பெண் மென்மையானவள். அவள் தன் அன்பை மிக மென்மையான வழிகளில் வெளிப்படுத்துவாள். சாந்தமாகப் பேசுபவள் பெண். எந்த விஷயத்தையும் எடுத்த எடுப்பிலேயே கண்டிப்பாக பேசாமல், தன்மையாகப் பேசும் பழக்கமும், இயல்பும் உடையவள் பெண். இந்தக் காரணங்களால் அவள் வலிமை யற்றவள், பலம் குறைந்தவள் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த மதிப்பீடு சரியல்ல. தனக்கு ஒரு பிரச்சனை, கஷ்டம், தேவை என்று வரும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு அவள் விஸ்வரூபம் எடுக்கிறாள். விண்ணை எட்டும் வெற்றியையும் அடைகிறாள்.
சட்டென்று மனம் உடைந்து, மடை திறந்த வெள்ளம் போல் அழுதுவிடும் குணம் கொண்டவள் பெண். ஆனால் அதே பெண், தன் கண்ணீரை சுண்டி எறிந்து விட்டு எழுந்தாள் என்றால் அவளுக்குள் பிறக்கும் வீரமும், தைர்யமும் கணக்கிலடங்காதவை!
கண்ணீர் சிந்துபவளும் பெண்! தன்நிலை சிந்தித்து செயல்படுபவளும் பெண். பெற்ற மகள் கூட, தன் தகப்பனின் முதுமைப் பருவத்தில் அவனுக்குத் தாயுமானவளாகி அவனைத் தாங்கிக் கொள்கிறாள். "என்னைப் பெத்த அம்மா" என்று தன் மகளை தாயாகப் போற்றும் தகப்பன்கள் இருக்கிறார்கள். பெண்கள், முதலில் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள். அதன் பின்னரே அறிவு பூர்வமாக சிந்திப்பார்கள். அதனால்தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றனர்.
அன்பால் மட்டுமே தன் குடும்பத்தையும், உறவுகளையும், நட்பையும் ஆள நினைப்பவள் பெண். வம்புகளையும், வழக்குகளையும் மிக தூரத்தில் தள்ளி வைத்து சுமுகத்தையும், சுபிட்சத்தையும் வரவேற்பவள் பெண். விதிவசத்தால் கயவனான கணவன் அமைந்து விட்டால், அவனைத் திருத்துவதற்காக அன்பான வழிகளைப் பின்பற்றி, பொறுமை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துவாள். அறிவுரைகள் கூறுவாள். அவனை நல்லவனாக்குவதில் அவள் வல்லவளாகத் திகழ்வாள்.
அப்பாவின் கண்டிப்பும், கடுமையான மொழிகளும் ஒரு தவறான பாதையில் செல்லும் மகனைத் திருத்துவதை விட, அம்மாவின் மென்மையான பேச்சும், கெஞ்சிப் பேசும் தன்மையும் விரைவில் திருத்தும். சொல் அம்புகளை விட செல்லமான அன்பு மொழிகளை நம்புபவள் பெண்.
முன் ஒரு கால கட்டத்தில், குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு, குடும்பமே தன் உயிராக, உலகமாக மதித்து, அந்தக் கோட்டையில் பாசம் எனும் செங்கோலால் செம்மையாக குடும்பம் நடத்தி வந்தாள் பெண். அதைத் தவிர அவளுக்கு வேறு உலகமே தெரியாது. தன் கணவன் கொண்டு வரும் பணத்தில் கட்டும், செட்டுமாய் கெட்டிக்காரியாக குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்வாள். தன்னுடைய உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும் தன் கணவன் மற்றும் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தி குடும்பத்தை மேம்படுத்துவாள். உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. எனவே அதிக எடை போட்டுவிடாமல் அளவான எடையுடன் ஆரோக்கியமாக இருந்தாள்.
கூட்டுக் குடும்பம் நடத்தும் சூழ்நிலையில், கணவனை சேர்ந்தவர்களுக்கும் சேவை செய்து, உதவி செய்து வந்தாள். வீட்டை மட்டுமே கவனிக்க வேண்டியதால் அன்றைய பெண்மணிக்கு அளவான வேலைகள், தேவைப்பட்ட ஒய்வு, மன அமைதி அனைத்தும் கிடைத்தன. கணவன், அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் முன்பு அவனுக்குப் பிடித்ததை சமைத்து வைத்து, குழந்தைகளுக்குத் தேவையானதையும் செய்து வைத்து தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, கணவனுக்காகக் காத்திருப்பாள். அந்த காத்திருத்தலே ஒரு சுகமாக உணர்ந்து அகமும், முகமும் மலர காத்திருப்பாள். கூட்டுக் குடித்தனமோ தனிக் குடித்தனமோ பெண்களின் அன்றைய நிலைமையில் அனைத்து விஷயங்களுமே திறம்பட இருந்தன.
ஆனால், அன்றைய நிலைமை மாறி, இன்றைய நிலைமையில்? பெண்தான் எத்தனை பாடு பட வேண்டியுள்ளது? பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு அவர்களின் வாழ்நிலையே முற்றிலும் மாறிவிட்ட சூழ்நிலை ஆகிவிட்டதே!
