்கரமான கொடிய நோய் என்று சொல்லிவிடுவாரோ...' என்று பலவிதமாக எண்ணிக் கலங்குவது அடி வயிற்றில் எழும் திகிலான அனுபவம்.

மருத்துவர், ரிப்போர்ட்களை பார்த்த பிறகு 'உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சத்துக் குறைவு மட்டுமே. மாத்திரைகளால் சரி பண்ணிவிடலாம் என்று அவர் கூறும் பொழுது ஏற்படும் அனுபவம், மனசு லேஸாகி வானில் பறப்பது போன்ற நிம்மதியான அனுபவம்.

இதற்கு மாறாக, மருத்துவர் 'உங்களுக்கு இந்த குறிப்பிட்ட வியாதி வந்துள்ளது. இதை மேஜர் அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்றோ அல்லது கேன்ஸர் போன்ற கொடுமையான வியாதி என்று தயங்கியபடி கூறினால் மயங்கி விழாத குறைதான். இத்தகைய சந்தர்ப்பத்தில் மனம் படும் பாடு... அது... விவரிக்க இயலாத துன்பமான அனுபவம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளிடம், மருத்துவர் 'இப்படி படுத்தே கிடக்கக் கூடாது. எழுந்திருச்சு நடக்க வேண்டும்' என்று நோயாளியின் நன்மைக்காக ஆலோசனை கூறுவார். ஆனால் உடல் உபாதையில் அவதிப்படும் நோயாளியோ 'ஐய்யோ... இந்த கொடுமையான வலியில... எழுந்திருச்சு நடக்கச் சொல்றாரே... 'என்ன கொடுமை ஸார் இது?' என்று மனதிற்குள் புலம்பும் அனுபவம் வலி மிக்கது.

செய்த தவறுக்கு ஆசிரியரோ அல்லது மேலதிகாரியோ மற்ற ஊழியர்கள் முன்பு தட்டிக் கேட்டு வன்மையாகக் கண்டிக்கும் போது ஏற்படும் அவமானத்தில் ஏற்படுவது கூனிக் குறுகிப் போகும் அனுபவம்.

சுமார் நூறு பேர் அடங்கிய படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் அனைவரும் கவனிக்கக் கூடிய விதத்தில் இயக்குநர், உதவி இயக்குநர்களுள் ஒருவரை வாய்க்கு வந்தபடி வசை பாடும் பொழுது மனதிற்குள் சுருங்கிப் போகும் அனுபவம் தரும் அவமானம் சொல்லில் விளங்காது.

அத்தகைய அனுபவங்களைக் கடந்து, ஒரு வெற்றிகரமான இயக்குநராக உருவாகி, திரைப்பட உலகமே திரும்பிப் பார்க்கும் விதமாக ஒரு முதன்மையான இடத்தை பெறும் பொழுது, அந்த அனுபவம் அளிக்கும் ஆனந்தம், ஆகாயம் போன்றது.

பிள்ளைகளை பெற்றெடுக்கும் போது மகிழ்ச்சி அடைந்த அம்மா. அப்பா இருவரும் தங்கள் பிள்ளைகளை உயிருக்கு உயிராக பாசம் செலுத்தி, அவர்களை வளர்க்கின்றார்கள். தங்கள் உடல் பலத்தாலும், நலத்தாலும் உழைத்து உருவாக்கியவர்கள் அவர்கள். மகன் அல்லது மகள் வளர்ந்து, படித்து முடித்து தங்களுக்கென்று ஒரு அந்தஸ்தை அடைந்து, சுயமாக சம்பாதிக்கும் நிலைமையில், முதுமையில் நலிவுற்ற பெற்றோரைப் பாதுகாக்காமல் அவர்களைத் தங்கள் முதுகில் சுமக்கும் சுமையாகக் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளின் அலட்சியப் போக்கினால், உடல் தேய உழைத்து, பிள்ளைகளை முன்னேற்ற ஏணியில் ஏற்றிய பெற்றோர், உள்ளத்திற்குள் சரிந்து போகிறார்கள். எதிர்பார்ப்புகள் அளித்த இந்த ஏமாற்றங்கள் அவர்களுக்குக் கொடுத்த அனுபவம் ஒருவித விரத்தியை அளிக்கும் அனுபவமாகும்.


'ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தால் முதுமை காலத்தில் மேலும் உடல் நலிவுறுவார்கள். எல்லா பிள்ளைகளும் இவ்விதம் நடந்து கொள்வது இல்லை. தங்களது இன்றைய உயர்ந்த நிலைக்கு பெற்றோரின் அன்பும், அயராத உழைப்பும், அக்கறையும் மட்டுமே காரணம் என்று உணரக் கூடிய பிள்ளைகளும் உள்ளனர்.

'என் அப்பாவிடமிருந்து நான் இதைக் கற்றுக் கொண்டேன். அவர் வழி காட்டிய பாதையில் சென்றபடியால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன்..., 'என் அம்மாவிடமிருந்து எனக்குக் கிடைத்த பாடங்கள் மூலமாகத்தான் நான் பல்வேறு துறையிலும் திறமை மிக்கவளாக உருவாகியுள்ளேன் என்று அம்மா... அப்பா புகழ் பாடுவது மட்டுமல்ல... அவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை பேணிக் காப்பது, அவர்கள் விரும்பியவற்றை அளிப்பது போன்ற சேவைகளை செய்து வரும் பிள்ளைகளும் ஏராளமாக உள்ளனர். பெற்றோருக்கு, 'பிள்ளைகள் தங்களை கவனித்துக் கொள்கின்றனர். தங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்' என்ற சந்தோஷம் தரும் அனுபவம் அதி அற்புதமானது.

'சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி...' பெற்று வளர்த்த பிள்ளைகள் தன்னை விலக்கி வைக்கும்பொழுது தள்ளாத வயதிலுள்ள தகப்பனுக்கு  தாங்கொணாத் துயரமளிக்கும் அனுபவம்.  அதே தகப்பன், தன் நிலை தடுமாறாமல் 'யாரை நம்பி நான் பிறந்தேன்? போங்கடா போங்க' என்று தைரியமாக வாழும் அனுபவம், வைராக்கியமான அனுபவமாகும்.

தேசத்தின் பாதுகாப்பிற்காக தன் உயிரை நீத்தான் மகன் என்ற செய்தி கேட்ட தாய், அவனது உயிர்த் தியாகத்தால் உவகை கொள்கிறாள். தன் வயிற்றில் தோன்றிய மகன், 'பாரதத் தாயின் பாதுகாப்பிற்காக உயிர் உள்ள வரை உழைத்தான் என்கிற எண்ணம் தரும் அனுபவம் பெருமிதமானது. மகனை இழந்துவிட்ட துயரம் இதயத்தில் வியாபித்திருந்தாலும் அவனது தியாகம் அவளுள் ஒரு தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் புனிதமான அனுபவமாகும்.

கோயில் திருப்பணிக்கு அல்லது சேவா ஆஸ்ரமங்கள் அமைத்து நடத்துவதற்காக நன்கொடை கேட்பதற்காக பலரிடம் போகிறார்கள் நல்ல மனம் படைத்தவர்கள். நன்கொடை கேட்பவர்களுக்கு எல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் மரியாதை கிடைப்ப தில்லை.

'நன்கொடை' என்ற பெயரில் பணத்தை வாங்கி இவன் அல்லது இவள் என்ன செய்கிறாறோ' என்று சந்தேகப்பட்டு அவமரியாதை யாகப் பேசி திருப்பி அனுப்பப்படும் பொழுது ஏற்படும் அவமான உணர்வு, தனி ஒரு மனிதப் பிறவியின் தன்மானத்தை சுண்டி இழுக்கும் அவஸ்தையான அனுபவமாகும்.