காலையில் எழுந்து காலை உணவு சமைத்து, மதிய உணவை தனக்கும், தன் கணவன், பிள்ளைகளுக்கும் சமைத்து டப்பாவில் அடைத்து வைக்க வேண்டிய பணியை முடிப்பதற்குள் எத்தனை சிரமம்? ஒரு நாளாவது காலை காபியை நிதானமாக ரஸித்து, ருசித்து குடித்திருப்பாளா?
ஒரு பிள்ளை யூனிஃபார்ம் கேட்டு குரல் கொடுக்கும். இன்னொரு பிள்ளை ஸாக்ஸ் கேட்டு குரல் கொடுக்கும்.... கணவனோ அது எங்கே? இது எங்கே என்று கேட்டு குரல் கொடுப்பான். சமையலில் ஈடுபட்டிருந்தாலும் இதையெல்லாம் தனி ஒரு ஆளாய் சமாளிப்பாள். அவள் அந்த வேலை, இந்த வேலை என்று பறந்து பறந்து செய்ய, நேரமோ அவளை விட வேகமாய் இறக்கை கட்டிப் பறக்கும்.
அனைவரையும் அனுப்பிவிட்டு அவள் தனது அலுவலகம் புறப்படும் பொழுதுதான் அவளுக்கு காலை உணவு எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவிட்ட விஷயம் நினைவிற்கு வரும். 'இரண்டு இட்லியை அவசரமாய் விழுங்கலாமா' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் 'பைக்'கை கிளப்பியபடியே கணவன் கத்துவான், 'என்ன வர்றியா.... ஆட்டோல போய்க் கிறியா?' என்று.
'ஐய்யோ... ஆட்டோவா? ஆட்டோக்காரரிடம் பேசி முடித்து நான் கிளம்பி ஆபிஸ் போவதற்குள் ஆபிசுக்கு லேட் ஆயிடுமே' என்ற எண்ணத்தில் காலை உணவை சாப்பிடாமலே வாடிய வயிறுடன் ஒடிச் சென்று கணவனின் 'பைக்'கில் ஏறிக் கொள்வாள்.
ஆபிஸிலோ? அந்த வேலை... இந்த... வேலை... என்று ஏகப்பட்ட வேலைகள்! உடல் உழைப்பிற்கு அதிக வாய்ப்புகள் இல்லை எனினும் மூளைக்கு அதிக வேலை. வீட்டில் விட்டு விட்டு வந்த வேலைகள், பிள்ளைகளின் படிப்பு என்ற நினைவுகளோடு ஆபீஸில் முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை... இவை எல்லாம் சேர்ந்து மனச்சோர்வு ஏற்பட்டு விடும். மேலதிகாரிகளின் கண்டிப்பும் சேர்ந்து கொள்ள, அலைபாயும் மனத்தோடு அவ்வப்போது நிலை குலைந்து போவாள்.
கவனம் தவறாமல் அலுவலக அலுவல்களை செய்வதற்காக மிகுந்த சிரமப்படுவாள். அத்தனை சிரமங்களுக்கும் சிகரம் வைத்தாற் போன்ற இன்னொரு பெரிய பிரச்சனை, பாலியல் பிரச்சனை! திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் என்கின்ற பாகுபாடு இல்லாமல் நடைபெறும் இந்த பாலியல் பிரச்சனைகளையும் சமாளித்து அனுதினமும் அணு, அணுவாய் வதை பட்டு வீடு வந்து சேர்வதற்குள் அவள் படும் அவஸ்தை அளவில் அடங்காதவை.
'மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்' என்று பாடினார் பாரதிதாசன். ஒரு தாரமாக, ஒரு தாயாக மட்டுமே தன்னை உணர்ந்து வாழ வேண்டிய பெண், பொருளாதார பிரச்சனைக்காகவும், பொருள் ஈட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்காக வும், தன் வாழ்க்கைக்கே ஒரு பொருள் இல்லாமல், இயந்திர கதியாய் வாழ நேரிடும் அவலம் உள்ள இன்றைய நிலைமையில் 'மங்கையராய் பிறந்திட மகாபாவம் செய்திருக்க வேண்டும்', என்றுதான் தோன்றுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
ஆண், பெண் இருவரும் சேர்ந்து சம்பாதித்தால்தான் குடும்ப வண்டியை ஓட்ட முடியும் என்ற பிரச்சனையை எதிர் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், 'ஊரோடு ஒத்து வாழ்' என்கின்ற ரீதியில் வாழ்க்கை போக வேண்டியது மிகக்கட்டாயமானதாக ஆகிவிட்டது.
வீட்டிலேயே முடங்கி, அடங்கிக்கிடக்கும் வாழ்க்கைதான் நல்லது என்ற கூற்றில் நான் இவற்றைக் கூறவில்லை. அலுவலகம் சென்றாலும் ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கலாமே. வேலைக்குப் போகும் பெண்களின் வீட்டில் அவளுக்கு வீட்டு வேலைகளிலும், சமையல் வேலைகளிலும் குழந்தைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பிலும் கணவன் உதவி செய்கிறாரா? பெரும்பாலான குடும்பங்களில் 'இல்லை' என்பதே மறுக்க முடியாத உண்மை. வயதான அம்மா, அப்பா, மாமியார், மாமனாரை விடுங்கள், இந்த 'கணவன்' எனும் குடும்பத் தலைவன் ஓரு சின்ன உதவி கூட செய்யாமல், தன்னுடைய வேலைகளைக்கூட தானே கவனித்துக் கொள்ளாமல் எடுத்ததற்கெல்லாம் மனைவியை நொடிக்கு நூறு தரம் அழைப்பதுதான் நடக்கிறது.
வெளிநாடுகளிலும் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு போகின்றனர். மனைவி, வீட்டிற்கு திரும்ப தாமதமானால் கணவன், அவளுக்கும் சேர்த்து இரவு உணவை செய்து வைத்திருப்பான். பாத்திரம் கழுவும் இடத்தில் (Sink) உள்ள பாத்திரங்களை கழுவி வைத்திருப்பான். காலையில் இருவரும் சேர்ந்து சமைக்கிறார்கள். வீட்டை சுத்தம் செய்கிறார்கள். இது போன்ற சமத்துவம் இங்கே இல்லை.
இங்கே பெண்ணுக்கு மிஞ்சுவது சங்கடம் மட்டுமே. ஆனால் அந்த சங்கடங்களையும் சமாளித்து, சந்தோஷங்களாக மாற்றிக் கொள்ளும் சக்தி நம் பெண்களுக்கு நிச்சயமாய் உண்டு.
கணவன் இறந்து போனபின் மறுமணமே செய்து கொள்ளாமல் தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் தனி ஆளாய் நின்று வளர்த்து, ஆளாக்கி விடும் சக்திமிக்கவள் பெண். கணவனைப் பிரிந்த பெண்கள் கூட தனித்திருந்து ஒரு தவமாய் தன் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். இத்தகைய சக்தி பெண்களிடம் மட்டுமே உள்ளது என்று ஆணித்தரமாய் கூறுவேன்.
ஒரு ஆண், தன் மனைவியை பிரிந்திருந்தாலோ அல்லது இழந்திருந்தாலோ வெகு விரைவில் மறுமணம் செய்து கொள்கிறான். அவனால் தனித்து வாழ முடியாது. அவனால் தனித்து தன் பிள்ளைகளை வளர்க்கவும் முடியாது. 'தனியாக வாழ்வதா? பிள்ளைகளை வளர்ப்பதா' என்று மலைத்துப் போய், மனம் துவண்டு போவான். இதற்கு வடிகாலாக தனக்கு ஒரு மறுவாழ்க்கையைத் தேடிக் கொள்வான்.
ஒரு தகப்பன் தனியாக வாழ்ந்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது மிக மிக அபூர்வம். ஆனால் பெண், தன் மேல் சுமத்தப்படும் அத்தனை சுமைகளையும் சுமந்து, வெற்றி காண்கிறாள். இதனால்தான் பெண்களும், பெண்மையும் 'சக்தி' என்று போற்றப்படுகிறார்கள்.
பெண்கள் தங்களின் புத்திசாலித்தனத்தையும், தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கு அலுவலகப் பணிகள் ஆதாரமாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத நிகழ்வு! ஆனால் அதற்காக அவள் எத்தனை கஷ்டப்பட வேண்டி இருக்கிறது! எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டியதிருக்கிறது! ஆபிஸிலிருந்து வீடு திரும்ப தாமதமானல், வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் கணவன் உட்பட 'ஏன் இவ்வளவு லேட்?' என்று கடுமை தொனிக்க கேட்பார்கள். பஸ் காரணமாக தாமதமாகி இருக்கலாம். ஸ்கூட்டரில் போகும் வழக்கம் உடைய பெண் என்றால் ஸ்கூட்டர் பழுதாகி இருக்கலாம். 'ட்ராஃபிக்' காரணமாக இருக்கலாம். ஆபிஸில் எதிர் பாராதவிதமாக முக்கியமான வேலைகளை முடிக்க நேர்ந்திருக்கலாம். இவ்விதம் எத்தனையோ காரணங்கள் இருக்க, அதைக்கூட புரிந்து கொள்ளாமல் குடும்பத்தினர் கேட்கும் கேள்வியின் கடுமையைத் தாங்கிக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுவாள்.
வீட்டிலும், ஆபிஸிலும் உழைத்து, சோர்ந்து போய் திரும்பி வரும் அந்தப்பெண், தனக்குள் கூனிக்குறுகிப் போவாள். அற்புதமான பெண்மையை அற்பப்புழுவாய் மதிப்பிடும் அந்தக் கணம், அவளது மனம் நொறுங்கிப் போகும். 'எதையும் தாங்கும் இதயம்' கொண்டு, பொறுமையாய் பதில் சொல்வாள். இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் படத்தில் வரும் 'மனம் பேசும் பேச்சு' (Mind Voice) போல அவளது மனம் மட்டுமே கேள்வி கேட்கும், நியாயம் கேட்குமே தவிர அவளது உதடுகளிலிருந்து எந்தக் கேள்விகளும் வெளிவராது.