அந்த அவமானத்தைக் கூட வெகுமானமாகக் கருதி, வேற்றிடம் நாடி பலரிடம் நன்கொடை கேட்டு சேவை செய்யும் பொழுது கிடைக்கும் சேவை மனப்பான்மை அடங்கிய அனுபவம் அலாதியானது.

'தாழ்ந்தாலும் ஏசும், வாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இதுதானடா என்று கவிஞர் பாடினார். வாழ்வையும், தாழ்வையும் சமநோக்குப் பார்வை பார்க்கும் மனிதர்கள் மிக சொற்பமே. ஆனால் வாழ்வை பெரிதாக நினைக்கும் இயல்பு உடையவர்கள், தாழ்வை ஒரு பொருட்டாக கருதாமல் நல்வழியில் வாழ்வின் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது அந்த அனுபவம், நிலவு போன்ற குளுமையை அளிக்கும் இனிமையான அனுபவம்.

இளகிய மனம் கொண்டவர்களை புரிந்த கொள்ளாமல் அவர்களை இளிச்சவாயர்களாக நினைத்து உதாசீனம் செய்யும் துர்க்குணம் கொண்டவர்களின் தீய குணத்தினால் புண்படும் அனுபவம் பரிதாபத்திற்குரியது. அதே சமயம், கல்நெஞ்சம் கொண்ட சிலரது உள்நோக்கை அறியாமல் அவர்களது செயற்கையான பேச்சை உண்மை என நம்பி ஏமாந்து போவது கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் விழும் அனுபவத்தைப் போன்றது.

கூடவே இருந்து குழி பறிக்கும் உறவினர்கள், நண்பர்களாய் நடிக்கும் மனிதர்கள் ஆகியோரால் நாம் சேதம் அடையும் பொழுது 'யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்... பூமியில் யாவும் வஞ்சம்... என்று பாடத் தோன்றுவது வாழ்வில் சலிப்படைய செய்யும் அனுபவம்.

எதுவுமே தெரியாத போதும், எல்லாம் தெரிந்தது போல் பேசி, சுய பெருமையை சதாசர்வமும் பறை சாற்றிக் கொண்டிருப்பவர் களின் மனப்பான்மை, அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பரிகாசமாய் சிரிக்க வைக்கும் அனுபவமாகும்.

உண்மையிலேயே எதுவும் தெரியாதவர்கள், நம்மிடம் வந்து வெளிப்படையாக அதை ஒப்புக் கொண்டு நம்மிடம் கேட்கும் பொழுது அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோமே, அப்போது நம் மனதிற்கு கிடைக்கும் அனுபவம் உள்ளத்திற்கு நிறைவு அளிக்கும் அனுபவம்.

உறவினர்களானாலும் சரி, சிநேகிதர்கள், சிநேகதிகள் ஆனாலும் சரி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்றாலும் சரி, கணவன், மனைவி உறவு என்றாலும் சரி... ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் ஏற்படும் அமைதியான அனுபவம் போல வேறு எதுவும் கிடையாது.

'இது எனக்குத்தான்... இதை நான் தரமாட்டேன், இந்த வாய்ப்பை நான் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக முரண்டு பிடிக்கும் பொழுது, அங்கே மனித நேயம் சிதிலம் அடைகிறது. இது குறித்த அனுபவம் உள்ளத்தில் உறுத்தும் அனுபவமாக மட்டுமல்ல... உறவுகளே அற்றுப் போகும் நிலைமையை உருவாக்கி அந்த நிலைமையில் நாம் அவதிப்படும் அனுபவமும் நேரிடுகிறது.