'ஏன் லேட்' என்று கடுமை தொனிக்க கேட்பதைக் கூட ஒரளவு தாங்கிக் கொள்ளலாம். சில கணவன்கள், வீட்டுப் பெரியவர்கள் ஆகியோர், தங்கள் மனதிற்குள் புதைந்திருக்கும் சந்தேகம் எனும் விஷத்தைக் கக்குவார்கள். இந்த விஷம் பாம்பின் விஷத்தை விட வீரியம் மிக்கது. கொடியது. அப்படி அந்தப் பெண் மீது சந்தேகம் எனில் ஏன் வேலைக்கு அனுப்ப வேண்டும்? 'வீட்டிலேயே சுகமாய் இரு. குடும்பப் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஏன் சொல்லுவதில்லை?' 'அவள் சம்பளம் வேண்டும். ஆனால் அவனுக்கு சந்தேகமும் வரும். அதற்கு அப்பாற்பட்டவளாக அவள் வாழ வேண்டும்' என்ற எழுதப்படாத சட்டத்தை மறைமுகமாக நிர்ணயிப்பார்கள்.
திருமணம் ஆகாத பெண்கள் கூட பெற்றோராலும், உடன்பிறப்புகளாலும் இந்த சந்தேகம் எனும் வியாதிக்கு ஆளாகி சங்கடப்படுகிறார்கள். அந்நிய ஆண்களுடன் அலுவலகரீதியாகப் பழக நேரிடும் என்று தெரிந்துதான் வேலைக்கு அனுப்புகிறார்கள். அனுப்பிய பிறகு ஆயிரம் யோசனை யோசிக்கிறார்கள். ஆனால் மாதம் முடிந்து மாதம் பிறந்தால் அவளது சம்பளப் பணத்திற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள். இதென்ன நியாயம்? இதென்ன நேர்மை? வேலைக்கு அனுப்பப்படுவது மனைவியோ, மகளோ யாராக இருந்தாலும் முதலில் குடும்பத்தினருக்குத் தேவை நம்பிக்கை. நம்பிக்கைதான் தெளிவான வாழ்க்கை. இல்லை எனில் வாழ்க்கை என்பது கலங்கிய குட்டையாகி குழம்பி நிற்கும். நம் குடும்பத்து அங்கத்தினர்களை நாமே சந்தேகப்படுவது நம் மீது நாமே சேற்றை அள்ளிப் பூசிக் கொள்வதற்கு சமம்.
'சக்தி' என்ற சொல்லில் தீ என்பது மறைமுகமாக உள்ளது. 'சக்தி' 'சக்தி' என்று போற்றப்பட்டு வந்த பெண், நாளடைவில் தூற்றப்பட்டு வருகிறாள். ஒட்டு மொத்தமாக அனைவரையும் குற்றம் கூற முடியாது. சந்தேகம் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் மிக வன்மை யானவை. பூங்கொடி போன்ற பெண்கள் புயலாய் உருமாறுவதும் இந்த சந்தேகம் எனும் சாத்தானால்தான்.
அதே சமயம் தங்கள் மகள்/மனைவி வேலைக்கு செல்லும் பட்சத்தில் அவர்களைக் கண்ணின் கருமணியாய் பாதுகாக்கும் கணவன், தாய், தகப்பனும் இருக்கிறார்கள். அலுவலகம் சென்று வரும் அலுப்பு தீர அவளுக்கு உணவு கொடுத்து உபசரிப்பது, வீட்டில் அவளுக்கு அதிக வேலைகள் கொடுக்காமல் இருப்பது, துணைக்கு அவளுடன் சென்று வருவது போன்ற செயல்களால் பெண் எனும் சக்திக்கு உதவிக்கரம் நீட்டும் அவர்களது நேயம், போற்றுதலுக்குரியது.
ஒரு பெண் பாராட்டும் பொழுது ஆணின் இதயத்திற்கு இதமாக இருக்கிறது. ஒரு ஆண் கணவனாக இருக்கலாம், தகப்பனாக இருக்கலாம். மகனாகவோ, உடன் பிறந்தவனாகவோ இருக்கலாம். அவனுக்குள்ளே உள்ள குழந்தை மனதைப் புரிந்து கொண்டு அவனை வழிக்கு கொண்டு வருபவள் பெண்.
பளபளவென்ற பட்டுப்பாவடை உடுத்தி பட்டாம்பூச்சி போல பறந்து திரிந்த சிறுமி, பின்னாளில் பட்டுப்புடவை உடுத்தி, மங்கல நாண் ஒன்றை கழுத்தில் ஏந்திக் கொண்ட பெண்ணாக மாறும் பொழுது, அவளுக்குள் எத்தனையோ மாற்றங்கள் நேரிடுகின்றன. குறும்புகள் நிறைந்து குதூகலமாக சுற்றி வந்த அவளைச்சுற்றி, எத்தனையோ குடும்பப் பொறுப்புகள்! ஒரு மஞ்சள் கயிறு அவளைக் கட்டிப் போடும் மாயம்! அதனால் அவளுக்கு ஏற்படும் குடும்ப நேயம்!
பெண் என்பவள் தன்னை நம்புபவள். தன்னை நம்பி வாழும் குடும்பத்தினரின் மனம் கோணாமல் சேவை புரிபவள். பெண்களின் மகாசக்தி பற்றி பெருமை பட பேசிக்கொண்டிருப்பதும் எழுதிக் கொண்டிருப்பதும் ஒரு பக்கம் இருக்க, பெண்கள் சிறுமைப்படுத்தப் படுவதும் அங்கங்கே நிகழ்ந்து வருகின்றது. பெண்களில் சிலர், சில நேரங்களில், சில மனிதர்களால் இழிவாக நடத்தப்படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார்கள். மாறிவிட்ட காலத்தின் கோலம் இந்த அலங்கோலம்! வரதட்சணைக் கொடுமை, குடிப்பழக்கத்தால் மனைவியை அடித்துத் துன்புறுத்துவது போன்ற துன்பங்களால் பெண்கள் படும் பாடு சொல்லில் அடங்காதவை. கணவன் மட்டுமன்றி மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்துவது நடைபெற்று வருகிறது. பணமும், நகைகளும் கேட்டு கொடுமைப்படுத்துவது நடைபெற்று வருகிறது.
பணமும், நகைகளும் கேட்டு துன்புறுத்தி அந்த துன்பம் தாங்காமல் தீ அரக்கனுக்கு பலியாகும் பெண்கள் தொகை கூடுகிறதே தவிர, குறைவதாய் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள் 'தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்வதற்கு தங்கம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது' என்ற நல்ல எண்ணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கத்தையும், பணத்தையைம் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் பொழுதெல்லாம் அள்ளிக் கொடுக்கின்றனர். பேராசை பிடித்த மருமகன் மற்றும் சம்பந்தி 'இன்னும்', 'இன்னும்' என்று கேட்கும் நிலையில் மேலும் கொடுப்பதற்கு வசதி இல்லாத நிலையில், செய்வதறியாது திகைக்து நிற்கும் சூழ்நிலை உருவாகிறது.
பணமோ, நகையோ மேலும் தருவதற்கு மறுக்கப்படும் நிலையில் வீட்டு மருமகளை உயிரோடு கொளுத்தி விடும் மிகப் பயங்கரமான கொடுமை நிகழ்கிறது. பெண்ணைப் பெற்ற வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்க, யாரோ பெற்ற மகளை தீக்கிரையாக்கும் மனிதர்கள், காட்டு விலங்குகளை விட மோசமானவர்கள்.
ஊர் அறிய தாலி கட்டி தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டு, அவள் ருசியாக சமைத்துப் போடுவதை உண்டு, அவளுடன் தாம்பத்ய சுகத்தை அனுபவித்து வாழும் அவளது கணவனும் மேற்கூறிய கொடுமைகளுக்கு உடந்தையாக இருப்பதை என்னவென்று சொல்வது? தன் மீது உயிரையே வைத்து வாழும் பெண்ணின் உயிரைப் பறிக்கும் கணவன்கள், கனவான்களாக இருக்க முடியாது. கயவன்களாகத்தான் இருக்க முடியும்.
ஆண் என்பவன் ஆளுமை மிக்கவன் என்பது உண்மைதான். ஆனால் அவனது ஆளுமை, இவ்விதம் மனைவியிடமும், அவளது பிறந்த வீட்டாரிடமும் நகையும், பணமும் கேட்டு வாங்குவதிலா இருக்க வேண்டும்? தன்னை நம்பி வந்தவளைத் தன் உயிராய் மதித்து, நேசம் செலுத்தி வாழ முடியாவிட்டாலும், அவளது உயிரைப் பறிக்குமளவு கொடுமைக்காரனாக இல்லாமல் வாழலாமே?!
ஆணுக்கு எதனால் ஆளுமை உணர்வு இருக்கிறது? உழைத்து சம்பாதித்து, அல்லது தொழில் செய்து பொருள் ஈட்டி தன் மனைவி, மக்களைக் காப்பாற்றும் வலிமை உள்ளவன் என்பதால் உண்டானது ஆளுமை உணர்வு! ஆனால் தன் கைகளை நம்பாமல், சுயமாக சம்பாதிக்காமல் பெண் வீட்டாரிடம் வற்புறுத்தி கேட்டு வாங்கும் இழிநிலையில் அந்த ஆளுமை உணர்வு அழிந்து போவதை அவன் ஏன் புரிந்து கொள்வதில்லை?
ஒரு பெண்ணின் வாழ்க்கை அவளது திருமணம் மற்றும் அதைத் தொடரும் குடும்ப வாழ்க்கையில்தான் முழுமை அடைகிறது. அந்த முழுமையை அவள் அனுபவிக்கும் முன்பு அவளது ஆயுள்காலம் முழுமை அடையாமல் அரைகுறையாகி, தீக்கிரையாகிற அவலம் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
கணவனின் நிழலில்தான் வாழ வேண்டும், அவனது துணையுடன்தான் தன் வாழ்வு இருக்க வேண்டும் என்று மிக்க அன்போடும், பாசத்தோடும் எதிர்பார்க்கும் பெண், தன் அம்மா அப்பாவிடம் பணம் கேட்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள். இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் அவளது உயிர் பலியாகிறது. பெற்றோரா? புருஷனா? என்ற பட்டி மன்றத்தில் உயிர் பலிதான் தீர்ப்பு எனும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
ஒரு முறை கொடுத்துப் பழக்கி விட்டால் வாங்குபவனுக்கு மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற வேண்டும் என்ற மனப்பான்மை தோன்றி விடுகிறது. தொட்டு தாலிகட்டி, அவளது உடலைத் தொட்டணைத்து சுகம் கண்ட கணவன், திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அவளது உயிரற்ற உடலை மண் தொடும் நிலைக்குக் காரணமான கொலைகாரனாகிறான். தற்கொலைக்கு தூண்டுபவனும் கொலைகாரன்தான்.