தேவையற்ற முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுத்தும் கஷ்டமான அனுபவங்கள் இதயத்தில் இன்னலை உருவாக்கும் அனுபவங்கள். பொறாமை, புறங்கூறுதல், பிறரது முகத்திற்கு முன் ஒன்று பேசுவது, முதுகுகிற்கு பின் வேறு பேசுவது, கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவது, இழிவாக பேசுவது, நிந்தனை செய்வது, தவறாக புரிந்து கொண்டு வீணாக வாதாடுவது போன்ற தீய செயல்கள், மனிதர்களின் மனதை நோகடிக்கும் அனுபவங்களை அள்ளித் தருகிறது.

நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், பற்பல உயர்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளும் அனுபவத்தை அளிக்கிறது.

நல்லவர்களையும், நல்ல விஷயங்களையும் பாராட்டும் பெருந்தன்மையான பண்பு, பாராட்டு பெறுபவர்களுக்கு மேலும் மேலும் ஊக்கத்தை அளிக்கும். இது அவர்களுக்கு வளர்ச்சியை நோக்கி நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அப்போது அவர்கள் அடையும் அனுபவம், மிகுந்த ஆனந்தத்தை அளிக்கக் கூடிய அனுபவமாகும்.

பிறருக்கு உதவி செய்யும் பொழுது ஏற்படும் அனுபவம் தன்நிறைவை அளிக்கிறது. 'நீ என்ன எனக்கு உதவுவது... நான் கேட்டேனா?...  என்று ஆணவமாக பேசி, நம் உதவிகள் நிராகரிக்கப்படும் பொழுது அத்தகைய அனுபவம், உள்மனதை ஊடுருவித் தாக்கும் அனுபவமாகும்.

நினைப்பதெல்லாம் நிறைவேறி, நிம்மதியான வாழ்வு கிடைத்தால் மகிழ்ச்சியான அனுபவம். நினைத்ததற்கு நேர்மாறக, அனைத்துமே நடந்தால் 'போதுமடா சாமி' என்று அலுத்துக் கொள்ளும் அனுபவம்.


சில அனுபவங்கள் ஆனந்தத்தை அளிப்பவை, சில அனுபவங்கள் ஆறாத துயரத்தை அளிப்பவை, பிறக்கும் பொழுது ஓர் அனுபவம், வளரும் பொழுது ஒரு அனுபவம், வாழும் பொழுது ஒரு அனுபவம். படிப்படியாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அடையும் அனுபவங்கள் ஏராளம். தன்நிறைவை அளிப்பவை, தன்மானத்தைத் தகர்ப்பவை, நன்மை அளிப்பவை, தீமை அளிப்பவை, சிகரத்தின் உச்சியில் ஏற்றுபவை, அதல பாதாளத்தில் தள்ளிவிடுபவை, உயர் குணங்களை அளிப்பவை, அவற்றை அழிப்பவை... இவ்விதம் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் பலவிதம். சில அனுபவங்கள் சீர் படுத்தும், சில அனுபவங்கள் சீர் கெடுக்கும். அனுபவங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மைகளை மட்டுமே மனதில் தேக்கி, தீமைகளை அறவே நீக்கி வாழ்ந்தால் நல்ல அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

'பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்... பாடல்கள் பலவிதம் விதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...' என்று பாடினார் கவியரசு கண்ணதாசன். இது போல்தான் அனுபவங்களும் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு மனிதருக்கு ஒரு அனுபவமா கிடைக்கிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கின்றன.

உயிர் தோன்றியது முதல் உயிர் பிரியும் வரை கிடைக்கும் அனுபவங்கள் எண்ணற்றவை. நல்ல அனுபவங்கள் மட்டுமல்லாது சில தீமை பயக்கும் அனுபவங்களால் கூட நம்மை நாம் திருத்திக் கொள்கிறோம். மாற்றிக் கொள்கிறோம். அனுபவித்தால்தான் தெரியும் என்று அடிக்கடி கூறுகிறோமே அது இதுதான்.  அனுபவங்கள் யாரையும் புண்படுத்தாமல், நம்மை பண்படுத்தட்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.