நம் முன்னோர்கள் காலத்தில் எதற்காக பெண்ணுக்கு நகைகள் செய்து கொடுத்து திருமணம் முடித்து வைத்தார்கள்? பெண்ணின் கணவனுக்கு ஏற்படும் தொழில் சரிவு என்ற நிலைமையில் அவளது நகைகள் அவனுடைய சரிந்த தொழில் மீண்டும் நிமிர்வு அடைய பயன்படும் என்ற காரணத்திற்காகத்தான். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. பெண்ணும் வேலைக்குப் போகிறாள். சுய தொழில் செய்து சம்பாதிக்கிறாள். எனவே, அது போதாது, இன்னும் வேண்டும் என்று பேராசைப்பட்டு மாமனாரின் குடும்பத்தைப் பிழிந்தெடுப்பது என்பது மிக இழிவான செயல்!
ஆண்களின் இந்த அநியாயமான செயல்கள் மாற வேண்டுமெனில் பெண்கள், துணிவை துணையாகக் கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே 'திருமணத்தின் போது பேசிய நகைகள் அனைத்தும் போட்டாச்சு. வாக்கு கொடுத்தபடி திருமண செலவுகளை செஞ்சாச்சு. இனி எங்க அம்மா, அப்பாவிடம் எதுவும் கேட்கக்கூடாது' என்று உறுதியாக கணவனிடம் சொல்லி அவனைத் தயார் பண்ணிவிட வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிந்தால் இந்த 'கேட்டுப் பெறும் இயல்பு' வேர் விட்டு வளராது. புருஷன் கேட்பதையெல்லாம் பெற்றோர் கொடுத்துதான் ஆக வேண்டும் என்கிற மனப்போக்கை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். காஸ் ஸிலிண்டர் வெடிப்புகள், வரதட்சனை கொடுமைகள் அனைத்தும் அடியோடு ஒழிந்து போக, மகாசக்தி கொண்ட பெண்கள், தைர்யமாக முன்னுக்கு வர வேண்டும்.
தெய்வங்களில் 'லஷ்மி'க்குள் எட்டு லஷ்மிகளும் அடங்கியுள்ள அம்சம் போல பெண்ணாய் பிறந்தவளுக்கும் அத்தனை சக்திகளும் அவள் பிறக்கும் பொழுதே அவள் கூடவே பிறந்து விடுகின்றன. அவளது அந்த சக்திகளையும், அந்த சக்திகள் அளிக்கும் ஆற்றலையும் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும், பின்னர் அவளை அவமதித்து, அவதூறாகப் பேசுவதும் மனித தர்மம் இல்லை. பெண் என்பவள் அடங்கி இருந்தால் குளிர்நிலவு. பொங்கி எழுந்தால் எரிமலை. அவளை அன்பால் அடக்காமல் அனாவசியமான ஆளுமை நோக்கத்தால் அடக்கி ஆள நினைக்கக்கூடாது. அடக்கி ஆள்பவன் ஆண். அடங்கி வாழ்பவள் பெண் எனும் ஆணாதிக்க மனோபாவம் மாற வேண்டும். சமையலறை முதல் விண்வெளி வரை பெண்கள், வீரத்தின் விளிம்பிற்கு வந்து விட்டவர்கள் என்றாலும் இவர்களுக்குரிய மதிப்பும், மரியாதையும் போதுமானதாக இல்லை. ஆண் என்பவன் 'தான் ஒரு ஆண்' என்ற மமதை கொள்ளக் கூடாது. பெண் என்பவள் 'தானும் சம்பாதிக்கிறோம்' என்ற சுயபிரதாபம் கொள்ளக்கூடாது. ஆண்-பெண் இருவரும் சரிநிகர் சமம். உருவத்தால் மாறுபட்டிருக்கும் இருபாலரும் உள்ளத்தாலும், உணர்வாலும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். முன்னாளில், ஆணுக்கு பணம் சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றும் அதிகப்படியான கடமை இருந்தது. ஆனால் மாறிவிட்ட இன்னாளில் பெண்ணும் சேர்ந்து அந்தக் கடமைகளில் பங்கு கொள்கிறாள். பாடுபடுகிறாள்.
வாழ்க்கை நல ரீதியாக உள்ள பிரச்சனைகள் போக, உடல்ரீதியாக பெண்ணுக்கு ஆணை விட மிக அதிகமான பிரச்சனைகள். பதினோரு வயதில் இருந்து பதினாறு வயதிற்குள் பருவம் அடையும் உடல்ரீதியான மாறுதலை அனுபவிப்பவள் பெண். அதைத் தொடர்ந்து, மாதா மாதம் ஏற்படும் உபாதைகளும் அவளுக்கு. திருமணமானபின் கணவனுடன் வாழ்ந்த இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாய் குழந்தையைத் தன் கருப்பையில் சுமப்பதும் பெண். குழந்தை உண்டான நாளில் இருந்து அதைப் பெற்றெடுக்கும் வரை, பத்து மாதங்கள் அவள் படும் கஷ்டங்கள் சொல்லில் விவரிக்க முடியாதவை.
குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் அனுபவிக்கும் பிரசவ வேதனையும் அவளுக்கு. குழந்தை வளர்ப்பின் பெரும் பங்கும் அவளுக்கு. ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுக்கும் அவள்தான் தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் உயிர் மூச்சாய் உழைக்கிறாள். பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கென்று ஓர் குடும்பக்கூடு உருவாகிடும் காலக் கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் எட்டிப் பார்க்கும் முதுமை! இச்சமயத்தில் ஏற்படும் Post Menopausal Syndrome எனப்படும் உடல்ரீதியான மாற்றம் அளிக்கும் தொந்தரவுகள் மிக அதிகம். இதை அனுபவிப்பவளும் பெண். அதாவது மாதவிலக்கு நிற்கும் சமயம் ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனோரீதியாகவும் ஏகப்பட்ட பாதிப்புகள்.
இதை அவள் வெளிப்படையாக குடும்பத்தினரிடம் சொல்வ தில்லை. சொன்னாலும் அனைத்து குடும்பங்களிலும் புரிந்து கொள்வதும் இல்லை. ஒரு குழந்தைக்குப் பிறகு அல்லது இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு குழந்தை வேண்டாம் என்று கர்ப்பத்தடை ஆப்ரேஷன் செய்து கொள்வதும் பெரும்பாலும் பெண்கள்தான். இத்தனை சிரமங்களையும் சிரமமாக எண்ணாமல், சிறகுகளால் பாதுகாக்கும் பறவை இனம் போல் தன் குடும்ப நலன் ஒன்றே போதும் என எண்ணி வாழும் பெண் இனம் போற்றுதலுக் குரியவர்கள் மட்டுமல்ல வணக்குத்துக்குரியவர்கள்.
'உனக்கு நான் இதைச் செய்கிறேன்; செய்தேன். எனக்கென்ன நீ தருவாய்?' என்று எதிர்பார்ப்புகள் இல்லாத சேவை செய்பவள் பெண். கணவன் ஆசைப்பட்ட பொருள் அவருக்குக் கிடைத்து விட வேண்டும். மகன்/ மகள் வாய் திறந்து 'அது எனக்கு வேணும்' என்று எதையாவது கேட்டு விட்டால் அதை எப்பாடுபட்டாவது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற துடிப்பு உள்ளவள் பெண். ஒரு குழந்தை பெற்று, தாய் ஆனால்தான் அவள் சக்தி கொண்டவள், தியாகம் செய்பவள் என்பது அல்ல. ஒரு பெண் என்ற நிலை போதும். அவள் தாயாகாமலே, தான் பெறாத பிள்ளைகளுக்குக் கூட தாய் ஆக முடியும். தொப்புள் கொடி உறவு இல்லாமலே தாய்க்கு ஈடான அன்பை அள்ளித் தர முடியும். அதுதான் மகாசக்தி!
மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடும் மூன்று வயது பெண் குழந்தைக்கு அந்த வயதிலேயே தாய்மை இயல்பு தோன்றி விடுவதைப் பார்க்கிறோம். பொம்மைக்கு பால் ஊட்டுவது, பழைய துணியில் தொட்டில் கட்டி தூங்க வைப்பது போன்ற செயல்கள் குழந்தைப் பருவத்தில் கூட அவளுக்குள் பொதிந்துள்ள தாய்மை உணர்வுகளாகும். 'எனக்கென்று எதற்காகவும் ஏங்கவில்லை; எல்லாமே உங்களுக்குத்தான்' என்று குடும்பத்திற்காக உருகுவது பெண். தன்நலம் நாடாமல், பிறர் நலம் நாடுபவள் பெண்.
அன்னை தெரஸா ஊர் மக்களுக்காக தொண்டு ஆற்றி, பெண்குலத்திற்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த தியாகச் சுடர். அன்னை சாரதாதேவி அன்பே உருவாய் வாழ்ந்து, அன்புதான் தெய்வம் என்று உலகிற்கு உணர்த்தியவர். பாண்டிச்சேரி அன்னை, தன் அன்பர்களுக்காக எத்தனையோ யோகங்களைக் கடை பிடித்தவர். பூச்செடிகளுக்கும், மரங்களுக்கும் கூட எவ்வித தீங்கும் செய்யக்கூடாது என்று போதித்தவர். இவர்கள் பெண் குலத்திற்கும், பெண்மைக்கும் பெருமை சேர்த்தவர்கள்.
ஈட்டி முனையால் சாதிக்க முடியாததைக்கூட, தனது மனதின் கனிவாலும், இனிய நேயத்தாலும், அன்பு மொழியாலும் சாதித்து விடுகிறாள் பெண். பெண் என்பவள் தன் குடும்ப நலன் கருதி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் இந்த உலகமே அவளை எதுவும் செய்ய முடியாது. மாற்ற முடியாது. தோல்விகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி உள்ளவள் பெண். சோதனைகளையும், வேதனை களையும் சகித்துக் கொள்பவள் பெண். மேற்கூறிய இந்த இரு அருங்குணங்களில்தான் பெண்ணின் பெண்மை அடங்கியுள்ளது.
தானே முளைத்து, தானே தனக்குத் தேவையான தண்ணீரைப் பெற்று, தானே வளர்ந்து, தன்னையே வழங்கும் பனை மரம் போல, தன்னலம் அற்றவள் பெண். தன்னுடைய நல்வாழ்வை இழந்து தவிக்கும் பெண் கூட, இன்னொரு பெண் அதே நிலைமையில் கண்ணீர் வடிக்கும் பொழுது அந்தப் பெண்ணின் துக்கத்தில் பங்கு கொள்கிறாள். அவள் மீது பரிதாபப்படுகிறாள். பெண்ணின் மனது அத்தனை இளகியது. கணவனை சார்ந்து வாழும் பெண், அவனை இழக்க நேரிட்டாலும் சோர்ந்து போகாமல் தன் மனதிற்குள் வலிமையை வலிந்து உருவாக்கிக் கொள்கிறாள். தன் சோகங் களை, சுகமாக மாற்றிக் கொள்ள, கணவன் விட்டுச் சென்ற சுமைகளை மனம் உவந்து ஏற்றுக் கொள்கிறாள். எதற்கெடுத் தாலும் தன் கணவனையே கேட்டுச் செய்து, ஒவ்வொரு விஷயத்திற்கும் அவனது துணையை நாடி வாழ்ந்த அவளுக்கு, ஒரு யானை பலம் உருவாகிவிடுவது மிக விந்தைக்குரியது.
ஒரு குடும்பம் வாழும் இல்லம் ஒரு சொர்க்கமாக இருப்பதும், நரகமாக இருப்பதும் பெண்ணிடத்தில்தான் உள்ளது. பெண் களுக்கு, தங்கள், குடும்பத்தினர் அனைவரும் தன் சேவையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதில் சுயநலம் ஏதும் இல்லை. எல்லாமே தன்னுள் அடக்கம் என்ற எண்ணத்தில் அவளுக்கு ஒரு மனதிருப்தி. அவ்வளவே.
பெண்கள் காட்டும் அபரிதமான பாசம்தான் எல்லா ஆண்களையும் மனித நேயத்தோடு வாழும் வழிகளைக் காட்டுகிறது. மேலும் ஆண்களின் திறமைகளை வெளியே தெரியும்படி செய்வதும் பெண்களின் பாசமும், நேசமும்தான். 'எனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள், என் நலனில் அக்கறை செலுத்த ஒரு பெண் இருக்கிறாள். என் வாழ்க்கையின் அனைத்திலும் நான் வெற்றி காண, எனக்காக பாடுபடுபவள் பெண், பிரார்த்தனை செய்பவள் பெண்', என்று ஒவ்வொரு ஆணும் நம்புகிறான். 'வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாள்' என்ற எண்ணமே அவனது மனதில் இனிமையை பரவச்செய்து, பரவசம் கொள்ளவைக்கிறது.
அன்பே உருவான பெண்களை சந்திப்பது நிம்மதி. அவர்களது அன்பான பேச்சைக் கேட்பது நிம்மதி. அவர்கள் அருகே இருந்தால் ஆடவர்களுக்கு தோன்றும் ஆறுதலும், ஆக்கப் பூர்வமான உணர்வும் அளவிட இயலாதவை. பாலில் தயிர், மோர், வெண்ணெய், நெய் அடங்கியுள்ளது. பாலை மட்டும் பார்க்கும் பொழுது இதற்குள் அடங்கியுள்ள தயிர், மோர், வெண்ணெய், நெய் இவை கண்ணுக்கு தெரியாது. அது போல பெண்ணிற்குள் அடங்கியுள்ள சக்திகளை வாழ்ந்து, அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
எதையும் அழகாகவும், ஆணித்தரமாகவும் சொல்லத் தெரிந்தவள் பெண். தன் வாழ்வில் தோல்விகள் ஏற்பட்டு விட்டால், அதை தன் மனதிற்குள் மறைத்து அந்த தோல்வியின் தாக்கம் தரும் நினைவை மறந்து, குடும்பக் கடமைகளிலும், குழந்தைகள் நலனிலும் ஈடுபடுபவள் பெண்.
வாழ்க்கையை இழந்து தனி மரமாய் நிற்கும் பெண்கள் கூட அழுது முடித்த பின், 'என் வாழ்வு எங்கேயும் காணாமல் போகவில்லை. மறுபடியும் அதை நான் கண்டுபிடிப்பேன்' என்று துணிவே துணையாக, ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்த்தெழுகிறாள். அதற்குரிய வேகமும், விவேகமும், மனவலிமையும் அவளுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டே இருக் கின்றன. அந்த உணர்வுகள் வெளிப்படுவதற்குரிய சந்தர்ப்பங் களின் முடிவு, படுதோல்வியாகவும் இருக்கலாம். பெரும் வெற்றியாகவும் இருக்கலாம். தோல்வியையே மாபெரும் வெற்றியாக மாற்றி வாழ்ந்து காட்டுபவள் பெண். பெண் அற்புதமான பிறவி. அபூர்வமான மனம் கொண்டவள். அழகான எண்ணங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருப்பவள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத ஆதவனைப் போல ஆயிரமாயிரம் வேதனைகள் வந்தாலும் ஆழமாக சிந்தித்து அமைதியாய் செயல்படுபவள்.
மகாசக்தியைத் தன்னுள் கொண்ட அவள், தன்னடக்கத்துடன் வாழ்வது குறித்து மனிதகுலம் பெருமைப்பட வேண்டும். இந்திய மண்ணின் பெண்கள், இந்தியாவிற்குபெருமை சேர்க்கப் பிறந்தவர்கள். இத்தகைய மகாசக்தி கொண்ட பெண் இனத்தை வணங்குவோம். வாழ்த்துவோம்.